Home FamilyChapter 82

Chapter 82

by Siragugal Novels
9 views

ரகசிய இடத்தில் ரஞ்சித் காத்திருந்த அறைக்கு முன் நின்ற ஆர்யன் அவன் கண்ட காட்சியால் அதிர்ச்சியடைந்து அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான், அவனது பார்வை தனக்கு முன்னால் இருந்த கந்தல் உடையணிந்த உருவங்கள் மீது பதிந்தபோது அவன் மூச்சு தொண்டையில் சிக்கிக்கொண்டது. எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அந்த சிறையில் இருந்தனர். அவர்களுடைய தலைமுடி கலைந்திருந்தது, அவர்களுடைய உடைகள் கிழிந்திருந்தன, அவர்களுடைய உடல்கள் களைப்பில் அலறும் விதத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆனால் ஆர்யனுக்கு அவர்கள் யார் என்று உடனடியாக தெரிந்தது.

மெல்ல உள்ளே சென்றவன், “அம்மா… அப்பா…” என்று நம்ப முடியாமல் முணுமுணுத்தவனின் குரல் உடைந்தது. “இங்க இருக்கீங்களா? நீங்க ஏன் பேசாம இருக்கீங்க ? அம்மா ப்ளீஸ்… என்கிட்ட பேசுங்க ” என்று ஆர்யன் கெஞ்சினான்.

அந்த வயதான தம்பதிகள் பதில் ஏதும் சொல்லவில்லை. கனத்தும் கண்ணாடி போல இருந்த அவர்களுடைய கண்கள் மெளனமாகக் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. ஆனால் வேறு எந்த எதிர்வினையும் அவர்களிடம் இருந்து வரவில்லை. எந்த அசைவும் இல்லை, வாழ்க்கையின் எந்த மினுமினுப்பும் இல்லை.

ரஞ்சித், ஆர்யனின் அருகில் சென்று அவன் தோளில் ஆதரவாக  கையை வைத்து அழுத்தினான். “சார், அவங்க அசைவுகள நிறுத்த ஏதோ கெமிக்கல் ஊசி போட்ட மாதிரி தெரியுது. அவங்கள இங்கிருந்து கூட்டிட்டு போகலாம் ” என்று கூறினான்.

ஆர்யன் பேச முடியாமல் வெறுமனே சரி என்று தலையசைத்தான். எழுந்து நின்றவன் மெல்ல தன் அம்மாவைத் தூக்கிக் கொண்டான். ரஞ்சித் ஆர்யனின் தந்தையை சுமந்தான். இருவரும் அங்கிருந்து விரைந்து வெளியேறி நேராக மருத்துவமனைக்குச் சென்றனர், ஆர்யன் தனது தாயை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டான், அவரது அசைவற்ற, வெளிறிய உருவத்தைப் பார்த்த போது அவனால் தாங்க முடியாமல் கண்ணீர் தாராளமாக விழுந்தது.

அவர்கள் மருத்துவமனையை அடைந்ததும் தலைமை மருத்துவர் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார். ஆர்யன் வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து, தலை குனிந்து, கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுதான். அவனது துக்கம் விரைவில் கோபமாக மாறியது. கண்கள் கலங்க ரஞ்சித்தை நிமிர்ந்து பார்த்தான்.

“ரஞ்சித், சந்திரசேகர் இப்போ எங்க இருக்கான் ?” என்று ஆர்யன் கேட்க, “ மாயா கூட ஹாஸ்பிடல்ல இருக்காரு ” என்றான் ரஞ்சித்.

“நரேன் கிட்ட அந்த இடத்துல நீ எதையும் பார்க்கலைனு சொல்லு. அங்க இருந்த சந்திரசேகரோட ஆளுங்க எல்லாரையும் நம்ம கஸ்டடியில வை. அவங்க இருந்த ஒருத்தர் கூட வெளி ஆளுங்க யார் கிட்டயும் பேசக்கூடாது, அங்க என்ன நடந்துச்சுனு எந்த விஷயமும் வெளியே கசிய கூடாது “ என்று ஆர்யன் உத்தரவிட்டான். அதற்கு ரஞ்சித் உடனே அவனிடம், “ சரி சார். நீங்க சொல்ற மாதிரி செய்றேன் ” என்றான்.

