Home Family5. நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல

5. நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல

by Siragugal Novels
50 views

20 வயதில் மைரா:

மைரா உண்மையில் தனது வாழ்க்கையை முற்றிலும் சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள், இப்போது க்ரிஷ் மீதான அவளது காதல் ஒவ்வொரு ஆண்டும் அவள் பெறும் அக்கறையுடனும் அன்புடனும் அதிகரித்தது. க்ரிஷ் அவளை ப்ரொபோஸ் செய்யவில்லை என்று அவள் ஏமாற்றமடைந்தாள், ஆனால் அவன் செய்யும் வரை காத்திருக்க அவள் தயாராக இருந்தாள். அவளும் நைனாவும் க்ரிஷ் படித்த ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்,

க்ரிஷின் கேம்பஸ் இண்டர்வியூ நாளன்று அதிகாலையில் எழுந்து அவனுக்காக மைரா காத்திருந்தாள். வழக்கம் போல கிளம்பும் முன் அவளிடம் வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் க்ரிஷ். மாலையில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய மைரா, அவன் முடிவுகளை அறிய காத்திருந்தாள். கதவு திறந்து க்ரிஷ் அறைக்குள் நுழைந்த அவளை தூக்கி சுழற்றினான்.

“ மைரா நான் செலக்ட் ஆயிட்டேன், நீ தான் அதிர்ஷ்ட தேவத “ என்று க்ரிஷ் சொன்னதும், “ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் க்ரிஷ், உனக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும் “ என்றாள் மைரா. அதற்கு க்ரிஷ், “ நீ என் கூட இருக்கும் போது எதுவும் தப்பா  நடக்காது மைரா “ என்று கூறினான்.

“ ஹலோ மிஸ்டர் இடியட், நான் உன் கூட இல்லாத அப்போ என்ன செய்வ ? நான் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்ன விட்டுட்டு போயிடுவேன் “ என்று மைரா விளையாட்டாக சொன்னதும், க்ரிஷ் பல்லைக் கடித்துக் கொண்டு அவளை அணைத்துக் கொண்டான். “ நான் உன்ன என்ன விட்டு போக விட மாட்டேன் மைரா. நாம எப்பவும் ஒன்னா தான் இருப்போம், நான் அதை உறுதி செய்வேன். நீ இல்லாத ஒரு நாள என்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது மைரா, அதனால தயவு செஞ்சு நீ என்ன விட்டு போயிடுவனு சொல்லாத. விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத “ என்று சொல்லி க்ரிஷ் மிகவும் வருந்தினான்.

அவன் பலவீனமாக பேசுவதை பார்த்து, “ உன்ன விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் கிருஷ். நாம எப்பவும் ஒன்னா தான் இருப்போம், நீ என்ன விட மாட்டனு எனக்கு தெரியும் “ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“ ஒருக்காலும் நான் உன்ன விட்டுப் போக மாட்டேன் மைரா “ என்று க்ரிஷ் மீண்டும் சொல்ல, “ நிச்சயமா என்ன விட்டுடாத கிருஷ். நீ காலேஜ் முடிக்க போற, இப்போ வேலையும் கிடைச்சுடுச்சு. இப்போ நீ என்ன ப்ரொபோஸ் பண்ண தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நானே உன்ன ப்ரபோஸ் பண்ணுவேன் ஆனா உன்னை வேலையில இருந்து திசை திருப்ப எனக்கு விருப்பம் இல்ல அதனால நீயே பண்ணு க்ரிஷ். அந்த நாளுக்காக காத்திருக்கேன் “ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“ சரி செலக்ட் ஆனதுக்கு எனக்கு என்ன ஸ்பெஷல் கிடைக்கும்? “ என்று மைரா கேட்க, “ நாளைக்கு நாம வெளிய போக பிளான்  பண்ணியிருந்தேன், ஆனா மாமா போன் பண்ணி ரோஷினி நாளைக்கு காலையில வருவாள்னு சொன்னாரு. சென்னையில அவளுக்கு இருக்குற ஒரே friend நான் தான் அதனால அவள நான் கவனிச்சுக்கனும்னு அவர் சொன்னாரு. சினிமாவுக்கும், லஞ்ச் சாப்பிடவும் போலாம். என்ன சொல்ற ? என்று க்ரிஷ் கேட்டதும் மைரா முகம் சுளித்தாள்.

