Home Family19. ரொம்ப அழகா இருக்க அம்மு

19. ரொம்ப அழகா இருக்க அம்மு

by Siragugal Novels
22 views

மைரா மாணவர்களை நம்பிக்கையுடன் இருக்குமாறு ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தினாள். மேடையில் நிகழ்ச்சி நடத்த அவளது மாணவர்களின் முறை வந்ததும் அவள் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியேறி மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவர்கள் பாடுவதை கேட்க ஆவலாய் இருந்தாள்.

மாணவர்கள் பாட ஆரம்பித்ததும், கேஷவ்  தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் கைகளை அசைத்ததும் அவன் புன்னகையுடன் பதிலுக்கு அசைத்தான். ராகேஷ் அவளை அழைத்ததாக பியூன் மைராவிடம் தெரிவித்ததும் அவள் அவரை பார்க்க சென்றாள்.

மாணவர்கள் நம்பிக்கையுடன் பாடுவதைக் கண்டு மைராவின் முழு குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது, அனைவரும், அவர்களுக்கு எழுந்து நின்று கைதட்டினர். நைனா ஒரு குறும்புப் புன்னகையுடன் அவர்களை பார்த்துவிட்டு மதனின் அருகில் அமர்ந்தாள்.

“ இப்ப உன் சிரிப்புக்கு என்ன அர்த்தம் ? “ என்று அர்ச்சனா கேட்க, “ஏதோ நடக்கப் போகுது, அதுக்காக நான் சந்தோஷமா இருக்கேன் “ என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.

“ நைனா, என்ன விஷயம் ? “ என்று வசுந்தரா கேட்டார் ஆனால் நைனா அது ஒரு ரகசியம் என்பதை உணர்த்தும் வகையில் வாயை மூடிக்கொண்டாள். மேடையில் பேசிய ஆசிரியை ஒரு சிறப்பு நிகழ்ச்சியை அறிவித்ததும் திரை மூடப்பட்டது. ஒரு நிமிடம் கழித்து திரை விலக்கப்பட்டதும், மேடையில் மைராவும் அவளுக்கு அருகில் சில மாணவர்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு முழு குடும்பமும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியப்பட்டனர். மைரா பார்வையாளர்களைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு பாட தொடங்கினாள்.

அலைபாயுதே–கண்ணா! என்மனம் மிக
அலைபாயுதே–உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம் என் மணமாலைப்பாயுதா கண்ணா ஆஆஆ…

அலைபாயுதே கண்ணன் மனம் அலைபாயுதே

மைரா முழு பாடலையும் பாடி முடித்து கண்களைத் திறந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவதைக் கண்டாள். அவள் முதல் முறையாக மேடையல் பாடுவதையும்,  பார்வையாளர்களின் அன்பையும் பார்த்து ஆனந்த கண்ணீர் சிந்தி நின்ற அவளது குடும்பத்தினரை அவளது கண்கள் சந்தித்தன. கேஷவ் சூப்பர் என்று சைகை காட்ட, அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

நிகழ்ச்சி முடிந்ததும் மைராவும், நைனாவும் குடும்பத்தினரிடம் திரும்பினர், வசுந்தரா அவளை கட்டிப்பிடித்தார், அர்ச்சனா அவளுக்கு முத்தமழை பொழிந்தார். ராஜனும், மதனும் ஆசி வழங்கினர். அவள் கேஷவ்  பக்கம் திரும்பியதும் அவன் அவளை கட்டிப்பிடித்து அவள் தலையில் அன்பாக தட்டினான்.

“ செம்ம சூப்பரா பாடுன அம்மு, எனக்கு ஒரு ஆட்டோகிராப் தர முடியுமா? “ என்று கேஷவ் கேட்க, அதற்கு மைரா அவனை பார்த்து, “ என்ன கேலி செய்றத நிறுத்துங்க கெட்சப். இப்போ வீட்டுக்குப் போகலாம், எனக்கு செம்ம பசி, இன்னைக்கு நல்லா காரமா ருசியா சாப்பிட ஆசையா இருக்கு “ என்று சொன்னாள் ஆனால் புறப்படுவதற்கு முன் அவனிடம், “ ஒரு நிமிஷம் கெட்சப், இந்த புடவைக்கு ரொம்ப நன்றி. எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு, இந்த புடவையில தான் என்னோட முதல் மேடை நிகழ்ச்சி நடந்திருக்கு அதனால இது எனக்கு இது ரொம்ப ஸ்பெஷல் “ என்று உருக்கமாக சொன்னாள்.

