ஆர்யனும் ரஞ்சித்தும் சிறை அறைக்குள் சென்று பார்த்த போது, சந்திரசேகரும் ராஜேஷும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அரை உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
” உங்க சண்ட முடிஞ்சுடுச்சுனா நான் என் வேலையை முடிச்சுடுவேன்.” என்று ஆர்யன் குரலை உயர்த்தி பேசினான். அவன் குரல் குளிர்ச்சியாகவும் கூர்மையாகவும் இருந்தது.
இருவரும் அவனை நோக்கித் திரும்பி உடனே உறைந்து போனார்கள். அவர்கள் முகத்தில் பயம் படர்ந்தது. ஒவ்வொரு முறையும் ஆர்யன் வருகை தரும் போது, அவர்களுக்கு அதிக வலி, அதிக தண்டனையை மட்டுமே அர்த்தப்படுத்தியது. ஆர்யன் ஒருபோதும் காரணமின்றி வந்ததில்லை, அது அவர்களுக்கு ஒருபோதும் இனிமையானதாக இருந்ததில்லை.
” இந்த தடவ உங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்” என்றான் ஆர்யன் தீவிரமாக அவர்களைப் பார்த்தபடி.
அதை கேட்டதும் சந்திரசேகரும், ராஜேஷும் பயத்தில் நடுங்கினர்.
ஆர்யன், ரஞ்சித் பக்கம் திரும்பி பார்த்ததும் அவன் காவலர்களில் ஒருவரை அழைத்தான். அவன் உடனே ஒரு இரண்டு ஊசிகளை கொண்டு வந்து சந்திரசேகர் மற்றும் ராஜேஷுக்கு செலுத்தினான்.
சந்திரசேகரின் கண்கள் அதிர்ச்சி மற்றும் பயத்தில் விரிந்தன. “என்னடா இது?” என்று அவர் ஆர்யனை கேட்டார்.
“நீ என் அப்பா, அம்மாவுக்கு கொடுத்த அதே போதை மருந்து தான், நல்லா அனுபவி. அடுத்த முறை நான் இங்க வரும் போது நீங்க ரெண்டு பேரும் என்ன பார்க்கா முடியாம போகலாம், ஆனா உங்கள சுறாக்களுக்கு உணவா தூக்கி போடுறதுக்கு முன்னாடி நான் நிச்சயமா உங்க சடலத்த பார்ப்பேன்.” என்று சொன்ன ஆர்யனின் குரல் தாழ்ந்தது, ஆனால் அதில் விஷம் தெளிவாகத் தெரிந்தது.
ஒவ்வொரு அழுகையிலும் பயம் கலந்திருக்க சிறைக்குள் இருந்து சந்திரசேகர் அலற, ஆர்யன் அதை உதாசீனம் செய்துவிட்டு திரும்பி சென்றான்.
ஒரு வாரம் கழித்து, ஆர்யனும் சஞ்சனாவும் புல்வெளியில் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். அவளுடைய முகம் வெளிறிப் போயிருந்தது. அவளுடைய அசைவுகள் மற்றும் நடை மிகவும் மந்தமாக இருந்தன. ஆனாலும், அவள் தொடர்ந்து நடந்தாள், அவனுடன் அந்த தருணத்தை அனுபவிக்க முயற்சித்தாள்.
ஆர்யன் அவளை மெல்ல தடுத்தான். “சஞ்சு, நீ வழக்கத்த விட ரொம்ப சோர்வா இருக்க அதனால நடந்தது போதும், இதோட நிறுத்திட்டு வா, உள்ளே போகலாம்.” என்று கூறினான்.
சஞ்சு மெல்ல தலை அசைத்ததும் இருவரும் அருகிலிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். ஒரு கணம் கழித்து, தேவிகா ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வந்தார்.
ஆர்யன் கவலையுடன் சஞ்சுவைப் பார்த்து, “சஞ்சு, உன் முகம் நார்மலா இல்ல. உனக்கு வலிக்குதா?” என்று கேட்டான்.
தேவிகாவும் ஏதோ வித்தியாசம் இருப்பதை கவனித்து, “சஞ்சு, என்ன ஆச்சு? உனக்கு வலி எதுவும் இருக்கா சொல்லு ?.” என்று அக்கறையோடு கேட்டார்.
சஞ்சு லேசாக ஆம் என்று தலையை ஆட்டினாள். ” அம்மா, ஆனா இந்த வலி லேசா தான் இருக்கு. எனக்கு கொஞ்சம் களைப்பா இருக்கு அதனால கொஞ்ச நேரம் தூங்குறேன் “ என்று பதில் சொன்னாள்.
