கேஷவும், க்ரிஷும் வீட்டிற்கு திரும்பிச் சென்ற போது, அனைவரும் அவர்களுக்காக காத்திருப்பதை கேஷவ் பார்த்தான்.
“ கேஷவ், நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க ? க்ரிஷ் அப்புறம் ரோஷினியோட இந்த திடீர் முடிவு பத்தி நான் அவங்க ரெண்டு பேரு கிட்டயும் பேசணும் “ என்று மதன் சொன்னார் ஆனால் கேஷவ் குறுக்கிட்டு, “ உங்க சார்பா நான் ஏதாவது முடிவு எடுத்தா உங்களுக்கு ஆட்சேபணை இருக்குமா ? “ என்று கேட்டான்.
“நிச்சயமா இல்ல. நம்ம குடும்பத்தோட நல்லதுக்காக நீ எதுவும் செய்வனு எனக்கு தெரியும் “ என்று மதன் பதில் சொன்னதும், “ தேங்க்ஸ் பா “ என்று புன்னகைத்தான். பின்னர் க்ரிஷ் மற்றும் ரோஷினியை நோக்கி கவனத்தை திருப்பினான்.
“ க்ரிஷ், நீங்க ரெண்டு பேரும் உங்க உறவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினா நீங்க மூணு மாசம் விலகி இருங்க. அதுக்கு அப்புறம் கூட நீங்க வாழ்க்கையில ஒன்னா இருக்க விரும்பினா அதுக்கு அப்புறம் நாம பேசுவோம். அது மட்டும் இல்ல, இனி நீ மும்பையில வேலை செய்ய வேண்டாம், சென்னையில வேலை செய், அவள உடனே மாமா வீட்டுக்கு அனுப்பு “ என்று கேஷவ் கூறினான்.
“ கேஷவ் சொல்றது சரிதான். விலகி இருக்கும் போது நமக்கு என்ன வேணும்னு ஒரு தெளிவு கிடைக்கும். கட்டாயத்துல எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டி இருக்காது “ என்று அர்ச்சனாவும் சொல்ல, “ ஆனா, நாங்க விலகி இருக்கும் போது எங்க பிரச்சனைய எப்படி சரி செய்வோம் “ என்று கேட்டாள் ரோஷினி.
“ நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே வாழ்க்கையில ஒன்னா இருக்க நெனச்சா அப்போ தூரம் ஒரு தடையா இருக்காது. நீங்க ஒன்னா இருக்கும் போது உங்களுக்கு புடிக்கத விஷயத்த செய்ய கட்டாயத்தால செய்ய வேண்டி இருக்கலாம். ஒருத்தர் இன்னொருத்தருக்காக விருப்பம் இல்லாம மாற வேண்டி வரலாம். உண்மையா அன்பு இருந்தா ஒருத்தர் எப்படி இருக்காங்களோ அவங்கள அப்படியே ஏத்துக்குற பக்குவம் இருக்கும். அப்படியும் இல்லனா உங்க முடிவ பத்தி நீங்க மறுபடியும் யோசிக்க இந்த இடைவெளி உங்களுக்கு உதவும் “ என்று கேஷவ் விளக்கினான்.
கேஷவின் வார்த்தைகளைக் கேட்ட மைரா சட்டென கேஷவைப் பார்த்தாள்.
“ க்ரிஷ் அவன் சொல்றத கேளு. நான் சொல்ல நெனச்சத தான் கேஷவ் சொல்லி இருக்கான் “ என்று மதன் கூறினார்.
“ சரி நான் கிளம்பறேன் ஆனா அடுத்த மூணு நாள் மட்டும் இருக்கட்டுமா ? “ என்று ரோஷினி கேட்க, “ இந்த மூணு நாள் உன் வாழ்க்கையில என்ன தாக்கத்த ஏற்படுத்தும்? “ என்று குழப்பத்தோடு கேட்டார் மதன்.
“ மாமா, மைராவோட பர்த்டே முடியுற வர நான் இங்கேயே இருந்து உங்க எல்லாரோடயும் கொண்டாடுறேன். நாம எல்லாரும் ஒரே வீட்ல வாழனும் அதனால நான் அவ கூட நட்பா இருக்க விரும்புறேன் “ என்று சொல்லி ரோஷினி புன்னகைத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு கேஷவும் மைராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கேஷவ் பல்லைக் கடித்துக் கொண்டிருக்க, அவளின் அன்பான, பணிவான வார்த்தைகளைக் கேட்டு மைரா அதிர்ச்சியடைந்தாள்.
