Home Family15. அது எங்களோட பெர்சனல்

15. அது எங்களோட பெர்சனல்

by Siragugal Novels
29 views

அச்சனாவின் வீட்டில், கேஷவைத் தவிர மற்ற அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றி விவாதிக்க அமர்ந்திருந்தனர். அவர்கள் விவாதித்த அனைத்தையும் கேட்டு க்ரிஷ் அமைதியாக இருந்தான்.

மைராவையும் குடும்பத்தையும் அழைப்பது பற்றி எந்த விவாதமும் இல்லாதபோது, க்ரிஷ் தலையிட்டு, “ மைரா, அத்தை, மாமாவ  கூப்பிடலையா?” என்று கேட்டான் அதற்கு அர்ச்சனா உடனே, “ மைரா பிஸியா இருக்கா அதனால அவ வர மாட்டா. வசுவும், ராஜன் அண்ணாவும் அவள தனியா விட முடியாது, அதனால அவங்கள கல்யாணத்துக்கு கூப்பிடுவோம் “ என்று சொன்னார்.

“மைரா இல்லாம என் வாழ்க்கையில எதுவும் நடந்தது இல்ல, இப்போ நான் என் வாழ்க்கையோட முக்கியமான கட்டத்துல அடியெடுத்து வைக்க போறேன் அதனால அவ என் பக்கத்துல  இருக்கனும் “ என்று க்ரிஷ் சொன்னான். அப்போது குறுக்கிட்ட ரோஷினி, “ அவங்க இல்லாம இத பண்ண நினைக்குறாங்கனு  உனக்கு புரியலையா க்ரிஷ் ? உன் முகத்துல எந்த சந்தோஷமும் இல்ல, இந்த நிச்சயம் நடக்கனும்னு நீ உண்மையிலேயே விரும்புறியா ?” என்று கேட்டாள்.

அவர்களின் உரையாடலை கேட்டு, “ நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடு பத்தி இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் இது வேணுமானு யோசிக்குறீங்களா ? “ என்று மதன் கேட்டார். அதற்கு உடனே ரோஷினியின் அப்பா, “ நான் க்ரிஷ் கிட்ட பேசணும். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க “ என்று சொல்லி எழுந்து வீட்டை விட்டு வெளியேறினார், அவரை  பின்தொடர்ந்த க்ரிஷின் தோளில் கை போட்டார் ரோஷினியின் அப்பா.

“ க்ரிஷ், ரோஷினிய கல்யாணம் பண்ணிக்க சொல்லி நான் உன்கிட்ட வந்து கேட்டேனா ? நீங்க ரெண்டு பேரும் தான் வந்து லவ் பண்றதா சொன்னீங்க. நீயும் ரோஷினிய சந்திக்க மாசத்துக்கு ரெண்டு முறை எங்க வீட்டுக்கு வந்த. ரெண்டு வருஷமா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கீங்க, ரோஷினிய கல்யாணம் பண்ணிக்க ப்ரபோஸ் பண்ண என்கிட்ட பெர்மிஷன் கேட்டு வந்தது நீ தான். இவ்ளோ முடிவு நீங்க தான் எடுத்தீங்க அப்புறம் ஏன் ரோஷினி அடிக்கடி அழறத நான் ஏன் பார்க்குறேன்? “ என்று ரோஷினியின் அப்பா கேட்டதும், “ நான் ஒண்ணும் பண்ணல மாமா.  என் ப்ரெண்ட என்னோட நிச்சயத்துல இருக்கனும்னு நான் விரும்புறேன், வேற ஒன்னும் இல்ல “ என்று சொன்னான் க்ரிஷ்.

“ நீ உறவுகள சமநிலைப்படுத்த தெரிஞ்சிக்கணும் க்ரிஷ். மைரா உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட தான் ஆனா உன் வாழ்க்கைய பகிர்ந்துக்க ஒரு பொண்ணு வந்த அப்புறமும் நீங்க ரெண்டு பேரும் எல்லா நேரமும் ஒன்னா இருக்கனும்னு அர்த்தம் இல்ல. மைராவுக்கு ஒரு நாள் கல்யாணம் ஆகும், அப்போ நீ அவ கூடவே எப்பவும் இருக்க அவ புருஷன் அனுமதிப்பான்னு நினைக்கிறாயா? அப்போ உன்னோட கவனம் ரோஷினி மேல இருக்கணும்னு அவ நினைக்குறதுல என்ன தப்பு ? “ என்று ரோஷினியின் தந்தை கேட்டார். அவர் வார்த்தையை கேட்ட க்ரிஷ், “ நானும் மைராவும் 6 வயசுல இருந்து ஒன்னா இருக்கோம். அவ இல்லாம எதுவும் செய்றது ரொம்ப கஷ்டம் ஆனா அதுக்காக நான் ரோஷினிய காயப்படுத்த நினைக்குறேன்னு அர்த்தம் இல்ல “ என்று சொன்னான்.

