Home Family36. என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு

36. என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு

by Siragugal Novels
19 views

கேஷவும், மைராவும் தயாராகி சமையலறையை அடைந்து ஒன்றாக சமைக்க ஆரம்பித்தனர்.

“ எனக்கு உங்கள மாதிரி சமைக்க தெரியாது ஆனா ஒரு நாள் நான் என் கையால உங்களுக்காக ஒரு விருந்து தயார் செய்வேன். உங்களுக்கு என்ன சாப்பிட வேணும்னு எனக்கு ஒரு லிஸ்ட் கொடுங்க, உங்களுக்காக நான் அதை சமைக்க கத்துக்குறேன் “ என்று மைரா சொன்னதும், “ நீ அத பத்தி கவலைப்பட வேணாம் அம்மு, உன்னால முடிஞ்சத சமைச்சு கொடு. நான் அத சந்தோஷமா சாப்பிடுவேன் “ என்று சொன்னான் கேஷவ். உடனே மைரா அதற்கு, “ நான் வெந்நீர் நல்லா வைப்பேன் “ என்று கிண்டலாக சொன்னாள்.

“ அப்போ அத நான் சந்தோஷமா எடுத்து குளிக்க யூஸ் பண்ணுவேன் “ என்று சொல்லி ஒரு கேரட் துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான். இருவரும் சேர்ந்து சாம்பார் மற்றும் தோசை தயாரித்தனர். தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது சமையலறை வாசலில் க்ரிஷ் நின்று கொண்டிருந்தான்.

“ க்ரிஷ், ப்ரேக்பாஸ்ட் ரெடியா இருக்கு, நாம ஒன்ன சாப்பிடலாம் “ என்று சொன்ன கேஷவ், சாதாரணமாக இருக்கும்படி மைராவுக்கு சைகை செய்தான். கண்கள் வழியாக அவர்கள் நடத்திய உரையாடலை க்ரிஷின் பின்னால் இருந்த ரோஷினி கவனித்தாள்.. அவர்கள் ஒன்றாக இருப்பதைப் பார்ப்பதை அவள் வெறுத்தாள், எனவே அவர்களைத் தவிர்ப்பதற்காக அவள் தனது அறைக்குத் திரும்பினாள்.

“ எப்படி இருக்க க்ரிஷ் ? “ என்று மைரா கேட்க, “ நான் நல்லா இருக்கேன் “ என்றான் க்ரிஷ். மைரா சரி என்று சொல்ல அவர்கள் ஒன்றாக காலை உணவை சாப்பிடத் தொடங்கினர். அப்போது கேஷவுக்கு ஒரு அழைப்பு வந்ததும், அதற்கு பதிலளிக்க வெளியே சென்றான். க்ரிஷ் சிந்தனையில் மூழ்கியிருப்பதைக் கண்ட மைரா அவனிடம், “ க்ரிஷ், நீ ஏன் எல்லார்கிட்டையும் இருந்து விலகி இருக்க ? எதுவா இருந்தாலும் நீ, என்கிட்டையோ இல்ல கெட்சப் கிட்டயோ சொல்லலாம், நாங்க உனக்கு எந்த உதவியும் செய்வோம் “ என்று சொன்னாள்.

“ நன்றி மைரா, ஆனா நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க ? “ என்று கேட்டான். 

“ நான் நல்லா இருக்கேன் “ என்று சொன்ன மைரா தன் தொண்டையை கனைத்துக்கொண்டு, “ நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன் க்ரிஷ், நீ தப்பா நினைக்க மாட்டனு நம்பறேன். கெட்சப் பத்தி என்கிட்ட ஏன் பொய் சொன்ன? “ என்று கேட்டாள்.

மைராவின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த க்ரிஷ், “ நான் என்ன பொய் சொன்னேன்? “ என்று குழப்பத்தோடு கேட்டான்.

“ அவர் நிறைய குறட்டை விடுவாரு அதனால தான் நீ வேற ரூமுக்கு போனதா சொன்ன அப்புறம் அவர் அசைவம் மட்டும் தான் விரும்பி சாப்பிடுவாருனு சொன்ன ஆனா உண்மையில அவர் சுத்தம் சைவம் “ என்று மைரா கேட்டதும், “ அது சும்மா ஜாலிக்குத்தான்” என்றான் க்ரிஷ்.

