இரண்டு நாட்கள் கழித்து மும்பையில் இருந்து திரும்பி வந்த க்ரிஷ், மைரா பயன்ப்படுத்திக் கொண்டிருந்த கேஷவின் கார் அவர்கள் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தான். அவன் சோபாவில் அமர்ந்து ரோஷினி தனது லேப்டாப்பில் வேலை செய்வதைப் பார்த்தான். அவன் தன் அம்மாவை அழைத்ததும், தண்ணீர் பாட்டிலுடன் அர்ச்சனா வெளியே வந்தார்.
“ அம்மா, ஏன் கார் இங்க இருக்கு ? ராஜன் மாமா வீட்டுக்கு முன்னால யாரோட கார் நிற்குது ?” என்று க்ரிஷ் கேட்டதும், அர்ச்சனா பதில் சொல்வதற்கு ரோஷினி அவனை பார்த்து, “ இந்த கார் இதுக்கு மேல தேவையில்லனு நெனச்சு அவங்க புது கார் வாங்கிட்டு இத திருப்பி கொடுத்துட்டாங்க “ என்று சொன்னாள்.
அவள் சொல்லும் பொய்யை அதற்கு மேல் கேட்க முடியாமல் அர்ச்சனா இருவரையும் தனியே விட்டு அறைக்கு சென்றார். ரோஷினியின் முகத்தைப் பார்த்த க்ரிஷுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதும், அதற்கான காரணம் தன் முன்னால் இருப்பவள் தான் என்பதும் புரிந்தது.
“ அவங்க கார திருப்பி கொடுக்கற மாதிரி ஏதாவது பண்ணியா ரோஷினி? “ என்று க்ரிஷ் கேட்க, “ உண்மை வலிக்க தான் செய்யும், அதுவும் அத நான் அவகிட்ட சொன்னதும் அவளால ஏத்துக்க முடியல. அவளோட போலி கண்ணியத்த காட்ட கார திருப்பி கொடுத்துட்டா அது என் தப்பு இல்ல “ என்று ரோஷினி அலட்சியமாக சொன்னாள்.
“ நீ மைராவ இப்படி கஷ்டப்படுத்திட்டே இருந்தா அப்புறம் நாம பிரிய நீ தான் காரணமா இருப்ப. நீ ஏன் எங்க எல்லாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேங்குற ? உனக்காக மைரா கூட இருந்த என்னோட பல வருஷ நட்பை விட்டுட்டேன். மைரா உனக்காக இங்கு வராம இருக்கா, அதுக்கும் என் அப்பா, அம்மா சமாதானம் ஆயிட்டாங்க. என் அண்ணன் உன்னால ஒரு நைட்டு கூட இங்க வீட்டுக்கு வந்து தங்குறது இல்ல. இதுக்கு மேல எங்க கிட்ட இருந்து உனக்கு என்ன வேணும்? என் வாழ்க்கையில உன்ன தேர்ந்தெடுத்ததுக்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன். இன்னும் நான் நம்ம வாழ்க்கைக்காக முயற்சி செய்றேன், ஆனா என்ன வேற முடிவு எடுக்க வெச்சுடாத. நம்ம உறவு உடைஞ்சு போகாம நான் தான் புடிச்சு வெச்சுருக்கேன். நீ ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்யலாம்னு சொன்னது நல்லதா போச்சு. இப்போ இது நடக்கனுமானு நான் யோசிக்க விரும்புறேன் “ என்று க்ரிஷ் பொறுமை இழந்து கத்தி மனதில் இருந்ததை கொட்டி தீர்த்தான்.
“ என்ன சொல்ல வர ? நீ எனக்காக மட்டும் இருக்கணும்னு நினைக்குறதுல என்ன தப்பு ? குடும்பத்தோட கவனம் என் மேல இருக்கணும்னு நான் விரும்புறது ஒரு குற்றமா ? “ என்று சீறினாள் ரோஷினி. அதற்கு க்ரிஷ் ஏளனமாய் சிரித்து, “ அப்படியே உனக்கு ஒண்ணும் கிடைக்காத மாதிரி தான் பேசுற. உனக்கு பொறாம, உன்னோட பொறாம எங்க எல்லாரையும் அழிக்குது “ என்று கர்ஜித்துவிட்டு, தன் அறைக்கு சென்று கதவை அறைந்து சாத்திக் கொண்டான்.
