Home Family6. என்ன ஏமாத்த மாட்டனு நம்புறேன் க்ரிஷ்

6. என்ன ஏமாத்த மாட்டனு நம்புறேன் க்ரிஷ்

by Siragugal Novels
49 views

நிகழ்காலம்:

மைராவுக்கு 23 வயதாகி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள். அவளும், நைனாவும் பாடுவதில் நன்கு பயிற்சி பெற்று மாணவர்களைப் பாடப் பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டினர் எனவே இருவரும் ஒரு இசை அகாடமியில் சேர்ந்து, மாணவர்களுக்குப் பாடுவதில் பயிற்சி அளிப்பதில் ஆசிரியருக்கு உதவியாளராக இருந்தனர்.

க்ரிஷ் ஒரு கம்பெனியில் சேர்ந்து வேலையில் மும்முரமாக இருந்தான். பெரும்பாலும் அவன் பயணம் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவான். மைரா அவன் இல்லாத நாட்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தாள், அவர்களின் சந்திப்புகள் நிறைய குறைந்துவிட்டன. அவன் சென்னையில் இருந்த போது கிரிஷ் வேலையிலிருந்து திரும்பியது இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே இருவரும் சந்தித்தனர். 10 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அவளை க்ரிஷ் வெளியே அழைத்துச் சென்றான். மைரா ஒருபோதும் புகார் செய்யாமல், அவனது வேலையை புரிந்து கொண்டாள். எப்போதாவது அவன் அவளை மியூசிக் அகாடமியில் விடும் போது தான் அவர்கள் பகல் வெளிச்சத்தில் சந்தித்துக் கொள்வார்கள்.

க்ரிஷ் அவளுக்கு நேரம் ஒதுக்காததை விட அவன் தனது உணர்வுகளைப் பற்றி அவளிடம் பேசாதது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. மைரா தனது வாழ்நாள் முழுவதும் எல்லா நேரத்திலும் அவனுடன் இருக்க விரும்புவதாக மறைமுகமாக அவனிடம் பல முறை பேசினாள் ஆனால் க்ரிஷ் அவள் வார்த்தையை கேட்டு  புன்னகைத்து அவளைக் கட்டிப்பிடிக்க மட்டுமே செய்தான். இருப்பினும் அந்த அரவணைப்பு அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

மைரா அவனை ஒருபோதும் கட்டாயப்படுத்த விரும்பவில்லை, அவன் காதலை சொல்லும்வரை காத்திருக்க விரும்பினாள்.

காலையில் கண் விழித்த மைரா எழுந்திருக்க விரும்பாமல் படுக்கையில் படுத்திருந்தாள். பெங்களூர் சென்றிருந்த க்ரிஷ் இன்னும் திரும்பி வரவில்லை என்று கவலையுடன் இருந்தாள். கதவு தட்டும் சத்தம் கேட்டு முனகியபடி மீண்டும் உறங்க கண்களை மூடினாள். கதவு திறந்தது, ஆனால் அவள் கண்களை மூடியிருந்தாள். போர்வை இழுக்கப்படுவதை உணர்ந்தவள், கத்த தயாராக இருந்தாள், ஆனால் க்ரிஷ் அவளைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டதும் தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வீசி அவனைக் கட்டியணைக்க, அவன் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

“ நீ ரெண்டு நாள் கழிச்சு வருவன்னு நினைச்சேன் “ என்று மைரா சொல்ல, “ என் வேலை முடிஞ்சிடுச்சு அதனால புதுப்படத்துக்கு  டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டேன், நீ ரெடியாகு நாம வெளிய போறோம் “ என்று க்ரிஷ் கூறினான். அவன் சொன்னதை கேட்டு உற்சாகமடைந்த மைரா, “ அப்போ மதியம் லஞ்ச் என்ன பிளான் ? “ என்று கேட்டாள்.  

