கேஷவ் புறப்பட்டு சென்றதும் பெண்கள் நால்வரும் முதலில் செயற்கை நகைகள் ஷாப்பிங் செய்யத் தொடங்கினர். மைரா அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை பார்த்துக் கொண்டே சிந்தனைகளில் மூழ்கி முற்றிலும் ஒதுங்கி இருந்தாள். அவளை யதார்த்தத்திற்கு கட்டாயப்படுத்துவதும், எல்லாம் சாதாரணமாக இருப்பதைப் போல நடந்துகொள்வதும் அதிகமாக இருக்கும் என்று வசுந்தரா, அர்ச்சனா மற்றும் நைனா உணர்ந்தனர் எனவே அவர்கள் சில நெக்லஸ்களைத் தேர்ந்தெடுத்து, அதை பற்றி அவளுடைய கருத்துக்களைப் பெற முயற்சித்தனர்.
அங்கு ஆண்களும், பெண்களும் ஜோடியாக கைகோர்த்து நடப்பதைப் மைரா பார்ப்பதை கண்ட அர்ச்சனா என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து போனார்.
“ மைரா, நாம முதல்ல கொஞ்சம் சாப்பிடுவோம் அதுக்கு அப்புறம் புடவை வாங்க போலாம் “ என்று நைனா கேட்டதும் மைரா தலையை மட்டும் ஆட்டினாள். அவர்கள் ஃபுட் கோர்ட்டுக்குச் சென்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் மாலுக்கு வரும்போது, மைரா உணவு வாங்க கவுண்டருக்கு ஓடுவாள், ஆனால் இப்போது அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டாள். நைனா அர்ச்சனாவையும் வசுந்த்ராவையும் உட்கார வைத்து சமாதானப்படுத்தி, உணவு வாங்க சென்றாள்.
மைரா தனக்கு பசி இல்லை என்று மறுத்தாள் ஆனால் வசுந்த்ரா அவளை சாப்பிட கட்டாயப்படுத்தினார். அவள் சில கவளங்களை மட்டுமே சாப்பிட்டாள் அப்போது அவளுடைய பார்வை ஒரு ஜோடி மீது விழுந்தது. அந்த நபர் அருகில் இருந்த பெண்ணுக்கு ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருந்தார். தொண்டை வலிப்பதை உணர்ந்த மைராவுக்கு, வாயில் இருந்த கவளத்தை விழுங்க வேதனையாக இருந்தது. டிஷ்யூ பேப்பரில் உணவைத் துப்பிவிட்டு பாத்ரூமை பயன்படுத்த சென்றாள்.
பாத்ரூமுக்குள் நுழைந்தவள் உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டு மௌனமாக அழுதாள். சில நிமிடங்கள் கழித்து வசுந்தரா, அர்ச்சனா மற்றும் நைனா ஆகியோரின் குரல்களைக் கேட்டு அவள் சட்டென்று முகத்தைத் துடைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தபடி வெளியேறினாள், ஆனால் அவளது வீங்கிய கண்களைப் பார்த்ததும் அவர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது, எனவே அவளைக் கேள்வி கேட்காமல் அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியேறினர்.
அவர்கள் ஒரு புடவை கடைக்குள் நுழைந்ததும் நைனா அவர்கள் அனைவருக்கும் ஒரு புடவையைத் தேர்ந்தெடுப்பதில் மைராவை ஈடுபடுத்த முயன்றாள். மைராவும் தனது மனநிலையை எல்லோரிடமும் பிரதிபலிப்பதற்காக வருத்தப்பட்டு அவர்களுடன் சேர்ந்து புடவை தேர்ந்தெடுக்க முயற்சி செய்தாள்.
“ நைனா இன்னொரு அந்த பக்கம் ப்ளூ கலர்ல இந்த டிசைன் புடவை கிடைக்குமான்னு பார்க்குறேன் “ என்று மைரா சொல்ல, “ நானும் உன் கூட வரேன் “ என்றாள் நைனா.