” அந்த சந்திரசேகருக்கு நான் தான் எமனா இருப்பேன், மாயாவோட ஆபரேஷன இந்த வாரமே செய்ய ஏற்பாடு பண்ணி, நரேன் கிட்ட தகவல் சொல்லிடு “ என்று ஆர்யன் உறுமினான். அவனது கோபம் எரிமலையாய் இருந்தது, அதில் சந்திரசேகரை உருத்தெரியாமல் அழிக்க காத்திருந்தான். 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, டாக்டர் இறுதியாக வெளியே வந்ததும், உடனே ஆர்யன் எழுந்து நின்றான்.

“டாக்டர், அவங்களுக்கு என்ன ஆச்சு? அவங்க ஏன் எப்படி இருக்காங்க?” என்று ஆர்யன் அவசரமாக கேட்க, “சார், அவங்க உடம்பு இயக்கத்த நிறுத்த அவங்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கு. நாம் சொல்றத அவங்களால கேட்க முடியும், ஆனா அவங்களால பதில் சொல்ல முடியாது. அவங்க இரத்தத்துல  மருந்து அளவு ரொம்ப அதிகமா இருக்கு, நாங்க உடனே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிட்டோம் ஆனா அவங்க முழுமையா குணமடைய ரொம்ப நேரம் எடுக்கும் “ என்று டாக்டர் நிதானமாக அவர்களின் நிலைமையை கூறினார்.

அவர் சொன்னதை கேட்ட ஆர்யன், “ப்ளீஸ், அவங்கள குணப்படுத்த உங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யுங்க” என்று கெஞ்சினான். அவன் வேதனையை பார்த்த டாக்டர், “கண்டிப்பா சார். நீங்க இப்ப போய் அவங்கள பார்க்கலாம்.” என்று கூறினார்.

ஆர்யன் தயங்கியபடி ஐ.சி.யு.வுக்குள் நுழைந்தான். மருந்துகளின் தாக்கத்தில் அவனது பெற்றோர் நினைவிழந்து கிடந்தனர், அவர்களைச் சுற்றி இயந்திரங்கள் மெதுவாக ஒலி எழுப்பின. அவர்கள் இருவரின் கையையும் தன் கைகளில் பிடித்துக்கொண்டான்.

” அம்மா, அப்பா ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க ” என்று கிசுகிசுத்தான், அவனது குரல் உணர்ச்சியால் தடித்தது. ” நீங்க உயிரோட இருக்குறது கூட எனக்கு தெரியாம நான் ஒரு முட்டாளா இருந்துருக்கேன். இவ்வளவு வருஷம் நீங்க நரகத்துல வாழ்ந்துட்டு  இருந்துருக்கீங்க இதுக்காக என்ன நானே மன்னிக்க மாட்டேன் “ என்று சொல்லி அவர்கள் கையை முத்தமிட்டு அழுதான்.

நீண்ட நேரம் கழித்து ஆர்யன் ஐ.சி.யுவில் இருந்து வெளியே வந்து ரஞ்சித் பக்கம் திரும்பினான்.

“வா ராஜேஷ் கிட்ட போகலாம்.” என்று சொன்னான்.

இருவரும் மருத்துவமனையை விட்டு புறப்பட்டு ரகசிய இடத்தை அடைந்து, நேராக ராஜேஷ் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர். ஆர்யன் உள்ளே நுழைந்ததும், ஆத்திரம் பொங்க, ராஜேஷின் மார்பில் எட்டி உதைத்தான். அப்போது நாற்காலியில் கட்டப்பட்டிருந்த ராஜேஷ் தரையில் பின்னோக்கி விழுந்தான். ஆர்யன் அவனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து மீண்டும் மீண்டும் குத்தினான்.

” இப்போ எனக்குள்ள இருக்க மிருகத்த பார்க்க நினைக்காத, என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அவன் ஏன் என் அப்பா, அம்மாவ அப்படி பண்ணான் ? ” என்று கேட்டு ஆர்யன் கர்ஜித்தான்.

