Home FamilyChapter 75

Chapter 75

by Siragugal Novels
11 views

மாயா மேன்ஷனை விட்டு சென்றதும், ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் அறைக்கு சென்றனர். அறைக்குள் நுழைந்ததும் சஞ்சு சோபாவில் அமைதியாக அமர்ந்தாள். ஆர்யன் அவள் அருகில் உட்காராமல், அவள் முன் தரையில் அமர்ந்து, அவள் கைகளை மெதுவாக தன் கைகளால் பற்றிக் கொண்டான். அவன் நிமிர்ந்து அவள் முகத்தைத் தன் விரல்களால் நிமிர்த்தி அவள் கண்கள் அவனது கண்களைச் சந்திக்கும்படி செய்தான்.

“சஞ்சு மா, அவ பொய் சொல்றா. அவள நம்பாத” என்று ஆர்யன் கெஞ்சிய போது அவன் குரல் நடுங்கியது. சஞ்சுவை சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை என்பதை அவன் அறியவில்லை. சஞ்சு அவனுடைய கைகளை தன்னுடைய உதடுகளுக்கருகே கொண்டு சென்று அவன் விரல்களில் மென்மையாக முத்தமிட்டாள். அதன் பிறகு அவனுடைய நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ஆர்யன். என் ஆர்யன பத்தி எனக்கு தெரியும், நான் என்ன நம்புறத விட உன்ன நம்புறேன்” என்று அமைதியான உறுதியுடன் சஞ்சு சொன்னாள்.

அவள் வார்த்தையை கேட்டதும் நிம்மதி அடைந்த ஆர்யன் அவள் மடியில் தலை சாய்த்து அவளது வயிற்றை முத்தமிட்டான்.

” தேங்க்யூ சஞ்சு, நான் அவளுக்கு போதுமான அவகாசம்  கொடுத்துட்டேன் ஆனா இப்போ அதுக்கு வருத்தப்படுறேன். அவ இவ்ளோ தூரம் போன அப்புறம், நான் நமக்காக எதையும் செய்வேன், இப்போ நம்மள தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. எந்த விஷயமும், எண்ணமும் நம்ம குழந்தைய பாதிக்காம நீ நிதானமா அமைதியா இரு. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன், உன்ன நிச்சயம் பாதுகாப்பேன்.” என்று ஆர்யன் அவளுக்கு உறுதியளித்தான்.

“எனக்குத் தெரியும்” என்று சொன்ன சஞ்சு, அவன் தலைமுடியை மெல்ல கோதிவிட்டபடி. “நீ முதல்ல ரிலாக்ஸ் பண்ணு பா, டென்ஷன் ஆகாத, வா போய் சாப்பிடலாம். எனக்கு பசிக்குது, நீ தான் இப்ப எனக்கு சாப்பாடு ஊட்டிவிடனும் “ என்று சொன்னாள்.

சஞ்சு அந்த தருணத்தை இலகுவாக்க முயன்றதும், ஆர்யன் மெல்லிய புன்னகையுடன் சரி என்று தலையசைத்து எழுந்து அவளுக்கு உணவு கொண்டு வர அறையை விட்டு வெளியேறினான். அவன் உணவுடன் திரும்பி வந்ததும், அவளருகில் அமர்ந்து, தன் கைகளால் அவளுக்கு உணவளித்தான். நிபந்தனையின்றி தன்னை நம்பிய ஒரு பெண்ணைப் பெற்றதற்காக அவனது இதயம் நிறைவாக  உணர்ந்தான். அந்த அமைதியான தருணத்தில், அவளைப் பாதுகாப்பதாகவும், எந்த சூழ்நிலையிலும் அவளுடன் நிற்பதாகவும், அவளுடைய மகிழ்ச்சிக்காக எதையும் செய்வதாகவும் அவன் சபதம் செய்தான்.

இதற்கிடையில், விபத்துக்குள்ளான காருக்குள் சிக்கியிருந்த மாயாவின் தலையில் இருந்து இரத்தம் கசிந்தது. அங்கு அருகில் நின்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்தனர். சில நிமிடங்களில், ஆம்புலன்ஸ் வந்ததும், செவிலியர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஜி.பி.எஸ் மூலம் மாயாவின் காரை கண்காணித்த சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்தார். போக்குவரத்து போலீசார் வாகனத்தின் எச்சங்களை அகற்றுவதைக் கண்டதும் அவரது கண்கள் திகிலுடன் விரிந்தன. காரில் இருந்து குதித்து அதிகாரிகளை நோக்கி ஓடி, “ இந்த கார ஓட்டி வந்தவங்க எங்க? என்ன ஆச்சு ?” என்று மூச்சிரைக்க கேட்டார்.

