கேஷவ் முதலில் எழுந்து பார்த்த போது மைரா நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் எதுவும் சாப்பிடாததால் அவன் வெளியே சென்று காலை உணவை சமைக்க விரைவாக தயாராகி சமையலறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்தான். காலடிச் சத்தம் கேட்டு வெளியே வந்த போது மைரா சோபாவில் தலை சாய்த்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
அவளருகில் சென்று அவள் நெற்றியை வருடியவன், “ எழுந்திட்டியா அம்மு, குளிச்சிட்டு வா, நான் ப்ரேக்பாஸ்ட் எடுத்து வைக்குறேன் “ என்று சொன்னான்.
மைரா பேசாமல் அறைக்குத் திரும்பினாள், அவனும் அவளைப் பின்தொடர்ந்தான். படுக்கையில் ஒரு பையை வைத்துவிட்டு ஒரு துண்டை அவளிடம் கொடுத்து, “ உனக்கு இப்ப போட டிரஸ் வாங்கி வந்திருக்கேன். அப்புறம் நிறைய டிரஸ் வாங்கலாம் “ என்று அவன் கூறியதும், மைரா துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். ஹாலுக்கு திரும்பிய கேஷவ் ராகேஷின் நம்பரை டயல் செய்தான்.
“ நான் உன்னோட போனுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என்ன ஆச்சுனு இப்போ சொல்றியா ? “ என்று ராகேஷ் கேட்டதும், கேஷவ் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு, உள்ளங்கையால் முகத்தை மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டான்.
“ இப்போ வருத்தமா இருக்காளா? “ என்று ராகேஷ் கேட்க, “ நான் எல்லாத்தையும் பாழாக்கிட்டேன் ராகேஷ், அவன் என்ன அடிச்சு இருந்தா கூட நல்லா இருந்துருக்கும் ஆனா நான் எல்லாத்தையும் மறைச்சிட்டேன்னு வருத்தப்படுறா. அவ எழுந்ததுல இருந்து என்கிட்ட இன்னும் பேசல அத தவிர எல்லாம் சரியா தான் இருக்கு “ என்று பதில் சொன்னான் கேஷவ்.
“ நீ அவள எவ்ளோ லவ் பண்றனு எல்லாத்தையும் புரிஞ்சிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் கொடு, நைட்டு டின்னருக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வா “ என்று ராகேஷ் கூறினான்.
கேஷவ் சம்மதித்து டைனிங் டேபிளுக்குத் திரும்பினான். மைரா அவனருகில் அமர்ந்ததும் காலை உணவை ஒரு தட்டில் பரிமாறி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான், அவள் மறுக்காமல் அவன் கையால் சாப்பிட்டாள்.
“ ராகேஷ் இன்னைக்கு நைட்டு நம்ம ரெண்டு பேரையும் டின்னருக்கு வர சொல்லி இருக்கான் அம்மு, போகலாமா? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா சரி என்று தலையை ஆட்டினாள்.
பின்னர் அவள் வீட்டை விட்டு வெளியேறியதும் கேஷவ் கதவைப் பூட்டிவிட்டு அவளிடம் விரைந்தான். அவர்கள் மௌனமாக நடக்க, மைரா ஒரு நர்சரியின் முன் நின்ற போது அவனும் நின்றான். அவள் சில செடிகளைத் தேர்ந்தெடுத்து எதுவும் பேசாமல் வெளியேறினாள். உரிமையாளர் அவளைப் பின்தொடர முயன்றார், ஆனால் கேஷவ் அவரைத் தடுத்து அவற்றுக்கு பணம் செலுத்தினான். அவர்கள் காட்டேஜுக்கு திரும்பியதும் மைரா செடிகளை நடவு செய்வதில் மும்முரமாக இருந்தாள். கேஷவ் அவளுக்கு உதவினான், நாள் முழுவதும் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகவே செய்தனர்.
7 மணிக்கெல்லாம் தயாராகி இருவரும் ராகேஷின் வீட்டை அடைந்ததும் மைரா புன்னகையுடன் குடும்பத்தினரிடம் பேசினாள்.