“இல்ல சஞ்சு, நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம் ” என்று சொல்லி உறுதியாக எழுந்து நின்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு மறுத்து, ” இல்ல ஆர்யன், வலி லேசா தான் இருக்கு” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.
” கொஞ்ச நேரத்துல வலி அதிகமான என்ன செய்றது ?” என்று ஆர்யன் கவலையுடன் கேட்டான். அப்போது தேவிகா குறுக்கிட்டார். “சஞ்சு, இனி எதுவும் பேசி நேரத்த வீணாக்க வேணாம். நாம உடனே ஹாஸ்பிடல் போகலாம் “ என்று கூறினார். பின்னர் ஆர்யனை பார்த்து, “ நான் இப்போவே பொருட்கள பேக் செய்றேன். ஆர்யன், நீ அவள காருக்கு கூட்டிட்டு போ. நீங்க உடனே கிளம்புங்க, நான் சீக்கிரம் வந்துடறேன்.” என்று சொன்னார்.
“சரி மா” என்று சொன்ன ஆர்யன், உடனே ரஞ்சித்தை அழைத்து காரை ஸ்டார்ட் செய்யும்படி கூறினான். அதன் பின் சஞ்சுவை மெல்ல தூக்கி பின் சீட்டில் அமர வைத்து அவள் அருகில் உட்கார்ந்தான். சஞ்சு அவன் தோளில் தலை வைத்து ஒரு கையை அவள் அடிவயிற்றில் வைத்தாள். போகும் வழியில் ரஞ்சித் டாக்டரை அழைத்து அவர்கள் வருவதாக தெரிவித்தான்.
அவர்கள் மருத்துவமனையை அடைந்ததும், மருத்துவர்கள் சஞ்சுவை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். ஆர்யனும், ரஞ்சித்தும் வெளியே காத்திருந்தனர். சஞ்சுவை பரிசோதித்த பிறகு, அவளுடைய பிரசவ வலி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று கண்டறிந்து பிரசவத்தைத் தூண்டுவதற்காக டாக்டர் அவளுக்கு ஒரு ஊசி செலுத்தினார். அவளைக் கண்காணிக்க ஒரு நர்ஸை விட்டுவிட்டு, டாக்டர் ஆர்யனுடன் பேச வெளியே சென்றார்.
” சஞ்சு எப்படி இருக்கா?” என்று கண்களில் கவலை தெரிந்த ஆர்யன் கேட்டான்.
” அவங்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கு சார், நான் அவங்களுக்கு ஊசி போட்டிருக்கேன். சீக்கிரம் வலி அதிகமாகும், நாம வெயிட் பண்ணுவோம். இப்போ நீங்க அவங்க கூட இருக்கலாம். அவங்கள கொஞ்சம் நடக்க உதவி பண்ணுங்க, அப்போ பிரசவம் சீக்கிரம் ஆக உதவியா இருக்கும் “ என்று டாக்டர் விளக்கினார்.
” ரொம்ப நன்றி டாக்டர் ” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் ஆர்யன்.
சஞ்சு கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அனுபவிக்கும் வலி அவள் முகத்தில் பிரதிபலித்தது. “ஆர்யன், நான் இறங்க உதவி பண்ணு. டாக்டர் கொஞ்ச நேரம் நடக்கச் சொன்னாங்க ” என்று சஞ்சு சொன்னதும், ஆர்யன் உடனடியாக அவளுக்கு உதவினான்.
சஞ்சு அறையை சுற்றி மெதுவாக நடந்தாள். ஆர்யன் அவளுடைய கையை பிடித்துக் கொண்டு, அவளுடைய கீழ் முதுகில் ஒரு கையை ஆதரவாக வைத்தான். ஒவ்வொரு முறையும் ஒரு தீவிர வலி ஏற்படும் போதும், அவள் நடப்பதை நிறுத்தி வலியால் துடித்தாள்.
மணித்துளிகள் மிக பொறுமையாக கழிந்தன. வலி அதிகமானதும் சஞ்சு ஒருவழியாக நடப்பதை நிறுத்திவிட்டு களைப்புடன் மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
அவளுடைய வலி மிகவும் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் அவளை அடிக்கடி பரிசோதித்தனர். சஞ்சு இப்போது வியர்த்து விறுவிறுத்து வலியால் கதறி அழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு முனகலுக்கும் ஆர்யனின் இதயம் நொறுங்கியது. அவன் அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அவளருகில் நின்றான்.