அவன் பதிலை கேட்ட மைரா “ ஆமா எல்லாமே உனக்கு வேடிக்க தான் இல்லையா? ஆனா, ஒருத்தர மத்தவங்களோட கண்ணோட்டத்துல பார்த்து ஒரு முடிவுக்கு வர கூடாதுனு நான் ஒரு பாடம் கத்துக்கிட்டேன் “ என்று சொன்னாள்.

அவளின் வார்த்தையின் தீவிரத்தை உணர்ந்த க்ரிஷ் பதற்றமடைந்து, “ அண்ணா உன்ன ஏதாவது சொன்னாரா இல்ல அதனால ஏதாவது நடந்துச்சா ? “ என்று கேட்டான்.

“ நான் பார்த்ததுலையே அவர் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். இந்த உலகத்துலையே ரொம்ப பொறுமையான மனுஷனும் அவர் தான் “ என்று மைரா புன்னகைத்தாள். அப்போது கேஷவ் திரும்பி வந்து அவள் அருகில் அமர்ந்து அவள் தட்டில் இன்னும் கொஞ்சம் சாம்பாரை பரிமாறினான். மைரா முகத்தைச் சுளித்து அவனைத் தடுத்தாள், ஆனால் கேஷவ் தட்டைக் காட்டி காலை உணவை முழுவதுமாக முடிக்கும்படி சைகை செய்தான்.

“ க்ரிஷ், உன் மனசுக்கு புடிக்காத எதையும் செய்யாத. எல்லாத்தையும் விட உன் மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடு.  கட்டாயத்துல முடிவு எடுத்து வருத்தத்தோட வாழ, வாழ்க்கை ரொம்ப சின்னது “ என்று கேஷவ் அவனுக்கு அறிவுரை சொன்னான். அதை கேட்ட க்ரிஷ், “ நன்றி அண்ணா, நான் என் முடிவ சீக்கிரம் உங்களுக்கு சொல்றேன், ஒருவேள முடிவெடுக்க கஷ்டமா இருந்தா உங்க ரெண்டு பேருகிட்ட நிச்சயமா வருவேன் “ என்று சொன்னான். பின்னர் மைராவிடம் கவனத்தை திருப்பி, “ நாம இன்னும் ஃப்ரெண்ட்ஸ் தானா மைரா ? “ என்று கேட்டான்.

“ கண்டிப்பா க்ரிஷ், ஏன் இப்படி ஒரு கேள்விய கேட்குற ? நான் உன்ன தவிர்க்குறதா நீ நெனச்சா அப்போ நிச்சயமா நான் அப்படி செய்யல. ரோஷினிக்கு உன்மேல லவ் அதிகம் அதனால நான் ஒதுங்கியே இருந்தேன், என்னால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைச்சேன் “ என்று மைரா விளக்கம் சொன்னாள்.

“ முன்னாடியெல்லாம் நாம ரொம்ப சந்தோஷமா இருப்போம் ஆனா நான் ரோஷினிய ப்ரொபோஸ் பண்ண அப்புறம் எல்லாமே மாறிடுச்சு “ என்று க்ரிஷ் வருத்தத்துடன் சொல்ல, “ அது தான் வாழ்க்கையோட அழகு க்ரிஷ். நாம் செய்ற ஒவ்வொரு செயலோட  முடிவுல இருந்தும் நாம் கத்துக்குறோம், இருந்தாலும் நாம தப்பு பண்ணிட்டா அத நெனச்சு அழாம அத சரி பண்ணி வாழனும் “ என்று மைரா சொன்னாள்.

“ நீ சொல்றது சரி தான் மைரா, இப்போ ரொம்ப மெச்சூரிட்டியா இருக்க “ என்று க்ரிஷ் சொல்ல, “ அவ எபப்வுமே அப்படித் தான். நான் சொல்றது சரி தானே அம்மு ? “ என்றான் கேஷவ்.

புன்னகையோடி கேஷவை பார்த்த மைரா, “ நிச்சயமா கெட்சப் ஆனா இப்போ நீங்க எனக்கு துணி காயப்போட உதவி செய்யணும். அதுக்கு அப்புறம் நான் தூங்க போறேன், நீங்க என்ன தொந்தரவு செய்யாதீங்க “ என்று சொன்னாள்.

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த க்ரிஷுக்கு, அவள் சாதரணமாக சொன்ன வார்த்தையின் அர்த்தம் வேறு விதமாக புரிந்து தண்ணீர் புரை ஏறியது. சங்கடத்தை தவிர்க்க அவன் சட்டென எழுந்து சென்றான். க்ரிஷ் கண்ணில் இருந்து மறைந்ததும் கேஷவ் சத்தமாக  சிரித்தான். அதன் பின்னரே மைரா தன் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டு முனகினாள்.

