Home Family7. நீ தான் என் மருமகள்

7. நீ தான் என் மருமகள்

by Siragugal Novels
45 views

ஒரு வாரமாக க்ரிஷ் இல்லாமல் மைரா எப்போதும் வருத்தமாக இருப்பதை வசுந்தரா கவனித்தார். அவனது அழைப்புகள் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும் அவனோடு தொடர்ச்சியாக பேசும் நேரம், அவன் கொடுக்கும் அணைப்புகள் மற்றும் முத்தங்களை அவள் தவறவிட்டாள். வசுந்த்ரா அவளை சமாதானப்படுத்த முயன்றார் ஆனால் மைரா தனது உணர்வுகளை அனைவரிடமும்  மறைத்து, பெற்றோரை காயப்படுத்த விரும்பாததால் சிரித்து கவலையின்றி இருப்பதை போல நடித்தாள்.

வசுந்த்ராவும் ராஜனும் மிகவும் கவலையடைந்தனர், ஒருமுறை அவர்கள் க்ரிஷுடன் பேச முடிவு செய்தனர், ஆனால் மைரா சரியான நேரத்தில் விஷயங்கள் நடக்கும் என்று அவர்களைத் தடுத்தாள்.

க்ரிஷ் கூட திருமணத்திற்கு தயாராக இல்லை அல்லது அதைப் பற்றி பேசக்கூட தயாராக இல்லை என்று அர்ச்சனா மிகவும் வருத்தப்பட்டார். கேஷவின் திருமணத்தில் நம்பிக்கை இழந்தவர், மைராவை கிரிஷ் திருமணம் செய்து கொள்வான் என்ற நம்பிகையும் படிப்படியாக இழந்து அவனைப் பற்றியும் பயப்பட ஆரம்பித்தார்.

மைரா சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட வசுந்த்ரா, தேநீர்க் கோப்பையை டீப்பாயில் வைத்து அவளருகில் அமர்ந்தார். அம்மாவைப் பார்த்ததும், மைரா புன்னகைத்து, தான் நன்றாக இருப்பதாக போலியாக நடிக்க முயன்றாள், ஆனால் அவளுடைய அம்மாவால் அவளது முகப்பின் வழியாக பார்க்க முடிந்தது.

“ மைரா, அவனுக்காக நீ ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்கனு உனக்கு தோணலையா ? எனக்கு பயமா இருக்கு மைரா “ என்று வசுந்தரா சொன்னதும், “ ஹ்ம்ம், எனக்கு புரியுது மா, ஆனா அவன்  வேலையில செட்டில் ஆன அப்புறம் சொல்லுவான்னு நெனச்சேன். ஒருவேள அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறதால டென்ஷனா இருக்கான் போல “ என்று மைரா தனக்குத்தானே சமாதனம் செய்து கொண்டு சொன்னாள்.

“ வேற வேற ஊர்ல இருந்து லவ் பண்றவங்க, கல்யாணத்துக்கு அப்புறம் வேலை விஷயமா வெளிநாடு போறவங்களும் இருக்காங்க மைரா அதனால அவனோட வேலை ஒரு பிரச்சனையா இருக்கும்னு எனக்கு தோணல. நாங்க நீ நல்லா இருக்கணும்னு மட்டும் தான் விரும்புறோம் மைரா. நான் அர்ச்சனாகிட்ட பேசினேன், அவளும் நீ முதல்ல ப்ரொபோஸ் பண்றது தான் நல்லதுன்னு நினைக்குறா. ஒரு பொண்ணு லவ் சொல்றதுல எந்த தப்பும் இல்ல அதனால நீயே ஏன் ப்ரொபோஸ் பண்ண கூடாது ? “ என்று வசுந்தாரா கேட்டதும், “ நான் சொல்லனும்னு நினைக்குறீங்களா ? “ என்பர் கேட்டாள் மைரா.