மருத்துவர்கள் அவளை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்ற போது ஆர்யன் அவளை பின்தொடர முயன்றான், ஆனால் சஞ்சு அவனைத் தடுத்து, “இல்ல ஆர்யன், ப்ளீஸ் நீ உள்ள வராத. வெளிய வெயிட் பண்ணு ” என்று வலியில் பலவீனமாக சொன்னாள்.
ஆர்யன் வெளியே காத்திருக்க, தேவிகா உள்ளே சென்று சஞ்சுவின் கையை பிடித்து ஆறுதல் சொல்ல, சஞ்சு வலியில் அலறினாள்.
வெளியே, ஆர்யன் தாழ்வாரத்தில் பொறுமை இழந்து, பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தான். விவரிக்க முடியாத அவன் மன நிலையில் முஷ்டிகளை இறுக்கினான், கண்ணீர் அவன் கன்னங்களில் மௌனமாக உருண்டது. உள்ளிருந்து எழும் ஒவ்வொரு அலறலும் அவன் ஆன்மாவை உலுக்குவது போல் உணர்ந்தான்.
பிரசவ அறைக்குள், மருத்துவர்களும் தேவிகாவும் சஞ்சுவை ஊக்குவித்தனர்.
ஒரு கடைசி அலறல் அறை முழுவதும் எதிரொலிக்க, பிறகு இன்னொரு அழுகை சத்தம் கேட்டது. ஒரு மெல்லிய, புதிய குரல் அறையை நிரப்பியது.
“வாழ்த்துக்கள் மேடம், உங்களுக்கு மகன் பிறந்துருக்கான் ” என்று டாக்டர் புன்னகைத்தார்.
தேவிகா சஞ்சுவின் நெற்றியில் முத்தமிட்டார். குழந்தை தாயின் முதல் ஸ்பரிசத்தை உணர நர்ஸ் குழந்தையை மெதுவாக சஞ்சுவின் மார்பில் வைத்தார். சஞ்சு அவனது சிறிய நெற்றியில் முத்தமிட்டு கண்களை மூடி சோர்வால் மயக்கமடைந்தாள்.
தேவிகா குழந்தையை ஜாக்கிரதையாக தூக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டு நர்ஸிடம் சுத்தம் செய்ய கொடுத்தார்.
வெளியே ஆர்யன் உறைந்து போய் நின்றான். அவனுடைய தாடைகள் இறுகியிருந்தன, வெடித்துவிடும் என்று அச்சுறுத்திய உணர்ச்சிகளின் வெள்ளத்தை கட்டுப்படுத்த முயற்சித்தான். தேவிகா அறையை விட்டு வெளியேற, ஆர்யன் உடனடியாக அவரிடம் விரைந்தான்.
“அம்மா, சஞ்சு எப்படி இருக்கா? சொல்லுங்க” என்று எதிர்பார்ப்பில் நடுங்கிய குரலில் கேட்டான் ஆர்யன்.
தேவிகா மெல்லப் புன்னகைத்தார். ” ஏய் ரிலாக்ஸ் ஆர்யன், அவ நல்லா இருக்கா. உனக்கு ஒரு இளவரசன் பிறந்துருக்கான். ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. சஞ்சு சோர்வுல மயக்கமா இருக்கா ஆனா சீக்கிரம் சுயநினைவு வந்துடும். நர்ஸ் கொஞ்ச நேரத்துல குழந்தைய தூக்கிட்டு வருவாங்க “ என்று கூறினார்.
தேவிகா சொன்னதை கேட்டதும் அவரை கட்டியணைத்த போது ஆர்யனின் கண்கள் கலங்கின. ரஞ்சித் முன்னால் வந்து ஆர்யனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் சொன்னான்.
அப்போது, நர்ஸ் ஒரு மென்மையான துண்டில் சுற்றப்பட்டு குழந்தையை கொண்டு வெளியே வந்து குழந்தையை ஆர்யனிடம் கொடுத்தார். புதிதாகப் பிறந்த தன் மகனை வரவேற்கும் போது அவனது கைகள் நடுங்கின. சிறிய இளஞ்சிவப்பு கன்னங்கள், மென்மையான பழுப்பு நிற கண்கள், பட்டன் போன்ற சிறிய மூக்கு மற்றும் கன்னத்தில் சிறிய குழிகள் ஆகியவற்றைப் பார்த்த போது, அவன் உடம்பு சிலிர்த்தது.
