Home Family3. கெட்சப் எனக்காக வாங்கிட்டு வந்துருக்காரு

3. கெட்சப் எனக்காக வாங்கிட்டு வந்துருக்காரு

by Siragugal Novels
3 views

12 வயதில் மைரா:

மைராவின் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. க்ரிஷ் தன் மாமாவின் மகள் ரோஷினியுடன் நட்பு கொண்ட பின், மைரா நைனாவுடன் நெருக்கமாகிவிட்டாள். க்ரிஷ் உட்பட அவளது வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் நைனாவுடன் பகிர்ந்து கொண்டாள்.

கேஷவ்  தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான். இந்த இடைப்பட்ட காலத்தில் மைராவும் கேஷவும் மிகக் குறைந்த அளவே தொடர்பு கொண்டிருந்தனர், அதே நேரத்தில் க்ரிஷும், மைராவும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர், அவர்கள் சென்ற இடமெல்லாம் ஒன்றாக திரிந்தனர்.

மைராவுக்கு அதிகாரப்பூர்வமற்ற பாடிகார்ட் போல க்ரிஷ் அவளுடன் இருந்தான். இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றனர். இவை அனைத்திலும் மைரா வெறுத்த ஒருவர் உண்டென்றால் அது ரோஷினி தான். விடுமுறைக்கு அர்ச்சனாவின் வீட்டுக்கு அவள் வரும் போது க்ரிஷின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தாள் என்பதால் மைரா அவளை வெறுத்தாள். க்ரிஷ்  மற்றும் ரோஷினியை ஒன்றாக பார்க்கும் போது மைரா எரிச்சல் அடைவாள். அவள் வெறுக்கும் மாதம் என்று ஒன்று இருந்தால் அது மே மாதம், ஏனென்றால் மைராவின் தூக்கத்தை பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ரோஷினி வருகை தரும் நேரம் அது.

மைரா தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் க்ரிஷிடமிருந்து கிடைக்கும் பரிசுக்காக காத்திருப்பாள். அவன் விளையாட வேண்டிய போட்டி மற்றும் முக்கிய பரீட்சைக்கு செல்லும் முன் ஒவ்வொரு முறையும் அவன் அவளை முத்தமிடுவது வழக்கம். அவளை அவன் தனது அதிர்ஷ்ட தேவதையாக பார்த்தான்.

மற்ற நாட்களைப் போலவே மைரா அர்ச்சனாவின் வீட்டிற்கு சென்றாள், அவள் யாரையும் அழைப்பதற்குள் டிவியில் கிட்டார் வாசிக்கும் ஒரு மனிதன் அவள் கவனத்தை ஈர்த்தான். இசை மற்றும் பாடல்கள் மேல் பைத்தியமாக இருந்த மைரா, தன்னை மறந்து சோபாவில் அமர்ந்து அவன் வாசிப்பைப் பார்த்தாள்.

அர்ச்சனா அவள் அருகில் அமர்ந்து மைராவின் கழுத்தை சுற்றி கையை போட்டதும், “ அத்த, அவர் எவ்ளோ நல்லா வாசிக்குறாரு  பாருங்க “ என்று சொன்னாள் மைரா, அதற்கு அர்ச்சனா அவளிடம், “ உனக்கு கிட்டார் வாசிக்குறது இவ்ளோ புடிக்கும்னா நீ ஏன் அத கத்துக்க கூடாது ? “ என்று கேட்டார்.

“ எனக்கு பாடவும், மியூசிக் கேட்கவும் புடிக்கும் ஆனா வாசிக்க மாட்டேன், அதுல விருப்பம் இல்ல. எல்லாரும், எல்லாத்தையும் செய்ய முடியாதுல. எனக்கு பாடுறதுல தான் சந்தோஷம் “ என்று மைரா சொல்ல, “ அப்போ இந்த வருஷமும் ஸ்கூல் ஆண்டு விழாவுல நீ பாட போறியா ? “ என்று கேட்டார் அர்ச்சனா.

