க்ரிஷும், ரோஷினியும் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது கதவு அழைப்பு மணி ஒலித்தது. க்ரிஷ் கதவை திறந்ததும் கேஷவ் அவனை பார்த்து புன்னகையுடன் உள்ளே வருவதை பார்த்தான்.
“ அண்ணா, மத்தவங்க எங்க இருக்காங்க? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ அவங்க நைட்டு வருவாங்க, நான் என் கார்ல வந்தேன் அதனால சீக்கிரம் வந்துட்டேன் “ என்றான் கேஷவ்.
கேஷவ் தன் அறைக்கு சென்று புத்துணர்ச்சி பெற்று சமையலறைக்குள் நுழைந்து தனக்கு காபி போட்டான். சமையலறைக்குள் க்ரிஷ் நுழைவதைப் பார்த்ததும் அவனுக்கும் ஒரு கப்பை ஊற்றிக் கொடுத்தான். இருவரும் மௌனமாக காபி குடித்தபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்கள். ரோஷினி கிச்சனுக்கு சென்று க்ரிஷை கூப்பிட, சகோதரர்கள் காபி குடிப்பதை பார்த்தாள்.
“ நான் இல்லாம நீங்க மட்டும் காபி குடிக்குறீங்களா ? “ என்று ரோஷினி கேட்டதும், “ அண்ணா அவருக்கு பண்ணாரு அப்படியே எனக்கும் ஒரு கப் கொடுத்தாரு “ என்றான் க்ரிஷ்.
“ அப்போ எனக்கு ஒரு கப் கிடைக்குமா? நீங்க பண்ண காபி நான் குடிச்சதே இல்ல “ என்று ரோஷினி, கேஷவை பார்த்து கேட்க, “ எனக்கும், க்ரிஷுக்கும் மட்டும் தான் நான் பண்ணேன். இப்போ எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, கொஞ்சம் தூங்கணும், க்ரிஷ் காபி போட்டு கொடுப்பான் “ என்று எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் சொல்லிவிட்டு கேஷவ் கோப்பையை கழுவி விட்டு க்ரிஷின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினான். ரோஷினி பல்லைக் கடித்துக் கொண்டு கேஷவ் செல்வதை பார்த்தாள்.
“ என்ன ஏன் இப்படி நடத்துறாரு ? “ என்று ரோஷினி எரிச்சல் மற்றும் கோவத்துடன் கேட்க, “ மைராவ தவிர மத்த பொண்ணுங்க கிட்ட விலகியே இருப்பாரு. அது மட்டும் இல்ல, அண்ணா உண்மையிலேயே ரெண்டு கப் காபி தான் ரெடி பண்ணாரு. இப்போ நீ உன் ரூமுக்கு போ, நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன். “ என்று க்ரிஷ் கூறினான். ஆனால் ரோஷினி சமாதானம் ஆகாமல் காலால் மிதித்து சில ஆபாச வார்த்தைகளை திட்டியபடி சென்றாள். குடும்பத்தினர் வருவதற்குள் அவளை அமைதிப்படுத்த க்ரிஷ் அவளை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து இருவரும் புறப்பட்டு சென்றனர். இரவு உணவை முடித்துவிட்டு 8 மணிக்கு வீட்டை அடைந்ததும், வீடு முழுவதும் உணவின் நறுமணத்தை நுகர்ந்தனர், கால்கள் அவர்களை தானாகவே சமையலறைக்கு அழைத்து சென்றன.