“ எல்லாம் உங்க தப்பு அங்கிள். காலையில என்ன தூங்க விடக்கூடாதுனு நீங்க வேணும்னே சத்தம் போடுறத தான் சொன்னேன் ஆனா அவன் தப்பா புரிஞ்சிகிட்டான் “ என்று சொல்லி கேஷவை முறைத்தாள். அதற்கு கேஷவ் அவளிடம், “ பரவாயில்ல, நான் சொன்ன மாதிரி, புதுசா கல்யாணம் ஆன புருஷன், பொண்டாட்டி நடுவுல இதெல்லாம் நடக்குறது தான். நமக்குள்ள எதுவும் நடக்கலனாலும், எல்லாருக்கும் நாம ஹனிமூன் டைம்ல இருக்க ஜோடி மாதிரி தெரிய நீ எல்லா விஷயமும் செய்ற “ என்று சொல்லி சிரித்தான்.

மைரா அவன் கையை குத்த ஆரம்பிக்க, அவன் அவளது அடிகள் அவன் விழாமல் தப்பிக்க முயன்று சிரித்தான். அப்போது அவளது மொபைலில் ஒரு அறிவிப்பு வந்ததும், அது மர்ம பாடகரால் பதிவேற்றப்பட்ட புதிய வீடியோவிலிருந்து வந்திருப்பதைக் கண்டாள்.

“ என்னோட மர்ம பாடகர் ஒரு புது பாட்டு வெளியிட்டு இருக்காரு. வாங்க நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம் அதுக்கு அப்புறம் சண்ட போடலாம் “ என்று மைரா சொல்ல, கேஷவ் சரி என்று சொல்லி அவளருகில் சாய்ந்ததும், மைரா பாடலை இயக்கினாள்.

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் மெல்லிசையே
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் மெல்லிசையே  

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்

எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்

நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி காதல் ஜோதி
என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்

அந்த பாடலை பார்த்ததும், மைரா கேஷவைப் பார்த்தாள், அவன் அவள் மூக்கைக் கிள்ளி, “ இந்த பாட்டு கேட்ட அப்புறம் இப்ப என்ன ஃபீல் பண்ற ? “ என்று கேட்டான்.

“ ஒருவேளை அவரோட லவ் ஜெயிச்சுடுச்சு போல அதனால அவர் சந்தோஷமா இருக்காரு போல “ என்று மைரா சொன்னாள். அதற்கு கேஷவ், “ அவர் வாழ்க்கையில நடந்ததை எல்லாம் பார்த்த மாதிரியே பேசுற, ஆனா அவர் உன்ன சிரிக்க வெச்சதுல எனக்கு சந்தோஷம் “ என்று சொன்னான்.

“ பொறாமைப்படாதீங்க கெட்சப், அவர் என் க்ரஷ் தான், அவர நான் பார்த்ததே இல்லை, ஆனா நீங்க என் புருஷன், நாம ஒன்ன வாழுறோம் “ என்று மைரா கூறினாள். அதற்கு கேஷவ் அவளிடம், “ முகத்த கூட காட்டாத ஒருத்தன பார்த்து நான் ஏன் பொறாமைப்படனும் ? அதுவும் இல்லாம நீ அவனோட குரல் மட்டும் தான் ரசிக்குற ஆனா நீ என்ன தனிப்பட்ட முறையில  உரிமையோட ரசிச்சு பாராட்டுற, இல்லையா? “ என்று புன்னகைத்தபடி கேட்டான்.

“ உங்களுக்கு ரொம்ப தான் பெருமை அங்கிள் “ என்று மைரா சொல்ல, “ கண்டிப்பா ஆன்ட்டி “ என்று சொன்னான் கேஷவ். அதை கேட்டதும் மைரா அதிர்ச்சியானாள்.

“ கெட்சப், உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்ன ஆன்ட்டி சொல்லுவீங்க ? என்கிட்ட இருந்து உங்கள காப்பாத்த கடவுள் கிட்ட பிரார்த்தன பண்ணுங்க “ என்று அவள் சொன்னதும் கேஷவ் எழுந்து தன் அறைக்கு ஓடினான். மைரா அவனைத் துரத்த, இருவரும் தங்கள் கேலிக் கிண்டலை தொடர்ந்தனர்.