ஆர்யன் தனது மகனின் சிறிய கால்விரல்கள் மற்றும் கை விரல்களை மெதுவாகத் தொட்டான், குழந்தை உடனடியாக அவனது விரலைப் பிடித்துக் கொண்டான். அதை பார்த்த தேவிகா, ” இவன பாரு, அவன் அப்பாவோட ஸ்பரிசத்தை அடையாளம் தெரிஞ்சு உடனே உன் விரல எப்படி புடிச்சு இருக்கான் “ என்று பெருமிதத்துடன் கூறி புன்னகைத்தார்.
” அப்படியே அவன் அப்பா, அம்மா மாதிரி இருக்கான். ரெண்டு பேரும் சேர்ந்த கலவையா இருக்கான் நம்ம பிரின்ஸ் “ என்று ரஞ்சித் சொன்னதும், ஆர்யன் புன்னகையுடன் குழந்தையை ரஞ்சித்திடம் கொடுத்தான்.
ரஞ்சித் குழந்தையை அக்கறையுடன் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
” நீ எப்பவும் என் இளவரசனா இருப்படா தங்கக்கட்டி “ என்று ரஞ்சித் கிசுகிசுத்தான்.
ஆர்யனின் கண்கள் மூடியிருந்த கதவின் மீதே நிலைத்திருந்தன. மனைவியைப் பார்க்க அவன் ஆவலுடன் காத்திருந்தான். டாக்டர் வெளியே வந்து ஆர்யனை வாழ்த்தினார்.
” நீங்க இப்போ உங்க மனைவிய சந்திக்கலாம், அவங்க கண் முழிச்சிடாங்க ” என்று டாக்டர் அவனிடம் கூறியதும், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உள்ளே விரைந்த ஆர்யன், சஞ்சு படுக்கையில் சோர்வாக கிடப்பதைப் பார்த்தான். அவளை மெல்ல கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.
” என்ன மன்னிச்சிடு ஸ்வீட் ஹார்ட், நீ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட, என்னால ஒன்னும் பண்ண முடியல ” என்று ஆர்யன் கிசுகிசுத்ததும், சஞ்சு மெல்லிய புன்னகையை உதிர்த்தாள். ” நம்ம குழந்தைய பார்த்த அப்றமும் வருத்தப்படுகிறீங்களா?” என்று கேட்டாள்.
” இருந்தாலும் நீ வலியில துடிச்சத கேட்டு உயிரே போன மாதிரி இருந்துச்சு “ என்று சொல்லி ஆர்யன் கண்ணீர் சிந்தியதும், “ஷ்ஷ்ஷ்ஷ் ஐ லவ் யூ, வருத்தப்படாத. இப்போ நம்ம காதல் ஒரு உருவம் கொண்டு நம்ம கையில இருக்கு. நாம சந்தோஷமா இருக்கணும். நம்ம பையன பார்த்த அப்போ எனக்கு ஏற்பட்ட வலி எல்லாம் ஒண்ணுமில்ல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று சஞ்சு மகிழ்ச்சியோடு கூறினாள்.
” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட். நம்ம பையன் அப்படியே நம்ம ரெண்டு பேர மாதிரி இருக்கான் “ என்று ஆர்யன் புன்னகையோடு சொன்ன போது, நர்ஸ் அறைக்குள் நுழைந்தார்.
“மேடம் நீங்க குழந்தைக்கு பால் கொடுக்கணும்” என்று அவர் சொன்னதும், “ நீ அவனுக்கு பால் கொடு. நான் எல்லாருக்கு தகவல் சொல்றேன். எல்லாரும் நான் போன் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க “ என்று சொல்லிவிட்டு ஆர்யன் வெளியே சென்றான்.
நர்ஸ் சஞ்சுவை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க உதவினார். பின்னர், தாயும், சேயும் விஐபி அறைக்கு மாற்றப்பட்டு, குழந்தையை கவனமாக தொட்டிலில் கிடத்தினர்.
ஆர்யன் தனது நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து, தன் மகன் பிறந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினான். அவன் வி.ஐ.பி அறைக்கு சென்று பார்த்த போது தேவிகா குழந்தையை கையில் அணைத்தபடி வைத்திருந்தார். ஆர்யன் சஞ்சுவின் அருகில் அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, அவள் தலைமுடியை அன்புடன் வருடினான்.
