Home FamilyChapter 89

Chapter 89

by Siragugal Novels
6 views

ஆர்யன் ஒரு குழந்தையைப் போல சிணுங்கியபடியும், முகத்தை சுளித்துக் கொண்டும் அறை முழுவதும் நடந்து கொண்டிருந்தான், அதே நேரத்தில் சஞ்சு அவனது வியத்தகு சைகைகளைப் பார்த்து மனம் விட்டுச் சிரித்தாள்.

“ஹலோ மிஸ்டர் ஹஸ்பண்ட், நீங்க தூங்கலையா?” என்று சஞ்சு இன்னும் சிரித்துக் கொண்டே கேட்டதும், “இல்ல…” என்று ஆர்யன் முணுமுணுத்து கோவமாக இருப்பது போல நடித்தான். அதை நன்கு புரிந்து கொண்ட சஞ்சு, “சரி. அப்போ எனக்கு தூக்கம் வருது. குட் நைட்” என்று சொல்லி அவனை கிண்டல் செய்து படுக்கையில் படுத்தாள்.

ஆர்யன் அவளருகில் விரைந்து சென்று அவள் கன்னங்களை உள்ளங்கையில் பற்றி ஒரு முறை முத்தமிட்டான். கடந்த சில நிமிடங்களில் அவன் எத்தனை முறை அப்படி முத்தமிட்டான் என்று அவள் எண்ணத் தவறிவிட்டிருந்தாள்.

“ப்ளீஸ்… ப்ளீஸ் மா… ப்ளீஸ் மா “ என்று கண்களை சுருக்கி ஆர்யன் கெஞ்சினான் அதற்கு சஞ்சு, “ அய்யோ என்னால முடியல “ என்றாள். 

“ ப்ளீஸ் டி, சொல்லு “ என்று ஆர்யன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதும், “ சரி சொல்றேன், ஆனா நான் சொல்ல போறத நீங்க செய்ய மாட்டீங்கன்னு எனக்கு சத்தியம் பண்ணுங்க “ என்று சஞ்சு கூறினாள்.

அவள் வார்த்தையை கேட்டதும், “ லூசா டி நீ ? “ என்றான் ஆர்யன்.

” அப்போ நான் சொல்ல மாட்டேன் போடா ” என்று சஞ்சு சட்டென  பதில் சொன்னதும், “ என்னது போடா வா ? மா, ஏன் இப்படி பண்ற ? நீ ஆசைப்பட்டு அத செய்ய முடியலனா எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும் தெரியாதா ? “ என்று ஆர்யன் வருத்தத்துடன் கேட்டான்.  

” நான் சொல்றத கேளு ஆர்யன். நீ ரொம்ப கஷ்டப்படுவ, நீ அத செய்றத பார்த்தா எனக்கும் கஷ்டமா இருக்கும். அதனால தான் சொல்றேன் “ என்று சஞ்சுவும் சொன்னாள். அவள் வார்த்தையை யோசித்த ஆர்யன், “ சரி ஓகே, நான் செய்ய மாட்டேன். இப்ப சொல்லு, உன்னோட ஆசை என்ன ? “ என்று கேட்டு சரணடைந்தான்.

” ஜென்டில்மேன் பிராமிஸ், மீற கூடாது ” என்று சஞ்சு விளையாட்டாக சொல்ல, “ அட சொல்லு டி “ என்றான் ஆர்யன்.

” நம்ம குழந்த பிறக்கும் போது நீ என்கூட டெலிவரி ரூம்ல இருக்கணும்னு ஆச “ என்று சஞ்சு மெல்லிய குரலில் சொன்னதும், ஆர்யன் மௌனமாக அதை கேட்டு அவளை பார்த்தான். பிறகு அவளிடம், ” அப்போ ஏன் நான் உன் கூட இருக்க வேணாம்னு சொல்ற ? “ என்று மெதுவாகக் கேட்டான்.

“நான் வலியில துடிக்குறத உன்னால தாங்கிக்க முடியாது. என்னோட வலிய பார்த்து நீ கஷ்டப்படுறத பார்க்க என்னால முடியாது அதனால நீ உள்ள வர வேணாம். வெளியவே இரு “ என்று சஞ்சு மென்மையாக கூறினாள்.