“ இது என்ன கேள்வி ? நிச்சயமா நான் பாடுவேன். அது இருக்கட்டும், க்ரிஷ், கெட்சப் ரெண்டு பேரும் எங்க ? “ என்று கேட்ட மைராவிடம், “ கேஷவ் எப்ப வேணும்னாலும் வீட்டுக்கு வருவான், க்ரிஷ் பத்தி உனக்கு தெரியாதா? “ என்று சொன்னார் அர்ச்சனா. அவர் சொன்னதை கேட்ட மைரா, “ என்னது? “ என்று ஆவலுடன் கேட்டாள்.

“ சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி, நீ ஏன் கேஷவ அங்கிள் சொல்லி கிண்டல் செய்ற சொல்லு ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ அவர அப்படி கிண்டல் செய்றது வேடிக்கையா இருக்கும். அது சரி, கெட்சப் உங்க கிட்ட என்ன பத்தி புகார் பண்ணாரா ? அப்படியே பண்ணாலும், நான் அவர கிண்டல் செய்றத நிறுத்த மாட்டேன். இப்ப சொல்லுங்க க்ரிஷ் எங்கே ? “ என்று படப்படவென பேசினால் மைரா.

“ ரோஷினி வந்திருக்கா, அவன் அவள ஐஸ்கிரீம் வாங்க கூட்டிட்டு போய் இருக்கான் “ என்று அர்ச்சனா சொன்னதும் மைரா திடுக்கிட்டு ஓடினாள். ஆனால் எதிரே வந்த நபர் மீது மோதி நெற்றியைத் தேய்த்துக் கொண்டே அவளுக்கு முன்னால் இருந்த கேஷவ் தன் கைகளை சட்டத்தில் ஊன்றி அவளை வழிமறித்து நிற்பதைக் கண்டாள்.

“ ஏய் அம்மு, இனி நீ என்ன அங்கிள் சொல்லி கூப்பிட்டு கிண்டல் செய்ய மாட்டணு சொல்லு உன்ன போக விடுறேன் “ என்று கேஷவ் வம்பிழுக்க, “ அங்கிள்ள்ள்ள்ள் “ என்று அவள் அலறியபடி அவன் கைக்கு கீழே பதுங்கிக் கொண்டு வெளியே ஓடினாள்.

கேஷவ்  சிரித்துக்கொண்டே தலையை ஆட்டியபடி அம்மாவிடம் சென்று அவர் அருகில் அமர்ந்தான்.

“ அம்மா, க்ரிஷ்  எங்க, இவ ஏன் வாலுல தீப் புடிச்ச மாதிரி ஓடுறா? “ என்று கேஷவ் கேட்டதும், “ அவ க்ரிஷ் கிட்ட போறா. ரோஷினி வந்துருக்கானு நான் அவ கிட்ட சொன்னேன் அதனால தான் இப்படி அலறி அடிச்சு ஓடுறா “ என்று சொல்லி அர்ச்சனா புன்னகைத்தார்.

கேஷவ் சரி என்று முணுமுணுத்தபடி தன் அறைக்கு நடந்தான். மைரா ஐஸ் கிரீம் பார்லரை அடைந்து க்ரிஷ்  ஐஸ்கிரீம் வாங்குவதைப் பார்த்தாள். அவள் அவனை நெருங்கி அவன் கையைப் பிடித்ததும், க்ரிஷ் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

“ ஏய் என்ன இப்படி கிஸ் பண்றத நிறுத்து க்ரிஷ். பரீட்சைக்கு போகும் போது மட்டும் தானே கிஸ் பண்ணுவனு சொன்ன அப்புறம் என்ன ? அது சரி, என்ன ஏன் விட்டுட்டு வந்த ? “ என்று மைரா அவனிடம் கேட்டதும், “ அவன் என் கூட வந்தான் மைரா “ என்று ரோஷினி பதில் சொன்னாள்.