தகவல் கிடைத்ததும் விரைவில், அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்தனர். விஷ்ணு, கௌசல்யா மற்றும் தீபா என ஒவ்வொருவரும் மாறி மாறி குட்டி இளவரசனைப் தூக்கி கொஞ்சினார்கள். அவர்களின் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன. மொத்த குடும்பமும் ஒன்றாக மகிழ்ச்சியில் திளைத்திருந்தன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, சஞ்சு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்கள் வீடு திரும்பினர். ஆர்யன் மகனை தங்கள் அறைக்கு தூக்கிச் சென்று மெதுவாக தொட்டிலில் கிடத்தினான். அவர்களின் மூன்று பாட்டிகளும் இரவும் பகலும் குழந்தையை மாறி மாறி கவனித்துக்கொள்வதால் சஞ்சு கவலைப்படவில்லை. குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப முழு குடும்பமும் தங்கள் நடைமுறைகளை மாற்றியமைத்தது.
14 வது நாளில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கு கொண்டு, வீட்டில் ஒரு எளிய பெயர் சூட்டு விழா நடைபெற்றது. ஐயர் சடங்குகளை செய்து குழந்தையின் தாய்மாமனை அழைத்ததும், ரஞ்சித் முன்னால் சென்று அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தான். தேவிகா குழந்தையை அவனிடம் கொடுக்க, சஞ்சு முன்னால் சென்று தன் உள்ளங்கையில் எழுதியிருந்த பெயரை அவனிடம் காட்டினாள்.
ரஞ்சித் ஒரு தங்க செயினையும் பிரேஸ்லெட்டையும் எடுத்து குழந்தைக்கு அணிவித்து, குழந்தையின் காதில் “சரண்” என்று மூன்று முறை கிசுகிசுத்தான். பின்னர் ஆர்யன், சஞ்சு மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் ஒவ்வொருவராக குழந்தையின் பெயரை அழைத்தனர்.
சுரேந்தர் குழந்தைக்கு சஞ்சுவின் சிறுவயது செயின் மற்றும் தங்கக் கொலுசைப் பரிசளித்தார். நரேன், மாயா, கீர்த்தி, பவி, பிரதீப் ஆகியோர் வெள்ளி தொட்டிலை பரிசளித்தனர். பெயர்சூட்டு விழா முடிந்ததும் குழந்தை மற்றும் முழு குடும்பத்தினருக்கு தீபா திருஷ்டி கழித்தார்.
அவர்களின் இன்பான நாட்களுடன் மூன்று மாதங்கள் கழிந்து போனது.
சஞ்சு சரணுக்கு பாலூட்டி கொண்டிருந்தாள், அப்போது ஆர்யன் அவள் அருகில் அமர்ந்து மெல்ல குனிந்து அவள் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். உடனே குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு சஞ்சுவை நிமிர்ந்து பார்த்தான்.
“ஆர்யன், நீ என் பையன தொந்தரவு செய்ற. பாரு இப்போ பால் குடிக்காம எப்படி பார்க்குறான். இப்போ கொஞ்சம் அமைதியா இரு, டிஸ்டர்ப் பண்ணாத” என்று அதட்டும் புன்னகையுடன் கூறினாள்.
” ஏய் பொண்டாட்டி, பல மாசமா நான் உண் தொந்தரவு செய்யவே இல்ல அதனால சும்மா என்ன இப்படி தள்ளி போக சொல்லாத. என் மேலையும் கொஞ்சம் அக்கறை காட்டுடி. நானும் பல மாசமா பட்டினியா இருக்கேன் ” என்று ஆர்யன் கிசுகிசுத்தான்.
” அச்சோ பாவம் என் புருஷன், சரி வெயிட் பண்ணு, முதல்ல குட்டி பையன் தூங்கட்டும் “ என்று சஞ்சு மெல்ல பதில் சொன்னதும், “ அப்போ உனக்கு ஓகே வா ? “ என்று ஆர்யன் உற்சாகத்துடன் கேட்டான்.
” ஹ்ம்ம் “ என்று சஞ்சு வெட்கத்தோட பதில் சொன்னதும் ஆர்யன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவர்களின் மகன் தூங்கும் வரை பொறுமையாக காத்திருந்தவன், பல மாத இடைவெளிக்குப் பிறகு அவர்களின் இரவை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றினான்.
ஒரு மாதம் கழித்து மாயாவும், விவானும் முதலில் திருமணம் செய்து கொண்டனர். விஷ்ணுவும் தேவிகாவும் உண்மையான பெற்றோரைப் போல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஒவ்வொரு கடமையையும் நிறைவேற்றினர். இரண்டு மாதங்கள் கழித்து பவி, நரேன் மற்றும் பிரதீப், கீர்த்தி ஆகியோரின் திருமணமும் ஒரே நாளில் நடைபெற இருந்தது.