“ உனக்கு புடிச்சதுல ரொம்ப சந்தோஷம், ரொம்ப அழகா இருக்க அம்மு. இன்னைக்கு நீ சூப்பரா பாடுனதால நான் எல்லாருக்கும் ட்ரீட் தரேன், வாங்க போகலாம் “ என்று சொன்னான் கேஷவ்.

அவர்கள் இரண்டு கார்களில் ஏறி ஒரு உணவகத்தை அடைந்து தங்களுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் ஆர்டர் செய்தனர். மைராவும், நைனாவும் அவளது இசை நிகழ்ச்சி, குடும்பத்தினருடன் இரவு உணவு மற்றும் செல்ஃபிக்ள் என நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றினர். கேஷவ் தனது சமூக ஊடகங்களில் அவள் பாடிய வீடியோவை வெளியிட்டான். மைராவும், நைனாவும் அதை லைக் செய்தனர்  மற்றும் அவனது பாராட்டு தலைப்புக்கு நன்றி தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் சென்னையில் க்ரிஷனும், ரோஷினியும் படம் முடிந்து வீடு திரும்பினர். உடை மாற்றிக்கொண்டு தண்ணீர் பாட்டிலுடன் ரோஷினியின் அறைக்குள் நுழைந்த க்ரிஷ், அவள் அதே உடையில் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.

“ நீ ஏன் இன்னும் டிரஸ் மாத்தல ரோஷினி? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ நம்ம குடும்பத்துல என்ன நடக்குது தெரியுமா? “ என்று கேட்டாள் ரோஷினி.

க்ரிஷ் இல்லை என்று தலையை அசைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்ததும், ஊட்டியில் இருந்த முழு குடும்பத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை ரோஷினி காண்பித்தாள். க்ரிஷ்  புகைப்படங்களைப் பார்த்து உணர்ச்சியற்றவனாக இருந்தான்.

“ மாமாவும் அத்தையும் என்ன ஏத்துகிட்டாங்கனு நெனச்சேன் ஆனா எதுவும் மாறலனு தெரியுது. அவங்க இன்னும் நீ மைராவ கல்யாணம் செய்வனு நம்புறாங்க “ என்று விரக்தியுடன் கூறினாள். ரோஷினி. அதை கேட்டதும், “ ரோஷினி இப்படி எதையாவது  உளறிட்டு இருக்காத “ என்று க்ரிஷ் கோவமாக சொன்னான்.

“ அவங்கள பார்த்தியா ? அவங்க குடும்பமா சந்தோஷமா இருக்காங்க, அப்போ நாம யாரு? நாம அவங்க குடும்பம் இல்லையா? மைராவோட மேடை நிகழ்ச்சிய பார்க்க போறத பத்தி உன்கிட்ட சொன்னாங்களா ? குறைந்த பட்சம், உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட் மேடையில நிகழ்ச்சி நடத்த போறதா உன்கிட்ட சொன்னாளா ? அவங்க நம்ம ரெண்டு பேரையும் ஒதுக்குறாங்க க்ரிஷ். நம்ம ரெண்டு பேரையும் இங்க தனியா விட்டு போனதுக்கு அவங்க யார் முகத்துலையும் கொஞ்சம் கூட வருத்தம் இல்ல “ என்று அவன் மூளையை குடுமபத்துக்கு எதிராக சலவை செய்தாள்.

