Home Family84. நல்ல புருஷனா இருக்க வேண்டாமா?

84. நல்ல புருஷனா இருக்க வேண்டாமா?

by Siragugal Novels
11 views

கடந்த ஒரு மணி நேரமாக மருத்துவரின் அறையில் இருந்த க்ரிஷுக்காக நைனா ஆலோசனை அறைக்கு வெளியே அமர்ந்து காத்திருந்தாள். அவள் பதற்றத்துடன் விரல்களை கசக்கி கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். 10 நிமிடம் கழித்து கதவு திறந்து க்ரிஷ் புன்னகையுடன் வெளியே வந்தான். அவள் அவனை அணைத்துக் கொள்ள, அவளை அணைத்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான் க்ரிஷ்.

“ என் கூட வந்ததுக்கு ரொம்ப நன்றி “ என்று க்ரிஷ் சொல்ல, “ நாம இதுல ஒன்னா இருக்கோம், நான் உன் பக்கத்துல இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன். உனக்கு இப்போ எப்படி இருக்கு ? “ என்று நைனா அவனிடம் கேட்டாள்.

“ நான் முன்னாடி இருந்த மாதிரி இருக்கேன்னு சொல்ல மாட்டேன், அதே மாதிரி நான் சொல்றத கேட்க ஒருத்தர் இருக்காங்கனு வித்தியாசமா நல்லாவும் இருக்கு “ என்று க்ரிஷ் அதில் சொல்ல, “ நல்லது, நீ ரொம்ப சீக்கிரம் சரியாகிடுவ. முதல் அடி வெற்றிகரமா எடுத்து வெச்சுருக்க அதனால நான் லஞ்ச் ட்ரீட் தரேன் “ என்றாள் நைனா.

அவர்கள் கைகோர்த்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி ஒரு உணவகத்தை அடைந்து எதிரெதிரே அமர்ந்தனர்.

“ நீ எனக்கு நிறைய செய்ற, ஆனா நான் உனக்கு எதுவும் செய்யல நைனா. உனக்கு இருக்க ஆசைகள் கொஞ்சம் சொல்லு, அத நாம நிறைவேத்தலாம் ஆனா நான்… அதாவது நான் “ என்று க்ரிஷ் அதற்கு மேல் சொல்ல தயங்கினான்.

“ நீ நம்ம உறவுக்கு தயாராகுற வரை, என்னோட காதல் ஆசைகள நிறைவேத்த நீ தயாராகுற வரை, இல்லையா? “ என்று நைனா சொல்லி முடித்ததும், அவன் குடித்துக் கொண்டிருந்த தண்ணீரில் க்ரிஷ் மூச்சுத் திணற, நைனா அவனிடம் சாய்ந்து அவன் தலையைத் தட்டினாள்.

“ நான் சொல்றதெல்லாம் உனக்கு ஏன் ஷாக் ஆகுது? அத விடு, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சமைக்கலாமா? நாளைக்கு மறுநாள் உன்  அண்ணன் டெல்லி கிளம்பறாரு, அதனால நாம குடும்பத்துக்கு சமைக்கலாம “ என்று நைனா யோசனை சொன்னாள்.

அதை கேட்ட க்ரிஷ், “ நான் மோசமான சமையல் பண்ணுவேன் ஆனா நான் உனக்கு உதவி செய்றேன் “ என்றான் க்ரிஷ்.

“ அது போதும், இன்னைக்கு நைட்டு நாம ஸ்பெஷல் டின்னர் சமைக்கலாம். நான் அம்மாகிட்ட சொல்லிடுறேன் அப்போ தான் அவங்க முன்னாடியே எதுவும் பிளான் பண்ணாம இருப்பாங்க. நான் நாளைக்கு அகாடமிக்கு போறேன், மைரா அவ புருஷன் கூட ஒரு நாள் இருக்கட்டும். அவர் டெல்லி போன அப்புறம் அவர ரொம்ப மிஸ் பண்ணுவா “ என்று நைனா சொன்னாள்.