திருமண மண்டபம் ஒவ்வொரு மணப்பெண்ணின் ரசனைக்கேற்ப அலங்காரங்களுடன் மலர்ந்தது. நரேனும், பிரதீப்பும் மேடையில் அமர்ந்து சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். மாயாவும் சஞ்சுவும், கீர்த்தியையும் பவியையும் மேடைக்கு அழைத்து வந்தனர். ஆர்யன் தன் ஆறு மாத மகன் சரணை தனது கைகளில் வைத்திருந்தான். சரண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான். சந்திரசேகருக்கு பதிலாக தேவிகாவும், விஷ்ணுவும் நரேனுக்கும் சடங்குகளை செய்தனர். பிரதீப்புக்கு சுரேந்தர் சடங்குகளையும் செய்தார்.
இறுதியாக, மணமகன்கள் தங்கள் மணமகளின் கழுத்தில் தாலியை கட்டி திருமணம் முடிந்து மணமக்கள் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்றனர்.
அப்போது தன் அருகில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்தை இடித்துத் தள்ளி ஆர்யன் அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். ரஞ்சித் தயங்கத்துடன் மேடையேறினான். உடனே அங்கிருந்த அத்தனை கண்களும் குழப்பத்தில் அவன் மீதே இருந்தன. திடீரென்று நிலாவின் கையைப் பிடித்து ஒரு முழங்காலில் மண்டியிட்டு ஒரு மோதிரப் பெட்டியைத் திறந்தான்.
ரஞ்சித் நிலாவிடம் ப்ரபோஸ் செய்ததால் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். நிலா திகைத்துப் போனாலும் புன்னகையுடன் அவனுக்கு சம்மதம் சொல்லி தலையசைத்தாள். அவர்கள் மோதிரங்களை பரிமாறி நிச்சயதார்த்தம் செய்தபோது கூட்டம் ஆரவாரம் செய்தது.
காதல் அலை காற்றில் சூழ்ந்தது. ஆர்யன் ஒரு கையால் சஞ்சுவை சுற்றி வளைத்து, மற்றொரு கையால் சரணை பிடித்துக் கொண்டான். குட்டி சரண் அனைவரின் செல்லமாக இருந்தான். அனைவரும் அவனுக்கு அளவில்லாத அன்பு கொடுத்தனர்.
சஞ்சுவும், சரணும் ஆர்யனின் உலகமாக இருந்தார்கள். அவர்களுக்காக எதையும் செய்ய ஆர்யன் தயாராக இருந்தான்.
ஒரு நாள் மாலை, ஆர்யனும் ரஞ்சித்தும் வேலை முடிந்து திரும்பி வந்த போது, விஷ்ணுவும் தேவிகாவும் சரணுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஆர்யன் வேகமாக உள்ளே சென்று சரணை தூக்கி அவன் கன்னங்களில் முத்தமிட்டான். குழந்தை சிரித்தபடி பதிலுக்கு அவன் கன்னத்தில் ஈரமான முத்தம் கொடுத்து லாவினான். ஆர்யன் அவனை ரஞ்சித்திடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் அறைக்கு சென்று சஞ்சு பால்கனியில் இருப்பதை அவளிடம் விரைந்தான்.
அவளை பின்னாலிருந்து அணைத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
” என்ன தான்டி வெச்சுருக்க ? அப்படி மயக்குற என்ன ? எவ்ளோ அணைச்சாலும் போத மாட்டேங்குது. அப்படி ஒரு போதை நீ “ என்று ஆர்யன் கிசுகிசுத்தான்.
சஞ்சு அவனை நோக்கித் திரும்ப, அவன் அவளை அறைக்குள் இழுத்துச் சென்றான். இருவரும் மூச்சக் காற்றின் தேவையை உணரும் வரை அவளை முத்தமிட்டான். பின்னர் தன் நெற்றியை அவள் நெற்றியோடு சேர்த்து அழுத்தினான்.
“ஐ லவ் யூ பொண்டாட்டி ” என்று ஆர்யன் சொல்ல, ” ஐ லவ் யூ புருஷா ” என்றாள் சஞ்சு திருப்தியுடன் புன்னகைத்தபடி.
*************************
முன்னோட்டம்:
” என் தங்க பாப்பாவுக்கு என்ன செல்லப்பிராணி வேணும் ?”