” நீ சொன்னத கேட்ட அப்புறம், அத நினைச்சா எனக்கு இப்போவே ரொம்ப பயமா இருக்கு” என்று ஆர்யன் சொல்ல, ” ஒண்ணுமில்ல பேபி, இப்பவே அத பத்தி யோசிச்சு என் மனநிலையை கெடுக்காத ” என்று சொல்லி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

ஆர்யன் மௌனமாக இருக்க, ” அது மட்டும் இல்ல ஆர்யன், எனக்கு இன்னொரு ஆசையும் கூட. எனக்காக நீ ஒரு பாட்டு பாடணும்” என்று கிசுகிசுத்தாள்.

” ஏன்டி, என் குரல் எப்படி இருக்கும்னு தெரிஞ்சும் உனக்கு பாட்டு கேட்கணுமா ? “ என்று ஆர்யன் வியப்புடன் கேட்டான். அதற்கு சஞ்சு, “ ஹ்ம்ம், ஆமா எனக்கு கேட்கணும் “ என்று பதில் சொன்னாள்.  

” நான் பாடுனா, நீ அந்த பாட்டையே மறந்துடுவ மா “ என்று ஆர்யன் சிரித்தபடி எச்சரித்தான். ஆனால் சஞ்சு, “ எனக்கு ஆச அவ்ளோ தான் “ என்றாள். அதற்கு ஆர்யன் வெறுமனே தலை அசைத்தான்.

மறுநாள் காலை, ஆர்யன் சீக்கிரமே எழுந்து சஞ்சு தயாராக அவளுக்கு உதவி செய்தான். பின்னர் காலை உணவு சாப்பிட அவளை கீழே அழைத்து சென்றான்.

” சஞ்சு, நான் கொஞ்சம் வேலை விஷயமா வெளிய போறேன். நான் மதிய லஞ்ச் சாப்பிட வந்துடுவேன் சரியா?” என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், “ சரி பா “ என்று புன்னகைத்து சொன்னாள்.

“அம்மாவும், அப்பாவும் சாயங்காலம் வந்துடுவாங்க. நீ ரூம்ல இருந்து நல்லா ரெஸ்ட் எடு “ என்று சஞ்சுவிடம் சொல்லிவிட்டு பின்னர் கௌசல்யாவை பார்த்து, “ கௌசல்யா மா, ப்ளீஸ், சஞ்சுவ பார்த்துக்கோங்க “ என்று அறிவுறுத்தினான்.

“கண்டிப்பா சார்” என்று தலையசைத்தார் கௌசல்யா.

சஞ்சுவை அவளது அறைக்கு அழைத்து சென்ற பின், ஆர்யன் ரஞ்சித்துடன் மேன்ஷனை விட்டு கிளம்பினான். இருவரும்  விரைவில் ஆர்யனின் பாதாள ரகசிய அறையை அடைந்தனர்.

“எல்லாம் ரெடியா?” என்று அவர்கள் உள்ளே நுழையும் போதே ஆர்யன் கேட்டான். அதற்கு ரஞ்சித், “எல்லாம் ரெடி சார்” என்று பதில் அளித்தான்.

” அப்போ ஆரம்பிக்கலாம் “ என்று ஆர்யன் சொன்னதும், ரஞ்சித் காவலர்களை அழைத்தான். அவர்கள் ஒரு நீண்ட மேஜையை  போட்டார்கள். அதில் ஒரு முழு வாழை இலை போடப்பட்டு,   விதவிதமான சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு, இலை முழுவதுமாக நிரப்பப்பட்டது. இலை அருகில் மது பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. விருந்துக்கு முன்னால் ஒற்றை நாற்காலி போடப்பட்டு, அதன் மறுபுறம் லேப்டாப் வைக்கப்பட்டிருந்தது.

” எல்லாம் தயாரா இருந்தா அந்த ஆள கூட்டிட்டு வந்து இந்த விருந்த சாப்பிட வையுங்க ” என்று உத்தரவிட்டான் ஆர்யன்.

