கேஷவ் டெல்லியில் இருந்து வேலை செய்ய தொடங்கி ஒன்பது வாரங்கள் ஆகிவிட்டன, வார இறுதி நாட்களில் அனைத்து சந்திப்புகளிலும், பின்னிரவு அழைப்புகளிலும் கேஷவும், மைராவும் எப்படியோ உணர்ச்சிகளின் சூறாவளியில் ஒவ்வொரு வாரத்தையும் கடந்தனர்.
வழக்கம் போல கேஷவ் டெல்லிக்கு கிளம்பி சென்ற பிறகு மைரா மிகவும் மன அழுத்தத்தில் இருந்தாள். கேஷவ் இல்லாமல் சோகமாக உணர்ந்தாள். அவள் நைனாவை தன்னுடன் வருமாறு அழைத்து, அவர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட கேஷவ் மற்றும் மைராவின் வீட்டிற்கு சென்றனர்.
அவர்கள் ஷார்ட்ஸ் மற்றும் கமிசோல் அணிந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க நீச்சல் குளத்திற்கு சென்றனர். கேஷவ் மதியம் வரை பிஸியாக இருப்பான் என்று மைராவுக்குத் தெரியும், எனவே அவள் தனது திட்டங்களை அவனுக்கு செய்தி அனுப்பினாள்.
குளத்தின் விளிம்பில் தண்ணீரில் கால் நனைத்தபடி அமர்ந்திருந்த மைராவை நோக்கி நைனா நீந்தினாள்.
“ பொதுமக்களுக்கு நான் ஒரு செய்தி சொல்ல நினைக்குறேன் “ என்று நைனா சொல்ல, “ என்னது செய்தி ? “ என்று மைரா கேட்டாள்.
“ லவ் பண்றவங்க, லவர் கூட இல்லாம தனிமையில ஏங்குற நண்பர்களுக்கு மட்டும் நாம துணையா இருக்க கூடாது. கடவுளே! மைரா, நீ இப்படி சிடுசிடுனு இருக்குறத பார்க்க தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தியா ? “ என்று நைனா கேட்டதும், “ இல்ல நைனா, சரி மன்னிச்சிடு வா விளையாடலாம்” என்று சொல்லி மைரா குளத்தில் குதித்தாள்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து விளையாடத் தொடங்கினர். இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் புத்துணர்ச்சி பெற்று மல்டிமீடியா அறையில் அமர்ந்து படம் பார்த்தனர்.
“ இப்போ சொல்லு உன் வாழ்க்க இப்போ எப்படி போகுது ? “ என்று மைரா கேட்டதும், “ கவுன்சலிங் போக ஆரம்பிச்சு அவன் கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு ஆனா அவன் இப்போ ஒரு கட்டத்துல சிக்கி இருக்கான். நான் டாக்டர் கிட்ட பேசினேன், அவன அதுல இருந்து வெளியே கொண்டு வர முயற்சி பண்றோம் “ என்றாள் நைனா.
நைனாவின் முகத்தில் இருந்த கவலையை பார்த்த மைரா, “ என்ன ஆச்சு ? “ என்று கேட்டாள்.
“ நீ தான் அவன சரி செய்ய முடியும், ஆனா நான் உன்ன எதையும் செய்ய கட்டாயப்படுத்த மாட்டேன், அதனால நான் அத பத்தி டாக்டர் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் ஆனா நான் அவன முழுசா சரி செய்வேன் “ என்று நைனா தன்னம்பிக்கையோடு சொன்னாள்.
“ அவன் கவுன்சலிங் போறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.