“ எப்படி இருக்கீங்க மைரா? நீங்க மறுபடியும் ஊட்டிக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம் “ என்று ராகேஷ் சொல்ல, “ ரொம்ப நன்றி, இன்னைக்கு உங்க எல்லாரையும் சந்திச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் “ என்று மைராவும் புன்னகைத்தாள்.
ராகேஷின் மனைவி இரவு உணவை பரிமாற, மைரா எதையும் மறுக்காமல் சாப்பிட்டதால் கேஷவ் நிம்மதி அடைந்தான். அவர்கள் அனைவரும் இனிப்புகளுடன் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தனர், ராகேஷின் குழந்தைகள் தங்கள் ஓவியங்களை மைராவிடம் காட்டினர், அவள் அவர்களின் உரையாடலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.
“ நீங்க ரெண்டு பேரும் இங்க வந்தது நல்லது. ராகேஷ் நாளைக்கு என் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கான். ஒவ்வொரு வருஷமும் ஞாபகமா என் பிறந்த நாள கொண்டாடுறான் “ என்று ராகேஷின் அம்மா சொன்னதை கேட்டு, மைரா குழந்தைகளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு தன் முழு கவனத்தையும் அவரிடம் திருப்பினாள். ராகேஷும் கேஷவும் பதட்டத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“ நாளைக்கு உங்க பிறந்த நாளா ? ஆனா ரெண்டு மாசம் முன்னாடி தானே வந்துச்சு? “ என்று மைரா கேட்க, “ இல்ல, நாளைக்கு தான் “ என்றார் ராகேஷின் அம்மா.
மைரா அனைவரிடமிருந்தும் விலகி கேட் அருகே நகங்களைக் கடித்துக் கொண்டே நின்றாள்.
“ அவங்க பிறந்த நாள் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான்னு எனக்கு உறுதியா தெரியும். போன வருஷம் ராகேஷ் சார் என்ன கொண்டாட்டத்துக்கு கூப்பிட்டது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. இப்போ ஏன் அவங்க பதட்டமா இருக்காங்க, இப்போ என்கிட்ட இருந்த என்ன மறைக்குறாங்க “ என்று மனதில் யோசித்தபடி அவள் நின்று கொண்டிருந்த போது, ராகேஷ் அவள் அருகில் நின்று அவள் இனிப்பைத் தொடாததால் ஒரு கோப்பை தேநீரைக் கொடுத்தான்.
“ இப்போ உங்க மனசுல என்ன இருக்குனு எனக்குத் தெரியும், நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியும் “ என்று ராகேஷ் சொன்னதும், “: ஏன் பொய் சொன்னீங்க ? “ என்று கேட்டாள்.
“ கேஷவ் நான் ரொம்ப ரசிக்குற கோடியில ஒருத்தன், அவனோட வாழ்க்கையில ஜெயிச்சதுக்காக இல்ல, ஆனா அவன் உங்கள லவ் பண்ற விதம் என்ன ரசிக்க வெச்சுது. நீங்க முதல் முறையா ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி அவன் எனக்கு போன் பண்ணி ஒரு உதவி கேட்டான். அவன் உங்களுக்கு நடந்தத சொல்லி உங்கள அந்த இடத்துல இருந்து வெளிய கூட்டிட்டு வரணும்னு விரும்பினான் அதனால ஒரு மாசத்துக்கு என் ஸ்கூல்ல உங்களுக்கு வேலை கொடுக்க சொல்லி கேட்டான். இடம் மாறி இருந்தா உங்க மனசுக்கு அமைதி கிடைக்கும்னு அவன் நம்பினான் “ என்று ராகேஷ் சொன்னதை கேட்டு மைராவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் உருண்டோடியது. அவள் கண்ணீரை அடக்கிக் கொள்ள விழுங்கினாள்.
“ நீங்க இங்க வர, தங்குறதுக்கு இடம், டிரைவர், வேலை செய்ய ஆளுங்க எல்லாத்தையும் அவனே ஏற்பாடு செய்தான். உங்கள அந்த துயரத்துல இருந்து மீட்க அவன் எல்லா வழியையும் யோசிச்சிட்டு இருந்தான். அதுல ஒன்னு தான் உங்களுக்கு டிரைவிங் சொல்லி கொடுக்குறது. அவனோட காரை இங்க கொண்டு வர சொல்லி, ஒரு பயிற்ச்சியாளரையும் ஏற்பாடு செய்தான். “ என்று ராகேஷ் சொல்லும் போது மைரா குறுக்கிட்டாள்.