ரீயூனியன் நாளன்று, மைராவும், கேஷவும் எழுந்து ஹாலை அடைந்தனர். கேஷவ் காலை உணவை சமைக்க சமையலறைக்குள் நுழைந்து அதற்கான பொருட்களை வெளியே எடுக்க, மைரா ரோஷினிக்கு எதிரே அமர்ந்தாள்.

“ ரோஷினி, க்ரிஷ் எங்க? “ என்று மைரா கேட்க, “ க்ரிஷ் ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு சொல்லி ஆபீஸ் போயிருக்கான். உனக்கு தெரியுமா மைரா ? அவன் எனக்கு முத்தம் கொடுக்காம ஆபீஸ் போகவே மாட்டான், அதுவும் முக்கியமான மீட்டிங் இருக்கும் போது என்ன பார்க்காம போகவே மாட்டான். என்ன அவனோட அதிர்ஷ்ட தேவதையா நெனச்சு என்ன அவ்ளோ லவ் பண்றான் “ என்று ரோஷினி சொன்னதும், மைரா கண்களை உருட்ட, அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கேஷவ் தன் வேலையை எல்லாம் நிறுத்திவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“ கெட்சப், இவ்ளோ சீக்கிரம் சமையல் முடிச்சிட்டீங்களா? ஆனா நீங்க கிச்சனுக்குள்ள நுழைஞ்சு அஞ்சு நிமிஷம் தானே ஆகுது ? “ என்று மைரா கேட்க, “ எனக்கு இப்போ சமைக்க விருப்பமில்ல அம்மு, அதனால ரெடியாகு நாம வெளிய போய் உனக்கு புடிச்சது சாப்பிடலாம். சாயங்காலம் ரீயூனியனுக்கு போக ஏதாச்சும் ஷாப்பிங் பண்ணுவோம் “ என்று கேஷவ் கூறினான்.

மைரா சரி என்று சொல்ல, கோபத்தில் இருந்த ரோஷினியை விட்டுவிட்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர், உடனே ரோஷினி தட்டுகளை சுவரில் எறிந்து அவற்றை உடைத்தாள்.

அன்று  மாலை, மைரா பரிசளித்த ராயல் மெரூன் நிற சட்டைய அணிந்து கேஷவ் கண்ணாடி முன் நின்று தன் தலைமுடியை சரி செய்து பார்த்த போது மைரா இன்னும் அணிந்து கொள்ள வேண்டிய உடையை தீர்மானித்துக் கொண்டிருந்தாள்.

“ நான் உனக்காக கீழ வெயிட் பண்றேன் அம்மு, சீக்கிரம் வா “ என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினான். கையில் இரண்டு சேலைகளை வைத்துக்கொண்டு எதை அணிவது என்று குழப்பத்துடன் முனகினாள் மைரா.

ஹாலில் மைராவுக்காக காத்திருந்த கேஷவ், 30 நிமிடங்கள் கழித்து கொலுசு சத்தம் கேட்டு தலையை சாய்த்தான். அவன் சட்டையுடன் பொருந்திய, அவன் பரிசளித்த புடவையை அணிந்திருந்த மைராவைப் பார்த்ததும் அவனது இமைகள் இமைக்க மறுத்தன. அவள் புடவைக்கு மேட்சிங் நகைகளை அணிந்து, அவளுடைய தலைமுடி நேர்த்தியாக பின்னப்பட்டு அவளது தோளில் முன்புறமாக இருந்தது.

மைரா சிரித்தபடி அவன் தாடையை மேலே தூக்கி வாயை மூட அது அவனது மயக்கத்தை உடைத்து, அவன் தன் பார்வையை மைராவிடமிருந்து விலக்கிக் கொண்டான்.

“ கெட்சப் போகலாம். நைனா ஏற்கனவே ரிசார்ட்டுக்கு போய்ட்டு இருக்கா “ என்று மைரா சொன்னதும் அவர்கள் கிளம்ப எத்தனித்தனர், ஆனால் க்ருஷ் அவர்களைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தபடி தனது அறையை விட்டு வெளியேறிய போது இருவரும் நின்றனர். அதே நேரம் ரோஷினி தன் அறையை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் புன்னகை மறைந்தது.