கேஷவ் சமைப்பதைக் கண்டு க்ருஷும் ரோஷினியும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ அண்ணா, நீங்க சமைக்கிறீங்களா? நீங்க என்கிட்ட சொல்லி இருந்தா நான் வெளிய சாப்பிடாம வந்துருப்பேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ யாருக்காகவும் உன்னோட பிளான்ல எந்த மாற்றமும் செய்யாத. எல்லாரும் வர நேரம் ஆயிடுச்சு, பசியில இருப்பாங்க அதனால நான் அவங்களுக்காக சமைச்சேன். இன்னைக்கு டேஸ்ட் பாரு அப்புறம் இன்னொரு நாள் உனக்கு சமைச்சு தரேன் “ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு கேஷவ் அவனைக் கடந்து சென்று உணவை டைனிங் டேபிள் மேல் வைத்தான். 15 நிமிடங்களுக்குப் பிறகு கார் ஹார்ன் சத்தம் கேட்டதும், கேஷவ் வெளியே விரைந்தான். அர்ச்சனாவும் மதனும் வீட்டிற்குள் நுழைய, வசுந்தரா, ராஜன், மைரா மூவரும் தங்கள் வீட்டை நோக்கி நடந்தனர்.
அர்ச்சனாவும் மதனும் புத்துணர்ச்சி பெற்று இரவு உணவை சாப்பிட அமர்ந்ததும், “ அம்மா, நான் மாமா, அத்த, மைராவுக்கும் சேர்த்து தான் சமைச்சேன் ஆனா அவங்க சோர்வா இருப்பாங்க அதனால நான் அவங்களுக்கு கொண்டு போக பேக் பண்றேன் “ என்றான் கேஷவ். அதை கேட்டதும், “ அண்ணா, ஹாட் பேக் கொடுங்க, நான் அவங்களுக்குக் குடுக்கறேன். ஒரு மாசம் முழுக்க நான் அவங்கள பார்க்கவே இல்ல. நான் மைராவ ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்றான் க்ரிஷ்.
“ இல்ல க்ரிஷ், நானே போயிட்டு வரேன், மைராவுக்கு பிடிச்ச மஷ்ரூம் ப்ரியாணி சாப்பிடும் போது அவ செய்ற சேட்டைய எனக்கு பார்க்கணும் “ என்று சொல்லி ஆர்ச்சனா சமாளித்தார். அப்போது கேஷவ் அவரிடம், “ நான் அவளுக்கு ஆப்பிள் பை வாங்கி இருக்கேன், அதையும் கொடுங்க மா “ என்றான்.
அர்ச்சனா புன்னகையுடன் அனைவருக்கும் உணவையும் மைராவுக்கு இனிப்பையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். க்ரிஷ், மைராவை சந்திக்க புறப்படவிருந்தான், ஆனால் ரோஷினி அவனை தடுத்துவிட்டாள்.
மைரா இனிப்பு மற்றும் தனக்கு பிடித்த இரவு உணவை சமைத்ததுக்கு கேஷவுக்கு ஒரு சுவையான ஈமோஜியை அனுப்பினாள். மறுநாள் காலையில் அவள் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவர்கள் வீட்டு வாசலில் கார் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.
கேஷவிடம் அதைப் பற்றிப் பேச அவள் அர்ச்சனாவின் வீட்டிற்குச் செல்ல, வசுந்த்ராவும் அவளைப் பின்தொடர்ந்தார். அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த க்ரிஷ் தன் வீட்டில் மைராவைப் பார்த்ததும் உறைந்து போய் நின்றான். புன்னகையுடனும் கண்ணீருடனும் அவன் அவளை நோக்கி விரைந்தான், ஆனால் ரோஷினி அவனை முந்திக்கொண்டு மைராவின் முன் நின்றாள்.
“ எப்படி இருக்க மைரா, நீ பாடுனத பார்த்தேன், ரொம்ப நல்லா பாடுற, வாழ்த்துக்கள். “ என்று ரோஷினி சொன்னதை கேட்டு, “ ரொம்ப நன்றி, உங்க நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்துக்கள் ரோஷினி “ என்றாள் மைரா.
ரோஷினிக்கு மைரா மீதான வெறுப்பு தெரிந்ததும் க்ரிஷ் அவள் அருகில் நின்று, “ எப்படி இருக்க மைரா? “ என்று கேட்டான். அதற்கு அவள், “ நான் சூப்பரா இருக்கேன் க்ரிஷ். நீ ஆபீசுக்கு ரெடியா இருக்க போலிருக்கே? “ என்று புன்னகையோடு கேட்டாள்.