“கண்டிப்பா நீ பண்ணு மைரா” என்று சொன்னபடி கையில் கிண்ணத்துடன் உள்ளே நுழைந்த அர்ச்சனா, “ அடுத்த வாரம் க்ரிஷுக்கு 25வது பிறந்தநாள். நான் மாமாகிட்ட பேசி ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு பண்ண சொல்றேன். அன்னைக்கு நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணு. நீ மட்டும் இல்ல நாங்க எல்லாருமே ரொம்ப வருஷம் வெயிட் பண்ணிட்டோம். இப்போலாம் உன் முகத்துல இருக்க கவலைய பார்த்து எங்களுக்கு கஷ்டமா இருக்கு. கொஞ்ச நாளா எங்களுக்கு ஏதோ பயமா இருக்கு. நீங்க உடனே கல்யாணம் பண்ண வேணாம், நாங்க உங்கள வற்புறுத்தமாட்டோம் ஆனா லவ் ப்ரொபோஸ் பண்ணிடுங்க அப்போ நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம் “ என்று கூறினார்.

அவள் மட்டும் அல்ல அவளை சுற்றி இருக்கும் அனைவரும் கவலைப்படுவதை உணர்ந்து, “ சரி, நான் செய்றேன். எனக்கு இப்போவே பதற்றமா இருக்கு, அன்னைக்கு என்ன செய்வேன் ? “ என்று கேட்டாள் மைரா. அதற்கு அர்ச்சனா, “ கவலைப்பட வேணாம்,  நாங்க உனக்கு உதவி செய்வோம். அவன் உன்னோட க்ரிஷ் தானே, உனக்கு தெரியாத ஆள் ஒன்னும் இல்லையே ? ரெண்டு பேரும் உங்க வாழ்க்கைய ஒன்னா வாழ்ந்திருக்கீங்க “ என்று தைரியம் சொன்னார்.

“ நீங்க ரெண்டு பேரும் சூப்பர், என் அம்மா ரெண்டு பேரும் என் மேல இப்படி உயிரையே வெச்சுருக்காங்கனு தெரிஞ்சா எல்லாரும் பொறமைப்படுவாங்க. நீங்க கெடச்சுதுக்கு நான் ரொம்ப  அதிர்ஷ்டசாலி “ என்று சொல்லி மைரா இருவரையும் அனைத்துக் கொண்டாள்.

“ உன்ன அதிகாரப்பூர்வமா எல்லார் முன்னாடியும் என்னோட பொண்ணுனு சொல்ல நான் காத்துட்டு இருக்கேன். நான் உன்ன கூட்டிட்டு போய் என் கூட வீட்ல பூட்டி வெச்சுடுவேன். உன்னால தாங்க முடியலனா கூட உனக்கு அவ்ளோ அன்பு கொடுப்பேன் “ என்று சொல்லி அர்ச்சனா அவள் கன்னத்தில் முத்தமிட்டார்.

அர்ச்சனாவின் அன்பை பார்த்து. “ ரொம்ப சந்தோஷமா இருக்கு அர்ச்சனா. மைராவுக்கு மாமியாருக்கு பதிலா ஒரு அம்மா கெடச்சு இருக்க. இப்போ நாம மைராவுக்கு ப்ரொபோஸ் பண்ண ஐடியா சொல்லி உதவி செய்வோம்” என்று சொன்ன வசுந்தரா பின்னர் மைராவை பார்த்து, “ மைரா நீ எங்கள ஒத்திகைக்கு பயன்படுத்தலாம் “ என்று கூறினார். 

மைரா அவர் கன்னத்தை கிள்ளி, “ நிச்சயமா, இதுல நைனாவும் உதவி செய்வா. அவ ரொம்ப வருஷமா என்ன மிரட்டிட்டு  இருக்கா. அதுவும் இப்போ என்ன திட்ட ஆரம்பிச்சு, என்ன பயந்தாங்கோலி சொன்னா. உங்க ரெண்டு பேரையும் போல அவளும் ரொம்ப பயப்படுறா, அதனால அடுத்த வாரம் உங்க எல்லாரோட கவலையும் தீர்த்துடுவோம் “ என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“ நல்லவேளை மைரா, இப்போவாச்சும் சம்மதம் சொல்லிட்ட. இந்த முடிவுல இருந்து மாறாத. க்ரிஷ் காலையில எனக்கு போன் பண்ணான். அவன் ஞாயிற்றுக்கிழம வீட்டுக்கு வருவான், திங்கட்கிழம நீ அவனுக்கு ப்ரொபோஸ் பண்ண ரெடியா இரு “ என்று அர்ச்சனா சொல்ல, மைரா கண்களில் கண்ணீருடன் அர்ச்சனாவையும் வசுந்தராவையும் கட்டித் தழுவினாள்.