“ க்ரிஷ் இப்போ நீ தான் முடிவு பண்ணணும். என் பொண்ணு இப்படி அடிக்கடி அழறத என்னால பார்க்க முடியாது, அதனால பின்னாடி வருத்தபடுறதுக்கு பதில் இப்போவே யோசிச்சு முடிவு எடுக்கலாம். என் பொண்ண என்னால சமாதானப்படுத்த முடியும் “ என்று ரோஷினியின் அப்பா உறுதியாக சொன்னதும், “ மாமா ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க. நான் ரோஷினி கிட்ட பேசுறேன், நாங்க நல்லா  இருப்போம். என் வார்த்தைய நீங்க நம்பலாம் “ என்று சொல்லி நம்பிக்கை அளித்தான்.

ரோஷினியின் அப்பா சரி என்று சொன்னதும் இருவரும் வீட்டுக்குள் நுழைய, அவர் ரோஷினியை பார்த்து புன்னகைத்தார். க்ரிஷ் ரோஷினியின் அருகில் அமர்ந்து அவள் கையை மென்மையாக பிடித்தான்.

“ நானும் ரோஷினியும் நாளைக்கு ஷாப்பிங் போய் எங்களுக்கு புடிச்ச மாதிரி மோதிரம், டிரஸ் வாங்குறோம் “ என்று க்ரிஷ் சொன்னத கேட்டு, “ நல்லது, பார்ட்டி ஹாலுக்கும் போய் உங்களுக்கு புடிச்ச மாதிரி டெக்கரேஷன் செலெக்ட் பண்ணுங்க. அது தவிர வேற எதாவது ஏற்பாடு செய்ய விரும்பினா எங்களுக்கு தெரியப்படுத்துங்க “ என்று சொன்னார் அர்ச்சனா.

“ பார்ட்டி ஹால் அப்புறம் கேட்டரிங் சர்வீஸை கேஷவ் ஏற்கனவே முன்பதிவு பண்ணிட்டான். நிச்சயத்துக்கு சொந்தக்கரங்கள கூப்பிடுறது, அப்புறம் ஷாப்பிங் இது ரெண்டு மட்டும் பண்ணா போதும் “ என்று மதன் சொன்னார்.

“ அத்தை நாம பெண்கள் எல்லாரும் ஒரே கலர் டிரஸ் அப்புறம் ஆண்கள் எல்லாரும் நம்ம டிரஸ் கலருக்கு ஏத்த மாதிரி ஒரே கலர்ல டிரஸ் போடட்டும். அப்புறம் பார்ட்டி ஹால் டெக்கரேஷன் எல்லாம் கோல்டன் அப்புறம் இளஞ்சிவப்பு கலர்ல ரெடி பண்ண சொல்லலாம் “ என்று ரோஷினி உற்சாகத்தோடு சொன்னதை கேட்ட அர்ச்சனா, “ உனக்கு எது வேணும்னாலும் பண்ணு ரோஷினி. என்ன கலர் சொல்லு நாம அதே கலர்ல டிரஸ் வாங்குவோம் “ என்று சொன்னார். அதற்கு ரோஷினி உடனே, “ கேஷவ் போடுவாரா ? “ என்று கேட்டாள்.

“ அவன் உன்ன விட மூத்தவன் ரோஷினி. அவன அண்ணா சொல்லி கூப்பிடு “ என்று சட்டென்று சொன்னார் அர்ச்சனா. ஆனால் அதற்கு ரோஷினியின் அம்மா உடனே,” மைரா கூட அவன கெட்சப்,  சில சமயம் அங்கிள் சொல்லி எல்லார் முன்னாடியும் கூப்பிடுறா. அவள எப்போவாச்சும் நிறுத்தி இருக்கியா ? “ என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.