மதனும் அர்ச்சனாவும் கேஷவையும் மைராவையும் மன்னிப்பு கேட்பது போல் பார்த்தனர். கேஷவ் தலையை ஆட்டி அவர்களை சம்மதிக்க சைகை செய்தான்.
“ நீ தங்கலாம் ரோஷினி “ என்று அர்ச்சனா சொன்னதும், “ ரொம்ப நன்றி அத்த. இந்த வருஷம் மைராவோட பிறந்தநாள மறக்க முடியாததா மாத்துவோம் “ என்று சொல்லி புன்னகைத்தாள்.
கேஷவ் மைராவின் கையைப் பிடித்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான். மைரா கட்டிலில் உட்கார்ந்து அவன் தோளைத் தொட்டாள்.
“ அவளோட நோக்கம் என்னனு நான் உறுதியா தெரிஞ்சிக்குற வரை அவகிட்ட இருந்து விலகி இரு அம்மு “ என்று கேஷவ் கூற, “ என்ன பார்த்துக்க நீங்க இருக்கும் போது நான் ஏன் கவலைப்படணும் “ என்றாள் மைரா.
கேஷவ் சிரித்தபடி அவள் முதுகை தடவி மார்போடு அணைத்துக் கொண்டான்.
“ க்ரிஷ் கிட்ட பேசுனீங்களா ? அவன் விருப்பத்தோட தான் இத செய்றானா ?” என்று மைரா மெல்ல அவனிடம் கேட்டாள்.
“ ஹ்ம்ம் பேசினேன். அவங்க முடிவு நெனச்சு நீ மனச போட்டு குழப்பிக்காத. உன் பிறந்த நாளுக்கு உன்ன சர்ப்ரைஸ் நான் நெனச்சேன் ஆனா அந்த பல்லி அத பத்தி வெளிப்படையா பேசி கெடுத்துட்டா. இப்ப சொல்லு உன் பிறந்த நாளுக்கு என்ன வேணும்? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ நீங்க ரொம்ப வருஷமா எனக்கு எதுவுமே பரிசா கொடுக்கல கெட்சப். சரியா சொல்லனும்னா, என்னோட 12 வது பிறந்தநாள் அப்புறம் நீங்க கொடுக்கல “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ அச்சச்சோ, அதுக்காக என்ன தண்டிக்காத அம்மு, இத்தன வருஷத்துக்கும் ஈடு செய்ற மாதிரி நான் ஒரு வழி யோசிக்குறேன் “ என்று கேஷவ் பதில் கூறினான்.
“ என்ன செய்வீங்க ?” என்று மைரா உடனே கேட்டதும், “ நான் இன்னும் அத பத்தி யோசிக்கல, ஆனா உனக்கு நிச்சயம் ஒரு சர்ப்ரைஸா இருக்கும் என் ஆச பொண்டாட்டி. இந்த வருஷம் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட முதல் பிறந்த நாள் அதனால நான் கொஞ்சம் ஸ்பெஷலா ஏதாவது செய்யணும் “ என்றான் கேஷவ். ஆனால் மைரா அவனிடம், “ எனக்கு எதுவும் வேண்டாம். நாள் முழுக்க என்னோட இருங்க கேஷவ், அது போதும் ப்ளீஸ் “ என்று சொன்னாள்.
“ குறிப்பிட்டு சொல்லி மைரா, நாள் முழுக்க உன்கூட வீட்ல இருக்கனுமா இல்ல படுக்கையில இருக்கனுமா ? “ என்று கேட்டு கண்ணடித்ததும், மைரா அவனை கிள்ள ஆரம்பித்தாள். கேஷவ் அவள் கைகளைப் பிடித்து அவளை கிச்சிகிச்சு செய்ய ஆரம்பித்தான். மைரா அவனது தலைமுடியை பிடித்து இழுக்க இருவரும் முத்தமிட தொடங்கினர்.