அடுத்தடுத்த நாட்களில் மைரா க்ரிஷை ப்ரபோஸ் செய்ய தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள். பார்ட்டி ஏற்பாடு செய்யும் பொறுப்பை அவளே ஏற்றுக்கொண்டாள். அவனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஷாப்பிங் சென்று அவனுக்கு ஒரு மோதிரமும், ஆடையும் வாங்கினாள். அவள் தயாராகவும் பதட்டமாகவும் இருந்தாள், ஆனால் ப்ரொபோஸ் செய்ய உறுதியாக இருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை அன்று க்ரிஷ் வீடு திரும்புவதற்காக மைரா  காத்திருந்தாள். நள்ளிரவில் அவனுக்கு முதலில் வாழ்த்து சொல்ல விரும்பினாள், ஆனால் அவன் அன்றிரவு வீட்டிற்கு வரவில்லை, அவனிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. மைரா அவனது எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நீண்ட நேரம் விழித்திருந்தவள் அதிகாலையில் தூங்கிவிட்டாள்.

யாரோ அறைக்குள் நுழையும் சத்தம் கேட்டு அது க்ரிஷாக இருக்குமோ என்று சட்டென எழுந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக அவள் படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த க்ரிஷ் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“ ஸாரி மைரா, நேத்து ராத்திரி லேட்டா வந்துட்டேன். நீ எனக்கு வாழ்த்து சொல்ல வெயிட் பண்ணி இருப்பனு தெரியும் அதனால உன்ன சந்திக்க இங்க வந்தேன் “ என்று க்ரிஷ் சொன்னதும், மைரா உடனே அவனை அணைத்துக் கொண்டு, “ ஹேப்பி பர்த்டே க்ரிஷ். உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்று சொன்னாள்.

க்ரிஷ் அணைப்பிலிருந்து பின்வாங்கி ஒரு ஷாப்பிங் பையை அவளிடம் கொடுத்து, “ சாயங்காலம் பார்ட்டிக்கு இத போட்டு வா. உனக்கு மஞ்சள் கலர் புடிக்கும்னு எனக்கு தெரியும் அதனால உனக்கு இத வாங்கினேன் “ என்று சொன்னான்.

மைரா அதைத் திறந்து பார்த்த போது அதில் ஒரு மஞ்சள் குர்தியும் ஜீனும் இருந்தன. அவனை ப்ரபோஸ் செய்ய ஊதா நிற புடவையை அணிந்து கொள்ள அவள் திட்டமிட்டிருந்தாள், ஆனால் இப்போது தன் யோசனையை மாற்றி, அவன் கொடுத்த ஆடையை அணிந்து கொள்ள முடிவு செய்தாள்.

“ இது ரொம்ப அழகா இருக்கு க்ரிஷ், நானும் உனக்கும் ஒரு கிஃப்ட் வாங்கி வச்சிருக்கேன் “ என்று சொன்னவள் படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து அவனுக்காக உடையை வைத்த அலமாரியைத் திறந்தாள். அவனுக்கு ஆடை கொடுத்ததும் க்ரிஷ் அவளை கட்டிப்பிடித்து நன்றி சொன்னான்.

அவன் தன் கண்களைச் சந்திக்கத் தயங்குவதைக் கண்டவள் அவன் தோளைத் தொட்டு, “ என்ன ஆச்சு க்ரிஷ் ? “ என்று கேட்டாள்.

“ இன்னிக்கு ரொம்ப ஸ்பெஷல் நாள் மைரா. வாழ்க்கையில நான் விரும்பினது எல்லாமே எனக்கு கிடைச்சு இருக்கு அதே மாதிரி இன்னைக்கும் நடக்கும்னு நம்புறேன். நீ எப்பவும் எனக்கு அதிர்ஷ்ட தேவதையா இருந்துருக்க மைரா. இன்னைக்கு நான் செய்ய போற விஷயத்துக்கு எனக்கு வாழ்த்து சொல்லு “ என்று க்ரிஷ் பதற்றம் மற்றும் ஆர்வம் கலந்த குரலில் கேட்டான்.

மைரா தன் இதயம் விலா எலும்புக் கூட்டில் மோதுவதை போல உணர்ந்து அவன் வார்த்தைகளைக் கேட்டு விழுங்கினாள். அவன் சொன்னதைக் கேட்டு மைராவின் இதயம் தடுமாறியது.

