Home Family16. தேவத மாதிரி இருக்க மைரா

16. தேவத மாதிரி இருக்க மைரா

by Siragugal Novels
27 views

ஊட்டியில் மைராவும் நைனாவும் முந்தைய இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துவிட்டு பிற்பகலில் தாமதமாக எழுந்தனர். மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பரிசுகளை வாங்க ஒரு வணிக வளாகத்தை அடைந்தனர். டிரைவரிடம் இருந்து அவரது குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர்களுக்கும் ஏற்ற பரிசுப் பொருட்களை வாங்கினர். நிச்சயதார்த்த தலைப்பிலிருந்து அவளை திசைதிருப்ப நைனா ஷாப்பிங்கில் மும்முரமாக இருந்தாள். அவளின்  திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மைரா, நிச்சயதார்த்தத்தைப் பற்றி யோசிப்பதை நிறுத்த விரும்பி அவர்களோடு சேர்ந்து வேலை செய்தாள்.

மாலையில் அவர்கள் வீடு திரும்பியதும், வசுந்த்ரா வீட்டில் ஃபேஸ் பேக் தயாரித்து மைரா மற்றும் நைனா இருவரையும் இழுத்து அவர்கள் முகத்தில் தடவினார்.

“ ப்ரின்சிபால் வீட்டுக்குப் போகும் போது உங்க ரெண்டு பேரு  முகமும் பளபளப்பா இருக்கும், என் கையால செஞ்ச ஃபேஸ் பேக்கோட மேஜிக் அப்படி வேலை செய்யும் “ என்று வசுந்தரா பெருமையாக சொன்னதை கேட்டு, “ அம்மா, எனக்கு பளபளப்பு இல்லனா கூட பரவாயில்ல ஆனா தடிப்பு இல்லாம இருந்தா சந்தோஷம் தான் “ என்றாள் நைனா.

“ ஒய் அம்மாவோட மேஜிக் பாரு, அதுக்கு அப்புறம் அவங்கள உன்னோட தனிப்பட்ட அழகுக்கலை நிபுணரா நிரந்தரமா நியமனம் செய்வ. என்னோட தோல் இப்படி பளபளப்பா இருக்க ரகசியம் என் அம்மா தான் “ என்று மைரா சொல்ல, “ என் செல்லம் கவலைப்படாத, நான் எப்பவும் உனக்கு அழகுக்கலை நிபுணரா இருப்பேன் “ என்றார் வசுந்தரா.

“ அப்போ எனக்கு ? நான் சும்மா கிண்டல் பண்ணிட்டு இருந்தேன், உங்க கிட்ட ஃபேஸ் பேக் போடுறது இது முதல் தடவை இல்ல “ என்று நைனா கூறியதும், “ உனக்கும் தான் நைனா. இப்போ ரெண்டு பேரும் சீக்கிரம் ரெடியாகுங்க ப்ரின்சிபால் வீட்டுக்கு கிளம்பலாம். சரியா சாப்பாட்டு நேரத்திதுக்கு போனா நல்லா இருக்காது “ என்றார் வசுந்தரா.

மைராவும் நைனாவும் கண்களில் இருந்து வெள்ளரிக்காயை அகற்றிவிட்டு அறையை அடைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து தயாராகத் தொடங்கினர். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் அறையை விட்டு வெளியே வந்து பார்த்த போது வசுந்த்ரா சேலையில் தயாராக இருந்தார். இரு பெண்களும் லினென் சேலை மற்றும் அதற்கு பொருத்தமான நகைகளை அணிந்திருப்பதைக் கண்டு வசுந்த்ரா உறைந்து நின்றார். அவர்கள் தங்கள் கூந்தலை பின்னி, ராஜன் அவர்களுக்காக வாங்கி வந்த பூக்களால் அலங்கரித்திருந்தனர். வசுந்த்ரா தன் இடத்தை விட்டு நகராததைக் கண்ட மைரா பயந்து அவர் கையைப் பிடித்தாள்.

“ அம்மா, என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? ஹாஸ்பிடல் போகலாமா? “ என்று மைரா கேட்டதும், “ வாய மூடு, நீங்க ரெண்டு பேரும் அவ்ளோ அழகா இருக்கீங்க, என்னால கண்ண சிமிட்ட கூட முடியல “ என்று சொன்னார் வசுந்தரா.

“ இந்த புடவையில தேவத மாதிரி இருக்க மைரா “ என்று ராஜனும் சொல்ல மைரா புன்னகைத்தாள். வசுந்த்ரா இரு பெண்களுக்கும் திருஷ்டி எடுத்த பின்னர் அவர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். நைனா நேரத்தை வீணாக்காமல் அதை உடனே சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் ஐந்து நிமிடத்தில் ராகேஷின் வீட்டிற்கு சென்றடைந்தார்.