” ஒரு பெரிய ஆக்ஸிடென்ட் நடந்து, அந்தப் பொண்ண இப்போ ஆம்புலன்ஸ்ல ஏபிசி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க “ என்று ஒரு அதிகாரி பதிலளித்தார்.

சந்திரசேகர் அதிர்ச்சியில் மண்டியிட, ராஜேஷ் விரைந்து சென்று அவரை ஆதரவாக பிடித்துக்கொண்டான்.

“சார், மேடம் நல்லா இருப்பாங்க. ப்ளீஸ் ரிலாக்ஸ் பண்ணுங்க, வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று ராஜேஷ் அவரை காரில் அழைத்துச் சென்றான்.

அவர்கள் ஏபிசி மருத்துவமனைக்கு விரைந்து சென்று வரவேற்பறையை அணுகி, “ஒரு விபத்து நடந்து, ஒரு பொண்ணு இப்போ கூட்டிட்டு வந்துருக்காங்க, அவங்க எங்க இருக்காங்க ? என்று ராஜேஷ் அவசரமாகக் கேட்டான்.

“அவங்க ஐ.சி.யுவுல இருக்காங்க, ட்ரீட்மென்ட் நடக்குது ” என்று நர்ஸ் பதிலளித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லும் வழியில் சந்திரசேகரின் கைகள் நடுங்கின. மாயா உள்ளே இருப்பதை உறுதி செய்துவிட்டு வெளியே உட்கார்ந்து மௌனமாக விம்மி விம்மி அழுதார். நிலைமை மோசமடைவதைக் கண்ட ராஜேஷ் ஒதுங்கி நரேனை அழைத்து, “ நரேன் சார், மாயா மேடமுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. இப்போ ஐ.சி.யுவுல இருக்காங்க. உடனே கிளம்பி வானக “ என்றவனின் குரல் உணர்ச்சியில் இறுகியது.

ஒரு நித்தியம் போல் உணர்ந்த நீண்ட மணி நேரத்துக்கு பிறகு, ஐ.சி.யூ கதவுகள் இறுதியாக திறக்கப்பட்டு ஒரு மருத்துவர் வெளியே வந்தார்.

“டாக்டர், என் பொண்ணு எப்படி இருக்கா ? நல்லா இருக்காளா ?” என்று கேட்டவாறே சந்திரசேகர் அவரை நோக்கி விரைந்தார்.

” சார், அவங்க தலையில பலமா அடிப்பட்டு இருக்கு, உடனே ஆபரேஷன் செய்யணும் ஆனா அவங்க பிழைக்க வாய்ப்பு குறைவு தான் “ என்று டாக்டர் சொன்னதும், அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், ” உலகத்துல இருக்க எந்த மூலையில இருந்து வேணும்னாலும் டாக்டர் வர சொல்லுங்க, பணத்த பத்தி கவலைப்படாதீங்க, என் பொண்ண காப்பாத்துங்க டாக்டர், ப்ளீஸ்” என்று சந்திரசேகர் விரக்தியுடன் கெஞ்சினார்.

“எங்களால முடிஞ்சவர முயற்சி செய்வோம் சார் ” என்று டாக்டர் உறுதியளித்தார். அதன் பின்னர் மெல்லிய குரலில், “ அப்புறம் ஸாரி சார், அவங்களுக்கு  கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கு, ” என்று கூறினார்.

டாக்டர் சொன்னதை கேட்டதும், சந்திரசேகரின் உலகமே இடிந்து விழுந்தது போல இருந்தது. அவரது மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள், அவருக்கு முதல் பேரக்குழந்தையாக இருக்கவிருந்த குழந்தையும் அவர் இழந்துவிட்டார்.

” சார், ஒப்புதல் படிவத்துல கையெழுத்து போடுங்க, அப்போ தான் நாங்க ஆபரேஷன் தொடங்க முடியும்,” என்று டாக்டர் மென்மையாக கூறியதும், நடுங்கும் கைகளுடன் சந்திரசேகர் படிவத்தில் கையெழுத்திட்டார். மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்களைத் தொடங்கினர்.

