Home FamilyChapter 10

Chapter 10

by Siragugal Novels
23 views

அடுத்த நாள் காலை, டேனியல் அவன் போட்ட  திட்டத்தை நிறைவேற்றினான். தெரியாத ஒரு எண்ணில் இருந்து, அலுவலகத்தில் பெரும்பான்யான ஊழியர்கள் இருந்த  வாட்ஸ்அப் குரூப் மூலமும் மற்றும் இமெயில் மூலமும் அனைத்து ஊழியர்களுக்கும்  புகைப்படங்களை கசியவிட்டான். அவனது பாதுகாப்பை உறுதி செய்ய, மானசியின் பெயரில் சிம் கார்டை வாங்கி அதை பயப்படுத்தி தனது திட்டத்தை நிறைவேற்றினான். அந்த போட்டோ பரவியதால், கிசுகிசுக்களின் அலை அலுவலகம் முழுவதும் பரவியது.

தன்னைச் சுற்றி வீசும் புயலைப் பற்றி அறியாமல் சஞ்சனா வழக்கம் போல அலுவலகம் வந்தடைந்தாள். ஆபீஸ் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த ஊழியர்களின் நீடித்த முறைப்புகளையும், அவளை பார்த்தபடி அவர்கள் கிசுகிசுப்புதையும் சஞ்சு கவனித்தாள். என்னவென்று புரியாமல் குழப்பமடைந்த போதிலும் அவற்றைப் புறக்கணிக்க தீர்மானித்து அவள் தனது அறைக்கு சென்றாள். அவள் இருக்கையில் அமர்ந்ததும் அவளுடைய மொபைல் ஒலிக்க தொடங்கியது. கைப்பையில் இருந்து அதை எடுத்தவள் திரையில் பவியின் பெயர் பளிச்சிட்டதைப் பார்த்து அதற்கு பதில் அளித்து, “ ஹலோ பவி, என்ன காலையிலேயே போன் பண்ணி இருக்க ” என்று கேட்டாள்.

” சஞ்சனா, நீ எங்க இருக்க ? ” என்று கேட்ட பவியின் குரலில் ஏதோ அவசரம் இருப்பதை உணர்ந்த சஞ்சு, “ ஆபீஸ்ல தான் இருக்கேன் பவி .. ஆனா ஏதோ ஒன்னு வித்தியாசமா இருக்கு, எல்லாரும்  என்ன ஒரு மாதிரி  விசித்திரமாகப் பார்க்குறாங்க “, என்று பதில் சொன்னாள்.

” சஞ்சனா,” எனத் தயங்கியா பவித்ரா, “ நீயும், டேனியலும் ஒன்னா இருக்க போட்டோ ஆபீஸ்ல இருக்க எல்லாருக்கும் வாட்ஸ்அப் அப்புறம் இமெயில் மூலமா வந்துருக்கு. எல்லாரும் அத பத்தி தான் பேசிட்டு இருக்காங்க “ என்று ஒருவழியாக சஞ்சுவிடம் கூறினாள்.    

“என்ன சொல்ற பாவி ?” என்று கேட்ட சஞ்சனாவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

” உன் மொபைல் இல்ல இ மெயில் பாரு சஞ்சு “ என்று பவி வற்புறுத்தியதும், “ சரி, நான் உடனே பார்க்குறேன் “, என்று சொல்லி சஞ்சனா நடுங்கும் விரல்களுடன் அழைப்பை துண்டித்து விட்டு வாட்ஸ்அப்பைத் திறந்தாள். அதில் இருந்த போட்டோவை பார்த்ததும் அவளுக்கு மூச்சு வாங்கியது. அவளும், டேனியலும் இருந்த அந்த  புகைப்படம், இருவரும் முத்தமிடுவது போல பொய்யாக சித்தரிக்கும் கோணத்தில் எடுக்கப்பட்டிருந்தது. அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி, அவளைச் சுற்றியிருந்த அனைத்தும் அவள் பார்வையில் இருந்து மங்கிப்போனது. அவள்  ஏமாற்றப்பட்டதாக, அவமானப்பட்டதாக உணர்ந்து உடைந்து போனாள்.

