மைராவின் வாழ்க்கை ரோஷினியுடன் போராடியபடியே ஒன்பது மாதங்கள் கழிந்து போனது.
ஊட்டி பள்ளியில் அவள் பாடியது வைரலான பிறகு மைரா தனது வேலையில் மிகவும் பிஸியாக இருந்தாள். கடந்த சில மாதங்களாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, தற்போது பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தாள். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு வேண்டுகோளின் பேரில் பயிற்சி அளிக்க அவள் பணியாற்றினாள். அவளது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, க்ரிஷ் மற்றும் ரோஷினியை ஒன்றாகப் பார்த்ததில் அவள் இப்போது எந்த வலியையும் உணரவில்லை. பாடுவதில் அவளது ஆர்வம் மற்றும் கேஷவ் அவளை பிஸியாக வைத்திருக்க பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து அதிக வாய்ப்புகளைப் பெற்றான் மற்றும் ஏராளமான பாடல்களுடன் குணமடைய அவளுடைய மர்ம பாடகரும் உதவினர்.
பல சந்தர்ப்பங்களில் ரோஷினி தன்னை மறைமுகமாகவும் நேரடியாகவும் வீசிய அவமானங்களுக்குப் பிறகு மைரா அர்ச்சனாவின் வீட்டிற்கு செல்வதை முழுவதுமாக நிறுத்திவிட்டாள். தினமும் அவள் வேலைக்குச் செல்வதற்கு முன்பு மதனும், அர்ச்சனாவும் அவளைப் பார்க்க சென்றார்கள், சில சமயங்களில் அவர்கள் வசுந்தரா மற்றும் ராஜனுடன் இரவு உணவிற்கு வெளியே சென்றார்கள். மைரா முன்பை போலவே இருப்பதை கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவள் தனது ஓட்டுநர் உரிமத்தை பெற்ற பிறகு தானே காரை ஓட்ட ஆரம்பித்தாள்.
ராஜன் அவளுக்கு ஒரு புதிய கார் வாங்க விரும்பினார், ஆனால் அவள் கேஷவின் காருடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பதாக உணர்ந்தாள், எனவே அந்த யோசனையை மறுத்து அவனது காரைப் பயன்படுத்தினாள். கேஷவ் ஒரு முக்கியமான வேலையில் சிக்கி வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று ஒரு நாள் தனது குடும்பத்துடன் நேரத்தை கழித்து திரும்பி செல்வான். எப்போதும் போலவே அவன் ரோஷினியை முற்றிலுமாக தவிர்த்தான், ஆனால் அவன் கிளம்புவதற்கு முன்பு மைராவை சந்தித்து அவள் நலனை உறுதி செய்தான்.
க்ரிஷ் மற்றும் ரோஷினி அவர்களின் சண்டைகள் அதிகரித்தன, அவர்கள் ஓன்றாக வெளியே செல்வதும் முழுவதும் குறைந்திருந்தாலும் தங்கள் நாட்களை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவன் கட்டாயப்படுத்தப்பட்டு உறவில் சிக்கிக்கொண்டதாக உணரத் தொடங்கினான், ஆனால் அது அவனது சொந்த முடிவுகளின் விளைவாக இருந்ததால் அதைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அவன் மைராவுடன் இருப்பதை மிகவும் மிஸ் செய்தான் ஆனால் ரோஷினியின் அவமானங்களைக் கண்ட பிறகு மைராவுடனான தனது உறவை சரிசெய்யும் முயற்சியைக் கைவிட்டான்.
எல்லோரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டனர், ஆனால் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. மனிதன் ஒன்று நினைத்தால் கடவுள் வேறு ஒன்றை நடத்துவார்.
ரோஷினியிடம் இருந்து விலகி இருக்க க்ரிஷ் அவ்வப்போது செய்தது போலவே மும்பைக்கு ஒரு உத்தியோகபூர்வ பயணத்திற்கு சென்றிருந்தான். அவன் இல்லாத நேரத்தில் ரோஷினி தனது அலுவலகத்திற்கு ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றாள். டீம் லீடாக பதவி உயர்வு பெறுவதை தீர்மானிக்கும் மிக முக்கியமான மீட்டிங் என்பதால் அவள் சீக்கிரம் அலுவலகத்திற்கு தயாரானாள். அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த போது அது பஞ்சர் ஆகி இருப்பதை பார்த்து எரிச்சலடைந்தாள். அப்போது அவளுடைய கண்கள் மைராவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரைப் பார்த்தன. அர்ச்சனாவும், வசுந்தராவும் பேசிக் கொண்டிருக்க, மைராவும் தன் வேலைக்குத் தயாரானாள். ரோஷினி சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கி நடந்தாள்.
