ஆர்யன் வெளியே சென்றதும், கதவு பூட்டும் மெல்லிய க்ளிக் சத்தமும், அவனது காலடி ஓசை அவள் காதில் கேட்பது நின்ற பிறகும் சஞ்சனா மெல்ல கண்களைத் திறந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவள் எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்து கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க ஆர்யன் ? நான் என்ன பண்ணேன் உங்கள ? “என்று விரக்தியால் கனத்த குரலில் கிசுகிசுத்தாள். தன் வாழ்க்கையை நினைத்து அவள் விம்மி விம்மி அழுத போது அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது, பின் இரவு வரை விழித்திருந்தவள், அவளுடைய உடைந்த இதயத்தை சோர்வு ஆக்கிரமித்ததும் அவள் தன்னை அறியாமல் தூங்கினாள்.
தனது அறையின் பால்கனியில் நின்று கொண்டு முதல் மாடியில் மங்கலான வெளிச்சத்தில் இருந்த சஞ்சனாவின் ஜன்னலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன். அவனது வாழ்க்கையிலும், சஞ்சனாவின் வாழ்க்கையிலும் நடக்கும் உணர்வுப் போராட்டங்களால் ஏற்கனவே போராடிக் கொண்டிருந்தவனின் மனம் தற்போது அவளுக்கு அவன் கொடுத்த வலியை நினைத்து ஒரு உணர்ச்சிப் புயலில் சிக்கி தவிப்பது போல அவன் மனம் கனத்தது. தனக்குள் இருக்கும் விரக்தியில் அவனது தாடை இறுகியது.
“ நான் பண்ணது பெரிய தப்பு, நான் அவள ரொம்ப காயப்படுத்திவிட்டேன், நான் பண்ணது கொஞ்சம் கூட சரி இல்ல, அவள பாதுக்காக்க வேண்டிய நானே அவள இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டேன், என்ன நெனச்சா எனக்கே அசிங்கமா இருக்கு “ என்று சொல்லி விரக்தியில் அருகில் இருந்து சுவரில் ஓங்கி அடித்த ஆர்யன் மீண்டும் சஞ்சுவின் அறை ஜன்னலை பார்த்து, “ ஆனா என்னால உன்ன தனியா கஷ்டப்பட விட முடியாது. நான் பண்ண தப்ப நானே சரி செய்றேன். நீ எப்படி ரியாக்ட் பண்ணாலும் அத ஏத்துக்க நான் தயாரா இருக்கேன் “ என்று கூறினான்.
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்து, கடைசியில் அவள் அறையை விட்டு பார்வையை விலக்கி கொண்டு படுக்கைக்குச் சென்றான்.
மறுநாள் காலை, வழக்கம் போல ஆபீஸ் செல்வதற்காக கோட் சூட் அணிந்து ஆர்யன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான், ஆனால் அவன் கண்கள் அவ்வப்போது படிக்கட்டுகளை பார்த்துக் கொண்டே இருந்தன. அவன் அமைதியாக சஞ்சுவிற்காக காத்திருந்தான். அலுவலகம் செல்லும் முன் அவளை பார்பதற்காக, கையில் இருந்த ரொலெக்ஸ் வாட்சில் நேரத்தை பார்த்துக் கொண்டே அவளுக்காக நீண்ட நேரம் காத்திருந்தான் ஆனால் சஞ்சனா வரவில்லை.
ஆர்யன் நீண்ட நேரமாக காத்திருப்பதை பார்த்த கௌசல்யா தயங்கித் தயங்கி அவன் முன்னால் சென்று, “சார், நான் உங்களுக்கு ப்ரேக்பாஸ்ட் பரிமாறட்டுமா ? ” என்று கேட்டார்.
பதற்றத்தில் இருந்த ஆர்யன், விரல்களால் மேஜையின் மீது தாளம் தட்டிக் கொண்டே, “ சஞ்சனா எங்க இருக்கா ? காலைல ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வர்றாளா ? “ என்று கேட்டான்.
“ காலைல இருந்து நான் இன்னும் அவள பார்க்கல சார். இப்போவே போய் அவள கூப்பிடறேன் சார்.”, என்று சொல்லிவிட்டு சஞ்சனாவின் அறைக்குச் சென்ற கௌசல்யா, அவள் யோசனையில் ஆழ்ந்தபடி ஜன்னல் அருகே நிற்பதைக் கண்டார்.
