Home Family4. நான் அவன லவ் பண்றேனா ?

4. நான் அவன லவ் பண்றேனா ?

by Siragugal Novels
54 views

16 வயதில் மைரா:

மைரா இப்போது  சிறுமி அல்ல என்றாலும் க்ரிஷிடம் தனக்கு தோன்றும் உணர்வுகளுக்கு பெயரிட அவளுக்கு சிரமமாக இருந்தது. அவனது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அவள் குழம்பினாலும் அவனது அக்கறையையும் அன்பையும் அவள் நேசித்தாள். அவளுடைய உயிர் தோழி நைனாவால் கூட மைராவுக்கு அவளுடைய சிறிய இதயத்துக்கு என்ன நடக்கிறது என்பதை உணர உதவ முடியவில்லை. குழப்பமான உணர்வுகளுடன், அவன் அவளை முத்தமிடுவதை அவள் விரும்பினாள், அது ஒரு சாதாரண முத்தமாக இருந்தாலும் அவன் கட்டிப்பிடிக்கும்போது வெட்கமாக உணர்ந்தாள்.

அன்று அவளது 16வது பிறந்த நாள், அவள் தனது பரிசுகளை திறக்க காத்திருந்தாள், குறிப்பாக க்ரிஷின் பரிசு.

காலப்போக்கில் பிறந்த நாளன்று அவள் எழுந்தவுடன் ஹாலில் வைக்கப்பட்டிருந்த பரிசுகளைப் பெறுவது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. எல்லா வருடங்களையும் போலவே அவள் எழுந்தவுடன் அனைத்து பரிசுகளும் வைக்கப்பட்டிருந்த ஹாலுக்கு  விரைந்தாள், அவள் “K” என்று பெயரிடப்பட்ட பரிசு ஒன்றை எடுத்து  உடனடியாக திறந்தாள். அதில் அவள் விரும்பிய ஒரு அழகான வாட்ச் இருந்தது, அவளுக்கு அந்த பரிசு மிகவும் பிடித்தது. அதே நேரத்தில் கதவு திறந்து க்ரிஷ் கையில் ஒரு ரோஜாப்பூவுடன் உள்ளே நுழைந்து அவளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு, “ ஹேப்பி பர்த்டே மைரா “ என்று அவளுக்கு வாழ்த்து சொன்னான்.

“ எனக்கு பரிசு ரொம்ப பிடிச்சிருக்கு, க்ரிஷ். ரொம்ப ரொம்ப நன்றி. நீ தான் பெஸ்ட் “ என்று சொல்லி மைரா முகம் சிவந்து அவனை அணைத்துக் கொண்டு நன்றி சொன்னாள். க்ரிஷ் புன்னகையோடு ரோஜாவை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். மீதமிருந்த பரிசுப் பொருட்களைத் திறந்து விட்டு தன் அறைக்கு விரைந்து சென்று நைனாவை உடனடியாக அழைத்ததும், அவள் முதல் ரிங்கிலேயே பதிலளித்தாள்.

“ இன்னைக்கு என்ன நடந்துச்சுனு யூகிக்க முடியுமா? “ என்று மைரா கேட்டதும், “ முதல்ல உனக்கு வாழ்த்து சொல்ல விடு, ஹேப்பி பர்த்டே மைரா “ என்று வாழ்த்திவிட்டு பின்னர், “ என்ன யூகிக்கனும் ? க்ரிஷ் உன்ன கட்டிப்புடிச்சு கிஸ் பண்ணி வாழ்த்து சொல்லி இருப்பான். அத விடு, இந்த வருஷம் என்ன பரிசு கொடுத்தான் ? “ என்று நைனா கேட்டாள்.

 “ ஒரு வாட்ச் பரிசா கொடுத்துருக்கான் ஆனா அவன் ஏன் நேரடியா கொடுக்கல்னு தெரியல. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு நைனா. நான் அவனோட பெஸ்ட் friend சொல்றான் ஆனா அவனோட நடவடிக்க எல்லாம் வேற மாதிரி இருக்கு. நான் அவன லவ் பண்றேனா நைனா ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டதும், “ ஒருவேள இருக்கலாம், அவனும் கூட உன்ன லவ் பண்ணலாம் “ என்று நைனா கூறினாள்.

