மைரா அறையை விட்டு வெளியே வந்த போது ரோஷினியும் அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். மைரா அவளை புறக்கணித்து செல்ல முயன்றாள் ஆனால் ரோஷினி அவளுக்கு முன்னால் நின்று அவளை தடுத்தாள்.
“ ஒரு வழியா நீ நெனச்சத நடத்திட்ட தானே ? நான் உன்ன ரொம்ப குறைச்சு மதிப்பு போட்டுட்டேன் மைரா. என்ன வெறுப்பேத்த தான் நீ கேஷவ கல்யாணம் பண்ணி இருக்கனு தினமும் உன்ன பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோணனும் அது தானே உன் எண்ணம் ? உன்ன நான் வெறுக்குறேன்னு உனக்குத் தெரியும், இருந்தாலும் நீ அவர கல்யாணம் பண்ணி இப்போ ஒரே வீட்ல இருக்க முடிவு பண்ணி இருக்கல ? “ என்று ரோஷினி சீறினாள்.
“ ‘நீ’ சொல்லி பேசக் கூடாது ரோஷினி, ‘நீங்கனு’ மரியாதை கொடுத்து பேசு, அது தான் நல்லது, ஏன்னா நான் இப்போ பக்கத்து வீட்டு மைரா இல்ல, உன் வருங்கால புருஷனோடு அண்ணன கல்யாணம் பண்ணி இருக்கேன், அதாவது உறவு முறையில நான் உன்ன விட மூத்தவ. அப்புறம் கேஷவ பெயர் சொல்லி கூப்பிடாத, அவர் உன்ன விட வயசுல பெரியவரு அதனால அண்ணானு கூப்பிடு அது தான் உனக்கு நல்லது. இப்போ நல்ல பொண்ணா, என் வழியில இருந்து விலகி போ “ என்று சொல்லி ரோஷினியின் கன்னத்தில் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றாள் மைரா.
அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்ததால் அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு உணவுக்குப் பிறகு கேஷவ் தனது அறைக்குத் திரும்பினான்.
அர்ச்சனா மற்றும் வசுந்த்ரா உதவியை ஏற்க மறுத்த போதிலும், பாத்திரங்களை கழுவ மைரா உதவிக் கொண்டிருந்தாள்.
கேஷவ் மற்றும் மைரா மீது எதையும் திணிக்க வேண்டாம் என்று பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர், எனவே முதல் இரவைப் பற்றி யாரும் பேசவில்லை.
வசுந்தராவும், ராஜனும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினர். மைரா தயங்கித் தயங்கி சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள், ஆனால் அவளது எண்ணமெல்லாம் கேஷவுடன் அறையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே இருந்தது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட அர்ச்சனா மைராவின் அருகில் அமர்ந்து அவள் தலைமுடியைக் கோதினார்.
“ மைரா, திடீர்னு ஒரே ரூம்ல இருக்க போறது உனக்கு வித்தியாசமா இருக்கும்னு எனக்குத் தெரியும், ஆனா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க நேரம் எடுத்துக்கோங்க. கேஷவ் உனக்கு அசௌகரியமா இருக்க மாதிரி எதுவும் செய்ய மாட்டான். போய் கொஞ்சம் தூங்கு, நாளைக்கு ரிசப்ஷன் இருக்கு அதுல நீ நல்லா புத்துணர்ச்சியோட இருக்கணும் “ என்று அர்ச்சனா ஆறுதாலக பேசி புரியவைத்தார்.
மைரா சரி என்று முணுமுணுத்தபடி மெதுவாக படிகளில் ஏறி கதவைத் தட்டினாள். கேஷவ் கதவை திறந்து அவள் உள்ளே நுழைந்ததும் மூடினான்.
