Home FamilyChapter 55

Chapter 55

by Siragugal Novels
12 views

ஆர்யன் ரஞ்சித்துடன் சீக்கிரமாகவே அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான். ARC அலுவலகத்தின் சூழ்நிலை வேலையால் மட்டுமல்ல, கிசுகிசுப்புகளாலும், ஊகங்களாலும், வதந்திகளாலும் பரபரப்பாக இருந்தது. பார்ட்டி மற்றும் ஆர்யன் தனது திருமணத்தை பகிரங்கமாக அறிவித்ததிலிருந்து, அலுவலகம் ஆர்வமான கிசுகிசுப்பின் இடமாக மாறியது.

ஆனால் அதையும் தாண்டி பிரதீப் தலைமையில் புதிய அணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. முடிவு முழுக்க முழுக்க ஆர்யனின் கையில்தான் இருக்கிறது என்பதும், அவன் என்ன சொன்னாலும் அதுவே இறுதியானது என்பதும் அவர்கள் எல்லோரும் அறிந்திருந்தனர்.

தன் அறைக்குக்ள் நுழைந்த ஆர்யன் ரஞ்சித்தை நோக்கித் திரும்பி, “ ரஞ்சித், 42வது மாடியை பிரதீப், மாயாவுக்கு ஒதுக்கு. அவங்க அங்கிருந்து வேலை செய்ய எல்லா ஏற்பாடும் செய் அதோட DC குழுமம், ARC ரெண்டையும் பிரதிநிதித்துவப்படுத்த போற ஊழியர்களும் அங்கிருந்தே வேலை செய்ய ஏற்பாடு பண்ணிடு “ என்று கூறினான்.

” நிச்சயமா சார், முழுசா எல்லா வேலையும் முடிய ஒரு வாரம் தேவைப்படலாம், ஏற்கனவே உள்கட்டமைப்பு குழு கிட்ட இத பத்தி பேசிட்டேன் “ என்று ரஞ்சித் சொல்ல, அதற்கு ஆர்யன், ” அது பரவாயில்ல. இடம் ரெடியானதும் மாயாவுக்கு தகவல் அனுப்பிடு “ என்று சொன்னான்.

ரஞ்சித் சரி என்று சொன்னதும், “மாயா இல்ல சந்திரசேகர் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா ?” என்று கேட்டான் ஆர்யன் அதற்கு ரஞ்சித், “சார், மாயா இன்னும் அவளோட ஃப்ரெண்ட் லேகா வீட்ல தான் இருக்கா. சந்திரசேகர் இதுவரை எதுவும் செய்யல “ என்று சொன்னான்.

” சரி ஆனா ஜாக்கிரத” என்று ஆர்யன் சொன்ன போது அவன் குரல் அமைதியாக ஆனால் கூர்மையாக இருந்தது.

பின்னர், மதிய உணவு இடைவேளையின் போது, கப்பேடேரியா ( cafeteria ) முழுவதும் அரட்டையால் உயிர்ப்புடன் இருந்தது. சிலர் ஆர்வமாக கிசுகிசுப்பு பேசிக் கொண்டிருந்தனர்.

” இன்னைக்கு மீட்டிங் இருக்கு அதுக்கு சஞ்சனா மேடம் வருவாங்கன்னு நினைக்குறியா ?” என்று ஒரு ஊழியர் கேட்க அதற்கு அருகில் இருந்தவர், “நான் அப்படித்தான் நினைக்கிறேன், பார்ட்டியில வந்த மாதிரி பட்டுப்புடவையில வருவாங்க ” என்று கிண்டலாக சொன்னார்.

” அவங்க ஒரு பி.ஏ., அவங்க எப்படி பிசினஸ் நடவடிக்கைகள கையாள முடியும்?” என்று சொல்லி மூன்றாமவர் சிரித்தார்.

” அவங்க வழக்கமான பொண்ணுங்க மாதிரி புடவை கட்டிட்டு வீட்ல இருந்து புருஷ ஆபீஸ்ல இருந்து திரும்பி வர வெயிட் பண்ற மாதிரியான ஆளு “ என்று மீண்டும் ஒருவர் சொல்ல, “ஆர்யன் சார்  தைரியமான, தன்னம்பிக்கையான ஒருத்தர கல்யாணம் செய்வாருனு எதிர்பார்த்தேன். ஆனா இப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது சொல்றாங்க ?” என்றான் இன்னொருவன் தலையை ஆட்டியபடி.

