Home Family48. கெட்சப், லயா எங்க?

48. கெட்சப், லயா எங்க?

by Siragugal Novels
16 views

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மைரா தன் கன்னத்தில் யாரோ மென்மையாகத் தட்டியதும் முனகினாள். அவள் கண்களைத் திறக்க முயன்ற போது ஒரு ஜோடி சிறிய உள்ளங்கைகள் அவள் கண்களை மூடிக்கொண்டன. மைரா அந்த உள்ளங்கைகளைத் தொட்டு புன்னகைத்து கற்றியபோது, ஒரு அழகான குட்டி தேவதை அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ என் குட்டி லயா ஏற்கனவே கண் முழிச்சிட்டாளா ? உன் அப்பா எங்க? “ என்று மைரா கேட்டதும், “ அம்மா, அப்பா லயாவுக்கு பால் கொண்டு வர போய் இருகாரு “ என்று தன் மழலை மொழியில் அழகாக சொன்னாள் லயா.

“ அச்சோ, என் லயாவுக்கு பால் வேணுமா ? “ என்று கேட்டு மைரா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து லயாவை மடியில் தூக்க எத்தனிக்க, லயா மறுத்து அவளருகில் அமர்ந்து மைராவின் வயிற்றை தடவிக் கொண்டிருந்தாள்.

“ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு லயா அக்கா ஆயிடுவா “ என்று மைரா சொன்னதும், “ அம்மா எனக்கு தம்பி வேணும், ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள் லயா.

“ தம்பியா இல்ல தங்கச்சியானு வெயிட்  பண்ணி பார்ப்போம். சரி பல் ப்ரஷ் பண்ணியா ? “ என்று கேட்டாள் மைரா.

“ ஹ்ம்ம், அப்பா பண்ணிவிட்டாரு “ என்று பதில் கூறினாள் லயா.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு கேஷவ் தட்டுடன் உள்ளே வருவதை இருவரும் பார்த்தனர். தட்டை நைட் ஸ்டாண்டில் வைத்துவிட்டு கட்டிலில் மைராவின் அருகில் அமர்ந்து லயாவை மடியில் அமர்த்திக் கொண்ட கேஷவ் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான். உடனே ஒரு சிணுங்கல் சத்தம் கேட்டதும் மைரா உதட்டைப் பிதுக்குவதைப் பார்த்தவன், சிரித்துக் கொண்டே அவளது உதடுகளை முத்தமிட்டான்.

பாலைக் கையில் பிடித்துக் கொண்டு மைராவிடம் பேசிக்கொண்டே லயாவை மெதுவாக குடிக்க செய்தான்.

“ நீ இன்னும் தூங்க விரும்புறியா இல்ல ப்ரேக்பாஸ்ட் இங்கேயே கொண்டு வரட்டுமா ? “ என்று கேஷவ் கேட்க, “ அதிசயமா உங்க பையன் நேத்து நைட்டு என்ன நல்லா தூங்க விட்டான் அதனால நான் ரெடியாகுறேன். நாம ஒன்னா சாப்பிடலாம் “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ அப்போ நீயும் பையன் தான் பிறப்பான்னு நினைக்குறியா ? “ என்று கேஷவ் ஆச்சரியமாக கேட்டதும், “ லயா, தம்பி வேணும்னு ஆசைப்படுறா. அவளுக்காக நானும் ஆசைப்படுறேன். அதுவும் இல்லாம, பையன் பிறந்தா நம்ம டீம் சமமாக இருக்கும் “ என்று சொல்லி அவள் புன்னகைத்தாள். அப்போது திடீரென்று குழந்தை உதைப்பதை உணர்ந்தாள். கேஷவ் அவளது வயிற்றை தொட்டு மெதுவாக தடவிக் கொடுத்தான்.

“ பேபி, என் அம்முவ தொந்தரவு செய்யாத. உன் அக்கா மாதிரி நல்ல பிள்ளையா இரு. நான் சொல்றது சரி தானே லயா? “ என்று கேஷவ் தன் மகளிடம் கேட்டான். அதற்கு அவள் உடனே, “ ஆமா பா, நான் நல்ல பொண்ணு “ என்று சொல்லி புன்னைகைத்தாள்.