மைரா சமையலறைக்குள் நுழைந்து, புதிய பணிப்பெண் பாத்திரங்களைக் கழுவுவதையும், அர்ச்சனா சமைக்க தயாராக இருப்பதையும் பார்த்தாள். பணிப்பெண்ணுடன் அறிமுகமான மைரா அர்ச்சனாவுக்கு சமையலில் உதவத் தொடங்கினாள். ரோஷினி சமையலறைக்குள் நுழைந்த போது அவர்கள் அரட்டை அடிப்பதிலும் சமைப்பதிலும் மும்முரமாக இருந்தனர்.
“ நானும் உங்களுக்கு உதவட்டுமா அத்தை? “ என்று ரோஷினி கேட்டதும், “ கண்டிப்பா ரோஷினி. நீ பூண்டு உரிச்சிடு, மைரா வெங்காயத்தை வெட்டுவா “ என்று சொன்னார் அர்ச்சனா.
“ நீங்க கொடூரமான மாமியார், இப்போ என்ன அழ வைக்க பிளான் பண்றீங்களா ? உங்க பையன் கிட்ட சொல்றேன் இருங்க “ என்று மைரா சொல்ல, “ எனக்கு ரொம்ப பயமா இருக்கு மைரா. “ என்று அர்ச்சனா பயப்படுவது போல நடுங்கினார். அவர்கள் சிரித்தபடி சமையலைத் தொடர்ந்தனர். ரோஷினி அவர்களின் உரையாடலில் சேர முயற்சிப்பதைக் கண்டு மைரா கூட ஆச்சரியப்பட்டாள். ரோஷினி உணவு பரிமாறுவதைப் பார்த்து மதன் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
சாப்பிட வந்த கேஷவ் அப்படியே அறைக்குத் திரும்பினான். அவனுக்காக மேலும் சில நிமிடங்கள் காத்திருந்த மைரா அறைக்குத் சென்று அவன் பால்கனியில் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டாள்.
“ நீங்க இங்க இருக்கீங்களா? நீங்க சாப்பிட வருவீங்கன்னு நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று மைரா சொன்னதும், “ நாம அப்புறம் சேர்ந்து சாப்பிடலாம். நான் அவ இருக்க இடத்துல கூட இருக்க விரும்பல “ என்றான் கேஷவ்.
“ இது தவிர்க்க முடியாததுனு உங்களுக்குத் தெரியும் “ என்று மைரா சொல்ல, “ நாம முடிஞ்ச வர முயற்சி பண்ணுவோம், நான் ஒரு சமையல்காரர் ஏற்பாடு செய்றேன் அப்போ நீயும் அம்மாவும் கிட்சன்ல அவ கூட இருக்க வேண்டியதில்ல “ என்று கேஷவ் பதில் கூறினான்.
“ உங்க சிபிஐ மூளைய கொஞ்ச நேரம் தள்ளி வையுங்க. இது வீடு, அவள ஏதோ கிரிமினல் மாதிரி பார்க்காதீங்க கெட்சப். லவ் பண்றவங்க நடுவுல பிரச்சன வர்றது சகஜம் தான். அது ஒன்னும் புதுசு இல்ல “ என்று மைரா அவனிடம் சொன்னாள்.
“ இன்னைக்கு காலைல வரை நான் அவள அந்த கண்ணோட்டத்துல பார்த்ததில்ல, ஆனா இப்போ அப்படி இல்ல “ என்று சொன்ன கேஷவ், “ நாம அவள பத்தி அதிகம் பேசுறோம்னு நினைக்கிறேன், இது எனக்கு புடிக்கல அதனால நம்ம ரூம் உள்ள இனி அவள பத்தி எதுவும் பேச வேணாம் “ என்று சொல்லி முகம் சுளித்தான்.
மைரா சரி என்று முணுமுணுத்ததும், ரோஷினி தன் அறைக்குத் திரும்பி சென்ற பிறகு அவர்கள் இரவு உணவை சாப்பிட்டனர்.
பின்னிரவில் க்ரிஷின் அறைக் கதவைத் தட்டிய ரோஷினி, அவன் கதவைத் திறந்ததும் உள்ளே நுழைந்தாள்.
“ இப்ப என்ன பிளான் பண்ற ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ என் பிளான் எதுவா இருந்தாலும் அது உனக்கு தேவையில்லாத விஷயம். உன் அண்ணன் என்ன சொன்னாரு ? என்ன வேணாம்னு சொன்னாரா இல்ல என்ன பத்தி உன்ன எச்சரிக்க பண்ணாரா ? ரெண்டுமே எனக்கு கவலை இல்லாத விஷயம். உன் புத்திசாலி அண்ணன் கிட்ட இருந்து விலகி இரு “ என்று ரோஷினி அவனை எச்சரித்தாள்.