ஒரு அறைக்குள் சென்ற ரஞ்சித், நிற்க முடியாத ஒரு பலவீனமான முதியவரை இழுத்துக்கொண்டு திரும்பி வந்தான். விருந்து பரிமாரப்படிருந்த இலைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அவரை அமர வைத்தான். அந்த மனிதரால் தலையைக் கூட நிமிர்த்த முடியாமல் இருந்ததால், ஆர்யன் பார்க்கும் வகையில் ரஞ்சித் ஒரு கட்டையால் அவரின் முகத்தை உயர்த்தினான்.

அவர் முகத்தை பார்த்ததும் ஆர்யனின் முகபாவம் மாறியது. ” அய்யோ கடவுளே ! யார் இந்த மனுஷன் ?” என்று அவன் கேட்க, ” சார், இவர் தான் முன்னாள் தொழிலதிபர்… மிஸ்டர் சந்திரசேகர்” என்று சொல்லி ரஞ்சித் சிரித்தான்.

” அடப்பாவிங்களா ? என்னடா இப்படி பண்ணிட்டீங்க இவர ? சாப்பாடு கொடுக்குறீங்களா இல்லையா ? “ என்று ஆர்யன் கேட்டதும், ” ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்குறோம் சார் ” என்றான் ரஞ்சித்.

” என்ன ? ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடா ? யார கேட்டு முழு சாப்பாடு கொடுத்தீங்க ? இனிமே அத பாதியா குறைச்சிடுங்க. “ என்று ரஞ்சித்திடம் சொன்ன ஆர்யன் பின்னர் சந்திரசேகரை பார்த்து, “ நான் சொல்றது சரி தானே மிஸ்டர் சந்திரசேகர்?” என்று கிண்டலாக கேட்டான்.

சந்திரசேகர் தளர்ந்து உடைந்து போய் அவனைப் பார்த்தார்.

” என்ன பார்க்குறீங்க ? நாம நிறைய பேச வேண்டி இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி உங்களுக்கு விருந்து கொடுக்க ஆசைப்படுறேன் அதனால முதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசுவோம் “ என்றான் ஆர்யன் அலட்சியமாக.

நீண்ட நாட்களாக சரியான உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்த சந்திரசேகர் பசியில் உணவை வாயில் திணித்துக் கொண்டு வெறித்தனமாக சாப்பிடத் தொடங்கினார். அவர் பாதி சாப்பிட்டு முடித்த நிலையில் ஆர்யன் மேஜை மேல் கைகளை ஊன்றி முன்னால் சாய்ந்தான்.

” இந்த விருந்து சாப்பாடு எதுக்குன்னு காரணம் தெரிஞ்சிக்க வேணாமா? “ என்று ஆர்யன் கேட்டதும், சந்திரசேகர் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தார்.

” சரி நானே சொல்றேன் கேளுங்க. உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க ஆசைப்பட்டீங்க இல்லையா ?  அதனால உங்க பொண்ணோட கல்யாணத்தை இப்போ உங்களுக்கு காட்டறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ப்ளீஸ் பாருங்க” என்று ரஞ்சித்துக்கு சைகை காட்டினான் ஆர்யன்.

ரஞ்சித் லேப்டாப்பில் ஒரு வீடியோவை இயக்கினான். அதில் மாயாவின் கழுத்தில் விவான் தாலி செயின் அணிவிப்பது  தெரிந்தது அதே நேரம் மாயா படுக்கையில் சுயநினைவின்றி கிடந்தாள். அதை பார்த்ததும் சந்திரசேகர் உறைந்து போனார். திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவர் கைகளில் இருந்த உணவு மீண்டும் இலையில் விழுந்தது.

” உன் விரோதம் என் கூட தானே, ஏன் என் பொண்ணுக்கு இப்படி ஒரு காரியம் பண்ண ? என்று சந்திரசேகர் மனம் உடைந்து முணுமுணுத்தார்.