“ஓ, ஹாய் ரோஷினி “ என்று மைரா அவள் இருப்பதை அறியாதவள் போல ஆச்சரியமாக புன்னகைத்தாள்.

“ வா மைரா உனக்குப் புடிச்ச ஐஸ் கிரீம் வாங்கிட்டேன் “ என்று க்ரிஷ் சொன்னதும் அவர்கள் ஒரு மேஜையில் அமர்ந்தனர், க்ரிஷ்  ரோஷினியுடன் பேசிக்கொண்டே மைராவுக்கு ஐஸ்கிரீமை ஊட்டினான். ரோஷினி க்ரிஷைப் பார்த்து புன்னகைத்த விதம் மைராவுக்கு வெறுப்பாக இருந்ததால், “ க்ரிஷ்  நான் நைனா வீட்டுக்குப் போறேன். அப்புறம் பார்க்குறேன் “ என்று சொல்லி உடனே எழுந்து அங்கிருந்து கிளம்பினாள். அவள் நைனாவின் வீட்டை அடைந்தபோது, நைனா நடனமாடிக் கொண்டிருந்தாள், மைராவும் அவளுடன் சேர்ந்துகொண்டாள்.

“ ஏன் வருத்தமா இருக்க ? “ என்று நைனா கேட்டதும், “ ரோஷினி வந்துருக்கா. ஏன் தெரியல, எனக்கு அவ க்ரிஷ் கூட இருக்குறது புடிக்கவே இல்ல. நானும், க்ரிஷும் தான் பெஸ்ட் friends ஆனா அவ அவன என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறா “ என்று பதில் சொன்னாள் மைரா.

“ க்ரிஷ் உன்னோட friend, அவன் உனக்கு தானே கிரீட்டிங் கார்டு, சாக்லேட் எல்லாம் வாங்கி தரான். உன்ன ஸ்கூல் கூட்டிட்டு போறான், உன்ன பாதுக்காப்பா பார்த்துக்குறான் அதனால ரோஷினி நெனச்சு நீ ஏன் கவலைப்படனும் ? “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ எனக்கு தெரியல நைனா, அவன் ரோஷினி கூட பேசுறது எனக்கு புடிக்கல “ என்று கவலை கொண்டாள் மைரா.

“ வா நாம டிவியில பாட்டு பார்க்கலாம், அப்போ உனக்கு கொஞ்சம் மனசு மாறும் “ என்று நைனா சொல்ல, இருவரும் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து க்ரிஷ்  மைராவை அழைத்தபடி உள்ளே நுழைந்து, “ ஏன் இவ்ளோ நேரம் இங்க இருக்க மைரா? உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கடைசியில உன்னைத் தேடி வந்தேன். வா போகலாம் “ என்று சொல்லி அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்தான். க்ரிஷ்  அவளைத் தேடி வந்ததை பார்த்து மைராவின் உதடுகளில் ஒரு புன்னகை ஒளிர்ந்தது. அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் க்ரிஷ் அவளுடன் இருக்கும் நேரத்தை  அவளது சிறிய இதயம் நேசித்தது. அவளது கள்ளங்கபடமற்ற மனம் க்ரிஷின் ஒவ்வொரு கவனிப்பிலும் மகிழ்ச்சி அடைந்தது.

அவர்கள் வீட்டை அடைந்த போது, கேஷவ் தனது பைக்கில் ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டனர்.

“ ஏய் க்ரிஷ் , யார் அந்தப் பொண்ணு? கெட்சப்க்கு கல்யாணமா ? “ என்று மைரா ஆச்சரியத்துடன் கேட்க, “ அவரோட கேர்ள் ஃப்ரெண்டா இருக்கலாம் ஆனா பாவம் அந்த பொண்ணு, அவளுக்காக நான் பரிதாபப்படுறேன் “ என்று க்ரிஷ் பதில் சொன்னதை கேட்டு, “ ஏன்? இப்படி சொல்ற ? “ என்று கேட்டாள் மைரா. அதற்கு க்ரிஷ் அவளிடம், “ உனக்குத் தெரியாதா? அச்சோ! நான் தான் உன்கிட்ட சொல்லல. என் அண்ணா யார் கிட்டையும் பேசுறதே இல்ல, யாராச்சும் கேள்வி கேட்டா மட்டும் தான் பதில் சொல்லுவாரு. அது மட்டும் இல்ல அவர் அசைவம் மட்டும் தான் சாப்பிடுவாரு “ என்று கூறினான்.