கேஷவ் அவள் மேல் உதட்டில் இருந்த பாலைப் பார்த்து சிரித்து, கட்டை விரலால் துடைக்க எத்தனிக்க, லயா சட்டையில் துடைத்துக் கொண்டாள். கேஷ் அவள் முகத்தில் இருந்த முடியை விலக்க, லயா அவன் தோளில் சாய்ந்ததும், மைரா கண்களை மூடி அவன் இன்னொரு தோளில் சாய்ந்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் ஒரு அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்களைத் திறந்து எதுவுமே நடக்காதது போல் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள். சுற்றும் முற்றும் பார்த்த மைரா, படுக்கையிலிருந்து லேசாக நொண்டி இறங்கி அறையைச் சுற்றிப் பார்த்தாள்.

“ என்ன தேடுற அம்மு ? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்க, “ கெட்சப், லயா எங்க? “ என்று கேட்டாள்.

அவள் வார்த்தைகளைக் கேட்ட கேஷவ் குழப்பத்துடன், மைரா இன்னும் சுற்றிலும் தேடுவதைக் கண்டான். அவள் தேடுவதை நிறுத்தி தலையைக் குனிந்து வயிற்றைப் பார்த்து, தட்டையான அடிவயிற்றைத் தொட்டாள், அவள் முகத்தில் நிறைய குழப்பம் சுழன்றது.

கேஷவ் அவளருகே நகர்ந்து அவள் தோளைத் தொட்டதும், மைரா மீண்டும் அவனையும் தன் அடிவயிற்றையும் பார்த்தாள்.

“ இது ஒரு கனவா? ஆனா நிஜமா இருந்த மாதிரி இருந்துச்சே. நான் எங்க பொண்ணோட முகத்த பார்த்தேன். எங்க பொண்ணா ?  எதிர்காலத்துல எங்களுக்கு குழந்தை பிறக்கும்னு அர்த்தமா? கல்யாணம் நடந்த அன்னைக்கு கண்ட கனவு மாதிரி என்னோட இந்த கனவு நனவாகுமா? “ என்று மனதில் நினைத்த மைராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையும், அவர்கள் குழந்தை லயாவுக்கு பெற்றோராக இருப்பதையும் நினைவுகூர்ந்து புன்னகைத்தாள்.

“ என்ன ஆச்சு அம்மு ? லயா யாரு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ யாருமில்ல. லயா… லயா.. லயா அகாடமியில இருக்க என் ஸ்டுடென்ட். அவ என்ன சந்திக்க நம்ம வீட்டுக்கு வர மாதிரி கனவு கண்டேன். வேற ஒண்ணுமில்ல “ என்று சொல்லி மைரா சமாளித்தாள்.

அவள் சொன்னதை கேட்டவன், “ அது சரி ஆனா ஏன் வயிற பிடிச்சிட்டு இருக்க ? “ என்று கேட்டான்.

மைரா சட்டென்று தன் கைகளை விலக்கிவிட்டு, சிவந்த முகத்தை மறைக்க அவனிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ ஒண்ணுமில்ல, உங்களுக்கு அலறல் கேட்டுச்சா ? வாங்க என்ன நடந்துச்சுனு பார்ப்போம் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவளது சிவந்த கன்னங்களையும், கண்கள் தன்னைச் சந்திக்காததையும் கண்டான். மெல்ல படிகளில் இறங்கியவனின் பார்வை முழுக்க அவள் மீதே இருந்தது.

“ நமக்கு குழந்த இருக்க மாதிரி கனவு கண்டியா அம்மு ? நம்ம பொண்ணுக்கு ‘லயா’னு பெயர் வெச்சோமா ? நம்ம  இளவரசிக்கு ஒரு அழகான பெயர், ஆனா நீ ஏன் என்கிட்ட கனவு பத்தி சொல்ல மாட்டேங்குற ? நமக்கு கல்யாணம் ஆனா அன்னைக்கு நீ கண்ட கனவு மாதிரி உன்னோட இந்த கனவு நனவாகும்னு நம்புறேன். நம்ம பொண்ணு பிறக்குறதுக்கு முன்னாடியே அவள பார்க்குற அதிர்ஷ்டம் உனக்கு கெடச்சு இருக்கு. நான் எத்தன வருஷம் வெயிட் பண்ணனும்னு கடவுளுக்கு தான் தெரியும் “ என்று மனதில் நினைத்துக் கொண்டே படிகளில் இறங்கியவன் அவர்கள் ஹாலை அடைந்ததும் அவளை சோபாவில் உட்கார வைத்து அவள் அருகில் அமர்ந்தான்.