இதற்கிடையில் ஆர்யனும் அந்த போட்டோவை பார்த்து விட்டு  அலுவலகத்துக்குள் புயலாக நுழைந்தான், அவனுக்குள் விரக்தி,  ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்தது.  அவனது கோபம் அப்பட்டமாக தெரிந்தது. அவன்  தனது அறைக்குள்  காலடி எடுத்து வைத்த கணம், அவன் தனது மேஜையிலிருந்த எல்லாவற்றையும் கீழே தள்ளினான். 

“ரஞ்சித் !” என்று கர்ஜித்த ஆர்யனின் குரல் சுவர்களில் இடி போல முழங்கியது. ரஞ்சித் உள்ளே நுழைந்ததும், ” என்ன நடக்குது ரஞ்சித் ? அவன் மேல ஒரு கண் வைக்க நான் தான் சொன்னேன்ல ? ” என்று பற்களை கடித்து கேட்க, ” சார், நான் ஏற்கனவே அத பாத்துட்டேன். எனக்கு வெறும் முப்பது நிமிஷம் டைம் கொடுங்க, எல்லா தகவலோட வரேன் ” என்று ரஞ்சித் சொன்னான்.

” உனக்கு இருபது நிமிஷம் டைம் ” என்று சொன்ன ஆர்யனின் கண்கள் ரத்தச் சிவப்பாக இருந்தன, அவனது கோபம் சற்றும் தணிவது போல தெரியவில்லை. சொன்னது போலவே இருபது நிமிடத்தில் திரும்பி வந்த ரஞ்சித் தனது போனை ஆர்யனிடம் கொடுத்து, ” சார், இந்த வீடியோவ பாருங்க” என்று சொன்னான்.

ஆர்யன் அவன் மொபைலை வாங்கி அந்த வீடியோவை பார்த்தான், அதில் டேனியல் தடுமாறி சஞ்சனாவின் தோளைப் பிடிப்பது தெளிவாக தெரிந்தது ஆனால் அனைவருக்கும் கிடைத்திருக்கும் புகைப்படத்தின் கோணம் அந்த தருணத்தை முற்றிலும் தவறாக சித்தரித்திருந்தது.

” யார் இதை பண்ணது ?” என்று கேட்ட போது ஆர்யனின் கையில் இருந்து மொபைல் அவன் பிடியில் இறுகியது.

” மானசி சார், எல்லாருக்கும் அந்த போட்டோ வந்த நம்பர் சிம் கார்டு மானசி பேருல தான் இருக்கு “ என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யனின் உதடுகளில் ஒரு இருண்ட புன்னகை உருவானது. ” இந்த வீடியோவை எல்லாருக்கும் அனுப்பு அது மட்டும் இல்ல, அந்த போட்டோல இருக்க மாதிரி எதுவும் இல்லன்னு டேனியல் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க சொல்லி அதையும் ரெகார்ட் பண்ணி எல்லாருக்கும் இப்போவே அனுப்பு “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், “ சரிங்க சார், இப்போவே செய்றேன் “ என்று சொல்லிவிட்டு ரஞ்சித் கிளம்பத் திரும்பினான், ஆனால் ஆர்யன் அவனை நிறுத்தி, ” அதுக்கு முன்னாடி மானசிய இங்க வர சொல்லு ” என்றான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மானசி ஆர்யனின் அறைக்கு முன் நின்றாள், அவளுடைய இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. உள்ளே நுழைவதற்கு முன் தனது தோற்றத்தை சரிபார்க்க ஒரு கணம் எடுத்துக் கொண்டவள், அவளுடைய திட்டம் வேலை செய்துவிட்டது என்றும், சஞ்சனா இறுதியாக ஆர்யனின் மனதிலிருந்து வெளியேறிவிட்டாள் என்றும் நம்பி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும், ” சார், நீங்க கூப்பிட்டீங்களா?” என்று கேட்ட அவள் குரலில் எதிர்பார்ப்பு தொனித்தது. “ ஆமா “ என்று சொல்லி ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து அவளை பார்க்க, மானசி அவன் முகம் படிக்க முடியாமல் குழம்பினாள். இருப்பினும் அவள்  ஒரு அடி நெருங்கி, ” சொல்லுங்க சார் “, என்று கூறினாள்.