“ நைனா, ஒவ்வொரு முறையும் எனக்கு என்ன  தேவைப்படுதோ அத அவன் எனக்கு வாங்கி கொடுக்குறான், நான் பிரச்சனையில இருக்கும் போது அவன் தான் என்ன காப்பாத்துறான், எனக்கு சாக்லேட், எனக்கு புடிச்ச பூ, இந்த சர்ப்ரைஸ் பரிசு இப்படி நிறைய செய்றான் “ என்று மைரா சொன்னதை கேட்ட நைனா, “ அது மட்டுமா ? ஸ்கூல் போகும் போற வழியில உன்ன கிண்டல் பண்ண பசங்கள அவன் அடிச்சு இருக்கான் “ என்று சொன்னாள்.

“ ஆமா, அவனுக்கு என் மேல லவ் இல்லனா ஏன் இதையெல்லாம் செய்யணும் ? அவனோடு இந்த அக்கறை, லவ் இதையெல்லாம் பார்க்கும் போது நானும் அவன லவ் பண்றேன்னு நினைக்குறேன். இந்த லவ் எனக்கு எப்பவும் வேணும் “ என்று மைரா சொல்ல, “ நீ அவன லவ் பண்றதா இருந்தா உனக்கு என்னோட வாழ்த்துக்கள், ஒருவேள இல்லனாலும் அவன் உன்னோட பெஸ்ட் friend உனக்கு பரிசு கொடுத்துருக்கான் அவ்ளோ தான் விடு. இப்போ இன்னைக்கு என்ன பிளான் சொல்லு ? “ என்று கேட்டாள்.

“ நம்ம எப்பவும் போற இடத்துல சந்திக்கலாகமா ? “ என்று மைரா கேட்டதும், “ மேடம், நீங்க கொஞ்சம் சாப்பிடுறத கவனியுங்க. க்ரிஷ் உன்னை விட ஒல்லியாக இருக்கான். போன தடவை ரோஷினி இங்க வந்த அப்போ, அவ ஒல்லியா, கச்சிதமா இருக்கானு சொல்லி புலம்பிட்டு இருந்த நீ “ என்று சொன்னாள்.

“ இன்னைக்கு லீவ் விடலாம், நாளைல இருந்து நான் டயட்டிங் செய்ய ஆரம்பிக்கிறேன். நான் உன்ன ஐஸ் கிரீம் பார்லர்ல சந்திக்குறேன். இப்போ போய் நான் அப்பா, அம்மா, அத்த அப்புறம் மாமாவ பார்க்கணும் “ என்று மைரா அவசரமாக சொல்ல, “ அந்த அழகான ஆளு இருப்பாரா ? நீ அவர சந்திப்பியா ? என்று கேட்டாள் நைனா.

“ கெட்ச்அப் வீட்ல இருப்பாரா எனக்குத் தெரியாது. அப்புறம் அவருக்கு 26 வயசு, நம்மள விட பத்து வயசு பெரியவரு அதனால அவர பார்த்து ஜொள்ளு விடாத “ என்று சொல்லி மைரா முகம் சுளித்தாள். அதற்கு சிரித்த நைனா, “ நான் ஒன்னும் ஜொள்ளு விடல, அழகா இருக்க ஒரு மனுஷன பாராட்டுறேன். எனக்கு புடிச்ச கிரிக்கெட் பிளேயர் மேல மட்டும் தான் நான் ஜொள்ளு விடுவேன், அவர் மேல மட்டும் தான் எனக்கு ஈர்ப்பு எல்லாம். இப்போ நீ சீக்கிரம் கிளம்பு “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.      

மைரா பிறந்த நாளுக்கு அம்மா வாங்கித் தந்த புது டிரஸ்ஸை அணிந்து கொண்டு ஹாலை அடைந்தாள். வசுந்தராவும் ராஜனும் அவளை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இனிப்பு சாப்பிட்டுவிட்டு ஸ்வீட் பாக்ஸை எடுத்துக் கொண்டு அர்ச்சனாவின் வீட்டுக்கு ஓடினாள்.