“ படம் பார்ப்போம், மதிய லஞ்ச் சாப்பிடுவோம், நைட்டு டின்னர் கூட வெளிய சாப்பிடலாம். வசு அத்தை, ராஜன் மாமா கிட்ட தகவல் சொல்லிவிட்டேன். இப்ப நீ போய் குளிச்சிட்டு வா, நான் உன் டிரஸ்ஸை செலக்ட் பண்றேன்” என்று க்ரிஷ் சொன்னதும் மைரா குளியலறைக்கு விரைந்தாள், க்ரிஷ் அவளுக்காக ஒரு ஜீன்ஸ் மற்றும் சட்டையை எடுத்து வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான். 30 நிமிடங்கள் கழித்து மைரா ஹாலுக்கு விரைந்து சென்றதும் வசுந்த்ரா மற்றும் ராஜனுக்கு கைகளை அசைத்து விட்டு கிரிஷ் தனது பைக்கில் அவளை அழைத்து சென்றான்.

“ எவ்ளோ நாள் இப்படியே போகும் க்ரிஷ் ? நீ வேலை விஷயமா கிளம்பி போனதும் நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன். நீ இப்படி வெளியூர் போக வேண்டிய அவசியம் இல்லாத மாதிரி வேலை பார்க்க கூடாதா ? “ என்று மைரா கவலையுடன் கேட்க, “ இல்ல மைரா, இன்னும் கொஞ்ச நாள் தான், நான் சென்னையில தான் செட்டில் ஆகலாம்னு இருக்கேன் “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.

மைரா சரி என்று தலை அசைக்க, “ படம் ஆரம்பிக்க நிறைய நேரம் இருக்கு, முதல்ல உனக்கு சாப்பிட ஏதாவது வாங்குவோம் அப்புறம்  ஷாப்பிங் போகலாம் “ என்று க்ரிஷ் சொன்னதும் மைரா அவனது கன்னங்களைக் கிள்ளினான்.

இருவரும் காலை உணவை சாப்பிட்ட பிறகு ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தனர். மைரா ஒரு அழகான டிசைனர் சல்வாரைப் பார்த்தாள் ஆனால் க்ரிஷ் அவளுக்காக நிறைய குர்தி, ஜீன்ஸ் மற்றும் லெகிங்ஸை வைத்திருப்பதைப் பார்த்ததும் அவள் தேர்வு செய்த சல்வாரை விட்டுவிட்டாள்.

“ நீ முழு கடையையும் வாங்க திட்டம் போட்டு இருக்கியா ? “ என்று மைரா கேட்டதும், “ இத்தன நாள் கழிச்சு இன்னைக்கு தான் நமக்கு டைம் கிடைச்சிருக்கு, அதை யூஸ் பண்ணிக்கலாம், உனக்கு எக்ஸ்ட்ரா டிரஸ் வாங்கித் தரறதுல என்ன தப்பு? “ என்று கேட்டான் க்ரிஷ். அதற்கு மகிழ்ச்சியில் புன்னகைத்த மைரா, “ தாராளமா வாங்கு, நான் உனக்கு சட்ட செலக்ட் பண்றேன் “ என்று கூறினாள்.

இருவரும் அவரவர் வழியில் சென்று ஒருவருக்கொருவர் ஆடைகளை தேர்வு செய்து திரும்பினர். க்ரிஷ் எல்லாவற்றையும் பில் போட்டுவிட்டு ஷாப்பிங் பேக், ஸ்நாக்ஸ், ஐஸ்கிரீம் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சரியான நேரத்தில் தியேட்டரை அடைந்தனர். க்ரிஷின் ஐஸ்கிரீமை கீழே விழுந்ததும் மைரா சத்தமாக சிரித்தாள், ஆனால் அவன் சிரித்தபடி அவளது ஐஸ்கிரீமை பிடுங்கி முனகி சாப்பிட ஆரம்பித்தான்.