“ தயிர் சாதம் தான் நல்லா இருக்கும் “ என்று மைரா அதற்கு முகல் சுளித்தாள்.

“ ஆமா, ஆனா அவரு தினமும் அசைவம் தான் சாப்பிட கேட்பாரு அது மட்டும் இல்ல, எனக்கு ஏன் தனி ரூம் கொடுத்தாங்க தெரியுமா ? “ என்று ரகசியம் சொல்ல வருவது போல கிசுகிசுத்தான். மைராவும் தோள்களைக் குலுக்கிக்கொண்டு காரணத்தை அறிய முழு கவனத்துடன் அருகில் சென்றாள். அருகில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்த க்ரிஷும் அவள் காதில் சாய்ந்து, “ என் அண்ணன், பயங்கரமா குறட்ட விடுவாரு அதனால என்னால தூங்க முடியாம தனி ரூமுக்கு போயிட்டேன் “ என்று மெல்லிய குரலில் சொன்னான். அதை கேட்டு மைரா, “ நிஜமாவா ? கெட்சப் குறட்ட விடுவாரா ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

க்ரிஷ் ஆம் என்று தலையை ஆட்டினான், பின்னர் கேஷவும், அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் புன்னகைத்தபடி வெளியேறுவதைக் கண்டனர். மைராவும், க்ரிஷும்  வீடு திரும்பி ரோஷினி இரவு உணவிற்கு தயாராக இருப்பதைப் பார்த்தனர். அர்ச்சனா சிக்கன் சமைத்திருந்ததால் மைரா மறுத்துவிட்டு இரவு உணவை சாப்பிட வீட்டிற்கு சென்றாள். வசுந்தராவும் ராஜனும் அவள் மேல் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். அவள் கேட்ட எதையும் மறுக்கவில்லை.

மைராவுக்கே தெரியாத க்ரிஷ் மீது அவளுக்கு இருந்த ஈர்ப்பு இப்போது வசுந்தராவுக்கு புரிந்தது. அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்தையும் விவாதிப்பது போல அவர் தனது எண்ணங்களை அர்ச்சனாவுடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் தங்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்கள் உணர்வுகளை தீர்மானிக்கட்டும் என்று முடிகு செய்து நடப்பதை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க முடிவு செய்தனர். அவர்களின்  எண்ணங்களை தங்கள் குழந்தைகளின் மனதில் திணிக்க அவர்கள் விரும்பவில்லை.

விடுமுறை முடிந்து ரோஷினி தனது வீட்டிற்கு திரும்பினாள். மைரா தனது பள்ளியில் நடக்க போகும் கண்காட்சியில் பங்கேற்க மும்முரமாக இருந்தாள். அதன் ஒரு பகுதியாக அவளிடம் ஒரு கட்டிடம் செய்து வரும்படி கேட்கப்பட்டது, அவள் அதை க்ரிஷுடன் செய்ய முடிவு செய்தாள். மாலையில் பள்ளி முடிந்து திரும்பியதும் ப்ராஜெக்டுக்குத் தேவையான அனைத்தையும் சேகரித்து அவன் அறைக்கு சென்றாள். இருவரும் ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களில் ராஜன் மைராவை உணவகத்தில் சாப்பிட அழைத்தார்.