“ என்னால அவளுக்கு உதவ முடியாம போகலாம், ஆனா நீயும், நம்ம குடும்பமும் அவள கவனிச்சுக்கலாம் “ என்று க்ரிஷ் சொன்னான் ஆனால் நைனா தலையை மறுத்து ஆட்டினாள்.

“ இல்ல, நம்ம யாரும் அவளோட வாழ்க்கையில அவர் இடத்த நிரப்பவோ இல்ல ஈடு செய்யவோ முடியாது. அவ நல்லா இருக்குறத உறுதிப்படுத்த அவர் எல்லாத்தையும் செய்வாரு. அவர் அவளுக்காக எல்லாத்தையும் செய்றதையும், ஒரு கண்ணாடி பொம்மை மாதிரி அவளை கவனிச்சுக்குறதையும் நான் பார்த்துருக்கேன் “ என்று நைனா கூறினாள்.

அவள் வார்த்தையை கேட்டு புன்னகைத்த க்ரிஷ், “ அவர் எப்பவும்  நல்ல மகன், அண்ணனா இருப்பாரு அதனால சரியான, நல்ல புருஷனா இருக்குறதுல ஆச்சரியமில்ல. அவர் எனக்கு உயரமான அளவுகோல் எற்படுத்துறாரு “ என்று கூறினான். ஆனா நைனா உடனே அவனிடம், “ நான் உன்ன அவர் கூட ஒப்பிட மாட்டேன். நீ நீ நீயா இரு, எல்லாரோட மனசுலயும் உனக்கு ஒரு இடம் பிடி “ என்று சொன்னாள்.

உணவு கொடுவரப்பட்டதும் நைனா க்ரிஷின் தட்டில் உணவை பரிமாறினாள், க்ரிஷ் அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“ நீ ரொம்ப தைரியமான சண்டியர் பொண்ணு மாதிரி இருந்த அப்புறம் என்ன இப்போ ரொம்ப அன்பா, அக்கறையா நடந்துக்குற ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ ரொம்ப சந்தோஷப்படாத, நீ இப்போ தான் குணமாகுற அதனால நான் உன்ன கவனிச்சுக்குறேன் ஆனா நீ நம்ம கல்யாண உறவுக்கு சரியான முறையில தயாரானதும் நான் உன்ன எல்லா வேலையும் செய்ய சொல்லுவேன். நான் இப்போ செய்ற எல்லாத்துக்கும் சேர்த்து நீ இரட்டிப்பு வேலை செய்யனும் “ என்று நைனா தெளிவாக சொல்ல, “ கொடூரமான பொண்ணு நீ, என்கிட்ட ரொம்ப அன்பாக நடந்துக்குறனு நான் நெனச்சேன் “ என்று க்ரிஷ் அதிர்ச்சியோடு கூறினான்.

“ என்ன ? நல்ல புருஷனா இருக்க வேண்டாமா? “ என்று நைனா கேட்க, க்ரிஷ் வேகமாக தலையை ஆட்டினான், ஆனால் அவன் பயத்தில் விழுங்குவதைப் பார்த்து நைனா சத்தமாக சிரித்தாள்.

“ க்ரிஷ் நான் கிண்டல் பண்ணிட்டு இருந்தேன், ரிலாக்ஸ். நாம ஒருத்தர ஒருத்தர் சமமாக நடத்துவோம், நம்ம வேலைகள பகிர்ந்துக்குவோம் ஆனா இப்போ நான் உன்ன கவனிச்சுக்குறேன், நீ உன் ட்ரீட்மென்ட் பத்தி மட்டும் யோசி. என்ன அதிக நாள் வெயிட் பண்ண வைக்காத “ என்று நைனா மெல்ல சொன்னதும், க்ரிஷ்  புன்னகைத்தான்.

மருத்துவமனையில் ரோஷினி கிரில் கேட்டில் சாய்ந்து உட்கார்ந்து தன் அறைக்கு எதிரே நீண்ட வராந்தாவை ஒரு பெண் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வார்டன் தடியை கேட்டில் அடித்ததும் அவள் திடுக்கிட்டாள். உணவுத் தட்டை கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாகத் தள்ளினான்.