”  நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா மானசி ? “என்று கேட்ட ஆர்யனின் தொனி அமைதியாக, ஏறக்குறைய சாதாரணமாக இருந்தது. ஆனால் அவன் கேள்வியால் அவள் இதயம் படபடத்தது. “ என்ன இவரு இப்படி கேட்குறாரு ? இப்போ என்ன செய்றது ? மானசி இது தான் நல்ல வாய்ப்பு, உன்னோட லவ் பத்தி சொல்லிடு. அவர் ஏத்துக்குறதும், மறுக்குறதும் அப்புறம் பாத்துக்கலாம் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “ஆமாங்க  சார்” என்றாள் மெல்லிய குரலில்.

” ஹ்ம்ம் சுவாரஸ்யமா இருக்கு. சரி யார் அந்த அதிர்ஷ்டசாலி ?” என்று  ஆர்யன் அவள் விளையாட்டை அவளிடமே விளையாட ஆரம்பித்து கேட்டான். அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை அவள் மூடியபோது அவள் கன்னங்களில் ஒரு வெட்கம் தவழ்ந்தது. “ஆர்யன்…ஐ லவ் யூ. நான் உங்கள ரெண்டு வருஷமா லவ் பண்றேன்.   உங்க கிட்ட இத சொல்ல தைரியத்தை வரவழைச்சுக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா ? உங்க கிட்ட , என் லவ் பத்தி சொல்ல எத்தனையோ முறை முயற்சி பண்ணி இருக்கேன் ஆனா சொல்ல முடியல “ என்று மானசி சொல்லி முடித்த அதே நேரம் ஆர்யனின் மொபைலில் அறிவிப்பு சத்தம் கேட்க, உடனே அவன் அது ரஞ்சித் அனுப்பிய, ” வேலை முடிந்தது ” என்ற செய்தியை பார்த்தான். மொபைலை வைத்துவிட்டு மானசியைத் திரும்பிப் பார்த்தவன். ” நீங்க என்ன லவ் பண்றீங்கனு சொல்றீங்க அப்போ எனக்காக என்ன செய்வீங்க ? “ என்று கேட்டான்.   

ஆர்யனின் கேள்வியால் மானசியின் கண்கள் பளபளத்தன. ” உங்களுக்காக எதுவா இருந்தாலும் செய்வேன் ஆர்யன். உங்களுக்காக என் உயிர கூட கொடுப்பேன் “ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினாள்.

ஆர்யனின் உதடுகள் சிலிர்க்க வைக்கும் ஒரு தீயப் புன்னகையாக வளைந்தன. ” நல்லது, அப்போ உன் உயிரை கொடு “, என்று சட்டென்று சொன்னவன் மானசி எதிர்வினையாற்றுவதற்குள் அவன் தன் மேஜையின் டிராவில் இருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் வயிற்றில் பாய்ச்சினான்.

மனசியின் உதடுகளில் இருந்து ஒரு அலறல் வெளிப்பட்டது, ஆனால் ஆர்யன் ஏற்கனவே தனது அறையில் உள்ள சவுண்ட் ப்ரூஃப் செட்டிங்கை ஆன் செய்திருந்தான் அதனால் அவள் அலறல் எல்லாம் பயனற்று போனது. அதிர்ச்சியிலும் வலியிலும் மூச்சிரைக்க அவள் முழங்காலில் சரிந்த போது அவள் வயிற்றில் இருந்து இரத்தம் வழிந்தது.

ஆர்யன் அவளுக்கு அருகாமையில் குனிந்து, ” சஞ்சனாவுக்கு எதிரா திட்டம் போட உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ?  அவள காயப்படுத்துறது இல்ல அவள தொடுறது என்ன தொடுறதுக்கு சமம். இன்னொரு முறை  அவளுக்கு எதிரா நீ எதாவது செய்ய நெனச்சா, அப்புறம் நான் இப்போ ஆரம்பிச்சத கச்சிதமா முடிச்சிடுவேன் “ என்று மிரட்டியவனின் குரல் தாழ்ந்ததாகவும், அச்சுறுத்துவதாகவும் இருந்தது.  