“ குறைந்த பட்சம் அவர் பண்ணத நீங்க பண்ணதா சொல்லாம அதுக்கு பதிலா எல்லாத்தையும் அவர் தான் செய்றார்னு என்கிட்ட நீங்க சொல்லியிருக்கலாம். “ என்று மைரா கூறினாள்.
“ அவன் சொன்னத செஞ்சேன். அவன் தம்பியோட நிச்சயதார்த்தம் நடக்கும் போது, நீங்க வீட்ல இருந்து அதுக்காக அழறத அவன் விரும்பல, அதனால என் அம்மாவோட பிறந்த நாள்னு பொய் சொல்லி உங்கள டின்னருக்கு கூப்பிட்டு அந்த நிச்சயதார்த்தத்துல இருந்து உங்க மனசை திசை திருப்ப சொன்னான். நான் என் குடும்பத்துல இருக்கவங்க கிட்ட அதே மாதிரி நடிக்க சொன்னேன். நீங்க சிரிச்சி சந்தோஷமா இருக்க எங்களால முடிஞ்ச வர முயற்சி பண்ணோம். நான் ஒரு கருவி மட்டும் தான், அவன் தான் எல்லாத்தையும் செய்தான் “ என்று ராகேஷ் கூறினார்.
“ என்ன பத்தி அவருக்கு தகவல் கொடுத்தீங்களா? காரை அவரே ஓட்டி வந்தாரா ? அப்போ அவர் இங்க இருந்தாரா? “ மைரா உடனே கேட்டாள்.
“ எல்லா ஞாயிற்றுக்கிழமையும் அவன் வந்து உங்கள தூரத்துல இருந்து கவனிப்பான். நீங்க கார் ஆக்ஸிடென்ட் பண்ணது தெரிஞ்சதும் அவன் டெல்லியில இருந்து இங்க வந்தான். நீங்க நல்லா இருக்கீங்களான்னு அவன் கண்களால பார்த்த அப்புறம் தான் அவன் திரும்பி போனான். ஆண்டு விழாவுக்கு முதல் நாள் எனக்கு போன் பண்ணி உங்களுக்கு பாட முதல் வாய்ப்பு தர சொல்லி கேட்டான். நீங்க மேடையில பாடுறத பார்த்து அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான். அவன் உங்கள சுத்தி இருக்கும் போது தவிர அவன அவ்ளோ சந்தோஷமா நான் பார்த்ததில்ல. அவன் முன்னாடியே எல்லாத்தையும் சொல்லாத காரணத்தால நீங்க புண்பட்டிருப்பீங்கனு எனக்கு புரியுது ஆனா என்ன நம்புங்க, நீங்க அனுபவிச்ச அளவுக்கு அவனும் பாதிக்கப்பட்டு இருக்கான். அந்த மனுஷனுக்கு ஒரு வாய்ப்புக்கு கொடுங்க “ என்று ராகேஷ் கேட்டுக்கொண்டதும், மைரா முகத்தைத் திரும்பி கேஷவ் அவளைப் பார்ப்பதைக் கண்டாள்.
“ எனக்கு களைப்பா இருக்கு, நாங்க கிளம்புறோம் “ என்று மைரா சொன்னதும், ராகேஷ் தலையை ஆட்ட, மைரா அவனுடன் திரும்பி சென்று அனைவரிடம் இருந்தும் விடைபெற்று கொண்டாள்.
அவள் காரில் ஏற, கேஷவ் மீண்டும் காட்டேஜுக்கு காரை ஓட்ட ஆரம்பித்தான். அவர்கள் இரவு உடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் படுத்துக் கொள்ள, கேஷவ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மைரா அவனருகே நகர்ந்து அவன் மார்பில் தலை சாய்க்க, கேஷவ் கண்களை மூடி அவளை அணைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது அவன் நெஞ்சு விம்மியது.