12 வயது மைராவாக இருந்திருந்தால் அவனை அடித்திருப்பாள்  ஆனால் இப்போது அவள் வெட்கத்தை மறைக்க முடியாமல்  தோல்வியுற்றாள். தியேட்டரின் வெளிச்சம் மங்கலாக இருந்ததால் க்ரிஷ் அவளது சிவந்த கன்னங்களைப் பார்க்க முடியவில்லை என்று அவள் நிம்மதியடைந்தாள்.

படம் முடிந்த பின்னர் இருவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். இருவரும் சோர்வாக இருந்தனர் ஆனால் வீடு திரும்புவதற்கு முன்பு இன்னும் சிறிது நேரம் செலவிட விரும்பினர்.

மைராவும் க்ரிஷும் சில பெண்கள் ஒரு பெண்ணின் கண்களைக் கட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆண் அவள் முன் நின்றதும், அந்த பெண்கள் அவள் கண்க்கட்டை அவிழ்த்தனர். அவள் தனக்கு முன்னால் இருந்தவனை பார்த்ததும் கத்தியபடி அவனை அனைத்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் ஆனந்த கண்ணீர் கொண்டு அழுவதை அங்கிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ அவங்கள பத்தி என்ன நினைக்குற க்ரிஷ் ? “ என்று மைரா கேட்டதும், “ ரெண்டு பேரும் லவர்ஸ் போல, ரொம்ப நாள் கழிச்சு சந்திக்குறாங்க நினைக்குறேன். லவ் பண்ணும் போது பக்கத்துல இருக்க முடியலனா அது ரொம்ப கொடுமையா இருக்கும் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டதும் மைரா அதிர்ச்சியானாள். அவள் கவனம் அவன் மீது மட்டுமே இப்போது இருந்தது.

“ க்ரிஷ், லவ் பத்தி நீ என்ன நினைக்கிற ?” என்று மைரா கேட்டதும், “ லவ் தான் எல்லாமே மைரா. லவ் தான் வாழ்க்கை. என் வாழ்க்கையில நான் ஒரு உறவுல இருக்க, லவ் பண்ண தகுதியானவனா இருப்பேன்னு நினைக்குறியா ? என் வாழ்க்கையில வர போற பொண்ணோட எதிர்பார்ப்புகள என்னால பூர்த்தி செய்ய முடியுமா? “ என்று க்ரிஷ் குழப்பத்துடன் கேட்டான்.

“ நீ என்கிட்ட மறைமுகமா சொல்றியா இல்ல என் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்க கேட்குறியா ? எல்லாருக்கும் எனக்கு உன் மேல இருக்க லவ் தெரியுது ஆனா உனக்கு மட்டும் ஏன் தெரிய மாட்டேங்குது ? “ என்று மனதில் நினைத்து கொண்டு அவனை பார்த்து, “ க்ரிஷ், நீ ஒரு நல்ல வாழ்க்க துணையா இருப்ப, உன் வாழ்க்கையில வர போற பொண்ண நீ ரொம்ப நல்லா பார்த்துக்குவ, அவள நிறைய லவ் பண்ணுவனு நான் நம்புறேன். அவ வாழ்க்கையில நீ கிடைக்க அவ ரொம்ப அதிர்ஷ்டசாலியா இருப்பா. நீ அவள லவ் பண்றத விட அவ உன்ன அதிகமா லவ் பண்ணுவா  “ என்று மைரா சொல்ல க்ரிஷ் அதிர்ச்சியானான்.

“ அது உனக்கு எப்படித் தெரியும்? “ என்று க்ரிஷ் கேட்க, “ மைரா, அவசரப்படாத, அவன் முதல்ல ப்ரொபோஸ் பண்ணட்டும் “ என்று மனதில் நினைத்தபடி அவனை பார்த்து புன்னகைத்து, “ எனக்கு எப்படி தெரியும்னா, உனக்கு நல்லது மட்டும் தான் நடக்கும் க்ரிஷ், சரி இப்போ உன்னோட லவ் சொல்லு “ என்று சொல்லி மைரா தனது உற்சாகம் பதற்றம் அனைத்தையும் மறைத்துக் கொண்டு ஆவலுடன் இருந்தாள்.