“அவங்கள உண்மையிலேயே ஆர்யன் சார் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்தா ஏன் கல்யாணத்த ஒரு வருஷம் ரகசியமா வெச்சுருக்கணும் ? “ என்று மற்றொருவர் கேலி செய்தார்.

” ஹேய், இப்படி அவங்க முதுகுக்குப் பின்னால பேசுறது  அபத்தமானது,” என்று ஒருவர் இறுதியாக வெறுப்புடன் கூறினார்.

“ஆர்யன் சார் எல்லார்கிட்டயும் அவங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணதா சொன்னாரு. அவங்க குணம், நடவடிக்க எப்படி இருந்தாலும் அது நமக்கு தேவையில்லாத விஷயம். ஆர்யன் சார் அவங்கள லவ் பண்றாரு, நீங்க எல்லாரும் பார்க்கலையா ? அவர் எப்படி அவங்கள நடத்துனாருனு ?” என்று மற்றொருவர் பேசினார்.

” அவங்க ரெண்டு பேரும் ஒரு அற்புதமான ஜோடி, அவங்க கல்யாணம் இன்னும் தலைப்பு செய்தியா எல்லாரும் பேசிட்டு இருக்காங்க, ஆர்யன் சார் நீங்க இப்படி அவர் மனைவிய பத்தி கிசுகிசுக்கிறீங்கன்னு தெரிஞ்சா, சத்தியமா சொல்றேன், அவர் உங்களை இந்த இடத்திலேயே வேலையை விட்டு அனுப்பிடுவாரு ” என்று சொன்ன ஒருவர் அனைவரின் பேச்சையும் நிறுத்த முயன்றார்.

” எதுவா இருந்தாலும், நான் நெனச்சத சொன்னேன், இதுல என்ன தப்பு இருக்கு ? குறைந்த பட்சம் அந்த மாயா அவருக்கு  பொருத்தமானவளா இருந்தா ” என்று ஒருவர் ஏளன புன்னகையுடன் கூறினார்.

அருகில் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா கடைசியில் பொறுமை இழந்து தட்டை கீழே போட்டுவிட்டு புயலாக அவர்களை பார்த்து, “ வாயை மூடுங்க! எவ்ளோ தைரியம் இருந்தா சஞ்சுவ பத்தி இப்படி பேசுவீங்க ? தைரியம் இருந்தா ஆர்யன் சார் முன்னாடி இத சொல்லுங்க, அப்போ தான் அவர் மனைவி மேல வெச்சுருக்க உண்மையான காதலோட அர்த்தம் என்னனு உங்களுக்கே புரியும். அத அவர் முகத்துக்கு நேராக சொல்ல தைரியம் இல்லனா நாவடக்கி ஒழுங்கா இருங்க “ என்று சீறினாள்.

பவி பேசியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அமைதியானார்கள். மீட்டிங் தொடங்க நேரமானதால் எல்லோரும் கலைந்து பதற்றமான எதிர்பார்ப்புடன் மீட்டிங் அறையை நோக்கிச் சென்றனர்.

உள்ளே, நிர்வாகிகளும் ப்ராஜெக்ட் மேனேஜர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ரஞ்சித், பிரதீப் புடைசூழ ஆர்யன் அறைக்குள் நுழைந்தான். ரஞ்சித்தும், பிரதீப்பும் ஆர்யனின் இருபுறமும் உட்கார்ந்திருந்தாலும் அவனுக்கு அருகில்.ஒரு நாற்காலி காலியாக இருந்தது.

பவித்ரா ரஞ்சித்தின் அருகில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள். மீட்டிங் தொடங்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்த நிலையில் கதவுகள் மெல்லிய தள்ளுதலுடன் திறந்து சஞ்சனா உள்ளே நுழைந்தாள்.

வெள்ளை சட்டை, கருப்பு பிளேசர் மற்றும் பேண்ட் அணிந்து முற்றிலும் ஒரு பெண் தொழிலதிபர் போல கம்பீரமாக அவள் உள்ளே நுழைந்ததும் அந்த அறையை நிசப்தமாகியது.