“ ஆண்டு விழாவுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ? “ என்று மைரா மெல்ல கேட்டாள்.
“ ஆண்டு விழா அன்னைக்கு அந்த புடவையில உன்ன பார்த்த அப்போ இந்த உலகத்தையே மறந்து போயிட்டேன். உன்கிட்ட என் லவ் சொல்லி உன்ன என்கூட கூட்டிட்டு போக விரும்பினேன், ஆனா நீ உன் வாழ்க்கையில ஏதாவது முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி மனசளவுல வலுவா இருக்கனும்னு நான் விரும்பினேன். நீ எனக்கு முதல் முறையா சட்டை பரிசா கொடுத்த அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு. முதல் முறையா உன்கிட்ட கொஞ்சம் எல்லையை தாண்டி கிண்டல் பண்ண என் மனச என்னால கட்டுப்படுத்த முடியல. அன்னைக்கு உன்ன விட்டுப் போறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஆனா நான் செய்ய வேண்டியிருந்தது. ராகேஷ் உதவியோட நான் சில ஸ்கூல் அப்புறம் காலேஜ் எல்லாம் தொடர்பு பண்ணி அங்க நீ வேலையில பிஸியா இருக்க எல்லா ஏற்பாடும் செஞ்சேன்.
நீ உனக்கு கிடைச்ச வாய்ப்பு எல்லாம் பயப்படுத்தி தைரியமா, வலுவாக மாறிட்டு இருந்த. நான் உன்ன பத்தி ரொம்ப பெருமையா உணர்ந்தேன். நான் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் உன்ன பார்க்க வீட்டுக்கு வருவேன், அந்த 24 மணிநேரமும் சொர்க்கமா இருக்கும், அப்போ நீ உன் வேலைய பத்தியும் அந்த வாரத்துல நடந்த எல்ல்லாத்தையும் பத்தி என்கிட்ட பேசுவ. அப்போ தான் நான் உன்கிட்ட ப்ரொப்போஸ் பண்ண முடிவு பண்ணேன் ஆனால் எனக்கு ஒரு முக்கியமான கேஸ் கொடுத்தாங்க அதுக்காக அடுத்த சில மாசம் நான் வேலை செய்ய வேண்டியிருந்துச்சு. நான் வேலைய முடிக்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன், என்னோட பிளான் படி வேலைய முடிக்க ரெண்டு நாள் இருந்த அப்போ தான் நீ எனக்கு போன் பண்ணி என்ன சந்திக்க விரும்புறதா சொன்ன. அது என்னனு எனக்குத் தெரியாது, ஆனா உன் கிட்ட திரும்பி வந்து என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்ல நான் தயாரா இருந்தேன் “ என்று கேஷவ் கூறினான்.
பிளாஷ்பேக்:
கேஷவ் தனது வசதியான இருக்கையிலிருந்து எழுந்து கைகளை நீட்டியபடி அறையைச் சுற்றி வந்தான்.
“ அய்யோ கடவுளே! மைரா உன்ன சந்திச்சு உன்கிட்ட என் லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ண காத்துட்டு இருக்கேன் அம்மு. அவ என்கிட்ட என்ன சொல்ல விரும்புறா ? ஒருவேள அவளும் என்ன லவ் பண்றதா சொன்னா என்ன செய்றது ? நான் ஏன் இந்த வேலைய தூக்கி எறிஞ்சிட்டு என் அம்மு கிட்ட ஓடி போக கூடாது ? “ என்று உற்சாகத்தில் பிதற்றிக்கொண்டே சிரித்தான்.
தொண்டையைக் கனைக்கும் சத்தம் கேட்டு அறையின் வாசலில் வருணைப் பார்த்தான்.
“ யாரோ ரொம்ப சந்தோஷமா இருக்காங்க போல, என்ன காரணம் ? “ என்று வருண் கேட்க, “ வருண், வேலைய முடிச்சிட்டு நாளைக்கு மீட்டிங்குக்கு என்ன கூப்பிடு. நான் வீட்டுக்கு போகணும் “ என்று கேஷவ் சொன்னான்.