“ நான் லவ் பண்றேன்னு உறுதியா நம்புறியா ? “ என்று க்ரிஷ் ஆச்சரியத்துடன் கேட்டதும், “ உன் கண்ணுல என்னால பார்க்க முடியுது க்ரிஷ். என்ன விட உன்ன பத்தி யாருக்கு தெரியும் ? நாம 19 வருஷமா ஒன்னா இருக்கோம் “ என்று சொன்னாள் மைரா.

க்ரிஷ் அவனது வெட்கத்தை மறைக்க அவன் கழுத்தை தேய்க்க, மைராவும் அதே போல் வெட்கப்பட்டு தன் தலைமுடியை காதுக்குப் பின்னால் ஒதுக்கினாள்.

“ இப்போவாச்சும் சொல்றியா ? நீ சொல்லுவனு நானும் ரொம்ப வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் க்ரிஷ் “ என்று மெல்லிய குரலில் மைரா கூறினாள்.

க்ரிஷ் பதில் சொல்வதற்குள் அவனது மொபைலில் ஒரு மெசேஜ் அறிவிப்பு ஒலித்தது. க்ரிஷ் அதை படித்ததும் எரிச்சலில் முனகினான்.

“ என் மேனேஜர் கிட்ட இருந்து மெசேஜ் வந்துருக்கு. இப்போ ஒரு மணி நேரத்துல எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதனால நாம கிளம்பலாம். இன்னொரு நாள் இத பத்தி பேசுவோம் “ என்று க்ரிஷ் கூறியதும், மைராவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் சரி என்று சொன்னாள். உடனே இருவரும் வீடு திரும்பினார்கள்.

மறுநாள் காலை மைரா பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வசுந்தரா அவள் அருகில் அமர்ந்து, “ மைரா, க்ரிஷ் ப்ரொபோஸ் செய்தானா இல்ல உங்க எதிர்காலத்த பத்தி ஏதாவது பேசினீங்களா ? “ என்ற கேட்டார்.

“ அவன் லவ் பண்றதா சொன்னான் ஆனா நாங்க அதுக்கு மேல பேசுறதுக்குள்ள அவனுக்கு மீட்டிங் இருக்கு சொல்லி மெசேஜ் வந்துச்சு. அவன் இன்னொரு நாள் பேசலாம் சொல்லிட்டான் “ என்று மைரா கவலையுடன் சொன்னாள்.

மைராவின் வார்த்தையை கேட்டதும், “ எனக்கு இப்போ ரொம்ப  கவலையா இருக்கு மைரா. வாழ்நாள் முழுக்க அவன மட்டும் நெனச்சுட்டு நீ வாழ்ந்துட்டு இருக்க. அவன் ஏன் இன்னும் லேட் பண்றான் ? எனக்கு பயமா இருக்கு “ என்று வருத்தம் கொண்டார்.

“ அம்மா, இப்போதைக்கு அவன் லவ் பண்றத ஒத்துகிட்டான் அதனால இனி லேட் பண்ண மாட்டான், சீக்கிரம் சொல்லிடுவான். நான் ஆபீஸ் கிளம்பிட்டனா பார்த்துட்டு வரேன் “ என்று மைரா சொன்னதும், “ நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றவங்க மாதிரி வாழுறீங்க ஆனா இன்னும் லவ் சொல்லல. மைரா நீயே ஏன் ப்ரொபோஸ் பண்ணக் கூடாது ? “ என்று வசுந்தரா கேட்டார்.

மைரா ஒன்றும் பேசாமல் அர்ச்சனாவின் வீட்டை நோக்கி நடந்தாள். க்ரிஷ் காலை உணவை வாயில் திணித்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.

“ மைரா, அவன் கூடவே ப்ரேக்பாஸ்ட் சாப்பிடு “ என்று அர்ச்சனா சொல்ல, “ இல்ல அத்த நான் அப்புறம் சாப்பிடுறேன் “ என்று கூறினாள் மைரா.