“ ரோஷினி நம்ம வீட்டு பொண்ணு, நான் அவள நல்லா பாத்துக்குவேன், அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம் ஆனா அதே நேரம் மைரா என் சொந்த பொண்ணு மாதிரி, கேஷவ்  உட்பட எங்க எல்லாருக்கும் அவ ரொம்ப ஸ்பெஷல். கேஷவ் யார்கிட்டயும் பேசாம ஒதுங்கி இருப்பான் ஆனா மைராகிட்ட மட்டும் அப்படி இருக்க மாட்டான். நான் பசங்க யாரையும் ஒருத்தர் கூட ஒருத்தர ஒப்பிட மாட்டேன், நீங்களும் அதே மாதிரி இருந்தா நல்லா இருக்கும் அண்ணி. எல்லாருக்கும் நல்லது நடக்கனும்னு நான் எப்பவும் விரும்புவேன். ரோஷினி அவன பெயர் சொல்லி கூப்பிட  விரும்பினா அவள தடுக்க நான் யார் “ என்று அமைதியாக சொன்னார் அர்ச்சனா.

அவரின் வார்த்தையை கேட்டு யாரும் பதில் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தனர் ஆனால் ரோஷினி கண்களை உருட்டுவதை மதன் மட்டும் கவனித்தார். அனைவரும் உறங்க அவரவர் அறைக்கு செல்ல, க்ரிஷ் ரோஷினியின் அறைக்குள் பதுங்கி சென்றான். கட்டிலில் படுத்திருந்தவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு லைட்டை ஆன் செய்து க்ரிஷை பார்த்ததும் அவனுக்கு இடம் கொடுத்து நகர்ந்தாள், க்ரிஷ் அவளை அணைத்தபடி அவள் அருகில் படுத்தான்.

“ வருத்தமா இருக்கியா ரோஷினி ? ஸாரி, உன்ன கஷ்டப்படுத்துறது என் நோக்கம் இல்ல. ப்ளீஸ், புரிஞ்சிக்க “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ உன்ன என்னால நல்லா புரிஞ்சிக்க முடியுது ஆனா நீ யதார்த்தத்த எதிர்கொள்ள தயாரா இல்லனு தான் நான் கவலைப்படுறேன். நமக்கு கல்யாணம் ஆனதும் நாம ஒரு குடும்பமா இருப்போம் அப்போ  மைரா நம்ம குடும்பத்துல ஒருத்தியா இருக்க மாட்டா. அவளுக்கு தனியா ஒரு குடும்பம் இருக்கும் “ என்று சொன்ன ரோஷினி பின்னர் பெருமூச்சு விட்டு, “ அவ உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட தானே அப்போ ஏன் அவ அந்த வேலைய விட்டு நம்ம நிச்சயத்துக்கு வரக் கூடாது ? அவளுக்காக நம்ம சந்தோஷத்த விட்டுக் கொடுக்காத “ என்று சொன்னாள்.

“ நான் உன்னையோ, நம்ம சந்தோஷத்தையோ விட்டுக் கொடுக்கல. அவளோட வாழ்க்கையில முதல் வாய்ப்பு அவளுக்கு கெடச்சு இருக்கு அதனால அவளால வர முடியாதுனு என்னால புரிஞ்சிக்க முடியுது. அப்புறம் நீ வருத்தப்பட வேணாம். நானும் மைராவும் எப்பவும் ஒன்னா இருக்க முடியாதுனு யதார்த்தத்துக்கு வர முயற்சி பண்றேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ரோஷினி, ப்ளீஸ் “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ நான் உன் கூட எபப்வும் இருப்பேன் க்ரிஷ், ஐ லவ் யூ “ என்று சொல்லி குனிந்து அவர்கள் முத்தமிட ஆரம்பித்தனர்.

க்ரிஷ் தன் கையை அவளை சுற்றி வளைத்தான். இருவரும் முத்தத்தை ஆழப்படுத்தியதும் ஹார்மோன்கள் அவர்களை ஆசை தீயில் தள்ளியது. இருவரின் மேல் உடம்பில் இருந்த ஆடை மட்டும் அப்போது தரையில் விழுந்தன. க்ரிஷ் அவளது மேடுகளை சுவைத்து விழுங்கியதும் ரோஷினி முனகினாள். அவளது விரல் அவன் அணிந்திருந்த பேண்ட்டின் (pant ) இடுப்புப் பட்டையை வருடியதும், ஒரு மின்னல் அவனைத் தாக்கியது போல, அவன் அவளிடமிருந்து விலகி, தரையில் கிடந்த அவளது சட்டையை அவளிடம் கொடுத்தான்.