“அவ கல்யாணத்த பார்க்க உங்களுக்கு ஆசை இல்லையா ? உங்களுக்காக தான் இதை பண்ணேன். நியாயமா பார்த்தா நீ எனக்கு நன்றியோட இருக்கணும் “ என்று ஆர்யன் கிண்டலாக கூறினான். பின்னர் மீண்டும் அவரிடம், “சரி. இன்னிக்கு நான் உனக்கு விருந்து கொடுக்க அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.” என்று சொன்னான். 

சந்திரசேகரின் மரணச் செய்தியை ஒளிபரப்பிய செய்தி சேனலின் வீடியோவை ரஞ்சித் போட்டுக் காட்டினான். அதை பார்த்து சந்திரசேகர் அதிர்ச்சியானார்.

” இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி இன்னும் முக்கியமான விஷயம் இருக்கே “ என்று ஆர்யன் சிரித்தான்.

அடுத்த வீடியோவில் நரேன் இறுதி சடங்குகளை கண்ணீருடன் செய்வதைக் காட்டியது.

” நரேன் யாருக்கு இறுதி சடங்கு செய்றான் தெரியுமா ? “ என்று கேட்ட ஆர்யனின் குரல் தழுதழுத்தது. சந்திரசேகர் இதயமா படப்படக்க அவனை பார்க்க. ” சந்தேகமே வேணாம். நிச்சயம் உனக்கு தான் மிஸ்டர் சந்திரசேகர். இது நல்லா இருக்கு இல்லையா? மார்ச்சுரியில இருந்த நாங்க எடுத்த ஒரு அனாத பிணத்துக்கு உன் மகன் இறுதிச் சடங்கு செய்றத பார்த்தியா ?” என்று ஆர்யன் கேட்டான்.

சந்திரசேகர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்.

“ஏன் சாப்பிடுறத நிறுத்திட்ட ? சரி ஓகே, அடுத்த சர்ப்ரைஸ் என்னனு பார்த்துட்டே சாப்பிடு ” என்றான் ஆர்யன் அலட்சியமாக.

ஆர்யனின் பெற்றோர் உயிருடன் இருப்பதையும், பகிரங்கமாக பேசுவதையும் காட்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படங்கள் திரையில் பளிச்சிடத் தொடங்கின. அதை பார்த்து சந்திரசேகர் திகைத்துப் போய் நாற்காலியில் இருந்து எழுந்தார்.

“என் சர்ப்ரைஸ் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று ஆர்யன் ஏளனப் புன்னகையுடன் கேட்டான்.

“எப்படி ? அவங்கள நீ எப்படிக் கண்டுபிடிச்ச ?” என்று சந்திரசேகர் அதிர்ச்சியில் கிசுகிசுத்தார். அதற்கு ஆர்யன், ” எவ்ளோ நாளா இங்க இருக்க ஆனா உன் பார்ட்னர் இங்க இருக்கான் அவன பார்க்கலையா ? இது ரொம்ப மோசம்” என்று ஆர்யன் கிண்டலாக சொன்னதும், ரஞ்சித் இன்னொரு அறையை திறந்து ராஜேஷை வெளியே இழுத்து வந்து அவனை ஆர்யனின் காலைடியில் தள்ளினான். ஆர்யன் தன் ஷூவால் அவன் முகத்தை தூக்கி பலமாக உதைத்தான்.

ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து தன் முன்னால் உடைந்து கிடந்தவனை ஒரு குளிர்ந்த புன்னகையுடன் பார்த்தான்.

” இவ்ளோ நாள், உன்ன விட எனக்கு அதிக அனுபவம் இருக்குறதா நெனச்சுட்டு இருந்தேன் ஆனா என் அப்பா, அம்மாவ உன் இடத்துல பார்த்த அப்போ நான் நெனச்சது ரொம்ப தப்புனு நீ நிரூபிச்சுட்ட. ஆனா இப்போ உன்ன விட எனக்கு அதிக அனுபவம் இருக்குனு நிரூபிச்சு உன்ன ஜெயிச்சு காட்ட வேண்டிய நேரன் இது சரி தானே ? “ என்று ஆர்யன் பெருமையோடு சொன்னான்.