“ சீக்கிரம் சாப்பிடு, நர்ஸ் மாத்திரை எடுத்துட்டு வருவாங்க “ என்று வார்டன் சொல்ல, “ ரொம்ப நன்றி அஜய். என்ன உள்ள வெச்சு பூட்டி இருக்காங்க அதனால நான் உன்ன கடிக்கனும்னு நெனச்சா கூட கடிக்க முடியாது அதனால நீ கொஞ்சம் சிரிக்கலாம் “ என்று புன்னகையோடு சொன்னாள்.

அவள் வார்த்தையை கேட்ட வார்டன் அஜய், “ என்ன வார்டன் சொல்லி கூப்பிடு, இங்க இருக்க நோயாளிங்க பெயர் சொல்லி கூப்பிட அனுமதி இல்ல “ என்று சொன்னான்.

“ ஆனா நான் நோயாளி இல்ல. நீங்க யாரும் ஒத்துக்க மாட்டீங்க ஆனாலும் நான் சொல்றது தான் உண்ம. தயவு செஞ்சு என் உளறல்கள புறக்கணிச்சிடுங்க. நான் சாப்பிடுறேன் ஆனா நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியுமா? நான் என் குடும்பத்தோட சாப்பிட்டு பழக்கம். நான் ஒரே பொண்ணு, என் அப்பா, அம்மா என்ன ரொம்ப நேசிச்சு, என்ன ஒரு இளவரசி மாதிரி வளர்த்தாங்க “ என்று சொல்லி ரோஷினி கண்ணீர் சிந்தினாள்.

ரோஷினி கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட மெதுவாக தனது உணவை சாப்பிட்டாள், ஆனால் அஜய் அவளை புறக்கணித்து விலகிச் சென்றான். 30 நிமிடங்கள் கழித்து அவன் ஒரு நர்ஸுடன் திரும்பி வந்த போது, ரோஷினி துப்புரவுப் பணியாளருடன் பேசிக், புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“ மத்தவங்க கூட பேசுறதும், அவங்க கூட சிரிச்சு சந்தோஷமா இருக்குறதும் சீக்கிரம் உங்கள குணமாக்கும் ரோஷினி “ என்று நர்ஸ் சொன்னதை கேட்டதும், “ இந்த மாத்திரை எதுவும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாதுனு நீங்க உறுதியா நம்புறீங்களா, ஏன்னா நான் ஆரோக்கியமா, நல்லா எந்த பிரச்சனையும் இல்லாம  இருக்கும் போது நீங்க இத எனக்கு கொடுக்குறீங்க அதனால் கேட்டேன். தப்பான ஆள லவ் பண்ணதுக்கு நான் ஏன் இவ்ளோ கஷ்டப்படனும் ? “ என்று கேட்டு ரோஷினி விம்மி விம்மி அழுதாள்.

துப்புரவுப் பெண் அவள் தலைமுடியை கோதினாள். ரோஷினி தன் அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு அவளுக்கு கொடுத்த மாத்திரைகளை விழுங்கி விட்டு மெத்தைக்கு சென்று சுவரைப் பார்த்தபடி படுத்தாள்.

அஜய், நர்ஸ் மற்றும் துப்புரவுப் பெண் ஆகியோர் விலகிச் செல்ல, அஜய் நர்ஸைத் தடுத்தான்.

“ இங்க கூட்டிட்டு வந்த நாள்ல இருந்து இவ பார்க்க நல்லா தானே இருக்கா. அவளுக்கு என்ன பிரச்சன ? அவளுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் ? “ என்று அஜய் ஆர்வத்தோடு கேட்க, “ அவளுக்கு NPD, எல்லோருடைய கவனமும் அவ மேல இருக்கனும்னு அவ விரும்புவா, அவள விட அதிகமா ஏதாவது மத்தவங்களுக்கு கெடச்சா அவங்கள பார்த்து பொறாமைப்படுவா. எல்லாத்துக்கு தகுதியான ஒரே ஆள் அவ மட்டும் தான்னு நினைப்பா “ என்று நர்ஸ் பதில் சொன்னார்.