மானசியின் பார்வை மங்க தொடங்கி அவள் வார்த்தைகளை உருவாக்க முடியாமல் வலியில் முனகினாள். ஆர்யன் தன் மேஜை மேல் இருந்த ஒரு வைப்பரை (wipes ) எடுத்தபடி நின்றான். தன் கைகளை  சுத்தம் செய்துகொண்டே அவளை கடைசியாக ஒரு முறை பார்த்து,” கனவுல கூட அவள காயப்படுத்த நினைக்காத, கொன்னு பொதச்சிடுவேன் ” என்று மிரட்டினான்.

அதே சமயம், ஒரிஜினல் வீடியோவையும், டேனியலின் பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தையும் ஒவ்வொரு அலுவலக உறுப்பினருக்கும் ரஞ்சித் அனுப்பி வைத்தான். சில நொடிகளில் உண்மை பரவி சஞ்சனாவின் பெயருக்கு ஏற்பட்ட கலங்கம் துடைத்தெறியப்பட்டது.

சஞ்சு தன்னுடைய அறையில் உட்கார்ந்து, ரஞ்சித் அனுப்பிய அந்த வீடியோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வித நிம்மதி ஏற்படுவது போல இருந்தாலும் ஒரு ஆழமான, நீடித்த வலியால் அந்த நிம்மதி மறைந்து போனது. நடந்த எல்லாவற்றையும் சமாளிக்க அவள் போராடிய போது அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. ” யாரோ என்ன அழிக்க நினைக்குறாங்க ” என்று நினைத்து உடைந்து போனாள்.

கதவு திறந்திருந்த அவள் அறைக்கு பவி விரைந்து வந்து உடனே சஞ்சுவை அணைத்துக் கொண்டாள். ” சஞ்சு, அழாத, இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சு. எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு. நீ  தைரியமா இரு, சரியா ? ” என்று சொன்னாள் ஆனால் சஞ்சனா தன் தோழியை இறுகப் பற்றிக் கொண்டு அவள் தோளில் சாய்ந்து விம்மி அழுதாள், துரோகத்தின் கனம் அவளை நசுக்கியது.

இதற்கிடையில் ரஞ்சித் ஆர்யனின் அறைக்கு விரைந்தான். தரை ரத்தக் கறையால் படிந்திருந்தது, மானசி மயங்கிய நிலையில் இருந்தாள்.  மானசியை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்பு ரஞ்சித்  துப்புரவு ஊழியர்களை விரைவாக அழைத்து அறையை சுத்தம் செய்யும்படி கூறிவிட்டு நேரத்தை வீணாக்காமல், அவன் மானசியை சிகிச்சைக்காக ஆர்யன் மருத்துவமனையில் சேர்த்தான்.

சஞ்சனாவின் அறைக்குள் நுழைந்த ஆர்யன், அவள் கண்ணீருடன் பவியின் தோளில் முகம் புதைத்திருப்பதைக் கண்டான். அவன் இருப்பதைக் கவனித்த பவி, மெதுவாக விலகி, சஞ்சனாவை ஆறுதலூட்டும் விதமாக ஒரு தட்டிக்கொடுத்து விட்டு வெளியேறினாள். சஞ்சனாவை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் தனக்கு பின்னால் கதவு மூடும் ஓசை கேட்டதும் சஞ்சுவை நோக்கி  நெருங்கினான்.

“சஞ்சனா “, என அவனது குரல் மென்மையாக அவளை அழைக்க சஞ்சனா அவனை நிமிர்ந்து பார்க்காமல் வெறும் “ ஹ்ம்ம் “ என்று சொன்னாள்.

” இந்த மாதிரி ஒரு விஷயத்துக்காக அழற அளவுக்கு நீ பலவீனமானவளா ?” என்று கேட்ட ஆர்யன் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து, “ என்ன பாரு சஞ்சனா.” என்றான்.

சஞ்சு பதில் எதுவும் சொல்லாத போது, ஆர்யன் தனது கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் அவள் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான். கண்ணீர் படிந்த அவளது முகம் அவன் இதயத்தை உடைத்தது. அவள் கன்னத்தில் இருந்த கண்ணீரை கட்டை விரலால் துடைத்தவன் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான், அவன் கை அவள் தலைமுடியை மென்மையாக வருடியது.