” சார், எனக்குத் தெரியாது. சத்தியமா சொல்றேன், நான் அவங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல” என்று ராஜேஷ் அழுதான். அதை கேட்டதும், “ ரஞ்சித், டாக்டர் கிட்ட கேட்டு என் அப்பா, அம்மாவுக்கு கொடுத்த அதே மருந்த வாங்கி, வாழ்நாள் முழுக்க இவன அசைய முடியாதபடி செய்” என்று ஆர்யன் உறுமினான்.

” சார் சத்தியமா சொல்றேன், தயவு செஞ்சு என்ன நம்புங்க” என்று ராஜேஷ் பதற்றத்தில் கண்களை அகல விரித்து கெஞ்சினான். ” அந்த ரகசிய இடம் பத்தி எனக்குத் தெரியும், ஆனா நான் அந்த ஒரு ரூம் உள்ள போனதே இல்ல. சந்திரசேகர் சார் மட்டும் தான் நைட்ல அங்க போவாரு, எனக்கு வேற எதுவும் தெரியாது “ என்று அழுது புலம்பினான்.

“என் சஞ்சுவ தேட சொல்லி நீ அனுப்புன ஆளுங்க எல்லாரையும் திரும்ப கூப்பிட்டு உடனே தேடுறத நிறுத்த சொல்லு “ என்று ஆர்யன் கட்டளையிட்டதும், ரஞ்சித் ராஜேஷின் கைகளை அவிழ்த்து அவனது செல்போனை அவனிடம் கொடுத்தான். ராஜேஷ் நடுக்கத்துடன் ஒவ்வொரு எண்ணாக அழைத்து, தங்கள் பணியை நிறுத்திவிட்டு தங்கள் இடங்களுக்கு திரும்புமாறு தனது ஆட்கள் அனைவருக்கும் அறிவுறுத்தினான். அதையடுத்து அவனை மீண்டும் கட்டிப்போட்டு சிறையை ரஞ்சித் பூட்டினான்.

அவர்கள் கிளம்பத் தயாரானபோது, ராஜேஷின் மொபைல் ஒலித்தது. ரஞ்சித் அதை எடுத்து சந்திரசேகரின் பெயரை பார்த்து ஆர்யனிடம் காட்டினான்.

ஆர்யன் உடனே ராஜேஷ் பக்கம் திரும்பி, “சஞ்சு இருக்க இடம் பத்தி தகவல் கிடைச்சு அவள கூட்டிட்டு வர போயிருக்கனு சொல்லு.” என்று சொன்னான். ராஜேஷும் சரி என்று தலையசைக்க, ரஞ்சித் ஸ்பீக்கரில் அழைப்புக்கு பதில் சொன்னான்.

“ராஜேஷ், நீ எங்க இருக்க?” என்று சந்திரசேகரின் குரல் கேட்டதும், “சார், ஆர்யன் சஞ்சனாவ பெங்களூர்ல எங்க ஒளிச்சு வெச்சுருக்கார்னு எனக்கு ஒரு தகவல் கெடச்சுது. அவள கடத்திட்டு வர நானே நேரடியா ஆளுங்களோட போறேன் “ என்று ரஞ்சித் பதில் சொன்னான்.

” எதுவும் பிரச்சனையா ?” என்று சந்திரசேகர் கேட்க, ” ஏதும் பிரச்சன இல்ல சார். எல்லாமே சரியா தான் போய்ட்டு இருக்கு. நான் சீக்கிரம் சஞ்சனாவோட வந்துடறேன்.” என்று ராஜேஷ் சொன்னான்.

“நல்லது. அப்புறம் அவள என் செல்லுக்கு கூட்டிட்டு போ அதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணு ” என்று சந்திரசேகர் சொல்ல, “கண்டிப்பா சார். நான் அப்படியே செய்றேன், காலையில வேலை முடிஞ்சிடும் “ என்று பதில் அளித்தான் ராஜேஷ்.

அழைப்பு முடிந்ததும், ஆர்யனும் ரஞ்சித்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு செல்லை விட்டு வெளியேறினர்.