“ ஏன் அவளோட அப்பா, அம்மா அவள சந்திக்க அனுமதி கொடுக்கல ? “ என்று மீண்டும் அஜய் கேட்டதும், “ எனக்குத் தெரியாது. யாரோ ஒரு உயர் அதிகாரி இவள இங்க அனுப்பி இருக்காரு. அவ யாரையும் சந்திக்கக் கூடாது. உயர் அதிகாரிங்க விஷயத்துல தலையிடாம நம்ம வேலைய மட்டும் பார்க்கலாம் “ என்று நர்ஸ் பதில் கூறினார். அப்போது குறுக்கிட்ட துப்புரவாளர், “ ஆனா அவ ரொம்ப அமைதியானவ, நீங்க சொன்ன மாதிரி எதுவும் அவ இல்ல. அவ அப்பா, அம்மாவ பார்க்க முடியாம அழுறா “ என்று சொன்னார்.

“ அவளுக்கு என்ன நடந்துச்சுனு நமக்கு தெரியாது, அதனால அவளோட தோற்றம் அப்புறம் பேச்ச வெச்சு அவள மதிப்பிட வேணாம், அது தான் நல்லது “ என்று நர்ஸ் சொன்னதை கேட்டு அஜய்யும் துப்புரவாளரும் தலையை ஆட்டியபடி தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர்.

சென்னையில், கேஷவ் மைராவை அகாடமியில் இருந்து அழைத்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் கைகோர்த்து நடந்தார்கள், ஒற்றை மடிப்பில் பிங்க் நிற சாதாரண சேலை அணிந்து, திறந்த கூந்தலும் முந்தானையும் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த மைராவின் அழகை கேஷவால் தவிர்க்க முடியவில்லை.

“ நீ ஒரு தேவதை அம்மு, அவ்ளோ அழகா இருக்க. உன் அழக வெச்சு என்ன கொல்ல திட்டம் போடுறியா ? “ என்று கேஷவ் கேட்டதும் மைரா முகம் சிவந்தாள். இருவரும் கரையில் அமர்ந்தனர், மைரா கேஷவின் தோளில் சாய்ந்து, அவள் கையை அவன் கையுடன் இணைத்து, அலைகளைப் பார்த்துக் கொண்டும், விரல்களால் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.

“ நீங்க டெல்லி போக இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. நான் உங்கள மிஸ் பண்ணுவேன் கெட்சப் “ என்று மைரா மெல்லிய குரலில் சொல்ல, கேஷ்வ் அவள் தலைமுடியில் முத்தமிட்டு அவள் விரல்களை தன் கட்டை விரலால் வருடினான்.

“ அந்த நினைப்புல சிக்கி நமக்கு இருக்க மிச்ச நேரத்த வீணடிக்க வேண்டாம் அம்மு. நீ செய்ய விரும்புற எல்லாத்தையும் செஞ்சு நாம நினைவுகள உருவாக்குவோம் அதனால நீ என்ன செய்ய விரும்புறனு சொல்லு ?“ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.

“ நம்ம அப்பா, அம்மா எல்லாரும் உங்க கூட கொஞ்ச நேரம் இருக்கணும்னு விரும்புவாங்க அதனால வீட்டுக்கு போகலாம். நைட்டு அவங்க கூட சேர்ந்து டின்னர் சாப்பிடலாம். நைனாவும் க்ரிஷும் இன்னைக்கு உங்களுக்காக சமைக்க போறாங்க. நாளைக்கு நம்ம வீட்டுக்கு போவோம், உங்களுக்காக நான் சமைக்கிறேன், படம் பார்ப்போம், கட்டிப்பிடிப்போம். நாளைக்கு நாள் முழுக்க நீங்க என்கூட இருக்கனும்னு நான் விரும்புறேன் “ என்று மைரா சொன்னதும், “ என் அம்மு என்ன சொன்னாலும் அத செய்யலாம் “ என்றான் கேஷவ்.