“ க்ரிஷ் என்ன ப்ரொபோஸ் பண்றத பத்து சொல்றானா ? கடவுளே, என் ஹார்ட் தொண்டையில வந்து அடைச்சுக்கும் போல. க்ரிஷ் என்ன எப்பவும் கிஸ் பண்ணுவான் ஆனா ரொம்ப மாசமா கிஸ் பண்ணவே இல்லயே, ஒருவேள வெட்கப்படுறானோ ? “ என்றெல்லாம் மனதில் நினைத்தவள் பின்னர் அவனை பார்த்து, “ வாழ்த்துக்கள் க்ரிஷ், உனக்கு எல்லாத்துலையும் வெற்றி கிடைக்கும். உன் வாழ்க்கையில னே விரும்புற எல்லாமே உனக்கு கிடைக்கும், நான் எப்பவுமே உன் கூட இருப்பேன் “ என்று சொன்னாள் மைரா.

அவள் வார்த்தையை கேட்டு, “ ரொம்ப நன்றி மைரா. நான் ஒரு வேலையா வெளிய போறேன். நீ லேட் பண்ணாம சீக்கிரம் வா. நீ தான் முதல் ஆளா பார்ட்டியில இருக்கணும் “ என்று சொல்லிவிட்டு க்ரிஷ் அங்கிருந்து கிளம்பினான். மைரா துள்ளிக் குதித்து உற்சாகத்தில் கத்தும் சத்தம் கேட்டு வந்த வசுந்தரா தன் மகள் அறையை அலங்கோலம் செய்திருப்பதை பார்த்தார்.

“ ஏய், நீ இன்னும் ப்ரொபோஸ் பண்ணல, அதுக்குள்ள ரூம இப்படி பண்ணி வெச்சுருக்க ? “ என்று வசுந்தரா கேட்க, “ அம்மா, க்ரிஷ் என்னை ப்ரபோஸ் பண்ணப் போறான்னு நினைக்கிறேன். என்ன சீக்கிரம் வர சொல்லி இருக்கான். அது மட்டும் இல்ல, அவன் வாழ்க்கையோட முக்கியமான விஷயத்த பண்ண போறதா சொன்னான் “ என்று மைரா சொன்னதும் வசுந்த்ரா அவளை கட்டிப்பிடித்துக் கொண்டார் பின்னர் இருவரும் உடனடியாக அர்ச்சனாவை அழைத்து அவரிடம் விஷயத்தை தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அர்ச்சனா மைராவின் வீட்டிற்கு வந்து வசுந்தராவையும் மைராவையும் கட்டிப்பிடித்தார்.

“ என்ன ஆச்சு அத்தை? “ என்று மைரா கேட்டதும், “ மைரா, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உன்ன சந்திச்ச அப்புறம் க்ரிஷ் ரொம்ப பதட்டமா இருந்தான். நான் அவனையே பார்த்துட்டு  இருந்தேன். அவன் வெளியே கிளம்பி போனதும் உன் மாமாவ அவன் பின்னாடி போக சொன்னேன். என்ன ஆச்சு தெரியுமா ? அவன் நகைக் கடைக்குள்ள போறத உன் மாமா பார்த்துட்டாரு “ என்று அர்ச்சனா உற்சாகமாக சொன்னார்.

“ நகைக் கடையா? “ என்று வசுந்தாரா குழப்பத்துடன் கேட்க, 

“ ஆமா, க்ரிஷ் கடைய விட்டு வெளிய வந்ததும் மதன் உள்ள மேனேஜர் கிட்ட போய் அவன் என்ன வாங்கினான்னு விசாரிச்ச அப்போ அவன் மோதிரம் வாங்கி இருக்கான்னு தெரிஞ்சுது “ என்று அர்ச்சனா சொன்னதும் மைரா அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் வாயை மூடி கொண்டாள்.

“ அத்தை, என் பர்த்டே டேக்கு அவன் வாங்கி கொடுத்த அந்த ஊதா கலர் புடவைய கட்டலாம்னு நெனச்சேன் ஆனா அவன் எனக்கு ஒரு குர்தியும், ஜீனும் வாங்கிட்டு வந்துருருக்கான் “ என்று மைரா சொன்னதும், “ புடவை இல்ல குர்தி எதுவா இருந்தா என்ன ? அது முக்கியம் இல்ல. இப்போ சாயங்காலம் பார்ட்டி வர வெயிட் பண்ணனும் “ என்று அர்ச்சனா சொன்ன போது, மதனிடம் இருந்து  அழைப்பு வந்தது. அவர் உடனே அதற்கு பதில் அளித்தார் ஆனால் மதனின் பேச்சைக் கேட்டதும் முகம் சுளித்தார்.