உள்ளே நுழைந்த அவளை அர்ச்சனாவும், மதனும் வாழ்த்தினர், மைரா அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டினாள். யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்த கேஷவ் , மைராவைப் பார்த்ததும் சட்டென நின்றான். அவள் புன்னகையுடன் இனிப்பை அவனை நோக்கி நீட்டினாள்.

“ ஹேப்பி பர்த்டே குட்டி பொண்ணு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா முகத்தைச் சுளித்து அவன் இனிப்பை எடுக்கும் முன் பெட்டியை விலக்கிக் கொள்ள, அவன் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

“ நான் ஒன்னும் குட்டி பொண்ணு இல்ல அங்கிள், எனக்கு 16 வயசு, நான் வளர்ந்துட்டேன் “ என்று அவள் சொல்லி மீண்டும் பெட்டியை அவனை நோக்கி நீட்ட, கேஷவ்  சிரித்தபடி ஒரு இனிப்புத் துண்டை எடுத்து மீண்டும் வாழ்த்து சொல்லி அவளுக்கு ஊட்டினான். மைரா ஒரு முழு இனிப்பை எடுத்து அவன் வாயில் திணித்து தன் நாக்கை காட்டி கிண்டல் செய்தாள். கேஷவ்  அவள் தலைமுடியை கோதிவிட்டு தன் அறைக்குத் திரும்பினான். சோபாவுக்கு திரும்பியவள், அர்ச்சனாவும் மதனும் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“ நான் இல்லாம என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? சொல்லுங்க, மைராகிட்ட எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும் “ என்று மைரா சொன்னதை கேட்ட அர்ச்சனா, “ அப்படியா? அப்போ கேஷவ்கிட்ட பேசி, அவன கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியுமா ? அந்தப் பையன் ஒவ்வொரு முறையும் கல்யாண பேச்சு எடுத்தா ஓடி போறான். என் பொறுமையைச் சோதிக்கிறான் “ என்று கூறினார்.

அர்ச்சனாவின் வார்த்தையை கேட்ட மைரா, “ அவருக்கு புடிச்ச மாதிரி பொண்ணு பாருங்க அப்போ அவர் மறுக்க மாட்டாரு. அத விட்டுட்டு உங்களுக்கு புடிச்ச மாதிரி பார்த்துட்டு அவர் சம்மதம் சொல்லனும்னு எப்படி எதிர்பார்க்க முடியும் “ என்று மைரா கேட்டதும், “ அவன் நம்ம கிட்ட பேசாம இருந்தா அவனோட  எதிர்பார்ப்பு எங்களுக்கு எப்படித் தெரியும்? “ என்று மதன் கேட்டார்.

“ அவருக்கு எப்போ தோணுதோ அப்போ கல்யாணம் செய்வாரு விடுங்க, நீங்க கவலைப்படாம இருங்க ஆனா அவருக்கு வயசு ஆகுது தான் அதனால அவர் கல்யாணம் பண்ணிக்கணும் “ என்று மைரா சொல்லிக் கொண்டிருந்த போது க்ரிஷ் ஹாலுக்கு வந்து அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டு, “ அம்மா, நாங்க ஐஸ்கிரீம் சாப்பிடப் போறோம். வசு ஆண்ட்டி கிட்ட சொல்லிடுங்க “ என்று கூறினான்.

அவர்கள் வெளியே செல்வதற்குள் தடுத்து நிறுத்திய மதன், “ இன்னிக்கு நீ காலேஜ் போகலையா? “ என்று க்ரிஷிடம் கேட்டார். அதற்கு அவன், “ இன்னைக்கு மைராவோட பர்த்டே நான் எப்படி காலேஜ் போவேன் ? “ என்று கூறினான்.

மைரா தன் விரல்களை க்ரிஷுடன் கோர்த்துக் கொள்ள, இருவரும் வெளியே சென்றனர். அர்ச்சனா தன் புன்னகையை மறைக்க முயன்று மதனைப் பார்த்து, “ ரெண்டு பேரும் லவ் பண்றத வெளிப்படையா காட்டுறாங்க “ என்று சொல்லி மகிழ்ச்சியோடு புன்னகைத்தார்.

கேஷவ் யாருடனோ பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர், க்ரிஷும் மைராவும் ஐஸ் கிரீம் பார்லரை அடைந்து நைனா அவர்களுக்காகக் காத்திருப்பதைக் கண்டனர். அவர்கள் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து ஒன்றாக நேரத்தை அனுபவித்தனர்.