“ நீ கதவ தட்ட வேண்டியதில்ல அம்மு, இனிமே இது உன்னோட ரூம் தான் “ என்று கேஷவ் சொன்னதும், “ மைரா அதிகம் யோசிக்காத, அவர் உன்னோட கெட்சப் தான். நீ எப்பவும் போல அவர் கூட இரு “ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் தலையை அசைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள். கேஷவ் படுக்கையில் அமர்ந்து ஹெட் போர்டில் சாய்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.
“ உனக்கு அசௌகரியமா இருந்தா நான் சோபாவுல தூங்குறேன் இல்ல ஒரே படுக்கையில நடுவுல தலையண வெச்சுட்டு தூங்கலாம். எனக்கு எதுவா இருந்தாலும் சரி தான் “ என்று கேஷவ் யோசனை சொல்ல, “ சோபா உங்களுக்கு பத்தாது, யார் அதுல படுத்தாலும் முதுகு வலி வரும், அதனால பெட்ல தூங்கலாம் “ என்றாள் மைரா.
கேஷவ் லேப்டாப்பை நைட் ஸ்டாண்டில் வைத்துவிட்டு படுக்கையில் படுத்து கொண்டான், மைரா படுக்கையில் ஹெட்போர்டில் சாய்ந்து கொண்டு மொபைலை வைத்துக் கொண்டிருந்தாள்.
“ உனக்கு களைப்பா இல்லையா ? தூக்கம் வரலையா? “ என்று கேஷவ் கேட்க, “ நான் லேசான சத்தம் இல்ல யாராவது குறட்டை விட்டா தூக்கம் வராது, தூக்கத்துல இருந்து கூட எழுந்துடுவேன் “ என்று மைரா சொன்னாள் ஆனால் அவள் பதிலை கேட்டு, “ நம்ம பெட்ரூம்ல யார் குறட்டை விடப் போறாங்க?” என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்டான்.
“ நம்ம பெட் ரூமா ? ஆமா எங்க பெட் ரூம் தான், என்னோட கையும், காலும் தயவு செஞ்சு நடுங்காம இருங்க, இதுக்கு பழகிக்கோங்க “ என்று மனதில் தனக்குத்தானே சொல்லி கொண்டாள். பின்னர் அவனை பார்த்து, “ நீங்க.. நீங்க குறட்டை விடுவீங்க தானே ? குறட்டை சத்தம் கேட்டா எனக்கு தூக்கம் வராது “ என்று கூறினாள்.
“ நான் குறட்டை விடுவேன்னு யார் சொன்னது?” என்று கேஷவ் அதிர்ச்சியுடன் கேட்க, “ க்ரிஷ் தான் நீங்க இடி முழங்குற மாதிரி குறட்டை விடுவீங்கன்னு சொன்னான் அதனால தானே அவன் வேற ரூமுக்கு போனான் “ என்றாள் மைரா.
சில நொடிகள் யோசித்த கேஷவ், “ அப்படியா ? சரி அட்ஜஸ்ட் பண்ணிக்க ட்ரை பண்ணு, அப்புறம் என் குறட்டைக்கு பழகிடுவ. இப்போ நான் ரொம்ப களைப்பா இருக்கேன் அதனால குட நைட் அம்மு “ என்று சொல்லிவிட்டு ஒரு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஒரு கையால் கண்களை மூடிக்கொண்டான்.
மைராவும் குறட்டை சத்தம் கேட்காததால் அவன் தூங்குகிறானா என்று பார்க்க அவன் பக்கமாக திரும்பி தன் உடலை சற்று உயர்த்தி அவனை எட்டிப்பார்த்தாள்.
“ மூச்சு சீரா இருக்கு அப்போ தூங்கிட்டாரு நினைக்குறேன் ஆனா குறட்டை சத்தம் கேட்கலையே “ என்று சொன்னவளின் முகத்தில் ஒரு நிம்மதி படர்ந்து சட்டென தூங்கிவிட்டாள்.