“ சத்தியமா சொல்றேன், இதையெல்லாம் செய்றதுக்கு நீ வருத்தப்படுவ “ என்று க்ரிஷ் அருவருப்புடன் கூறினான்.
ரோஷினி சிரித்தபடி அறையை விட்டு வெளியேறியதும், க்ரிஷ் படுக்கையில் உட்கார்ந்து ரோஷினி சமீபத்தில் செய்து வரும் நகர்வுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
“ நான் இல்லனாலும் அவ இங்கேயே இருக்க விரும்புறா, அவளோட முக்கிய இலக்கு மைராவும் அண்ணனும் தான். அந்த நாசக்காரி இங்க இருந்து போகலைனா என்ன செய்றது ? மைராவும் அண்ணனும் வீட்டை விட்டு போனா பிரச்சினை சரியாக வாய்ப்பு இருக்கு ஆனா அது எப்படி நடக்கும்? அவங்கள வீட்டை விட்டு வெளியே அனுப்ப நான் ஒரு வழிய கண்டுபிடிக்கனும், எப்படியாச்சும் நான் அத செய்வேன். அப்புறம் அந்த போட்டோ, வீடியோ எல்லாத்தையும் டெலீட் செய்ய அவளோட மொபைல், லேப்டாப் நான் எடுக்கணும். என் குடும்பத்துக்காக நான் இத செய்யனும். க்ரிஷ் உன்னால முடியும் “ என்று தனக்குதானே சொல்லிக்கொண்டு அமர்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவு கடிகாரம் 12 மணியை அடிக்க சில நிமிடங்கள் இருந்தது. கேஷவும், மைராவும் தங்கள் சொந்த உலகத்தில் தொலைந்து அவர்களின் முனகல்களால் அறையை நிரப்பினர். அவர்களின் காதல் தருணம் முடிந்ததும் கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ ஹேப்பி பர்த்டே அம்மு…. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைரா… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அழகான பொண்டாட்டி “ என்று கேஷவ் வாழ்த்தியதும் மைரா அவனை பதிலுக்கு முத்தமிட்டு மீண்டும் தங்கள் காதலை தொடர்ந்தாள்.
இரு வீட்டாரும் ஏதோ ஒரு நண்பரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள சாக்கு போக்கு சொல்லி, கேஷவையும், மைராவையும் அவர்களின் விருப்பப்படி பிறந்த நாளை கொண்டாட விட்டு சென்றனர். எல்லோரும் சென்றுவிட்டதை நினைத்து மைராவுக்கு வருத்தமாக இருந்தது, ஆனால் கேஷவ் அனைவரும் வேண்டுமென்றே அவர்களை தனியாக விட்டு சென்றார்கள் என்று தெளிவுபடுத்தியதும் அவளை நிம்மதியடையச் செய்தது. இப்போது அவர்கள் அதை மிகவும் நெருக்கமான முறையில் கொண்டாடுவதில் மும்முரமாக இருந்தனர்.
கேஷவ் படுக்கையிலிருந்து இறங்கி இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு அலமாரியைத் திறந்து அவளுக்காக வாங்கி வந்த பரிசை வெளியே எடுத்து அருகில் அமர்ந்து தங்கக் கொலுசுகளை அவள் கணுக்காலைச் சுற்றி அணிவித்தான்.
“ தங்கக் கொலுசுகளா? அட ஆண்டவா? ஏன் இவ்ளோ பணம் செலவு பண்றீங்க கெட்சப்? எனக்கு நீங்க மட்டும் தான் வேணும், வேற எதுவும் வேணாம் “ என்று மைரா கூறினாள்.
“ நான் உன்ன தனியா விடப்போறதில்ல அம்மு, இன்னைக்கு மட்டும் இல்ல, எப்பவும் விட மாட்டேன். நாம ஒன்னா இல்லாம போன எல்லா பிறந்தநாளுக்கும் சேர்த்து நாம கொண்டாடனும் சரியா? “ என்று கேஷவ் புன்னகையோடு கேட்டதும், “ என்ன செய்ய போறீங்க ? “ என்று கேட்டாள் மைரா.