“ க்ரிஷ் நீயும் வா, நாம திரும்பி வந்து இத செய்யலாம் “ என்று மைரா சொன்னதும், “ நீ போய் ரெடியா இரு, நான் அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன் “ என்று க்ரிஷ் கூறியதும், மைரா தனது வீட்டிற்கு ஓடினாள், க்ரிஷ்  தனது அம்மாவிடம் மைரா மற்றும் குடும்பத்தினருடன் உணவகத்தில் இரவு உணவிற்கு செல்வதை  பற்றி தெரிவித்தான்.

வசுந்த்ரா மைராவை தனது ஸ்கூட்டியிலும், ராஜன் க்ரிஷை தனது பைக்கிலும் அழைத்து சென்றனர். அவர்கள் உணவகத்தை அடைந்து தங்களுக்கு பிடித்த அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் பூங்காவிற்கு அருகில் ஒரு சிறிய ரங்கராட்டினத்தைப் பார்த்த மைரா, ஸ்கூட்டியை நிறுத்துமாறு வசுந்த்ராவைத் தூண்டினாள். க்ருஷ் தன் அப்பாவுடன் காத்திருப்பதை அவள் பார்த்ததும், க்ரிஷ் அவளைப் பார்த்து சிரித்தான்.

“ நீ ஆன்ட்டி கிட்ட இங்க நிறுத்த சொல்லுவனு எனக்கு தெரியும் அதனால மாமா கிட்ட சொல்லி நானும் நிறுத்த சொன்னேன் “ என்று சொல்லி க்ரிஷ் சிரித்ததும், “ என்ன கிண்டல் செய்யாத, இல்லனா நான் உன்கூட அதுல வரமாட்டேன் “ என்று சொன்னாள் மைரா.

“ நீ என் கூட வருவ ஏன்னா உனக்கு தனியா போக பயம். இப்ப வா உனக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று க்ரிஷ் சொன்னதும் இருவரும் ராட்டினத்தின் ஒரு இருக்கையில் ஏறி அமர்ந்தனர், அவன் அவள் கையைப் பாதுகாப்பாகப் பிடித்து கொண்டு, பூட்டை இரண்டு முறை சரிபார்த்தான். ராட்டினம் சுற்ற ஆரம்பித்ததும் வசுந்த்ரா மற்றும் ராஜனுக்கு இருவும் கைகளை அசைத்தனர், ராஜன் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்தார்.

அவர்கள் கீழே இறங்கிய பின்னரும் மைரா இன்னும் க்ரிஷைப் பிடித்துக் கொண்டு தனது அனுபவத்தை பற்றி உற்சாகமாக உளறிக் கொண்டிருந்தாள். அவர்கள் வீடு திரும்பிய போது நேரமாகிவிட்டது.  அப்போது தான் மைராவுக்கு தனது ப்ராஜெக்ட் பற்றி நினைவுக்கு வந்தது.

“ அப்பா, நான் என் ப்ராஜெக்ட் முடிக்கல ? இப்போ நான் என்ன செய்வேன்? “ என்று மைரா கவலையுடன் கேட்க, “ கவலைப்படாத மைரா. அத நான் செய்றேன், இப்ப போய் தூங்கு. குட்நைட் “ என்று சொல்லி க்ரிஷ் சொன்னதும் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு மைரா தன் அறைக்கு விரைந்தாள். மைரா உடனே தூங்குவதைக் கண்ட வசுந்த்ரா, அவளை போர்வையால் போர்த்தினாள்.

மறுநாள் காலை மைரா எழுந்து ப்ராஜெக்ட் முடிந்ததா என்று பார்ப்பதற்காக இரவு உடையில் அர்ச்சனாவின் வீட்டிற்கு ஓடினாள். அவள் அவனது அறைக்குள் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருப்பதையும், ஒரு சிறிய அழகிய காட்டேஜ் தயாராக இருப்பதையும் பார்த்தாள்.

“ வாவ் “ என்று முணுமுணுத்தபடி மினி காட்டேஜை கையில் எடுத்து பெருமையுடன் மதனிடம் காட்டினாள்.