ராஜன் திருமணத்தை பற்றி பேசி ஒரு வாரம் கழிந்து போனது. மைரா தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பற்றி நினைத்தாள், குறிப்பாக அவளது பெற்றோரை பற்றி நினைத்தாள். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தவள் ஒரு முடிவெடுத்து அதைப் பற்றி விவாதிக்க தனது பெற்றோரை அழைத்தாள்.
“ மைரா, நீ எடுக்குற எந்த முடிவையும் நாங்க மதிப்போம், அதனால தயங்காம சொல்லு “ என்று ராஜன் சொல்ல, “ அப்பா, கடந்த காலத்துல நான் எடுத்த முடிவு நம்ம எல்லாரையும் நிறைய கஷ்டப்படுத்திடுச்சு. நான் உங்கள நம்புறேன், ஆனா நான் முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி அந்த பையன் கிட்ட பேச விரும்புறேன். அவர் உங்ககிட்ட பேசினத மட்டும் வெச்சு முடிவு எடுக்க இது என்னோட வாழ்க்க மட்டும் இல்ல, எல்லாரோட வாழ்க்கையும் பிணைஞ்சு இருக்கு “ என்று கூறினாள்.
“ அத பத்தி நீ கவலைப்படாத, நான் அவங்கள டின்னர் சாப்பிட வர சொல்றேன். நீ அந்த பையன் கூட பேசலாம். அவன் பேரு பிரஷாந்த்” என்று ராஜன் மகிழ்ச்சியோடு சொன்னார்.
மைரா சரி என்று சொன்னதும், ராஜன் தன் நண்பனுக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்து, அவர் குடும்பத்தை நட்பு ரீதியான இரவு விருந்துக்கு அழைத்தார். மைராவின் கோரிக்கையை பற்றி அர்ச்சனா மற்றும் மதனிடம் வசுந்தரா தெரிவித்ததும், அவர்கள் அவள் சொல்வது சரி என்று உணர்ந்தனர். அவர்கள் அனைவரும் விருந்தினரை வரவேற்க தயாராகத் தொடங்கினர், வசுந்த்ரா மாலையில் அணிய மைராவுக்கு ஒரு அழகான பச்சை நிற பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தார்.
அன்று மாலை மைரா மேக்கப் இல்லாமல் சேலையில் தயாரானாள். அர்ச்சனாவும் வசுந்தராவும் இரவு உணவை தயாராக மேஜை மீது வைக்க, ராஜனும் மதனும் விருந்தினரை வரவேற்க வாசலில் காத்திருந்தனர். ஒரு கார் நின்றது, மூன்று பேர் கொண்ட குடும்பத்தை ராஜன் புன்னகையுடன் வரவேற்றார்.
அனைவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் ராஜன் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
“ பிரஷாந்த், திடீர்னு உங்கள வர சொன்னதுல எந்த ஆட்சேபனையும் இல்லனு நினைக்குறேன் “ என்று ராஜன் சொல்ல, “ அப்படி எதுவும் இல்ல அங்கிள். நான் இன்னைக்கு வேலையில இருந்து சீக்கிரம் வந்துட்டேன் இல்லனா இன்னொரு நாள் பார்க்கலாம்னு நானே சொல்லி இருப்பேன். அதனால பரவாயில்ல, உங்க எல்லாரையும், மைராவையும் சந்திக்க இங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று சொன்னான் பிரஷாந்த்.
“ மைரா, பிரஷாந்த்த மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போ, ரெண்டு பேரும் பேசுங்க அதுவர நாங்க வெயிட் பண்றோம் “ என்று ராஜன் சொன்னதும், மைரா தலையை அசைத்து பிரசாந்த்தை தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்தாள். மொட்டை மாடியை அடைந்து எதிரெதிரே போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் இருவரும் அமர்ந்தனர். வசுந்தரா அவர்களைப் பின்தொடர்ந்து சென்று சில சிற்றுண்டிகளையும் காபியையும் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
“ ஹாய் மைரா, நீங்க சங்கடமா உணர வேண்டியதில்ல. நாம பேசலாம், நீங்க என்ன வேணும்னாலும் என்கிட்ட கேட்கலாம் அதுக்கு நான் பதில் சொல்றேன் “ என்று பிரஷாந்த் சொன்னதும், “ நன்றி, என் குடும்பத்த பத்தியும், என்ன பத்தியும் உங்களுக்கு தெரியும்னு அப்பா சொன்னாரு “ என்று மைரா ஆரம்பித்தாள் அதற்கு பிரஷாந்த் அவளிடம், “ ஆமா, நம்ம ரெண்டு பேரோட அப்பாவும் பல வருஷமா நண்பர்களா இருக்காங்க அதனால எனக்கு எல்லாமே தெரியும். உங்கள பத்தியும், உங்க நட்ப பத்தியும், உங்க லவ் பத்தியும், அதுல இருந்து நீங்க மீண்டு வாழ்க்கையில முன்னேறிய விதம் அப்புறம் இன்னைக்கு நீங்க என்னவா இருக்கீங்க, அத பத்தியும் கேட்டு எனக்கு உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு “ என்று சொன்னான் பிரஷாந்த்.