“ என்ன விசேஷம்? “ என்று வருண் கேட்டதும், “ மைரா என்கிட்ட பேசணும்னு சொன்னா. இந்த வேலையை முடிக்க தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஒருவழியா எனக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும், நான் மைரா கிட்ட ப்ரொபோஸ் பண்ண முடியும். எனக்கு நேரம் இல்ல, நான் அவளுக்கு ஒரு மோதிரம் வாங்கனும் அதனால நீ ரிபோர்ட் ரெடி பண்ணு, நாம சீக்கிரம் இந்த வேலைய முடிக்கிறோம் “ என்று கேஷவ் சொன்னான்.
“ புது கார் பத்தி அவங்களோட சோசியல் மீடியாவுல போட்டோ இருந்தத பத்தி கேட்டீங்களா ? “ என்று வருண் கேட்டான்.
“ இல்ல, அது மாமாவோட காரா இருக்கும். எப்படியும் அவளை சந்திக்கும் போது அத பத்தி கேட்பேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் சாவியை எடுத்துக்கொண்டு தன் அறையை விட்டு வெளியேறினான்.
ஒரு நகைக் கடைக்குச் சென்று மோதிரத்தைத் தேடினான். ஒவ்வொரு கடையாக சென்று இறுதியாக 3 மணி நேரத்திற்குப் பிறகு சிறிய பட்டாம்பூச்சி மற்றும் இறக்கைகளில் வைரம் பதிக்கப்பட்ட ஒரு அழகான மோதிரத்தைக் கண்டுபிடித்து வாங்கினான்.
“ என் அம்முவுக்காக அழகாக உருவாக்கப்பட்டது “ என்று நினைத்து புன்னகையோடு வீடு திரும்பியவனுக்கு தூக்கம் வராமல் பைத்தியம் பிடித்து விட்டது ஆனாலும் நள்ளிரவில் வேலைக்கு அழைக்கப்பட்டதும் அதை சமாளிக்க விரைந்தான்.
மீட்டிங் அனைத்தும் முடிந்ததும் சென்னைக்கு திரும்பி, சென்ற வருடம் கட்டிய வீட்டிலிருந்து காரை ஓட்டிச் சென்றான். காரில் இருந்து இறங்கி மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
“ கேஷவ், நீ ரொம்ப வித்தியாசமா, ரொம்ப சந்தோஷமா இருக்க. என் பையன பத்தி நான் என்ன தெரிஞ்சிக்கணும் ? “ என்று அர்ச்சனா கேட்டார்.
“ நான் லவ் ப்ரொபோஸ் பண்ண போறேன், அவளும் சம்மதம் சொல்லுவானு நம்புறேன். உங்க மகனுக்கு கல்யாணம் ஆகுறத நீங்க பார்க்க போறீங்க “ என்று மனதில் நினைத்த கேஷவ், “ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு ஆனா இப்போ நான் அதை முடிச்சிட்டேன். நான் இந்த நாளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன், என் சந்தோஷத்துக்கு காரணம் இன்னைக்கு சொல்றேன் ஆனா முதல்ல கார் ஏன் நம்ம வீட்டு முன்னால நிறுத்தி இருக்கு சொல்லுங்க, அப்புறம் நான் மைராவோட புது கார் போட்டோ பார்த்தேன் “ என்றான் கேஷவ்.
ரோஷினி செய்த அனைத்தையும் அர்ச்சனா அவனுக்கு விளக்க, கேஷவ் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
“ அவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி செய்வா ?” என்று மனதில் கொந்தளித்தவன், ” நான் மைராவ சந்திக்க போறேன். அவ கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அவளும் ஏதோ முக்கியமா பேசணும்னு கூப்பிட்டா “ என்று சொல்லி உடனே தயாராகி மைராவை சந்திக்க கிளம்பினான்.
கேஷவ் அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவள் தலைமுடியை உலர்த்திக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவள் முகத்திலும் கழுத்திலும் நீர்த்துளிகளைக் கண்டான், அது கவர்ச்சியாகத் தெரிந்தது. முதன்முறையாக அவளது வளைவுகளை இன்னும் விரிவாகப் பார்க்க அனுமதித்தவன், அவளைத் தன் கைகளில் இழுத்து, அவளை முத்தமிட்டு, அவள் முகத்திலிருந்தும் கழுத்திலிருந்தும் நீர்த்துளிகளை உறிஞ்ச ஒரு தீப்பொறியை உணர்ந்து மனதளவில் முனகினான்.