அவளைப் பற்றி கிசுகிசுத்தவர்கள் வாயடைத்துப் போய்விட்டார்கள். அவளது ஒவ்வொரு அசைவிலும் நம்பிக்கையான, கட்டளையிடும் தொழில்முறை தெரிந்தது.

அவள் உள்ளே நுழைந்ததும் ஆர்யன் உடனடியாக நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான். அவனது செயல் மற்ற அனைவரையும் எழுந்து நின்று அவளை மரியாதையுடன் வரவேற்கத் தூண்டியது. தலையசைப்புடனும் பணிவான புன்னகையுடனும் சஞ்சனா வணக்கத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆர்யனின் அருகில் அமர்ந்தாள்.

” ARC காஸ்மெடிக்ஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ மீட்டிங் இப்போ ஆரம்பிக்க போறோம். உங்க எல்லாருக்கும் மிசஸ் சஞ்சனா ஆர்யன் சைதன்யாவ அறிமுகம் செய்றதுல சந்தோஷப்படுறேன். சஞ்சனா, மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் முதலிடம் வந்தவங்க, பிசினஸ் படிச்சு அதுல தங்கப் பதக்கம் வாங்கி இருக்காங்க, நிதி மேலாண்மையில எம்.பி.ஏ பட்டம் வாங்கி இருக்காங்க. அவங்கள அறிமுகம் செய்றதுல நான் ரொம்ப பெருமைப்படுறேன். அவங்க  போர்டு உறுப்பினர்கள்ல ஒருவராவும், ஏஆர்சி காஸ்மெடிக்ஸ் சேர்வுமனாவும் பொறுபெடுத்துக்க போறாங்க “ என்று ஆர்யன் சொன்னதும் ஒரு கணம் அனைவரும் திகைத்துப்போனார்கள்.  பின்னர் அந்த அறையே கரவொலியால் அதிர்ந்தது. அவளது திறமையைக் கேள்விக்குள்ளாக்கியவர்கள் இப்போது வெட்கப்பட்டார்கள்.

“ அடுத்து, ARC காஸ்மெடிக்ஸ்க்கான நம்ம புது தலைமை நிர்வாக அதிகாரி திரு.பிரதீப், ஒரு அனுபவமிக்க தொழிலதிபர், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலில் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு. ஏஆர்சி காஸ்மெடிக்ஸ் செயல்பாடுகளுக்கு அவர் முழு பொறுப்பையும் ஏத்துக்குவாரு “ என்று சொன்ன ஆர்யன் புன்னகையுடன் திரும்பி, “ வெல்கம், சஞ்சனா, வெல்கம் பிரதீப்.” என்று அவர்களை வரவேற்றான்.

ஆர்யன் மீண்டும் அனைவரையும் பார்த்து, “உங்களுக்கு ஏற்கனவே தெரியும், சில நிர்வாகிகள் நேரடியாக பிரதீப்புக்கு ரிபோர்ட் செய்வாங்க. ஒவ்வொரு பதவிக்கும் ஏ.ஆர்.சி.யிலிருந்து ஒரு பிரதிநிதியும், டி.சி குழுமத்திலிருந்து ஒரு பிரதிநிதியும் இருப்பாங்க. பிரதீப் கீழ வேலை செய்ய சிலர நாங்க தேர்ந்தெடுத்து இருக்கோம். இப்போ மிசஸ் சஞ்சனா உங்க கிட்ட பேசுவாங்க “ என்று சொல்லி ஆர்யன் அவளை பார்த்து புன்னகைத்தான்.