“ அவன் உன்ன ரொம்ப மிஸ் பண்றான் மைரா, நீங்க ரெண்டு பேரும் பிரிய காரணமா அவன் பண்ண எல்லாத்துக்கும் வருத்தப்படுறான். நீ என்ன நம்ப மாட்ட, ஆனா உண்மையிலேயே அவனுக்கு உன்ன விட்டா friends யாரும் இல்ல. இது ஒருமுறை கவுன்சலிங் நேரம் டாக்டர் கிட்ட அவன் சொல்லும் போது நான் கேட்டேன். அவன் உனக்கு பண்ண சத்தியத்த இப்போ வர காப்பாத்தி இருக்கான், உன்ன தவிர யார் கூடவும் அவன் நட்பு வெச்சுக்கல. அவன் பண்ண ஒரே தப்பு உங்க நட்புல எல்லை நிர்ணயம் பண்ணாம இருந்தது தான். மத்தபடி அவன் உன்ன அவனோட உண்மையான ப்ரெண்டா நடத்தி இருக்கான். உன் மேல அக்கறை காட்டி இருக்கான். ரோஷினி அவன பிளாக்மெயில் பண்ண அப்போ கூட அவன் தனிமையா உணர்ந்து, குற்ற உணர்வு காரணமா யார் கூடவும் அந்த பிரச்சனையும் சொல்ல முடியாம இருந்துருக்கான். இப்போ அவன் முயற்சி செய்றான் ஆனா உன்ன காயப்படுத்தின குற்ற உணர்வு அவன இதுல இருந்து மீள விட மாட்டேங்குது “ என்று நைனா விளக்கமாக மனம் விட்டு கூறினாள்.
“ டாக்டர் என்ன சொன்னாரு ?” என்று மைரா மெல்ல கேட்டாள்.
“ உன்ன க்ரிஷ் கிட்ட பேசி அவன மன்னிக்க சொல்ல என்ன உன்கிட்ட பேச சொன்னாரு ஆனா என்னால உன்ன விட்டுக்கொடுக்க முடியாது அதனால நான் மறுத்துட்டேன். ஒரு நாள் அவன மன்னிக்கனும்னு உனக்கே தோணும் அப்போ அத செய் “ என்று நைனா கூறினாள்.
“ அவனுக்கும், உனக்கும் உறவு எப்படி இருக்கு ? “ என்று மைரா மீண்டும் கேட்டாள்.
“ நாங்க நல்லா இருக்கோம், கணவன், மனைவி இல்ல, நண்பர்களும் இல்ல. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கோம், நலம் விரும்பி மாதிரி. அவன் என்ன பார்த்துக்குறான் அத தவிர அவன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியல. ரெண்டு பேரும் அக்கறையா இருக்கோம், மத்தபடி விதியோட விளையாட்டு படி நடக்கட்டும் “ என்று நைனா சொல்ல, மைரா மெல்ல தலையை ஆட்டினாள்.
இருவரும் ஒரு படம் பார்க்க ஆரம்பித்தனர் ஆனால் மைராவின் எண்ணங்கள் நைனாவின் வார்த்தைகளைச் சுற்றி வந்தன.
மருத்துவமனையில், ரோஷினி படுக்கையில் அமர்ந்திருப்பதை அஜய் பார்த்தான். மற்ற நேரங்களைப் போலல்லாமல் அவள் அவனை அணுகவோ அல்லது அவனுடன் ஒரு வார்த்தை பேசவோ இல்லை, இது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
“ ரோஷினி, நல்லா இருக்கியா ? “ என்று அஜய் கேட்டதும், “ எனக்கு தெரியல அஜய். நான் ஒரு நாள் வெளி உலகத்த பார்ப்பேன்னு நம்பிக்கை இல்ல. எனக்கு எந்த நல்லதும் நடக்கும்னு எனக்கு தோணல. நீ உன்ன பார்த்துக்க அஜய். நீ ரொம்ப நல்ல மனுஷன், ஒரு நாள் நீ விரும்புற மாதிரி உன்ன லவ் பண்ற பொண்ணு உனக்கு கிடைப்பா “ என்று ரோஷினி கண்ணீருடன் கூறினாள்.
“ நம்பிக்கைய இழக்காத ரோஷினி “ என்று அஜய் சொல்ல, “ உன் விருப்பப்படி செய்றேன் அஜய். உனக்காகவாவது ஏதாவது நல்லது நடக்கனும்னு ஆசைப்படுறேன். என் அப்பா, அம்மாவுக்கு அப்புறம் நான் சந்தோஷமா இருக்கணும்னு விரும்புற ஒரே ஆள் நீ தான் “ என்று ரோஷினி சொன்னதும், “ நான் மதியம் சாப்பாடு கொண்டு வரேன் அதுவர ரெஸ்ட் எடு “ என்று சொல்லிவிட்டு அஜய் அங்கிருந்து கிளம்ப, ரோஷினி கண்களை மூடியபடி கட்டிலில் படுத்தாள். இரண்டு மணி நேரம் கழித்து அஜய் ரோஷினிக்கு உணவு மற்றும் மருந்துகளுடன் திரும்பி வந்தான். அவன் அவளை அழைத்தான் ஆனால் எந்த பதிலும் வராததால் அவன் கேட்டைத் திறந்து அவளை எழுப்ப செல்லுக்குள் நுழைந்தான் ஆனால் அவளது மணிக்கட்டில் இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தான்.