ராகேஷ் தனது குடும்பத்தினருடன் அவர்களை வரவேற்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். வசுந்த்ரா பரிசை ராகேஷின் தாயிடம் கொடுத்தார், மைரா குழந்தைகளுக்கு பொம்மைகளையும், அவரது மனைவிக்கு சேலையையும் கொடுத்தாள்.

“ ரொம்ப நன்றி ப்ரின்சிபல் சார். நீங்க எங்களுக்கு நிறைய உதவி செய்து இருக்கீங்க “ என்று வசுந்தரா சொன்னதும், “ அம்மா, என்ன ராகேஷ்னு கூப்பிடுங்க. நான் கேஷவோட ப்ரெண்ட, அவன் உங்களுக்கு மகன் தானே அப்போ நானும் அப்படி தான் “ என்று சொன்னார் ராகேஷ். அவர் வார்த்தைகளை கேட்டு, “ அய்யோ கடவுளே! நீங்க எவ்ளோ அன்பா, பணிவா இருக்கீங்க. நான் கேஷவுக்கு போன் பண்ணி எங்கள இங்க அனுப்பினதுக்கு நன்றி சொல்லுவேன் “ என்று கூறினார் வசுந்தரா.

மைராவும் நைனாவும் அவரது மனைவியுடன் பேசினர், இரவு உணவு பரிமாறப்படும் வரை குழந்தைகளும் அவர்களுடன் விளையாடத் தொடங்கினர்.

சென்னையில் நிச்சயதார்த்த விழா தொடங்கியதும், ஐயர் முதலில் பெற்றோரை பூஜை செய்ய அழைத்தார், பின்னர் க்ரிஷும், ரோஷினியும் மேடைக்கு அழைக்கப்பட்டு இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

மைரா வர மாட்டாள் என்று தெரிந்தும் க்ரிஷ் விருந்தாளிகளை நோக்கி பார்ப்பதை ரோஷினியும் அவளது பெற்றோரும் கவனித்தனர். அர்ச்சனாவும், ரோஷினியின் அம்மாவும் மோதிரத்தை கொடுக்க இருவரும் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டிய பிறகு க்ரிஷ் அவளை அனைத்துக் கொண்டான்.

“ கல்யாணத்துக்கு அடுத்த மாசம் 2 நல்ல நாள் இருக்கு “ என்று ஐயர் சொன்னதும், “ எந்த நாளும் எங்களுக்கு சம்மதம் தான், என்ன சொல்ற ரோஷினி ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ கல்யாணத்த பத்தி அப்புறம் பேசலாம் க்ரிஷ் “ என்று தயங்கியபடி சொன்னாள் ரோஷினி.

க்ரிஷ் உடனே தன் பெற்றோரைப் பார்க்க அவர்கள் சரி என்று முணுமுணுத்தனர்.

ரோஷினியின் தந்தை க்ரிஷ், ரோஷினி மற்றும் அவரது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார், கேஷவ், மதன் மற்றும் அர்ச்சனா அனைத்து விருந்தினர்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை அங்கேயே இருந்தனர். வசுந்த்ரா பகிர்ந்த மைராவின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே அர்ச்சனா அமர்ந்திருந்தார்.

“ அவ ரொம்ப அழகா இருக்கா மதன். எத்தன முறை கோவிலுக்கு போய் அவ எனக்கு மருமகளா வரணும்னு வேண்டி எவ்ளோ பிரார்தன பண்ணி இருப்பேன் தெரியுமா ? கடவுள் ஏன் என் விருப்பத்தை மறுத்தாரு ? நான் என் வாழ்க்கையில யாரையும் கஷ்டப்படுத்தினதே இல்ல, யாருக்கும் எந்த கெடுதலும் நெனச்சதே இல்ல “ என்று அர்ச்சனா மனமுடைந்து சொன்ன போது அருகில் இருந்த மதன் அவர் கையை பிடித்து, “ மைராவுக்கு யாராவது ஸ்பெஷலா பார்த்து வெச்சுருப்பாரு, அவளுக்காக ஒருத்தன் ஏற்கனவே பிறந்து இருப்பான் அர்ச்சனா. என்ன நம்பு சரியான நேரத்துல அவன் வருவான். கடவுள் உன்னோட விருப்பத்த மறுத்திருக்கலாம், ஆனா அவள ஒரு ராணி மாதிரி நடத்துற  ஒருத்தன அனுப்ப கேட்குற நம்ம விருப்பத்த அவர் ஒருநாளும்  மறுக்க மாட்டாரு. அவளுக்கு இந்த உலகத்துல இருக்க சகல சுகங்களையும் கொடுப்பாரு “ என்று சொல்லி ஆறுதல்ப்படுத்தினார்.

