மைராவின் மொபைல் நைனாவின் அழைப்புடன் ஒலிக்கத் தொடங்கியதும், வசதியாக அரட்டை அடிக்க அவள் படுக்கையில் குப்புறப்படுத்து கொண்டாள்.
“ எப்படி இருக்க புது பொண்ணு ? அப்புறம் எப்படி இருக்காரு .. “ என்று நைனா சொல்லும்போதே குறுக்கிட்ட மைரா, : உன் அண்ணன் நல்லா இருக்காரு, நானும் நல்லா இருக்கேன். அவரோட உண்மையான முகத்த இவ்ளோ மறைச்சு இருந்துருக்காரு நைனா. நீ சொன்னா நம்ப மாட்ட, அவர் பயங்கரமா கடலைப்போடுறாரு “ என்று கூறினாள்.
“ ஏற்கனவே அவர் ரொம்ப ஹாட், ஹேண்ட்சம் இப்போ இது வேறையா ? அவருக்கு இன்னும் அதிக மார்க் போடணும் போல “ என்று சொன்னாள் நைனா.
“ இப்ப சொல்லு, எதுக்கு போன் பண்ண ? “ என்று மைரா கேட்க, “ இப்ப நான் உன்ன கூப்பிடறதுக்கு ஒரு காரணம் வேணுமா ? நீங்க ரெண்டு பேரும் பிஸியா இருக்கும் போது தொந்தரவு பண்ணிட்டேனா ? “ என்று நைனா கிண்டலாக கேட்டாள்.
“ வாய மூடு “ என்று முணுமுணுத்த மைரா, படுக்கையிலிருந்து இறங்கி பால்கனிக்கு நகர்ந்தாள்.
“ நீ இதுவர உன்னோட இ-மெயிலை பார்க்கலைனு நினைக்குறேன் அதனால தான் போன் பண்ணேன். அடுத்த மாசம் நம்ம காலேஜ்ல படிச்சவங்க எல்லாரும் ஒன்னா சந்திக்க ஏற்பாடு பண்ணி இருக்காங்க, அதுக்கு குடும்பத்தோட வர சொல்லி இன்விடேஷன் வந்துருக்கு “ என்று நைனா சொன்னதை கேட்டதும், “ அப்படியா ? நாம நிச்சயம் போகலாம் “ என்றாள் மைரா.
“ உன் புருஷனோட வா, பொறாமை புடிச்ச குரங்குங்க எல்லாம் உன்ன பார்த்து நல்லா வயிறு எரியட்டும். உன்னையும், அண்ணாவையும் பார்க்கும் போது அவங்க முகம் எப்படி இருக்கும்னு நான் பார்க்க ஆசையா இருக்கேன் “ என்று நைனா சொல்ல, “ முயற்சி செய்றேன். அன்னைக்கு அவருக்கு வேலை இருக்கா எனக்கு தெரியல. நான் அப்புறம் சொல்றேன் “ என்று பதிலளித்து, மைரா அழைப்பை துண்டித்து கேஷவிடம் சென்று அனைத்து விவரத்தையும் பற்றி தெரிவித்தாள்.
“ நான் உன் கூட வரணும்னு நீ விரும்பினா நான் நிச்சயமா வருவேன், இது உன்னோட விருப்பம் தான் “ என்று கேஷவ் சொன்னதும், “ அப்போ, என் கூட வாங்க. எங்க பேட்ச் பசங்களுக்கு இன்விடேஷன் வந்துருந்தா அப்போ க்ரிஷுக்கும் வந்துருக்கும் “ என்று கூறினாள் மைரா.
“ அப்போ அவனும் நிச்சயம் வருவான் “ என்று கேஷவ் சொல்ல, மைரா ஆம் என்று முணுமுணுத்தபடி தனது வேலைக்கான அட்டவணைகளைத் திட்டமிடத் தொடங்கினாள்.
