Home Family31. நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

31. நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

by Siragugal Novels
22 views

மைரா அர்ச்சனாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்த பின்  தனது அம்மாவை சந்திக்க சென்றாள்.

“ எப்படி இருக்க மைரா ? நீ சந்தோஷமா இருக்கியா ? “ என்று வசுந்தரா கேட்க, “ நான் ஏன் சந்தோஷமா இல்லாம இருக்க போறேன் ? கெட்சப் என்ன நல்லா பார்த்துக்குறாரு. அப்புறம் எனக்கு அவர பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும் இப்போ அவர் ஏதோ புதுசா தெரியுறாரு மா “ என்று சொன்னாள் மைரா.

“ ஏன்? “ என்று வசுந்தரா கேட்க, “ தெரியல, ஆனா அவர் கிட்ட நிறைய வித்தியாசம் இருக்க மாதிரி தெரியுது. என்ன பாத்துக்க எப்பவும் என் பக்கத்துலையே இருக்காரு. நான் வேணாம்னு சொன்னாலும் கேட்காம நிறைய பொருட்கள், பரிசு, டிரஸ் வாங்கி கொடுக்குறாரு. அவர் என்ன ஒரு குழந்த மாதிரி கவனிச்சுக்குறாரு “ என்று சொன்னாள்.

அவள் வார்த்தையை கேட்டு, “ நீ சின்ன வயசுல இருந்தப்ப உன் மேல அப்படி தான் அக்கறை காட்டுவான். அந்த பையன் எனக்கு மருமகனா வருவான்னு எனக்குத் தெரியாம போச்சு, ஆனா விதி எப்படியெல்லாம் விளையாடுது பாரு. அவன் இப்பவும் அதே மாதிரி தான் அக்கறையா இருக்கான் “ என்று வசுந்தரா சொல்ல, “ ஆனா நான் இப்போ குழந்த இல்ல “ என்றாள் மைரா.

“ நிச்சயமா நீ இப்போ குழந்த இல்ல, நீ அவனோட பொண்டாட்டி. இப்போ நீ சொன்னத கேட்டதுல இருந்தே அவன் உங்க உறவுக்கு ஒரு உண்மையான வாய்ப்பு கொடுக்குறான்னு நல்லா புரியுது  ஆனா நான் உன்ன கட்டாயப்படுத்த மாட்டேன். வாழ்க்க போற ஓட்டத்தோட போ, நீங்க சீக்கிரம் வாழ்க்கைய தொடங்கி சந்தோஷமா இருப்பீங்கன்னு நம்புறேன் “ என்று வசுந்தரா சொன்னதை கேட்டதும், மைரா கண்களை உருட்டி வீடு திரும்பினாள். வழக்கமான அரட்டையுடன் இரவு உணவை தயார் செய்ய அர்ச்சனாவுக்கு அவள் உதவி செய்து கொண்டிருந்தாள்.

இருவரும் சமைத்து முடித்தவுடன் படம் பார்க்க ஆரம்பித்தனர். அதில் ஒரு முதல் இரவு காட்சி வந்த போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மைரா சட்டென அர்ச்சனாவின் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி சேனலை மாற்றினாள்.

“ அத ஏன் இப்போ மாத்துன ? அவங்க எல்லாத்தையும் காட்ட மாட்டாங்க “ என்று அர்ச்சனா சொல்ல, “ நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன் “ என்றாள் மைரா. அதற்கு அர்ச்சனா குழப்பத்தோடு, “ இப்ப நான் என்ன செஞ்சேன்? “ என்று கேட்டார்.

“ நீங்க என்ன செய்யல? நீங்க ஒரு நல்ல மாமியாரா ? முதல் இரவு பத்தி நான் எவ்ளோ கனவு கண்டு இருந்தேன் தெரியுமா ? ஆனா நீங்க எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க, சினிமாவுல வர ஹீரோயின் மாதிரி நான் ரெடியாகி, தலை நிறைய பூ வெச்சு வெட்கத்தோடு ரூமுக்கு போவேன்னு நெனச்சேன் ஆனா நீங்க அத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படல. உலகத்துல எந்த பொண்ணாவது முதலிரவுக்கு சல்வார் போட்டு போவாளா ? பாவம் மைரா மட்டும் தான் போனா “ என்று சொல்லி மைரா சலித்துக் கொண்டாள்.