க்ரிஷ்  பில்களை செலுத்திக் கொண்டிருந்த போது மைராவும், வெளியே சென்றனர் அப்போது திடீரென ஒரு பைக் மைரா மீது மோதியது. அவர் கீழே சாலையில் விழுந்து மயக்கமடைந்தாள்.   க்ரிஷ் அவள் பெயரைக் கத்திக்கொண்டே வெளியே ஓடி அவளைத் தூக்க முயன்றான், ஆனால் அவள் அவனுக்கு கொஞ்சம் கனமாக இருந்ததால் அவனால் முடியவில்லை. காரில் அவர்களைக் கடந்து சென்ற கேஷவ், சாலையில் மைராவைப் பார்த்து அவளிடம் ஓடினான். உடனே மைராவை காருக்கு தூக்கிச் சென்றான். க்ரிஷ் மற்றும் நைனாவுடன் மைராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

க்ரிஷ் அழுவதையும், நைனா அவனை ஆறுதல்படுத்த முயற்சிப்பதையும் தவிர வேறு யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

“ என்ன மன்னிச்சிடு மைரா. உன்ன தனியா போக விட்டுருக்க கூடாது, ப்ளீஸ் கண்ண் திறந்து என்ன பாரு “ என்று க்ரிஷ் அழுதான். அப்போது நைனா அவனிடம், “ க்ரிஷ், அமைதியா இரு, அவளுக்கு ஒன்னும் ஆகாது. அவ நல்லா இருப்பா “ என்று ஆறுதல் சொன்னாள்.

“ இல்ல நைனா, இது என் தப்பு தான், நான் அவள வெளிய போக விட்டுருக்க கூடாது. என்னால இவளை இப்படி பார்க்க முடியல “ என்று சொல்லி அழுதான், அதற்கு நைனா அவனிடம், “ உனக்கு அவளை ரொம்பப் பிடிக்குமா ? “ என்று கேட்டாள்.

“இது என்ன கேள்வி ? இவ என் மைரா, இவளுக்காக நான் எதையும் செய்வேன் “ என்று க்ரிஷ் சொன்னான். அவன் வார்த்தையை கேட்டு நைனா திகைத்துப் போனாள்.

“ கடவுளே ! நல்ல வேளை இவனுக்கும் மைராவ புடிச்சு இருக்கு ஆனா இவள குழப்பாம தெளிவா வார்த்தையால சொன்னா நல்லா இருக்கும் “ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

இதற்கிடையில் க்ரிஷ் அழுது கொண்டே இருப்பதை பார்த்த கேஷவ், “ க்ரிஷ், அமைதியா இரு. மைரா நல்லா இருப்பா “ என்று சொன்னான்.

அவர்கள் மருத்துவமனையை அடைந்ததும் கேஷவ் அவளை மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றான். மருத்துவர்கள் உள்ளே மைராவுக்கு சிகிச்சை அளித்த போது அவர்கள் அனைவரும் அவசர வார்டுக்கு வெளியே காத்திருந்தனர். கேஷவ் அவர்களின் பெற்றோரை அழைத்து விபத்து குறித்து தெரிவித்தான். க்ரிஷ் இன்னும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அவன் தோளில் தட்டிக் கொடுத்து, “ தைரியமா இரு, நீ இப்படி குழந்த மாதிரி அழுதா, அவள யார் பார்த்துக்குவாங்க ? அவ நல்லா இருப்பாடா “ என்று அவனை அமைதிப்படுத்தினான்.

க்ரிஷ் கேஷவை கட்டிப்பிடித்து உடைந்து போனான். கதவைத் திறந்து டாக்டர் வெளியே வந்ததும் கேஷவ் விரைந்து அவரிடம் சென்று. “ டாக்டர், இப்போ எப்படி இருக்கா ? “ என்று பதற்றத்துடன் கேட்டான் அதற்கு டாக்டர், “ கவலைப்பட ஒண்ணுமில்ல, சின்ன காயம் தான். சீக்கிரம் கண் முழிப்பாங்க. மூணு மணி நேரம் அப்புறம் ஒரு முறை செக் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் “ என்று சொன்னார்.