அவன் அவசர பட்டனை அழுத்தியதும் ஒரு செவிலியர் உடனடியாக செல்லுக்குள் நுழைந்தார். அஜய் ரோஷினியை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று மருத்துவர் அவளுக்கு சிகிச்சையளிக்கும் வரை வெளியே காத்திருந்தான்.
ரோஷினி மருத்துவரின் தனி கண்காணிப்பில் வைக்கப்பட்டாள், எனவே செவிலியர் அஜய்யை அவனது வேலையை கவனிக்க திருப்பி அனுப்பினார். ஒரு மணி நேரம் கழித்து அஜய் திரும்பி சென்று ரோஷினியை பார்த்த போது அவள் மணிக்கட்டில் கட்டு போட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். ஐ.வி.யை மாற்றிக் கொண்டிருந்த நர்ஸ் அஜயைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ இப்போ எப்படி இருக்கா? “ என்று அஜய் கேட்க, “ ஒன்னும் பிரச்சன இல்ல அஜய், வெட்டு ஆழமா இல்ல அதனால கவலைப்பட ஒண்ணுமில்ல. மருந்து கொடுத்துருக்கு அதனால தூங்குறா. இவ எழுந்த அப்புறம் செல்லுக்கு மாத்தலாம் “ என்றார் நர்ஸ்.
“ அவ அப்பா அம்மாகிட்ட சொன்னீங்களா? “ என்று அஜய் கேட்டதும், “ இல்ல, இவள வேற யாரோ இங்க அனுப்பி இருக்காங்க, டாக்டர் அவருக்கும் மட்டும் தான் இவள பத்தி சொல்லுவாரு. ஆனா இன்னைக்கு நடந்தத பத்தி டாக்டர் யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு முடிவு பண்ணி இருக்காரு. வெட்டு காயம் ஆழமா இல்ல அதுவும் இல்லாம நமக்கு பிரச்சன வரும்னு மறைச்சிட்டாரு “ என்று நர்ஸ் அஜையிடம் கூறினார்.
ரோஷினி கண் விழிக்க, நர்ஸ் டாக்டரை அழைத்து ரோஷினியை பரிசோதிக்க சொன்னாள். டாக்டர் அஜயை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு ரோஷினியிடம் பேசினார்.
“ இப்போ எப்படி இருக்கீங்க ரோஷினி? “ என்று டாக்டர் கேட்டதும்,
“ என்ன ஏன் காப்பாத்துனீங்க டாக்டர்? நான் இனி வாழ விரும்பல “ என்றாள் ரோஷினி.
“ ரோஷினி, நீ தற்கொலைக்கு முயற்சி பண்ண விஷயம் கேஷவ் சாருக்குத் தெரிஞ்சா அவர் உன்ன வேற ஹாஸ்பிடல் அனுப்பிடுவாரு. உன்ன நாங்க இங்க நடத்துற மாதிரி அங்க நடத்துவாங்கனு என்னால உத்தரவாதம் தர முடியாது. நீங்க நல்லா முன்னேறிட்டு இருந்தீங்க, திடீர்னு ஏன் இந்த முட்டாள்தனம்? “என்று டாக்டர் அவளிடம் கேட்டார்.
“ நான் நல்லா இருக்கேன் டாக்டர், நான் ஏதோ கோளாறால பாதிக்கப்பட்டு இருக்கேன்னு நீங்க சொல்றதால நான் உண்மையிலேயே ஒரு நோயாளினு அர்த்தம் இல்ல. நான் நல்லா இருக்கேன் “ என்று ரோஷினி சொன்னதும், “ சரி, நீங்க நல்லா இருக்கீங்கன்னு ஒத்துக்கறேன், ஆனா இன்னைக்கு நீங்க முயற்சி செஞ்சத மறுபடியும் பண்ணாதீங்க. நான் உங்களுக்கு மருந்துகளை மாத்துறேன், உங்கள மறுபடியும் செல்லுக்கு கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி உங்க செல் சரிபார்க்கப்பட்டு சுத்தம் செய்வாங்க. நல்லா ஞாபகம் இருக்கட்டும், அடுத்த முறை நீங்க ஏதாவது பண்ணா, நான் கேஷவ் சார் கிட்ட சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருப்பேன் இல்ல இந்த ஹாஸ்பிடல்ல இருக்க ரொம்ப மோசமான ரூமுக்கு உங்கள மாத்துவேன் “ என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றதும், ரோஷின் அவளது அறைக்கு மாற்றப்பட்டாள்.