“ என் காட்டேஜ் தான் எல்லாரோட ப்ராஜெக்ட் விட சூப்பரா இருக்கும். Bye அங்கிள், ஸாரி க்ரிஷை எழுப்ப மறந்துட்டேன். நீங்களே அவன எழுப்புங்க. நாங்க சீக்கிரம் ஸ்கூல் போகணும் “ என்று சொல்லிவிட்டு வீட்டை அடைந்து பெற்றோரிடம் காட்டினாள். அவர்கள் ப்ராஜெக்டை கொண்டு செல்ல வேண்டி இருந்ததால்  ராஜன் மைராவுக்கு ஆட்டோ புக் செய்தார். அது ஒரு உண்மையான காட்டேஜ்ஜின் மினியேச்சர் போல் இருந்ததால் பள்ளியில் எல்லோரும் அவளைப் பாராட்டினர், அதோடு அவளது ப்ராஜெக்ட் முதல் பரிசை வென்றது, பள்ளி முடிந்ததும் வளாகத்தில் கிரிஷைத் தேடி அவனுக்கு பதக்கத்தை வழங்கினாள்.

“ ரொம்ப நன்றி க்ரிஷ். என் ப்ராஜெக்ட்டுக்கு முதல் பரிசு கெடச்சு இருக்கு. இதுக்கு நீ தான் காரணம் “ என்று சொல்லும் போதே க்ரிஷ் அவளது உளறலை நிறுத்திவிட்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றான். அவர்கள் வீட்டை அடைந்ததும், அவளால் எப்போதும் க்ரிஷைப் புகழ்வதை நிறுத்த முடியவில்லை, மேலும் தனது வெற்றியைக் கொண்டாட ஐஸ்கிரீம் வாங்க ராஜனை அழைத்தாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை மைரா சோபாவில் அமர்ந்து டிவியில்  டோரேமோன் பார்த்துக் கொண்டிருந்தாள், வசுந்தரா காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள், ராஜன் ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக மதனுடன் டென்னிஸ் விளையாடுவதில் மும்முரமாக இருந்தார். க்ரிஷ் உள்ளே நுழைந்து மைராவை தன்னுடன் இழுத்துக் சென்றான்.

“ நிறுத்து க்ரிஷ் , என்ன எங்க கூட்டிட்டு போற ? நான் டோரேமோன் புது எபிசோட் பார்க்கணும். என்ன விடுடா முட்டாள் “ என்று மைரா கத்தினாள் அதற்கு க்ரிஷ் அவளிடம், “ எங்க வீட்டுக்குப் பின்னாடி நான் ஒன்னு பார்த்தேன். என் கூட வா, அத பார்த்தா உனக்கு ரொம்ப புடிக்கும் “ என்று கூறினான்.

“ அது என்ன? “ என்று மைரா கேட்டதும், “ பேய் “ என்று க்ரிஷ் அவளை பயமுறுத்தினான். மைரா பயந்து, “ க்ரிஷ், நான் வரமாட்டேன். என்ன விடு. எனக்கு பயமா இருக்கு “ என்று சொல்லி வர மறுத்தாள் ஆனால் க்ரிஷ் சிரித்துக் கொண்டே, “ லூசு, நான் சும்மா சொன்னேன். நான் உன்ன பயமுறுத்துவேனா ? இப்போ அமைதியா என் கூட வா “ என்று அவளை அழைத்து சென்றான்.

அவனது வீட்டின் பின்புறத்தை அடைந்த இருவரும், தூரத்தில் இருந்து ஒரு நாய் 4 அழகான நாய்க்குட்டிளுடன் இருப்பதை பார்த்தனர்.

“ ஆஹா, அந்த நாய்க்குட்டியெல்லாம் ரொம்ப அழகா இருக்கு க்ரிஷ் . எப்போ குட்டி போட்டுச்சு ? “ என்று மைரா கேட்டதும், “ நேத்து ராத்திரி நினைக்குறேன். நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மொட்டை மாடியில பல் தேச்சுட்டு இருக்கும் போது பார்த்தேன் “ என்று பதில் சொன்னான்.