அவளின் வார்த்தையை கேட்டு புன்னகைத்த அர்ச்சனா, “ ஏன் கவலப்படுற ? இன்னிக்கு உனக்கு அது மாதிரி டிரஸ் பண்ணி, முதல் இரவு ஏற்பாடு பண்ணலாம் “ என்று சொன்னார் ஆனால் மைரா அதற்கு, “ இல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் முதல் நைட்டு தான் முதல் இரவு நான் அத மிஸ் பண்ணிட்டேன் “ என்று மீண்டும் சலித்துக் கொண்டாள்.

“ என் செல்லக்குட்டி மைரா, நான் உன்ன ஹீரோயின் மாதிரி டிரஸ் பண்ணலைன்னா என்ன ? முதல் இரவுக்கு தேவையான முக்கியமான விஷயம் ரூம்ல தானே இருந்துச்சு அப்புறம் என்ன ? “ என்று குறும்புடன் சொன்னார் அர்ச்சனா. “ நீங்க என்ன விஷயத்த  பத்தி பேசுறீங்க ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.

“ நீயும் என் பையனும் ரூம்ல தானே இருந்தீங்க, முதல் இரவுக்கு  வேற என்ன வேணும் ?” என்று அர்ச்சனா கேட்டதும், மைரா மூச்சிரைக்க அர்ச்சனாவின் வாயை உள்ளங்கையால் மூடிக்கொண்டு அர்ச்சனாவின் முதுகுக்குப் பின்னால் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

“ கொஞ்சமாச்சும் வெட்கப்படுங்கம்மா. நான் உங்க பொண்ணு “ என்று மைரா சொல்ல, “ ஒஹ், முதல் இரவுக்கு நான் உன்ன ரெடி பண்ணனும்னு சொன்ன அப்போ நீ அத பத்தி யோசிக்கலையா? “ என்று அர்ச்சனா அவளை கிண்டல் செய்தார்.

“ நான் சும்மா தான் கேட்டேன்… சரி விடுங்க. நாம இனி இத பத்தி  பேச வேணாம் “ என்று மைரா சொன்ன போது, தொண்டை கனைக்கும் சத்தம் கேட்டது. இருவரும் திரும்பி பார்த்த போது  கேஷவ் கையில் ஒரு உணவுப் பையோடு உள்ளே நுழைவதைக் கண்டனர். அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பையை மைராவிடம் கொடுத்துவிட்டு அவர்களுடைய அறைக்குச் சென்றான். மைராவும், அர்ச்சனாவும் தலையைச் சாய்த்து அவன் தங்கள் அறைக் கதவை மூடும் வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ நீங்க என்ன நினைக்குறீங்க ? அவர் நாம பேசிட்டு இருந்தத  கேட்டிருப்பாரா? “ என்று மைரா கேட்க, “ இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் “ என்றார் அர்ச்சனா.

“ ஐயையோ, இந்த பூமிய என்னை விழுங்க சொல்லுங்க.  உலகத்துலயே என்ன விட யாரும் இப்படி அசிங்கப்பட்டு இருக்க மாட்டாங்க “ என்று மைற புலம்ப, அர்ச்சனா சிரித்தபடி மைரா முகத்தை மறைக்க பயன்படுத்திய அவரது முந்தானையை எடுத்துக் கொண்டார்.

“ கேட்டாலும் அதபத்தி பேச மாட்டான், அதனால கவலைப்படாத. இந்த பைய திறந்து பாரு, அவன் உனக்காக ஆப்பிள் பை வாங்கிட்டு வந்துருப்பான், அதுல எனக்கு கொஞ்சம் கொடு “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டு, “ நீங்க எனக்கு நெய் சாதம் பண்ணி தருவீங்கன்னு சத்தியம் பண்ணுங்க அப்போ தான் தருவேன் “ என்றாள் மைரா.

அர்ச்சனா சத்தியம் செய்ததும் இருவரும் அதை பகிர்ந்து கொண்டனர். அறையை விட்டு வெளியே வந்த க்ரிஷ், அலுவலக பயணம் பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டு மைராவை பார்க்காமலேயே கிளம்பினான்.

“அவன் யார் மேல வருத்தமா இருக்கான், என் மேலையா இல்ல ரோஷினி மேலையா ? அவனுக்கு என்ன ஆச்சுனு புரியல. எனக்கு அவன்கிட்ட பேச கூட பயமா இருக்கு, ரோஷினி என்ன கண்ணால கொன்னுடுவா போல ஆனா நீங்க அவன் கிட்ட பேசி என்ன பிரச்சனனு தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்க. அவன் ரொம்ப குழப்பத்துல இருக்கான். இப்போ உங்கள விட்டு விலகி இருந்தா அவனுக்கு இன்னும் தனிமையா இருக்கும் “ என்று மைரா கவலையோடு சொன்னாள்.