ரோஷினி ஒரு அழைப்பில் பேசியபடி அழுது கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். அர்ச்சனா, மதன், க்ரிஷ் மூவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அழைப்பை துண்டித்த ரோஷினி,  க்ரிஷின் அருகில் இருந்த சோபாவில் சரிந்தாள்.

“ ரோஷினி, காலையில இப்படி கத்துற அளவுக்கு என்ன நடந்துச்சு சொல்றியா ? “ என்று அர்ச்சனா கேட்டார்.

“ இன்னும் வேறென்ன நடக்கனும் ? கிட்டத்தட்ட 3 மாசமா நான் வேலை பண்ண என்னோட ப்ராஜெக்ட் லேப்டோப்புல இருந்து மொத்தமா காணாம போயிடுச்சு. நான் செய்த விளக்கக்காட்சியும் ஏதோ மாயம் பண்ண மாதிரி இல்லாம போயிடுச்சு “ என்று சொல்லி அழுதாள்.

“ நீ அதோட பிரதிய வேற எங்கேயாவது சேவ் ( save ) பண்ணி வெச்சுருக்கணும் ரோஷினி “ என்று மதன் கூறியதை கேட்டவள், “ நேத்து நைட்டு என் லேப்டாப்புல செருகி வெச்சுருந்த பென்டிரைவுல அதோட நகல் இருந்துச்சு ஆனா அதுல இருந்தும் காணும் “ என்றாள் ரோஷினி.

“ ஆனா நீ வீட்ல இருந்து வேலை செய்யும்போது இப்படி எப்படி நடக்கும்? தவறுதலா நீயே அழிச்சிட்டியா ? “ என்று மதன் கேட்டார்.

“ இந்த ப்ராஜெக்டை ஒப்படைக்க இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. அப்படி இருக்கும் போது நான் ஏன் டெலீட் செய்ய போறேன் “ என்று ரோஷினி பதில் சொல்லி அழுதாள்.

க்ரிஷ் ஒரு வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து சென்று, அவனது பெற்றோரை குழப்பத்தில் ஆழ்த்தினான். அமைதியாக காபியை குடித்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள் மைரா.

அவள் கேஷவிடம் அவளை அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதும் அவன் அவள் சொன்னபடியே செய்தான். மைரா கதவைப் பூட்டிவிட்டு கேஷவின் தாடையைப் பிடித்து அவள் கண்களைப் பார்க்க செய்தாள்.

“ என்கிட்ட பொய் சொல்லாதீங்க. நான் உண்மைய மட்டும் தான் தெரிஞ்சிக்க விரும்புறேன். ரோஷினியோட ப்ராஜெக்ட் காணாம போனதுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கா ? “ என்று மைரா கேட்டதும், “ இல்ல அம்மு, நான் ஏன் அப்படி செய்ய போறேன் ? போய் குளிச்சிட்டு வா. நான் ஷாப்பிங் போகணும் அப்புறம் நம்ம பொருள் எல்லாம் பேக்கிங் வேற பண்ணனும் “ என்று பதில் சொன்னான்.

“ நீங்க என்கிட்ட சொல்ல தயாரா இல்லானா பரவாயில்ல. நான் அப்புறம் ரெடியாகுறேன், நீங்க ஷாப்பிங் போகலாம் “ என்று சொல்லிவிட்டு மைரா கட்டிலில் உட்கார்ந்து மொபைலை பார்க்க தொடங்கினாள்.

கேஷவ் தோல்வியில் பெருமூச்சு விட்டபடி அவள் காலருகில் அமர்ந்து அவளது காயம்பட்ட பாதத்தை அவன் தொடையில் வைத்து பேண்டேஜை கழற்றி ஜெல்லை மெதுவாக மசாஜ் செய்தான்.