“ க்ரிஷ், எனக்கு அவள சுத்தமாகப் பிடிக்கல. ஏன்னு எனக்குத் தெரியல ஆனா அவ கிட்ட இருந்து எனக்கு எந்த நல்ல அதிர்வும்  கிடைக்கல அதனால தயவு செஞ்சு கவனமா இரு. நான் உன்ன  எச்சரிக்கிறேன் “ என்று மைரா சொன்னதை கேட்ட க்ரிஷ், “ மைரா, அவ என்ன தவிர வேற யார் கூடவும் பேசுறது இல்ல. உனக்கு அந்த முகம் தெரியாத யூடியூப் பாடகர் மேல இருக்க ஈர்ப்பு மாதிரி எனக்கும் அவ மேல வெறும் ஈர்ப்பு தான் இருக்கு “ என்று சொல்லி அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

“ ஆனா நான் அவர சந்திக்கவோ இல்ல அவர் கூட பேசவோ இல்லை கிருஷ். நீ ரோஷினிய சந்திக்குற, அவகூட பேசுற. இப்போ நீ அவள நம்ம கூட கூட்டிட்டு வரனு சொல்ற. நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வேற ஒருத்தர் வர்றது எனக்கு புடிக்கல “ என்று மைரா எரிச்சலுடன் சொன்னதும், “ அவ என் மாமா பொண்ணு மைரா, நீ ஏன் கவலைப்படுற? பொறாமைப்படுறியா பேபி ? என்று அவன் கிண்டலாக கேட்டான்.

“ வாய மூடு. நீ என்கூட இருக்கனு தெரிஞ்சும் நான் ஏன் பொறாமைப்படனும் ? “ என்று மைரா அவனை அடித்தாள்.

மைரா வருத்தமாக இருப்பதை பார்த்து, “ அவளுக்கு என்ன தவிர வேற friend யாரும் இல்லை அதனால அவள நம்ம கூட கூட்டிட்டு போவோம், ப்ளீஸ் மைரா “ என்று க்ரிஷ் கெஞ்சினான், “ சரி, உனக்காக தான் சம்மதிக்குறேன் ஆனா இதுக்கு அப்புறம் அவ நம்ம கூட வரக்கூடாது “ என்று முடிவாக சொன்னாள். க்ரிஷும் அவள் வார்த்தையை கேட்டு, “ அடுத்த முறை பத்தி கவலைப்படாத. நான் வேலையில பிஸியா இருப்பேன், வீட்ல இருக்க எனக்கு நேரம் கிடைக்காது அதனால எப்பவும் நீயும், நானும் மட்டும் தான் இருப்போம் “ என்று உறுதியளித்தான்.

க்ரிஷ் கிளம்பியதும் வசுந்த்ரா மைராவை அவளது அறைக்கு இழுத்துச் சென்று அவள் அருகில் அமர்ந்தார்.

“ க்ரிஷ் ப்ரொபோஸ் செய்தானா ? “ என்று அவர் கேட்க, “ இன்னும் இல்ல மாமா. அவனுக்கு வேலை கெடச்சுடுச்சு, அத சொல்ல வந்தான் “ என்றாள் மைரா.

“ நீங்க ரெண்டு பேரும் எப்போ போர்போஸ் பண்ணுவீங்கனு நாங்க எல்லாரும் வெயிட் பண்றோம். அந்தப் பையன் உன்ன ஏற்கெனவே உரிமை கொண்டாடுறான். தயவு செஞ்சு எங்க முன்னாடி கட்டிப்பிடிக்குறது, முத்தம் கொடுக்குறத நிறுத்த சொல்லு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் சின்ன பசங்க இல்ல “ என்று வசுந்தரா சொன்னதும், “ அம்மா, அது சாதாரணமா அவன் அப்பாவும் போல தான் பண்றான். நீங்க அத பெருசு பண்ணாதீங்க “ என்று பதில் சொன்னாள் மைரா.

“நீங்க இன்னும் 4 வயசு மைரா, 6 வயசு க்ரிஷா இருந்தா தான் அது எல்லாமே சாதாரணம். இப்போ ரெண்டு பேரும் வளர்ந்துட்டீங்க “ என்று வசுந்தரா சொல்ல மைரா முனகியபடி தன் அறைக்கு ஓடினாள். மறுநாள் க்ரிஷ் அவளை கல்லூரியில் இறக்கிவிட்டு விடுமுறையில் இருந்ததால் வீட்டிற்கு சென்றான். மாலையில் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கல்லூரி வாசலில் காத்திருந்த க்ரிஷ், கண்களில் கண்ணீருடன் அவள் வெளியே வருவதையும், நைனா அவளுக்கு ஆறுதல் சொல்வதையும் கண்டு பீதியடைந்தான்.

க்ரிஷ் பைக்கை கீழே போட்டுவிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, “ என்ன ஆச்சு மைரா? “ என்று அவன் கவலையுடன் கேட்டதும், “ எங்க கிளாஸ் பையன் ஒருத்தன் மைராவ கை புடிச்சு இழுத்து கிண்டல் பண்ணான். நீ இனி மைரா கூட இருக்க மாட்டனு தெரிஞ்சி வம்பிழுக்க ஆரம்பிச்சான் “ என்று கூறினாள் நைனா.