“ சாயங்காலம் நான் ஜிம் போக போறேன். எனக்கு ஜிம் போற பழக்கம் இருக்கு, இப்போ இங்கேயே இருக்க போறதால இங்க இருக்க ஒரு ஜிம்ல சேரலாம் நினைக்குறேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ உங்க பைசெப்ஸின் ரகசியம் அது தானா ? தாராளமா போங்க ஆனா இதுல என்ன இழுக்காதீங்க, எனக்கு இந்த ஜிம் போறது எல்லாம் செட் ஆகாது “ என்று கூறினாள். அவள் வார்த்தையை கேட்ட கேஷவ், “ நான் உன்ன எதுக்காகவும் வற்புறுத்த மாட்டேன் அம்மு, எப்போவாச்சும் ஒரு நாள் நீயா என்கூட ஜிம் வரணும்னு சொன்னா அப்போவும் நான் உன்ன தடுக்க மாட்டேன் “ என்று சொன்னான்.
மைரா சரி என்று சொல்ல இருவரும் தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.
மாலையில் கேஷவ் ஜிம்முக்கு சென்ற பிறகு, மைரா அவனுக்காக காத்திருந்தாள். எட்டு மணிக்கு திரும்பி வந்தவன் அவளிடம் ஒரு புன்னகையை உதிர்த்தபடி குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான். மைரா ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டும், மாணவர்களின் வருகையை ரெஜிஸ்டரில் சரிபார்த்துக் கொண்டும் இருந்தாள், பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவள் திரும்பி பார்த்த போது, அதிர்ச்சியில் அவள் மூச்சிரைத்தாள்.
ஈரமான தலைமுடியை துவட்டியபடி இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு கேஷவ் வெளியே வந்தான். மைரா மறுபுறம் திரும்ப, கேஷவ் கண்ணாடி முன் நின்று தனது ஈரமான தலைமுடியை உலர்த்தத் தொடங்கினான். அவனது அசைவுகளுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து கொண்டிருந்த அவனது பைசெப்ஸைப் பார்த்து மைரா விழுங்கினாள், அவனது வெற்று முதுகு அவளை அறியாமலேயே அவனை ரசிக்க செய்தது.
என்ன நடக்கிறது என்பதை அறியாத கேஷவ், “ நான் லேட்டா வந்துட்டேனா அம்மு ? நாளைல இருந்து சீக்கிரம் திரும்பி வரேன். நீ ரொம்ப பசியா இருக்கியா ? “ என்று கேட்டான். ஆனால் அவளிடம் இருந்து பதில் வராததால், அவளை நோக்கித் திரும்பியவன், விரிந்த கண்களுடனும் திறந்த வாயுடனும் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டான். தான் ஒரு துண்டுடன் வெளியேறிவிட்டோம் என்பதை உணர்ந்தவன், மைரா தன்னைப் பார்க்கும் விதத்தைப் பார்த்து குறும்பாக சிரித்தான்.
கேஷவ் அவளுக்கு முன்னால் சென்று அவளை மயக்கத்திலிருந்து மீட்க கையசைத்தான். திடுக்கிட்ட மைரா அவனைத் தவிர வேறு எங்கும் பார்த்தாள்.
“ என்ன ஆச்சு அம்மு ? நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், நீ என்ன யோசிச்சிட்டு இருக்க ? “ என்று அவன் கேட்க, “ இல்லையே… ஒண்ணுமில்ல.. நான்.. நாம் ரீயூனியனுக்கு என்ன டிரஸ் போடுறதுனு யோசிச்சிட்டு இருந்தேன். ஆமா அது தான் வேற ஒண்ணுமில்ல.. எனக்கு பசிக்குது “ என்று திக்கி திணறி சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே ஓடி, முகத்தை விசிறிக் கொண்டே ஹாலை அடைந்தாள். இன்னமும் அவள் பார்த்த உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியாமல் கைகளால் விசிறிக் கொண்டிருந்தாள்.
“ மைரா, ஏன் கையால விசிறிட்டு இருக்க ? “ என்று அர்ச்சனா கேட்க, “ உங்க பையன் ஹாட்டா இருக்காரு “ என்று கூறினாள்.
“ என்னது? “ என்று அர்ச்சனா குழப்பத்துடன் கேட்டதும், தான் உளறியதை உணர்ந்த மைரா கண்களை அகல விரித்து சங்கடத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.