“ ஆமா, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் மைரா “ என்று க்ரிஷ் வருத்தமாக சொன்னான் அப்போது மைரா மெல்லிய புன்னகையோடு, “ நானும் உன்ன மிஸ் பண்ணேன் க்ரிஷ் “ என்று சொன்னாள்.
மைராவின் குரல் கேட்டு அனைவரும் தங்கள் அறையை விட்டு வெளியே வந்ததும், “ கெட்சப், கார் ஏன் எங்க வீட்டு முன்னாடி நிறுத்தி இருக்கு ? “ என்று மைரா கேட்டதும், “ ஏன்னா, நீ புது கார் ஓட்ட முழுசா தயாராகுற வரை அந்த காரை ஒட்டி பழகு “ என்றான் கேஷவ் புன்னகையோடு.
கேஷவின் வார்த்தையை கேட்டதும், “ என்னது? “ என்று அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தோடு கேட்டாள் மைரா.
“ ஒரு மாசத்துக்கு உனக்கு டிரைவரா இருந்து உன்ன வேலைக்கு கூட்டிட்டு போய் திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரவும் அந்த பயிற்றுவிப்பாளர் கிட்ட சொல்லி இருக்கேன். அவர் உனக்கு பயிற்சி தருவாரு. அப்புறம் இன்னைக்கு உனக்கு LLR வாங்கி தருவாரு “ என்றும் கேஷவ் சொன்னதும், “ ரொம்ப நன்றி அங்கிள். ஒரு மாசத்துக்குள்ள நான் லைசன்ஸ் வாங்க தயாரா இருப்பேன் “ என்று உற்சாகமாக சொன்னாள் மைரா.
அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ரோஷினி, “ என்ன கார்? “ என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“ கேஷவ், அவனோட காரை மைராவுக்கு கொடுத்து இருக்கான். அவ ஊட்டியில இருந்த அப்போ அவளுக்கு டிரைவிங் சொல்லி கொடுக்க ஒருத்தர ஏற்பாடு பண்ணி இருந்தான். சொல்லப் போனா அவ இவ்ளோ சீக்கிரம் கத்துக்கிட்டு எங்கள கூட ஒரு டிரைவுக்கு கூட்டிட்டு போனா “ என்று அர்ச்சனா சொன்னார்.
அதை கேட்டதும், “ நீ கார் ஓட்ட கத்துக்கிட்டியா ? “ என்று க்ரிஷ் அதிர்ச்சியோடு கேட்டான்.
அவனிடம் நீண்ட உரையாடலை தவிர்க்க வேண்டி, “ ஆமா, சரி எனக்கு லேட் ஆகுது, அதனால நான் கிளம்புறேன் “ என்று சொன்னவள், “ ரோஜா தோட்டத்துக்கு நன்றி அங்கிள்ள்ள்ள் “ என்று அலறியபடி ஓடினாள். கேஷவ் சிரித்தபடி தலை அசைத்து நின்றான். அதையெல்லாம் கவனித்த க்ரிஷின் இதயத்தில் ஒரு இழுப்பு ஏற்பட்டது, ரோஷினி பொறாமையில் எரிந்து கொண்டிருந்தாள். மைரா வேலைக்குத் தயாரானதும் அவளுடைய பயிற்றுவிப்பாளர் காரில் காத்திருப்பதைக் கண்டாள். அவர் அவளிடம் எல்.எல்.ஆர் கொடுத்து வேலைக்கு அழைத்துச் சென்றார்.
கேஷவும் தயாராகி யாரையோ சந்திக்க வீட்டை விட்டு கிளம்பினான். மைராவை சந்திக்க அன்று மாலை வழக்கத்தை விட சீக்கிரம் வீடு திரும்பிய க்ரிஷ், சட்டென உடை மாற்றிக்கொண்டு வசுந்த்ராவின் வீட்டுக்குள் நுழைந்து மைராவை அழைத்தான். வசுந்தரா சமையலறையை விட்டு வெளியே வந்து அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
“ க்ரிஷ், நீ வேலையில இருந்து சீக்கிரம் வந்துட்டியா ? “ என்று வசுந்தரா கேட்க, “ ஆமா அத்த, மைரா எங்க ? நான் ரொம்ப நாளா அவ கிட்ட சரியா பேசல “ என்றான் க்ரிஷ்.