” தலை நிமிர்ந்து நில்லு சஞ்சனா ,” என்று முணுமுணுத்தவன், ” நீ எந்த தப்பும் செய்யல, யாரும் உன்ன பத்தி தப்பா பேச மாட்டாங்க, அதுக்கு நான் விடவும் மாட்டேன் சஞ்சனா, என்ன நம்பு.”, என்று அவளுக்கு தைரியம் சொன்னான். ஆர்யனின் வார்த்தையை கேட்ட சஞ்சு  லேசாக தலையசைத்து பதிலளித்தாள், அவளுடைய உடல் இன்னும் உணர்ச்சிகளால் நடுங்கியது.

ஆர்யன் தனது நெஞ்சில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி சற்றும் தயங்காமல் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான். ” என்ன நடந்தாலும் சரி, உன்ன பத்தி எப்பவும் தாழ்வா நினைக்காத. ஒரு விஷயம் எப்பவும் உனக்கு  ஞாபகம் இருக்கட்டும், ஆர்யன் எப்பவும் உன் கூட இருப்பான் “ என்று சொன்ன ஆர்யன், “ புரியுதா சஞ்சனா ? ” என்று கேட்டான். அதற்கு சஞ்சனா ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாள்.

” நல்ல பொண்ணு ” என்று சொல்லி அவளை ஆமோதிக்கும் ஒரு சிறிய புன்னகையை ஆர்யன் உதிர்த்தான். ” இப்போ, உன்னோட முகத்த கழுவிவிட்டு எப்பவும் போல இரு, மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் “ என்றான்.   

சஞ்சனா மீண்டும் சரி என்று முணுமுணுத்து தலையசைக்க, அதை பார்த்து திருப்தியடைந்த ஆர்யன் மீண்டும் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் அறையில் இருந்து வெளியேறினான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு தளத்திலும் இருந்த அறையிலும் பொருத்தப்பட்டிருந்த மாஸ் கம்யூனிகேஷன் ஸ்பீக்கர்கள் வழியாக ஆர்யனின் குரல் எதிரொலிக்க, மொத்த அலுவலகமும் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆர்யன் இதுவரை இப்படி அனைவரிடமும் ஸ்பீக்கர் வழியாக பேசியதே இல்லை என்பதால் எல்லோரும் உடனடியாக அமைதியானார்கள்.

” நான் ஆர்யன் சைதன்யா ” என்று சொன்ன அவன் குரலில் அதிகாரம் தொனித்தது. ” என்னோட ஆபீஸ்ல இன்னைக்கு நடந்த மதிர்  அற்பமான, அவமானகரமான செயல் நடந்திருக்குறத பார்க்க எனக்கு அருவருப்பா இருக்கு. இப்போ உண்மை என்னனு எல்லாருக்கும் தெளிவா தெரிஞ்சிடுச்சு. இந்த விஷயத்தைப் பத்தி இதுக்கு மேல  வதந்திகள் பேசப்படுறத நான் விரும்பல. இதையும் மீறி யாருக்காவது இத பத்தி  பேசத் துணிவு இருந்தா நீங்க தாராளமா என் ரூமுக்கு வந்து என் கூட பேசலாம் “ என்று ஆர்யன் சொன்ன வார்த்தை எச்சரிக்கையாக இருந்தது.

ஆர்யன் பேசி முடித்த பிறகு அலுவலகம் முழுவதும் கனத்த மௌனம் நிலவியது. இதற்கு மேல் யாருக்கும் விளக்கம் தேவையில்லை என்றும் அது ஒரு எச்சரிக்கை என்றும், இதற்குப் பிறகும்  ஒரு முட்டாள் மட்டுமே ஆரியனை எதிர்க்க துணிவான் என்று அனைவரும் அமைதியானார்கள்.

இதற்கிடையில், தனது அறையில் இருந்த சஞ்சனா அந்த தளத்தில் மட்டும் ஸ்பீக்கர் சிஸ்டம் இல்லாததால் ஆர்யன் பேசியதை பற்றி அறியாமல் இருந்தாள். மதிய உணவு நேரம் வந்த போது, அவள் யாரையும் எதிர்கொள்ள விரும்பாமல் தனது அறையை விட்டு வெளியேறவும் விரும்பாமல் அறையிலேயே இருந்தாள்.