“ஆர்யன் மட்டும் என் மாயாவ ஏத்துகிட்டு இருந்தா இப்படி எதுவும் நடந்திருக்காது” என்று கசப்புடன் நினைத்த சந்திரசேகர், “ ஆர்யன் மட்டும் இல்லனா என் பொண்ணு ராணி மாதிரி வாழ்ந்திருப்பா. ஆனா இப்போ… உயிருக்கு போராடி குழந்தையை இழந்து தவிக்கிறா. குழந்தை ஆர்யனோடதா இல்லனாலும், அவள விரட்டுறதுக்கு முன்னாடி அவன் எனக்காக வெயிட் பண்ணி இருக்கணும். எல்லாம் அவனால தான். ” என்று சந்திரசேகர் கோபத்தில் கொதித்தார்.

அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்க, சந்திரசேகர் நாற்காலியில் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தார், அவர் கண்கள் சிவந்திருந்தன. நெஞ்சு மெளனமாக விம்மி அழுதார். இந்த அறுவை சிகிச்சை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் நடந்தது.

இறுதியாக, அறுவை சிகிச்சை அரங்கிற்கு வெளியே விளக்கு அணைக்கப்பட்டு மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

“டாக்டர், என் பொண்ணு எப்படி இருக்கா ?” என்று மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் சந்திரசேகர் கேட்டதும், “சார், அவங்க உயிர காபாத்திட்டோம் ஆனா… ஆனா, மாயா கோமா நிலையில இருக்காங்க “ என்று டாக்டர் சொன்னதும், ” இல்ல” என்று சந்திரசேகர் அலறியபடி ஆத்திரத்தில் டாக்டரின் காலரைப் பிடித்து,  “நீ அவள காப்பாத்துறதா சொன்ன, அப்புறம் எப்படி அவ கோமாவுக்கு போனா ” என்று கர்ஜித்தார்.

ராஜேஷ் அவரை பின்னுக்கு இழுத்து, அவரை அமைதிப்படுத்த முயன்றான்.

“சார், அமைதியா இருங்க. இது சரியான நேரம் இல்ல. முதல்ல மேடத்துக்கு ட்ரீட்மென்ட் பண்ண ஒரு வழி பார்ப்போம்” என்று ராஜேஷ் வற்புறுத்தினான்.

ஒரு நொடி தன்னை நிதானித்து கொண்ட சந்திரசேகர், “என்ன மன்னிச்சிடுங்க டாக்டர்” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ப்ளீஸ்… அவள பழையபடி கொண்டுவர வழி இருக்கா பாருங்க ? “ என்று கெஞ்சி கேட்டார்.

” சார், அவங்கள கோமாவுல இருந்து வெளியே கொண்டு வர எந்த சிகிச்சையையும் தொடங்குறதுக்கு முன்னாடி அவங்க தலையில இருக்க காயம் குணமாக நாம வெயிட்  பண்ணனும், நீங்க கவலைப்படுறது எனக்குப் புரியுது, நான் சொல்ற எந்த வார்த்தையும் உங்கள ஆறுதல்படுத்த முடியாதுனு எனக்குத் தெரியும். ஆனா உலகத்துல எந்த மூலையில இருந்து நீங்க டாக்டர் கூட்டிட்டு வந்தாலும் அவங்களும் உங்களுக்கு இதே பதில் தான் சொல்லுவாங்க அதனால ப்ளீஸ் என்ன நம்புங்க. முதல்ல அவங்க காயம் குணமாகட்டும் அதுக்கு அப்புறம் நாங்க ட்ரீட்மென்ட் கொடுக்குறோம் “ என்று டாக்டர் விளக்கமாக கூறினார்.

” இந்த தளம் மொத்தமா ரிசர்வ் பண்ணி விஐபி வார்டா மாத்துங்க நான் என் பொண்ண 24×7 கவனிப்புல வெச்சுருக்க விரும்புறேன். எந்த அலட்சியம் இருக்க கூடாது, அடிக்கடி எனக்கு ட்ரீட்மென்ட் பத்தி தகவல் சொல்லணும். மாயவ் கவனிச்சுக்க தனி நர்ஸ் நியமனம் பண்ணுங்க “ என்று சந்திரசேகர் உத்தரவிட்டார்.