“ என்னையும், நம்ம குடும்பத்தையும் நீங்க மிஸ் பண்ணுவீங்களா ?” என்று மைரா கேட்டதும், “ நான் நிச்சயமா நம்ம குடும்பத்த மிஸ் பண்ணுவேன் ஆனா உன்ன தான் அதிகமா மிஸ் பண்ணுவேன் அம்மு. தினமும் நைட்டு நாம் வீடியோ கால் பண்ணி பேசுவோம், நீ தூங்குற வரை நான் பேசிட்டே இருப்பேன் “ என்று கேஷவ் சொல்ல, “ நைட்டு நீங்க வேலை செய்ய வேண்டி இருந்தா என்ன செய்றது ? “ என்று மைரா கேட்டாள்.

“ நான் ஒரே நேரத்துல நிறைய வேலை செய்றதுல திறமையானவன், கெட்டிக்காரன், அதனால நான் உனக்கு போன் பண்றேன், நீ என்கூட பேசு, நான் உன் பேச்ச கேட்டுக்கிட்டே இருப்பேன். உன்னோட நாள் எப்படி இருந்துச்சுனு சொல்லு “ என்று கேஷவ் அன்பாக கூறினான்.

“ கெட்சப் நீங்க இல்லாம என்னால தூங்க முடியாது. என்ன விட்டுப் போறத தவிர்க்க ஏதாவது வழி இருக்கா ? தனியார் ஆபீஸ்ல வேலை செய்றவங்க நோட்டீஸ் பீரியட் கொடுக்காம அதுக்கு பதில் சம்பளம் கொடுக்குற மாதிரி எதுவும் செய்ய முடியாதா ? “ என்று மைரா கேட்டாள்.

“ துரதிர்ஷ்டவசமா அப்படி எதுவும் இல்ல அம்மு. நான் இந்த கேஸ் வேணாம்னு சொல்லி வேற ஏதாவது வேலை எடுத்து சென்னையில இருந்து வேலை பண்ணி இருப்பேன் ஆனா இந்த கேஸ் ஒரு சென்சிட்டிவான கேஸ் அதனால இதுல வேலை செய்றத என்னால மறுக்க முடியாது “ என்று பதில் சொன்ன கேஷவ், அவர்கள் தனிமையான இடத்தில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ இந்த கேஸ் அமைச்சரவையில இருக்க ஒரு அமைச்சர் மேல வந்துருக்கு. அந்த ஆளு பெண் குழந்தை கடத்தல் செய்ற முக்கிய குற்றவாளியா இருக்க வாய்ப்பு இருக்குனு நியூஸ் கெடச்சு இருக்கு.   கிட்டத்தட்ட 150 குழந்தைங்க காணாம போன கேஸ்ல அவன் சம்பந்தப்பட்டிருக்கனும்னு சந்தேகம் இருக்கு ஆனா எங்க கிட்ட ஆதாரங்கள் இல்லாம அவன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நாங்க அவனோட முழு நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கனும். ஒரு நாள் நம்ம லயாவை இந்த உலகதுக்கு கொண்டு வருவோம், பல பெண் குழந்தைகளை கடத்துற கிரிமினல் இருக்குறது தெரிஞ்சி என்னால நிம்மதியா இருக்க முடியாது. என் பார்வையில அந்த குழந்தைங்க எல்லாருமே அவங்க அப்பா, அம்மாவுக்கு லயா தான். அவங்கள காப்பாத்த நான் நான் என் வேலையை செய்யணும் “ என்று கேஷவ் அவளிடம் தன் ரகசிய வேலை பற்றி கூறினான்.

“ நீங்க சொல்றது சரி தான் கெட்சப். அவன் உயிரோட இருக்க தகுதி இல்லாதவன். ஆதாரம் கெடச்சதும் அந்த குழந்தைங்கள காப்பாத்த முடியும் தானே ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.

“ முடியும்னு நம்புறேன், இப்போ நான் இந்த தகவல சொன்னத மறந்துட்டு என்ன பத்தி யோசி. உன் வார்த்தையும், உன் நினைவுகளும் என்ன இதுல ஜெயிக்க தூண்டும் “ என்று கேஷவ் சொல்ல, “ என் புருஷன் ஒரு எக்ஸ்பெர்ட், இந்த வேலையில நீங்க ஜெயிக்குறத நான் சீக்கிரம் பார்க்க போறேன் “ என்று மைரா புன்னகையோடு சொன்னாள்.