சஞ்சனாவின் இந்த எதிர்வினையை ஆர்யன் எதிர்பார்த்திருந்தான். அவள் யாரையும் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்க விரும்புவாள் என்று அவனுக்குத் தெரியும், கிசுகிசுப்புகளிலிருந்தும் மக்கள் அவளை முறைப்பதில் இருந்தும் பின்வாங்கி, தன்னுடைய அறையில் ஒளிந்து கொள்ள விரும்புவாள் என்றும் அவன் அறிந்திருந்தான் ஆனால் அவளுக்கு ஆதரவாக நிற்க அவன் அங்கு இருக்கும் போது அவளை எப்படி அவ்வாறு ஒளிந்து கொள்ள விடுவான் ? உடனே போனை எடுத்து அவளது இண்டர்காமுக்கு டயல் செய்து அவள் எடுக்கும் வரை காத்திருந்தான். சஞ்சனா தயங்கியபடி அழைப்புக்கு பதில் சொல்லி அமைதியாக இருந்தாள்.

“சஞ்சனா, மதியம் சாப்பிட்டியா ? ” என்று கேட்ட ஆர்யனின் குரலில் அவன் எந்த சாக்குப்போக்கும் கேட்க விரும்பவில்லை என்பதற்கு  இடமில்லாமல் உறுதியாக இருந்தது. சஞ்சு ஒரு கணம் தயங்கி “இல்லை” என்று பதில் சொன்னாள்.

ஆர்யன் பெருமூச்சு விட்டு, “ போய் சாப்பிடு”, என்று அவன் சொல்ல, “ எனக்குப் பசிக்கல ” என்றாள் சஞ்சு,

அவளிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்த்த ஆர்யனின் தாடை லேசாக இறுகியது, ” நீ மத்தவங்க கிட்ட இருந்து ஒளிஞ்சு இருக்கியா சஞ்சனா ? இப்படி இருந்து உன் மேல தான் தப்புனு எல்லாருக்கும் நிரூபிக்க விரும்புறியா ? ” என்று ஆர்யன் மென்மையான குரலில் கேட்டான். அவள் அமைதியாக இருக்க, ” போய் சாப்பிடு, தைரியமா இரு, உனக்கு நான் இருக்கேன். யாரையும் எதிர்கொள்ளத் நீ தயங்க வேண்டிய அவசியம் இல்ல, நீ யாருனு உனக்கு தெரியும் தானே ? பயப்படாம போ ” என்றான் ஆர்யன்.

சஞ்சனா பதிலுக்கு “ சரி “ முணுமுணுத்தாள், அவன் வார்த்தையில் முற்றிலும் உடன்படவும் இல்லை, ஆனால் அவனை எதிர்க்கவும் இல்லை. ஆழ்ந்து மூச்சுவிட்டவள் வலுக்கட்டாயமாக எழுந்து அந்த உணவு சாப்பிட சென்றாள். அவள் உள்ளே நுழைந்ததும், வழக்கமான மேஜை அருகே பவி அவளுக்காகக் காத்திருப்பதைக் கண்டாள்.

சஞ்சனாவைப் பார்த்ததும் பவியின் முகம் மலர்ந்தது. ” சஞ்சு! ஆர்யன் சார் உனக்காக என்ன செஞ்சாரு  தெரியுமா ?” என்று கேட்க, சஞ்சனா முகத்தில் குழப்பத்துடன் அவள் முன்  உட்கார்ந்து, “அவர் என்ன பண்ணாரு ?” என்று கேட்டாள்.

பவி அவளை ஆச்சரியத்துடன் பார்த்து, “ நீ நெஜமா தான் தெரியாம கேட்குறியா சஞ்சு ? ஆபீஸ் மாஸ் கம்யூனிகேஷன் ஸ்பீக்கர் வழியா ஆபீஸ்ல இருக்க எல்லார் கிட்டயும் பேசினாரு. நான் சத்தியமா  சொல்றேன், அவர் பேசின விதம், அது அப்படியே கிட்டத்தட்ட எல்லாருக்கும் மிரட்டல், எச்சரிக்க மாதிரி இருந்துச்சு. இதுக்கு அப்புறம் அந்த போட்டோ பத்தி யாரும் ஒரு வார்த்தை கூட பேச துணிய மாட்டாங்க ” என்று சொன்னாள்.