“ என்ன ஆச்சு ? “ என்று வசுந்தரா கேட்க, “ என் அண்ணா, அவர் மனைவி அப்புறம் ரோஷினி வந்துருக்காங்க. நான் அவங்கள கூப்பிடவே இல்ல அப்படி இருக்கும் போது இன்னைக்கு ஏன் வந்துருக்காங்க தெரியல “ என்று அர்ச்சனா எரிச்சலுடன் கூறினார்.     

“ அவ உங்க அண்ணனோட பொண்ணு இருந்தாலும் சொல்றேன், எனக்கு அவள புடிக்கவே இல்ல. ரெண்டு வருஷமா அவள பார்க்கா நிம்மதியா இருந்துச்சு. இன்னைக்கு ஏன் வரணும் ? “ என்று மைரா முகம் சுளித்தாள். அதற்கு அர்ச்சனா அவள் கையை பிடித்து, “அவள பொருட்படுத்தாத, அவ என் அண்ணன் பொண்ணு தான் ஆனா சில நேரம் அவ செய்றது கடுப்பா இருக்கு. என் அண்ணனுக்காக பொறுத்துக்குறேன். என் அண்ணன் நல்லவரு “ என்று கூறினார்.

“ எதுவா இருந்தாலும் க்ரிஷ் என்னை ப்ரொபோஸ் பண்ற வரைக்கும் அவள என் கிட்ட இருந்து தள்ளி வைங்க “ என்று மைரா சொல்ல, “ நல்லா தூங்கி எழுந்து அழகா ரெடியாகு என் அன்பு மருமகளே “ என்றார் அர்ச்சனா.

“ எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல அத்தை “ மைரா வெட்கப்த்துடன் சொல்ல, “ சத்தியமா சொல்றேன் மைரா, நீ தான் என் மருமகள். இது நடக்கனும்னு நான் பல வருஷமா ஆசைப்பட்டுருக்கேன். எனக்கு கடவுள் மேல நம்பிக்க இருக்கு, அவர் என்ன கைவிட மாட்டாரு. நீ என் மருமகளா இருப்ப, இதுல எந்த மாற்றமும் இல்ல. நான் இப்ப கிளம்பறேன், மத்த வேலைய பத்தி நீ கவலைப்படாத. உன் மாமா, ராஜன் அண்ணா பார்த்துக்குவாங்க “ என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவும், வசுந்தராவும் புறப்பட்டு சென்றதும், மைரா உற்சாகமாக படுக்கையில் படுத்தாள்.

வசுந்த்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் தங்கள் கணவருடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர், அனைவரும் இறுதியாக அந்த நேரத்திற்காக காத்திருந்தனர். மாலையில் அனைவரும் உடை மாற்றிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்ற போது எல்லாம் தயார் நிலையில் இருந்தது. மைரா கிருஷ் கொடுத்த உடையில் தயாராகி மொட்டை மாடியை அடைந்து கேக்கை மேஜை மீது வைத்துவிட்டு எல்லோரிடமும் ஒரு புன்னகையை பரிமாறினாள், ஆனால் ரோஷினி ஒரு அழகான சேலை அணிந்து அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவளது புன்னகை கட்டாயமாக மாறியது. அவள் மிகவும் நேர்த்தியாக இருந்தாள், மைரா ஒரு ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்து மிகவும் சாதாரணமாக இருந்தாள்.

அங்கு வந்த அர்ச்சனாவும், வசுந்தராவும் மைராவின் கையை அழுத்தி அவளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

“ கேக் வெட்டினதும் ப்ரொபோஸ் பண்ணிடு “ என்று அர்ச்சனா சொல்ல சரி என்றாள் மைரா.

“ மோதிரம் எங்க ?” என்று வசுந்தரா கேட்க, மைரா தன் ஜீன் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தைக் காட்டிவிட்டு மீண்டும் மேஜைக்கு சென்று மெழுகுவர்த்திகளை வைத்தாள்.