“ கெட்சப், க்ரிஷும் ரோஷினியும் அங்க தானே வராங்க அதனால நாம ஒரே கார்ல போகலாமா ? “ என்று மைரா கேட்க, கேஷவ்  தலையை அசைத்து மைராவுக்காக பயணிகள் கதவைத் திறந்தான், ஆனால் அவள் க்ரிஷை அமர அனுமதிக்குமாறு சைகை செய்தாள். கேஷவ் மறுத்து தலையை ஆட்டி பயணிகள் இருக்கையில் அவளை மெதுவாக உட்கார வைத்துவிட்டு டிரைவர் இருக்கைக்கு சென்றான். க்ரிஷும், ரோஷினியும் பின் சீட்டில் ஏற, கேசவ் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

“ உற்சாகமா இருக்கியா க்ரிஷ் ? இன்னைக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் பார்க்க போற. அவங்க கிட்ட பேசுனியா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல மைரா, நான் யார்கிட்டையும் பேசல. இன்னைக்கு நைட்டு கொஞ்சம் நிம்மதியா, சந்தோஷமா போகும்னு நம்புறேன் “ என்று சொன்னான்.

கேஷவ் லேசாக இரும, மைரா உடனே தண்ணீர் பாட்டிலின் மூடியை திறந்து அவனிடம் கொடுத்தாள்.

“ காரை நிறுத்தி கொஞ்சம் தண்ணி குடிங்க கெட்சப் “ என்றாள் ஆனால் காரை ஓட்டிக்கொண்டே கேஷவ் தண்ணீரை குடித்துவிட்டு அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவர்கள் ரிசார்ட்டை அடைந்ததும் கேஷவ் வாசலில் காரை நிறுத்தினான். அந்த இடம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

“ எனக்காக வெயிட் பண்ணு, நான் கார் பார்க் பண்ணிட்டு சீக்கிரம் வரேன் “ என்று கேஷவ் மைராவிடம் சொல்ல, அவள் தலையை அசைத்துவிட்டு கீழே இறங்கினாள். அவள் க்ரிஷின் அருகில் நின்று கேஷவுக்காக காத்திருந்தாள், ஆனால் க்ரிஷை அவனது வகுப்பு தோழர்கள் சிலர் அழைத்ததும் அவன் அவர்களை சந்திக்க சென்றான்.

ரோஷினி தனக்கு சாதகமாக இருக்கும் வாய்ப்பை உணர்ந்து, ஒரு புன்னகையுடன் மைராவின் தாழ்வுமனப்பான்மையை பற்றவைக்க தீர்மானித்தபடி மைராவின் அருகில் நகர்ந்தாள்.

“ பாவம் மைரா நீ, பரிசு கொடுக்குறது, லஞ்ச், டின்னர் சாப்பிட போறதால நீங்க ரெண்டு பேரும் அன்பா, அன்யோனியமா இருக்க  புருஷன் பொண்டாட்டி நெனச்சியா ? அய்யோ பாவம், அவர் கூட பல வருஷம் வாழ்ந்த அப்புறம் கூட உண்மையான புருஷன், பொண்டாட்டி உறவோட அர்த்தம் உனக்கு புரியாது. ஆம்பளைங்க எப்பவும் ஆம்பளைங்க தான் மைரா, அவங்களுக்கு வாழ்க்கையில ஒரு பொண்ணு தேவை. அப்பாவி மாதிரி நடிக்குற ஒரு முட்டாள் இல்ல. அவரோட தரத்துக்கு ஏத்த பொண்ணா நீ இருக்க மாட்டணு அவர் உணரும் போது ஒரு நாள் உன்ன விட்டு போயிடுவாரு “ என்று சொல்லி ரோஷினி ஏளனமாய் புன்னகைத்தாள்.

சில நொடிகள் அவளை அமைதியாக பார்த்த மைரா, “ நிச்சயதார்த்தம் ஆகி ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்க நீ சொல்றியா ? ரோஷினி, உனக்கு சில விஷயங்கள் புரியாது, அதுல ஒன்னு இந்த கணவன் மனைவி உறவு, அதனால என் பின்னால ஓடி உன் நேரத்த வீணாக்காத. உன்னால எப்பவும் என்ன நெருங்க முடியாது அதனால உன் வாழ்க்கையில கவனம் செலுத்து. என்ன நம்பு, க்ரிஷ் ரொம்ப நல்லவன். நீ அவனுக்கு தகுதியானவ இல்லனாலும் உன்னோட நல்லதுக்காக உன்ன மாத்திக்கிட்டு அவன் கூட சேர்ந்து வாழுற வழிய பாரு. அவன் நல்லவன், நிச்சயம் உன்ன மன்னிப்பான். அப்புறம் என் புருஷன் என்ன விட்டு போயிடுவாருனு நீ சொல்றத கேட்டு எனக்கு உன்மேல தான் பரிதாபமா இருக்கு ஏன்னா அந்த மனுஷன் என் பக்கத்துல இருக்கும் போது ஒரு நொடி கூட என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு அதனால் அடுத்த முறை சிறப்பா ஏதாவது முயற்சி செய் “ என்று பெருமையோடு சொன்னாள்.