“ இந்த வேலைக்கு “ஆபரேஷன் லயா”-னு பெயர் வெச்சுருக்கேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா சிரித்தபடி அவன் தலைமுடியைக் கோதிவிட்டாள்.

இருவரும் வீடு திரும்பிய போது பிரியாணியின் நறுமணம் அவர்களை வரவேற்றது. மைரா மூக்கை உறிஞ்சுவதைப் பார்த்து மதன் சிரிக்க, கேஷவ் அவள் மூக்கைக் கிள்ளினான். அவர்கள் புத்துணர்ச்சி பெற தங்கள் அறைக்குள் நுழைய, கேஷவ் அவளது இடுப்பை பிடித்து இழுத்தான்.

“ நான் உன்ன அகாடமியில பார்த்ததுல இருந்து இந்த நிமிஷதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். காலையில நீ ரெடியாகும் போது நான் வீட்ல இருந்திருக்கனும்னு விரும்புறேன், ஆனா இப்பவும் தாமதம் இல்ல. நீ என்ன எந்த அளவுக்கு பாதிக்குறனு தெரிஞ்சிக்க என் நெஞ்சுல கை வெச்சு பாரு “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் சொல்ல, “ நான் எப்படி இருக்கேன்? “ என்று மைரா கேட்டாள்.

“ எனக்கு ரொம்ப பிடிச்ச பஞ்சு மிட்டாய் “ என்று கேஷவ் பதில் சொன்னதும், மைரா அவன் மார்பில் முத்தமிட்டாள். இருவரும்  ஒரு முத்தத்தைப் பகிர்ந்து கொண்ட பின்னர் புத்துணர்ச்சி பெற்று எளிய இரவு ஆடைகளை மாற்றி ஹாலுக்கு சென்றனர்.

“ மைரா, நான் உனக்கு பிடிச்ச சாப்பாடு சமைச்சுருக்கேன் ஆனா அவர் என்கிட்ட பேசினா மட்டும் தான் உன்னையும் உன் ஹங்கையும் சாப்பிட அனுமதிப்பேன், இல்லனா நீங்க ரெண்டு பேரும் சாப்பாட தொட கூடாது “ என்று நைனா சொன்னதும், “ அவ சரியா சொன்னா கேஷவ், நைனா இப்போ நம்ம குடும்பம், இன்னும் எத்தன நாளைக்குத் தான் அவளை வெளியாள் மாதிரி நடத்துவ “ என்று அர்ச்சனாவும் கேட்டார்.

“ நான் அவள அப்படி நடத்தினதே இல்ல “ என்று கேஷவ் சொல்ல, “ அப்போ என்கிட்ட பேசுங்க மாமா. நீங்க என் மைராவோட புருஷன், என் புருஷனோட அண்ணன் அதனால உங்க கூட பேச எனக்கு உரிமை இருக்கு. நீங்க டெல்லி போனதும் உங்க பொண்டாட்டிய நான் தான் பார்த்துக்கணும் அது உங்களுக்கு ஞாபகம் இருக்கட்டும் “ என்று நைனா பதில் சொன்னாள்.

மைரா சத்தமாக சிரிக்க, கேஷவ் அவளை முறைத்தான்.

“ அவ சொல்றது சரி தான் கெட்சப். அவ என்கூட இவ்ளோ வருஷமா இருக்கா, இன்னும் நீங்க ஏன் அவ கூட பேச மாட்டேங்குறீங்க ? “ என்று மைரா கேட்க, “ நான் அவள ஒருநாளும் தவிர்க்கவே இல்ல, நான் அவளையும் தான்  கவனிச்சுக்குறேன்னு உனக்கும் தெரியும் “ என்றான் கேஷவ்.

“  அத நீங்க அவகிட்ட சொல்லுங்க, அவ சந்தோஷப்படுவா,   பாவம் நைனா “ என்று சொல்லி மைரா சிரிக்க, கேஷவ் நைனாவிடம் தன் கவனத்தை திருப்பினான். 