ஆர்யனின் வார்த்தையை கேட்டதும், “ மாயா நிச்சயம் உன்ன சும்மா  விடமாட்டா. இதுக்காக அவ உன்ன பழிவாங்குவா.” என்று சொன்ன சந்திரசேகரின் குரலில் கோபமும் இயலாமையும் கலந்திருந்தன.

ஆனால் அதை கேட்ட ஆர்யன் ஏளனமாகச் சிரித்தான். ” பைத்தியக்கார கிழவா, இன்னும் நான் உன்ன விட அனுபவத்துல குறைஞ்சவனா இருப்பேன்னு நெனச்சியா ? உன் பொண்ணு இப்போ என்ன அண்ணான்னு கூப்பிடறா. உன்னால அத நம்ப முடியுதா ? “ என்று சொல்லி சத்தமாக சிரித்தான். 

” அப்படி நடக்க வாய்ப்பே இல்ல, அவ உன்ன கொல்லுவா “ என்று என்று சீறினார் சந்திரசேகர்.

” யோவ், நான் அவளோட நினைவுகள மொத்தமா மாத்திட்டேன். அவளுக்கு நான் சுத்தமா ஞாபகம் இல்ல. அவள பொருத்தவரைக்கும் நான் அவளோட விஷ்ணு அங்கிள் மகன் ஆர்யன் மட்டும் தான். அது மட்டும் இல்ல, இப்போ அவளுக்குத் ஞாபகத்துல இருக்குறது அவளோட லவர் விவான் மட்டும் தான். இப்போ அவன வெறித்தனமா லவ் பண்றா. கேட்க எவ்ளோ நல்லா இருக்கு, இல்லையா? இப்போ சொல்லு, நான் உன்ன விட புத்திசாலி தானே ? என்ன சொல்ற ?” என்று சொல்லி ஆர்யன் சிரித்தான்.

“ஆர்யன், நான் பண்ண எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்குறேன். தயவு செஞ்சு என்ன விட்டுடு. என் வயச கொஞ்சம் நெனச்சு பாரு. நான் உன் மேல வெச்சுருந்த பாசம், உனக்கு நான் தான் பிசினஸ் கத்துக் கொடுத்தேன் “ என்று கெஞ்சிய சந்திரசேகரின் தொனி மாறியது. அவரது பெருமை போய்விட்டது, பயம் மற்றும் விரக்தியால் மாற்றப்பட்டது.

அதுவரை ஏளனம் செய்து கொண்டிருந்த ஆர்யனின் புன்னகை மறைந்தது. அவன் கண்கள் கலங்கின. ” என் அப்பா கூட பல வருஷமா உனக்கு நல்ல நண்பனா தான் இருந்தாரு. அவர் உன்மேல அவ்ளோ மரியாத வெச்சுருந்தாரு. பிசினஸ் செய்ய கூட உனக்கு உதவி பண்ணாரு. அவருக்கும் உன் வயசு தான் “ என்று சொன்ன போது கோவத்தில் அவன் தாடை இறுகியது.

“ப்ளீஸ் ஆர்யன்… என்ன விடு. உன் வாழ்க்கையில நான் வரவே மாட்டேன்” என்று கெஞ்சினார் சந்திரசேகர்.

ஆர்யன் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, “ என்ன ரஞ்சித் இப்படி பிச்ச கேட்குற மாதிரி கெஞ்சுறாரு ? ஆனா இப்படியா பிச்ச கேட்பாங்க ? “ என்று ஏளனம் செய்தான். அவன் சொன்னதை கேட்டதும், திடீரென்று சந்திரசேகர் மண்டியிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வழிந்தோட தன்னை விட்டுவிடும்படி ஆர்யனிடம் கெஞ்சினார்.

ஆர்யன் கோபத்துடன் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று சந்திரசேகரின் காலரைப் பிடித்து பலமாகத் தள்ளியதும் அவர்  பின்னோக்கி விழுந்து சுவரில் மோதினார்.