“ எல்லாமே ரொம்ப அழகா இருக்கு க்ரிஷ், நாம போய் தொட்டுப் பார்ப்போமா ? “ என்று மைரா கேட்க, உடனே க்ரிஷ் அவளிடம் “ இல்ல மைரா, அதோட அம்மா இருக்கு, நாம பக்கத்துல போனா கடிச்சு கொதறிடும். புதுசா குட்டி போட்டு இருக்கு அதனால போறது சரியா இருக்காது “ என்று சொல்லி மறுத்துவிட்டான்.

“ ஆனா அது ரொம்ப அழகா இருக்கு எனக்கு அந்த குட்டிய ஒரு முறை தொட்டு பார்க்கணும் ப்ளீஸ் க்ரிஷ் “ என்று மைரா சொல்ல, “ நான் சொல்றத நீ கேட்க மாட்ட. வா வீட்டுக்குப் போலாம் “ என்று சொல்லி க்ரிஷ் அவளை இழுத்தான். அப்போது எச்சரிக்கையாக நாய் முனகுவதைக் கேட்டனர், இருவரின் கண்களும் அதிர்ச்சியில்  விரிந்தன. நாய் நாய்க்குட்டிகளை விட்டுவிட்டு அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பதை அவர்கள் கண்டனர். நாய் குரைப்பதையும் துரத்துவதையும் பார்த்து க்ரிஷ்  மற்றும் மைரா இருவரும் உயிருக்கு பயந்து ஓடினர்.

அவர்கள் இருவரும் பயத்தில் அலறி ஓடி கேஷவ்  மீது மோத, அவன் அவர்களை தன் கைகளில் பத்திரமாக பிடித்துக் கொண்டு  நாயை விரட்டினான்.

“ நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க, ஏன் நாய் உங்கள துரத்திட்டு வந்துச்சு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ கெட்சப், அந்த நாய் 4 குட்டி போட்டு இருக்கு. நாங்க அந்த குட்டிங்கள பார்த்துட்டு இருந்தோம். அதோட அம்மா நாங்க குட்டிங்கள எடுக்க போறோம் நெனச்சு எங்கள துரத்த ஆரம்பிச்சிடுச்சு “ என்று மைரா மூச்சிரைக்க கூறினாள்.

“ உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ? உங்க ரெண்டு பேருல யாரையாச்சும் கடிச்சு இருந்தா என்ன ஆகி இருக்கும் ? “ என்று கேஷவ் கண்டிப்புடன் கேட்டதும், “ அது க்ரிஷ தான் கடிச்சு இருக்கும். பாருங்க அவன் கடிக்க வசதியா ஷார்ட்ஸ் போட்டு இருக்கான் “ என்று சொல்லி மைரா சிரித்தாள்.

“ இல்ல, அது உன்ன தான் கடிச்சு இருக்கும், நீ தான் குண்டா கொழுகொழுனு இருக்க “ என்று க்ரிஷ் பதிலுக்கு சொன்னான்.

“ இல்ல உன்ன தான் “ என்று இருவரும் மாறி மாறி சொல்ல, “ ரெண்டு பேரை வாயை மூடுங்க. க்ரிஷ் நீ அவள விட வயசுல பெரியவன் தானே, நீ ஏன் கவனமாக இருக்க மாட்டேங்குற. மைராவ ஒழுங்கா பார்த்துக்க மாட்டியா ? “ என்று அவனை கண்டித்தான் கேஷவ்.