“ நைனா, நான் உன்கிட்ட பேசல, ஆனா எனக்கு க்ரிஷ் மேல இருக்க அதே அக்கறை உன்  மேலையும் இருக்கு. அவன பார்த்துக்குற மாதிரி உன்னையும் பார்த்துக்குறேன்னு உனக்கும் நல்லாவே தெரியும். இப்போ நீ சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா, என் பாப்பா பசியில இருக்கா. நாங்க வந்ததுல இருந்து வாசனைய முகர்ந்துட்டு இருக்கா “ என்று கேஷவ் கூறினான்.

“ ஒருவழியா நீங்க என்கிட்ட பேசிட்டீங்க. ரொம்ப நன்றி மாமா, இப்போ வாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம் “ என்று நைனா சொல்ல, “ நைனா, மைரா இருக்குறதால நம்ம வீடு கலகலப்பா இருக்கு “ என்றார் அர்ச்சனா.

“ அப்போ நானும் அண்ணனும் இத்தன வருஷமா போரடிச்சோம்னு சொல்றீங்களா? “ என்று க்ரிஷ் உடனே கேட்க, “ அதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா என்ன ? “ என்றார் மதன்.

“ எனக்கு எப்பவும் ஒரு பொண்ணு வேணும்னு ஆச ஆனா இப்போ எனக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க. கேஷவ் டெல்லிக்கு போன அப்புறம் நானங்க ரொம்ப சந்தோஷமா இருப்போம் “ என்று அர்ச்சனா சொன்னதும், “ ஆனா நான் சென்னையில தான் இருப்பேன் “ என்றான் க்ரிஷ்.

“ நாங்க ஒன்னா இருக்கும் போது நீ தொந்தரவு செய்யாம இருக்க மாதிரி நைனா உன்ன பார்த்துக்குவா “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டு, “ கண்டிப்பா மா, வசு அம்மாவையும் சேர்த்து அடுத்த மூணு மாசத்துக்கு ப்ளான் பண்ணலாம். ஸ்பா, ஷாப்பிங், தியேட்டர், மதிய லஞ்ச், பொழுதுபோக்கு பூங்கா, கோவில், நைட்டு டின்னர் அப்புறம் வீட்ல பேஷன் ஷோ. அப்பா, ராஜன் அப்பாவும் தான் நமக்கு ஜட்ஜ் “ என்றான் நைனா.

“ அப்போ நான் என்ன செய்வேன்? “ என்று க்ரிஷ் உடனே கேட்க, “ அன்னைக்கு உனக்கு வீட்டுக்கு வர அனுமதி இல்ல அதனால ஆபீஸ்ல தங்கி ஓவர் டைம் வேல பாரு “ என்று நைனா சொன்னதும் நைனாவின் மீது சாய்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்த மைராவைப் பார்த்தான் க்ரிஷ்.

மைரா சிரிப்பதை பார்த்த கேஷவ், “ நான் உன்கிட்ட திரும்பி வரவரைக்கும் இப்படியே சிரிச்சிட்டு இரு அம்மு “ என்று மனதில் நினைத்தான்.

“ அச்சு மா இன்னிக்கு எங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுங்க. நான் போய் சாப்பாடு இங்க கொண்டு வரேன் “ என்று சொல்லி அவள் சமையலறைக்கு விரைந்து சென்று எல்லா உணவையும் ஹாலுக்கு எடுத்து வந்தாள். நைனா ஒரு தட்டை நீட்ட, அர்ச்சனா கொஞ்சம் காளான் பிரியாணியை தட்டில் வைத்து ஒவ்வொருவருக்காக ஊட்ட ஆரம்பித்தார். அப்போது கண்ணீர் சிந்தும் விளிம்பில் இருந்த கேஷவைப் பார்த்தாள் மைரா. தன் அம்முவை தவிர வேறு யாரால் அவனைப் பற்றி நினைக்க முடியும்? என்று நினைத்தான்.