“உன்ன அடிக்க நான் உன்ன தொட விரும்பல ” என்று ஆர்யன் காறித் துப்பினான். ” நான் உன்ன என் அப்பா மாதிரி நடத்தினேன், உன்னால தான் உன் பொண்ணு பண்ண எல்லா சித்திரவதையும் தாங்கிக்கிட்டேன். என் சஞ்சு, உன்னாலயும், உன் பொண்ணாலையும் எவ்ளோ கஷ்டப்பட்டா தெரியுமா ? நீ என் பொண்டாட்டிய கொல்ல முயற்சி பண்ண அப்புறம் கூட உன் பொண்ணுக்கு நான் உதவி செய்ய தயாரா இருந்தேன். ஆனால் நீ எனக்கு என்ன பண்ண ? ‘மன்னிப்பு ‘ என்ற வார்த்தைய சொல்லக்கூட உனக்கு  தகுதி இருக்கா ? எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட மன்னிப்பு கேட்ப ? வாழ்நாள் முழுக்க உன்ன சித்ரவத செய்வேன் “ என்று ஆர்யன் சீறினான்.

பின்னர் அவன் ரஞ்சித் பக்கம் திரும்பி, “ இவன இருட்டு ரூம்ல அடைச்சு வை. ஒரு துளி வெளிச்சம் கூட இவன் ரூம் உள்ள  நுழையக் கூடாது. ஒரு நாளைக்கு ஒருவேள மட்டும் அர வயிறு சாப்பாடு கொடு. ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்க குறைஞ்சது நூறு முறையாவது தண்ணி கேட்டு பிச்சை எடுக்கனும் அதுக்கு அப்புறம் தான் கொடுக்கணும். இவன் சாக நெனச்சா கூட சாக கூடாது. இவன் மரணத்த நான் தான் தீர்மானிப்பேன், இவன அவ்ளோ சீக்கிரம் சாக விடமாட்டேன்” என்றான்.

” சரிங்க சார், அப்புறம் ராஜேஷ், அவன என்ன செய்யணும் ? ” என்று கேட்டான் ரஞ்சித்.

” ரெண்டு பேரும் கூட்டாளிங்க தானே அதனால சாப்பாடு, தண்ணி முதல் கொண்டு எது கொடுத்தாலும் சமமா பிரிச்சு கொடு, “ என்று ஆர்யன் முறைத்துக் கொண்டே கூறினான். 

ராஜேஷ் பதறிப்போய் மண்டியிட்டு அமர்ந்தான்.

” சார், தயவு செஞ்சு என்ன இப்படிச் செய்யாதீங்க. நானா எதையும் செய்யல. அவர் செய்ய சொன்னத தான் நான் செஞ்சேன். தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க.” என்று கெஞ்சி கதறினான்.

“நீ அவரோட  பி.ஏ.வா இருந்தா, சட்டவிரோதமா என்ன வேணும்னாலும் செய்வியா ? இந்த கேடுகெட்ட கிழவனோட சேர்ந்து நீ பண்ண பாவம் எல்லாமே எனக்கு தெரியும். இவன் பிசினஸ் நல்லா நடக்க நீ எவ்ளோ கொடும பண்ணி இருக்கனு என்கிட்ட லிஸ்ட் இருக்கு “ என்று சொன்ன ஆர்யனின் குரலில் ஆத்திரம் தொனித்தது.

“சார்… என்ன மன்னிச்சிடுங்க சார். இனிமே நான் எதுவும் செய்ய மாட்டேன். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க” என்று மீண்டும் கெஞ்சினான் ராஜேஷ்.

” அய்யோ கடவுளே ! மறந்தே போயிட்டேன் பாரு. நான் உனக்கு ஒரு பரிசு வெச்சுருக்கேன் ராஜேஷ் “ என்று சொன்ன ஆர்யன், “ ரஞ்சித், அவன் கிட்ட கொடு” என்று கூறினான்.

ரஞ்சித் ராஜேஷிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தான். ராஜேஷ் அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு உறைந்து போனான். சந்திரசேகர் இறந்த அதே விபத்தில் தானும் இறந்ததாக அவனது இறப்புச் சான்றிதழ் அது. அதிர்ச்சியில் அவன் கண்கள் விரிந்தன, நடுங்கும் கைகளிலிருந்து காகிதம் நழுவியது.

