Home Family27. என்னோட மனைவி திருமதி கேஷவ்

27. என்னோட மனைவி திருமதி கேஷவ்

by Siragugal Novels
21 views

மைராவும், நைனாவும் மணமகள் அறைக்கு சென்றதும், நைனா மைராவின் கன்னங்களைக் கிள்ளி முத்தமிட்டாள்.

“ அய்யோ கடவுளே மைரா ! நீ இன்னைக்கு அந்த அழகான ஹங்க்க  (hunk) கல்யாணம் பண்ணிக்க போற. கடவுளே, உன் புருஷனா அவர் கிடைக்க நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி “ என்று நைனா சொன்னதும், “ நிச்சயமா உன் அண்ணன் அழகானவர் தான் “ என்றாள் மைரா.

“ ஒஹ்! இப்ப அவர் என் அண்ணன் ஆயிட்டாரா ? ஆனா மைரா, ஒரு மாசத்துக்கு முன்னாடி பிரஷாந்த் கூட உன் கல்யாணம் நிச்சயமானதுல இருந்து இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி வர பயந்துட்டு இருந்த ஆனா இப்போ எப்படி இவ்ளோ நம்பிக்கையா  இருக்க ? “ என்று நைனா கேட்டதும், “ எனக்கு என்ன எதிர்காலம் காத்திருக்குனு தெரியாது, மறுபடியும் என் வாழ்க்கையில லவ் கிடைக்குமானு தெரியாது ஆனா கெட்சப் கூட நான் பாதுகாப்பா இருப்பேன்னு நம்பிக்கை இருக்கு. என் வாழ்நாள் முழுக்க அவர் என்ன பார்த்துக்குவாரு, பாதுகாப்பார்னு எனக்குத் தெரியும் “ என்று மைரா நம்பிக்கையாக, உருதியாக சொன்னாள். 

“ நீ அவர பொண்ணுங்க கிட்ட இருந்து பாதுகாக்கனும். இப்போ அவர நீ மொத்தமா சொந்தமாக்க போற அதனால எல்லாரும் இப்போ உன்ன பார்த்து பொறாமைப்படுவாங்க “ என்று நைனா சொல்ல, “ வாய மூடு நைனா, நாங்க ரொமான்ஸ் பண்ற மாதிரி எந்த சூழ்நிலையிலையும் இல்ல. நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா, துணையா இருப்போம் அதுல எனக்கு சந்தோஷம் “ என்று சொன்னாள் மைரா.

கதவைத் தட்டியதால் அவர்களின் உரையாடல் தடைபட்டது, நைனா கதவைத் திறந்து வாசலில் க்ரிஷைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

“ நைனா, நான் மைராகிட்ட பேசனும், ப்ளீஸ் எங்களுக்கு கொஞ்ச டைம் கொடு “ என்று க்ரிஷ் கேட்டதும், “ க்ரிஷ், ஏற்கனவே லேட் ஆகுது, இப்போ அவள மணமேடைக்கு கூப்பிடுவாங்க அதனால கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பேசலாம் “ என்றாள் நைனா.

“ நான் கல்யாணத்துக்கு முன்னாடி அவகிட்ட பேசணும் “ என்று சொல்லி அவன் நைனாவை வெளியே தள்ளி கதவைப் பூட்டினான். மைரா நாற்காலியிலிருந்து எழுந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“ மைரா, இந்தக் கல்யாணம் வேண்டாம். ப்ளீஸ் அவசரப்பட்டு முடிவெடுத்து உன் வாழ்க்கைய கெடுத்துக்காத. நீ கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. ஒரு தடவையாவது என் வார்த்தைய கேட்டு இதையெல்லாம் நிறுத்து. உன்ன கெஞ்சி கேட்குறேன் மைரா,  வாழ்க்க நிச்சயமா ரெண்டாவது வாய்ப்பு தரும் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும், “ க்ரிஷ், நீ நேத்து தூங்காம அதனால மன அழுத்தமா இருக்கனு நினைக்கிறேன். நான் ஏன் கஷ்டப்படுவேன் ? நீ உன் அண்ணன பத்தி பேசுற, அவர் பல வருஷமா நம்ம ரெண்டு பேரையும் கவனிச்சிக்குறாரு. அவர் என்ன கஷ்டப்பட விட மாட்டாரு, என்ன பத்தி அவருக்குத் தெரியலனாலும் பரவாயில்ல நாங்க ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்க வாழ்நாள் முழுக்க நேரம் இருக்கு. இப்போ போய் கெட்சப் தயாராக உன் உதவி தேவையானு பாரு. உன் அண்ணன் ஒருவழியா கல்யாணம் பண்ணிக்க போறாரு. இந்த நாள நீ கொண்டாடணும். அது மட்டும் இல்ல, நான் எப்பவும் உன் கூட இருக்கணும்னு நீ ஆசைப்பட்ட மாதிரி நான் உன் அண்ணனோட மனைவியா அதே வீட்ல வாழ போறேன் “ என்று சொல்லி மைரா மகிழ்ச்சியாக புன்னகைத்தாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு மைரா கதவைத் திறந்து அர்ச்சனாவையும், வசுந்தராவையும் பார்த்தாள்.