“ உங்க வார்த்த நிறைவேறட்டும். அவ முன்னாடி மாதிரி சந்தோஷமா இருக்கணும், எனக்கு அத தவிர வேற எந்த ஆசையும் இல்ல “ என்று அர்ச்சனா சொன்னதும், “ இப்போ ரோஷினி பத்தி பேசுவோம். அவ ஏன் கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேணாம்னு சொன்னா ? “ என்று மதன் கேட்டார் அதற்கு அர்ச்சனா, “ எனக்கு எப்படித் தெரியும்? வீட்டுக்குப் போய் கேட்கலாம் “ என்றார்.

மண்டபத்துக்கு பணம் செலுத்திவிட்டு கேஷவ் திரும்பியதும் அவர்கள் வீடு திரும்பினர். மைராவும், நைனாவும் ராகேஷின் வீட்டிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களைப் சமூக வலைத்தளத்தில் க்ரிஷ் தனது அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவள் புடவை அணிந்திருப்பதை அவன் பார்ப்பது அதுவே முதல் முறை, அவள் அழகாக இருக்கிறாள் என்று பதிவு செய்தான்.

ரோஷினியும் தனது சமூக ஊடக பக்கத்தில் இடுகையிட சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கிறாள் என்பதை அறியாமல் அவன் அந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த மொபைலில் அறிவிப்பு சத்தம் கேட்டு க்ரிஷ் தனது போடோவுக்கு கீழ் கமெண்ட் செய்திருப்பதை பார்த்து புன்னகைத்து, இதய கண்கள் ஈமோஜி கொண்ட ஸ்மைலியுடன் பதிலளித்தாள். அப்போது ரோஷினியிடமிருந்து மற்றொரு அறிவிப்பு வந்ததும், ரோஷினி அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவேற்றியிருந்ததை பார்த்தாள்.

“ உங்க மகிழ்ச்சியான புதிய தொடக்கத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்று அதற்கு கருத்து பதிவு செய்துவிட்டு, அவன் காதலித்த பெண்ணுடன் தன் எதிர்காலத்தை ஆரம்பிக்கும் போது அவள் கண்ணீர் சிந்த விரும்பாமல் மொபைலை ஆஃப் செய்து விட்டு தூங்க சென்றாள். உறக்கம் வராமல் நைனாவின் மொபைலை எடுத்து அவளின் மர்ம பாடகரின் பாடல்களைப் பார்த்தாள், எப்போதும் போல அவனின் குரலில்  அமைதியை உணர்ந்து தூங்கும் வரை அவனது பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

க்ரிஷும் நைனா வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து அவற்றை  லைக் செய்து, அவற்றை தனது சமூக ஊடகங்களிலும் வெளியிட்டான். அவன் தூங்குவதற்கு முன் மைராவின் புகைப்படத்தைத் திறந்தான் அப்போது தனது கண்களில் கண்ணீர் வருவதை உணர்ந்தான்.

“ நீ இங்க இருந்திருக்கணும் மைரா. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சொன்னபடி கண்ணீரை துடைத்துக் கொண்டு உறங்கினான்.

மறுநாள் காலை கேஷவ் தவிர அனைவருக்கும் அர்ச்சனா காபி கொடுத்தார். ரோஷினி நிச்சயதார்த்தத்திற்கான வாழ்த்து மெசேஜ்களை புன்னகையுடன் மொபைலில் பார்த்துக்கொண்டிருந்தாள். அர்ச்சனா மதனைப் பார்த்து சைகை செய்ததும் அவர் உரையாடலைத் தொடங்கினார்.

“ க்ரிஷ், ரோஷினி கல்யாணத்த அடுத்த மாசம் வைக்கலாமா இல்ல ரெண்டு மாசம் கழிச்சு நடத்தலாமா? “ என்று மதன் கேட்டதும், “ இல்ல மாமா, நான் இப்போ கல்யாணத்துக்கு தயாரா இல்ல “ என்று சொன்னாள்.

ரோஷினி தனது முடிவை அறிவித்ததும் அறையை விட்டு வெளிய வந்த கேஷவ்  உட்பட முழு குடும்பமும் திகைத்துப் போனது. அவள் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள் என்று 100% உறுதியாக தெரிந்த பிறகே க்ரிஷ் அவளை திருமணத்திற்கு ப்ரொபோஸ் செய்தான் அதனால் அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவன் க்ரிஷ் தான்.

அனைவரும் அமைதியாக இருந்த போது மதன் தொண்டையை கனைத்துக் கொண்டு, “ ஆனா க்ரிஷ் உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட அப்போ நீ சரினு தானே சொன்ன ? இப்போ என்ன ஆச்சு ? “ என்று கேட்டார்.