“சஞ்சனா சார் உனக்காக டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணிட்டு இருக்காரு. ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு மா, தயவு செஞ்சு சீக்கிரம் கீழ வா “ என்று கௌசல்யா கூறினார் ஆனால் சஞ்சனா அவரை திரும்பி பார்க்காமல், “அவர் இன்னும் ஆபீஸ் கிளம்பலையா மா ?” என்று கேட்டாள்.
” இல்ல சஞ்சு “, என்று மெல்லிய குரலில் சொன்ன கௌசல்யா, சஞ்சனா நின்ற இடத்தில் இருந்து நகராமல் இருப்பதை பார்த்து, ” அவர் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காரு சஞ்சு “, என்று மீண்டும் கூறினார்.
சஞ்சனா ஆழமாக மூச்சை இழுத்து பின்னர் கௌசல்யாவை பார்த்தாள். “சரி மா, நீங்க முன்னாடி போங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன் “, என்று கூறினாள்.
கௌசல்யா அந்த அறையை விட்டு சென்றதும், சஞ்சனா முஷ்டியை மடக்கிக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள். “ அவரே எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம என்ன சந்திக்க தைரியமா இருக்கும் போது, நான் மட்டும் ஏன் இப்படி மறைஞ்சி இருக்கணும் ? இப்போ அவர் என்ன தான் செய்ய போறாருன்னு நானும் பாக்குறேன் “ என்று தன் பிம்பத்தை பார்த்து சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
காலடி ஓசை கேட்டு படிகளை பார்த்த ஆர்யன், சஞ்சனா மெல்ல இறங்கி வருவதை பார்த்தான். டைனிங் ஹாலுக்குள் நுழைந்த சஞ்சு ஆர்யனை பார்க்காமல் வேண்டுமென்றே அவனிடன் இருந்து வெகு தூரத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்தாள். ஆர்யன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் தலையை நிமிர்த்தவில்லை, அவளுடைய விரல்கள் டேபிள் மேல் இருந்த நாப்கினின் முனையில் விளையாடிக் கொண்டிருந்தன.
கௌசல்யா அவர்கள் இருவருக்கும் காலை உணவை பரிமாறினார், சஞ்சனா தன்னை ஒரு முறை பார்ப்பாள் என்ற நம்பிக்கையில். ஆர்யன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான் ஆனால் அவள் தீர்மானமாக அவனை புறக்கணித்தாள்.
இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, பேச முயற்சிக்கவும் இல்லை ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த அந்த மௌனம் இருவருக்கு மூச்சுத் திணற வைத்தது.
அறையில் இருந்த நிசப்தம் அவர்களின் மனதை வாட்ட ஆரம்பிக்க, சஞ்சனா சாப்பிடாமல் தட்டை தள்ளிவிட்டு தோட்டத்திற்கு கிளம்பினாள். அந்த மேன்ஷனில் இருந்த மிகப் பெரிய தோட்டத்தின் பரந்த பசுமை அவளுக்கு ஒரு விசித்திரமான ஆறுதலை அளித்தது. வழக்கம் போல அங்கு வந்த பறவைகளுக்கு அவள் ஒரு கைப்பிடி தானியங்களை எடுத்து தரையில் தூவினாள். அந்த பறவைகள் அதை சாப்பிட்ட பின் மகிழ்ச்சியுடன் சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து தனது மனதில் இருந்த துயரத்தை மறந்து சிரித்தாள்.
ஆர்யன் அலுவலகம் செல்ல வெளியே வந்தான் ஆனால் அவன் காரில் ஏறுவதற்கு முன் அவனது பார்வை அவள் மீது விழுந்ததும் அவன் கால்கள் அவ்விடத்தை விட்டு நகர மறுத்தது. பொன்னிற காலை ஒளி அவள் முகத்தை முத்தமிட்டு, அவளின் தெய்வீகமான, கள்ளம்கபடம் இல்லாத அழகை காட்டியது. காலை நேர தென்றலில் அவளது கூந்தல் சுதந்திரமாக அலைபாந்தது. சில இழைகள் அவள் முகத்தில் அசைவதை பார்த்து அவன் உறைந்து போய் நின்றான். அவளின் அந்த அமைதியான தோற்றத்தை பார்த்து, அந்த அமைதியை குலைத்தவன் என்ற வேதனையில் தவித்தான்.