“ நாம ஒரே வீட்ல இருக்க போறோம்னு க்ரிஷ் உற்சாகமாக இருக்கான். அவனுக்கும், ரோஷினியுக்கும் கல்யாணம் பண்ணிட்டா  அப்புறம் ரெண்டு ஜோடி இருப்போம் “ என்று மைரா சொல்ல, “ உன் விருப்பப்படி மைரா, இது என் மூத்த மருமகளோட உத்தரவா இருந்தா அத மீற நான் யாரு ? அத பத்தி அப்புறம் பேசுவோம், இப்போ போகலாம், கேஷவ்  உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் “ என்று சொன்னார் அர்ச்சனா.

மேடைக்கு செல்லும் வழியில் ரோஷினி கண்களால் எரிப்பதை போல நிற்பதை மைரா பார்த்தாள். அவளை ஒரு ஏளனப் புன்னகையுடன் புறக்கணித்துவிட்டு மைரா மேடைக்குச் சென்று மாப்பிள்ளை போல் உடையணிந்திருந்த கேஷவ் அருகில் அவள் அமர வைக்கப்பட்டாள்.

அவள் திடீரென்று பதற்றமாக உணர்ந்தாள், அவள் விரல்களால் படபடப்பில் நடுங்கியது. கேஷவ் அவள் பக்கம் திரும்பி அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு விரல்களை கசக்குவதை பார்த்தான்.

“ ரிலாக்ஸ் அம்மு, நான் எப்பவும் கெட்சப் தான். இன்னைக்கு நீ எடுத்த முடிவுக்கு எப்பவும் வருத்தப்பட மாட்டனு நான் ப்ராமிஸ் பண்றேன் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா தலையை ஆட்டி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ஐயர் மாலைகளை அவர்களிடம் மாற்றிக்கொள்ள கொடுத்ததும், இருவரும் சொன்னபடியே செய்தனர். விரைவில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கின. அர்ச்சனா தாலியை விருந்தினரிடம் எடுத்துச் சென்று அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்.

மிகவும் உற்சாகமாக இருந்த தனது பெற்றோரையும் கேஷவின் பெற்றோரையும் மைரா பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது.

“ நான் சரியான முடிவு தான் எடுத்துருக்கேன். என் மொத்த குடும்பமும் இன்னைக்கு உண்மையிலேயே சந்தோஷமா இருக்காங்க. கடவுளே ! நாங்க எல்லாரும் எப்பவும் சந்தோஷமா இருக்க ஆசீர்வாதம் பண்ணு “ என்று மைரா வேண்டினாள்.   

ஐயர் தாலியை மைராவின் கழுத்தில் கட்டுவதற்காக கேஷவிடம்  கொடுத்தார். அப்போது திடீரென்று ஒரு எண்ணம் அவள் மனதில் தோன்றி அவள் கேஷவை தடுத்தாள்.