“ அவ வீட்ல க்ரிஷ் இல்ல. டிரைவிங் கிளாஸ் இருக்கு, அத முடிச்சிட்டு லேட்டா தான் திரும்பி வருவா. நீங்க ரெண்டு பேரும் நல்லா வளர்ந்துட்டீங்க, உங்க வேலை உங்கள ரொம்ப பிஸியா வெச்சுருக்கு. சரி இரு நான் உனக்கு டீ கொண்டு வரேன் “ என்று சொன்னார் வசுந்தரா ஆனால் க்ரிஷ், “ இல்ல அத்த, நான் அப்புறம் வந்து பார்க்குறேன் “ என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
மைராவை சந்திக்க முடியாமல் போனது க்ரிஷுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் மைராவை சந்திக்க வேண்டுமென்றே ரோஷினியை அழைத்து வராமல் முன்னதாகவே வீடு திரும்பினான் ஆனால் இப்போது எல்லாம் வீணாகிவிட்டது. மைரா வீடு திரும்புவதை எதிர்பார்த்து மொட்டை மாடியில் நின்றவன் காரை பார்த்ததும் அவசர அவசரமாக ஓடிய போது ரோஷினி மீது மோதி நிற்காமல் சென்றான்.
வாயிலருகே நின்ற க்ரிஷ், காரில் இருந்து இறங்கி வந்த மைராவைப் பார்த்து புன்னகைத்தான்.
“ நீ ரொம்ப பிஸியா இருக்க போலிருக்கு. எனக்கு ஒரு ரவுண்ட் சவாரி கூட்டிட்டு போக மாட்டிய ? “ என்று க்ரிஷ் புன்னகைத்து கேட்டதும், “ கண்டிப்பா கூட்டிட்டு போறேன் க்ரிஷ் ஆனா நம்ம பிஸியான ரோட்ல ஓட்ட நான் இன்னும் ரெடியா இல்ல “ என்றாள் மைரா.
“ நான் தனியா இருக்க மாதிரி உணர்றேன் மைரா, நீங்க எல்லாரும் என்ன ஒதுக்குறீங்களா ? “ என்று க்ரிஷ் கனத்த குரலில் கேட்க, “ என்ன முட்டாள்தனமா பேசுற ? ஏன் அப்படி நினைக்குற ? “ என்று கேட்டாள் மைரா.
“ எனக்குத் தெரியல, உன் கச்சேரிய பார்க்க என்ன கூப்பிடனும்னு உனக்கு ஒரு முறை கூட தோணலையா ? நம்ம வாழ்க்கையில ஒருத்தர் இல்லாம இன்னொருத்தருக்கு எதுவும் நடந்தது இல்ல ஆனா இப்போ நீ ஒரு மேடையில பாடுனது கூட எனக்குத் தெரியாது “ என்று க்ரிஷ் வருத்தமாக சொன்னான். அதற்கு மைரா அவனிடம், “ அது பிளான் பண்ணி நடக்கல க்ரிஷ். நான் மேடையில பாடுறதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் ப்ரின்சிபால் என்ன கூப்பிட்டு பாட சொன்னாரு. நான் பயிற்சி கொடுத்த பசங்க பாடுறத பார்க்க எல்லாரும் தனித்தனியா தான் அங்க வந்தாங்க. கெட்சப் அங்க இருந்தாரு, ஏன்னா அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பு வாங்கி கொடுத்தாரு “ என்று விளக்கம் அளிக்கம் சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல, க்ரிஷ் அவளை பின்தொடர்ந்தான்.