“ நான் இன்னைக்கு இப்படி இருக்க என் குடும்பம், என் ப்ரெண்ட் நைனா அப்புறம் கெட்சப் தான் காரணம் “ என்று மைரா சொன்னதும், “ கெட்சப்பா ? “ என்று பிரஷாந்த் குழப்பத்துடன் கேட்டான்.
மைரா தலையில் அடித்துக் கொண்டு, “ அவர் பேரு கேஷவ் ஆனா நான் சின்ன வயசுல இருந்தே அவர கெட்சப் சொல்லி கூப்பிட்டு பழக்கம். அவர் எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்காரு, நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்க அவர் தான் முக்கிய காரணம் “ என்று சொன்னவள், “ சரி நாம பேச வேண்டிய விஷயத்துக்கு வருவோம். நான் வேற ஒருத்தர லவ் பண்ணது தெரிஞ்சும் நீங்க ஏன் என்ன கல்யாணம் பண்ண விரும்புறீங்க ?” என்று கேட்டாள்.
“ உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு மைரா. நீங்க லவ் பண்ணது கடந்த காலம், நீங்க என் நிகழ்காலமாவும், எதிர்காலமாவும் இருக்கனும்னு நான் விரும்புறேன் “ என்று பிரஷாந்த் சொல்ல, “ நான் லவ் எல்லாம் மறந்து வாழுறேன் ஆனா ஒரு புது உறவுக்கு நான் இன்னும் தயாரா இல்ல “ என்று மைரா மெல்லிய குரலில் சொன்னாள்.
“ வெளிப்படையா சொல்றேன் மைரா, ஆணும், பெண்ணும் கணவன் மனைவி ஆகுறதுக்கு முன்னாடி நல்ல நண்பர்களா இருக்கனும்னு நான் நினைக்கிறேன். நாம கல்யாணத்துக்கு அப்புறம் நல்ல நண்பர்களாக இருக்கலாம், ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க முயற்சி செய்யலாம். எதிர்காலத்துல நாம லவ் பண்ணுவோம்னு நம்புறேன். “ என்று பிரஷாந்த் சொன்னதும், “ ஒருவேள நமக்குள்ள லவ் வராம போனா என்ன செய்றது ? என்னால திரும்ப லவ் பண்ண முடியும்னு நம்பிக்க இல்ல “ என்று வெளிப்படையாக உண்மையை சொன்னாள் மைரா.
அவள் வார்த்தையை கேட்டதும், “ மைரா நாம ஒரே படகுல பயணிக்கிறோம். நான் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணி அப்புறம் அந்த பொண்ணு என்ன விட்டு போயிட்டா. எனக்கு வரபோற மனைவி என்னோட வலியையும் புரிஞ்சிக்கிட்டு நானும் ஒரு வாழ்க்கையை வாழ இடம் கொடுக்கணும்னு விரும்புறேன் “ என்று சொன்னான் பிரஷாந்த்.
“ நாம ஒன்னா வாழ முடியும்னு எத வெச்சு முடிவு பண்ணீங்க ? “ என்று மைரா கேட்க, “ நாம ஒரே தொழில் துறையில இருக்கோம். நம்ம அப்பா அம்மாவ மதிக்கிறேன், பாசம் வெச்சுருக்கேன். நாம நல்லா பழகுவோம்னு நினைக்கிறேன். நம்ம உறவுல, நாம நண்பர்களா இருக்கலாம், வாழ்க்கைய ஆதரிக்கலாம். அதுக்கு அப்புறம் வாழ்க்கைய முழுசா வாழ நமக்கு நிறைய அவகாசம் இருக்கு “ என்று பிரஷாந்த் கூறினான்.