காலையில் கண் விழித்த கேஷவ், மைரா அவனருகே உறங்கிக் கொண்டிருப்பதையும், அவளது மூச்சுக்காற்று அவன் முகத்தில் படர, அவள் அவனது தலையணையை பகிர்ந்து கொண்திருப்பதையும் கண்டான். அவள் முகத்தில் இருந்த முடியை காதுக்குப் பின்னால் நகர்த்தி அவள் நெற்றியை முத்தமிட்டு, “ குட மார்னிங் அம்மு “ என்று கிசுகிசுத்தான்.
அவள் கண் விழித்து அவர்களின் நிலையை பார்ப்பதற்குள் அவன் புன்னகைத்து விலகிச் சென்றான். அவன் குளித்து முடித்து தயாரான போது மைரா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கேஷவ் அவளை எழுப்ப விரும்பவில்லை, ஆனால் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க விரும்பினான் எனவே அவளை அழைக்கவோ அல்லது குலுக்குவதற்கு பதிலாக, அவன் ஹேர் ட்ரையரை ஆன் செய்தான் ஆனால் அந்த சத்தத்திற்கு மைராவிடமிருந்து எந்த எதிர்வினையையும் அவன் காணவில்லை.
“ லேசான சத்தம் கேட்டா கூட தூங்க முடியாத மிசஸ் மைரா கேஷவ் “ என்று சொல்லி சிரித்தபடி அவளை எழுப்ப மெதுவாக உலுக்கினான், ஆனால் மீண்டும் எந்த பதிலும் இல்லை.
“ அம்மு, எழுந்திரு இல்ல நாம நேரடியா மதியம் லஞ்ச் தான் சாப்பிடுவோம் “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் மைரா முகத்தைத் திருப்பிக் கொண்டு குப்புறப் படுத்து உறங்கினாள். அவன் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் கதவை மூடிக்கொண்டு வெளியே சென்று எல்லோரும் தங்கள் காலை உணவை சாப்பிடுவதைப் பார்த்தான்.
“ மைரா எழுந்துட்டாளா கேஷவ் ? “ என்று அர்ச்சனா கேட்க, “ இன்னும் இல்ல மா “ என்றான் கேஷவ்.
“ சரி நீ வந்து சாப்பிடு, மைரா எழுந்த அப்புறம் நான் அவளுக்கு பரிமாருறேன் “ என்று அர்ச்சனா கூறினார் ஆனால் கேஷவ் அதற்கு, “ இல்ல மா, நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் அவ கூட சாப்பிடுறேன் “ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு காபி போட்டுக்கொண்டு அறைக்குத் திரும்பினான்.
சோபாவில் உட்கார்ந்து காபியை உறிஞ்சியபடி மைரா நிம்மதியாக உறங்குவதைப் பார்த்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் அசைவதைக் கண்டவன், அவளிடமிருந்து பார்வையைத் திருப்பினான். மைரா கொட்டாவி விட்டுக்கொண்டே உட்கார்ந்து கூந்தலை கொண்டையாகக் கட்டிக்கொண்டிருந்தாள். முகத்தைச் சுளித்துக் கொண்டு தன் முன்னால் இருந்த சுவரைப் பார்த்தவள், முந்தின நாள் திருமணம் செய்து கொண்டதை உணர்ந்தாள்.
அவள் தலையை குனிந்து பார்த்த போது அவள் ஆடைக்கு வெளியே தாலி இருந்தது.
“ நேத்து நமக்கு கல்யாணம் ஆனது மறந்துட்ட போல “ என்று கேஷவ் சொல்ல, அவனது திடீர் குரலைக் கேட்டு திடுக்கிட்டவள், பயத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் பின்னர் நிதானித்து அவனை முறைத்தாள்.