“ நான் வெளிய இருக்க சூரியன சொன்னேன்.. வானத்துல இருக்க சூரியன் ரொம்ப ஹாட்டா, அதாவது சூடா இருக்கு சொன்னேன் “ என்று மேலும் உளறினாள். அதை கேட்டு, “ சூரியனா? மைரா நைட்டு 8.30 மணி, இன்னைக்கு பௌர்ணமி “ என்று அர்ச்சனா சொன்னார். உடனே புன்னகைத்த மைரா, என்ன சொல்வது என்று யோசித்து, “ நீங்க சொல்றது சரி தான், நீங்க ரொம்ப புத்திசாலி, ஆனா நான் இன்னைக்கு மதியம் அப்படி இருந்துச்சு சொன்னேன் “ என்று சமாளித்தாள்.
“ ஆனா உங்க ரூம்ல ஏ.சி இருக்கே “ என்று அர்ச்சனா மீண்டும் சொல்ல, “ ஆமா, மறுபடியும் நீங்க சொல்றது சரி தான். ஏசி இல்லாதவங்க, வெளிய வேலை செய்றவங்கள நெனச்சு நான் சொன்னேன், பாவம் ரொம்ப சூடா இருக்கும்ல “ என்று சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டிலை எடுத்து பாதி பாட்டிலை விழுங்கி மனதை அமைதிப்படுத்தி கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நொடிகள் கழித்து அவள் திறந்து பார்த்தபோது கேஷவ் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கேஷவ் ஒரு கருப்பு பேன்ட் மற்றும் சாம்பல் நிற டீ ஷர்ட் அணிந்திருந்தான், ஆனால் மைராவின் மனதில் பதிந்திருந்த, அவன் ஒரு துண்டில் இருந்த உருவம் தான் கண்களுக்கு தெரிந்தது. அவள் சட்டென அவனை பார்க்காமல் திரும்பி கொண்டாள் ஆனால் கேஷவ் அவள் மணிக்கட்டை பிடித்து, அவளை தன்னுடன் தங்கள் அறைக்கு இழுத்துச் சென்று கதவை சாத்தினான்.
“ உன்ன சங்கடப்படுத்துனதுக்கு என்ன மன்னிச்சிடு அம்மு, அது நான் வேணும்னே செய்யல, நான் குளிக்க போறதுக்கு முன்னாடி டிரஸ் எடுத்துட்டு போக மறந்துட்டேன் ஆனா இனி அப்படி செய்ய மாட்டேன், ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு “ என்று கேஷவ் சொன்னதும், அவன் வருத்தப்படுவதைக் கண்டு வருந்திய மைரா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ இல்ல கெட்சப் அது உங்க தப்பு இல்ல. இப்போ நாம ஒரே ரூம்ல இருக்கோம், நாம செய்ற எல்லாத்துலையும் எச்சரிக்கையா ரோபோ மாதிரி வாழ முடியாது. அது வந்து, அந்த மாதிரி வெறும் துண்டு கட்டி நான் பார்த்தது முதல் முறை அதனால எனக்கு கூச்சமா இருந்துச்சு “ என்று மைரா சொன்னதும், “ எனக்கும் இது தான் முதல் முறை. என்ன அப்படி பார்த்த முதல் ஆள் நீ தான் “ என்று சொன்ன கேஷவ், “ ஆனா..” என்று இழுத்தான்.
“ ஆனா என்ன ? “ மைரா கேட்டதும், “ நீ என் மனைவி அதனால நான் வருத்தப்படல, சங்கடமும் இல்ல. எதிர்காலத்துல கவனமா இருப்பேன் “ என்று கேஷவ் கூறினான் ஆனால் மைரா மறுத்து தலை அசைத்து, “ இல்ல, நான் இந்த ரூம்ல வாழ ஆரம்பிச்சுட்டேன், நான் ஓரளவுக்கு நானா இருக்கேன் அதனால உங்க விருப்பப்படி வாழ உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீங்க எப்பவும் போல நீங்களாவே இருங்க, நாம சீக்கிரம் எல்லாத்துக்கும் பழகிவிடுவோம் “ என்று புன்னகையோடு சொன்னாள்.