க்ரிஷ் கெஞ்சும் பார்வையுடன் டையை அவளிடம் நீட்ட, அவள் அதை அவனிடமிருந்து பிடுங்கி கட்ட ஆரம்பித்தாள். அர்ச்சனா தன் வேலையை நிறுத்திவிட்டு புன்னகையுடன் அவர்களைப் பார்த்தாள்.

“ முட்டாள், அவள எல்லா வேலையும் செய்ய வைக்கிறான் ஆனா லவ் மட்டும் சொல்ல மாட்டான். கடவுளே ! யார் கண்ணும் இவங்க மேல படக்கூடாது. அவங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கணும் “ என்று அர்ச்சனா மனதில் நினைத்தார்.

க்ரிஷ் தட்டை கீழே வைத்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரை குடித்த போது அவனுக்கு புரை ஏறியது, உடனே மைரா அவன் தலையைத் தட்டி, “ இந்த மாதிரி அவசரப்படறதுக்கு பதிலா கொஞ்சம் சீக்கிரம் ரெடியா இருக்கக் கூடாதா க்ரிஷ்? “ என்று கேட்டாள்.

“ நீ நிரந்தரமா இங்க வந்து, அவன் சீக்கிரம் எழுந்திருக்காம இருந்தா அவன அடிக்கலாம். நீங்க ரெண்டு பேரும் ரெண்டு வீட்டுக்கும் நடுவுல ஓடுறதைப் பார்த்து நாங்க கூட அலுத்துப் போயிருக்கோம். க்ரிஷ் என்ன சொல்ற ? “ என்று அர்ச்சனா கேட்க, “ ஏன் மா என் அனுமதி கேட்குறீங்க ? மைரா நம்ம குடும்பம் “ என்றான் க்ரிஷ்.

கிரிஷ் மைராவைக் கட்டிப்பிடித்துவிட்டு தனது எக்ஸிகியூட்டிவ் பையுடன் வெளியே விரைந்தான். அர்ச்சனா மைராவை இழுத்து உட்கார வைத்து காலை உணவை பரிமாறினார்.

“ மைரா, நான் சொல்றத கவனமா கேளு. க்ரிஷ் என் மகன் தான்  ஆனா நான் உன்ன என் சொந்த மகளா தான் நடத்துறேன். என்ன நடந்தாலும் என் பொண்ணு கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. என் வார்த்தைய கொஞ்சம் சீரியஸா கேளு. நீ அவனுக்கு எதுவும் செய்யாத. அவன் என்ன செய்றான்னு அவனுக்கு புரியணும். வாழ்க்கையில எல்லாமே சுலபமா கிடைக்காதுன்னு அவன் உணரனும். உன்னையும், உன்னோட அன்பையும் மதிக்கனும்.  அவன் உன்ன ஒரு பொருட்டா எடுத்துக்க விடாத. சுயமரியாத ரொம்ப முக்கியம் மைரா. உன்னோட சுயமரியாதைய விட்டுக்கொடுக்காத “ என்று அர்ச்சனா சொன்னதையெல்லாம் கேட்டு மைரா புன்னகைத்தாள்.

“ நீங்களும், அம்மாவும் என் மேல வெச்சுருக்க அக்கறை எனக்கு புரியுது ஆனா எங்க நட்புல நாங்க எப்பவும் ஈகோ காட்டுனது இல்ல. நான் அவன லவ் பண்றேன் தான் ஆனா அதையும் தாண்டி நாங்க 19 வருஷ அழகான நட்ப பகிர்ந்துக்குறோம், அதை நான் கெடுக்க விரும்பல “ என்று மைரா கூறினாள். அதற்கு அர்ச்சனா, “ நான் உன்ன அவன் கூட சண்ட போடவோ இல்ல அவன காயப்படுத்தவோ சொல்லல. அவன் உன்னோட மதிப்ப உணர்ற மாதிரி கொஞ்சம் விட்டுபுடி சொல்றேன். “ என்று அவளிடம் சொன்னார்.

“ இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா? “ என்று மைரா கேட்க, “ க்ரிஷ்னு மட்டும் சொல்லாத. அவன் தான் நம்பர் ஒன் இடியட்.” என்றார் அர்ச்சனா.

“ நிச்சயமா அவன் அதிர்ஷ்டசாலி தான், ஆனா நான் இந்த உலகத்துலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலி. என் அன்பான மாமியார் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. உங்க சொந்த மகன் எனக்கு பிரச்சன கொடுத்தா அவன நல்ல உதைப்பீங்கனு எனக்குத் தெரியும் “ என்றாள் மைரா ஒரு மெல்லிய குறும்பு புன்னகையோடு.

மைரா தன்னை மாமியார் என்று சொன்னதை கேட்டதும், “ ஆஹா, இப்போ நான் உன் மாமியார்னு நீயே அதிகாரப்பூர்வமா சொல்லிட்ட அப்போ நான் ஒரு மாமியாரா என் வேலைய செய்யணும் தானே ? “ என்று கேட்டார் அதற்கு மைரா தலை வணங்கி, “ உங்கள் மருமக உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கேன் மாமியாரே “ என்று சொன்னாள். அதற்கு அர்ச்சனா உடனே கால் மேல் கால் போட்டு, “ இங்க பாரு, நான் சொல்றத கேளு, இனி என் பையன் பின்னாடி போறத நிறுத்து. அவன் உன் அருமைய தெரிஞ்சி வரட்டும். ஒரு நாய்க்குட்டி வாலை ஆட்டுற மாதிரி அவன் உன் பின்னால வரவரைக்கும் அவனுக்கு போன் பண்ணாத, அவனுக்காக எதுவும் செய்யாத “ என்று கூறினார் அப்போது மைராவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது.

மைரா தன் மொபைலின் திரையை அர்ச்சனாவிடம் காட்டியதும் அதில் க்ரிஷின் பெயரை அவர் பார்த்துவிட்டு தனது நாற்காலியில் சாய்ந்து முகத்தை சுளித்தார் அர்ச்சனா. மைரா அழைப்புக்கு பதில் சொல்லி அவனிடம் பேசிய பிறகு அழைப்பை துண்டித்து அர்ச்சனா பக்கம் தன் கவனத்தைத் திருப்பினாள்.

“அவனால என்ன விட்டு விலகி இருக்க முடியாது அத்த. அவன்  வீட்டை விட்டு கிளம்பி 30 நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள போன் பண்ணிட்டான் “ என்று மைரா சொன்னதும், “ இப்போ எதுக்கு போன் பண்ணான் ? “ என்று கேட்டார் அர்ச்சனா.

“ வீட்டு அலங்கார பொருள், டிரஸ், அப்புறம் கைவினை நகைகளுக்கான கண்காட்சி நடக்க போகுதாம். இந்த ஞாயிற்றுக்கிழமை என்னை அங்க கூட்டிட்டு போறதா சொன்னான் அதனால நைனா கூட பிளான் எதுவும் போட வேணாம்னு சொன்னான் “ என்று மைரா கூறினாள்.

“ என்ன இருந்தாலும் லவ் ப்ரொபோஸ் பண்ண அப்புறம் இதெல்லாம் பண்ணக் கூடாதா ? “ என்று அர்ச்சனா கவலையுடன் கேட்க, “அவன் செய்வான் அத்த. இப்போ கவலைப்படுறத நிறுத்துங்க, நான் உங்கள சந்திக்க அப்புறம் வரேன் “ என்று சொல்லி வீட்டுக்கு திரும்பினாள் மைரா.

மாலையில் நைனா மைராவின் வீட்டை அடைந்ததும் இருவரும் படுக்கையில் அமர்ந்து திரைப்படம் பார்த்தனர்.