“ மைரா, போய் க்ரிஷை கூட்டிட்டு வா. எனக்கு ஏற்கனவே ரொம்ப பசிக்குது “ என்று மதன் சொல்ல, அவள் க்ரிஷின் அறைக்கு சென்றாள். அவன் மைரா பரிசளித்த உடையை அணிந்து கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரி செய்து கொண்டிருந்தான்.

“ இந்த சட்டையில் நீ ரொம்ப அழகா இருக்க க்ரிஷ். பார்ட்டிக்கு பொண்ணுங்க வர சொல்லி இருந்தா அவங்க எல்லாரும் மயங்கி விழுந்து இருப்பாங்க “ என்று சொல்லி கிண்டல் செய்தாள். அதற்கு அவன், “ ஆனா எனக்கு ஒரு பொண்ணு மேல மட்டும்தான் கண்ணு இருக்கு. நாம போகலாமா? என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு மைரா வெறுமனே தலையசைத்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மொட்டை மாடியை அடைந்தனர், அர்ச்சனா அவளைப் பார்த்து கண்ணடித்ததும் மைரா வெட்கப்பட்டாள்.

“ க்ரிஷ் சீக்கிரம் கேக் வெட்டு, நீ ரெடியாகவே நிறைய நேரம் எடுத்துகிட்ட “ என்று மதன் சொல்ல க்ரிஷ் மைராவை நோக்கித் திரும்பி ஒரு பதட்டமான புன்னகையுடன் அவள் கைகளை அழுத்தினான்.

“ இன்னொரு முறை எனக்கு வாழ்த்து சொல்லு மைரா, ப்ளீஸ் “ என்று க்ரிஷ் கேட்டதும், “ நீ ஏன் க்ரிஷ் பதட்டப்படுற? நம்ம குடும்பம் மட்டும் தான் இங்க இருக்காங்க அப்புறம் ஏன் பதட்டமா இருக்க? நீ என்ன செய்ய போறியோ அத தாராளமா செய் ஆனா அதுக்கு முன்னாடி கேக் வெட்டு “ என்றாள் மைரா ஆனால் க்ரிஷ் மறுத்துவிட்டு, “ இல்ல, கேக் அப்புறம் வெட்டலாம் அதுக்கு முன்னாடி நான் ஒன்னும் செய்யணும் “ என்று கூறினான்.

மைரா உதட்டைக் கடித்துக் கொண்டு திடீரென்று வெட்கமும் பதட்டமும் அடைந்தாள். க்ரிஷ் அவள் கையை விடுவிக்க, அவன் அவளிடமிருந்து விலகி செல்வதை மைரா பார்த்தாள். அவன் மேலும் விலகிச் செல்வதைக் கண்டதும் அவள் முகம் சுளித்தாள், ரோஷினியின் முன் க்ரிஷ் நின்றதும் மைரா உறைந்து போனாள்.

அர்ச்சனாவும் வசுந்தராவும் இப்போது ரோஷினியின் கையைப் பிடித்திருந்த க்ரிஷையும், அவனை பார்த்துக் கொண்டிருந்த மைராவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அர்ச்சனா அவனை அழைக்க எத்தனிக்கையில், கையில் மோதிரத்துடன் ரோஷினியின் முன் க்ரிஷ் ஒற்றை மண்டியிட்டு உட்கார்ந்தபோது அவளது வார்த்தைகள் இறந்து போயின.

“ ரோஷினி, என் வாழ்க்கையில நீ எனக்கு வேணும், நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு சொல்ல வார்த்தையே இல்ல. நான் உன்ன கடைசி வரைக்கும் லவ் பண்ணுவேன். என்ன கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா ?

*****************

முன்னோட்டம்:

“ மைராவ நான் லவ் பண்றேனா ? என்ன உளறுறீங்க ? அவ என் பெஸ்ட் friend. நாங்க ஒன்னா வளர்ந்தோம். நான் மைராவ லவ் பண்ணுவேன்னு எப்படி நெனச்சீங்க ? நான் அவள அக்கறையா பார்த்துகிட்டேன், பாதுக்காத்தேன், அன்பா இருந்தேன் ஆனா அதுக்கு காரணம் அவ என் friend, அது மட்டும் தான் வேற எதுவும் இல்ல “

 

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 11:41 am

[…] நீ தான் என் மருமகள் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:50 pm

[…] 7.நீ தான் என் மருமகள் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!