க்ரிஷ் கோவத்துடன் அவர்களை கடந்து சென்றான், ஆனால் நைனா அவனைத் தடுத்தாள். மைரா அவன் கையைப் பிடித்து வேண்டாம்  என்று தலையசைத்தாள். அப்போது தான் அவள் மணிக்கட்டில் இருந்த காயத்தைப் பார்த்த க்ரிஷ் அவற்றை மென்மையாகத் தொட்டான். மைரா சிணுங்க, க்ருஷ் தன் கட்டை விரலால் அவள் கண்ணீரைத் துடைத்தான்.

“முதல்ல அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ. இத பத்தி பிரின்சிபால் கிட்ட புகார் பண்ணியாச்சு. அவன ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அவனோட அப்பா அம்மாவ வர சொல்லி அவங்க கிட்டயும் சொல்லிட்டாங்க “ என்று நைனா சொன்னதை கேட்டும், “  நான் அவன சும்மா விட மாட்டேன், இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும். முதல்ல உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அதுக்கு அப்புறம் அவனுக்கு இருக்கு “ என்று சொல்லி அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அவன் முதுகில் சாய்ந்தபடி மைரா அவன் பின்னால் அமர்ந்தாள். க்ரிஷ் அவள் கையை பிடித்து தன் இடுப்பில் சுற்றிக்கொண்டு அவளை ஆறுதல் படுத்த மென்மையாக தட்டிக் கொடுத்தான்.

அவர்கள் வீட்டை அடைந்தபோது, மைரா அழுவதைக் கண்டு வசுந்தரா அதிர்ச்சியடைந்தார். க்ரிஷுடன் மைராவை அவள் அறைக்கு அழைத்துச் சென்றார், க்ரிஷ் அவளது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தடவினான் ஆனால் அவன் இன்னும் ஆத்திரத்தில் எரிந்து கொண்டிருந்தான்.

“ ரிலாக்ஸ் பண்ணிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடு, நான் சீக்கிரம் திரும்பி வருவேன் “ என்று க்ரிஷ் சொன்னதும், “ எங்க போற ?” என்று கேட்டாள் மைரா. அதற்கு அவன், “ ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ தூங்கி எழுந்திருக்கறதுக்குள்ள வந்துடறேன் “ என்றான்.  

“ க்ரிஷ், நீ அவன ஒன்னும் பண்ணாத. நான் மாமாகிட்ட சொல்லி போலிஸ் கிட்ட புகார் கொடுக்கலாம் “ என்று வசுந்தரா சொன்னார் ஆனால் அவன், “ அதெல்லாம் வேணாம் அத்தை. நைனாவும் மைராவும் அவன பத்தி பிரின்சிபால் கிட்ட ஏற்கனவே புகார் பண்ணி இருக்காங்க. நான் சீக்கிரம் வரேன் “ என்று சொல்லிவிட்டு சட்டையைச் சுருட்டிக் கொண்டு அவள் அறையை விட்டு வெளியேறினான்.

மைரா நைனாவை அழைத்து க்ரிஷ் முழு கோபத்துடன் வெளியேறியதைப் பற்றி அவளிடம் தெரிவித்தாள் ஆனால் நைனா அவனை தடுக்க வேண்டாம் என்று மட்டுமே சமாதானப்படுத்தினாள். மைராவால் தூங்க முடியாமல் பதற்றத்தில் இருந்தாள். இரவில் க்ரிஷ் திரும்பி வந்தபோது அவன் சிரித்தபடி அவள் படுக்கையில் விழுந்தான்.

“ எப்படி இருக்க மைரா? “ என்று அவன் கேட்க, “ நீ ஏன் முட்டாள் மாதிரி சிரிக்குற? நீ என்ன பண்ண ? “ என்று மைரா கேட்டாள்.

“ ஏதோ நல்லது நடந்துச்சு, இப்போ அத பத்தி பேச வேணாம். வா நாம சாப்பிடுவோம் “ என்று க்ரிஷ் சொன்னதும் மைரா அவனை முறைத்துக் கொண்டே இருவரும் ஹாலுக்கு சென்றனர்.

இருவரும் ஒன்றாக வருவதை பார்த்த வசுந்த்ரா, “ க்ரிஷ், நீ மைராவை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறது தான் நல்லது. நைட்டு தூங்கும் போது மட்டும் தான் அவள தனியா விடுற “ என்று கூறினார் அதற்கு அவன் கொஞ்சமும் யோசிக்காமல், “ மைரா, அத்தைக்கு ஒரு பிரச்சனையும் இல்ல அதனால உன் பொருட்களை பேக் பண்ணிட்டு என் கூட வா “ என்றான். 