“கண்டிப்பா சார், நாங்க பார்த்துக்குறோம். ஒரு மணி நேரம் கழிச்சு அவங்கள வார்டுக்கு மாத்துவோம் அப்போ நீங்க அவங்கள பார்க்கலாம் “ என்று டாக்டர் கூறியதும், சந்திரசேகர் மௌனமாகத் தலையசைத்தார், அவரின் கண்கள் ஐ.சி.யூ கதவில் நிலைத்திருந்தன, அவரது இதயம் சரி செய்ய முடியாத அளவுக்கு நொறுங்கியது.

ஒரு மணி நேரம் கழித்து, மாயா வார்டுக்கு மாற்றப்பட்டாள். மெதுவாக அறைக்குள் நுழைந்த சந்திரசேகரின் பார்வை அவள் மீது விழுந்த நொடியில் அவர் முற்றிலும் உடைந்து போனார். மாயா படுக்கையில் அசையாமல் கிடந்தாள், அவளுடைய துடிப்பான சுயத்தின் வெளிறிய நிழல், இப்போது ஒரு உணர்ச்சியற்ற நிலைக்கு குறைக்கப்பட்டது.

சந்திரசேகரின் மனதில் ஆத்திரம் கொப்பளித்தது. ” எல்லாம் உன்னால தான் ஆர்யன். இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும். நான் அனுபவிக்குற வலிய உனக்கு தருவேன். நான் உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிப்பேன் “ என்று சபதம் எடுத்தவர், ராஜேஷை நோக்கித் திரும்பி, ” ராஜேஷ், உடனடியா நம்ம ஆளுங்கள வர சொல்லி, சஞ்சனாவ நம்ம இடத்துக்கு கடத்திட்டு வர ப்ளான் பண்ணு.” என்று உத்தரவிட்டார், அவர் குரலில் கண்டிப்பும் கோபமும் நிரம்பியிருந்தது. 

அவர் குரலில் இருந்த தீவிரத்தைக் கண்டு ராஜேஷ் தயங்கினான். “சார்… நரேன் சார் இங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாமா?”  என்று தயக்கத்தோடு கேட்டான்.

“இப்போவே செய் ” என்று சந்திரசேகர் கடுமையாக உத்தரவிட்டார்.

அன்று நள்ளிரவுக்கு பிறகு, ஆர்யன் மேன்ஷனில், ஆர்யன் மற்றும் சஞ்சுவும் உறங்கிக் கொண்டிருந்த போது ரஞ்சித் அவர்களின் அரைக் கதவை தட்டினான். இருவரும் திடுக்கிட்டு விழித்ததும், ஆர்யன் விரைந்து சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, ரஞ்சித் முகத்தில் அவசரமும், பதற்றமும் படிந்து நின்றுருந்தான்.

ஆர்யன் முகம் சுளித்து, “ரஞ்சித், என்ன ஆச்சு ? ஏன் பதற்றமா இருக்க?” என்று கேட்டான்.

“சார், மாயா இங்க இருந்து கிளம்பினதும், அவ கார் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு ” என்று ரஞ்சித் கூறியதும், ஆர்யனின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் சஞ்சு.

 “அப்போவே ஏன் எனக்குத் தெரியப்படுத்தல ?” என்று கேட்ட ஆர்யனின் குரல் கூர்மையாக இருந்தது.

“சார், உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவ நிலைமை தெரிஞ்சுக்கலாம்னு காத்திருந்தேன்.” என்று ரஞ்சித் கூறியதும், ” அவ இப்ப எப்படி இருக்கா?” என்று ஆர்யன் சட்டென்று கேட்டான்.

“தலையில பலத்த காயம், அவள காப்பாத்த டாக்டர்ஸ் ஆபரேஷன் பண்ணியும், அவ கோமா நிலைக்கு போயிட்டா. அது மட்டும் இல்ல  அவளுக்கு கருச்சிதைவு ஆயிடுச்சு ” என்று ரஞ்சித் சொன்னதும், சஞ்சுவின் உடல் தளர்ந்து மயங்கினாள். ஆர்யன் சட்டென்று அவளை அணைத்து தூக்கி மெல்ல படுக்கையில் கிடத்தினான்.