“ மைரா, இந்த ஞாயிற்றுக்கிழம நம்ம கூட படிச்ச பொண்ணுக்கு கல்யாணம். நாம போகலாம் “ என்று நைனா சொல்ல, “ சரி, ஆனா க்ரிஷ் என்ன ஒரு கண்காட்சிக்கு கூட்டிட்டு போறான் அதனால நான் கல்யாண மண்டபத்துல இருந்து என்னை பிக்-அப் பண்ணச் சொல்றேன். கல்யாணத்துக்கு அப்புறம் நீ தனியா வீட்டுக்கு போறதுல எந்த பிரச்சனையும் இல்லையே ? “ என்று மைரா கேட்க, “ நிச்சயமா என்னால தனியா போக முடியும். எனக்கு போட்டியா க்ரிஷ் வந்தா என்னால ஜெயிக்க முடியுமா என்ன ? அப்புறம் முக்கியமான விஷயம், ஞாயிற்றுக்கிழம நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணிடு. தயவு செஞ்சு இதுக்கு மேல லேட் பண்ணாத. நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ வருஷம் இழுத்தடிக்குறதே எனக்கு விசித்திரமா இருக்கு. நீ இன்னும் சின்ன பொண்ணு இல்ல மைரா “ என்று நைனா சொன்னதும் மைரா பெருமூச்சு விட்டாள்.

“ உங்க எல்லாரோட கவலையும் எனக்கு புரியுது. நான் முயற்சி செய்றேன் நைனா ஆனா அவன் கிட்ட சொல்ல நினைக்கும் பொது வார்த்தை எல்லாம் என் தொண்டைய விட்டு வர மாட்டேங்குது “ என்று மைரா சொன்னதும், “ இதுக்கு பேரு தான் அழகுல மயங்கி போறதா ? “ என்று நைனா கிண்டல் செய்தாள்.

நைனா சொன்ன வார்த்தையை கேட்டதும், “ வாயை மூடு நைனா.  அவன் அழகா இருக்குறதால நான் அவன லவ் பண்ணல. அவன் என் மேல காட்டுற உண்மையான கவனிப்பு, அக்கறைய பார்த்து தான் லவ் பண்ணேன். நான் கஷ்டத்துல இருக்கும் போதெல்லாம் அவன் என்ன காப்பாத்துற விதம், என்ன கிண்டல் பண்ணவங்க கூட அவன் சண்டப் போட்டது, என் பிறந்தநாளுக்கு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பரிசு கொடுக்குறது இது எல்லாம் தான் எனக்கு புடிச்சுது. அவன் உண்மையிலேயே என் மேல அக்கறை காட்டுறான் அது தான் அவன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சுது “ என்று மைரா உருக்கமாக சொன்னாள்.

ஒரு கணம் அமைதியாக இருந்த நைனா பின்னர், “ வேற யாராவது இத பண்ணி இருந்தா என்ன செய்வ ? நீ யார லவ் பண்ணி இருப்ப, க்ரிஷையா இல்ல அந்த ஆளையா ? “ என்று நைனா கேட்டதும், மைரா கொஞ்சம் கூட யோசிக்காமல்,” நிச்சயமா நான் அந்த ஆள தான் லவ் பண்ணி இருப்பேன். இது அந்த பரிசுகள மட்டும் வெச்சு சொல்லல, அதுல இருக்க அளவு கடந்த அன்பு, காதல் எனக்கு தெரியுது. நான் உங்க யாருக்கும் பெரும்பாலான பரிசுகள காட்டினது இல்ல. அதுல பெரும்பாலான பரிசு எல்லாமே கையால செஞ்சது, எனக்கு ரொம்ப ஸ்பெஷல். க்ரிஷ் எப்பவும் என்னோட பெஸ்ட் friend தான். அவனே என்ன அதிகா லவ் பண்றது கடவுள் எனக்கு கொடுத்த ஆசீர்வாதம். அவன் நிச்சயம் என் மனச காயப்படுத்த மாட்டான் “ என்று மைரா உருக்கமாக வெளிப்படையாக சொன்னாள். 