“ நீங்க என்ன பயமுறுத்திட்டீங்க. நீங்க ரெடியா இருக்கீங்க ஆனா ஏன் என்னை எழுப்பல? “ என்று மைரா கேட்க, “ அதுவா ? என் குறட்டை சத்தம் கேட்டு நீ தூங்க சிரமப்பட்டு இருப்பனு நெனச்சேன் அதனால உன்ன தூங்க விட்டுட்டேன். அது மட்டும் இல்ல லேசான சத்தம் கேட்டா கூட நீ எழுந்துடுவ அதனால சத்தம் போடாம இருக்க என்னால முடிஞ்ச வர முயற்சி பண்ணேன். நான் ஹேர் ட்ரையர் ஆன் பண்ணல, உன்ன கூப்பிடல, உன்ன ஏழுப்ப குலுக்க கூட இல்ல அம்மு “ என்று கேஷவ் சொன்னான்.
அவன் குரலில் இருந்த கிண்டலை உணர்ந்த மைரா ஒரு வெட்கப் புன்னகையை உதிர்த்தாள். கேஷவ் கோப்பையை டீப்பாயின் மீது வைத்துவிட்டு கட்டிலுக்கு நகர்ந்து அவள் அருகில் சாய்ந்தான். மைராவுக்கு மூச்சு முட்டுவது போல உணர்ந்து அவள் கண்களை சிமிட்டினாள்.
“ நான் குறட்டை விட்டேனா? “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் கேட்டதும், மைரா இல்லை என்று தலையை அசைக்க, கேஷவ் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“ அப்போ நீ நல்லா தூங்கினதா நான் எடுத்துக்கறேன். இப்போ ரெடியாகு நாம சேர்ந்து சாப்பிடலாம். நான் உனக்காக கீழ வெயிட் பண்றேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் அறையை விட்டு வெளியேற, மைரா தான் பிடித்து வைத்திருந்த மூச்சை விடுவித்தாள். படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து ஒரு சல்வாரை எடுத்துக்கொண்டு வேகமாக தயாரானாள். அவள் ஹாலை அடைந்த போது எல்லோரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அர்ச்சனா புன்னகையுடன் காலை உணவை சாப்பிட அவர்களை அழைத்தார். கேஷவ் அவளை தனக்கு அருகில் உட்கார ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார இருவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தனர்.
“ அம்மா, நாங்க ஷாப்பிங் போறோம், எங்களுக்கு சமைக்க வேணாம். ரிசப்ஷனுக்கு ரெடியாக நாங்க ரெண்டு பேரும் வந்துடுவோம் “ என்று கேஷவ் சொன்னதும், அவனது 180 டிகிரி மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்ட அர்ச்சனா தலையை மட்டும் அசைத்தார். கேஷவ் ஒரு கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மைராவுடன் வெளியேறினான். அவன் அவளுக்காக கதவைத் திறந்துவிட்டு பின்னர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். இருவரும் ஒரு ஷாப்பிங் மாலை அடைந்ததும் அவன் அவளை முதலில் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“ அம்மு, உனக்கு எது புடிக்குதோ, எது வேணுமோ அதையெல்லாம் வாங்கிக்கோ “ என்று கேஷவ் சொன்னதும், “ நான் முழு கடையையும் வாங்க விரும்பினா என்ன செய்றது ? “ என்று கேட்டாள் மைரா.
“ அப்போ ஒரு நிமிஷம் டைம் கொடு நான் ஒரு லாரியை புக் செய்றேன். ஒரு லாரி போதுமா இல்ல ரெண்டு புக் செய்யவா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு தெரியும் தானே ? “ என்றாள் மைரா.
“ நீ உண்மையிலேயே வாங்க விரும்பினாலும் கூட எனக்கு ஆட்சேபனை இருக்காதுனு உனக்கும் தெரியும். நான் சொல்றது சரி தானே ? “ என்று கேஷவ் புன்னகையோடு கேட்டான்.
“ நீங்க பொண்ணுங்க கிட்ட பேசி நான் பார்த்ததே இல்ல, ஆனா இப்போ நல்லா கடலைப்போடுறீங்க “ என்று சொன்னவள், “ அப்புறம் நான் கேள்வி கேட்டா பதிலுக்கு ஏன் கேள்வி கேட்குறீங்க ? “ என்ற கேட்டாள். அதற்கு கேஷவ் அவளிடம், “ ஏன்? நான் அப்படி கேட்குறத நிறுத்தனுமா ? “ என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டான்.