அவன் சொன்னதைக் கேட்டு வசுந்த்ராவும் மைராவும் அதிர்ச்சியில் பெருமூச்சு விட்டனர்.

“ என்ன? நான் நிஜமா தான் சொல்றேன். நான் இவள என்கூட கூட்டிட்டு போறேன் “ என்று அவன் மீண்டும் சொல்ல, “ அவ்ளோ  சீக்கிரம் இல்ல க்ரிஷ். அவ படிப்பை முடிக்கட்டும் அதுக்கு அப்புறம் பேசுவோம் “ என்று சொன்னார் வசுந்தரா. அதற்கு க்ரிஷ் அவரிடம், “  நீங்க என்ன சொன்னாலும் சம்மதம் தான் அத்த. நாங்க நாளைக்கு  வெளிய போறோம். லஞ்ச் சாப்பிட போறோம், நைட்டு டின்னர் சாப்ட்டு தான் வருவோம் “ என்றான்.

அடுத்த நாள் க்ரிஷ், மைரா மற்றும் ரோஷினி ஒரு மாலுக்கு சென்றனர். க்ரிஷ்  மைராவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான், அவர்கள் திரைப்படம் தொடங்கும் நேரம் வரை அங்கு சுற்றித் திரிந்தனர். மைராவும் க்ரிஷும் சேர்ந்து சிரித்துக் கொண்டும் கமெண்ட் அடித்துக் கொண்டும் படத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது ரோஷினிக்கு எரிச்சல் வந்தது.

அவர்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், ரோஷினி தனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த க்ரிஷையும், மைராவையும் தடுத்து நிறுத்தி, “ க்ரிஷ், நீ மைரா கூட தனியா வந்திருக்கலாம். நீங்க ரெண்டு பேரும் நான் உங்க கண்ணுக்குத் தெரியாத மாதிரி நடந்துக்குறீங்க. ரொம்ப எரிச்சலா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் friends தான் அதுக்காக என்ன இப்படி அசிங்கமா நடத்தாதீங்க “ என்று சீறினாள்.

ரோஷினி விலகிச் செல்ல, க்ரிஷ்  வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்த மைராவைப் பார்த்து அவள் தாடையை மேலே தூக்கி வாயை மூடினான்.

“” அவ கோவமா போறா. அம்மா கிட்ட இல்ல மாமா கிட்ட போய் புகார் பண்ணிட போறா அதுக்குள்ள அவள நிறுத்துவோம் “ என்று க்ரிஷ் சொல்ல. “ ஆமா ஆமா நிச்சயமா நாம அவள சமாதானப்படுத்தனும். முட்டாள் போய் அவள நிறுத்து “ என்று கத்தினாள்.

க்ரிஷும் மைராவும் அவளைத் தடுக்க அவள் பின்னால் ஓடினார்கள். க்ரிஷ்  அவளை சமாதானப்படுத்தினான், மைராவும் அவளிடம் மன்னிப்பு கேட்டாள், அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டார்கள். ரோஷினி தனது தட்டில் இருந்து கிக்ரிஷுக்கு உணவை ஊட்டியபோது மைராவுக்கு பசி பறந்து போனது.

“ மைரா, என்ன ஆச்சு ? ஏன் சாப்பிட மாட்டேங்குற? நான் உனக்கு ஊட்டி விடட்டுமா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ இல்ல க்ரிஷ், எனக்கு சோர்வா இருக்கு, தலை கொஞ்சம் வலிக்குது அதனால வீட்டுக்கு போலாமா ? “ என்று மைரா கேட்டாள். க்ரிஷ் உடனே, “ ஏன் முன்னாடியே சொல்லல? வா போகலாம் “ என்று அவளை அழைத்தான். அவர்களை தடுத்த ரோஷினி, “ க்ரிஷ், வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி பீச்சுக்குப் போவோம் “ என்று சொன்னாள்.

“ ஸாரி ரோஷினி, மைராவுக்கு உடம்பு சரியில்ல, இப்போ அவ தூங்கலனா தலை வலி அதிகமாயிடும், அதனால வீட்டுக்கு போகலாம் “ என்று க்ரிஷ் சொன்னான் ஆனால் ரோஷினி, “ அவ வேணும்னா கார்ல தூங்கட்டும். நாம பீச் போகலாம் ப்ளீஸ் “ என்று கெஞ்சினாள். அதை பார்த்த மைரா, “ பரவாயில்ல க்ரிஷ், நீங்க ரெண்டு பேரும் போங்க, நான் ஒரு கேப்ல வீட்டுக்கு போறேன் “ என்றாள்.