அவர்கள் நரேனை தொடர்பு கொண்டு, அவனது தந்தைக்கு எதிராக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், வீட்டின் அமைதியான ஒரு மூலையில், சஞ்சு தோட்டத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள், அவளுடைய விரல்கள் அவளது வளர்ந்து வரும் வயிற்றை மெதுவாக வருடின.  தன் குழந்தையிடம் அவள் பேசும் போது அவளுடைய கண்கள் கனிவுடன் மென்மையாக இருந்தன, அவளுடைய குரல் இனிமையாகவும் அன்பு நிறைந்ததாகவும் இருந்தது. அது அவளுக்கு பாதுகாப்பான இடமாக, அமைதியின் புகலிடமாக மாறியிருந்தது.

பானுவும், தீபாவும் தங்களுக்கு முன்னால் தெரிந்த அமைதியான காட்சியைப் பார்த்துக் கொண்டே அமைதியாக அவள் அருகில் சென்றனர்.

பானு சிறு புன்னகையுடன் நெருங்க, தீபா அவரை பின்தொடர்ந்தார்.

“உங்க குழந்தைகிட்ட பேசி முடிச்சிட்டீங்களா?” என்று பானு லேசாக கிண்டல் செய்தார். அதை கேட்டதும், சஞ்சு புன்னகைத்தாள், அவள் கண்கள் இன்னும் வயிற்றிலேயே இருந்தன. “எங்க குழந்தைக்கு சொல்ல இன்னும் நிறைய இருக்கு, இது சும்மா கொஞ்ச நாள்ல சொல்லி முடிக்க முடியாது “ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“உங்க லவ் ஸ்டோரியை குழந்தைகிட்ட சொல்றீங்களா?” என்று பானு ஆச்சரியமாக கேட்க, “நான் எங்க குழந்தைக்கு அன்பு, காதல் பத்தி சொல்லி கொடுக்குறேன். எதிர்பார்ப்பு எதுவும் இல்லாம எதையும் கொடுக்க மட்டுமே தெரிய வேண்டிய அன்பு பத்தி சொல்றேன் “ என்று சஞ்சுவின் குரல் மென்மையாக பதிலளித்தாள்.

“எனக்குப் புரியுது ” என்று பானு சொன்னார்.

சஞ்சு பெருமூச்சு விட்டாள், அவள் கண்கள் கலங்கின. “மாயா உண்மையிலேயே ஆர்யனை லவ் பண்ணி இருந்தா இவ்ளோ தூரம் போயிருக்க மாட்டா. இன்னிக்கு நாங்க இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம், அவளும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்திருப்பா ” என்று வேதனையோட சொன்னாள்.

சஞ்சுவின் தோளில் அன்பாக கை வைத்த தீபா, “என்ன நம்பு சஞ்சு,  சார் சீக்கிரமே வந்து உன்ன கூட்டிட்டு போவாரு. யாருக்கு தெரியும்? நாளைக்கே கூட வரலாம்.” என்று புன்னகையோடு சொன்னதும், “அப்படி மட்டும் நடந்தா, உங்கள என் கூட கடத்திட்டு போயிடுவேன் “என்று சஞ்சு மெலிதாகச் சிரித்தாள்.

” அய்யோ, அம்மாடி வேணாம் டா. எனக்கு இந்த ஊரு பழகிடுச்சு அதனால உனக்கு குழந்த பிறக்கும் போது நான் வந்து உன்ன பார்க்குறேன் “ என்று தீப அதற்கு பதில் அளித்தார். சரியாக அப்போது, தீபாவின் மொபைல் பாலாவிடம் இருந்து ஒரு வீடியோ அழைப்பாக ஒலித்தது. அவர் உடனடியாக பதிலளித்ததும்  ஆர்யனின் முகம் திரையில் தோன்றியது.

தீபா பேசத் தயங்கி, ஆர்யன் உரையாடலைத் தொடங்கும் வரை காத்திருந்தார்.