பவி சொன்ன ஒவ்வொரு வார்த்தையை கேட்டதும், “ நெஜமாவா ? “ என்று கேட்டு சஞ்சனா வியப்பில் கண் சிமிட்டினாள்.

பவி தன் நெஞ்சில் கை வைத்து, “ எனக்கு ரொம்ப புடிச்ச என்னோட handbag மேல சத்தியமா சொல்றேன் சஞ்சு “ என்று சொன்னதும்  சஞ்சனாவின் உதடுகளில் ஒரு சிறு புன்னகை அரும்பி, ” அவர் … சில நேரத்துல நல்லவரா தான் இருக்காரு “ என்று சொன்னாள். உடனே பவி சிரித்துக் கொண்டே, “ ஹலோ மேடம், சில நேரம் மட்டும் இல்ல எங்க பாஸ் எப்பவுமே நல்லவர் தான் “ என்று சொன்னாள். அதை கேட்டு சஞ்சனா விளையாட்டாக கண்களை உருட்டி, ” சரி, உங்க பாஸ் நல்லவருன்னு ஒத்துக்கறேன்.” என்று சொன்னாள்.

பவி மெல்ல சஞ்சு அருகே சாய்ந்து, “ அது இருக்கட்டும், நீ ஒரு விஷயம் கவனிசசியா ? மானசிய இன்னைக்கு எங்கேயும் காணும் “ என்று சொன்னாள் அதை கேட்ட பிறகு சஞ்சனாவின் புருவம் சுருங்கியது. ” ஆமா பவி, நானும் அவள பார்க்கல ” என்று சஞ்சுவும் சொன்னாள். பவி பதில் சொல்வதற்குள் அவர்களின் மேஜையின் மீது ஒரு நிழல் படர்ந்தது. இருவரும் நிமிர்ந்து பார்த்த போது டேனியல் பதற்றத்துடன் நிற்பதை இருவரும் கண்டனர்.

” சஞ்சனா… நான்..அது வந்து…இத பண்ணது யாருனு எனக்குத் தெரியல ” என்று டேனியல் தொடங்கினான், அவனது குரல் கிட்டத்தட்ட கெஞ்சுவது போல் இருந்தது. சஞ்சனா அவனுக்கு தொடர்ந்து பேச வாய்ப்பு கொடுக்காமல் அவள் எழுந்து நின்று, ஒரு நொடி கூட யோசிக்காமல், அவன் கன்னத்தில் அறைந்தாள்.

அறைந்த சத்தம் அந்த ஹால் முழுவதும் எதிரொலித்தது, அதை கேட்டு அங்கிருந்த அனைவரின் கண்களும் அவர்கள் மீது திரும்பியது.

” நான் உன்ன என் கிட்ட இருந்து விலகி இருக்கச் சொன்னேன்ல. நீ நினைக்குற மாதிரி நான் சாதாரண பொண்ணு இல்ல டேனியல். என் வழிய விட்டு விலகி நில்லு இல்ல உனக்கு தான் பிரச்சன ” என்று அவனை பார்த்து சீறினாள்.

உடனே அங்கிருந்தவர்கள் கிசுகிசுக்க டேனியலின் முகம் அவமானத்தால் எரிந்தது. அவன் பற்களைக் கடித்தான், அவனது கண்களில் கோபம் பளிச்சிட்டது, ஆனால் அந்த நொடி பதிலடி கொடுப்பதைத் தவிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவன் திரும்பிப் புயலாக அங்கிருந்து சென்றான்.