கேஷவ் அவருக்கு நன்றி சொன்னதும், க்ரிஷ் புன்னகைத்தபடி அறைக்குள் விரைந்தான், அவனைத் தொடர்ந்து கேஷவும், நைனாவும் உள்ளே சென்றார்கள். மைரா தூங்குவதையும், அவளது பிறந்தநாள் ஆடை சில துளி ரத்தத்தால் கறை படிந்திருப்பதையும் அவர்கள் கண்டனர்.

“ நான் வெளிய வெயிட் பண்றேன், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா இல்ல மைரா கண் முழிச்சா என்ன கூபிடுங்க “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு நைனா தலையை ஆட்டினாள்.

கேஷவ் வெளியேற கதவைத் திறந்த போது இரண்டு குடும்பமும் உள்ளே நுழைந்தனர். அவன் எல்லாவற்றையும் விளக்கியதும்  அவர்கள் நிம்மதியடைந்தனர். ஒரு மணி நேரம் கழித்து மைரா எழுந்து பார்த்த போது அம்மாவும் அர்ச்சனாவும் ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவள் நன்றாக இருப்பதாக அவர்களுக்கு உறுதியளித்து அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள். நைனா உள்ளே நுழைந்து மைராவின் கையைப் பிடித்து புன்னகைத்து, “ எப்படி இருக்க ? “ என்று கேட்டாள்.

மைரா புன்னகைத்து, “ நான் நல்லா இருக்கேன். க்ரிஷ் எங்கே? “ என்று கேட்டாள். நைனா பதில் சொல்வதற்குள் அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவுக்கு காபி வாங்க வெளியே சென்றனர்.

“ நான் அவன எங்க பார்த்தேன்னு சொன்னா எனக்கு என்ன கிடைக்கும்? “ என்று நைனா குறும்பு சிரிப்புடன் கேட்டதும், “நைனா ப்ளீஸ் சொல்லு “ என்றாள் மைரா.

“ பக்கத்துல இருக்க பூக்கடையில அவன பார்த்தேன். உனக்காக பூ வாங்க போயிருப்பான் நினைக்கிறேன். இப்போ நான் சொல்ல போறத கேட்டுட்டு எனக்கு ட்ரீட் கொடு. நீ மயக்கத்துல இருந்தப்ப அவன் அழுதுட்டே இருந்தான், நான் கேட்டதுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொன்னான். நீ நல்லா இருக்கனு டாக்டர் சொல்ற வர அழுதுட்டே இருந்தான். அவனும் உன்ன லவ் பண்றான்னு நினைக்குறேன் “ என்று நைனா சொன்னதும் மைரா முகம் சிவந்தாள்.

“ மைரா, நான் சொல்றது ஒரு பக்கம் இருக்கட்டும், நீ அவன் கிட்ட பேசி இந்த விஷயத்த தெளிவுப்படுத்துறது தான் நல்லது. அவனும் உன்ன லவ் பண்றதா இருந்தா சந்தோஷம் இல்லனா உனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். ரொம்ப லேட் பண்ணாத “ என்று நைனா சொன்னதும் “ வாயை மூடு நைனா, எனக்கு 16 வயசு தான் ஆகுது. குறைஞ்சது எனக்கு 18 இல்ல 19 வயசு ஆகட்டும். க்ரிஷ் என்ன லவ் பண்றதா இருந்தா அவன் முதல்ல எனக்கு ப்ரொபோஸ் பண்ணட்டும். ஒருவேள எனக்கு 18 வயசு ஆன அப்புறம் சர்ப்ரைஸ் பண்ணுவான் போல “ என்று சொல்லி மைரா வெட்கப்பட்டாள்.