“ எந்த டிரஸ் போட்டாலும், எப்படி இவ்ளோ அழகா இருக்கா? எப்படி இவ்ளோ வசீகரமாக இருக்கா ? எதுவுமே செய்யாம எப்படி இவ்ளோ சுலபமா என்ன அவளோட கட்டிப்போடுறா ? என்று மனதில் நினைத்து நின்றான்.
“ கெட்சப், நீங்க திரும்பி வந்துட்டீங்களா ? “ என்று மைரா கேட்க, “ எப்பவும் நிரந்தரமா உன் கூட இருக்க வந்துட்டேன் அம்மு “ என்று கேஷவ் மனதில் பதில் சொன்னான்.
“ சில முக்கியமான வேலை இருந்ததால லேட்டா வந்துட்டேன் அதுக்கு என்ன மன்னிச்சிடு அம்மு. நான் இல்லாத நேரத்துல நடந்த எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீ எனக்கு போன் பண்ணி இருக்கலாம் அம்மு. ஆனா உண்மைய சொல்லனும்னா, நீ விட்டுக்கொடுக்குறதுக்கு பதிலா நீ அவ கூட சண்ட போட்டு இருந்தா நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். நான் உனக்கு எது கொடுத்தாலும் அது உனக்கு மட்டும் தான் சொந்தம் அம்மு, அத உன்கிட்ட இருந்து பறிக்க யாருக்கும் உரிமை இல்லை, அது நானா இருந்தாலும் கூட “ என்று கேஷவ் அவளிடம் கூறினான்.
“ கெட்சப், நீங்க அப்படி உணர்ந்திருந்தா மன்னிச்சிடுங்க, ஆனா நான் எவ்ளோ தான் தாங்குவேன் ? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, அதுக்கு மேல என்னால தாங்க முடியல “ என்று மைரா உடைந்த குரலில் கூறினாள்.
“ இனி யாரும் உன்ன காயப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன் அம்மு. நான் உன்ன என் கையில வெச்சு பாதுகாப்பா பார்த்துக்குவேன் “ என்று கேஷவ் மனதில் நினைத்தான்.
“ இதை நிரந்தரமா சரி செய்றேன் அம்மு. நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும், நீயும் பேசனும்னு சொன்ன அதனால நாம ஐஸ்கிரீம் சாப்பிட வெளிய போகலாமா ? “ என்று கேஷவ் கேட்டான் அப்போது அவன் கண்கள் அழைப்பிதழ்கள் மேல் விழுந்து பிறகு மைராவைப் பார்த்தன. அவன் அதை பற்றி மைராவிடம் கேட்டான் ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் ராஜனும் வசுந்தராவும் கையில் பூஜைத் தட்டுடன் வெளியில் இருந்து உள்ளே நுழைந்தனர். மைராவின் திருமணத்தைப் பற்றி கூறி ராஜன் அழைப்பிதழை கேஷவ் கையில் கொடுத்த போது மீண்டும் கேஷவின் கனவுகளும், அவனது இதயமும் நொறுங்கியது.
“ நான் ஏன் இவ்ளோ துரதிர்ஷ்டசாலியா இருக்கேன் ? நீ என்னுடையவளா இருக்க முடியாதா ? “ என்று மனம் நொந்து போனான்.
“ வாழ்த்துக்கள் மைரா “ என்று அவளிடம் சொன்னவன், “ இது அவளோட சம்மதத்தோட நடக்குதா? இதுக்கு அவ தயாரா இருக்காளா ? நான் அவகிட்ட பேசனும் “ என்று மனதில் நினைத்து மைராவை பார்த்து, “ மைரா, உன்னோட புது கார்ல என்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டு போக மாட்டியா ? “ என்று கேட்டான்.
அவளை முதன்முதலாக மைரா என்று அழைத்தது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கேஷவ் வெளியே சென்று பயணிகள் இருக்கையின் கதவில் சாய்ந்திருக்க மைரா வந்ததும் இருவரும் காரில் அமர்ந்தனர்.