“ அர்ச்சனா அத்த, எனக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, என் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகல அதனால நான் இன்னைக்கு கேஷவோட காரை எடுத்துட்டு போகட்டுமா ? “ என்று ரோஷினி கேட்டதும், அவளை குழப்பத்துடன் பார்த்த அர்ச்சனா, “ ஆனா கேஷவ் கார் இங்க இல்ல ரோஷினி, அவன் இன்னைக்கு வரல. உனக்கு லேட் ஆகுதுனா சீக்கிரம் கார் புக் பண்ணி போ “ என்று கூறினார். அதற்கு ரோஷினி உடனே, “அத்த, மைரா பயன்படுத்துறது கேஷவ் கார் தானே, நான் அத ஒரு நாள் எடுத்துட்டு போனா, அவ ஒன்னும் தப்பா நெனச்சுக்க மாட்டானு நம்புறேன் “ என்று கூறினாள்.
“ ரோஷினி, நான் உன்ன ஆபீஸ்ல இறக்கி விடுறேன், எனக்கு இன்னைக்கு என் கார் வேணும். பசங்களோட அடுத்த கச்சேரிக்காக நான் நிறைய இடத்துக்கு போகணும் “ என்று மைரா சொல்ல, ரோஷினி சரி என்று முனகியபடி பயணிகள் இருக்கையில் அமர்ந்தாள். மைரா காரை ஓட்டத் தொடங்கினாள். ரோஷினி பழிவாங்கும் குணம் கொண்டவள் என்பதை நன்கு அறிந்த மைரா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள், ஆனால் ரோஷினிக்கு நிச்சயமாக வேறு திட்டங்கள் இருந்தன.
“ மைரா, என்ன தப்பா நினைக்காத, என் மாமா குடும்பத்துல இருந்து உனக்கு அதிக சலுகை கிடைக்குதுனு உனக்கு தோணலையா ? “ என்று ரோஷினி கேட்க, “ ஏன் அப்படி நினைக்குற ? நான் அவங்கள மாமா, அத்த சொல்லி கூப்பிடலாம் ஆனா அவங்க என் அப்பா, அம்மா மாதிரி “ என்று புன்னகையோடு பதில் சொன்னாள் மைரா.
“ ஆமா நீ சொல்றது சரி தான். அவங்க உன் உண்மையான அப்பா, அம்மாவா இருக்க முடியாது அதனால நீ ஏன் எப்பவும் அவங்க கூட இருக்க முயற்சி செய்ற ? “ என்று சற்று குரலை உயர்த்தினாள் ரோஷினி. அவள் வார்த்தையை கேட்டு மிரண்டு போன மைரா காரை பத்திரமாக நிறுத்தி தன் கவனத்தை முழுவதுமாக ரோஷினியின் பக்கம் திருப்பினாள்.
“ நான் கடந்த பத்து மாசமா எல்லார் கூடவும் வாழ்ந்துட்டு இருக்கேன் ஆனா இன்னும் நான் அவங்களுக்கு அந்நியமா தான் இருக்கேன். நீ ஏன் எங்க குடும்பத்த விட்டு, என்ன என் வாழ்க்கையை வாழ விட மாட்டேங்குற ? நீ க்ரிஷ் கூட இருக்கும் போது நான் அவ்ளோ கஷ்டப்பட்டேன் ஆனா நான் என் வாழ்க்கையை வாழ முடியும்னு நம்பி இருந்த அப்போ நீ மறுபடியும் வேற திட்டத்தோட இருக்க “ என்று ரோஷினி சீறினாள்.
“ நீ முட்டாள்தனமா நினைக்குற, உன் தாழ்வுமனப்பான்மை என் பிரச்சனை இல்ல ரோஷினி “ என்று அப்போதும் மைரா அமைதியாக பதில் சொன்னாள்.