அதன் பின்னர் மருந்துகளின் காரணமாக மைரா மீண்டும் தூங்கிவிட்டாள், அவள் எழுந்தபோது, அவளுக்கு பிடித்த மஞ்சள் ரோஜாக்களின் ஒரு கொத்து படுக்கையில் அவளுக்கு அருகில் இருப்பதையும்,

” கெட் வெல் சூன், K ” என்ற ஒரு குறிப்பும் இருப்பதை பார்த்து மைரா வெட்கப்பட்டு பூக்களை மார்போடு அணைத்துக் கொண்டு சிரித்தாள், ஆனால் கதவு திறந்து அப்பா அம்மாவுடன் உள்ளே நுழைந்ததும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“ வீட்டுக்குப் போலாம் மைரா. என் பொண்ணுக்கு நிறைய கண்ணு பட்டுடுச்சு “ என்று சொன்னதை கேட்டு மைரா புன்னகையுடன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையில் பூக்களைப் பிடித்துக் கொண்டு வெளியேறினாள்.

வீட்டை அடைந்ததும் மைரா மேலும் சிறிது நேரம் தூங்கினாள், மாலையில் சிறிய கொண்டாட்டத்திற்கு புதிய உடையில் அவள் தயாரானாள். க்ரிஷ் அவளது ஆடைகளுக்கு மேட்ச் ஆக உள்ளே நுழைவதையும், அவனைப் பின்தொடர்ந்து அவனது பெற்றோர் உள்ளே நுழைவதையும் அவள் பார்த்தாள், கடைசியாக அவள் சற்றும் எதிர்பார்க்காத ரோஷினி உள்ளே நுழைந்து க்ரிஷின் அருகில் நின்றாள்.

க்ரிஷ் மைராவின் அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு, “ உன்ன மயக்கத்துல பார்த்ததும் எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சு. தயவு செஞ்சு நான் இல்லாம தனியா எங்கேயும் போகாத “ என்று சொன்னான்.

மைரா சரி என்று சொன்னதும் அவள் கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள். ஒருவர் மட்டும் இல்லாததை பார்த்து, “ கெட்ச்அப் எங்க போனாரு ? “ என்று கேட்டாள்.

“ ஏதோ அவசர வேலை இருக்குனு சொல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கிளம்பி போயிட்டான் “ என்று அர்ச்சனா சொல்ல மைரா சரி என்று தலை அசைத்தாள், ஆனால் அவளது கவனம் முழுவதும் க்ரிஷின் கையைப் பிடிக்க முயன்ற ரோஷினியின் மீது இருந்தது, ஆனால் அவன் மைராவின் காயத்தை பரிசோதிப்பதில் மும்முரமாக இருந்தான்.

மைரா ஓரிரு நாட்கள் வீட்டில் இருக்க வேண்டியிருந்ததால் க்ரிஷ்  காலேஜ் சென்றான். மாலையில் க்ரிஷ் வீடு திரும்பியதும்  மைராவைப் பார்க்க ஓடி வந்தான். அவள் படம் பார்ப்பதைப் பார்த்து புன்னகைத்து, “ உனக்கு இன்னும் வலிக்குதா மைரா?” என்று கேட்டான். அதற்கு அவள், “ இல்ல, ஆனா வீட்ல இருக்குறது நல்லா இருக்கு. அம்மா எனக்குப் பிடிச்ச லஞ்ச் சமைச்சு கொடுத்தாங்க. உனக்கு கொஞ்சம் எடுத்து வெச்சுருக்கேன் வேணுமா ? “ என்று கேட்டாள்.

“ நானே எடுத்துக்குறேன் “ என்று சொல்லி க்ரிஷ்  சமையலறைக்குள் நுழைந்து வசுந்த்ரா தேநீர் தயாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். பாத்திரத்தின் மூடியைத் திறந்து ஒரு தட்டில் வெஜிடபுள் பிரியாணியை பரிமாறினான்.

“ டீ வேணுமா க்ரிஷ்? “ என்று வசுந்தரா கேட்டதும், “ பூஸ்ட் தான் என் எனர்ஜியோட ரகசியம் “ என்றான் க்ரிஷ்.

வசுந்தரா சிரித்துக் கொண்டே அவன் முதுகில் அடித்தாள். க்ரிஷ் ஹாலுக்கு சென்று மைராவின் அருகில் அமர்ந்து அவளுக்கும்  ஊட்டி தானும் சாப்பிட்டான்.