இருவரும் கிளம்பத் திரும்பிய போது க்ரிஷும், ரோஷினியும் புடவைகளைத் தேர்ந்தெடுப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி நின்றார்கள். தங்களை சுற்றி இருப்பவர்களை கவனிக்காமல் க்ரிஷ் புடவையை ரோஷினியின் தோளில் போட்டு பார்த்துக் கொண்டிருந்தான். நைனாவும் மைராவும் அதிர்ச்சியில் வேரூன்றியிருப்பதைக் கண்ட வசுந்த்ராவும் அர்ச்சனாவும் அவர்கள் பக்கம் திரும்பி க்ரிஷையும், ரோஷினியையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மைரா எதுவும் பேசாமல் கடையை விட்டு வெளியேறியதும், அர்ச்சனா க்ரிஷை நோக்கி செல்ல ஒரு அடி எடுத்து வைத்தார், ஆனால் வசுந்த்ரா அவரை தடுத்து அவர்கள் மைராவைப் பின்தொடர வெளியே ஓடினர். அவர்கள் அழைப்பதை கேட்டும் மைரா நிற்காமல் ஓடினாள்.
அவர்கள் மாலில் இருந்து வெளியேறியதும், நைனாவின் அணைப்பில் அழுது கொண்டிருந்த மைராவை அர்ச்சனாவும் வசுந்தராவும் பிடித்துக் கொண்டனர். வசுந்த்ரா ஒரு கார் புக் செய்து அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். வீட்டை அடையும் வரை அவர்கள் யாரும் பேசவில்லை. தொடர்ந்து அழுததால் மார்பு மற்றும் அடிவயிற்றில் வலி இருந்த போதிலும் மைரா தனது படுக்கையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள்.
அதே சமயம் அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்து மதனை கூப்பிட கேஷவ்வும் தனது தாயின் அலறலைக் கேட்டு வெளியே வந்தான்.
“ அம்மா, என்ன ஆச்சு? நீங்க இங்க என்ன பண்றீங்க ? நான் உங்கள 2 மணி நேரத்துக்கு முன்னாடி தானே மாலுல இறக்கிவிட்டேன்? “ என்று கேஷவ் குழப்பத்துடன் கேட்க, “ நீங்க டின்னருக்கு தானே வீட்டுக்கு வர பிளான் பண்ணியிருந்தீங்க அப்புறம் என்ன ஆச்சு அர்ச்சனா?” என்று மதனும் கேட்டார்.
“ அவன் நம்மள நிம்மதியா வாழ விடமாட்டான் மதன். அவன் ஒரு நாள் என்ன கொன்னுடுவான் “ என்று சொல்லி அர்ச்சனா அழுவதை பார்த்த கேஷவ் தன் அம்மாவை இழுத்து உட்கார வைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்தான், ஆனால் அவர் கோபத்தில் மறுத்துவிட்டார்.
“ நீங்க சொல்லாம என்ன நடந்துச்சுனு எங்களுக்கு எப்படித் தெரியும்? “ என்று கேஷவ் கேட்டதும், “ அவனுக்கு போன் பண்ணி எங்க இருக்கான்னு கேளு “ என்றார் அர்ச்சனா.
மதன் க்ரிஷின் நம்பருக்கு டயல் செய்து ஸ்பீக்கர் ஆன் செய்து மொபைலை கேஷவிடம் கொடுத்துவிட்டு அர்ச்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் அருகில் அமர்ந்தார்.
க்ரிஷ் அழைப்புக்கு பதில் சொன்னதும், பல்லைக் கடித்துக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தான் கேஷவ்.
“ க்ரிஷ் நீ இப்போ எங்க இருக்க?” என்று கேஷவ் கேட்க, “ அண்ணா, நான் பெங்களூர் போறேன், இன்னும் 3 மணி நேரத்துல போய் சேர்ந்துடுவேன். என்ன ஆச்சு ? “ என்று கேட்டான் க்ரிஷ்.
கேஷவிடமிருந்து மொபைலை பிடுங்கிய அர்ச்சனாவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
“ சென்னையில இருக்க பீனிக்ஸ் மால் எப்போ பெங்களூர் நெடுஞ்சாலைக்கு மாறுச்சு ? “ என்று அர்ச்சனா கோவத்துடன் கேட்டார்.