ரோஷினி பல்லைக் கடித்துக் கொண்டு சட்டை போட்டாள், க்ரிஷும் டி ஷர்ட் அணிந்தான்.

“ ஏன் இப்படி பண்ற க்ரிஷ்? நான் இப்போ உன் வருங்கால மனைவி, நாம ஒன்னா இருக்குறதுல இப்போவும் உனக்கு ஆட்சேபன இருக்கா ? “ என்று ரோஷினி கேட்டதும், “ இல்ல வேணாம் ரோஷினி, ப்ளீஸ். “ என்றான் க்ரிஷ். 

“ நீ இப்படி தான் ஒவ்வொரு முறையும் செய்ற. நான் அழகா இருக்கேன்னு தோணலையா இல்ல என்ன பார்த்ததும் ஆச வர மாட்டேங்குதா ? ரெண்டு வருஷமா ஒன்னா இருக்கோம், இந்த வாரம் நமக்கு நிச்சயம் ஆகப்போகுது “ என்று விரக்தியோடு பேசினாள் ரோஷினி ஆனால் க்ரிஷ், “ ரோஷினி, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் தான் முழுசா எல்லாம் நடக்கனும்னு நான் விரும்புறேன். எனக்கு சில ஒழுக்கங்கள் இருக்கு அது மட்டும் இல்ல, நான் ஏற்கனவே ஒரு முறை என் அப்பா அம்மாவ கஷ்டப்படுத்திட்டேன் அதனால இன்னொரு முறை அவங்க கஷ்டப்படுற மாதிரி எதையும் செய்ய நான் விரும்பல “ என்று அவளிடம் நிதானமாக, தெளிவாக சொன்னான்.

“ நம்ம உறவு வெச்சுக்குறது அவங்கள எப்படி கஷட்டப்படுத்தும் ? “ என்று ரோஷினி கேட்க, “ கல்யாணத்துக்கு முன்னாடி நீ கர்ப்பம் ஆனா என்ன செய்றது ? அதுக்கு அப்புறம் என்னால அவங்க முகத்துல முழிக்கவே முடியாது. இந்த காண்டம், கருத்தடை மாத்திரை மேல எனக்கு நம்பிக்க இல்ல அதனால இன்னும் கொஞ்சம் மாசம் நம்ம கல்யாணம் நடக்குற வர வெயிட் பண்ணுவோம், ப்ளீஸ் “ என்று க்ரிஷ் தெளிவாக சொன்னான்.

ரோஷினி அவனை விட்டு விலகி சரி என்று தலையை அசைத்தாள். க்ரிஷ் அவளை இழுத்து படுக்க அவள் தூங்கும் வரை காத்திருந்து அதன் பின்னர் தன் அறைக்குத் திரும்பினான்.

மறுநாள் காலை ரோஷினி முன் முற்றத்தில் தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த போது, மைராவின் வீட்டிலிருந்து மதன் வெளியேறுவதை கவனித்தாள். அழைப்பை துண்டித்து அவருக்காக காத்திருந்தவள் அவரை பார்த்து புன்னகைத்து, “ மாமா, மைராவும், அவளோட அப்பா, அம்மாவும் ஊட்டியில இருந்து திரும்பி வந்துட்டாங்களா? “ என்று கேட்டாள். அதற்கு மதன், “ இல்ல, அவங்க ஒரு மாசத்துக்கு திரும்பி வர மாட்டாங்க. ஏன் கேட்குற ?” என்று அவளை பதில் கேள்வி கேட்டார்.

“ நீங்க அவங்க வீட்டுல இருந்து வர்றத பார்த்தேன், அதனால நீங்க அவங்கள சந்திக்க போயிருக்கீங்கன்னு நினைச்சேன்” என்று ரோஷினி சொன்னதும், “ நான் கொல்லைப்புறத்துல இருக்க ரோஜா செடிக்கு தண்ணி ஊற்ற போனேன். மைரா என் பராமரிப்புல  விட்டு போய் இருக்கா, நாங்க ஒரே குடும்பமா தான் பழகிட்டு இருக்கோம்னு நீ புரிஞ்சிக்கணும். நாங்க கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம ஒருத்தர் வீட்டுக்கு இன்னொருத்தர் போவோம். என்னால என் இன்னொரு வீட்டை அப்படியே விட்டுட முடியாது அதனால உங்க அத்தை வீட்டை சுத்தம் பண்றா, நான் செடிக்கு தண்ணி  ஊற்றினேன். காலையில ப்ரேக்பாஸ்ட் சமைக்க இப்போ வந்துடுவா உங்க அத்த “ என்று சொல்லிவிட்டு மதன் வீட்டுக்குள் சென்றார்.  