“ நான் போய் புக்ஸ் எடுத்துட்டு வரேன். மொட்டை மாடிக்குப் போய் ஒன்னா படிக்கலாம் “ என்று க்ரிஷ் சொல்ல, “ நீங்க ரெண்டு பேரும் மொட்டை மாடியில எவ்ளோ நல்லா படிப்பீங்கன்னு எனக்குத் தெரியும். போன வெள்ளிக்கிழமை 5 காலி சிப்ஸ் பாக்கெட்டை இருந்துச்சு, இப்போ உன் பையை பார்த்தா எப்படியும் 3 பாக்கெட் இருக்கும்னு நினைக்கிறேன் “ என்று வசுந்தரா கண்டிப்புடன் சொல்ல, “ இல்ல அத்த 2 தான் இருக்கு, ஒன்னு எனக்கு, இன்னொன்னு மைராவுக்கு. இதுக்கு அப்புறம் இந்த வாரம் முழுக்க  வாங்க மாட்டேன் “ என்றான் க்ரிஷ்.

க்ரிஷ் தன் வீட்டிற்குச் சென்று திரும்பி வந்ததும் அவனும் மைராவும் மொட்டை மாடியை அடைந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார்கள். அவர்கள் புத்தகங்களைத் திறந்ததும், க்ரிஷ்  அவர்களுக்காக சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்தான்.

கைப்பிடிச் சுவரில் ஒரு கிளியைப் பார்த்த மைரா கண்களால் க்ரிஷிடம் கெஞ்சி, “ க்ரிஷ் , இந்த சிப்ஸை கிளிக்கு ஊட்டலாமா? “ என்று கேட்டாள். அதற்கு அவன், “ இல்ல, ஃப்ரிட்ஜில இருந்து கொஞ்சம் பழங்கள் எடுத்துட்டு வரேன், நான் திரும்பி வரவரைக்கும் நீ அது பக்கத்துல போகாத “ என்று சொல்லிவிட்டு கீழே சென்றான், ஆனால் மைராவால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் கிளியிடம் சென்று சிப்ஸ் துண்டைக் காட்டினாள். க்ரிஷ்  சில திராட்சைகளுடன் திரும்பி வந்தான், ஆனால் மைரா கிளிக்கு  உணவளிப்பதையும், கிளியின் தலையை மெதுவாக வருடுவதையும் கண்டதும் பாதையில் நின்றான்.

க்ரிஷ் அவளை நெருங்கியதும் கிளி பறந்து செல்ல, மைரா க்ரிஷின் தலையில் அடித்தாள்.

“ ஏன் தொந்தரவு பண்ண ? இப்ப பாரு அது பறந்து போயிடுச்சு “ என்று திட்டினாள். அதற்கு அவன் யோசித்தபடி, “ நீ அது பக்கத்துல போன அப்போ மட்டும் ஏன் அது பறந்து போகல ? “ என்று கேட்டான்.

“ அது கூட friend ஆகி டெய்லி சாயங்காலம் அது கூட விளையாடி இருக்கலாம் “ என்று மைரா சொல்ல, “ அத்தை கேஷவ் அண்ணா கிட்ட நாம ரெண்டு பேரும் படிக்குறது இல்லனு புகார் பண்ணி இருப்பாங்க. அவரும் நம்ம ரெண்டு பேரையும் ஏதாவது டியூஷன் சென்டருக்கு அனுப்பி இருப்பாரு “ என்று சொன்னான்.

“ நீ சொல்றது சரி தான். என்னைக்காவது ஒரு நாள் அந்தக் கிளி திரும்பி வரவரைக்கு வெயிட் பண்ணுவோம், இப்போ போய் படிக்கலாம் “ என்று மைரா சொல்லும் போது தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்த போது வசுந்தரா அவர்களை முறைப்பதைக் கண்டனர். அவரை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, புத்தகங்களுடன் ஹாலுக்குத் திரும்பி வந்து சிறிது நேரம் படிக்க சென்றார்கள்.

********************

முன்னோட்டம்:

“ எப்படி இருக்கீங்க அங்கிள் ? ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க? அத்த, இவரு ரகசியமா கல்யாணம் பண்ணிட்டாருனு நினைக்குறேன். யாருக்கு தெரியும், இவர் பசங்க ஸ்கூல் படிச்சா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல “

 

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:33 am

[…] நான் அவன லவ் பண்றேனா ? […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 9:42 am

[…] 4.நான் அவன லவ் பண்றேனா ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!