“ அது சர்ப்ரைஸ், முடிஞ்சா கண்டுபுடி “ என்று சொல்லி அவள் கால்களை முத்தமிட்டு அவளை அனைத்துக் கொண்டான்.
காலையில் மைரா பாத்ரூமில் இருந்து ஒரு துண்டுடன் வெளியே வந்ததும், கேஷவ் அவளுக்கு ஒரு இளஞ்சிவப்பு பட்டு சேலையை பரிசளித்து தயாராக இருந்தான்.
“ சீக்கிரம் ரெடியாகு, ஒரு மணி நேரத்துல நாம கோவிலுக்கு போயிட்டு சாப்பிட வீட்டுக்கு திரும்ப வரணும் “ என்று கேஷவ் கூறினான்.
மைரா அவனுக்கு ஆடைகளை கொடுத்துவிட்டு வேகமாக தயாரானாள். அவர்கள் ஹாலை அடைந்த போது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்கு திரும்பி இருந்தனர். அவர்கள் மைராவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரோஷினி ஒரு ஜோடி தங்க ஜிமிக்கியை பரிசளித்தபோது மைரா அதிர்ச்சியடைந்தாள்.
கேஷவும், மைராவும் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு அவசரமாக வீடு திரும்பினர். அவர்கள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மைரா யாரோ அவளை அழைப்பதைக் கேட்டாள். வெளியே சென்று டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கையில் பெரிய மஞ்சள் ரோஜாக்களின் கொத்தை வைத்திருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
கேஷ்வ் அவரிடம் சென்று ரோஜாப்பூக்களை வாங்கி கண்ணடித்து மைராவுக்கு பரிசளித்தான்.
“ சர்ப்ரைஸ் நம்பர் ஒன்னு – என் அம்முவுக்கு 99 ரோஜாக்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் “ என்று சொல்லி கேஷவ் கொடுத்ததும், மைரா பூக்களைக் கையில் ஏந்தி அவனை அணைத்துக் கொண்டாள். பூக்களை தன் அறையில் வைத்துவிட்டு குடும்பத்துடன் சேர திரும்பினாள்.
அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்தனர். அப்போது மீண்டும் அவள் பெயர் அழைக்கப்படுவதை கேட்டு மைரா வெளியே சென்றபோது, அதே டெலிவரி செய்யும் நபர் கையில் ஒரு பெரிய டெடி பியரை வைத்திருப்பதைக் கண்டாள்.
கேஷவ் அவள் பின்னால் நின்று, “ சர்ப்ரைஸ் நம்பர் ரெண்டு “ என்று சொல்லி அதை அவளிடம் கொடுத்தான்.
மைரா புன்னகையுடன் அவனிடமிருந்து பரிசைப் பெற்றுக்கொண்டு அந்த பொம்மையை அனைத்துக் கொண்டதும் கேஷவ் முகம் சுளித்து அதை அவள் பிடியில் இருந்து அகற்றி அவளுக்கு அருகில் அமர்ந்தான்.
“ ஏன் இவ்ளோ பொறாமை புருஷா ? “ என்று அவள் கேட்க, “ அது என் இடம், நான் பரிஸா கொடுத்த பொம்மையா இருந்தாலும் அந்த இடத்த யாருக்கும் கொடுக்க மாட்டேன் “ என்றான் கேஷவ்.
அவன் வார்த்தையை கேட்டு மைரா சிரித்தாள், அவர்கள் டிவி பார்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது, ஒரு குழு நடனமாடியபடி வீட்டிற்குள் நுழைந்தது. அவர்கள் வைத்திருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரில் இருந்து ஒரு இசை ஒலிக்க ஆரம்பித்தது. மைரா கேஷவின் கையை ஆச்சர்யத்துடன் பிடித்துக் கொண்டாள்.