சஞ்சனா நம்பிக்கையுடன் எழுந்து நின்று, ” எல்லாருக்கும்  வணக்கம். உங்க பலபேருக்கு ஏற்கனவே என்ன தெரியும், அதனால புதுசா அறிமுகப்படுத்த எதுவும் வேணாம் நேரா விஷயத்துக்கு வரலாம். ஆர்யன் சொன்ன மாதிரி பிரதீப் கீழ வேலை செய்ய போறவங்களோட லிஸ்ட் என்கிட்ட இருக்கு. இந்த கூட்டாண்மையில ARCக்கு முக்கிய பங்கு இருக்கு அதனால நாம  கூட்டு நடவடிக்கைகள தொடங்கிய அப்றமும் நீங்கள் ARC ஊழியர்களாக தான் இருப்பீங்க. உங்க நலன் மேல எங்களுக்கு முழு அக்கறை இருக்கு, அது எங்க பொறுப்பும் கூட. பார்ட்னர்ஷிப் பிசினஸ் ஆரம்பிச்சதும் கொஞ்ச நாள் நாம நிறைய சவால் சந்திக்க வேண்டி இருக்கலாம் ஆனா நாம இத வெற்றிகரமா மாத்துவோம்.

ஏஆர்சி ஊழியர்கள் டிசி ஊழியர்களுக்கு நேரடியாக ரிபோர்ட் செய்ய மாட்டாங்க. நீங்க வழக்கம் போல உங்க வேலையை பண்ணி  மிஸ்டர் பிரதீப்கிட்ட ரிப்போர்ட் பண்ணுங்க. இந்த பார்ட்னர்ஷிப்ப ஒரு பெரிய வெற்றியா மாத்த உங்கள் முழு முயற்சியையும் எதிர்பார்க்குறேன். உங்க எல்லாரையும் நான்  நம்புகிறேன் ” என்று சஞ்சு சொன்னதும் அறையில் ஒரு நிம்மதி நிலவியது.

அவள் ஆச்சரியமான அறிவிப்பைச் செய்வதற்கு முன்பு ஒரு சிறிய மௌனம் இருந்தது. ” மிஸ் பவித்ரா ARC காஸ்மெடிக்ஸ் பிரிவுக்கு  நிதித் தலைவராக இருப்பாங்க, வாழ்த்துக்கள் பவித்ரா” என்று பதிவிட்டதும், பவித்ரா திகைத்து எழுந்து நின்றாள்.

“ரொம்ப தேங்க்ஸ். இந்த வேலைக்கு என்னோட முழு அர்ப்பணிப்பையும் திறமையையும் கொடுப்பேன்” என்று பெருமையுடன் கூறினாள் பவித்ரா.

அந்த அறிவிப்பால் முற்றிலும் அதிர்ச்சியடைந்து ஒரு மூலையில் மாயா திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

சஞ்சனா மீண்டும் தொடர்ந்து, “அடுத்து, நம்ம கூட ஒரு புது ஊழியர் சேர போறாங்க. மிஸ் கீர்த்தி, மார்க்கெட்டிங் மேனேஜரா சேருவாங்க. மீதம் இருக்க ஆளுங்களோட லிஸ்ட் ஈமெயில் மூலம் உங்களுக்கு வரும் “ என்று சொல்லிவிட்டு அவள் பிரதீப் பக்கம் திரும்பி, “பிரதீப், நீங்க இப்ப பேசலாம்.” என்றாள்.

“தேங்க்யூ ஆர்யன், சஞ்சனா” என்றான் பிரதீப், எழுந்து நின்றபடி. “இந்த அற்புதமான புது முயற்சியோட ஒரு பகுதியா இருக்க போற குழுவுக்கு முன்னாடியே நன்றி சொல்லிக்குறேன். சீக்கிரம் நாம நிறைய பேசுவோம், நன்றி.” என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்.

மீட்டிங் அத்துடன் முடிந்தது என்று ஆர்யன் அர்வித்ததும் அறை காலியாகத் தொடங்கியது. ஆர்யன், ரஞ்சித், சஞ்சனா மற்றும் பிரதீப் மட்டுமே எஞ்சியிருந்தனர். உண்மையான விளையாட்டு உண்மையிலேயே தொடங்கிவிட்டது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர்.

பிரதீப் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, “ ரஞ்சித், நாம மாயாவை சந்திச்சு ஒரு சம்பிரதாயமான பிசினஸ் பேச்சுவார்த்தை நடத்தணும்” என்றான். அதற்கு ரஞ்சித் சரி என்று சொன்னான்.