“ எல்லாமே மாறிட்ட மாதிரி இருக்கு. நாம பிரிஞ்சி போற மாதிரி இருக்கு மைரா, இது ரொம்ப வலிக்குது. நான் என் லவ் பத்தி மறைச்சதுக்கு கோவமா இருந்தா, ஸாரி, என்ன மன்னிச்சிடு “ என்று சொல்லி க்ரிஷ் தேம்பித் தேம்பி அழுதான். அவன் இப்படி இருப்பதைப் பார்த்து மைராவுக்கு வருத்தமாக இருக்க, அவள் அவனை இழுத்து மென்மையாக அணைத்து அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அந்த அணைப்பு சில நொடிகள் மட்டுமே நீடித்தது, அவள் அவனது கண்ணீரைத் துடைத்தபடி பின்வாங்கினாள்.
“ ரொம்ப யோசிக்காத க்ரிஷ். இப்போ நமக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. உனக்கு வருங்கால மனைவி இருக்கா, நீ அவ கூட ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடனும். எந்த எதிர்மறை எண்ணமும் உன் வாழ்க்கையை அழிக்க அனுமதிக்காத. நாம அப்படியே தான் இருக்கோம், எதுவும் மாறல, நீ ரோஷினி கூட நேரம் செலவிடு “ என்று சொல்லி அவனுக்கு மைரா புரியவைத்தாள்.
“ நாம ஒன்ன இருக்க நேரத்த மிஸ் பண்றேன் மைரா. நைட்டு டின்னர் சாப்பிட வெளிய போலாமா ? “ என்று க்ரிஷ் கெஞ்சி கேட்டதும், “ க்ரிஷ் , இனி அப்படி செய்ய முடியாது. எனக்கு முன்னுரிமை கொடுத்து ரோஷினிய கஷ்டப்படுத்தாத. எந்தப் பொண்ணும் அத விரும்ப மாட்டா “ என்று சொன்னாள் மைரா ஆனால் க்ரிஷ் கொஞ்சம் பிடிவாதமாக, “ நான் அவகிட்ட பேசுறேன், அவளுக்கு நம்ம ரெண்டு பேர பத்தி தான் தெரியுமே “ என்று சொன்னான்.
அவன் பிடிவாதத்தை பார்த்து பெருமூச்சு விட்ட மைரா, “ நாம குடும்பத்தோட சேர்ந்து டின்னர் சாப்பிடலாம். நான் ரெடி ஆயிட்டு அங்க வரேன் “ என்று சொன்னாள்.
க்ரிஷ் மனம் புண்பட்டாலும், குடும்பத்துடன் இருந்தாலும் கொஞ்சம் பேசி சாப்பிட்டு மகிழ, வீடு திரும்பி அர்ச்சனாவிடம் மைரா இரவு உணவிற்கு வருவாள் என்று கூறினான்.
ஒரு மணி நேரம் கழித்து மைரா அர்ச்சனாவின் வீட்டிற்குள் நுழைந்து அர்ச்சனாவைத் தேடி நேராக சமையலறைக்குள் நுழைந்தாள்.
“ உன்னோட நாள் எப்படி இருந்துச்சு ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ பிரமாதமா இருந்துச்சு, இப்போ நீங்க சமைச்சத சாப்பிட்ட அப்புறம் இன்னும் பிரமாதமா இருக்கும். சரி வாங்க நான் உங்களுக்கு உதவி செய்றேன் “ என்று சொல்லி உதவ ஆரம்பித்தாள்.
மைராவும், அர்ச்சனாவும் சமைத்த உணவையும், தட்டுக்களையும் மேஜை மீது வைத்தார்கள். க்ரிஷ் ஓடிப்போன பிறகு அறையில் தன்னை அடைத்துக் கொண்ட ரோஷினி, மைரா சிரிப்பதையும் அர்ச்சனாவுக்கு உதவுவதையும் பார்த்து ரத்தம் கொதிப்பது போல உணர்ந்தாள். மதனும், கேஷவும் க்ரிஷுடன் அமர்ந்தனர், ரோஷினி அவர்களுக்கு எதிரே அமர்ந்தாள், நீண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மைராவைப் பார்த்ததில் க்ரிஷ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
“ மைரா, நாம ஒன்னா சாப்பிடலாம்னு தானே நீ சொன்ன, இப்போ வந்து உட்காரு “ என்று சொல்லி மைராவின் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைக்க இழுத்தான் ஆனால் ரோஷினி மைராவின் இன்னொரு கையைப் பிடித்து தடுத்து, “ மைரா, அது என் சீட், உனக்கு புரியும்னு நினைக்குறேன் அதனால ப்ளீஸ் மாமா பக்கத்துல உட்காரு “ என்று கூறினாள்.