“ க்ரிஷ், நான் உன்ன சென்னையை விட்டுப் போகச் சொன்னேன் தானே ? “ என்று கேஷவ் கண்டிப்பான குரலில் கேட்க, “ மன்னிச்சிடுங்க அண்ணா, ரோஷினி, மாமா, அத்தை எல்லாரும் சென்னையில இருக்காங்க. நான் அவங்க இங்க தங்க ரூம் முன்பதிவு பண்ணி இருந்தேன். ரோஷினி ரொம்ப கவலையா இருந்தா அதனால அவள கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண ஷாப்பிங் கூட்டிட்டு போனேன் “ என்று க்ரிஷ் விளக்கம் கூறினான்.
“ உன் அப்பா அம்மா யாருன்னு மறந்துட்டனு நினைக்கிறேன். இன்னும் எவ்ளோ பொய் சொல்லியிருக்க ? எங்கள இப்படி கஷ்டப்படுத்த நாங்க என்ன தப்பு பண்ணோம் ? “ என்று கேட்டு அர்ச்சனா உடைந்து போனார்.
“ க்ரிஷ், நீ சென்னையிலிருந்து கிளம்பி 2 நாள் கழிச்சு வந்தா போதும்னு நான் காலையில தெளிவா சொல்லலையா? “ என்று கேஷவ் கேட்டதும், “ என்ன ஏன் இப்படி நடத்துறீங்கனு எனக்கு உண்மையிலேயே புரியல. நான் லவ் பண்றத எல்லார்கிட்டயும் மறைச்சேன் ஆனா அவ ஒன்னும் அந்நியம் இல்லையே. ரோஷினி நம்ம அம்மாவோட அண்ணான் பொண்ணு தானே. இதுல என்ன சிக்கல் இருக்கு ? “ என்று க்ரிஷ் கடுப்புடன் பதிலுக்கு கேள்வி கேட்டான்.
“ இதுல யாருக்கும் பிரச்சினை இல்ல க்ரிஷ், நீ உறவுகள சமநிலைப்படுத்த முயற்சி பண்ணனும், வேற எதுவும் இல்ல. சீக்கிரம் உன் நிச்சயதார்த்தம் நடத்த அம்மா அப்பா கிட்ட பேசறேன் “ என்று கேஷவ் சொன்னதும் அர்ச்சனா கேஷவை முறைத்தார், ஆனால் அவன் அழைப்பை துண்டித்து அப்பாவிடம் திரும்பினான்.
“ அப்பா, அவன் எல்லாரையும் காயப்படுத்திடான்னு என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனா அவன வெறுக்குறது இதுக்கு தீர்வாக இருக்காது. உங்க பார்வையில நீங்க சொல்றது சரி, அவன் பார்வையில அவன் சொல்றது சரி. அவன் லவ் பண்ற பொண்ண வெளிய கூட்டிட்டு போய் இருக்கான் அத நாம குறை சொல்ல முடியாது, குறிப்பா அவன் உங்க முன்னாடி ப்ரொபோஸ் பண்ணி இருக்கான். மாமா, அத்தை பத்தி யோசிச்சு பாருங்க, அவங்க பொண்ணுக்கும், தங்கச்சி பையனுக்கும் ஆதரவாக இருந்தத தவிர வேற எதுவும் செய்யல. அவங்களுக்கு நிச்சயதார்த்தம் பண்ணி, கல்யாணம் செய்ய தேதி முடிவு பண்றது தான் நல்லதுன்னு நினைக்கிறேன். இது உங்களுக்கு மட்டும் இல்ல, எல்லாரோட மனசையும் யதார்த்தத்திற்கு கொண்டு வரும் அதனால அவன் எல்லாரையும் காயப்படுத்திட்டான்னு அழறத விட நீங்க எல்லாரும் இதுல இருந்து சீக்கிரம் வெளிய வருவீங்க “ என்று கேஷவ் அவர்களுக்கு யதார்த்தத்தை புரிய வைத்தான்.