“ சரி, நான் ஒத்துக்குறேன் ஆனா ப்ளீஸ் ப்ரொபோஸ் பண்ணிடு “ என்று நைனா சொல்ல மைரா சரி என்று தலை அசைத்தாள். அதன் பிறகு நைனா தன் வீட்டுக்குத் திரும்பினாள்.

சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கிருஷ் மைராவை மொட்டை மாடியில் இருப்பதை பார்த்து அவளிடம் சென்று அவள் அருகில் அமர்ந்து அவன் வாங்கி ஸ்நேக்ஸ் பையை வைத்து, ‘ இந்தா உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வந்தேன் மைரா. சூடா இருக்கும் போதே சாப்பிடலாம் “ என்று சொன்னான்.

“ நீ இப்படி சாப்பிட வாங்கி கொடுத்துட்டே இருந்தா நான் குண்டா ஆயிடுவேன் அப்புறம் எல்லாரும் என்ன கிண்டல் பண்ணுவாங்க “ என்று மைரா சொன்னதும், “ நீ குண்டா இல்ல மைரா, மத்தவங்க சொல்றத கேட்டு கவலைப்படாத. அவங்க வார்த்தையை கேட்டு ஒழுங்கா சாப்பிடுறத நிறுத்திடாத சொல்லிட்டேன் “ என்று அவளை எச்சரித்தான்.

அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவன் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. க்ரிஷ் விலகி சென்று அழைப்பை பேசிவிட்டு சில நிமிடங்கள் கழித்து எரிச்சலான மனநிலையுடன் திரும்பி வந்தான்.

“ என்ன ஆச்சு ? “ என்று மைரா கேட்க, “ என்னை மன்னிச்சிடு மைரா. என் மேனேஜர் கிட்ட இருந்து தான் போன் வந்துச்சு. நாளைக்கு நான் ஹைதராபாத் போகணும் “ என்று சொன்னான் க்ரிஷ்.

அவன் கிளம்பப் போகிறான் என்று மீண்டும் ஏமாற்றமடைந்த மைரா வலுக்கட்டாயமாக புன்னகைத்து, “ பரவாயில்ல க்ரிஷ், இது உன்னோட வேலை, உன்னால அத தவிர்க்க முடியாது “ என்று கூறினாள்.

“ நாளைக்கு நடக்க போற கண்காட்சிக்கு உன்ன கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன் “ என்று க்ரிஷ் வருத்தத்துடன் சொல்ல, “ கண்காட்சி 2 வாரம் நடக்கும். நீ திரும்பி வந்ததும் என்ன கூட்டிட்டு போ. இப்போ போய் நீ கிளம்ப பொருட்கள பேக் பண்ணு “ என்றாள் மைரா.

“ ரொம்ப நன்றி மைரா. நான் உன் கிட்ட பேச வேண்டிய முக்கியமான விஷயம் இருக்கு. நான்  திரும்பி வந்ததும் பேசுவோம் “ என்று க்ரிஷ் சொல்ல, “ இந்த முறையாவது நீ என்ன ஏமாத்த மாட்டனு நம்புறேன் க்ரிஷ் “ என்று மனதில் நினைத்துக் கொண்டு, “ நிச்சயமா நாம பேசுவோம். “ என்று சொல்லி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

க்ரிஷ் சாமான்களை பேக் செய்ய தன் அறைக்கு சென்றான். மைரா தனிமையை வெளிப்படுத்தும் நிலவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

*****************

முன்னோட்டம்:

“ ரோஷினி, என் வாழ்க்கையில நீ எனக்கு வேணும், நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு சொல்ல வார்த்தையே இல்ல. நான் உன்ன எப்பவும், கடைசி வரைக்கும் லவ் பண்ணுவேன். என்ன கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா ?

 

You may also like

2 comments

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!