“ கண்டிப்பா அவன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் மாமா ஆனா இப்போ இல்ல. எனக்கு சென்னையில வேலை கிடைச்சு இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி வேலையில செட்டில் ஆக விரும்புறேன் “ என்று ரோஷினி சொன்னதை கேட்டதும், அவளது வேலை பற்றி தனக்கு தெரியவில்லை என்று க்ரிஷ் கோவம் கொண்டான் ஆனால் அதை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாக சொல்ல விரும்பாமல் அமைதியாக இருந்தான்.

“ சென்னையில வேலையா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ ஆமா அத்த, நான் அடுத்த வாரம் வேலையில சேரனும். நான் இங்க தங்குறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது நினைக்குறேன் இல்லனா நான் ஹாஸ்டல் பார்த்துக்குறேன் “ என்று சொன்னாள் ரோஷினி.

யாரும் பதில் சொல்வதற்குள் க்ரிஷ் அவளை பார்த்து, “ ரோஷினி, நீ ஏன் ஹாஸ்டல் தேடி போகணும் ? “ என்று கேட்டுவிட்டு பின்னர் தன் அம்மாவை பார்த்து, “ அம்மா “ என்று மட்டுமே சொன்னான்.

“ எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ரோஷினி. நீ எங்க கூட  இங்க தங்கலாம், ஆனா நீ ஏன் கல்யாணம் இப்போ வேணாம்னு சொல்ற ? கல்யாணம் பண்ண அப்புறம் கூட நீ வேலைக்கு போகலாமே ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ இது புது வேலை, நிறைய பொறுப்பு இருக்கும் அத்தை அதுல நான் முழுசா கவனம் செலுத்த நினைக்குறேன். கல்யாணம் ஆயிடுச்சுனா க்ரிஷுக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கும், என்னால அத நிறைவேத்த முடியாம போகலாம், அப்புறம் அது தேவையில்லாம சண்டையில போய் முடியும். எனக்கும் க்ரிஷுக்கும் நடுவுல இது மாதிரி எதுவும் நடக்குறத நான் விரும்பல அதனால நான் வேலையில செட்டில் ஆனதும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்குறோம் “ என்று ரோஷினி நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

எல்லோரும் அவள் சொல்வது சரி என்று நினைத்தார்கள், ஆனால் அர்ச்சனா மற்றும் மதனுக்கு கவலை அளித்த ஒரே விஷயம் என்னவென்றால், திருமணம் செய்து கொள்ளாமலேயே க்ரிஷ் மற்றும் ரோஷினியை ஒன்றாக வாழ வைக்க வேண்டும் என்பது தான்.

“ ரோஷினி, உன் கவலை எனக்கு புரியுது ஆனா உன் வாழ்க்கையில நான் உனக்கு எல்லா வகையிலையும் ஆதரவா இருப்பேன் அதனால கல்யாணத்த ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்ல “ என்று க்ரிஷ் சொன்னான் ஆனால் ரோஷினி அதற்கு, “ க்ரிஷ் நான் நைட்டு ட்யூடி கூட பார்க்க வேண்டி இருக்கும் அப்போ நம்ம ஒன்னா இருக்க முடியலனு நீயோ இல்ல நானோ வருத்தப்படலாம் “ என்று கூறினாள்.

“ ரோஷினி சொல்றது சரி தான் க்ரிஷ். ஒரு வருஷம் தானே ? சீக்கிரம் போயிடும் “ என்று சொன்னவர் அனைவரையும் பார்த்து, “ரோஷினி இங்க இருக்குறதுல உங்க எல்லாருக்கும் சம்மதமா இல்ல நான் வேற ஏற்பாடு செய்றேன் “ என்று சொன்னார் அதற்கு மதன், “ அவ இங்கேயே இருக்கட்டும் “ என்று பதில் சொன்னார்.

வெறுமையான முகத்துடன் செடிகளைப் பார்ப்பதற்காக மைராவின் வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற கேஷவைப் பார்த்தார் அர்ச்சனா, பின்னர் க்ரிஷ், ரோஷினி மற்றும் அவளது பெற்றோர் மறுநாள் பெங்களூர் திரும்புவதாகவும், ரோஷினி சென்னையில் தங்குவதற்கான பொருட்களை பேக் செய்து க்ரிஷ் மற்றும் ரோஷினி சென்னை திரும்புவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு திரும்பிய கேஷவ், தான் வேலைக்கு கிளம்புவதாக அனைவரிடமும் தெரிவித்துவிட்டு சில மணி நேரத்தில் புறப்பட்டு சென்றான்.

**********************************************

முன்னோட்டம்:  

“ என்ன ஆச்சு ? நீ நல்லா இருக்கியா அம்மு ? அடி எதுவும் பட்டுச்சா ? எங்க இருக்க ? இப்போ உன் கூட யார் இருக்காங்க ? நான் உடனே வரேன் “

 

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:06 pm

[…] தேவத மாதிரி இருக்க மைரா […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!