அர்ச்சனா கேஷவுக்கு உணவை நீட்ட, அவன் அவர் கையை உள்ளங்கையில் பிடித்து சாப்பிட்டான். கண்களை மூடிக்கொண்டு தாயின் அன்பு தன் வருடக்கணக்குப் பசியைத் தீர்த்துக் கொண்டான். அவன் தன் தாயின் உணவை அனுபவித்து மகிழ்வதைக் கண்டு மைரா மகிழ்ந்தாள்.

மைரா, நைனா, க்ரிஷ் மற்றும் கேஷவ் ஆகியோர் அர்ச்சனாவுக்கு உணவளித்தனர், அவர் உணவளிக்க அவர்கள் காத்திருந்தபோது, அர்ச்சனா அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“ என்ன ஆச்சு மா, எங்களுக்கு ஊட்டி விடுங்க, நாங்க வெயிட் பண்றோம் “ என்று மைரா சொல்ல, அர்ச்சனா காலி பாத்திரத்தை காட்டினார், அவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டதைக் கண்டு அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

“ இன்னிக்கு இவ்ளோ சாப்பிட்டோமா ? ஆனா எனக்கு இன்னும் பசிக்குது, கெட்சப் உங்களுக்கு பசிக்குதா ? “ என்று மைரா கேட்டதும், “ ஆமா எனக்கும் பசிக்குது. “ என்றான் கேஷவ்.

“ உங்க எல்லாருக்கும் சீக்கிரம் ஏதாவது சமைச்சுத் தர்றேன் “ என்று அர்ச்சனா சொன்ன போது, “ கெட்சப் நான் களைப்பா இருக்கேன் அதனால அம்மாவுக்கு போய் உதவி செய்யுங்க. நைனாவும் ஏற்கனவே டின்னர் சமைச்சு களைப்பா இருக்கா “ என்று சொல்லி மைரா அவனை போக சொன்னாள்.

கேஷவ் அவளது நோக்கங்களை அறிந்து, தனது தாயைப் பின்தொடர்ந்தான். அவன் வெங்காயம் நறுக்க ஆரம்பித்ததும், அர்ச்சனா கிச்சடி சமைக்க காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தார்.

“ மைராவும் நைனாவும் நம்ம வீட்டுக்கு கிடைச்ச பெரிய ஆசீர்வாதம். அவங்க க்ரிஷையும், உன் வாழ்க்கையையும் தலைகீழாக மாத்திட்டாங்க. நீ சிரிச்சு எங்க கூட பேசுறத பார்க்க எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. என்ன மன்னிச்சிடு கேஷவ், உன் வலிய நான் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் “ என்று அர்ச்சனா அழுததும், “ அம்மா, நீங்க தான் என் பெஸ்ட் அம்மா. நீங்க எங்க ரெண்டு பேரையும் சமமா நேசிச்சு இருக்கீங்க. உங்களுக்கு எங்க மேல இருந்த பாசத்த ஒருநாளும் சந்தேகப்படாதீங்க.” என்று கேஷவ் அவரை சமாதானம் செய்தான்.

அர்ச்சனா கேஷவை அணைத்துக் கொள்ள, அவனும் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். வாசலில் நின்று கொண்டிருந்த மைரா அவர்களின் புகைப்படத்தை கிளிக் செய்துவிட்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினாள்.

இரவு உணவு மற்றும் படம் பார்த்துவிட்டு பின்னிரவில் மைரா முதலில் அறைக்குத் திரும்பினாள், கேஷவ் தனது தந்தையுடன் சிறிது நேரம் தங்கினான். அர்ச்சனாவும் மதனும் அவரவர் அறைக்குச் சென்றதும் கேஷவ் அவன் அறைக்குள் நுழைந்து அவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சியில் நின்றான்.

*****************

முன்னோட்டம்:

“ பைத்தியமா மைரா உனக்கு, நீ அழுதா அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காதுனு உனக்கு தெரியாதா? நாளைக்கு அவர் கிளம்பும் போது நீ அவர கஷ்டப்படுத்த கூடாது. சிரிச்சு சந்தோஷமா அவர வழி அனுப்பு “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!