தான் இல்லாத நிலையிலும் மைரா அனைவரின் இதயத்தையும் ஆள்கிறாள் என்ற பொறாமையில் ரோஷினி கொழுந்துவிட்டு எரிந்தாள். அவள் க்ரிஷை எழுப்பியதும் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகளை பார்க்க வீட்டிலிருந்து சீக்கிரமே கிளம்பினார்கள். அர்ச்சனா, மதன் மற்றும் ரோஷினியின் பெற்றோர் உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பதில் மும்முரமாக இருந்தனர். இரவில் க்ரிஷும், ரோஷினியும் வீடு திரும்பி நிச்சயதார்த்தத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த மோதிரங்களையும் ஆடைகளையும் காட்டினர்.

நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல், வசுந்தராவின் வீட்டை சுத்தம் செய்வதற்கும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும் அர்ச்சனா தயாராக இருந்த போது, ரோஷினி அவரிடம் சென்று, “ அத்தை நான் உங்க கூட மைரா வீட்டுக்கு வரட்டுமா ? நான் உதவி செய்றேன், நாம சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு திரும்பி வரலாம். அது மட்டும் இல்ல நிச்சயத்துக்கு நாம குடும்பமா கோவிலுக்கு போகணும்னு க்ரிஷ் சொன்னான் “ என்று புன்னகையோடு கூறினாள்.

அர்ச்சனா ஆரம்பத்தில் அவளை மறுக்க விரும்பினார் ஆனால் அது ரோஷினியை வெறுப்பது போல் இருக்கும் என்று நினைத்து சம்மதித்து தலையசைத்தார். அர்ச்சனா கதவைத் திறந்து சமையலறையில் இருந்து துடைப்பத்தை எடுத்தார்.

“ நீ இங்க ஹால்லேயே இரு, நான் முதல்ல மைராவோட ரூமை பெருக்கிட்டு அப்புறம் கிரவுண்ட் ஃப்ளோரை க்ளீன் பண்றேன். அதுக்கு அப்புறம் நாம் வீட்டுக்கு கிளம்பலாம் “ என்று அர்ச்சனா சொன்னதும், “ இல்ல அத்த நான் கீழ சுத்தம் செய்றேன் “ என்று சொன்னாள் ரோஷினி.

அர்ச்சனா மாடிப்படிகளில் ஏற, ரோஷினி இன்னொரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு தரை தளத்தை அங்கும் இங்கும் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். சமையலறைக்குள் நுழைந்து வெந்நீர் தயாரித்தவள், அர்ச்சனா திரும்பி வருவதற்குள் கொல்லைப்புறத்தை அடைந்து ரோஜா செடிகளின் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினாள். பிறகு கதவைச் சாத்திவிட்டு சுத்தம் செய்வது போல் பாசாங்கு செய்து ஹாலுக்குத் திரும்பினாள்.

அர்ச்சனா திரும்பி வந்ததும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை எடுப்பதற்குள் ரோஷினி அவசர அவசரமாக செடிகளுக்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாள், பிறகு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

ஊட்டியில், மைராவும் நைனாவும் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தனர், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மகிழ்ந்தனர். மைரா தனது வேலையில் மும்முரமாக இருப்பதைக் கண்டு வசுந்த்ராவும் ராஜனும் மகிழ்ச்சியடைந்தனர். ராகேஷ் நியமித்த பயிற்றுவிப்பாளரிடமிருந்து மைரா கார் ஓட்ட கற்று கொள்வதில் நேரத்தை கழித்தாள். அவர்கள் அருகிலுள்ள பூங்கா மற்றும் சந்தைகளுக்கு மாற்று நாட்களில் சென்று இடங்களைச் சுற்றிப் பார்க்க சிறிது நேரம் செலவிட்டனர்.

க்ரிஷ் மற்றும் ரோஷினி நிச்சயதார்த்தம் நடக்கும் அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகேஷ் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்ததற்கு வசுந்த்ரா மனதில் அவருக்கு நன்றி சொன்னார். க்ரிஷை பற்றியும் அவனது நிச்சயதார்த்தத்தைப் பற்றியும் யோசிக்க மைரா விடப்படமாட்டாள் என்று அவர் மகிழ்ச்சியடைந்தார்.