அஜய் ரவுண்ட்ஸ் முடித்து விட்டு ரோஷினியின் செல்லின் தாழ்வாரத்திற்கு வந்தபோது பின்னிரவு ஆகிவிட்டது. ரோஷினி விழித்திருப்பதைப் பார்த்தவன், அவளது கவனத்தை ஈர்க்க அவளை அழைத்தான்.
“ ஏன் இப்படி பண்ண ரோஷினி? உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருந்தா என்கிட்ட பேசியிருக்க வேண்டியது தானே “ என்று அஜய் சொல்ல, “ ஸாரி, நான் என் அப்பா, அம்மாவ ரொம்ப மிஸ் பண்றேன் அஜய். ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு, என் குடும்பத்துல இருந்து யாரையும் நான் சந்திக்கல. என் வீட்ல என்ன நடக்குதுனு தெரியல. இப்போ என் வாழ்க்கையில ஒரு முறையாவது அவங்கள பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா தெரியல “ என்று சொல்லி ரோஷினி அழுதாள்.
“ நீ நல்லா இருந்த, இந்த ரெண்டு மாசத்துல உனக்கு கிடைச்ச வாய்ப்பு எல்லாத்தையும் இந்த மாதிரி பண்ணி கெடுத்துட்ட. டாக்டர் உன்ன வேற ஒரு செல்லுக்கு அனுப்பினா இல்ல உன்ன இங்க அனுப்புனவனுக்கு தகவல் கொடுத்தா என்ன செய்றது ? “ என்று அஜய் கேட்டான்.
“ அவன் இனி என்ன பண்ணாலும் எனக்குக் கவலையில்ல “ என்று ரோஷினி சொல்ல, “ தயவு செஞ்சு முட்டாள்தனமா எதுவும் செய்யாத ரோஷினி. நல்லா ரெஸ்ட் எடு, நாளைக்கு வந்து உன்ன பார்க்குறேன் “ என்று அஜய் சொன்னதும், ரோஷினி தலையை ஆட்டினாள். அஜய் சென்றதும் அவள் புன்னகையுடன் தன் மணிக்கட்டைப் பார்த்து, “ என்னோட இலக்கை அடைய நான் பக்கத்துல வந்துட்டேன் “ என்று மனதில் நினைத்தாள்.
சென்னையில் அடுத்த நாள் நைனாவும் மைராவும் அகாடமிக்குச் சென்றனர். பிற்பகலில் நைனாவுக்கு க்ரிஷிடம் இருந்து அழைப்பு வந்தது. அன்று மாலை படம் பார்க்க செல்ல அவன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாக கூறினான்.
நைனா வெட்கப்படுவதைக் கண்ட மைரா அவள் கையைக் கிள்ளினாள்.
“ ஏன் இப்படி வெட்கப்படுற ? “ என்று மைரா கேட்க, “ க்ரிஷ் படம் பார்க்க டிக்கெட் புக் பண்ணி இருக்கான். நான் ரெடியாகனும் அதனால சீக்கிரம் கிளம்புறேன் “ என்றான் நைனா.
மைரா அவளை கிண்டல் செய்ய, அவள் கிண்டலை நிறுத்த நைனா தனது உள்ளங்கையால் மைராவின் வாயை மூடினாள், ஆனால் மைராவின் மொபைலில் கேஷவின் பெயரைப் பார்த்ததும் சிரித்தாள்.
மைரா நைனாவின் கையைப் பிடித்துக் கொண்டு மொபைலை எடுக்க வெளியே ஓடினாள். அவள் கான்கிரீட் பெஞ்சில் அமர்ந்து கேஷவின் அழைப்புக்கு பதிலளித்தாள்.