ஆர்யனின் PA ரஞ்சித் அவனது பார்வை சஞ்சுவின் மேல் மட்டுமே இருப்பதை கவனித்து தன் தொண்டையை கனைத்து அவனது கவனத்தை ஈர்த்தான். ” சார், அவங்க தினமும் இத செய்வாங்க. அவங்களுக்கு அந்த பறவைகள் எல்லாம் friends மாதிரி. மேடம் தினமும் சாப்பிட எதாவது போடுவாங்கன்னு நல்லா தெரிஞ்சு அந்த பறவைகள் தினமும் காலையில தோட்டத்துக்கு வரும் “ என்று கூறினான்.
ரஞ்சித் சொன்னதை கேட்டு மெல்ல தலை அசைத்த ஆர்யன் தனது பார்வையே விலக்கி கொண்டு காரில் ஏறினான்.
தனது கார்ப்பரேட் சாம்ராஜ்யமான ARC டவர்ஸில், ஆர்யன் அவன் மட்டுமே பயப்படுத்தும் லிஃப்டைப் பயன்படுத்தி தனது அறைக்கு சென்றான். தோட்டத்தில் பார்த்த சஞ்சுவின் முகம் அவன் மனதில் பதிந்திருக்க அவன் தன் இருக்கையில் அமர்ந்து வேலையை செய்ய மேஜை மேல் இருந்த லேப்டாப்பை திறந்தான் ஆனால் அவனுடைய மனம் எந்த வேலையிலும் கவனம் செலுத்த மறுத்தது. சஞ்சனா பறவைகளுக்கு உணவளித்த காட்சி நினைத்து அவனது எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன.
அவள் எண்ணங்களில் இருந்து மீள முடியாது என்பதை உணர்ந்து வேலை செய்வதை விட்டு தனது மொபைலை எடுத்து ரஞ்சித்துக்கு ஒரு முக்கிய வேலையை செய்ய சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ இதுக்கு அப்புறம் அவ இயல்பு நிலைக்கு திரும்புவானு நான் நம்புறேன் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் நினைவில் அமர்ந்திருந்தான் அப்போது கதவு தட்டப்படும் ஓசை அவன் எண்ண அலைகளை நிறுத்தியது.
தனது டையை சரி செய்து கொண்டு, ” COME IN ” என்று சொல்லி வெளியே காத்திருந்த நபரை உள்ளே அழைத்தான்.
மானசி விரிந்த புன்னகையுடன் உள்ளே நுழைந்து, “குட் மார்னிங் சார்.” என்று கூறினாள்.
” மார்னிங், என்ன விஷயம் ? ” என்றான் கேட்டான் ஆர்யன் நிமிர்ந்து கூட பார்க்காமல். “சார், நீங்க நல்லா இருக்கீங்களா ?”, என்று மானசி தயங்கிக் கொண்டே அவனிடம் கேட்டாள்.
” என்ன கேட்டீங்க ? “, என்று சொல்லி ஆர்யன் முகம் சுளித்ததும், “ நேத்து நீங்க பார்க்க ஒரு மாதிரி, அதாவது உடம்புக்கு முடியாத மாதிரி இருந்தீங்க அதனால நீங்க இப்போ எப்படி இருக்கீங்கனு கேட்க வந்தேன் “ என்று சொன்ன மானசி, “ நான் உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா ? “ என்று அவனிடம் கேட்டாள்.
ஆர்யனின் எரிச்சலில் பற்களை கடித்து முஷ்டியை மடக்கினான். “ மிஸ் மானசி, இந்த ஆபீஸ்ல நீங்க என்ன வேலை செய்றீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நம்புறேன் “, என்று ஆர்யனின் குரல் கடுமையாக வர, “ தெரியும் சார் “ என்று உடனே நிமிந்து நின்று சொன்னவள், “ உங்கள பார்க்க “ என்று அவள் மீண்டும் ஆரம்பித்தாள் ஆனால், “ வேற வேலை இருக்கா இப்போ ? “, என்று ஆர்யன் கேட்டதும், “ இல்ல சார் “ என்று மெல்லிய குரலில் சொல்லி தலை குனிந்து நின்றாள்.