“ நான் தான் பண்ணேன் அம்மு, அவ நம்ம குடும்பத்துக்கு  கொடுக்குற எல்லா வலிக்கு இது அவளுக்கு தேவை தான். நேத்து நான் பார்த்தேன். நீயா ஒன்னும் கீழ விழல. அவ வேணும்னே அவ கால் குறுக்கிட்டு உன்ன கால் இடறி விழ வெச்சா. அம்மா சமையல் மட்டும் தான் பண்ணிட்டு இருந்தாங்க. மத்த வேலைய செய்ய ஆள் இருந்தாங்க ஆனா அந்த சூனியக்காரி வேலை செய்றவங்கள கேவலமா நடத்தி அவங்க வேலைய விட்டு நின்னுட்டாங்க. அப்போவும் அம்மா அவள எந்த வேலையும் செய்ய அனுமதிக்கல. அவளோட துணிகளை துவைச்சு, அவளோட ரூம் கூட அவ சுத்தம் பண்றது இல்ல. யாரும் நம்ம வீட்டுக்கு வேலை செய்ய வர தயாராக இல்ல. இப்போ நான் ஒருத்தர ஏற்பாடு பண்ணி இருக்கேன். அவங்க அடுத்த வாரம் வருவாங்க. என்னையும், க்ரிஷையும் அப்பா எப்படி நடத்தினாரோ அதே மாதிரி தான் அவளையும் நடத்தினாரு. ஆனா பதிலுக்கு எங்க எல்லாருக்கும் என்ன கெடச்சுது ? அவ கிட்டத்தட்ட ஒரு வருஷமா உன்ன வார்த்தையால அவ்ளோ கஷ்ட்டப்படுத்திட்டு இருந்தா. இப்போ உன்ன காயப்படுத்தவும்  தொடங்கிட்டா. அவளோட எல்லைய மீறி ஒவ்வொன்னும் செய்றா “ என்று கேஷவ் கோவத்தோடு கூறினான்.

“ புரியுது ஆனா இத பெருசு பண்ண வேணாம். எனக்காக ப்ளீஸ். எனக்கு ஒன்னும் பெருசா காயம் ஆகல, வெறும் சுளுக்கு மட்டும் தான். அதுவும் இல்லாம க்ரிஷ் ஒரு முடிவுக்கு வரவரைக்கும் வெயிட் பண்ணுவோம். “ என்று சொன்ன மைரா பின்னர் அவனிடம், “ அது சரி, எப்படி அத பண்ணீங்க ? “ என்று கேட்டாள்.

“ உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன் ஆனா என் கேள்விக்கு நீயும் பதில் சொல்லனும்னு நான் விரும்புறேன். நீ நேர்மையா பதில் சொல்லுவனு எனக்கு சத்தியம் செய் “ என்றான்.

“ நான் பொய் சொல்ல மாட்டேன் கெட்சப் “ என்று மைரா சொன்னதும், “ நானும் பொய் சொல்ல மாட்டேன் அம்மு ஆனா உண்மைய தாமதமா சொல்றேன் அவ்ளோ தான். உன் கேள்விக்கு பதில், நான் சிபிஐயில ஹேக்கரா வேலை செய்றேன். நான் பெரும்பாலான வருஷம் டெல்லியில தான் வாழ்ந்தேன். இப்போ அவசர வேலைய மட்டும் வீட்ல இருந்து செய்றேன் “ என்று கேஷவ் உண்மையை சொன்னதும் அதிர்ச்சியான மைரா, “ நிஜமா தான் சொல்றீங்களா ? “ என்று கேட்டாள்.

“ பெங்களூர்ல வேலைக்கு சேர்ந்த உடனே, ஹேக்கிங் நுட்பம் கத்துகிட்டேன். ரெண்டு வருஷம் அப்புறம் சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணேன். அப்புறம் சி.எஸ்.இ.யில் பாஸ் பண்ணி,  பணியாளர் பயிற்சித் துறை மூலமா சிபிஐ பதவிக்கு இண்டர்வியூ கலந்துகிட்டு தேர்வானேன். இது என்னோட முக்கிய வேலை, ஃப்ரீலான்சிங் என்னோட வேலையை மறைக்க பகுதி நேரமா செய்றேன். நான் இன்னொரு வேலையும் செய்றேன் ஆனா அது என் மனசுக்கு புடிச்சு திருப்திக்காக செய்றேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ “ அது என்ன வேலை ? “ என்று கேட்டாள் மைரா.

“ நீ அத தெரிஞ்சிக்க தயாரா இருக்கும் போது நான் சொல்றேன் ஆனா கவலைப்பட வேண்டாம், அதுல எந்த ஆபத்தும் இல்ல “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.

“ அப்போ சிபிஐ வேலையில உங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? “ என்று மைரா உடனே கேட்டாள்.