“ இது எல்லாத்துலையும் நாம தெளிவா இருக்க மாதிரி, ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாத கட்டத்த அடையும் போது நாம விலகி போகனும், அதுலயும் தெளிவா இருக்கணும் “ என்று மைரா சொன்னாள். அதற்கு பிரஷாந்த் அவளிடம், “ நமக்கு ஒருத்தர ஒருத்தர் புடிக்க ஆரம்பிச்சா அதையும் மறைக்க கூடாது. நம்ம வாழ்க்கைய தொடர்ந்து வாழ முடியும்னு நினைக்குற வர தாம்பத்தியம் இருக்காது, அதுல எனக்கு நிறைய நம்பிக்க உண்டு “ என்று சொன்னான்.
மைரா அவன் வார்த்தைகளுக்கு சரி என்று தலையசைத்தாள்.
“ நான் உங்கள சோசியல் மீடியாவுல பின்தொடர்றேன், அதனால என் கடந்த கால வாழ்க்கைய பத்தி தெரிஞ்சிக்க நீங்க அதை பார்க்கலாம். நான் என் மொபைல் நம்பர், சோசியல் மீடியா அக்கௌன்ட் ரெண்டையும் பல வருஷமா மாத்தவே இல்ல. அதுவே நான் உங்க கிட்ட மறைக்க ஒண்ணுமில்லனு நிரூபிக்க போதும்னு நினைக்குறேன் “ என்று கூறினான்.
“ நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும், உங்க கூட வெளிய வர மாட்டேன், மத்தவாங்க மாதிரி ஷாப்பிங் போறது, போன் பேசி அரட்டை அடிக்கிறது, லஞ்ச், டின்னர் சாப்பிட எங்கேயும் வர மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் அதெல்லாம் பண்ணலாம். இதுல உங்களுக்கு சம்மதமா ? “ என்று மைரா கேட்க, “ ஒன்னும் பிரச்சன இல்ல, எப்படியும் நான் ரெக்கார்டிங் வேலையில பிஸியா இருப்பேன், அதனால கல்யாணத்துக்கு அப்புறம் அதையெல்லாம் பார்த்துக்கலாம் “ என்றான் பிரஷாந்த்.
“ என் பதில் என்னனு இப்போவே தெரிஞ்சிக்கனுமா இல்ல வெயிட் பண்றீங்களா ? “ என்று மைரா கேட்டதும், “ உங்க இஷ்டம் ஆனா எனக்கு சாப்பாடு போட்டு அனுப்பி வைப்பீங்கன்னு நம்பறேன். உங்கள சந்திக்க போற உற்சாகத்துல என்னால மதியம் லஞ்ச் சாப்பிட முடியல “ என்றான் பிரஷாந்த்.
மைரா சிரித்துக் கொண்டே அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். யாரும் அவர்களை கேள்வி கேட்கவில்லை, ராஜன் அர்ச்சனா மற்றும் வசுந்த்ராவை இரவு உணவு பரிமாற அழைத்தார். அவர்கள் திருமண பேச்சை தவிர பொதுவாக பேசினார்கள். பிரஷாந்தின் அப்பா தனது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி நகைச்சுவையாக சொன்னதைக் கேட்டு சிரித்தார்கள்.
“ உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன் “ என்று மைரா சொன்னதும், எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். மைரா தன் அம்மாவையும் அர்ச்சனாவையும் பார்த்து அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ எனக்கு இந்த கல்யாணம் சம்மதம் “ என்று சொன்னாள்.
ராஜன் தன் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, கண்ணீரை துடைத்துக் கொண்டு மைராவை அணைத்துக் கொண்டார்.
“ நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிரஷாந்த் உனக்கு எப்படி இருக்கு ? “ என்று ராஜன் கேட்க, “ அவங்க சம்மதம் சொல்ல நான் காத்துட்டு இருந்தேன். இப்போ கல்யாண தேதிய முடிவு பண்ணிடலாம் “ என்றான் பிரஷாந்த்.
“ அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிடலாமா ? “ என்று பிரசாந்தின் அப்பா கேட்டதும், ராஜன் பதிலுக்காக மைராவையும் வசுந்தராவையும் பார்த்தார். வசுந்தரா சரி என்று தலையை அசைக்க, மைராவும் சம்மதம் தெரிவித்தாள். அர்ச்சனா இனிப்புகளை எடுத்து மைரா மற்றும் பிரசாந்துக்கு ஊட்டினார்.
“ என் பொண்ணோட கல்யாணத்துக்கு வேலை செய்ய ஒரு மாசம் லீவு போட்டுக்கறேன். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு “ என்று ராஜன் உற்சாகமா சொன்னார்.