” நீங்க கிளம்பலாம் “, என்று ஆர்யன் உத்தரவு போடுவது போல சொன்னதை கேட்ட மானசி எரிச்சலான முகபாவத்துடன் அவன் அறையை விட்டு வெளியேறினாள். ஆர்யன் அவளை அப்படி நடத்துவது அது முதல் முறை அல்ல. அவனது கவனத்தை ஈர்க்க மானசி எண்ணற்ற முறை முயற்சி செய்து விட்டாள், ஆனால் ஆர்யன் ஒரு முறை கூட அவள் விரும்பிய விதத்தில் அவளைப் பார்த்தது இல்லை. தன் அழகின் மேல் பேரும் நம்பிக்கை கொண்டிருந்தாள் மானசி , ஆனால் ஆர்யனின் கண்கள் சஞ்சு ஒருத்தியை மட்டுமே பார்க்க ஏங்கின, அவளை தவிர மற்ற அனைவருக்கும் அவன் கண்கள் குருடாக இருந்தன.
ஆர்யனின் மேன்ஷனில், சஞ்சனா லிவிங் அறையில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் விரல்கள் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தன, ஆனால் அவள் மனம் வேறெங்கோ இருந்தது. தனது எண்ணத்தில் தொலைந்து அமர்ந்திருந்த சஞ்சுவை பார்த்து ரஞ்சித் சிறு புன்னகையுடன் அவளை நெருங்கி, “ மேடம்.”, என்று அழைத்தான்.
திடீரென்று ஒரு குரலை கேட்டு சஞ்சனா நிமிர்ந்து ரஞ்சித் அருகில் நிற்பதை பார்த்தாள். ” ப்ளீஸ், என்னை மேடம்னு கூப்பிடாதீங்க. என்ன பெயர் சொல்லியே கூப்பிடுங்க “, என்று சஞ்சு சொன்னதும், “ ஆனா, நான் எப்படி உங்கள பெயர் சொல்லி கூப்பிடுவேன் ? “ என்று ரஞ்சித் தயங்கினான்.
” இதுல என்ன இருக்கு, நான் உங்கள விட வயசுல சின்னவ தான். நீங்க என்ன உங்க தங்கச்சி மாதிரி நெனச்சு பெயர் சொல்லி கூப்பிடுங்க, அப்புறம் இந்த நீங்க, வாங்க எல்லாம் வேணாம் “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட ரஞ்சித்தின் முகத்தில் ஒரு உண்மையான புன்னகை மலர்ந்தது. ” சரி சஞ்சு “ என்று சொன்ன ரஞ்சித், “ சார் உனக்காக ஒன்னு அனுப்பி இருக்காரு. தோட்டத்துக்கு வந்து பாரு “ என்று சொல்லி அவளை அழைத்தான்.
தன் புருவத்தை சுருக்கி, ” என்ன அனுப்பி இருக்காரு ? ” என்று சந்தேகத்துடன் கேட்டாள் சஞ்சு.
” அத நீயே வந்து பாரு “, என்று ரஞ்சித் புன்னகையுடன் சொல்லி வெளியே சென்றான். ஆர்வத்துடன் அவள் அவனைப் பின்தொடர்ந்து வெளியே தோட்டத்திற்கு சென்றாள். அங்கு பல கூண்டுகளில் பல வண்ணங்களில் ஏராளமான பறவைகளைக் கண்டதும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவள் உதடுகள் கசப்பான புன்னகையில் வளைந்தன. ” ஒரு உயிர கூண்டுல அடைச்சு வெச்சு பாக்குறதுல உங்க ஐயாவுக்கு எப்பவுமே சந்தோஷம் தானா ?” என்று சஞ்சு கேட்டதும் ரஞ்சித் சிரிக்க ஆரம்பித்தான்.
“ இப்போ எதுக்கு சிரிக்குறீங்க ? “ என்று சஞ்சு கேட்க, “ நீ இந்த கேள்வி கேட்பனு சார் சொன்னாரு சஞ்சு “, என்று ரஞ்சித் கூறினான். அவன் பதிலை கேட்டு ஆச்சரியமடைந்த சஞ்சு, கண் சிமிட்டினாள். ” என்ன சொல்றீங்க ?”, என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.