“ அப்போ நான் டவலோட வந்தா உனக்கு பிரச்சன இருக்காதா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான் தான் இன்னைக்கு உங்கள அப்படி பார்த்துட்டேனே, இனி அது புது விஷயமா இருக்காது அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. இப்ப நாம போய் டின்னர் சாப்பிடலாம் “ என்று சொல்லிவிட்டு மைரா முன்னால் நடந்தாள், ஆனால் கேஷவ் அவளை அழைத்ததும் அவள் நின்று அவனை பார்த்தாள்.
“ இப்போ என்ன பார்த்த அப்புறம், நான் ஜிம் போய் வொர்க் அவுட் பண்ணது பலன் கொடுத்துருக்கா சொல்லு “ என்று கேஷவ் கேட்டதும், மைரா பெருமூச்சு விட்டாள் ஆனால் கேஷவ் தன் புன்னகையைக் கட்டுப்படுத்துவதைக் கண்டதும், “ நிச்சயமா போதுமான அளவு பலன் கொடுத்துருக்கு மிஸ்டர் ஹஸ்பெண்ட். இப்போ நாம போகலாமா? “ என்று கேட்டாள் ஆனால் கேஷவ் மீண்டும் அவளிடம், “ அப்போ நீ பார்த்தது உனக்குப் புடிச்சு இருக்குனு அர்த்தம் எடுத்துக்கவா ? “ என்று கேட்டான்.
“ நீங்க என்ன ரொம்ப கிண்டல் பண்றீங்க அங்கிள் “ என்று சொல்லி, மைரா சோபாவிலிருந்து ஒரு குஷனை எடுத்து அவன் முகத்தில் அழுத்தி அவன் கையை திருகினாள். இரவு உணவிற்கு அழைக்கும் அர்ச்சனாவின் குரல் கேட்டு அவர்கள் கிண்டல் பேச்சை நிறுத்திவிட்டு இரவு உணவை சாப்பிட சென்றனர்.
மும்பையில், அலுவலகத்திலிருந்து திரும்பிய கிருஷ், தான் தங்கியிருந்த சர்வீஸ் அபார்ட்மெண்டில் தனது தந்தை தனக்காக காத்திருப்பதைக் கண்டதும் அவரை அனைத்துக் கொண்டு மௌனமாக விம்மி விம்மி அழுதான். மதன் அவனை அமைதிப்படுத்த அவன் முதுகைத் தடவிக் கொடுக்க, க்ரிஷ் கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை பார்த்து புன்னகைத்தான்.
“ அப்பா, நீங்க வர போறதா சொல்லவே இல்லையே ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ நான் உன்ன சர்ப்ரைஸ் பண்ண நெனச்சேன், இப்போ குளிச்சிட்டு வா, நான் உனக்கு டின்னர் சமைச்சிருக்கேன், உன் அம்மாவும் உனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் அனுப்பி வச்சிருக்கா “ என்று மதன் சொன்னார். அவரது புன்னகையை பார்த்த க்ரிஷ், “ என் மேல உங்களுக்கு வருத்தமோ கோபமோ இல்லையா? “ என்று கேட்டான்.
“ தப்பு செய்றது மனித இயல்பு ஆனா அத உணர்ந்து, திருத்த முயற்சி செய்றது புத்திசாலித்தனம். நாங்க உன்கூட இருக்கோம், நீ எதையும் எங்க கிட்ட சொல்லலாம் க்ரிஷ், நாங்க உனக்கு உதவி செய்வோம் “ என்று மதன் சொன்னார். அதற்கு க்ரிஷ், “ ரொம்ப நன்றி பா, நீங்க எனக்கு ஆதரவா இருப்பீங்கனு எனக்கு தெரியும் ஆனா எல்லாத்தையும் நானே சரி செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் மட்டும் வேணும் “ என்று கூறினான்.
“ நல்லது, நாங்க எல்லாரும் பழைய க்ரிஷை மிஸ் பண்றோம் “ என்று மதன் சொல்ல, “ நான் உங்க மகனா, அண்ணனுக்கு தம்பியா, மைராவுக்கு ப்ரெண்டா இருந்த வர எனக்கு வாழ்க்கையில கவலைப்பட ஒண்ணுமில்ல. சரி, அது போகட்டும் பா, நீங்க எனக்காக இங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் “ என்று சொல்லிவிட்டு க்ரிஷ் புத்துணர்ச்சி பெற்றதும், மதன் அவனுக்காக சமைத்த பிரியாணியை பரிமாறினார். இருவரும் அவனது வாழ்க்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை, ஆனால் ஒன்றாக படம் பார்த்தனர், பின்னர் க்ரிஷ் தனது தந்தையின் மடியில் தலை வைத்து தூங்கினான்.