அந்த குழுவைச் சேர்ந்த ஒரு பெண் முன்னால் வந்து மைராவின் தலையில் ஒரு மலர் கிரீடத்தை வைத்தார், மற்றொரு ஆன் ஒரு கேக்கை மேஜை மேல் வைத்தான். கேஷவ் மைராவை இழுக்க, இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டினார்கள். கேஷவ் அந்த குழுவினருக்கு நன்றி கூறியதும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
“ கெட்சப், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஆனா தயவு செஞ்சு சர்ப்ரைஸ் எல்லாம் போது. நீங்க ஏற்கனவே நிறைய கொடுத்துட்டீங்க “ என்று மைரா சொல்ல, “ இல்ல அம்மு, நான் முடிவு பண்ணிட்டேன், இன்னைக்கு நான் கொடுக்க போற சர்ப்ரைஸ் எல்லாத்தையும் நீ பொருத்தக்கனும் “ என்றான் கேஷவ்.
“ கொஞ்சம் ரெஸ்ட் எடு மைரா. இப்ப போய் துணிகள மொட்டை மாடியில காய போடு “ என்று அர்ச்சனா சொன்னதும், மைரா வேலையை செய்ய கிளம்பினாள்.
கேஷவ் தன் அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டு யாரையோ அழைத்து தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். மைரா பார்ப்பதற்குள் வெளியே வந்து அந்த மனிதனையும் வெளியே அனுப்பிவிட்டான். மைரா ஹாலுக்குத் திரும்பி வந்து உட்கார எத்தனிக்கையில் கேஷவ் அவளைத் தடுத்து, “ போய் டிரஸ் மாத்திட்டு வா அம்மு. ரொம்ப நேரமா பட்டுப்புடவையில இருக்க உனக்கு கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும் “ என்று கூறினான்.
மைரா சரி என்று சொல்லிவிட்டு செல்ல, கேஷவ் அவளை பின்தொடர்ந்தான். அவள் கதவை திறந்ததும், கேஷவ் அவளை உள்ளே தள்ளி உடனடியாக கதவை பூட்டினான். அறையில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகளைப் பார்த்து மைரா உற்சாகத்தில் அலறத் தொடங்கினாள்.
அவள் கேஷவின் மேல் குதித்து அவனை அனைத்துக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ உன் 7வது பிறந்த நாளுக்கு நான் உனக்கு இதே மாதிரி பட்டாம்பூச்சி பரிஸா கொடுத்த அப்போவும் நீ இப்படித் தான் பண்ண “ என்று சொல்லி பல ஆண்டுகளுக்கு முன் அன்றைய தினம் அவன் எடுத்த போட்டோவை சுவரில் மாட்டி இருந்ததை காட்ட அவள் முகத்தை திருப்பினான். அவள் தலையில் இருந்த ஹேர்பேண்டில் ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்த போது எடுக்கப்பட்ட போட்டோவில் மைரா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ இந்த போட்டோவ நீங்க டெலிட் பண்ணலையா? ஆனா எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. அப்போ எனக்கு முன் பல்லு ஒன்னு இல்லாம இருந்துச்சு “ என்று மைரா கூறினாள்.
“ அந்த பல் இல்லாம கூட நீ அழகா இருந்த ஆனா உனக்கு தான் அது புடிக்கல அதனால டெலீட் பண்ண சொன்ன ஆனா நான் செய்யல. இப்போ பல் இருக்க மாதிரி ரெடி பண்ணிட்டேன் “ என்று கேஷவ் அந்த போட்டோவை பாரத்து கூறினான்.
“ ரொம்ப அழகா இருக்கு கேஷவ் “ என்று மைரா சொன்னதும், “ நம்ம குட்டி லயா இப்படி தான் இருப்பா “ என்று கேஷவ் மெல்ல கூறினான்.
மைரா கையை நீட்ட, சில பட்டாம்பூச்சிகள் அவள் கைகளில் அமர்ந்தன. கேஷவ் அவளது புகைப்படத்தை கிளிக் செய்தான், பின்னர் அவர்கள் பால்கனியின் கதவைத் திறந்து அவற்றை விடுவித்தனர்.
*********************************
முன்னோட்டம்:
“ இந்த இடம் உனக்கும், உன்னோட தோழி நைனாவுக்கும் சொந்தம் மைரா. சொந்தமா மியூசிக் அகாடமி தொடங்குறது உங்க கனவுனு எனக்குத் தெரியும், இப்போ நீங்க வேலை செய்ற அகாடமியில இருக்க ஸ்டுடென்ட்ஸ் பத்தி கவலைப்பட வேணாம் “

1 comment
[…] 57.ஹேப்பி பர்த்டே அம்மு […]