“ கேஷவ் சொல்றது சரி தான் அர்ச்சனா. ஊட்டியில மைராவுக்கு வேலை முடிஞ்சு எல்லாரும் திரும்பி வந்ததும் நிச்சயதார்த்தம் செய்வோம் “ என்று மதன் சொன்னதும், கேஷவ் சட்டென அவரை பார்த்து, “ மைராவோட வேலையை டிஸ்டர்ப் பண்ணாதீங்க பா. இது நிச்சயதார்த்தம் மட்டும் தான், அவங்க இல்லாம இத நாம செய்யலாம். நாம அவசரமா செய்ய வேண்டியிருந்துச்சுனு சொன்னா ராஜன் மாமா புரிஞ்சிக்குவாரு. அவங்கள கல்யாணத்துக்கு கூப்பிடுவோம் “ என்று உறுதியாக, இறுதியாக சொன்னான். அவன் வார்த்தையை கேட்ட அர்ச்சனா, “ இந்த முறையும் அவன் சொல்றது சரி தான். நான் வசுகிட்ட பேசுறேன், அவ புரிஞ்சிக்குவா. அடுத்த வாரம் எளிமையா நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்வோம் “ என்று சொன்னார்.
“ ரோஷினியோட அப்பாகிட்ட பேசி எல்லாத்தையும் சரி பண்ணுங்க பா “ என்று கேஷவ் நிதானமாக சொல்ல, மதன் தலையை சரி என்று அசைத்தார்.
கேஷவ் தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்து முகத்தை உள்ளங்கையால் தேய்த்துக் கொண்டே நடந்த அத்தனை நாடகங்களையும் கண்டு விரக்தியடைந்தான்.
நீண்ட நேரம் அழுத மைரா தன்னை அறியாமல் உறங்கினாள். நைனா படிகளில் இறங்கி வருவதை கண்ட வசுந்த்ரா, மைரா தூங்கிவிட்டாள் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
“ ராஜன், அவள இதுல இருந்து எப்படி வெளிய கொண்டு வர்றது ? அவளோட இந்த நிலைமைக்கு நாமும் பொறுப்பு. நம்ம முன்னாடியே அவன் நம்ம பொண்ண இப்படி காயப்படுத்த அனுமதி கொடுத்துட்டோம் “ என்று சொல்லி வசுந்தரா அழுவதை பார்த்த நைனா, “ அம்மா, நீங்க நினைக்குற மாதிரி இது அவ்ளோ சுலபம் இல்ல. மைரா முழுக்க முழுக்க அவனையே சார்ந்து வாழ்ந்தா, அவ வாழ்க்கையில எல்லாத்துக்கும் அவன் வேணும்னு நெனச்சா. நாம அவள மாத்தணும் அதுக்கு ஊட்டியில இருக்க போற ஒரு மாசம் அவள குணப்படுத்த உதவும் “ என்று எடுத்து சொன்னாள்.
“ நாங்க தப்பு பண்ணிட்டோம். இப்போ என் மகள வலி, மனச்சோர்வோட படுகுழியில விழாம காப்பாத்த நான் எதையும் செய்வேன் “ என்று ராஜன் சொன்னதை கேட்டு, “ அவன லவ் பண்ணத தவிர வேற எந்த தப்பும் செய்யல. அவன் ஏன் நம்ம பொண்ண இப்படி காயப்படுத்தினான் ? “ என்று வசுந்தரா அழுதார்.
வசுந்தராவின் கண்ணீரை துடைத்த ராஜன், “ நீ போய் அவளோட சாமான்கள பேக் பண்ணு, ஊட்டி கிளம்பற வரைக்கும் அவன சந்திக்காம பாத்துகுறது நல்லது “ என்று சொன்னார்.
ராஜன் வீட்டுக்குள் நுழைந்த மதனும், அர்ச்சனாவும் அவர்களை எதிர்கொள்ள மிகவும் வருத்தமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தனர். அவர்களின் வார்த்தைகள் ஆழமான காயத்தின் மூலம் அவர்களின் இதயத்தைத் துளைப்பது போல் இருந்தன, ஆனால் அவர்களின் வலி மைரா அனுபவித்து வரும் வலியுடன் ஒப்பிடும்போது ஒன்றுமில்லை. அழுது கொண்டிருந்த வசுந்த்ராவின் அருகில் அர்ச்சனா நின்றார்.
“ கேஷவ் அவன பெங்களூருக்கு அனுப்பிட்டான், அவன் ரெண்டு நாளுக்கு திரும்பி வரமாட்டான், அதனால நீங்க அவன சந்திக்க மாட்டீங்க “ என்று அர்ச்சனா சொன்னதும், “ என்ன மன்னிச்சிடு அர்ச்சனா “ என்றார் வசுந்தரா.