நிச்சயதார்த்த நாளன்று க்ரிஷும், ரோஷினியும் மதியத்திற்குள் பார்ட்டி ஹாலுக்கு புறப்பட தேவையான அனைத்தையும் பேக் செய்திருந்தனர். மதனும் கேஷவும் விருந்தினரை வரவேற்று நிச்சயதார்த்தத்திற்கு தயாராக அருகில் உள்ள ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

அர்ச்சனா மற்றும் ரோஷினியின் அம்மா தங்கள் உறவினர்களுக்கு சில பரிசு கொடுக்க பேக் செய்திருந்தனர். ரோஷினியை ஸ்பாவுக்கு அழைத்துச் செல்வதாக க்ரிஷ்  அவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றான்.

மதன் மற்றும் கேஷவ் வீடு திரும்பியதும், அர்ச்சனா மைராவின் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுமாறு மதனிடம் கூறினார், ஆனால் கேஷவ் தனது தந்தையை ஓய்வெடுக்க விட்டுவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு மைராவின் வீட்டுக்கு சென்றான்.

மைராவின் வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்த போது பட்டுப்போன ரோஜாச் செடிகளைப் பார்த்ததும் முகம் சுளித்து விரக்தியுடன் உடனே கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பி தன் அம்மாவை கூப்பிட்டான்.

 “ கேஷவ், நீ இப்ப தானே மைராவோட ரோஜா செடிக்கு தண்ணி ஊற்ற போன ஆனா அதுக்குள்ள வந்துட்ட ? செடிக்கு  தண்ணி ஊற்றலையா? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ கடைசியா நீங்க செடிக்கு எப்போ தண்ணி ஊற்றினீங்க ?” என்று கேட்டான் கேஷவ்.

அவன் கேள்வியால் குழப்பம் அடைந்த அர்ச்சனா, “ அப்பா தான் அந்த வேலைய பண்ணிட்டு இருந்தார் ஆனா இப்போ நானும் ரோஷினியும் அத செய்றோம் கேஷவ். நேத்து செடி எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு அதனால தினமும் தண்ணி  ஊற்றினா நல்லா இருக்கும்னு நான் நெனச்சேன். ஏன் இப்போ என்ன ஆச்சு ? “ என்று கவலையுடன் கேட்டார்.

“ எல்லா செடியும் காஞ்சு போய் இருக்கு மா, இனி அது ஒன்னு கூட வளராது “ என்று கேஷவ் எரிச்சலுடன் சொன்னான். அதை கேட்டதும், “ இல்ல இல்ல, அப்படி நடக்க கூடாது. செடி எல்லாம் செத்து போச்சுன்னு தெரிஞ்சா மைரா ரொம்ப வருத்தப்படுவா. நான் போய் பார்க்குறேன் “ என்று சொல்லி அர்ச்சனா புறப்பட தயாரான போது கேஷவ் அவரை தடுத்து, “ இல்ல மா, நீங்க இங்க வேலையைப் பார்த்துக்கோங்க. அத நான் பார்த்துக்குறேன், கவலைப்பட வேணாம் “ என்று சொன்னான்.

அர்ச்சனா சரி என்று சொன்னதும் கேஷவ்  வீட்டை விட்டு வெளியேறி ஒரு நர்சரியை அடைந்து நிறைய மஞ்சள் ரோஜா செடிகளோடு செம்மண், உரம், வாங்கிக் கொண்டு மைராவின் வீட்டுக்குத் திரும்பினான். தொட்டியில் கிடந்த செடிகளையும், மண்ணையும் தூக்கி எறிந்துவிட்டு, செம்மண், உரம் ஆகியவற்றை நிரப்பி புதிய செடிகளை நட்டான். அதன் பின்னர் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விட்டு வீடு திரும்பி ரோஷினியின் பெற்றோர் பார்ட்டி ஹாலுக்கு கிளம்புவதையும், அவர்கள் கிளம்புவதற்காக பைகளை தயார் செய்து வைத்திருந்ததையும் பார்த்தான்.