மைரா அவனை முறைத்துப் பார்க்க, அவன் சரணடைவது போல் கைகளை உயர்த்தினான். அவன் ஒரு ட்ராலிடியைத் தள்ளிக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான். 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் ஆடைகளை வாங்கிக் கொண்டு வெளியேறினர். மைரா ஷாப்பிங் செய்ய மறுத்ததால் கேஷவ் அவளுக்காக ஆடைகளை தேர்ந்தெடுத்தான். பின்னர் அவர்கள் ஒரு மரச்சாமான் கடைக்கு சென்று ஒரு டிரஸ்ஸிங் டேபிள், அவர்களின் ஆடைகளுக்கு பொருந்தக்கூடிய அலமாரி மற்றும் ஒரு புதிய சோபாவை தேர்ந்தெடுத்தனர். இறுதியாக அவர்கள் ஒரு நகைக் கடையை அடைந்ததும், உள்ளே நுழைவதற்கு முன்பு மைரா அவனைத் தடுத்தாள்.
“ கெட்சப் நாம ஏற்கனவே போதுமான ஷாப்பிங் பண்ணிட்டோம் இப்போ இன்னும் என்ன வாங்க போறீங்க ? “ என்று அவள் கேட்க, கேஷவ் அவள் கையைப் பிடித்துக் கொண்டு பதில் சொல்லாமல் உள்ளே சென்று விற்பனையாளரிடம் சமீபத்திய மோதிரங்களின் தொகுப்பைக் காட்டுமாறு தெரிவித்தான்.
“ நமக்கு மத்தவங்கள மாதிரி நிச்சயதார்த்தம் நடக்கல ஆனா நாம மோதிரம் போடணும்னு நான் விரும்புறேன். நீ அத தப்பா நினைக்க மாட்டனு நினைக்குறேன் ” என்று கேஷவ் சொன்னதும், மைரா இல்லை என்று தலையை ஆட்டினாள்.
இருவரும் மோதிரங்களைப் பார்ப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தனர். இறுதியாக இருவரும் ஒரு ஜோடி எளிமையான, அழகான வைரம் பதிக்கப்பட்ட மோதிரத்தை தேர்வு செய்தனர்.
“ நான் செலக்ட் பண்ணா சூப்பரா தான் இருக்கும். பாருங்க மோதிரம் எவ்ளோ அழகா இருக்கு. கண்டிப்பா எல்லாரும் மோதிரத்த பத்தி கேட்பாங்க “ என்று சொல்லி யோசிக்காமல் மோதிரத்தை எடுத்து பெருமிதப் புன்னகையுடன் மைரா அவன் விரலில் அணிவித்தாள். கேஷவ் தன் விரலில் இருந்த மோதிரத்தைப் பார்த்துவிட்டு அவளது மோதிரத்தை எடுத்து, “ இப்போ நான் போட்டு விடட்டுமா ? “ என்று கேட்டான்.
அப்போது தான் செய்ததை உணர்ந்த மைரா திகைத்துப் போனாள் ஆனால் தன் கணவன் கேஷவுக்காக அதைச் செய்ததால் அவள் வருத்தப்படவில்லை. அவள் பதிலுக்காக காத்திருந்தவனை பார்த்துவிட்டு மெதுவாக அவள் விரலை காட்ட கேஷவ் அவள் கையை மென்மையாக பிடித்து மோதிரத்தை அணிவித்தான்.
மைரா தொண்டையைக் கனைத்துக் கொண்டதும் கேஷவ் எழுந்து நிற்க, மைரா அவனைப் பின்தொடர்ந்தாள். கேஷவ் மோதிரங்களுக்கு பணம் செலுத்திய பின் அவளை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
“ நம்ம முதல் முறையா சாப்பிட வெளிய வந்துருக்கோம், செல்ஃபி எடுக்க வேணாமா ? “ என்று கேஷவ் கேட்க, “ உங்களுக்கு வேணுமா ? “ என்று கேட்டாள் மைரா.