கேஷவ் திரும்பி வந்து மைராவின் கையைப் பிடித்துக் கொள்ள, அவர்கள் ரோஷினியைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர். மைரா ரோஷினியின் பக்கம் திரும்பி அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு கேஷவுடன் நடந்தாள்.

“ அவ உன்ன காயப்படுத்த ஏதாவது சொன்னாளா? “ என்று கேஷவ் கேட்டதும், “ இல்ல, நான் மிசஸ் கேஷவ், என்ன அவமதிக்க யாருக்குத் துணிச்சல் இருக்கும் ? “ என்று மைரா கூறினாள்.

கேஷவ் அவளைப் பார்த்து புன்னகைக்க, அவர்கள் நைனாவை சந்தித்ததும், அவள் மைராவை அணைத்துக் கொண்டாள்.

“ இன்னிக்கு நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணுவோம்னு சொல்லிட்டு இப்போ பாரு பார்க்க அப்படியே மிசஸ் கெட்சப் மாதிரி வந்துருக்க “ என்று நைனா கூறியதை கேட்டு, “ நான் மறந்துட்டேன் நைனா. அது சரி, நாங்க பார்க்க எப்படி இருக்கோம் ? “ என்று மைரா கேட்டாள்.

நைனா ஒரு சூப்பர் சைகையைக் காட்டி அவளைப் பார்த்து கண்ணடித்தாள். இருவரும் தங்கள் வகுப்பு தோழர்கள், தோழிகள்  அனைவரையும் சந்தித்தனர். மைரா அவர்கள் அனைவருக்கும் கேஷவை தனது கணவராக அறிமுகப்படுத்தினாள். மைரா மிகவும் அழகான மனிதரை திருமணம் செய்து கொண்டதால் சிலர் பொறாமைப்பட்டனர்.

க்ரிஷ் மற்றும் ரோஷினி அவனது நண்பர்களை சந்தித்தனர், ரோஷினி தன்னை க்ரிஷின் வருங்கால மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், க்ரிஷ் பற்களை நறநறவென்று கடித்தபடி அவளை தனியே இழுத்து சென்றான்.

“ உன்ன என் வருங்கால மனைவினு சொல்றத நிறுத்து. நாம் இப்போ ஒன்னா இல்லனு நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. நாம வீட்டுக்கு போனதும் உன் அப்பா, அம்மாவ கூப்பிடு நாம பிரிஞ்சிட்டோம்னு சொல்லு இல்ல நானே அத செய்றேன். கண்டிப்பா நாம ஒன்னு சேர மாட்டோம், நானே என் குடும்பத்த அழிக்க மாட்டேன் “ என்று க்ரிஷ் உறுதியாக சொன்னான். 

“ உன் ஆசைப்படி எல்லாம் முடிவு பண்ண முடியாது க்ரிஷ். என் உறவ அவ்ளோ சுலபமா முறித்க்க முடியாது “ என்று ரோஷினி அலட்சியமாக பதில் சொன்னாள்.

“ என் அம்மாவையும், உன் அப்பாவையும் சொல்லி என்ன மிரட்டாத. அவங்க உறவுக்காக தான் இத பிரச்சன இல்லாம முடிக்க நினைக்குறேன். உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருந்தா என்ன நிம்மதியா வாழ விடு “ என்று க்ரிஷ் சொன்னதும், “ நாம இத பத்தி பேசுவோம், ஆனா நிச்சயமா இங்க இல்ல. இத பத்தி பேச நான் தயாராகுற வரை வெயிட் பண்ணு “ என்று ரோஷினி சொன்னதும், க்ரிஷ் மறுப்புடன் தலையை அசைத்துவிட்டு தன் நண்பர்களிடம் திரும்பினான், ரோஷினியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

******************************************

முன்னோட்டம்:

“ அவர் என் புருஷன் தானே, நாங்க கிஸ் பண்ணா அதுல என்ன தப்பு ? அவருக்கு என்ன கிஸ் பண்ணனும் எண்ணம் இருக்குமா ? கடவுளே, எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு தான் போல “

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:51 pm

[…] என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:52 pm

[…] 36.என் கைய பிடிக்காம இருக்க மாட்டாரு […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!