மைராவின் வார்த்தையை கேட்டு க்ரிஷ் அவளை முறைத்து, “ என்ன கிண்டல் பண்றியா ? நான் உன்ன தனியா விடமாட்டேன். இப்ப போகலாம், பீச் எங்கேயும் ஓடி போகாது. இன்னொரு நாள் போகலாம் “ என்றான்.

க்ரிஷ் பில் செலுத்திய பிறகு அவர்கள் வீடு திரும்பினர். மைரா தன் அறைக் கதவைச் சாத்திவிட்டு நைனாவை அழைத்து  நடந்ததைப் பற்றி கூறினாள்.

“ நான் உன்கிட்ட சொல்ல போறத கேட்ட அப்புறம் ரோஷினிய பத்தி நீ மறந்துடுவ “ என்று நைனா சொல்ல, மைறாவல் சொல்ல போவதை கேட்க ஆர்வமாய் இருந்தாள்.

“ உன் கைய புடிச்சி கிண்டல் பண்ண பையன யாரோ அடிச்சு இப்போ அவன் ஹாஸ்பிடல்ல இருக்கான்னு கேள்விப்பட்டேன் “ என்று நைனா சொன்னதும், “ க்ரிஷ் எனக்காக அப்படி செய்தானா ?” என்று கேட்டாள் மைரா.

“ இப்போ சொல்லு, அவனுக்கு உன்மேல லவ் இல்லாம தான் ஒருத்தனோட கைய உடச்சு இருக்கானா ? “ என்று நைனா கேட்டதும்,” நீ சொல்றது சரிதான் நைனா, ஆனா ரோஷினிக்கு முன்னாடி என்னோட தாழ்வுமனப்பான்மைய என்னால மறைக்க முடியல. அவ பார்க்க அவ்ளோ அழகா இருக்கா, க்ரிஷ் வேற இன்னும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணல அதனால எனக்கு பயமா இருக்கு “ என்று சொல்லி மைரா அழுதாள்.

“ நீங்க ஏன் இன்னும் போர்போஸ் பண்ணாம இருக்கீங்கனு எனக்கு தெரியல. நான் சொல்றத கொஞ்சம் சீரியஸா கேளு, அவன் உன்ன ப்ரொபோஸ் செய்ய வெயிட் பண்றத விட்டு நீயே அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணு. எனக்கும் அந்த ரோஷினி பத்தி சரியாப்படல அதனால ரிஸ்க் எடுக்க வேணாம். உனக்கு இப்போ 20 வயசு ஆகுது. இப்போலாம் பசங்க 14 இல்ல 15 வயசுல லவ் பண்ணிட்டு இருக்காங்க “ என்று நைனா புரிய வைக்க முயன்றாள். அவள் வார்த்தையை கேட்டதும், “ நான் யோசிக்கிறேன். இப்போ என்னால எதுவும் யோசிக்க கூட முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு “ என்று சொல்லி மைரா வருந்தினாள்.

“ சரி இப்போ உன் மனசுக்கு சந்தோஷம் தர மாதிரி ஒரு நியூஸ் சொல்லட்டுமா ? “ என்று நைனா சொன்னதும், மைரா ஆர்வத்துடன், ”என்னோட அந்த மர்ம யூட்யூப் பாடகர் இன்னொரு பாட்டு பதிவேற்றியிருக்காருனு சொல்ல போறியா ? “ என்று கேட்டாள். நைனா அதற்கு, “ நான் ஆமானு சொன்னா என்ன செய்வ ? “ என்று கேட்டாள்.

மைரா திடீரென அழைப்பை துண்டித்து தனது மொபைலில் யூடியூப்பைத் திறந்தாள். கடந்த 4 வருடங்களாக யூடியூபில் இருந்து கிட்டார் வாசிக்கும்போது கவர் பாடல்களை உருவாக்கிய மர்ம பாடகருக்கு அவள் அடிமையாகிவிட்டாள். ஆனால் அந்த மனிதர் ஒருபோதும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை, இருட்டில் அமர்ந்து பாடல்களை பாடினான். கிட்டார் மற்றும் பாடல்கள் மேல் பைத்தியமாக இருந்த மைரா அந்த மர்ம மனிதன் மீது ஒரு ஈர்ப்பை வளர்த்துக் கொண்டாள், மேலும் அவனது எந்த பாடல்களையும் கேட்க தவறியதில்லை. அவர் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு, பார்த்து மணிக்கணக்கில் செலவழிப்பாள்.

 “ யார் நீ ? உன்னோட அடையாளத்தை வெளிப்படுத்துற எண்ணம் உனக்கு இருக்கா இல்லையா ? உன்னால எப்படி இவ்ளோ அழகா பாட முடியுது ? அருமையான குரல் உனக்கு. நான் இப்போ புத்துணர்ச்சியா, சந்தோஷமா உணர்றேன், ரொம்ப நன்றி “ என்று சொல்லி புன்னகையோடு உறங்க சென்றாள்.