“ அப்படி பேசாத வசு, நான் மைராவ பெற்றெடுக்காம இருந்திருக்கலாம், ஆனா அவளோட வலிய என்னால புரிஞ்சிக்க முடியுது. அவள ஆதரிக்கவும், குணப்படுத்தவும் நான் எதையும் செய்வேன் “ என்றார் அர்ச்சனா.
அர்ச்சனா சமையலறைக்குள் நுழைந்து நைனாவின் உதவியுடன் சமைக்கத் தொடங்கினார். வசுந்தரா ஊட்டியில் ஒரு மாத காலம் தங்குவதற்கு தேவையான உடைகள் மற்றும் பிற பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தார்.
மைரா கண் விழித்து ஜன்னலில் சாய்ந்து சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளைப் பார்க்க உள்ளே நுழைந்த நைனா, அவள் விழித்திருப்பதைக் கண்டு, உடனடியாக அனைவரையும் அழைத்தாள்.
“ மைரா, வா நாம ஒன்னா சேர்ந்து சாப்பிடலாம். அர்ச்சனா இன்னைக்கு உனக்கு புடிச்சது எல்லாம் சமைச்சு இருக்கா “ என்று வசுந்தரா சொல்ல, “ எனக்குப் பசிக்கல மா. தயவு செஞ்சு என்ன விடுங்க “ என்றாள் மைரா. அப்போது மதன் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டதும், மைரா அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
“ இந்த மன உளைச்சலில் இருந்து மீள உனக்கு உதவியா இருக்கும்னா நான் அவன நிராகரிப்பேன் மைரா, ஆனா அவன தண்டிக்க விடாம என்ன தடுத்தது நீதானே? நீ அவன லவ் பண்ணணு எனக்குத் தெரியும், ஆனா அதே அளவுக்கு உனக்கு எங்க எல்லார் மேலையும் பாசம் இருக்குன்னு எனக்கு தெரியும். நான் சொன்னது சரி தானே ? “ என்று மதன் கேட்டதும், “ எனக்கு நீங்க எல்லாரும் ரொம்ப முக்கியம், உங்க எல்லார் மேலையும் நிறைய அன்பு வெச்சுருக்கேன் “ என்றாள் மைரா.
“ நல்ல பொண்ணு, நாங்க எல்லாரும் உன் மேல அளவு கடந்த அன்பு வெச்சுருக்கோம் மைரா, உன் காதலுக்கு தகுதியில்லாத முட்டாள் அவன், இத நீ புரிஞ்சிக்குற வரை உன்ன இன்னும் அதிகமா நேசிக்க முயற்சிப்போம். அவன் என் மகனா இருக்கலாம், ஆனா தங்கத்தைத் தேடி ஒரு வைரத்தை இழந்தத ஒரு நாள் அவன் உணர்வான். அவன் உன் கண்ணீருக்கு தகுதியானவன் இல்ல மைரா “ என்று மதன் சொன்னதும் மைரா வேகமாக மறுத்து தலை ஆட்டினாள்.
“ தயவு செஞ்சு அவன வில்லனா ஆக்காதீங்க மாமா. இதுல அவன் தப்பு என்ன ? அவனுக்கு புடிச்ச பொண்ண லவ் பண்ணான். அவன் என்ன லவ் பண்ணலனு அவன் வில்லன் இல்ல. எல்லாரும் அவங்களுக்கு புடிச்சத தேர்வு பண்ண உரிமை இருக்கு. அவன் என்ன மாதிரி இல்ல, அவன் அதிர்ஷ்டசாலி மாமா. அவன் லவ் பண்ண பொண்ண கல்யாணம் செய்ய போறான். அவன் மேல எந்த தப்பும் இல்ல “ என்று மைரா சொன்னதை கேட்டு அனைவரும் புன்னகைத்தனர்.
“ பாருங்க நம்ம மைரா எவ்ளோ அன்பா இருக்கா, அவன் உன்ன காயப்படுத்தின அப்றமும் அவன் சந்தோஷமா இருக்கணும்னு நீங்க விரும்புற. க்ரிஷ் சந்தோஷமா இருக்க தகுதியானவனா இருந்தா அப்போ நீயும் இதுல இருந்து மீண்டு வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும் “ என்று எடுத்து சொன்னார் மதன்.