மூன்று நாட்கள் கழித்து, க்ரிஷ் வீடு திரும்புவதாக உறுதியளித்த பிறகே மதன் சென்னை திரும்பினார்.
சில நாட்கள் கழிந்த பிறகு மைரா தனது வேலையில் சேர்ந்தாள், கேஷவ் வீட்டிலிருந்து வேலை செய்தான், ஆனால் அவன் மைராவின் தனிப்பட்ட ஓட்டுநராக மாறினான். அவர்களின் கிண்டல்கள், கேலிகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. ஒரு வாரமாக அவர்கள் டேட்டிங், ஷாப்பிங் செல்லாததால் கேஷவ் அவளுக்காக ஒரு சர்ப்ரைஸ் ப்ளான் செய்து மியூசிக் அகாடமிக்கு மைராவை அழைக்க சென்றான்.
கேஷவைப் பார்த்ததும் மைராவின் உதடுகள் புன்னகையில் வளைந்தன. கேஷவ் அவளுக்காக கார் கதவைத் திறந்தான்.
“ நாம ஒரு வாரமாக வெளியே போகல அதனால நான் இன்னைக்கு உன்ன வெளிய கூட்டிட்டு போக போறேன் ஆனா இது ஒரு சர்ப்ரைஸ். நாம போற இடம் நிச்சயம் உனக்கு பிடிக்கும் “ என்று கேஷவ் சொன்னதும், “ நீங்க என்கிட்ட சொல்லிட்டு செஞ்சா என்ன ? “ என்று கேட்டாள்.
“ நான் உன்ன சர்ப்ரைஸ் பண்ணும் போது உன் முகத்துல தெரியுற சந்தோஷத்த பார்க்க விரும்புறேன் அம்மு, அதனால நாம அங்க போற வர வெயிட் பண்ணு “ என்று கேஷவ் கூறினான்.
அவன் நீண்ட நேரம் காரை ஓட்டினான், மைரா அவனை முறைத்துப் பார்த்ததும் அவன் ஒரு சாக்லேட் கொடுத்து அவளை அமைதிப்படுத்துவான். நீண்ட 1 மணி நேரத்திற்குப் பிறகு காரை நிறுத்தி அவளது கண்களைக் கட்டினான்.
“ என்ன கடத்திட்டு போறீங்களா ? “ என்று மைரா கேட்க, “ வாழ்க்க முழுக்க என்கூட இருக்க உன்ன ஏற்கனவே கடத்திட்டேன் இனி ஏன் அப்படி செய்ய போறேன் ? “ என்றான் கேஷவ்.
கேஷவ் மேலும் 15 நிமிடங்கள் காரை ஒட்டி, ஒரு ரிசார்ட்டுக்கு முன்பு காரை நிறுத்தினான். பின்னர் மைராவின் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் 5 நிமிடங்கள் நடந்தனர். கேஷவ் அவளது கண்கட்டை அகற்றியதும், கடற்கரையில் அவன் பிக்னிக் ஏற்பாடு செய்திருந்ததை பார்த்து மைரா மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள்.
“ இதோ பாரு, உன் முகத்துல இந்த சிரிப்ப பார்க்க என்ன வேணும்னாலும் செய்யலாம் “ என்று சொல்லி கேஷவ் புன்னகைத்தான்.
இருவரும் கடலை நோக்கியபடி இருந்த அமர்ந்தனர், கேஷவ் ஒரு தட்டில் ஆப்பிள் பை மற்றும் ஐஸ்கிரீமை அவளிடம் கொடுத்தான்.
“ இது என்ன இடம் கெட்சப் ? “ என்று மைரா கேட்க, “ இது ஒரு ரிசார்ட், இந்த இடத்துக்கு வெளியாட்கள் வர அனுமதி இல்ல. நாம கொஞ்ச நேரம் செலவழிக்கலாம்னு இதை புக் பண்ணேன் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னான்.