ஒரு வாரம் கழித்து மதனின் 60வது பிறந்த நாளை, ஒரு ரிசார்ட்டில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பார்ட்டி நடக்கும் தோட்டத்தை மைரா  அடைந்தாள், அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மைரா ஒரு நாற்காலியில் தடுமாறி விழவிருந்தாள், ஆனால் ஒரு ஜோடி கைகள் அவளைப் பாதுக்காப்பாக பிடித்தன, மைரா அவளுக்குப் பிடித்த வாசைனையை சுவாசித்தாள்.

“ ரொம்ப நன்றி க்ரிஷ், நீ எப்பவும் நான் ஆபத்துல இருக்கும் போது சரியான நேரத்துக்கு வந்து காப்பாத்துற “ என்று சொல்லி தன்னை மறந்து முதன்முறையாக அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள். தான் செய்ததை உணர்ந்து அதிர்ச்சியில் மூச்சிரைத்து, “ அய்யோ கடவுளே ! ஸாரி க்ரிஷ், நான் ஏன் இப்படி பண்ணேன்னு தெரியல. தெரியாம கிஸ் பண்ணிட்டேன், ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு “ என்று வருந்தினாள்.

மைரா மிகவும் பதட்டமாக உணர்ந்தாள், மேலும் யாரோ க்ரிஷை மின்சாரத்தை சரிபார்க்க அழைப்பதையும் கேட்டு அவசரமாக அவன் பிடியிலிருந்து பின்வாங்கினாள், ஆனால் அவளுடைய துப்பட்டா அவன் வாட்சில் சிக்கிக்கொண்டது. அவள் துப்பட்டாவை லேசாக இழுக்க, அவன் அங்கிருந்து கிளம்பினான். மின்சாரம் திரும்பியதும், துப்பட்டாவிலிருந்து ஒரு குஞ்சம் காணாமல் போயிருப்பதைக் கவனித்தாள், அந்த முத்தத்திற்காக அவள் தன்னைத்தானே சபித்துக் கொண்டாள்.

“ சரி, கவலைப்பட ஒண்ணுமில்ல. க்ரிஷ் தானே, அவன் எதுவும் நினைக்க மாட்டான். என்னால எப்பவும் போல அவன் இருக்க முடியும். அவன் தான் எப்பவும் என்ன கிஸ் பண்றான் அதனால  இது ஒண்ணுமில்ல ஆனா கன்னத்துல கொடுத்திருந்தாலும் அது என்னோட முதல் முத்தம். முதல் தடவ கிஸ் பண்ணும் போது எவ்ளோ ஸ்பெஷலா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் ஆனா இப்படி ஆயிடுச்சு. இந்த கிஸ் பத்தி பேசி அவன சங்கடப்படுத்த வேணாம்.      குறைந்த பட்சம் என் ரெண்டாவது முத்தமாவது ஸ்பெஷலா இருக்கனும் “ என்று புலம்பியபடி க்ரிஷை தேடினாள்.

க்ரிஷ் விருந்தினருக்கு ஜூஸ் பரிமாறுவதைப் பார்த்து அவனை நிறுத்தி துப்பட்டாவை அவனிடம் காட்டினாள். அவள் உதட்டைப் பிதுக்கி கோவமாக இருப்பதை பார்த்து அவள் கன்னத்தை கிள்ளி க்ரிஷ் சிரித்தான்.

“ அப்படிச் செய்யாத. உன்னால என் குஞ்சம் காணாம போயிடுச்சு பாரு? “ என்று மைரா சொல்ல, “ என்னாலையா ? சரி இருக்கட்டும் விடு. இந்த வாரம் உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ ஷாப்பிங் பண்ணுவோம், சந்தோஷமா ? “ என்று பதிலுக்கு கேட்டதும், “ நீ தான் பெஸ்ட் “ என்று சொல்லி புன்னகைத்த மைரா, விருந்தினருக்கு சேவை செய்ய அவனுக்கு உதவினாள். அனைவரும் தயாரானதும் அர்ச்சனா, கேஷவின் எண்ணை டயல் செய்து விசாரித்தாள்.

“ எங்க அவன்? அவன் வருவானா இல்லையா? “ என்று கேட்டார் அதற்கு அர்ச்சனா, “ ரிசார்ட்டுக்கு பக்கத்துல வந்துட்டான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவான் “ என்று பதில் சொன்னார். மதன் வருத்தத்துடன் தலை அசைத்து, “ அவன் என்ன தான் செய்ய போறான்னு எனக்கு தெரியல “ என்று கூறினார்.