“ ஒரு மாசத்துல கல்யாணம் செய்றதால நிச்சயதார்த்தம் வேணாம். கல்யாணம் அன்னைக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடி மோதிரம் மாத்திக்கட்டும். நாளைக்கே தேதிய முடிவு பண்ணி, இன்விடேஷன் வாங்கி ப்ரிண்டிங் பண்ண கொடுக்கலாம் “ என்று பிரஷாந்தின் அம்மா சொன்னதும், “ எல்லாமே மைரா, பிரஷாந்துக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்னு நான் விரும்புறேன் அதனால அவங்களே செலெக்ட் பண்ணட்டும் “ என்றார் ராஜன்.
அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு பிரஷாந்தின் குடும்பத்தினர் கிளம்புவதற்குள் மைராவும், பிரஷாந்தும் ஒரு சம்பிரதாயத்திற்காக தங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக் கொண்டனர்.
ராஜனும் வசுந்த்ராவும் கண்ணீருடன் மைராவை கட்டிப்பிடிக்க, மதனும் அர்ச்சனாவும் தங்களுக்குள் அடக்க முடியாமல் தவித்தனர்.
“ மைரா, நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஒருவழியா கடவுள் உன்னோட சந்தோஷதுக்கு கதவு திறந்துட்டாரு “ என்று ராஜன் சொல்ல, “ மைரா, நீ பிரஷாந்த் கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசிட்டியா ? முழு மனசோட தானே சம்மதம் சொன்ன ? “ என்று கேட்டார் வசுந்தரா.
மைரா ஆம் என்று தலை அசைத்தாள் ஆனால் அவளின் இதயத்தில் இன்னும் ஒரு பயம் ஊர்ந்து கொண்டிருந்தது, ஆனால் அவளால் இனி அவளது பெற்றோர் கஷ்டப்படுவதை பார்க்க விரும்பவில்லை, அர்ச்சனாவின் வீட்டில் இனி அவள் பேசும் பொருளாக இருக்க விரும்பவில்லை, பாதுகாப்பின்மை காரணமாக ரோஷினி அவளை காயப்படுத்துவதை அவள் பார்க்க விரும்பவில்லை, ரோஷினி மற்றும் க்ரிஷ் பற்றி அவள் எதுவும் கேட்க விரும்பவில்லை, இந்த திருமணம் ஒரு தப்பித்தல் மற்றும் பிரசாந்த் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபட நுழைவாயிலைத் திறப்பான் என்றால் அவள் அதைக் கடந்து செல்ல விரும்பினாள், ஆனால் அவளுக்கு கவலை அளித்த ஒரே விஷயம், அவள் மனதில் இருந்த இனந்தெரியாத பயம்.
“ எல்லாரோட சந்தோஷத்துக்காக நான் சரியான முடிவு எடுதுருக்கேன்னு நம்புறேன். கடவுளே!, ப்ளீஸ் இந்த விஷயத்துல எனக்கு உதவி செய் “ என்று மனதில் பிரார்த்தனை செய்தாள்.
அடுத்த நாள் ராஜனும் வசுந்த்ராவும் பிரஷாந்தின் பெற்றோருடன் ஒரு ஜோதிடரை சந்தித்து சரியாக 32 நாட்கள் கழித்து திருமணத்திற்கு தேதியை முடிவு செய்தனர். அன்று மாலை மைராவையும், பிரஷாந்தையும் அழைத்து சென்று திருமண அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்து அச்சிடுவதற்கு இறுதி செய்தார்கள்.
வீடு திரும்பியவர்கள் திருமண அழைப்பிதழ் இறுதி செய்ததை குறித்து அர்ச்சனாவிடமும், மதனிடமும் தெரிவித்தனர். அர்ச்சனா மைராவின் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவில்லை. செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள அவர் இனிப்புகளை செய்ய தொடங்கினார் ஆனால் க்ரிஷின் கத்துவதை கேட்டு உடனே ஹாலுக்கு விரைந்தார்.
******************************************
முன்னோட்டம்:
நான் இல்லாத நேரத்துல நடந்த எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடு அம்மு. நீ எனக்கு போன் எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம் அம்மு. உண்மைய சொல்லனும்னா நான் உனக்கு கொடுத்தத விட்டுக்கொடுக்குறதுக்கு பதிலா நீ அவ கூட சண்ட போட்டு இருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் உனக்கு எது கொடுத்தாலும் அது உனக்கு மட்டும் தான் சொந்தம் அம்மு, அத உன் கிட்ட இருந்து பறிக்க யாருக்கும் உரிமை இல்ல, அது நானா இருந்தாலும் கூட “