சிற்றுண்டி சாப்பிட்டு முடித்ததும், மைரா தன் லெக்கிங்ஸை லேசாக உயர்த்தி, கெண்டைக்கால் தசையை லேசாக வெளிப்படுத்தி, தண்ணீரை நோக்கி ஓடினாள், கேஷவ் தனது பேண்ட்டை உயர்த்தி அவளை தொடர்ந்து சென்றான். கேஷவ் டவல் சம்பவத்திற்கு பிறகு இப்போது மைரா, முக்கால் பேன்ட், ஸ்கிர்ட் அணிவதை பார்த்து பழகி விட்டான். இருவரும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டு கால்களை தண்ணீரில் நனைத்தபடி நின்றார்கள்.
இருவரும் சேர்ந்து மணல் கோட்டை கட்டி ஒன்றாக செல்ஃபி எடுத்தனர். மைரா தனது சமூக ஊடகங்களில் ஒரு படத்தை வெளியிட்டாள். இருவரும் ஒன்றாக சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தார்கள், வானம் இரவின் போர்வைக்குள் விழும் வரை பேசிக்கொண்டே கரையோரமாக நடந்தார்கள்.
“ நாம ரொம்ப நேரமா இங்க இருக்கோம், வீட்டுக்கு கிளம்பலாமா ? “ என்று மைரா கேட்டதும், “ கவலைப்படாத, நாம லேட்டா வருவோம்னு அம்மா கிட்ட சொல்லிட்டேன். நைட்டு டின்னர் சாப்பிட்ட அப்புறம் கிளம்பலாம். இப்போ நாம ரொம்ப தூரம் வந்துட்டோம் அதனால கிளம்புன இடத்துக்கு போவோம் “ என்று கேஷவ் சொன்னதும் அவர்கள் திரும்பி நடக்கத் தொடங்கினர்.
அவர்கள் புறப்பட்ட இடத்தை அடைந்ததும், மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு, இருபுறமும் இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு மேஜையில் இரவு உணவு அமைக்கப்பட்டிருந்தது. மைரா புன்னகையுடன் கேஷவைப் பார்த்ததும், அவள் ஈர்க்கப்பட்டாள் என்பது அவள் கண்களில் பிரதிபலித்தது, கேஷவ் கொடுத்த பாட்டிலில் இருந்த தண்ணீரில் கைகளைக் கழுவி விட்டு கேஷவ் அவளை மேஜைக்கு அழைத்துச் சென்றான்.
“ உனக்கு புடிச்சது எல்லாமே ஏற்பாடு பண்ணி இருக்கேன். உனக்கு வேற ஏதாவது வேணும்னா கூட ஆர்டர் பண்றேன், இங்க இருக்க செப் உடனே ரெடி பண்ணிடுவாரு “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் மைரா அவனிடம், “ இல்ல, எனக்கு இங்க இருக்குறதே போதும், இதுவே நிறைய இருக்கு “ என்று சொன்னாள்.
மைரா முதலில் கேஷவுக்கும் பின்னர் தனக்கும் பரிமாறினாள். உணவை சுவைத்துவிட்டு முனக ஆரம்பித்தவலள், சூப்பர் சைகை செய்ததும், கேஷவ் நாடகத்தனமாக தலை வணங்கினான்.
மைரா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள், அவளது மகிழ்ச்சிக்கு உண்மையான காரணமாக கேஷவ் மாறினான். அவர்கள் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் கேஷவும் அனுபவிப்பதை அவளும் கவனித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்தாலும், எல்லைக்குள் இருந்தனர்.
இருவரும் வீடு திரும்பியதும் களைப்பாக இருந்ததால் நேராக படுக்கையில் உறங்க சென்றனர்.
*******************************
முன்னோட்டம்:
பழிக்கு பழி வாங்கு. உன்ன கட்டிபிடிச்சு அவர் உனக்கு கொடுத்த அதிர்ச்சிய நீயும் வருக்கு திருப்பி கொடுத்து பிரச்சனைய முடிச்சிடு. எப்பவும் ஒருத்தரே விளையாட்ட விளையாட முடியாது, ரெண்டு பேரு சேர்ந்து விளையாடலாம்.

1 comment
[…] எனக்கு கூச்சமா இருந்துச்சு […]