மைரா தலையசைத்து க்ரிஷின் பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டு மதனுக்கும் கேஷவுக்கும் நடுவில் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள். உடனே மதன் அவள் உள்ளங்கையை அழுத்தி அவளை சமாதானம் செய்தார். அர்ச்சனா உணவு பரிமாறும் போது தன் அப்பா சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த மைராவை க்ரிஷ் பார்த்தான்.
“ மைரா, ஊட்டியில வேலை செய்ற வாய்ப்பு உனக்கு எப்படி கெடச்சது ? “ என்று ரோஷினி கேட்க, “ கெட்சப் எனக்கு அந்த வாய்ப்பு வாங்கி கொடுத்தாரு. அவரோட ப்ரெண்ட் அந்த ஸ்கூல் ப்ரின்சிபால் “ என்று மைரா பதில் சொன்னாள். அதை கேட்டதும், “ ஓஹோ, அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது நல்லா பயணப்படுத்து. எல்லாருக்கும் இப்படி உதவ ஆள் கிடைக்க மாட்டாங்க. என்னையும், க்ரிஷையும் பாரு, நாங்க கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதாப் போச்சு, காலேஜ்ல இருந்து வேலை கிடைச்சது, நான் இப்போ இருக்கிற வேலை கிடைக்க 3 ரவுண்ட் இன்டர்வியூ நடந்துச்சு “ என்று சொல்லி அவளை மட்டம் தட்டி பேசினாள் ரோஷினி.
அவள் வார்த்தையை கேட்டதும், ரோஷினியைத் தவிர எல்லோரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள். மதன் புன்னகையுடன் தட்டில் இருந்து ஒரு பர்ஃபியை எடுத்து மைராவுக்கு ஊட்டிவிட்டு, “ லட்சக்கணக்கான மக்கள் அவங்களோட உயிர தியாகம் பண்ணதால தான் நமக்கு சுதந்திரம் கெடச்சுது. மத்தவங்க பிரச்சாரம் செய்யாம நம்ம அரசியல்வாதிங்க கூட ஜெயிக்குறது இல்ல. கடைசியில நமக்கு கிடைக்குற வாய்ப்ப நாம சரியா பயன்ப்படுத்துறோமானு தான் முக்கியம், அதாவது உனக்கு கிடச்ச வாய்ப்ப நீ பயப்படுத்துன மாதிரி. அதுக்காக இப்போ நாம கொண்டாடனும் “ என்று சொல்லி அர்ச்சனா, கேஷவ், க்ரிஷ் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கினார், மதன் இனிப்பை ரோஷினியிடம் கொடுத்ததும் அவள் உடனடியாக மறுத்துவிட்டாள்.
“ இல்ல மாமா, நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன். என்னோட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், என் உடம்ப பராமரிக்குறதுல ரொம்ப கவனமா இருப்பேன் இல்லனா எடை அதிகம் ஆயிடும் “ என்று சொல்லி மைராவை மட்டம் தட்டி சொன்னாள்.
“ ஒரு ஸ்வீட் சாப்பிட்டா எடை அதிகரிக்காது ரோஷினி “ என்று க்ரிஷ் பல்லை கடித்துக் கொண்ட சொல்ல, “ க்ரிஷ், நான் அழகா இருக்கேன்னு பாராட்டுற, அது அவ்ளோ சுலபமா வராது “ என்று கூறினாள்.
கேஷவ் தன் அப்பாவிடம் இருந்து ஸ்வீட் இருந்த தட்டை வாங்கி தன் தட்டிலும், மைராவின் தட்டிலும் மேலும் இனிப்புகளை வைத்து, மைராவை புன்னகையுடன் சாப்பிட சைகை செய்தான்.