“ அவன் இப்படி அடிக்கடி வெளியூர் போறது எனக்கும் தான் கஷ்டமா இருக்கு ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் இடைவெளி வேணும். அவனுக்கு என்ன வேணும்னு உணர இந்த நேரம் தேவ. தள்ளி இருக்கும் போது மனசு கொஞ்சம் தெளிவா யோசிக்கும் அதனால அவன் தெளிவான மனசோட திரும்பி வருவான்னு நம்புறேன். ரோஷினி கூடவோ இல்ல அவ இல்லாமையோ அவன் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புறேன். அவன் வாழ்க்க இப்படியே போக முடியாது அதனால அவன் யோசிச்சு வரட்டும் “ என்று சொன்ன அர்ச்சனா பின்னர் மைராவின் கையை பிடித்து, “ இப்ப உன்ன பத்தியும், கேஷவ் பத்தியும் கொஞ்சம் பேசுவோம். நீங்க எங்கேயாவது போறதா உத்தேசம் இருக்கா ? “ என்று கேட்டார்.

“ கெட்சப் டூர் போகலாமானு கேட்டாரு நானும் சரினு சொல்லிட்டேன். நீங்க உடனே உற்சாகத்துல துள்ளி குதிக்காதீங்க, இது வெறும் டூர் தான் “ என்று மைரா சொல்ல, “ நீங்க ஹனிமூனுக்கு போறீங்கனு நான் சொல்லலையே. நீங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் அங்க இருந்து எனக்கு கிஃப்ட் வாங்கிட்டு வாங்க “ என்று சொன்னார் அர்ச்சனா.

“ முயற்சி செய்றேன். போய் உங்க பையனை டின்னர் சாப்பிட கூப்பிடுங்க. எனக்கு ரொம்ப பசிக்குது “ என்று மைரா சொன்னதும், ஒரு ஏளன புன்னகையுடன் அவளை பார்த்த அர்ச்சனா, “நான் என் புருஷன கூப்பிடுறேன், நீ உன் புருஷன கூப்பிடு “ என்று சொல்லிவிட்டு, சிரித்துக் கொண்டே மைராவை சங்கடத்தில் ஆழ்த்திவிட்டு சென்றார். மூடிய கதவை ஆப்பிள் பை மென்றுகொண்டே பார்த்த மைரா, “ நான் உளருனது எல்லாம் நீங்க கேட்டீங்களா? நீங்க கேட்டீங்களா இல்லையானு எப்படி செக் பண்றது ? “ என்று யோசித்தவள், சிரித்தபடி அவர்களின் அறைக்கு ஓடினாள். கேஷவ் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். மைரா அவன் அருகில் அமர்ந்து ஆப்பிள் பையின் ஒரு பகுதியை அவனுக்கு கொடுத்தாள்.

“ எப்போ இத பகிர்ந்து சாப்பிட ஆரம்பிச்ச ? “ என்று கேஷவ் கேட்க, “ அடிப்படையில நான் ரொம்ப நல்ல பொண்ணு, அர்ச்சனா அம்மாவுக்கு கூட கொஞ்சம் கொடுத்தேன். நீங்க எனக்காக வாங்கிட்டு வந்ததால உங்களுக்கும் கொஞ்சம் கொடுக்க நெனச்சேன் “ என்று பதில் சொன்னாள்.

கேஷவ் அவள் கொடுத்ததை ஏற்றுக்கொண்டதும், மைரா கால்களை மடித்து உட்கார்ந்து உரையாடலைத் தொடங்குவதற்கான வழியை யோசிக்க முயன்றாள்.

“ கெட்சப்…” என்று மைரா மெல்ல அழைத்ததும், “ ஹ்ம்ம் சொல்லு அம்மு “ என்றான் கேஷவ்.

“ எனக்கு பசிக்குது, வாங்க டின்னர் சாப்பிடலாம், அப்புறம் நாம எங்க  போக போறோம்னு இடத்த முடிவு பண்ணிட்டீங்களா? அர்ச்சனா அம்மா எதாச்சும் வாங்கிட்டு வர சொன்னாங்க. நாம எங்க போறோம்னு நீங்க சொன்னா, நான் அவங்களுக்கு என்ன வாங்குறதுன்னு யோசிப்பேன் “ என்று மைரா அடுத்தடுத்து கேட்டதும், “ கவலைப்படாத, நாம டூர் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வரும்போது அத பத்தி யோசிப்போம்,  இப்போதைக்கு இது உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் “ என்று சொல்லிவிட்டான் கேஷவ்.