“சஞ்சு, கண்ணைத் திற” என்று ஆர்யன் பீதியில் கிசுகிசுத்தான். அப்போது ரஞ்சித் அவனை தடுத்து, ” சார், அவள எழுப்பாதீங்க. அவ இப்போ அதிர்ச்சியில இருக்கா. நாம இப்போ சஞ்சுவ பாதுகாக்கனும்.  சந்திரசேகருக்கு புத்தி பேதலிச்சுடுச்சு, இப்ப என்ன வேணும்னாலும் செய்வாரு ” என்று கூறி நிலைமையை புரிய வைத்தான்.

ஆர்யன் விரக்தியில் முஷ்டியை மடக்கினான். ” இப்படியெல்லாம் நடக்கனும்னு நான் ஒரு நாள் கூட விரும்பல அதனால தான் அவள இங்க இருந்து அனுப்பச் சொன்னேன். ஒரே ஒரு நாள்… ஒரு நாள் எல்லாத்தையும் மாத்திடுச்சு, இத தடுக்க நான் முயற்சி செஞ்சேன் “ என்று வேதனையோடு கூறினான்.

” சார், நமக்கு நேரம் குறைவா இருக்கு, நாம ஏற்கனவே பிளான்  பண்ணத இப்போ செயல்படுத்துவோம்” என்று ரஞ்சித் வலியுறுத்தினான். அதற்கு ஆர்யன் தலையசைத்தான். “ஹ்ம்ம், எனக்கு ஒரு நிமிஷம் டைம் கொடு. நான் கீழ இறங்கி வரேன். நீ போய் எல்லா ஏற்பாடும் பண்ணு “ என்று சொன்னான்.

ரஞ்சித் சென்றதும், ஆர்யன், சஞ்சுவின் பக்கம் திரும்பி அவள் கையை பிடித்து மென்மையாக முத்தமிட்டான். “சஞ்சு… ஸாரி. உன்ன பாதுகாக்க இப்போ எனக்கு வேற வழி இல்ல. எனக்காக வெயிட் பண்ணு, இந்த பிரச்சனை எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, சீக்கிரம் உன்கிட்ட வரேன். அதுக்கு அப்புறம் நம்ம குழந்தையோட நாம சந்தோஷமா இருப்போம். ஐ லவ் யூ, ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ” என்று கிசுகிசுத்த்து அவள் விரல்களை முத்தமிட்டான்.

அவள் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவன், அலமாரிக்கு சென்று அவளது ஆடைகளையும், அவளுக்கு பிடித்த அவனது ஆடைகள் சிலவற்றையும் சேர்த்து பேக் செய்து, பாலாவை அழைத்து லக்கேஜை எடுத்துச் செல்லச் சொன்னான். பின்னர்,  சஞ்சுவை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

ரஞ்சித் டிரைவர் சீட்டில் ஏறினான், ஆர்யன் சஞ்சுவை அணைத்தபடி பின் இருக்கையில் உட்கார்ந்தான், அந்த நள்ளிரவில், ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு, அவர்கள் ஒரு அமைதியான சாலையோரத்தில் நின்றதும், அங்கு ஒரு சாதாரண கார் காத்திருந்தது. சஞ்சுவை கவனித்துக்கொள்ள ஆர்யன் ஏற்பாடு செய்திருந்த நம்பிக்கைக்குரிய மருத்துவர் ஒருவருடன் பிரதீப் அந்த கார் அருகில் நின்று கொண்டிருந்தான்.

ஆர்யன் மெதுவாக சஞ்சுவை அந்த காரின் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டான், அவனது கண்களில் கண்ணீர் பளபளத்தது. ஆர்யன் டாக்டரிடம் திரும்ப, ரஞ்சித் லக்கேஜை காரின் டிரங்கில் வைத்தான்.

“டாக்டர், அவள நல்லா பார்த்துக்கோங்க. நான் உங்களுக்கு போன் பண்ற வர வெயிட் பண்ணுங்க. அவ எழுந்த உடனே இந்த லெட்டர் அவகிட்ட கொடுங்க” என்று சொல்லி சீல் வைக்கப்பட்ட உறையைக் அவரிடம் கொடுத்தான்.

“ஆர்யன், நாம நேரத்த வீணடிக்க முடியாது. சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினான் பிரதீப்.

ஆர்யன் தலையசைத்து, சஞ்சுவை பார்த்தபடி, ” நல்லா பார்த்துக்கோங்க டாக்டர். நான் சீக்கிரம் வந்து அவள சந்திப்பேன். நீங்க மொபைல், லேப்டாப் எதுவும் பயனப்படுத்த கூடாது. ஒரே ஒரு நபர் மூலமா தான் நாம தொடர்புல இருப்போம். நீங்க எந்த ஒரு மொபைல், லேப்டாப் பயன்ப்படுத்த கூடாது. நானே போன் பண்ணி பேசுற வர வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு புரியும்னு நம்புறேன் “ என்று உறுதியாக சொன்னான்.