“ ஹலோ மிஸ்டர் ஹஸ்பண்ட், என்ன மிஸ் பண்றீங்களா ? “ என்று மைரா கேட்டதும், “ உடனே flight புடிச்சு சென்னைக்கு பறந்து வந்து உன்ன கட்டிப்பிடிக்க தோணுது, அந்த அளவுக்கு உன்ன மிஸ் செய்றேன். ரொம்ப டென்ஷனா இருக்கு, குறைஞ்சது உன்ன ஒரு முறை கிஸ் பண்ணா எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும். உன்ன கட்டிப்புடிச்சு கிஸ் பண்ண இன்னும் நாலு நாள் வெயிட் பண்ணனும் “ என்று சொல்லலி கேஷவ் எரிச்சலில் முனகினான்.
அவனது வார்த்தைகளைக் கேட்டு மைராவின் இதயம் இறுகுவதை உணர்ந்தாள். அவன் தனது மன அழுத்தத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டது இதுவே முதல் முறை என்பதால் அவன் தனது வேலையில் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதை அவள் உணர்ந்தாள்.
“ இன்னும் மூணு வாரம், அதுக்கு அப்புறம் நான் உங்கள தனியா விட மாட்டேன் கேஷவ், உங்களையும் என்ன விட்டு போக விட மாட்டேன் “ என்று மைரா மெல்ல கூறினாள்.
“ அப்படியே நான் விட்டு போக போற மாதிரி தான். சனிக்கிழமைக்கு தயாரா இரு, இந்த வாரம் நாம வீட்டுக்கு போகலாம். உன் கூட தனியா இருக்கணும்னு ஆசைப்படறேன். நான் முழு நேரமும் உன் கூட கட்டிப்பிடிச்சு இருக்கணும். நம்ம வீட்ல இருக்க ரூம் எல்லாத்துலையும் நாம ரொமான்ஸ் பண்ண விரும்புறேன் “ என்று கேஷவ் சொல்ல, “ ரூம் மட்டும் தானா ? அப்போ நீச்சல் குளம் ? “ என்று கேட்டாள் மைரா.
“ நம்ம வீட்ல எந்த இடத்தையும் நான் பாகுபாடு பார்க்க மாட்டேன். நல்லா சாப்பிடு, நல்லா தூங்கு, ஏன்னா இந்த வாரம் நான் திரும்பி வரும்போது உன்ன ஒரு கண் சிமிட்ட விட மாட்டேன் “ என்றான் கேஷவ்.
“ நான் வெயிட் பண்றேன் மிஸ்டர் ஆல்பா “ என்று மைரா சொன்னதும் கேஷவ் சிரித்தான் ஆனால் அவன் லேண்ட்லைன் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் முனகினான். மைரா புரிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்து தன் வேலைக்குத் திரும்பினாள்.
அவனுக்காக ஏதாவது விசேஷமாக செய்ய வேண்டும் என்று மைரா சிறிது நேரம் யோசித்தாள். திடீரென்று அவள் மனதில் ஒரு யோசனை தோன்றி அவள் தனது முஷ்டியை காற்றில் உயர்த்தி உற்சாகமடைந்தாள்.
வீடு திரும்பிய கேஷ்வ் மொபைலை காதில் வைத்துக் கொண்டு தன் அறைக் கதவைத் திறந்தான். ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி கேட்டு மைரா சிணுங்குவதை கேட்டு அவன் சிரித்தான்.
“ அம்மு நான் கடைசி தடவையா சொல்றேன், காலையில கண்டிப்பா சாப்பிடலாம் “ என்று கேஷவ் சொல்ல, “ இந்த சித்திரவதைக்காக நான் உங்கள பழிவாங்குவேன் கெட்சப். இந்த வாரம் நீங்க வீட்டுக்கு வந்த அப்புறம் நான் ஒரு முழு பாக்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் “ என்றாள் மைரா.