“ அப்போ நீங்க இடத்த முடிவு பண்ணிட்டீங்க, அத என்கிட்ட சொல்ல மாட்டீங்க அப்படி தானே ? ஒரு சின்ன விஷயத்த கூட என்கிட்ட சொல்ல முடியாத ஒரு கொடூரமான புருஷன தான் கடவுள் எனக்கு கொடுத்து இருக்காரு. பாவம் மைரா “ என்று மைரா ஒரு நாடகமாடினாள். ஆனால் கேஷவ் சிரிப்பை அடக்கிக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தான். மைரா பெருமூச்சுவிட்டு அறையை விட்டு வெளியேற எத்தனித்தாள், ஆனால் சட்டென நின்று, “ நீங்க வீட்டுக்குள்ள நுழையும் போது ஏதாவது கேட்டிங்களா ? “ என்று அவனிடம் கேட்டாள். அதற்கு கேஷவ், “ இல்ல, ஏன் கேட்குற ? “ என்று மீண்டும் அவளிடம் கேள்வி கேட்டான்.

“ ஒண்ணுமில்ல, சும்மா தான் கேட்டேன் “ என்று சொல்லி, மைரா மனதிற்குள் உற்சாகமடைந்து கிளம்ப எத்தனிக்கையில், “ நம்ம முதல் இரவ நீ மிஸ் பண்ணதா சொன்னத மட்டும் கேட்டேன். வேற ஏதாவது கேட்காம இருந்துட்டேனா ? “ என்று கேஷவ் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அப்படியே உறைந்து நின்றாள். பின்னர் அதிர்சோயில் மூச்சிரைத்தபடி சுவரில் சாய்ந்து, தரையில் சரிந்தாள். அவனது சிரிப்பைக் கேட்டு அவனிடமிருந்து தப்பிக்க அறையை விட்டு தவழ்ந்து வெளியே சென்றாள், ஆனால் அவளுக்கு முன்னால் ஒரு ஜோடி கால்கள் கண்டதும் தலையை நிமிர்த்தி ரோஷினி தன் முன் நிற்பதைப் பார்த்தாள். எழுந்து நின்று ஒன்றுமே இல்லாதது போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ரோஷினியைத் தவிர வேறு எங்கும் பார்த்தாள்.

“ என்னோட கம்மல் காணும், அத தேடிட்டு இருந்தேன் ஆனா நீ என் வழிய மறிச்சு இருக்குற. பரவாயில்ல எந்த பிரச்சனையும் இல்ல, நான் வேற இடத்துல போய் தேடுறேன் “ என்று சொல்லிவிட்டு மைரா ஓட, அவள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கேஷவ்  கதவைச் சாத்திவிட்டு சத்தமாக சிரித்தான்.

ரோஷினி எரிச்சலுடன் இரவு உணவை சாப்பிட அவளைப் பின்தொடர்ந்தாள். மைரா, அர்ச்சனாவை சமையலறைக்கு இழுத்துச் சென்று, “ உங்க பையன் ரொம்ப மோசம். அவர் எல்லாத்தையும் கேட்டுட்டாரு. அவர் ஏன் சீக்கிரம் வந்தாரு ? “ என்று கேட்டாள்.

“ எனக்கு எப்படித் தெரியும்? “ என்று அர்ச்சனா கேட்க, “ இன்னைக்கு நைட்டு நான் உங்க கூட தூங்குவேன். என்னால அவர் முன்னாடி போக முடியாது அதனால மதன் அப்பாவ உங்க பையனோட தூங்க அனுப்புங்க “ என்று மைரா சொன்னாள்.

” யார், யார் கூட தூங்க போறாங்க ?” என்று கேஷவின் குரல் வர, அர்ச்சனா அவன் பக்கம் திரும்பினார், மைரா அர்ச்சனாவின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். கேஷவ், அர்ச்சனாவை வெளியேறுமாறு சைகை செய்ய, அவன் அர்ச்சனாவின் இடத்தில் நின்று மைராவைப் பார்த்தான்.

அர்ச்சனா என்று நினைத்து மைரா அவன் கையைக் கிள்ளியபோது அவன் புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

“ என் பிளான் அவர் கிட்ட சொல்லுங்கள் “ என்று மைரா கிசுகிசுக்க, “ என்ன பிளான் அம்மு, ஏன் என்ன கிள்ளுன ? “ என்று கேட்டான் கேஷவ்.