அருகில் நின்றிருந்த ஆர்யன், அமைதியான அதிகாரத்துடன், “பிரதீப், உனக்கு தேவையான ஆளவுக்கு ஆட்சேர்ப்பு செய்யலாம் முக்கியமா உனக்கு ஒரு PA முதல்ல வேலைக்கு அமர்த்து “ என்று சொன்னான்.

“கண்டிப்பா ஆர்யன். இப்போ நான் போய் தளத்துல வேலை எந்த அளவுக்கு முடிஞ்சி இருக்குனு பார்க்குறேன் “ என்று சொல்ல, “  நிச்சயமா போய் பாரு, ரஞ்சித், பிரதீப்பை உன் கூட கூட்டிட்டு போ “ என்றான் ஆர்யன்.

பிரதீப்பும், ரஞ்சித்தும் ஆய்வுக்காக வெளியேறியதும் ஆர்யன் சஞ்சனாவை தன் அறைக்கு அழைத்து சென்றான். அவன் தன் நாற்காலியில் அமர்ந்ததும் சஞ்சனா வசதியாக அவன் மடியில் அமர்ந்தாள், உடனே அவனது கைகள் இயல்பாக அவளை சுற்றி வளைத்தன.

” இந்த டிரஸ்ல கிளாஸியா, செக்ஸியா இருக்க பொண்டாட்டி ” என்று ஆர்யன் சொன்னதும், “வாயை மூடுங்க மிஸ்டர் ஹஸ்பண்ட். உனக்கு நான் எல்லா காஸ்ட்யூம்லயும் செக்ஸியா தான் தெரிவேன் ” என்றாள் சஞ்சு கிண்டலான பார்வையுடன்.

” சத்தியமா எல்லாத்துலையும் இல்ல “ என்று ஆர்யன் ஆரம்பிக்கும் போதே சஞ்சு அவனை நிறுத்தி, “ நான் எங்க இருந்து வேலை செய்றது ? “ என்று கேட்டாள். அதற்கு அவன், “நீ எப்பவும் என் பக்கத்துலதான் இருப்ப. இப்போ இருக்க உன்னோட ரூம் இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்ய சொல்லி இருக்கேன்” என்று அவள் முகத்தில் இருந்த முடியை கோதிவிட்டபடி சொன்னான்.

” ஹ்ம்ம், மாயா நம்ம ஆபீஸ்ல இருப்பா” என்று சஞ்சனாவின் குரலில் யோசனை தொனித்தது. “அவ நம்ம கிட்ட இருந்து பல மாடி கீழே இருப்பா, பிரதீப், பவித்ரா அப்புறம் கீர்த்தி இவங்க எல்லாரும்  அதே தளத்துல தான் இருப்பாங்க. அவ கிட்ட இருந்து ஏதாவது  சந்தேகப்படுற மாதிரி செயல்பாடு இருந்தா சுலபமா சிக்கிடுவா. நம்ம பில்டிங் முழுக்க CCTV இருக்கு. நான், ரஞ்சித், பவித்ரா, கீர்த்தி மட்டும் தான் உன் ரூமுக்கு வர முடியும். வேற யாரும் வர முடியாது அதனால நீ ஒண்ணும் கவலைப்படாத.” என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான்.

“என் பாதுகாப்ப பத்தி நான் பயப்படல ஆர்யன். அவ நம்ம  உறவுக் கூட விளையாடுவாளோனு பயப்படுறேன்” என்று சஞ்சனா ஒப்புக்கொண்டாள்.

” லூசு பொண்டாட்டி, அவ என்ன வேணும்னாலும் செய்யட்டும் ஆனா நல்லா ஞாபகம் இருக்கட்டும் நாம ஒன்னா இருக்கோம் “ என்று சொல்லி மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“சரி… ஆனா என்னை லூசுனு சொன்னியா?” என்று அவள் கண்களைச் சுருக்கி அவன் மார்பை லேசாகத் தட்டினாள். அதற்கு அவன் உடனே பொய்யாக, “ வலிக்குது மா, சரி மன்னிச்சிடு, இப்போ சொல்லு, நீ என்ன முடிவு பண்ணி இருக்க ? “ என்று கேட்டான்.