“ கண்டிப்பா நான் உனக்கு ஒரு பெரிய பாக்ஸ் வாங்கித் தர்றேன். எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கு மைரா, நீ அத என்கூட ஷேர் பண்ண மாட்டியா? “ என்று கேஷவ் கேட்க, “ இல்ல, ஐஸ்கிரீம் மைராவுக்கு மட்டும் தான். உங்களுக்கு கிடையாது. டின்னர் சாப்பிட்டு முடிச்சிட்டு எனக்கு போன் பண்ணுங்க, நான் வெயிட் பண்றேன் “ என்று அவள் சொன்னதும் கேஷவ் அழைப்பை துண்டித்து புத்துணர்ச்சி பெற்று விரைவாக இரவு உணவை முடித்தான். அவன் படுக்கையில் படுத்து மைராவை அழைக்க தனது மொபைலை எடுத்தான் ஆனால் மைராவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து அறிவிப்பைப் பார்த்ததும் இன்ஸ்டாகிராமைத் திறந்து பார்த்தான். மைரா ஒரு பாடலை வெளியிட்டு இருந்தாள்.
மைரா:
சோலையிலும் முட்கள் தோன்றும்…
நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும்…
நான் உன் மார்பில் தூங்கினால்…
ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…
கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…
காயங்களும் ஆறாதோ…
நீ எதிர் தோன்றினால்…
உடனே வந்தால் உயிர் வாழும்…
வருவேன் அந்நாள் வரக் கூடும்
என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…
கேஷவ் கட்டிலில் உட்கார்ந்து மீண்டும் மீண்டும் அவள் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தான், அவள் கண்கள் ஏக்கத்தில் பளபளத்தன. அவன் அவள் கண்களையும் உதடுகளையும் தொட்டு அவளது தேன் குரலில் தன்னை இழந்தான்.
அவன் மைராவை வீடியோ அழைப்பில் அழைத்ததும் அவள் உடனடியாக பதிலளித்தாள். அவன் கண்களைப் பார்த்ததும், “ ஐ லவ் யூ அம்மு, எனக்கு நீ என் பக்கத்துல வேணும் “ என்று அவன் சொன்னதை கேட்டதும் அவள் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.
அவன் மிகவும் ஏக்கத்தில் இருப்பதை பார்த்த மைரா விழுங்கினாள், மேலும் அவன் ஒன்பது வாரங்களில் முதல் முறையாக மிகவும் வெளிப்படையாக அவள் இல்லாமல் உணரும் தவிப்பை கூறி இருக்கிறான். அவன் இல்லாமல் அவள் எப்போதும் அழுவதும், அடம் பிடிப்பதும் அவள் மட்டுமே செய்தாள் ஆனால் அவள் இல்லாமல் அவன் படும் வேதனையை குறித்த உணர்ச்சிகளை அவள் முதல் முறையாக கண்டாள். அவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ ஐ லவ் யூ மைரா, எனக்கு டயர்டா இருக்கு, நான் தூங்கறதுக்காக பாட்டு பாடுறியா ? “ என்று கேஷவ் கேட்டதும் மைரா கட்டிலில் சாய்ந்து கொண்டு மொபைலில் அவன் முகத்தில் முத்தமிட்டாள். கேஷவ் கட்டிலில் படுத்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மைரா அவனுக்காகப் பாட ஆரம்பித்தாள். அவளது இனிமையான குரலைக் கேட்டு கேஷவின் இமைகள் தானாகவே மூடிக்கொண்டன. அவன் தூங்கும் வரை காத்திருந்த மைரா, அவன் குறட்டை விடுவதைக் கேட்டவுடன், அழைப்பைத் துண்டித்து கண்ணீரைத் துடைத்தாள்.
காலையில் 8 மணி ஆகிவிட்டதும் ஆனால் முந்தைய இரவு தாமதமாக தூங்கியதால் மைரா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு அவளது தூக்கம் கலைந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்து தலைமுடியை கொண்டையாகக் கட்டிக் கொண்டு கதவைத் திறந்தவள், நைனா கவலை தோய்ந்த நிலையில் நிற்பதைக் கண்டாள்.
*****************
முன்னோட்டம்:
உனக்கு ஏதாவது ஆகி இருந்தா நான் உயிரோட இருக்க எந்த காரணமும் இல்ல. நீ தான் எனக்கு வாழ நம்பிக்கைய கொடுத்த, என் வாழ்க்கைய சந்தோஷமா மாத்துன, நீ எனக்கு ரொம்ப முக்கியமானவ, நீ இல்லாமல நான் செத்துருப்பேன். முதல் முறையா ஒருத்தர் இல்லாம என்னால வாழ முடியாதுனு உணர்ந்தேன், அது நீ தான் நைனா