“தீபா ஆண்ட்டி, நீங்க பேசலாம். இப்போ ஒன்னும் பிரச்சன இல்ல ” என்று ஆர்யன் சொன்னதும், “ அப்படியா சார் ? இதோ நான் மொபைல சஞ்சுகிட்ட கொடுக்குறேன் “ என்று சொல்லி மொபைலை சஞ்சுவிடம் கொடுத்தார்.

“ஆர்யன், எப்படி இருக்க?” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள் சஞ்சு. அதற்கு ஆர்யன் அவளிடம், “சஞ்சு, நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன். அங்க எல்லாம் எப்படி நடக்குது?” என்று சஞ்சு கேட்டதும், “எல்லாமே பிளான் பண்ண மாதிரி நடக்குது மா. இப்போ எனக்கு உன் உதவி தேவை. செய்வியா ?” என்று அவன்  தீர்மானத்துடன் கேட்டதும், “உனக்காக நான் எதையும் செய்வேன், சொல்லு என்ன செய்யணும் ?” என்றாள் சஞ்சு.

“ மொபைல தீபா ஆன்டி கிட்ட கொடு “ என்று ஆர்யன் கேட்டுக்கொண்டதும் சஞ்சு உடனே அவரிடம் மொபைலை கொடுத்தாள்.

” தீபா ஆன்ட்டி, நீங்களும் பானுவும் சேர்ந்து சஞ்சுவை ஒரு பணயக் கைதி மாதிரி ஒரு நாற்காலியில கட்டி போடுங்க. அப்படியே ஒரு போட்டோ, வீடியோ எடுத்து எனக்கு உடனே அனுப்புங்க “ என்று ஆர்யன் சொன்னதும், ஏன் என்று எந்த கேள்வியும் கேட்காமல், “கண்டிப்பா சார். நான் உடனே எல்லாத்தையும் ரெடி பண்றேன்” என்றார் தீபா.

” ரொம்ப நன்றி தீபா ஆண்ட்டி.” என்று ஆர்யன் சொன்னதும், மொபைலை சஞ்சுவிடம் கொடுத்துவிட்டு, பானுவும் தீபாவும் பொருட்களை தயார் செய்ய உள்ளே சென்றனர். சஞ்சு மெல்லிய புன்னகையுடன் திரையில் ஆர்யனைப் பார்த்தாள்.

” பொண்டாட்டி, சீக்கிரம் உன்ன என்கூட கூட்டிட்டு வர அங்க வருவேன். கவலைப்படாத, சரியா?” என்று ஆர்யன சொல்ல, “ஹ்ம்ம்… சரி, நீ பத்திரமா இரு. ஐ லவ் யூ.” என்றாள் சஞ்சு.

” ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட், சரி அப்புறம் பேசுறேன், டேக் கேர்.” என்று சொல்லி அவன் காற்றில் ஒரு முத்தம் கொடுத்தான். அழைப்பு முடிவதற்குள் சஞ்சு ஒரு சிறிய சைகையுடன் அதை திருப்பிக் கொடுத்தாள்.

சிறிது நேரத்தில், தீபாவும் பானுவும் சஞ்சுவை வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர். அவளை நாற்காலியில் கட்டி வைத்து, தலைமுடியை கலைத்து, வியர்வை இருப்பது போல அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சஞ்சு கண்களை மூடிக்கொண்டு மயக்கத்தில் இருப்பது போல நடித்தாள். விளக்குகள் மங்கலாக இருந்தன, ஆர்யன் கேட்டுக்கொண்டது போல அவளை பணயக்கைதியாகத் தோன்றும் ஒரு குறுகிய வீடியோவையும், போட்டோவையும் எடுத்து உடனே ஆர்யனுக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் இருந்து டி.சி. இல்லத்திற்கு திரும்பிய சந்திரசேகர், சில நொடிகளுக்கு ஒருமுறை தனது மொபைலை நோட்டமிட்டபடி அமைதியின்றி நடந்து கொண்டிருந்தார். ராஜேஷிடம் இருந்து கடைசியாக அவருக்கு தகவல் வந்து 24 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு சந்தேகம் வராமல் இருக்க ரஞ்சித் அவனது ஆட்களை, சந்திரசேகரின் ஆட்களை போல காவலுக்கு வைத்தான்.  

சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த நரேன் அவரது பதற்றமான நிலையைக் கவனித்து, ” என்ன ஆச்சு ? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ? “ என்று கேட்டான்.

” ஒண்ணுமில்ல, பிசினஸ் சம்மந்தமா ஒரு போன் வர வெயிட் பண்றேன் “ என்று சந்திரசேகர் கூறினார். அதை கேட்ட நரேன், “அத நான் நம்பனும் ? “ என்று ஏளனமாய் கேட்டான்.

சந்திரசேகர் பதில் சொல்லாமல் அமைதியாக நடந்து சென்றார்.

திட்டப்படி ராஜேஷ் சந்திரசேகரை அழைக்க வைத்தான் ரஞ்சித்.

“எங்க இருக்க ராஜேஷ்? ஏன் உன் மொபைல் சுவிட்ச் ஆப் ஆச்சு?” என்று அழைப்பு வந்ததும் சந்திரசேகர் கத்தினார்.

“சார், வேலை முடிஞ்சுது, சஞ்சனா பெங்களூர்ல என் கஸ்டடியில இருக்கா. ஆர்யனோட ஆளுங்க என்ன தேடுறாங்க அதனால அவள இன்னும் ஒரு ரெண்டு நாள் இங்கேயே வெச்சுருக்குறது தான் பாதுகாப்பா இருக்கும். அதுக்கு அப்புறம் நான் அவள உங்க கிட்ட  கூட்டிட்டு வரேன்.” என்று ராஜேஷ் கூறினான். அதை கேட்ட சந்திரசேகர் உடனே, “ நான் அவள பார்க்கனும் “ என்று கூறினார்.

“கண்டிப்பா சார். நான் உங்களுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன் அதுக்கு அப்புறம் என் மொபைல சுவிட்ச் ஆப் பண்ணிட்டு, வேற நம்பர்ல இருந்து கூப்பிடறேன்.” என்று ராஜேஷ் சொன்னதும், ” இது அற்புதம். அப்ப உடனே எனக்கு வீடியோ அனுப்பு.” என்று சொன்னார்.

தீபா எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை ராஜேஷ் அவருக்கு அனுப்பியதும் ரஞ்சித் போனை சுவிட்ச் ஆஃப் செய்தான். அந்த வீடியோவை பார்த்த சந்திரசேகர் உடனடியாக ஆர்யனை அழைத்தார்.

அவர் அழைப்பை எதிர்ப்பார்த்து காத்திருந்த ஆர்யன், ஏளன சிரிப்புடன், “ ஹ்ம்ம் சொல்லுங்க” என்றான்.

“எனக்கு உன்கிட்ட பேச ஒரு பிசினஸ் டீல் இருக்கு. நேர்ல சந்திக்கலாமா ?” என்று சாதாரணமாகக் கேட்டார் சந்திரசேகர்.

“என்ன டீல்? எதுவா இருந்தாலும் போன்ல பேசலாம்” என்று ஆர்யன் சொல்ல, “ பெருசா ஒண்ணுமில்ல, சஞ்சனா என் கஸ்டடியில இருக்கா “ என்று சந்திரசேகர் அலட்சியமாக சொன்னார்.

“அது சாத்தியமில்ல, என் மனைவிய நெருங்க கூட நினைக்காதீங்க  ” என்றான் ஆர்யன் கூர்மையாக.

” நீ நம்ப மாட்டணு எனக்கு தெரியும், அப்படியே லைன்ல இரு, என் கஸ்டடியில இருக்குற உன் மனைவியோட வீடியோவ உனக்கு  அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினார்.

ஆர்யன் முஷ்டியை மடக்கியபடி வீடியோவைப் பார்த்தான்.

” அவள விடுங்க, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க “ என்றான் அவன் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் கொண்டு.

“இரு ஆர்யன் அவசரப்படாத, இப்போ பிசினஸ் பேசுற இடத்துல நான் இருக்கேன் “ என்று சொன்னதும், ” உங்களுக்கு என்ன வேணும்?” என்று ஆர்யன் மீண்டும் கேட்டான்.