“ இல்ல, என் வேலையில ஆபத்து ரொம்ப ரொம்ப குறைவு தான் இருந்தாலும் நீ இத யார்கிட்டயும் சொல்லாம ரகசியா வெச்சுருக்கணும். என் வேலைய பத்தி நீ பயப்பட வேண்டாம் “ என்று கேஷவ் சொல்ல, “ நான் ஏன் பயப்படணும்? எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. நீங்க என்ன நிறையே ஆச்சரியப்படுத்துகிறீங்க கெட்சப். ஒவ்வொரு நாளும் நான் உங்களோட வித்தியாசமான பக்கத்த பார்க்குறேன் “ என்று பிரமிப்பாக கூறினாள்.

“ என்ன பத்தி முழுசா தெரிஞ்ச அப்புறம் என்னோட எல்லா முகமும் உனக்கு புடிக்கும்னு நம்பறேன் “ என்று கேஷவ் சொல்ல, “ எனக்கு புடிக்கும். சரி, இப்போ உங்க நண்பர் வருண் பத்தி சொல்லுங்க. அவர் உங்க கூட வேலை செய்றாரா ? “ என்று கேட்டாள்.

“ இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்போ எனக்கு கீழ கொஞ்ச பேர் வேலை செய்றாங்க. வருண் என்னோட அசிஸ்டன்ட். என் செல்வாக்கால இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு டிக்கெட் உனக்கு வாங்கினேன் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா ஆச்சரியம் அடைந்து, “ வேறென்ன பண்ணீங்க ? “ என்று கேட்டாள்.

“ ஒண்ணுமில்ல, நேத்து நைட்டு நான் அப்படி செய்ய வேண்டிய கட்டாயத்துல இருந்தேன், நான் கொஞ்சம் கூட வருத்தப்படல. இப்போ நான் ரெண்டு கேள்வி கேட்பேன் அதுல ஒரு கேள்விக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லணும் “ என்று கேஷவ் சொன்னதும், அவன் நிச்சயம் ஏதோ வித்தியாசமாக கேட்கப்போகிறான் என்பதை அறிந்த மைரா தயக்கத்துடன் தலையசைத்தாள்.

“ கேள்வி 1. லயா யார்?  கேள்வி 2. நமக்கு கல்யாணம் நடந்த அன்னைக்கு மாதிரி நேத்து கனவு வந்துச்சா ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ நீங்க ரொம்ப புத்திசாலி கெட்சப். ரெண்டுல ஒரு கேள்விக்கு பதில் சொன்னாலும் நீங்க எதிர்ப்பார்க்குற பதில் உங்களுக்கு கிடைச்சிடும். இருந்தாலும் கனவு பத்து உங்க கிட்ட நேரடியா சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு அதனால மறைமுகமா பதில் சொல்றேன். வேற எப்போவாச்சும் நமக்கு ஒரு பெண் குழந்தையும், நான் கர்ப்பமா இருக்க மாதிரி கண்ட கனவையும் உங்களுக்கு சொல்றேன் “ என்று மனதில் நினைத்து வெட்கப்பட்டவள், புன்னகையை மறைக்க கன்னத்தைக் கடித்தாள்.

“ நான் ஒரு கனவு கண்டேன், அது அப்படியே உண்மையா நடந்த மாதிரி இருந்தச்சு “ என்று பதில் சொன்னவள், அவன் மேலும் எதுவும் கேட்பதற்குள், இப்போ ரெடியாகி ஷாப்பிங்குக்கு கிளம்புங்க. ஷாப்பிங் முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க “ என்று சொன்னாள்.

கேஷவ் அவளை மேலும் வற்புறுத்தவோ அல்லது கிண்டல் செய்யவோ இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு அழகான கனவு, அது ஒரு நாள் நனவாகும், அந்த நாள் விரைவில் நடக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அவள் கணுக்காலில் கட்டு போட்டு அவளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு ஷாப்பிங் கிளம்பினான்.

**********************************************

முன்னோட்டம்:

“ மக்களுக்கு நாம என்ன செய்றோம்னு பார்க்க நேரமில்லை, நாம பாரிஸ் ( paris ) போய் சேருற வர என்னால உன்ன கிஸ் பண்ணாம இருக்க முடியாது அதனால நான் எனக்கு தோணும் போதெல்லாம் உன்னதிருட்டுத்தனமா கிஸ் பண்ணுவேன், நீ பொறுத்துக்கோ “ 

 

You may also like

2 comments

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!