“ இப்ப என்ன ஆச்சு? “ என்று கேஷவ் கேட்டதும், “ நீங்க எப்பவும் ஒன்னு இல்ல ரெண்டு வாக்கியம் தான் பேசுவீங்க ஆனா இன்னைக்கு எப்படி இவ்ளோ பேசுனீங்க ? இன்னைக்கு தான் முதல் முறையா நீங்க இவ்ளோ பேசி பார்த்தேன். அது எப்படி? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள். 

“ நல்ல கேள்வி. நாம மறுபடியும் ஐஸ் பார்லருக்குப் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு இத பத்தி பேசலாமா ? கல்யாணத்துக்கு வந்துருக்கவங்கள ஒரு குட்டி தூக்கம் போட அனுப்பிட்டு, நாம பேசி முடிஞ்ச திரும்பி வந்த அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம். நீ என்ன சொல்ற ? “ என்று கேஷவ் புன்னகையை கேட்டதும், மைரா விருந்தாளியை நோக்கி பார்த்த பொது எல்லோரும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கேஷவ் கையில் தாலியை பிடித்துக் கொண்டு தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான். மைரா சட்டென வெட்கத்தில் உதட்டைக் கடித்து தலையைக் குனிந்தாள்.

“ நீங்க கட்டுங்க, இத பத்தி அப்புறம் பேசுவோம், எல்லாரும் நம்ம ரெண்டு பேர தான் பார்க்குறாங்க “ என்று மைரா மெல்லிய குரலில் சொன்னாள் ஆனால் கேஷவ், “ நீ என்ன பாரு, அபோ தான் நான் தாலி காட்டுவேன் அம்மு “ என்று சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்ட மைரா, கேஷவ் பக்கம் தன் பார்வையைத் திருப்ப, அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி தாலியை அவள் கழுத்தில் கட்டினான்.

“ ஹேப்பி வெட்டிங், என்னோட மனைவி திருமதி கேஷவ் “ என்று கேஷவ் சொல்ல, மனைவி என்ற அந்த ஒரு வார்த்தை அவளுக்கு பல விஷயங்களை உணர வைத்தது, அவள் எல்லா உணர்ச்சிகளிலிருந்து மயங்கி விடுவது போல உணர்ந்தாள். அவன் மீண்டும் பேசியபோது அவளுடைய எண்ணத் தொடர்கள் அனைத்தும் நின்று போயின.

“ எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டிய ? எனக்கும் இப்போ கல்யாணம் ஆயிடுச்சு, உனக்கு அது சந்தோஷமா இல்லையா? “ என்று கேஷவ் கேட்க, “ நீங்க வேற யாரையோ கல்யாணம் பண்ணி இருக்க  மாதிரி பேசுறீங்க. நீங்க என்ன தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க. “ என்று சொன்ன மைரா, “ சரி இப்போ நான் உங்கள என்ன சொல்லி கூப்பிடனும் ? கெட்சப் சொல்லனுமா இல்ல அங்கிள் சொல்லனுமா…இல்ல…? “ என்று கிண்டலாக இழுத்தாள்.

“ கேஷவ் சொல்லி கூப்பிடு, நம்ம கல்யாணத்துக்கு நீ கொடுக்குற பரிசா நெனச்சுக்குறேன் “ என்று கேஷவ் சொன்னதும், அவனை அதிர்ச்சியாக பார்த்த மைரா, “ ஹலோ நீங்க யாரு, கெட்சப் இப்படி எல்லாம் பேச மாட்டாரு. நீங்க என் கூட சரசம் பண்றீங்களா ? எனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கு இருந்தாலும் வாழ்த்துக்கள் மிஸ்டர் ஹஸ்பெண்ட் “ என்று சொன்னாள்.

அவள் வார்த்தையை கேட்டதும் கேஷவ் சட்டென அவளை நோக்கி தன் முகத்தை திருப்பினான். அவன் பதில் சொல்ல எத்தனித்த போது, ஐயரும், பெற்றோரும் அவனை இடைமறித்தனர்.