“ நீ உடனே வேற ஒருத்தர லவ் பண்ணனும் இல்ல கல்யாணம் பண்ணனும்னு நாங்க அர்த்தப்படுத்தல, நீ உன் வாழ்க்கையில முன்னேறனும். பெருசா ஒன்னும் நாங்க கேட்கல மா, பட்டினி இருந்து அழுது அழுது உன் எனெர்ஜிய இழக்காத. உன்ன அமைதிப்படுத்துற எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதுல கவனம் செலுத்து, எங்க கிட்ட பேசு, வெளிய போய் உன் விருப்பப்படி என்ன வேணும்னாலும் செய்வோம் “ என்று பொறுமையாக பேசி புரிய வைத்தார் ராஜன்.
“ இப்படி முடங்கி இருக்காத மா, உனக்கு நாங்க இருக்கோம் “ என்று அர்ச்சனாவும் சொன்னார்.
“ மனுஷன் ஒன்னு நெனச்சா கடவுள் வேற ஒன்னு நடத்துவாரு மைரா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைய கடவுள் எழுதி இருப்பாருனு நான் நம்புறேன். அந்த நாளுக்காக காத்திருப்போம், ஆனா அதுவர இந்த அழுகையில இருந்து வெளியே வருவோம். உன்ன இப்படி பார்க்க முடியல ஆனா ஒரு விதத்துல நீ அழறத பார்க்குறதும் எங்களுக்கு ஒரு தண்டனை தான், ஏன்னா நாங்க இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா இப்படி எதுவும் நடந்திருக்காது “ என்று வசுந்தரா மனதில் இருந்ததை கொட்டினார்.
“ நீ சிரிக்குறத பார்க்குற வரை நான் அவனுக்கு நிச்சயதார்த்தமோ, கல்யாணமோ செய்ய மாட்டேன். என் பொண்ண அழ வெச்சதுக்கு அது தான் அவனுக்கு தண்டனையா இருக்கும் “ என்று மதன் சொன்னதும், “மாமா, தயவு செஞ்சு அவன நிம்மதியா வாழ விடுங்க. அவன் கஷ்டப்படனும்னு எனக்கு எண்ணம் இல்ல. அவன் என் பெஸ்ட் பிரெண்ட் அத மறந்துடாதீங்க. இப்போ நான் கஷ்டப்படுற மாதிரி அவனும் கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. நான் சீக்கிரம் சரி ஆயிடுவேன் ஆனா கொஞ்சம் டைம் கொடுங்க. வழக்கமா பொண்ணுங்க செய்ற மாதிரி நான் ரூம்ல அடைஞ்சு இருக்க மாட்டேன், என் மேல இவ்ளோ பாசம் வெச்சுருக்க குடும்பம் இருக்கு. உங்க எல்லாருக்காகவும் நான் இதுல இருந்து கடந்து வருவேன். இப்போ நான் முகம் கழுவிட்டு வரேன் எல்லாரும் சாப்பிடலாம். அதுக்கு அப்புறம் எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் இசை நிகழ்ச்சிக்கு போக டிரஸ், மேட்சிங் நகை எல்லாம் செலக்ட் பண்ணனும் அப்புறம் நான் அழகா இருக்க எனக்கு ஃபேஸ் பேக் போடணும் “ என்று உற்சாகமாக பேசினாள் மைரா.
“ உனக்கு டிரஸ் நான் செலக்ட் பண்றேன், வசுகிட்ட ஃபேஸ் பேக் போடு. நீ அப்படியே ஒரு ஸ்டார் மாதிரி இருக்க நாங்க உதவி செய்வோம் “ என்று அர்ச்சனா சொன்னதும் மைரா அனைவரையும் அனைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.
********************************************
முன்னோட்டம்:
“ ஷட் அப் ரோஷினி. மறுபடியும் மைராவ பத்தி எதுவும் தப்பா பேசாத. மைராவுக்கும் உன்ன பிடிக்காது ஆனா அவ உன்ன பத்தி ஒரு முறை கூட மோசமா பேசினது இல்ல. நான் உன்ன ப்ரபோஸ் பண்ண அப்போ கூட அவ தான் முதல்ல நமக்கு வாழ்த்து சொன்னா “

2 comments
[…] மைராவோட வேலையை டிஸ்டர்ப் பண்ணாதீங்க […]
[…] […]