” மொத்த ஏ.ஆர்.சி.யோட ஐம்பது சதவீத பங்கு, உன் அம்மாவோட விலைமதிப்பில்லாத நீல வைரம். அப்புறம் கடைசியா என் பொண்ண நீ கல்யாணம் பண்ணனும் “ என்று சந்திரசேகர் பட்டியலிட்டார்.

அவர் சொன்னதை கேட்டு ஆர்யன் பல்லைக் கடித்துக் கொண்டான். ” உங்க கிட்ட ஏற்கனவே நிறைய வைரங்கள இருக்கும் போது சொந்தமாக இருக்கும்போது உஏன் அந்த நீல வைரத்த கேட்குறீங்க ?” என்று கோவமாக கேட்டான்.

” கோவப்படாத ஆர்யன் அதுக்கு பதில் நான் உனக்கு வேற விசேஷ பரிசு தர்றேன் அதனால எந்த கேள்வியும் கேட்காம அத கொடு. நாளைக்கு காலையில நான் கேட்டது எல்லாம் நடக்கணும் அதுக்கு அப்புறம் நீ உன் மனைவி அப்புறம் நான் உனக்காக வெச்சுருக்க விசேஷ பரிசையும் வாங்கிட்டு போலாம் “ என்று சொல்லி சந்திரசேகர் சிரித்தார்.

“நீங்க கேட்டதையெல்லாம் நான் தரேன் ஆனா என்னால மாயாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்று ஆர்யன் சொல்ல, ” உனக்கு வேற வழியில்ல” என்றார் சந்திரசேகர்.

” எனக்கு சஞ்சு கூட கல்யாணம் ஆயிடுச்சு.” என்று ஆர்யன் சொன்னதும், “கவலைப்படாத, அவள விவாகரத்து செய்ய தேவையான டாகுமென்ட் நான் ரெடி பண்றேன். நாளைக்கு காலையில உனக்கு போன் பண்றேன். ஹாஸ்பிடல் வந்து  மாயாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு, நான் கேட்டதையெல்லாம் கொடுத்துடு. அதுக்கு அப்புறம் சஞ்சனா அவளோட மாமா வீட்டுக்கு பாதுகாப்பா போய் சேருவா “ என்று கூறினார்.

ஆர்யன் அழைப்பை முடித்துவிட்டு முகம் இருண்டு ரஞ்சித்தை நோக்கித் திரும்பினான்.

“அந்த வைரத்துக்காக இதையெல்லாம் செய்தானா? ஆனா அந்த வைரத்துக்காக இவ்ளோ கொடுமையெல்லாம் செய்ற அளவுக்கு அதுல என்ன விசேஷம் இருக்க முடியும்?” என்று ரஞ்சித் கேட்டான்.

“எனக்கும் தெரியல, எல்லாமே அந்த வைரத்துக்காக தான் செஞ்சிருந்தா அப்போ என் அப்பா, அம்மா தான் இதுக்கு பதில் சொல்ல முடியும். இப்போ நம்ம அடுத்த கட்ட நடவடிக்கைய  ஆரம்பிக்க நேரம் வந்துடுச்சு “ என்று ஆர்யன் சொன்னான்.

மறுநாள் காலை, சந்திரசேகர் முகத்தில் ஒரு பிராகசமான புன்னகையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். விவாகரத்து ஆவணங்கள் மற்றும் ஆர்யனின் பங்குகளை பெறுவதற்கான  ஆவணங்களை அவர் தயாராக வைத்திருந்தார், இறுதியாக தனது வெற்றி எட்டக்கூடியது என்ற நம்பிக்கையுடன். அவர் மருத்துவமனையை நோக்கிச் சென்றார்.

அவரது கார் ஒரு சிக்னலைத் தாண்டியபோது, ஒரு பெரிய லாரி பயங்கர சக்தியுடன் அதன் மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் மற்றும் உள்ளே இருந்த இன்னொரு நபர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

******************************

முன்னோட்டம்:

“நரேன், இந்தாங்க டெத் சர்டிபிகேட். சந்திரசேகர் சார் கூட இருந்த அந்த இன்னொரு ஆள் ராஜேஷ் தான் “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!