“ ஆமா, நீ இந்த கேள்வி கேட்பனு அவர் சொன்னாரு அதோட உன்னோட கேள்விக்கு பதில் கூட சொல்லி இருக்காரு “ என்று ரஞ்சித் சொன்னதை கேட்ட சஞ்சு, “ அது என்ன பதில் ? “ என்று ஆரவத்துடன் கேட்டாள்.
” சுதந்திரமா இருக்கும் போது எல்லா பறவையும் பாதுக்காப்பா இருக்குறது இல்ல. சில நேரம் அழகான, அப்பாவியான சில பறவைங்க பாதுக்காப்பா இருக்க கூண்டுல அடைச்சு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுது, அந்த பறவைக்கு வேணும்னா அது புரியாம இருக்கலாம் ஆனா அதை அடைச்சு வைக்குற ஆளுக்கு தான் அந்த பறவைக்கு அந்த கூண்டு எவ்ளோ முக்கியம்னு தெரியும்னு சொன்னாரு சஞ்சு “ என்று ரஞ்சித் சொன்னதும் சஞ்சனா ஒரு சின்ன சோகச் சிரிப்பை உதிர்த்தாள். ” என்ன ஒரு கவித்துவமான நியாயம் சொல்லி இருக்காரு சார் “, என்று கூறினாள்.
ரஞ்சித் பெருமூச்சு விட்டான். “சஞ்சனா, ஆர்யன் சார் நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்ல. நான் பல வருஷமா அவர் கூட இருக்கேன். அவரோட உண்மையான குணத்த நீ சரியான நேரத்துல பார்க்க தான் போற. அவர தப்பா நினைக்காத, உனக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கு ஆனா அத என்னால சொல்ல முடியாது “ என்று ரஞ்சித் சொன்னதை கேட்ட சஞ்சு புருவத்தை உயர்த்தினாள். ” நீங்க உங்க சார எப்படி விடுக்கொடுப்பீங்க ? அவர பத்தி உயர்வா பேசுறத கேட்குறதுல எனக்கு ஒன்னும் ஆச்சரியம் இல்ல “ என்று கூறினாள்.
” உன்ன என் தங்கச்சியா நெனச்சுக்க நீ தான் சொன்னேன் அப்போ உன்னோட அண்ணனா, சத்தியமா சொல்றேன், ஒரு நாளும் நான் உன்ன ஏமாத்த மாட்டேன், உன்கிட்ட பொய் சொல்லவும் மாட்டேன், நீயும் இத ஒரு நாள் புரிஞ்சிக்குவ “ என்று ரஞ்சித் கூறினான்.
சஞ்சனா பதில் பேசாமல் வேறு பக்கம் பார்த்தாள், அவள் விரல்கள் பறவைக் கூண்டை லேசாக தொட்டு அதன் உள்ளே இருந்த பறவைகளை அவள் பார்த்தாள். மீண்டும் அவனை நோக்கி தன் கவனத்தை திருப்பியவள், “ அந்த நாள் வரும்னு நீங்க உண்மையா நம்புறீங்களா அண்ணா ?”, என்று சஞ்சு கேட்டதும், “ நிச்சயம் வரும்னு நான் நம்புறேன் “ என்று சொல்லிவிட்டு ரஞ்சித் அங்கிருந்து புறப்பட்டான்.
பறவைகளை நோக்கி மீண்டும் திரும்பியவள் பெருமூச்சு விட்டாள். “ அவர் இப்போ என்ன விளையாட்ட ஆரம்பிச்சு இருக்குறாரு ? “ என்று மனதில் நினைத்தாள் ஆனாலும், அந்த பறவைகளைப் பார்க்கும் போது, ஒரு விசித்திரமான அரவணைப்பு, ஆறுதல் அவள் இதயத்தில் குடியேறியது.
மேன்ஷனில் இருந்து கிளம்பிய ரஞ்சித் மீண்டும் அலுவலகத்தை அடைந்து ஆர்யனின் அறைக்குள் நுழைந்தான்.
” நீங்க சொன்ன மாதிரியே எல்லாம் பண்ணியாச்சு சார் “, என்று ரஞ்சித் சொன்னதை கேட்டதும் ஆர்யன் தனது இருக்கையில் பின்னால் சாய்ந்தான், அவன் உதடுகளில் ஒரு சிறிய புன்னகை விளையாடியது.