“ கேஷவ், உனக்கு டிரஸ் எடுத்து வெச்சுருக்கேன், சீக்கிரம் கிளம்பு, நாங்க முன்னாடி போறோம் “ என்று அர்ச்சனா சொன்னதும், “ அம்மா, நான் புதுசா செடி நட்டு இருக்கேன், நாளைல இருந்து நீங்களோ அப்பாவோ தண்ணி ஊத்துங்க. புரிஞ்சுதா ? “ என்று கேஷவ் அழுத்தமாக சொன்னதும், ஒரு கணம் அமைதியாக இருந்த அர்ச்சனா அவன் வார்த்தையின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டு, “ கவலைப்படாத, நான் பார்த்துக்குறேன், இனி செடிங்களுக்கு எதுவும் நடக்காது “ என்று உறுதி அளித்த பின்னர் கேஷவ் தயாராக தனது அறைக்கு திரும்பினான்.

ரோஷினியை தன்னுடன் மைராவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காக அர்ச்சனா தன்னைத்தானே சபித்துக் கொண்டார். அவர்கள் அனைவரும் பார்ட்டி ஹாலை அடைந்ததும் க்ரிஷ்  ஸ்பாவிலிருந்து நேராக ரோஷினியுடன் சென்றடைந்தான். ரோஷினியை தயார் செய்ய அவன் ஒரு ஒப்பனையாளரை ஏற்பாடு செய்திருந்தான், அவள் அதில் மும்முரமாக இருந்தாள்.

“ கேஷவ் இருக்கும் போது க்ரிஷுக்கு நிச்சயதார்த்தம் செய்றத பத்தி எல்லாரும் கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க ? “ என்று ரோஷினியின் அப்பா கேட்டதும், மதன் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த கேஷவ், “ அவங்கள எனக்கு காட்டுங்க, நான் அவங்களுக்கு பதில் சொல்றேன். என் தனிப்பட்ட வாழ்க்க அவங்களுக்கு தேவை இல்லாத விஷயம். அவங்கள சமாளிக்க என்னால முடியும் அதனால நீங்க கவலைப்படாதீங்க மாமா “ என்று கூறினான்.

“ நீயும் என் மருமகன் தான் கேஷவ். நாங்க உன்ன பத்தி கவலைப்படுறோம், உன் வாழ்க்கையில நீ கல்யாணம் ஆகி செட்டில் ஆகுறத பார்த்து நாங்க சந்தோஷப்படுவோம் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னதை கேட்ட கேஷவ், “ மாமா உங்கள யாரோ கூப்பிடுறாங்க, போய் என்னனு கேளுங்க “ என்றான்.

ரோஷினியின் அப்பா பேச்சை நிறுத்த சொல்லி கேஷவ் கொடுக்கும் சைகையை புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினார். கேஷவ்  தனது அம்மாவை அவரது அறையில் சந்திக்க புறப்பட்டபோது, ஒரு குரல் அவனை பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டான். அவன் திரும்பிப் பார்த்தபோது ரோஷினி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“ கேஷவ், எனக்கு ஒரு உதவி செய்றீங்களா ? “ என்று ரோஷினி கேட்டதும், “ என்ன சொல்லி கூப்பிட்டீங்க என்ன ? “ என்று கேட்டான் கேஷவ்.

ரோஷினி, “ கேஷவ் “ என்று மெல்லிய குரலில் சொன்னதும், “ க்ரிஷ் என்ன பெயர் சொல்லி கூப்பிட மாட்டான். அவன் எப்பவும் என்ன அண்ணான்னு தான் கூப்பிடுவான். உங்களுக்கும் அவன் வயசு தான் அதனால என்ன அண்ணா சொல்லி கூப்பிடுங்க. என்ன விட வயசுல சின்னவங்க பெயர் சொல்லி கூப்பிடுறது எனக்குப் பிடிக்காது “ என்று நிதானமாக இருக்க முயற்சித்து கூறினான் கேஷவ்.

“ ஆனா மைரா உங்கள என்ன சொல்லி கூப்பிட்டாலும் நீங்க அவள தடுக்குறது இல்லையே. அவ உங்கள கெட்சப் சொல்லி கூப்பிடுறத நான் கேட்டு இருக்கேன் அது மட்டும் இல்ல சில சமயம் அங்கிள் சொல்லி கூட கூப்பிடுறா. ஒரு அழகான மனுஷன கெட்சப் இல்ல அங்கிள் சொல்லி உலகத்துல இருக்க யாரும் கூப்பிட மாட்டாங்க “ என்று ரோஷினி எரிச்சலுடன் பேசும் போதே அவளை கேஷவ் அவளை நிறுத்தினான்.