அப்போது குறுக்கிட்ட மைரா, “ அங்கிள், அவன் என்ன நல்லா தான் பார்த்துக்குறான். உண்மைய சொல்ல போனா அவன் உடனே வீட்டுக்கு போலாம்னு சொன்னான் ஆனா நான் தான் அந்த நாய் குட்டிய தொட்டு பார்க்கணும்னு சொன்னேன் “ என்று விளக்கம் சொன்னவள் பின்னர் கேஷவை பார்த்து கண்களை சுருக்கி, “அந்த நாய்க்குட்டி எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. கெட்ச்அப், அந்த குட்டி எல்லாம் கொஞ்சம் வளர்ந்த அப்புறம் நாம ஒன்னு எடுத்துக்கலாமா ? ப்ளீஸ் கெட்சப், நாம அதுக்கு ஷிஷிமாருனு பெயர் வைக்கலாம் “ என்று செல்லமாக கெஞ்சி கேட்டாள்.

அவள் கேட்பதை பார்த்து க்ரிஷ் தலையில் அடித்துக் கொண்டான், கேஷவ் அவளது கெஞ்சும் முகத்தைப் பார்த்து புன்னகைத்து, “ நாம அத பத்தி யோசிப்போம், இப்போ ரெண்டு பேரும் வீட்டுக்கு சாப்பிட போங்க. அம்மாவும், வசு ஆண்ட்டியும் உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.” என்று கூறினான்.

மைரா நன்றி என்று கத்திக்கொண்டே கேஷவின் கையிலிருந்து சாக்லேட் பெட்டியைப் பிடுங்கிக்கொண்டு க்ரிஷ் அவளை பின்தொடர தன் வீட்டை நோக்கி ஓடினாள். அவர்கள் சாக்லேட் பெட்டியை இழுத்து சண்டையிடுவதை கேஷவ் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“ நான் தான் இத கெட்சப் கிட்ட இருந்து வாங்கினேன், அதனால நான் தான் முதல்ல சாப்பிடுவேன் “ என்று மைரா சொன்னாள், அதற்கு க்ரிஷ், “ என் அண்ணன் இத எனக்காக வாங்கிட்டு வந்தாரு  அதனால நான் தான் முதல்ல சாப்பிடுவேன்.” என்றான்.

“ இல்ல, இத கெட்சப் எனக்காக வாங்கிட்டு வந்துருக்காரு. இது எனக்கு புடிச்ச சாக்லேட் “ என்று சொன்னாள் மைரா. விவாதம் போய் கொண்டே இருந்ததால் க்ரிஷ் நிறுத்தி, “ சரி, நாம ரெண்டு பேரும் சமமா ஷேர் பண்ணிக்கலாமா? “ என்று கேட்டான் ஆனால் மைரா, “ இல்ல, நான் உன்ன விட சின்ன பொண்ணு அதனால எனக்கு அதிகமா வேணும். இதுக்கு சம்மதம் சொல்லு இல்லனா அர்ச்சனா அத்த, மதன் மாமாவ கூப்பிடுவேன் “ என்று அவனை மிரட்டினாள்.

வேறு வழியின்றி க்ரிஷ், “ சரி, இப்ப கொஞ்சம் கொடுங்க “ என்று சொன்னதும் மைரா பெட்டியை தனக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு பெட்டிக்குள் கையை விட்டு சிலவற்றை எடுத்து க்ரிஷிடம் நீட்டினாள், க்ரிஷும் எரிச்சலுடன் வாங்கிக் கொண்டு, “ நீ என் பெஸ்ட் friend அதனால மட்டும் தான் உன்ன சும்மா விடுறேன் “ என்று அவளை முறைத்தான்.

மைரா அதற்கு சிரித்துக் கொண்டே ஒரு சாக்லேட்டை எடுத்து வாயில் போட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைய, கேஷவ்  தலையை அசைத்துவிட்டு தன் வீட்டிற்குள் சென்றான்.

**************

முன்னோட்டம்:

“ ஒரு வாட்ச் பரிசா கொடுத்துருக்கான் ஆனா அவன் ஏன் நேரடியா கொடுக்கல்னு தெரியல. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு நைனா. நான் அவனோட பெஸ்ட் friend சொல்றான் ஆனா அவனோட நடவடிக்க எல்லாம் வேற மாதிரி இருக்கு. நான் அவன லவ் பண்றேனா நைனா ? “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!