” என்ன முடிவு ? “ என்று சஞ்சு குழப்பத்துடன் கேட்க, “ என்ன? நம்ம ஹனிமூன் எங்க போகலாம்னு உன்ன தான் முடிவு பண்ணச் சொன்னேன். இந்த பார்ட்னர்ஷிப் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி எங்கேயாச்சும் போலாம். புது காற்றை சுவாசிச்சு, நம்ம நாமே உற்சாகப்படுத்துவோம், அப்போ தான் நிறைய எனெர்ஜி கிடைக்கும்  “ என்று சொன்னான் ஆர்யன். ஆனால் அவன் சொன்னதை கேட்ட  சஞ்சு, “ஹனிமூனுக்கு போனா நமக்கு எப்படி எனர்ஜி மிஞ்சும்?” என்று முணுமுணுத்தாள்.

” ஏய் நீ சொன்னதும் எனக்கு கேட்டுச்சுடி, நீ கவலைப்படாத, உனக்கு எனெர்ஜி குறைஞ்சா அதுக்கு என்ன செய்யணுமோ அத நான் செய்றேன் “ என்று சொல்லி திருப்தியாக புன்னகைத்தான்.

“வாயை மூடு, ஆர்யன்.” என்று சொல்லி சஞ்சு அவனை மிரட்ட ஆனால் அவனோ விடாமல், “பதில் சொல்லுடி, ரஞ்சித் கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்றேன்.” என்றான்.

சில நொடிகள் யோசித்த சஞ்சு, ” மாலத்தீவு போலாமா ?” என்று கேட்டாள். அதற்கு ஆர்யன், “உன் இஷ்டம் எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே, எனக்கு இடம் ஒரு முக்கியம் இல்ல, நீயும் நானும் ஒன்னா இருக்கனும் அவ்ளோ தான்.” என்று சொல்லி புன்னகைத்தான்.

” நாம ஏற்கனவே நம்ம ரூம்ல ஒன்னா தான் இருக்கோம் “ என்று சொல்லி சஞ்சு கண்களை உருட்டினாள் அதை கேட்டவன், “ எவ்ளோ தான் ரூம்லயே …” என்று இழுத்தான். சஞ்சு சட்டென அவன் வாயில் கையை வைத்து, “ அத சொல்லி முடிக்காத “ என்று மிரட்டினாள்.

அவன் அவள் கையை விலக்கி,”ஏய், நான் ஒரே ரூம்ல தங்குறத பத்தி பேசிட்டு இருந்தேன், நீ என்ன நெனச்ச ? “ என்று விளையாட்டாக கேட்டான். சஞ்சு என்ன  சொல்வது என்று புரியாமல் அங்கும் இங்கும் பார்த்து, “இல்ல…நான் எதுவும் நினைக்கல” என்று சமாளித்தாள். அதற்கு அவன், “ ஒய் கேடி, உன்ன பத்தி எனக்கு தெரியாதா ? ஆனா நீ நெனச்சதும் ஒரு காரணம் தான் “ என்று சொல்லி கண்ணடித்தான்.

” நீ ரொம்ப கேட்ட பையன் போடா “ என்று சஞ்சு சொன்னதும், “ எங்க இத நைட்டு சொல்லுடி பார்ப்போம் “ என்றான் ஆர்யன்.

” நான் கிளம்புறேன்,” என்று அறிவித்து அவள் எழுந்திருக்க எத்தனித்தாள் ஆனால் ஆர்யன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் வாசனையை முகர்ந்தான்.

” ஐஸ் கிரீம், ஸ்வீட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சஞ்சு மா, ஐஸ் கிரீம் கொண்டு வர சொல்லட்டுமா ? “ என்று கேட்டு உருகினான் ஆனால் சஞ்சு, “இல்ல. ஹனிமூனுக்கு கிளம்பற வரைக்கும் ஒண்ணுமில்ல.” என்று முடிவாக சொல்லிவிட்டாள்.

சஞ்சு சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்யன், ” இதெல்லாம் அநியாயம், நான் ஒத்துக்க மாட்டேன் “ என்றான் அதற்கு சஞ்சு “ உன்ன யார் ஒத்துக்க சொல்லி கேட்டாங்க இப்போ ? நான் முடிவு பண்ணிட்டேன், இதுல எந்த மாற்றமும் இல்ல “என்றாள்.