” சார், அவங்க அந்த கேள்விய கேட்பாங்கனு உங்களுக்கு எப்படித் தெரியும் ?” என்று ரஞ்சித் தயங்கியபடி கேட்டான் ஆனால் ஆர்யன் அவனுக்கு பதில் சொல்லாமல் வெறுமனே சிரித்தான். ” வேலையில் கவனம் செலுத்துவோம் ” என்று ஆர்யன் சொல்ல, ரஞ்சித் அதற்கு மேல் அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. அதற்கு பதில், “ ஆமா சார். நாலு மணிக்கு மார்க்கெட்டிங் ஹெட் கூட உங்களுக்கு மீட்டிங் இருக்கு.” என்று நினைவுப்படுத்தினான்.
” சரி ரஞ்சித் “, என்று ஆர்யன் தலை ஆட்டினான். ” சார் உங்களுக்கு லஞ்ச ஏற்பாடு செய்யட்டுமா ? “, என்று ரஞ்சித் கேட்டதும் யோசித்த ஆர்யன், “ ஹ்ம்ம், செய் ரஞ்சித், நான் கொஞ்ச நேரத்துல வறேன்.” என்று கூறினான்.
ரஞ்சித் சென்ற பிறகு, ஆர்யன் தனது மேன்ஷனுக்கு போன் செய்தான். மேன்ஷனின் பொறுப்பாளர் பாலா அவன் அழைப்புக்கு பதிலளித்தான்.
“ஆர்யன் பேசுறேன், கௌசல்யா அம்மாவ பேச சொல்லு ” என்று ஆர்யன் சொன்னதும் சில நொடியில் கௌசல்யா பேசினார். “சார், நான் கௌசல்யா பேசுறேன் , சொல்லுங்க சார் ” என்றார்.
” சஞ்சனா சாப்பிட்டாளா? “, என்று ஆர்யன் கேட்க, கௌசல்யா தயங்கித் தயங்கி, ” இன்னும் இல்லை சார்” , என்று முணுமுணுத்தார்.
தனது வாட்சில் நேரத்தை பார்த்த ஆர்யன், ” ஏன் இன்னும் சாப்பிடல ? ” , என்று அவள் நன்றாக இருக்கிறாளா என்று அறிய ஆர்யன் ஆர்வத்துடன் கேட்டான்.
“நான் சாப்பிட கூப்பிட்டேன் சார் ஆனா அவளுக்குப் பசிக்கலனு சொன்னா.”, என்று கௌசல்யா தயக்கத்துடன் பதிலளித்தார்.
” அவ சாப்பிட்டு முடிச்சதும் எனக்கு போன் பண்ணுங்க” என்று சொல்லி ஆர்யன் அழைப்பை துண்டித்தான்.
பின்னர், கௌசல்யா சஞ்சனாவின் அறைக்கு சென்று, ” சஞ்சு, நீ சாப்பிடியானு கேட்டு சார் இப்போ தான் போன் பண்ணாரு “ என்று கௌசல்யா சொன்னதை கேட்ட சஞ்சனா திகைத்துப் போனாள். “என்ன சொல்றீங்க ? ” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
” ஆமா சஞ்சு, நீ சாப்பிட்டு முடிச்சதும் அவருக்கு போன் பண்ணி சொல்ல சொல்லி இருக்காரு “ என்று கௌசல்யா பெருமூச்சுடன் சொல்லிவிட்டு சஞ்சனாவுக்காக தட்டை நீட்டினார்.
சஞ்சு அவரை குழப்பத்துடன் பார்த்தாள். ” இப்ப எதுக்கு அவர் இப்படி பண்றாரு ?” என்று அவள் கேட்க, “ எனக்கு தெரியல மா “ என்று சொல்லி கௌசல்யா அவளைப் பார்த்து தோள்களைக் குலுக்கினார். அதே சமயம், “ அவர் இப்படியெல்லாம் செய்ற ஆளே இல்ல அதனால எனக்கும் ரொம்ப ஆச்சரியமா தன இருக்கு ” என்று சொல்லி கௌசல்யா சஞ்சனாவுக்கு உணவு பரிமாறினார்.
************************************
முன்னோட்டம்:
” உன்னால சாப்பிட முடியும்னு எனக்கும் தெரியும், ஆனா இப்போ நான் ஊட்டி விடுறேன், என் கையால சாப்பிடு “

1 comment
[…] Chapter 3 […]