” டேய், உன் அப்பனுக்கே சொல்லி கொடுப்பேன் டா. நானும் நல்லவனா இருக்க ரொம்ப முயற்சி பண்ணேன். எங்கடா விட்டீங்க ? “ என்று அருவருப்புடன் சொன்னான் ஆர்யன்.

“ஆர்யன், தயவு செஞ்சு இப்படி செய்யாத” என்று சந்திரசேகர் தரையில் விழுந்து கெஞ்சினார்.

“குட் பை. நல்லா சந்தோஷமா இரு ” என்று அலட்சியமாக சொல்லவிட்டு ஆர்யன் அங்கிருந்து புறப்பட்டான். சந்திரசேகரும், ராஜேஷும் கதறி அழுதனர்.  

ஒரு வாரம் கழித்து, ரிசார்ட் கொண்டாட்டத்தால் பரபரப்பாக இருந்தது. வண்ணமயமான விளக்குகளும் மின்னின, புதிய பூக்கள் காற்றை நறுமணத்தால் நிரப்பின. பிரதீப் மற்றும் கீர்த்தி ஆகியோரின் நிச்சயதார்த்த நாளுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படிருந்தது.

கீர்த்தியின் பெற்றோர், சுரேந்தருடன் வந்தவர்களை அன்புடன் வரவேற்றனர். ஆர்யன், ரஞ்சித், நரேன் மூவரும் கடைசி நேர ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு பெரிய அறைக்குள், பெண்கள் ஆடை அணிந்து தயாராகி கொண்டிருந்தனர்.

கூர்மையான கருப்பு நிற கோட் சூட் அணிந்த பிரதீப் மேடைக்கு வந்தான், ரஞ்சித்தும் நரேனும் அவனுடன் நடந்து சென்றனர்.

பின்னர், கீர்த்தி உள்ளே நுழைந்தாள், கிரிஸ்டல் வேலைப்பாடுகளுடன் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஒரு அற்புதமான நீல லெஹங்காவில் அழகாக இருந்தாள். அவளது தோழிகள் புன்னகையுடனும் உற்சாகத்துடனும் அவளுடன் வந்தனர்.

பவி, சஞ்சு மற்றும் மாயா ஆகியோர் நேர்த்தியான முத்து செட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பச்சை நிற கவுன்களை அணிந்திருந்தனர். பிரதீப்பும், கீர்த்தியும் மோதிரங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவருக்கொருவர் அன்புடன் புன்னகைத்தும், பெரியவர்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்றனர்.

ரஞ்சித் ஏற்பாடுகளை திறம்பட கையாண்டான், விருந்தினர்களை இரவு உணவு பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

ஆர்யன் முழு நேரமும் சஞ்சுவின் பக்கத்திலேயே இருந்தான். அவள் இப்போ நிறை மாதமாக இருந்ததால் உதவி இல்லாமல் நடப்பது அல்லது உட்காருவது அவளுக்கு கடினமாகிவிட்டது. ஆர்யனின் இருப்பு நிகழ்வு முழுவதும் அவளை வசதியாக, ஆதரவாக  வைத்திருந்தது.

ஆர்யனின் பெற்றோர் பிரதீப் மற்றும் கீர்த்தியை அன்போடு ஆசீர்வதித்தார்கள். அந்த மாலை நேரம் சிரிப்பும் இசையும் மகிழ்ச்சியான கேலிப் பேச்சுக்களும் நிறைந்த ஒரு நடன விருந்தாக மாறியது. இரவு முடிந்ததும், விருந்தினர்கள் விடைபெற்று ஒரு அழகான மாலையின் நினைவுகளுடன் வீடு திரும்பினர்.

********************************

முன்னோட்டம்:

“ உங்க வசீகரமா சிரிப்புல பல பொண்ணுங்க மனச கொல்றீங்க மிஸ்டர் ஹஸ்பண்ட்.”

“ஆனா இந்த வசீகரமான மனுஷன் என்னோட வசியக்காரி கிட்ட மயங்கி கிடக்குறேனே “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!