ரோஷினி பற்களை படித்துக் கொண்டு, “ நான் ஒன்னும் முட்டாள் இல்ல. நீ க்ரிஷ லவ் பண்றனு எனக்குத் தெரியும், அவன உன் வலையில் சிக்க வைக்க நீ பண்ண எல்லாத்தையும் பார்க்காம இருக்க நான் குருடி இல்ல. நீங்க ரெண்டு பேரும் எத்தனை முறை நான் கண்ணுக்குத் தெரியாதவ மாதிரி நடத்தி அவமானப்படுத்துனீங்க தெரியுமா? நான் அவன சந்திக்கும் போதெல்லாம் உன்ன ஏதோ உலக அதிசயம் மாதிரி உன்ன பத்தி மட்டும் பேசுவான். ஆனா நீங்க யாருக்கு எதிரா போராடுறீங்கன்னு மறந்துட்டீங்க. க்ரிஷை உன் கிட்ட இருந்து பிரிக்க நான் எல்லாத்தையும் பண்ணேன், இப்போ அவன் எனக்கு சொந்தம், எனக்கு மட்டும். நீ என்ன ஜெயிக்க விடமாட்டேன் மைரா. உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைக்க நான் அனுமதிக்க மாட்டேன் “ என்று வார்த்தைகளால் விஷத்தை கொட்டினாள்.
பொறுமை இழந்த மைரா, “ வாய மூடு ரோஷினி. என் காரை விட்டு இறங்கு, உன் முட்டாள்தனத்தை எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. எப்படி உன்னால இவ்ளோ பழிவாங்குற குணத்தோடை இருக்க முடியுது ? “ என்று சொன்னாள் அதற்கு ஏளனமாய் சிரித்த ரோஷினி, “ இது உன் கார் இல்ல. முதல்ல க்ரிஷ் உன் லவ்வர், கைப்பாவையா இருக்கணும்னு ஆசைப்பட்ட, இப்போ கேஷவ் உன் கைப்பாவையா இருக்க விரும்புறியா ? எப்படி உன்னால இப்படி ஒரு வேசி மாதிரி இருக்க முடியுது ? ஏன் என் குடும்பத்துல இருக்குற ஆண்கள விட்டுட்டு போக மாட்டேங்குற ? “என்று எல்லை மீறி வன்மத்தை உமிழ்ந்தாள்.
மைரா பற்களைக் கடித்தபடி ஸ்டீயரிங்கில் கையை ஓங்கி அறைந்தாள். ரத்தச் சிவப்பேறிய கண்களுடன் ரோஷினியை நோக்கித் திரும்பி அவளை ஓங்கி அறைந்தாள்.
“ நீயும், உன்னோட வருங்கால புருஷன் எல்லாரும் ஒழிஞ்சி போங்க, எடுத்துட்டு போ இந்த கார “ என்று கத்திவிட்டு, காரிலிருந்து இறங்கிய மைரா கதவை அறைந்து சாத்தினாள். ஆட்டோவை நிறுத்திவிட்டு அனைத்து வேலைகளையும் ரத்து செய்து விட்டு வீடு திரும்பினாள். வீட்டை அடைந்ததும் செருப்பை தூக்கி எறிந்துவிட்டு கண்ணீருடன் அறைக்கு விரைந்தாள். அவளைக் கண்ட வசுந்தராவும் ராஜனும் அவள் பின்னால் ஓடினர்.
“ மைரா, என்ன ஆச்சு ? ஏன் அழற? “ என்று வசுந்தரா கேட்டார், “ மைரா, என்ன ஆச்சுனு சொல்லு மா ? “ என்று ராஜனும் கேட்டார்.
மைரா தன் தாயின் மார்பில் சாய்ந்து அழுதபடி, ரோஷினியுடன் நடந்த அனைத்தையும் புலம்பினாள். மைரா திரும்பி வருவதைப் பார்த்த அர்ச்சனாவும் ஓடி வந்து எல்லாவற்றையும் கேட்டார். மைராவிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ ஆறுதல் சொல்ல அவளிடம் வார்த்தைகள் இல்லை என்பதால் அவர் வெட்கப்பட்டு எதுவும் பேசாமல் வீடு திரும்பினார்.
மகளின் கண்ணீரைத் துடைத்த ராஜன், தன் மகளுக்கு இவ்வளவு வலியைக் கொடுத்த கடவுளையே சபித்தார். அன்று மாலை ரோஷினி காரை தன் வீட்டின் முன் நிறுத்த விடாமல் ராஜன் தடுத்தார்.