“ நான் அவள தடுக்க மாட்டேன், ஏன்னா அவ மைரா, அவ என்ன எந்த பெயர் சொல்லி வேணும்னாலும் கூப்பிடலாம் “ என்று கேஷவ் கடுமையான குரலில் சொன்னான் ஆனாலும் ரோஷினி விடாபிடியாக, “ நான் உன் கசின் கேஷவ் “ என்று சொன்னாள். அதை கேட்டதும், “ வேண்டாம்னு சொன்னேன் “ என்று சீறினான் கேஷவ் பின்னர் நிதானமடைந்து, “ இன்னைக்கு உங்க  வாழ்க்கையோட முக்கியமான நாள். இன்னைக்கு உங்கள திட்டி இந்த நாள நான் கெடுக்க விரும்பல. இதுவரைக்கும் நான் ஒரு முறை கூட உங்க கிட்ட பேசினது இல்லனு நினைக்குறேன் “ என்று சொன்னான்.

“ ஆனா நாம ஒரே வீட்ல இருப்போம், நாம ஒருத்தர ஒருத்தர் தவிர்க்க முடியாது “ என்று ரோஷினி இந்த முறை கொஞ்சம் நிதானமாக சொன்னாள். அதற்கு கேஷவ், “ நாம தவிர்க்க வேண்டியதில்ல. என்னோட ப்ரைவசியில (privacy) நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன், அதனால நீங்க அத மதிச்சு நடந்தா நல்லா இருக்கும். என்ன அண்ணான்னு கூப்பிடுங்க அவ்ளோ தான் “ என்று இறுதியாக கூறிவிட்டு முன்னேறி செல்ல இருந்தான் அப்போது ரோஷினி மீண்டும் அவனை தடுத்து, “ மைரா உங்கள அங்கிள் சொல்லி கூப்பிடுறத நீங்க ஏன் தடுக்கல? “ என்று கேட்டாள்.

“ நாங்க ஒருத்தர ஒருத்தர் கிண்டல் செய்வோம், அவ என்ன கிண்டல் செய்றதும் எனக்கு புடிக்கும், நான் அத ரசிப்பேன். அது எங்களோட பெர்சனல் விஷயம். இப்போ உனக்கு உதவி செய்ய க்ரிஷ அனுப்புறேன் “ என்று பொறுமை இழந்து கத்திவிட்டு கேஷவ் திரும்பிய போது, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா சிரிப்பை அடக்க உதட்டைக் கடித்துக் கொண்டாள். கேஷவ்  ஒரு பையை அர்ச்சனாவிடம் கொடுத்துவிட்டு சமையல் வேலையை மேற்பார்வையிட சென்றான்.

“ உனக்கு என்ன வேணும் சொல்லு ரோஷினி, நான் செய்றேன் “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்ட ரோஷினி, “ இருக்கட்டும்,  நான் கேட்க வந்தத மறக்குற அளவுக்கு அவமானம் கெடச்சுடுச்சு.  அவர் என்ன அவமானப்படுத்துறத நீங்க தடுத்திருக்கலாம் அத்தை “ என்று சொன்னாள்.

“ நான் உன்ன முன்னாடியே எச்சரிக்கலையா ரோஷினி ? ஆனா நீயும் உன் அம்மாவும் பாடம் கத்துக ரொம்ப ஆசையா இருந்தீங்க. உன்ன கஷ்டப்படுத்த நான் எதையும் மிகை படுத்தி சொல்லல ரோஷினி, நான் உனக்கு உண்மைய சொல்றேன். அந்த பொண்ணு 4 வயசு குழந்தையா எங்க வாழ்க்கையில வந்து இத்தன வருஷமா எங்க மனச ஆட்சி பண்ணிட்டு இருக்கா. நீ இப்போ எங்க குடும்பம் ரோஷினி, நாங்க உன்னையும் நேசிப்போம். எல்லார் மனசுலயும் நீயும் இடம் பிடி “ என்று சொல்லி அர்ச்சனா அவள் கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு தன் அறைக்கு நடக்க, ரோஷினி பொறாமையில் கண்ணீரை அடக்கிக் கொண்டிருந்தாள்.

************************************

முன்னோட்டம்: 

“ இந்த புடவையில தேவத மாதிரி இருக்க மைரா “

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:04 pm

[…] அது எங்களோட பெர்சனல் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:51 am

[…] 15.அது எங்களோட பெர்சனல் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!