” முதல்ல இப்போ தப்பிக்க முடியுமா பாரு அப்புறம் நைட்டு பத்தி யோசிக்கலாம் “ என்று சொல்லி ஒரே வேகத்தில் அவளைத் தூக்கி தன் இளைப்பாறும் அறைக்கு சென்றான். அவள் தன் கால்களை அசைத்தபடி எதிர்ப்புத் தெரிவித்தாள், ஆனால் அவன் அவளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு பின்னங்காலால் கதவைச் சாத்திவிட்டு விளையாட்டாக அவளைப் படுக்கையில் தள்ளினான்.

அன்று மாலை ஆர்யனின் அறைக்குள் ரஞ்சித்.நுழைந்த போது  ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.

“சார், நான் காபி எடுத்துட்டு வரட்டுமா?” என்று ரஞ்சித் கேட்டதும், “ஆமாம் ரஞ்சித். எனக்கு காபி, சஞ்சுவுக்கு ஹாட் சாக்லேட். தலை வலியில ரொம்ப நேரமா தூங்குறா “ என்று பதில் சொன்னான் ஆர்யன்.

ரஞ்சித் சரி என்று சொல்லி வெளியேறி சிறிது நேரத்தில் இரண்டு கோப்பை கொண்டு வந்து அவற்றை மேஜையில் வைத்துவிட்டு அமைதியாக வெளியேறினான்.

ஆர்யன் காபியும் சூடான சாக்லேட்டும் இருந்த தட்டை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவன் சஞ்சனா போர்வைக்குள்  உறங்குவதைப் பார்த்தான், அவளது உடைகள் இன்னும் தரையில் கிடந்தன.

அவளருகில் அமர்ந்து அவளை மெல்ல எழுப்பினான். ” பொண்டாட்டி, எழுந்து இந்த ஹாட் சாக்லேட் குடி, உனக்கு எனெர்ஜி கிடைக்கும் அப்புறம் நாம வீட்டுக்கு போகலாம் “ என்று சொன்னான். அப்போதும் தூக்கக் கலக்கத்தில் இருந்த சஞ்சனா எழுந்து உட்கார்ந்து அவன் தோளில் சாய்ந்து வெதுவெதுப்பான பானத்தை குடித்தாள்.

செழுமையும் இனிமையும் அவளை உடனடியாக உயிர்ப்பித்து, அவள் புத்துணர்ச்சி பெற்று கிளம்ப உடை அணிந்தாள்.

கண்ணாடி முன் தலைமுடியை சரி செய்தபடி “இனிமே உன் ரூமுக்கு நான் வர மாட்டேன். வீட்டுக்கு போனதும் உன்னோட பொருள் எல்லாத்தையும் எடுத்து ரெண்டாவது மாடியில இருக்க மாஸ்டர் பெட்ரூம்ல வைக்க சொல்றேன் “ என்று சொன்னாள்.

” பண்ணு பண்ணு, நான் பின்னாடியே உன்னையும் தூக்கிட்டு போயிடுவேன். அந்த மாஸ்டர் பெட்ரூம் இன்னும் ரொம்ப பெருசு “ என்று சொல்லி சத்தமாக சிரித்தான். 

“அடக் கடவுளே, ஆர்யன்! வாயை மூடிட்டு வா வீட்டுக்கு போலாம் “ என்று சொன்னவள் அவன் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்குள் அவனை வெளியே இழுத்துச் சென்றாள்.

******************************************

முன்னோட்டோம்:

“மிஸ் மாயா, நான் மிஸஸ் சஞ்சனா ஆர்யன். அப்புறம் ஆர்யன் இனி ஏ.ஆர்.சி காஸ்மெடிக்ஸ் பிசினஸ்ல தலையிட மாட்டாரு,அதனால அவர சந்திக்க வேண்டிய உங்களுக்கு இருக்காது. பிசினஸ் சம்மந்தமா எல்லாமே பிரதீப் பார்த்துக்குவாரு.   கொள்வார். என் தலையீடு தேவைப்பட்டா அவர் என்ன அணுகுவாரு. நம்ம சந்திக்க வேண்டிய அவசியம் கூட குறைவா தான் இருக்கும் “

 

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!