பவி விசில் அடித்து, “ வாவ், என்ன அடி “ என்று சொல்ல, “ அவனுக்கு இது தேவை தான் “ என்று முணுமுணுத்து சஞ்சனா மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

”  சரி இப்போ சொல்லு, உனக்கும் ஆர்யன் சாருக்கும் நடுவுல என்ன நடக்குது ” என்று பவி கிசுகிசுக்க, “ ஒன்னும் நடக்கல “ என்று சஞ்சனா முனகினாள். அவள் பதிலை கேட்டு, “ பொய் சொல்றத நிறுத்து சஞ்சு.  ஆர்யன் சார் மேல பொண்ணுங்க ரொம்ப வருஷமா ஏக்கத்துல  இருக்காங்க, அவர் அவங்களை ஏறிட்டுக் கூட பார்த்ததில்ல ஆனா இன்னைக்கு அவரே தனிப்பட்ட முறையில உனக்காக பேசி இருக்காரு அப்போ கண்டிப்பா ஏதோ நடக்குது “ என்று சொல்லி பவி சிரிக்க, “ வாயை மூடு பவி ” என்று சொல்லி சஞ்சு தலையை மறுத்து ஆட்டினாள்.

” சரி, சரி. நான் வாயை மூடிக்கறேன்.” என்று சொன்ன பவி மீண்டும்  குறும்பாகச் சிரித்து, ” ஆனா ஒரு உண்மைய சொல்லு,  ஒரு முறை கூட உன் மனசு அவருக்காக படபடக்கலையா ? அவர் பார்க்க ஒரு கிரேக்க கடவுள் மாதிரி சஞ்சு ” என்று சொல்லி சஞ்சுவின் தோளில் இடித்தாள். பவியின் வார்த்தையை கேட்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சஞ்சனா மீண்டும் முனகினாள். ” கடவுளே, பவி, தயவு செஞ்சு உன் வாய மூடு. நீ தேவையில்லாத விஷயங்கள கற்பனை செய்ற. எனக்கு வேலை இருக்கு ” என்று சொல்லி எழுந்து நின்றாள்.

பவி ஒரு வேடிக்கையான புன்னகையுடன் அவளைப் பார்த்து, “ ஆமா  ஆமா…ஒன்னும் இல்ல தான் .. நீ போ மா “ என்று கிண்டல் செய்தாள்.

சஞ்சனா வேகமாக தன் அறைக்கு சென்று கதவை சாத்திவிட்டு தன் இருக்கையில் உட்கார்ந்து ஒரு கணம் கண்களை மூடி மூச்சை இழுத்தாள். ஆனால் அவள் அப்படிச் செய்தவுடன், அவள் மனதில் ஒரு பிம்பம் பளிச்சிட்டது – ஆர்யன் அவள் தாடையைப் பிடித்து, அவள் கண்ணீரைத் துடைத்தது, அவனது ஸ்பரிசத்தின் கதகதப்பு, அவன் அவளது நெற்றியில் மென்மையாக உரிமையுடன் முத்தமிட்ட விதம் அவள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அவளுடைய உதடுகளில் ஒரு விசித்திரமான புன்னகை உருவானது. என்ன நடக்கிறது என்று உணர்ந்து அவளுடைய கண்கள் விரிந்தன, அந்த எண்ணத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிப்பவள் போல அவள் சட்டென்று தலையை ஆட்டினாள்.

” இந்த பொண்ணுங்க ஏன் பைத்தியம் மாதிரி அவர் பின்னாடி சுத்துறாங்க ? “ என்று அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள். ஆர்யன் தனக்காக நின்றதையும், அவளைக் காத்ததையும், அழுத்தத்தில் அவள் நொறுங்கி விடாமல் பார்த்துக் கொண்டதையும் அவள் மனம் மீண்டும் ஒரு முறை காட்டிக் கொடுத்தது.

“அவர் நல்லவர்னு நான் தான் கவனிக்க தவறிவிட்டேனா… அவர் நல்லவர் தானா ? “ என்று மனதில் நினைத்தவள் தன் மீதே விரக்தியடைந்து வேகமாக மூச்சை இழுத்தாள். ” அச்சச்சோ! நான் ஏன் இப்படி குழம்பி போறேன் கடவுளே ? ” என்று முனங்கினாள்.

**********

முன்னோட்டம்:

” டார்லிங், நீ நினைக்கிற அளவுக்கு நான் மோசமானவ இல்ல. நான் என்ன சொன்னாலும், செய்தாலும்… அது உன்னோட நல்லதுக்கு தான். இது உனக்கு சீக்கிரம் புரியும் “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!