“ இதெல்லாம் உன்னோட வெற்றிய கொண்டாட நான் வாங்கிட்டு வந்த ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், “ எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப புடிக்கும் அதனால நீங்க எவ்ளோ கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன் “ என்று புன்னகையோடு சொன்ன மைரா, கையை உயர்த்தி காட்டியதும், கேஷவ் அவள் உள்ளங்கையில் hifi செய்த பின் இருவரும் தொடர்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டு முடித்ததும், “ எனக்கு களைப்பா இருக்கு, அதனா நான் இப்போ கிளம்புறேன் “ என்று சொல்லி எழுந்த மைரா அர்ச்சனாவை அணைத்துக் கொண்ட பின் கிளம்பினாள். அறைக்குள் நுழைந்ததும் கோபத்தில் ரத்தம் கொதிப்பதை உணர்ந்தாள். கண்ணாடி முன் நின்று, ‘என்னோட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், என் உடம்ப பராமரிக்குறதுல நான் ரொம்ப கவனமா இருப்பேன் இல்லனா எடை அதிகம் ஆயிடும் ‘ என்று ரோஷினியை போல் மிமிக்ரி செய்தாள்.
“ என்ன அசிங்கப்படுத்தி நீ ஜெயிச்சதா நெனச்சா அது ரொம்ப தப்பு. யாரும் என் மனச கெடுக்க நான் விடமாட்டேன், அதுவும் முக்கியம் உன்ன தான்டி பல்லி. சாப்பாடு தான் என் வாழ்க்க, நான் எவ்ளோ வேணும்னாலும் சாப்பிடுவேன், ஒரு நாளைக்கு நாலு வேளை கூட சாப்பிடுவேன், நான் என்ன ஸ்வீட் வேணும்னாலும் சாப்பிடுவேன், எடை அதிகம் ஆகுறத பத்தி யார் கவலைப்படுவாங்க ? என் அப்பா அம்மா, மாமா, அத்தை, எல்லாரும் நான் அழகா இருக்கேன்னு சொல்லி இருக்காங்க. கெட்சப் கூட ப்படி தான் நினைக்குறாருனு நினைக்குறேன். அதனால நான் சந்தோஷமா இருக்கேன், நீ நரகத்துக்கு தான் போவ…..அய்யோ, இல்ல இல்ல வேணாம் அப்புறம் க்ரிஷும் உன் பின்னாடி நரகத்துக்கு போக வேண்டி இருக்கும் அதனால அவனுக்காக போருத்துக்குறேன். என் கண்ணுல படாம எங்கேயாச்சும் போ “ என்று புலம்பி விட்டு, பெருமூச்சு விட்டுக் கொண்டு படுக்கையில் படுத்து போர்வையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
மர்மப் பாடகரின் பாடல்களை கேட்டுக் கொண்டே கண்களை மூடி அவனது இனிமையான குரலைக் கேட்டு உறங்கினாள். அவனது பாடல்கள் அவளுக்கு மருந்தாக இருந்தன, ஒவ்வொரு இரவும் அவள் தூங்க முடியாத போது, அவனது பாடல்களைக் கேட்கப் பழகிவிட்டாள்.
****************************************
முன்னோட்டம்:
சில நேரத்துல என் வாழ்க்கையில என்ன லவ் பண்ற ஒருத்தர் இருக்கணும்னு நினைக்குறேன், எல்லார்கிட்டயும், பாருங்க இவர் தான் என் புருஷன், என்ன லவ் பண்றாருனு காட்ட நினைக்குறேன். மத்த நேரத்துல அந்த பல்லி எனக்கு கொடுக்குற தொல்லைக்காக நான் ஏன் கட்டாயத்துல ஒரு முடிவு எடுக்கனும்னு தோணுது.

2 comments
[…] ரோஜா தோட்டத்துக்கு நன்றி அங்கிள் […]
[…] 20.ரோஜா தோட்டத்துக்கு நன்றி அங்கிள் […]