“ நீங்க பேசுறதுக்கு முழு வாழ்க்கையும் ஒன்னா இருக்க போறீங்க அதனால இப்போ சடங்குகள முடிச்சிடுங்க “ என்று ஐயர் சொன்னதும் மைராவுக்கு அவள் ஏன் வெட்கப்படுகிறாள் என்று தெரியவில்லை, ஆனால் அதை கட்டுப்படுத்துவது அவளுக்கு கடினமாக இருந்தது. ஐயர் குங்குமத்தை கொடுத்து மைராவின் உச்சிவகுட்டில் வைக்க சொன்னதும், கேஷவ் தனது கையை அவளைச் சுற்றி வளைத்தான், அப்போது மைரா அவன் பக்கமாக சாய்ந்து கொள்ள வேண்டியிருந்தது, அவர்களின் முகங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தன. கேஷவ் அவளது உச்சிவகுட்டில் குங்குமத்தை நிரப்பிய போது மைரா கண்களை மூடினாள். பின்னர் அவள் நெஞ்சில் இருந்த தாலியை தனது உள்ளங்கையில் வைத்து அதற்கும் குங்குமம் வைத்தான்.

வசுந்த்ரா மெட்டியை கேஷவிடம் கொடுக்க, மைரா தன் காலை அம்மி மேல வைத்தாள். கேஷவ் அவள் கால் விரலை பிடித்து மெட்டியை அணிவித்தான்.

இருவரும் சேர்ந்து அக்னியை சுற்றி வலம்வந்தனர். அனைத்து சடங்குகளையும் முடித்தவுடன் அவர்களின் பெற்றோரிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றனர். வசுந்தரா ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் மைராவை அணைத்துக் கொண்டார்.

“ கடவுள் என் ஆசைய நிறைவேத்திட்டாரு “ என்று அர்ச்சனா சொன்னதும், மைரா சிரித்துக் கொண்டே அவரை கட்டிப்பிடித்தாள். புகைப்பட கலைஞர் புதுமண தம்பதியினரை போட்டோஷூட்டிற்கு அழைத்தார், ஆனால் அவர்களின் பெற்றோர் திருமணத்திற்குப் பிறகு உடனடியாக அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். அவர்கள் சாப்பிட அழைத்துச் செல்லப்பட்டனர், இந்த முறை கேஷவ் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு அவளுக்கு இனிப்பு ஊட்டினான்.

“ கேஷவ் , நீயும் மைராவும் முதல்ல நம்ம வீட்டுக்கு வரணும், அப்புறம் நீங்க வசுவோட வீட்டுக்கு போகலாம். உங்க ரெண்டு பேரையும் வரவேற்க நான் வீட்டுக்கு முன்னாடி போறேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு நிறைய வேலை இருக்கு. என் மகளுக்கு பரிசு வாங்க நான் ஷாப்பிங் வேற போகணும் “ என்று அர்ச்சனா மகிழ்ச்சியில் பேசிக் கொண்டே இருந்தார்.

“ நாளைக்கே நம்ம பொண்ணுக்கு ஷாப்பிங் பண்ணுவோம், இப்போதைக்கு நம்ம மூத்த மருமகளுக்கு இத்தன வருஷமா நீ சேர்த்து வெச்சத பரிசா கொடு “ என்று மதன் கூறினார். அதை கேட்டதும், “ நல்லவேளை ஞாபகம் பண்ணீங்க. ரொம்ப நன்றி மதன். நாம இப்போ போய் அவங்கள வரவேற்க எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம். நமக்கு உதவி செய்ய க்ரிஷையும், ரோஷினியையும் வர சொல்லுங்க. கேஷவ், மைரா, வசு, ராஜன் அண்ணா ஒன்னா வரட்டும் “ என்று அர்ச்சனா சொல்லிக் கொண்டிருந்த போது, வசுந்த்ரா அர்ச்சனாவின் வாயை தன் உள்ளங்கையால் மூட, அர்ச்சனா உள்ளங்கையை அகற்றி கிண்டல் செய்தார்.