சில நிமிடங்களில் கேஷவும் ஒரு பெண்ணும் ஒன்றாக நடந்து வருவதை பார்த்த அர்ச்சனா மகிழ்ச்சியடைந்தார்.

“ இந்த முறை அவன் என் வார்த்தைக்கு உடன்படுவான்னு நினைக்கிறேன் “ என்று அர்ச்சனா சொல்ல, “ கனவு கண்டுட்டு இரு “ என்று சொன்னார் மதன்.

அர்ச்சனா கேஷவை கட்டிப்பிடித்தும் கேஷவ் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தான். மதன் கேக்கை வெட்டி முதலில் மனைவிக்கும் பின்னர் பிள்ளைகளுக்கும் ஊட்டினார். கேஷவுடன் வந்த பெண்ணை இழுத்து அருகில் அமர்ந்த அர்ச்சனா அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “ நீ கேஷவ் தோழியா ? “ என்று கேட்டார்.

அந்த பெண் பணிவான புன்னகையுடன், “ என் பேரு ரேச்சல், என் அண்ணா அவரோட friend. எனக்கு சென்னையில கொஞ்சம் வேலை இருந்துச்சு, கேஷவ் என்ன கூட்டிட்டு வர சம்மதம் சொன்னாரு.  என்ன பொறுத்தவரை அவர் என் அண்ணனோட friend மட்டும் இல்ல “ என்று சொன்னதும், “ அதுக்கு என்ன அர்த்தம்? “ என்று அர்ச்சனா மிகவும் எதிர்ப்பார்ப்புடன் கேட்டார்.

“ நான் அவர லவ் பண்றேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு ப்ரொபோஸ் பண்ணேன் ஆனா அவர் என்ன ஏத்துக்க தயாரா இல்ல. ப்ளீஸ், அவர்கிட்ட பேசுறீங்களா ? “ என்று ரேச்சல் கேட்டதும், “ கண்டிப்பா நான் அவன் கிட்ட பேசறேன். நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். அவன் கல்யாணத்த பார்க்க நான் அவ்ளோ ஆவலா இருக்கேன் “ என்று சொல்லி அர்ச்சனா கேஷவை அழைத்தார்.

“ கேஷவ் , உனக்கு இப்போ 30 வயசாகுது. நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டாமா? ரேச்சல் உன்ன லவ் பண்றா, நீ ஏன் அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது ? “ என்று அர்ச்சனா கேட்க, கேஷவ் உடனே ரேச்சல் பக்கம் திரும்பி, “ ரேச்சல், நாம இத பத்தி  பேசினோம். இத பத்தி நீ பேச மாட்டனு எனக்கு சத்தியம் பண்ண. இப்போ என்ன ஆச்சு ? நீ என் நண்பனோட தங்கச்சி அவ்ளோ தான், அதுக்கு மேல நமக்குள்ள எந்த உறவும் இருக்காதுனு நான்  தெளிவுபடுத்திட்டேன் தானே ? உன்னால இத ஏத்துக்க முடியலனா நாம சந்திக்குறது இது தான் கடைசியா இருக்கும். நான் உனக்கு கார் புக் பண்றேன், நீ இங்க இருந்து கிளம்பு “ என்று உறுதியாக சொன்னான்.

“ கேஷவ் , ப்ளீஸ். இத பத்தி பேசுனதுக்கு என்ன மன்னிசச்சிடுங்க. நான் உங்கள விட்டு போக விரும்பல. ஒரு friend மாதிரி உங்க கூட இருக்க விடுங்க, ப்ளீஸ். இனி இது மாதிரி எதுவும் நடக்காது “ என்று ரேச்சல் கெஞ்சினாள் ஆனால் கேஷவ், “இல்ல ரேச்சல், இது உனக்கு நல்லது இல்ல அதனால உனக்கு ஏத்த மாதிரி ஒருத்தர பாரு. நான் உன் அண்ணன் கிட்ட பேசறேன் “ என்று திட்டவட்டமாக சொன்னான்.

“ ஏன் கேஷவ் இப்படி பண்ற? என் கவலை உனக்கு புரியலையா ? எவ்ளோ நாள் இப்படி தனியா இருப்ப ? வீட்டுக்கு திரும்பி வர ஐடியா இருக்கா ? உன் வாழ்க்கையில என்ன தான் நடக்குது ?  என்று அர்ச்சனா கவலையுடன் கேட்டார்.