“இந்த மாதிரி நினைவுகள போட்டோ எடுத்து பதிவு பண்ணாம விட்டுட்டோம்னு எதிர்காலத்துல வருத்தப்பட்டா என்ன செய்றது ? அதனால இது மாதிரி நிறைய போட்டோ எடுக்கலாம் அப்புறம் பின்னாடி இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுவோம் “ என்று கேஷவ் கூறினான்.
மைரா சரி என்று சொன்னதும் கேஷவ் மொபைலை எடுத்தான். மைரா தலையை சாய்த்து புன்னகைக்க இருவரும் சில செல்ஃபிக்களை கிளிக் செய்தனர். அவன் அந்த புகைப்படத்தை அவளுடன் பகிர்ந்து கொண்டதும், மைரா அதை தனது சமூக ஊடகங்களில் ” கணவருடன் முதல் லஞ்ச் டைம் ” என்ற தலைப்பில் பதிவேற்றினாள்.
கேஷவ் உடனடியாக அதை லைக் செய்து மற்றும் தனது சமூக ஊடக கணக்குகளில் “மனைவியுடன் முதல் லஞ்ச் டைம் ” என்று பதிவிட்டான்
மதனின் வீட்டில் அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவை திறந்த ரோஷினி, வாசலில் சில டெலிவரி ஆட்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
“ மேடம், இந்த அட்ரெஸ்க்கு ஒரு டெலிவரி வந்துருக்கு. எங்க வைக்கணும்னு சொல்றீங்களா ? “ என்று டெலிவரி ஆள் கேட்டதும், ரோஷினி வெளியே எட்டிப் பார்த்த போது, டிரக்கில் சில விலை உயர்ந்த furniture இருந்தன.
“ நீங்க அட்ரெஸ் மாறி வந்துட்டீங்கனு நினைக்குறேன், அட்ரெஸ் சரி பாருங்க “ என்று ரோஷினி சொன்னாள் ஆனால் அந்த நபர், “ இல்லைங்க மேடம், நாங்க சரியான அட்ரெஸ் தான் வந்துருக்கோம். கேஷவ் சார் தான் ஆர்டர் பண்ணி இருக்காரு “ என்று கூறினார்.
அர்ச்சனா தனது அறையை விட்டு வெளியேற, ரோஷினி அவரிடம் தகவலைக் கொடுத்தாள். முதல் மாடியில் உள்ள கேஷவின் அறையில் அவற்றை வைக்குமாறு அர்ச்சனா அவர்களிடம் தெரிவித்தார். ரோஷினி சோபாவில் உட்கார்ந்து அலமாரி, டிரஸ்ஸிங் டேபிள், நைட் லேம்ப், பெட்ரூம் பெஞ்ச் மற்றும் ஒரு புதிய சோபா ஆகியவற்றைத் தூக்கிச் செல்வதை பார்த்தாள்.
“ அவ இங்க வந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள அந்த மனுஷன் அவள தாங்க தொடங்கிட்டான். இந்த வீட்ல இருக்க ஆம்பளைங்க மேல அவ என்ன மாய மந்திரம் செய்தா தெரியல ? இவ்ளோ பணம் செலவழிக்க இந்த ஆள் எங்க வேலை செய்றான் ? ரெண்டு பேரும் நாசமா போகணும் “ என்று மனதில் பொருமியபடி, பல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
*************************************
முன்னோட்டம்:
“ இப்ப நீ என் மனைவினு பதிவு பண்ணிட்ட அதனால் என் மனைவிக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்கலாமா ? “

2 comments
[…] இப்போ நல்லா கடலைப்போடுறீங்க […]
[…] 29.இப்போ நல்லா கடலைப்போடுறீங்க […]