மதன், அர்ச்சனாவும் கிளம்ப, க்ருஷும் ரோஷினியும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். வசுந்த்ரா மைராவை ஓய்வெடுக்க அறைக்கு அழைத்துச் செல்ல நைனாவை அனுமதித்தாள். அதன் பின்னர் அவர் கேஷவின் கையைப் பிடித்து, “ கேஷவ் , மைராவ பார்த்துக்க சொல்லி நான் சொல்ல வேண்டியது இல்ல ஆனா கொஞ்ச மாசமா அவ நிறைய கஷ்டப்படுறா, உன் மேல நாங்க வெச்சுருக்க நம்பிக்கை காரணமா தான் மைராவ உனக்கு கல்யாணம் செய்து கொடுக்க சம்மதிச்சோம். நீ அவள எப்பவும் விட்டு விலக மாட்டனு எனக்கு சத்தியம் செய். அவளோட குழந்தைத்தனமான சுபாவம் காரணமா கொஞ்சம் அடம் புடிப்பா அதுவும் உன்கிட்ட நிறைய அடம் புடிப்பா அது உனக்கே தெரியும் “ என்று வசுந்தரா சொல்லும் போது குறுக்கிட்ட கேஷவ், “ ஆனா அவளுக்கு ரொம்ப பக்குவமா நடந்துக்க தெரியும், எல்லார்கிட்டயும் அன்பா இருப்பா, எல்லார் மேலையும் நிறைய அக்கறை இருக்குறவ. என் கிட்ட சகஜமா இருக்கலாம் ஆனா சில சமயம் அவளுக்கு என்ன வேணும்னு மனசு விட்டு சொல்ல மாட்டா, அவளுக்கு வருத்தம் இருந்தாலும் அத வெளிப்படுத்த மாட்டா “ என்று சொல்லி முடித்தான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டு வசுந்தரா புன்னகைக்க, கேஷவ்  அவரை உட்கார வைத்து அவர் முன் மண்டியிட்டு அவர்  கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“ அவள பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம் அத்த. அவள என் பொறுப்பா இல்லாம என் உயிரா பார்த்துக்குவேன். அவள தவிர மத்தவங்கள பத்தி கவலைப்படுற பக்குவம் இருக்க அளவுக்கு அவ ஒரு குழந்தையா இருப்பானு எனக்குத் தெரியும், எல்லாத்துலையும் நான் அவ கூட இருப்பேன். “ என்று கேஷவ் உறுதி அளித்தான். 

“ ரொம்ப நன்றி கேஷவ். அவளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படலாம் “ என்று வசுந்தரா சொல்ல ஆரம்பித்ததும், “ அத்தை, இனி மைராவ பத்தியோ எங்கள பத்தியோ கவலைப்பட வேண்டாம். நாங்க நல்லா இருப்போம், நாங்க வாழ்க்கைய சந்தோஷமா வாழ்றத நீங்க பார்க்க போறீங்க “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு ஆனந்த கண்ணீருடன் வசுந்தரா அவன் தலைமுடியை கோதினார்.

ராஜன் அவர்களை வீட்டிற்கு செல்ல கூப்பிடும் சத்தம் கேட்டதும், அதே நேரம் நைனாவும் மைராவும் தங்கள் பைகளுடன் அறையிலிருந்து திரும்பி வர, கேஷவ் அவளிடமிருந்து பைகளை எடுத்து காரின் டிரங்க்கில் வைத்தான். அவன் மைராவுக்காக காரின்  கதவைத் திறந்து அவள் அமர்ந்த பின் அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

கேஷவ் மைராவைப் பார்த்து அவள் பக்கம் குனிந்து சீட் பெல்ட்டை இழுத்து மாட்டினான்.

“ ரெடியா அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, மைரா புன்னகையுடன் மென்மையாக தலையசைத்ததும், கேஷவ் அவர்களது வீட்டை நோக்கி, நிரந்தர பயணத்தை நோக்கி காரை ஓட்டத் தொடங்கினான்.

*************

முன்னோட்டம்:

“ நீ கண்டிப்பா சுவர் ஏறி குதிச்சு வர போறதுல உறுதியா இருந்தா நான் அந்த பக்கம் ரெடியா இருக்கேன். நீ குதிக்கும் போது நீ தரையில விழாம நான் உன்ன புடிச்சுக்குறேன். நாம கிளம்பலாமா இல்ல சுவர் ஏறி குதிக்க போறியா ? “

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:24 pm

[…] என்னோட மனைவி திருமதி கேஷவ் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:52 am

[…] 27.என்னோட மனைவி திருமதி கேஷவ் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!