அர்ச்சனாவின் கையை பிடித்த கேஷவ், “ அம்மா, நான் நல்லா இருக்கேன், வேலையில பிஸியா இருக்கேன். இப்போ நான் தனியாக வாழ பழகிட்டேன், இது எனக்கு நிம்மதியைத் தருது. எனக்கு உங்க மேல பாசம், அக்கறை இல்லாம இல்ல. நீங்க என் குடும்பம், நான் உங்க எல்லார் மேலையும் நிறைய பாசம் வெச்சுருக்கேன் ஆனா நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல. நீங்க  இத பத்தி பேசுறத நிறுத்த தயாரா இல்லனா நான் இப்போவே கிளம்புறேன் “ என்று சொன்னான். அர்ச்சனா பதற்றம் அடைந்து, “ போகாத ப்ளீஸ். நான் இனி உன்ன கட்டாயப்படுத்த மாட்டேன். குறைந்த பட்சம் கொஞ்ச நாள் எங்க கூட இரு “ என்று அவனிடம் கேட்டார்.

கேஷவ் சரி என்று தலையை அசைத்துவிட்டு ரேச்சல் கிளம்ப ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்தான். கேக்குகள் நிரம்பிய தட்டை கையில் ஏந்தியபடி அவர்களிடம் சென்ற மைரா கேசவைப் பார்த்துப் புன்னகைத்து, “ எப்படி இருக்கீங்க அங்கிள் ? ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க? அத்த, இவரு ரகசியமா கல்யாணம் பண்ணிட்டாருனு நினைக்குறேன். யாருக்கு தெரியும், இவர் பசங்க ஸ்கூல் படிச்சா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல “ என்று அவனை எப்போதும் போல கிண்டல் செய்தாள்.

“ஆமா அம்மு, நீ சொல்றது சரி தான். என் மூத்த பையனுக்கு நேத்து தான் என்ஜினியரிங்க காலேஜ்ல அட்மிஷன் கெடச்சுது “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு மைராவுக்கு மூச்சு முட்டியது, அர்ச்சனா அவளது ரியாக்ஷனைக் கண்டு சிரித்தாள். கேஷவ்  ஒரு துண்டு கேக்கை எடுத்து அவள் திறந்த வாயில் திணித்து விட்டு சென்றான். மைரா கேக்கை மென்று விழுங்கிவிட்டு இன்னும் சிரித்துக் கொண்டிருந்த அர்ச்சனாவை நோக்கித் திரும்பி, “ அவர் என்ன கிண்டல் செய்தாரா ? என்று கேட்டாள்.

“ நீ ரொம்ப லேட் மைரா. திரும்பி பாரு, க்ரிஷ் உன்ன தேடிட்டு இருக்கான் “ என்று அர்ச்சனா சொன்னதும் மைரா புன்னகைத்தபடி க்ரிஷிடம் திரும்பினாள். அவளிடமிருந்து தட்டை வாங்கிவிட்டு  இரவு உணவு சாப்பிட இழுத்துச் சென்றான்.

“ சாயங்காலம் நீ ஸ்நேக்ஸ் எதுவும் சாப்பிடல. நீ பசியில இருப்ப, இரு நான் உனக்கு டின்னர் எடுத்துட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு சென்றதும் மைரா நாற்காலியில் உட்கார்ந்தாள், க்ரிஷ் இரண்டு தட்டுகளுடன் திரும்பி வந்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்ப எத்தனிக்க, மைரா அவனைத் தடுத்து, “ நீ  எங்க போற ? “ என்று கேட்டாள்.

“ நான் இந்த தட்ட ரோஷினி கிட்ட கொடுத்துட்டு ஒரு நிமிஷத்துல வந்துடுறேன் “ என்று க்ரிஷ் சொல்ல அதற்கு மைரா, “ நீ திரும்பி வரவரைக்கு நான் சாப்பிட மாட்டேன். ஏன் அவளே போய் எடுத்துக்க மாட்டாளா ? “ என்று எரிச்சலுடன் சொன்னாள்.

“ என் பொறாமையின் ராணி ஒரு நிமிஷத்துல வந்துடறேன். சரியா ? “ என்று கேட்க, மைரா தலையசைத்து புன்னகைத்தாள்.

*******************************

முன்னோட்டம்:

“ அவன் அழகா இருக்குறதால நான் அவன லவ் பண்ணல. அவன் என் மேல காட்டுற உண்மையான கவனிப்பு, அக்கறைய பார்த்து தான் லவ் பண்ணேன். நான் கஷ்டத்துல இருக்கும்போதெல்லாம் அவன் என்ன காப்பாத்துற விதம், என்ன கிண்டல் பண்ணவங்க கூட அவன் சண்டப்போட்டது, என் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பரிசு கொடுக்குறது இது எல்லாம் தான் எனக்கு புடிச்சுது. அவன்  உண்மையிலேயே என் மேல அக்கறை காட்டுறான் அது தான் அவன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது “

 

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:35 am

[…] நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:51 am

[…] 5.நான் கல்யாணத்துக்கு தயாரா இல்ல […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!