அவளது சோகமான முகத்தை பார்த்தவன், “ இந்தக் கல்யாணம் உன் சம்மதத்தோட நடந்தா நீ ஏன் சந்தோஷமா இல்ல அம்மு ? “ என்று மனதில் நினைத்து அவளிடம், “ உன் கல்யாணத்த பத்தி சொல்ல தான் என்ன கூப்பிட்டியா ? என்று கேட்டான்.
மைரா ஆம் என்று தலை அசைக்க, “ இங்க கல்யாணத்துல உனக்கு சம்மதமா மைரா? “ என்று கேஷவ் கேட்டான்.
“ என்ன ஏன் மைரா சொல்லி கூப்பிடுறீங்க கெட்சப் ? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா ? நீங்களும் என்கிட்ட ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க, அது என்ன ? “ என்று மைரா கேட்டாள்.
“ என் பெயர் இல்லாம வேற ஒருத்தரோட பெயருக்கு பக்கத்துல உன் பெயர் இருக்கும் போது நான் எப்படி உன்ன என் அம்மு சொல்லி கூப்பிடுவேன் அம்மு “ என்று மனதில் வேதனையோடு நினைத்தான்.
“ நீ எந்தத் தப்பும் செய்யல. என் கேள்விக்கு பதில் சொல்லு அம்மு. இந்த கல்யாணம் உன் சம்மதத்தோட நடக்குதா? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ இது என் சம்மதத்தோட நடக்குது, ஆனா நான் சரியான முடிவு எடுத்து இருக்கேனா எனக்கு தெரியல. என் அப்பா, அம்மா எல்லாரும் சந்தோஷமா இருக்குறத பார்க்கும் போது, நான் சரியான முடிவு எடுத்து இருக்கேன்னு நினைக்கிறேன், ஆனா இன்னும் நான் குழப்பத்துல தான் இருக்கேன் “ என்று பதில் சொன்னா மைராவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன, அவள் உடனே சட்டையால் அதை துடைத்தாள்.
“ நான் கேட்க நெனச்ச பதில் உன்னோட கண்ணீர் மூலமா எனக்கு கிடைச்சிடுச்சு அம்மு “ என்று கேஷவ் நினைத்தான்.
சிறிது நேரம் கழித்து மைரா திரும்பி வந்து காரை நிறுத்தினாள், ஆனால் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கேஷவ் வலியை விழுங்கியபடி அவளைப் பார்த்தான். அவள் மேலும் அழுவதைப் பார்க்க முடியாமல் சீட் பெல்ட்டை அவிழ்த்து கீழே இறங்கினான், ஆனால், “ எனக்கு பயமா இருக்கு கெட்சப் “ என்று அவள் சொன்ன வார்த்தையை கேட்டு, அவன் உறைந்து போனான்.
“ பயப்படாத “ என்று அவனது வார்த்தைகள் கிசுகிசுப்பாக வெளிவர, மைரா கண்களில் கண்ணீருடன் அவனை நோக்கித் திரும்பினாள். கேஷவ் அவள் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கட்டை விரலால் துடைத்தான்.
“ நீ இழந்த சிரிப்ப உன்னோட முகத்துல திரும்பவும் கொண்டு வர எனக்கு 30 நாட்கள் அவகாசம் இருக்கு. இந்த முறை நான் உன்ன விடப்போறதில்ல அம்மு. நாம் ஒன்னா இருக்க பிறந்துருக்கோம். நம்ம சந்தோஷம் ஒருத்தரோட ஒருத்தர் பிணைக்கப்பட்டு இருக்கு. நாம ஒன்னா இருக்க நான் எதையும் செய்வேன் “ என்று மனதில் சபதம் எடுத்தான்.
தன் வாழ்வில் அவளை வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் காரை விட்டு இறங்கும் முன் அவள் தலையை மென்மையாகத் தட்டிக் கொடுத்தான்.
பிளாஷ்பேக் முடிகிறது
***************
முன்னோட்டம்:

1 comment
[…] 67. என் கையில வெச்சு பார்த்துக்குவேன் […]