“ ரோஷினி, வீட்டுக்கு கெஸ்ட் வரப்போறாங்க அதனால மதன் வீட்டு முன்னாடி கார நிறுத்து. அப்புறம் எங்களுக்கு இனி கார் தேவையில்ல அதனால சாவிய நீயே வெச்சுக்கலாம் “ என்று சொன்னார்.
ரோஷினி ஒன்றும் சொல்லாமல் அவர் சொன்னபடியே செய்தாள். அர்ச்சனாவும், மதனும் அவளிடம் ஒரு கேள்வியும் கேட்காமல் எதுவுமே நடக்காதது போல இருந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து ராஜன் வசுந்த்ராவையும், மைராவையும் வெளியே அழைத்தார். வெளியே ஒரு புதிய கார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
“ இது உன் கார் மைரா. நான் இத என் பொண்ணுக்காக வாங்கி இருக்கேன். யாரும் உன்ன கேள்வி கேட்க மாட்டாங்க. வாங்க நாம பக்கத்துல இருக்க கோயிலுக்கு போலாம் “ என்று ராஜன் சொன்னதும், மைரா தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.
“ இத நான் எப்போவோ பண்ணி இருக்கணும் ஆனா பரவாயில்ல, ஒவ்வொரு முறையும் நீ காயப்பட்ட அப்புறம் தான் நான் பாடம் கத்துக்குறேன் அதுக்காக என்ன மன்னிச்சிடு “ என்று ராஜன் சொன்னார் அதற்கு மைரா அவரிடம், “ அப்பா ப்ளீஸ், இப்படி சொல்லாதீங்க, நீங்க தான் பெஸ்ட் அப்பா. மதன் மாமா, அர்ச்சனா அத்தையும் கூப்பிடுறேன் நாம எல்லாரும் சேர்ந்தே போவோம் “ என்று சொன்னாள்.
மைரா அவர்களை அழைத்ததும், அர்ச்சனாவும், மதனும் மின்னல் வேகத்தில் தயாராகி மைரா மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்காக காத்திருப்பதைக் கண்டனர். மைரா அவர்களின் குற்ற உணர்வை உடைக்க ஒரு அணைப்பைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அனைவரும் காரில் ஏறியதும், மைரா அவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றாள். பிரார்த்தனை செய்த பின்னர் அவர்கள் ஒன்றாக அமர்ந்தனர்.
“ உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் “ என்று ஆரம்பித்த ராஜன், மைராவை பார்த்து, “ மைரா, உன் வயசுக்கு நீ நிறைய கஷ்டம் அனுபவிச்சுட்ட, இதுக்கு நாங்களும் ஒரு காரணம். கொஞ்ச நாளா மனசுல ஒரு எண்ணம் ஓடிட்டே இருக்கு. நான் உன்ன கட்டாயப்படுத்துறதா நினைக்க வேணாம் ஆனா என் வார்த்தைய நீ கொஞ்சம் யோசிச்சு பாரு.” என்று கூறினார்.
“ அப்பா, இப்படி புதிர் போடுறத நிறுத்திட்டு விஷயம் என்னனு சொல்லுங்க. உங்களுக்காக நான் எதையும் செய்வேன் “ என்று மைரா சொன்னதும், “ என் ஆபீஸ்ல கூட வேலை செய்றவரோட இருக்க ப்ரெண்ட் ஒருத்தருக்கு நம்ம குடும்பத்த பத்தி எல்லாம் நல்லா தெரியும், உன்ன பத்தியும் நல்லா தெரியும். அவருக்கு ஒரு பையன் இருக்கான். ஒரு மியூசிக் டைரக்டர் கிட்ட வேலை செய்றான். அவனுக்கு உன்ன பொண்ணு கேட்டாரு. முதல்ல உனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்னு சொல்லி மறுத்துட்டேன் ஆனா இப்போ உன்ன சுத்தி நடக்குறத பார்த்த அப்புறம் உனக்கு கல்யாணம் செய்றது தான் நல்லதுனு நினைக்கிறேன். நீ இப்போ கல்யாணத்துக்கு தயாரா இல்லனு நான் அவர்கிட்ட சொன்னேன், அதுக்கு அவரு கல்யாணம் ஆனா அப்புறம் நீ அந்த வாழ்க்கைக்கு தயாராகுற வரை அவன் உனக்கு ஒரு ப்ரெண்டா இருக்க தயாரா இருக்கான் “ என்று கூறினார் ராஜன்.