” கவலைப்படாதீங்க சார், அவங்கள நான் நல்லா பார்த்துக்குறேன் ” என்று டாக்டர் ஆர்யனுக்கு உறுதியளித்தார்.

“நீங்க உடனே கிளம்புங்க, நேரமாகுது ” என்றபடி ஆர்யன் காரில் இருந்து பின்வாங்கினான்.

டாக்டர் காரை ஓட்டிச் செல்ல, கார் அவன் பார்வையில் இருந்து மறையும் வரை ஆர்யன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் தளர்ந்தன. அவன் சாலையில் மண்டியிட்டு, கண்ணிர் தாராளமாகப் பெருக்கெடுக்க அழுதான். ரஞ்சித்தும், பிரதீப்பும் ஓடிசென்று அவனை கட்டிப்பிடித்து மௌன ஆறுதல் கூறினர்.

“சார் நாம கிளம்பலாம் ப்ளீஸ்” என்றான் ரஞ்சித் மென்மையாக.

அவர்கள் காரில் ஏறி வேறு பாதையில் சென்றனர், மேலும் நான்கு மணி நேரம் காரில் சுற்றி திரிந்த பின் மேன்ஷனுக்கு திரும்பினர். ஆர்யன் அவன் அறைக்குள் நுழைந்த போது பொழுது விடிந்துவிட்டது. நேராக பாத்ரூமுக்குள் நுழைந்து ஷவருக்கு அடியில் நின்ற போது மௌனமாகக் கண்ணீருடன் தண்ணீர் வழிந்து ஓடியது.

அவன் எண்ணங்கள் கொந்தளிப்பில் கொந்தளித்தன.

“எல்லாமே என்னால தான் நடக்குது, என்னால மட்டும் தான் சஞ்சு இவ்ளோ கஷ்டப்படுறா. சந்திரசேகர் மேல எனக்கு இரக்கம் வராம இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. அவர் மேல நான் வெச்சுருந்த மரியாதை என்ன குருடனாக்கி… மாயாவ காயப்படுத்தாம பண்ணிடுச்சு. அவர் இந்த வலியை அனுபவிக்க கூடாதுனு நான் அமைதியா இருந்தேன். ஆனா இனிமே இது எதுவும் நடக்காது ” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவனின் குரல் இறுகியது.

” இனி இல்ல, என் சஞ்சுவ பாதுகாக்குறதுல இருந்து என்ன யாரும் தடுக்க முடியாது. அவளுக்காக நான் எதையும் செய்வேன். இதுவரை மௌனமா, பொறுமையா இருந்தது போதும். ஸாரி மிஸ்டர் சந்திரசேகர்… என் சஞ்சுவுக்காக நான் உங்க கூட சண்ட போட வேண்டியிருந்தா அப்படியே ஆகட்டும்” என்றான் தீர்க்கமாக, அவன் முஷ்டிகள் இறுகின.

“உங்க பொண்ணோட முட்டாள்தனத்துக்காக என்னையோ என் மனைவியையோ நீங்க பழிவாங்க முடியாது. மிஸ்டர் சந்திரசேகர், என் மனைவிய தொட நெனச்சா என் கோபத்த நீங்க எதிர்கொள்ள தயாரா இருக்கணும் ” என்று சொல்லி சுவரில் ஓங்கி அடித்தான்.

*****************

முன்னோட்டம்:

என் பொண்டாட்டி என்ன ரொம்ப மிஸ் பண்ணுவானு எனக்குத் தெரியும், அதனால நான் உனக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.

இப்போ நீ இருக்குஇடம் நம்ம வீடு. ரூம் விட்டு வெளிய போய் அந்த இடத்த நல்லா சுத்தி பாரு, எல்லா இடத்துலையும் நான் இருக்குறத நீ உணருவ. நான் உடல் ரீதியாக உன்கூட அனங்க இல்லாம இருக்கலாம், ஆனா என் உயிரும், மனசும் உன் கூட தான் இருக்கு. உன்ன பார்த்துக்க சிறப்பான ஒருத்தர் அங்க இருக்காங்க. “

 

 

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!