மைரா திரும்பி, தன் முன்னால் கேஷவ்  நிற்பதைக் கண்டதும் அவள் உதடுகளில் இருந்து ஒரு பெரிய பெருமூச்சு வெளிப்பட்டது. அவனுக்குப் பின்னால் எட்டிப் பார்த்தவள், அர்ச்சனா தன் புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டாள், “துரோகி “ என்று முணுமுணுத்துவிட்டு, தொண்டையைக் கனைத்துக் கொண்ட கேஷவ்  பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.

“ அம்மு, நீ என்ன பார்த்து சங்கடப்பட வேண்டியதில்லை, நானும் நம்ம முதல் இரவ மிஸ் பண்ணேன்னு சொன்னா உனக்கு சந்தோஷமா இருக்குமா? “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ மிஸ்டர் அங்கிள், ரொம்ப தைரியமா தான் கடலைப்போடுறீங்க. எனக்கு பசிக்குது அதனால சாப்பிட வாங்க இல்ல நீங்க இல்லாம நான் தனியா சாப்பிடுறேன் “ என்று சொல்லி அவன் கால்களை மிதித்துவிட்டு சமையலறையை விட்டு வெளியேறினாள். கேஷவ்  அவள் பின்னால் சென்று அவள் அருகில் அமர்ந்தான், ஆனால் இரவு உணவை சாப்பிடாமல் அவள் கையை பிடித்துக் கொண்டான்.

“ இப்ப என்ன? எனக்கு பசிக்குது கெட்சப் “ என்று மைரா சொன்னாள் அதற்கு கேஷவ், “ நீ நம்ம ரூம்ல தூங்குவனு சொல்லு “ என்றான்.

“ நீங்க இப்போ என்ன சாப்பிட விட்டா தான் இல்ல உங்க கூட  தூங்க அப்பாவ அனுப்புவேன் “ என்று மைரா மிரட்டியதும், கேஷவ்  உடனடியாக அவள் கையை விடுவித்தான். இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பியதும், ராகேஷின் வார்த்தைகள் மைராவுக்கு நினைவுக்கு வந்தன. அவள் கேஷவை அழைத்ததும் அவன் தன் வேலையை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.

“ கெட்சப், எப்போவாச்சும் உங்களுக்கு என்ன விட்டு போற எண்ணம் இருக்கா ? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் அதிர்ச்சியடைந்தான். அவன் எழுந்து கட்டிலில் அவளருகில் அமர்ந்து, “ எதனால உனக்கு இப்படி தோணுச்சு ? கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது, இப்பவே என் மேல சந்தேகம் இருக்கா? “ என்று கேஷவ் கேட்டான்.

“ இல்ல, ராகேஷ் சார் சொன்ன வார்த்தையால தான் நான் இத கேட்குறேன். உங்கள விடக்கூடாதுனு சொன்னாரு. நீங்க என்ன விட்டு போக விரும்பாம நான் ஏன் உங்கள போக விட போறேன் ? அவர் சொன்னது எனக்கு எதையோ உணர்த்த சொன்ன புதிர் மாதிரி இருந்துச்சு. “ என்று சொன்ன மைரா, “ சொல்லுங்க கெட்சப், என்ன விட்டு போவீங்களா ? “ என்று கேட்டாள்.

“ இப்போ மட்டும் இல்ல, எப்பவும் நான் உன்ன விட்டு போக மாட்டேன் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், “ ஏன்? “ என்றாள் மைரா.

“ ஏன்னா நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நீ என் அம்மு “ என்றான் கேஷவ் மெல்லிய புன்னகையோடு.

அவன் சொன்னதைக் கேட்டு மைரா புன்னகைத்தாள். கேஷவ் அவள் கன்னங்களைத் தட்டிக் கொடுத்துவிட்டு தன் வேலைக்குத் திரும்பினான்

*********************

முன்னோட்டம்:

“ நீ செய்ற எல்லாத்தையும் ரசிக்கிறேன், என்ன கிண்டல் செய்ய உனக்கு புடிக்கும்னு எனக்கு தெரியும். என்ன கிண்டல் பண்ணாம வேற யார நீ கிண்டல் செய்வ ? நீ என் மனைவி, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அது மட்டும் இல்ல, கல்யாணத்துக்கு முன்னாடியே, சின்ன வயசுல இருந்து நீ என் அம்மு அதனால என்ன வேணும்னாலும் செய்ய உனக்கு உரிமையும் இருக்கு “

 

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:52 pm

[…] 31,நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!