“ பையன் கல்யாணம் பண்ணிக்கிட்டு வெயிட் பண்ண தயாரா இருக்கான்னு சொல்றீங்களா? “ என்று வசுந்தரா ஆச்சரியத்துடன் கேட்க, “ ஆமா, அவர் மகன் என்கிட்ட தனிப்பட்ட முறையில இத பத்தி பேசினான். மைரா தயாராகுற வரை அவள கட்டாயப்படுத்த மாட்டேன்னு அவன் என்கிட்ட உறுதியா சொன்னான். அது மட்டும் இல்ல, அவனும் இசைத் துறையில வேலை செய்றதால, மைராவோட ஆர்வத்த புரிஞ்சிக்கிட்டு அவளுக்கு ஆதரவா இருப்பான்னு நான் நினைக்குறேன் “ என்று சொன்ன ராஜன், மைராவின் கையை பிடித்து, “ எந்த அழுத்தமும் இருக்காது மைரா. உனக்கு சம்மதம்னா மட்டும் அவங்கள வீட்டுக்கு வர சொல்றேன் “ என்று சொன்னார்.
மைரா தலையை அசைக்க, வேறு யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை, ஆனால் அர்ச்சனா மட்டும் கோவிலில் இருந்த கடவுளை கோபமாகப் பார்த்தார். மைரா அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிறகு நைனாவை அழைத்து புதிய காரைப் பற்றிய தகவலைக் கொடுத்தாள். அவள் வந்ததும் இருவரும் புகைப்படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இருவரும் ஒரு உணவகத்திற்கு சென்றதும், ராஜன் சொன்னது உட்பட கடந்த 2 நாட்களில் நடந்த சம்பவம் குறித்து மைரா, நைனாவிடம் கூறினாள்.
“ நீ என்ன முடிவு பண்ணி இருக்க ? “ என்று நைனா கேட்க, “ எனக்குத் தெரியல நைனா. சில நேரத்துல என் வாழ்க்கையில என்ன லவ் பண்ற ஒருத்தர் இருக்கணும்னு நினைக்குறேன், எல்லார்கிட்டயும், பாருங்க இவர் தான் என் புருஷன், என்ன லவ் பண்றாருனு காட்ட நினைக்குறேன். மத்த நேரத்துல அந்த பல்லி எனக்கு கொடுக்குற தொல்லைக்காக நான் ஏன் கட்டாயத்துல ஒரு முடிவு எடுக்கனும்னு தோணுது. உண்மைய சொல்ல போனா எனக்கு இது எல்லாத்துலையும் இருந்து ஒரு இடைவெளி வேணும். ஒரே குழப்பமா இருக்கு “ என்று சொல்லி மைரா பெருமூச்சு விட்டாள்.
“ போன தடவ நீயா ஒன்னு நெனச்சுகிட்ட, அதுக்கு நானும், உன் அப்பா அம்மா, மாமா, அத்தை எல்லாரும் சேர்ந்து அனுமானம் பண்ணிக்கிட்டோம், அதனால நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட. இந்த தடவை நீ என்ன வேணும்னு முடிவு பண்ணு. நீ இந்த மாப்பிள்ளைய நிராகரிச்சா யாரும் புண்படப் போறதில்ல, அதே நேரத்துல நீ சம்மதம் சொன்னா யாரும் உன்ன எதுவும் சொல்ல மாட்டாங்க. நேரம் எடுத்து நல்லா யோசி, உனக்கு என்ன வேணும்னு தீர்மானிக்க உன் மனசு, புத்தி ரெண்டையும் கேளு “ என்று நைனா பொறுமையாக சொன்னாள். கேளுங்கள்.
மைரா சரி என்று முணுமுணுத்தபடி நைனாவை வீட்டில் இறக்கிவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
***********************************************
முன்னோட்டம்:
“ அவர் பேரு கேஷவ் ஆனா நான் சின்ன வயசுல இருந்தே அவர கெட்சப் சொல்லி கூப்பிட்டு பழக்கம். அவர் எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்காரு, நான் இன்னைக்கு இந்த நிலமையில இருக்க அவர் தான் முக்கிய காரணம் “

1 comment
[…] கேஷவ் உன் கைப்பாவையா இருக்க விரும்பு… […]