“ நம்ம லவ் பண்றத அவங்க கிட்ட இருந்து மறைக்க ஒரு காரணம் இருந்த மாதிரி அவங்களுக்கும் ஏதாவது காரணம் இருந்துருக்கும் “ என்று க்ரிஷ் கூறினான் ஆனால் ரோஷினி,” நாம ஒன்னும் கல்யாணம் பண்ணல க்ரிஷ், லவ் பண்றத அவங்க கிட்ட இருந்து மறைச்சோம் அப்புறம் நீ அவங்க முன்னாடி தானே எனக்கு ப்ரொபோஸ் பண்ண ? அவங்க நம்மள ஒதுக்கி அவமானப்படுத்துறாங்க. நீ இத பத்தி அவங்க கிட்ட கேட்டே ஆகணும். முடியாதுனு சொல்லாத, நான் பொறுத்துக்க மாட்டேன் “ என்று சீறிவிட்டு தனது மொபைலை வீசி எறிந்துவிட்டு உடை மாற்றுவதற்காக பாத்ரூமுக்குள் சென்றாள்.

க்ரிஷ் தன் அறைக்குத் திரும்பி மொபைலில் புகைப்படங்களைப் பார்த்து புன்னகைத்தபடி மைரா பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களையும் லைக் செய்தான், மேலும் அவளது பாடுவதை  பார்த்து மகிழ்ச்சியடைவதாக கருத்து பதிவிட்டான்.

“ ரோஷினி சொன்ன மாதிரி நான் தனியா இருக்கேனா? ஆனா நான் தனியா இருக்க விரும்பல். எனக்கு நீங்க எல்லாரும் வேணும்.” என்று க்ரிஷ் சொன்ன போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, காலடி ஓசையைக் கேட்டு அவன் கண்ணீரை துடைத்துக் கொண்டு மிகவும் கோபமாக இருந்த ரோஷினியைப் பார்த்து புன்னகைத்தான். க்ரிஷ் கையிலிருந்த மொபைலை பிடுங்கி அவன் பதிவிட்ட கமெண்டை டெலிட் செய்துவிட்டு மைராவின் அனைத்து பதிவுகள் மற்றும் வீடியோக்களையும் அன்லைக் (unlike) செய்தாள். க்ரிஷ் தன் கண்ணீரை விழுங்கி எதுவும் பேசாமல் நின்றான்.

“ க்ரிஷ், உனக்கு நான் இருக்கேன், அப்புறம் இப்போ நான் பண்ணதுக்கு என் மேல வருத்தபப்டாத. நம்ம குடும்பமா இருந்தாலும், உன்ன யாரும் அவமானப்படுத்துறத என்னால பார்க்க முடியாது. நம்ம சுயமரியாதையையும், தன்மானத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது. ஐ லவ் யூ. எல்லாரும் உன் மேல அன்பு காட்டணும்னு தான் நான் விரும்புறேன் “ என்று சொல்லி ரோஷினி அவனை கட்டிப்பிடித்து முத்தமிட ஆரம்பித்தாள். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து உறங்க, ரோஷினி அவன் தூங்கும் வரை அவன் தலை முடியை வருடினாள்.

ஊட்டியில் அடுத்த நாள் அதிகாலையில் கேஷவ் சென்னை திரும்ப தயாராக இருந்தான் அப்போது மைரா கையில் ஒரு பரிசுடன் அவன் முன் நின்றாள்.

“ கெட்சப், நான் செய்த வேலைக்கு பணம் கெடச்சுது அதுல இருந்து உங்களுக்கு ஒரு பரிசு வாங்கி இருக்கேன். எனக்கு இந்த வாய்ப்பு வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி கெட்சப். நீங்க எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கீங்க, வாழ்க்கையில் வர சவால்கள எதிர்கொள்ள தயாரா இருக்குற ஒரு நம்பிக்கையான பொண்ணா நான் என்ன பார்க்க்குறேன். எல்லாதுக்கு ரொம்ப நன்றி “ என்று சொல்லி மைரா அவனுக்கு பரிசை கொடுத்தாள் ஆனால் கேஷவ் பரிசை வாங்காமல், அவளை பார்த்து, “ நீ எனக்கு நன்றி சொல்ல வேணாம் அம்மு, நான் செய்தது உதவி இல்ல, எனக்கு உன் மேல இருக்க அக்கறை… அப்புறம்… அப்புறம்… “ என்று அதற்கு மேல் சொல்லாமல் இழுத்தான். பின்னர், “ சரி அத பத்தி பேச வேணாம், நான் என்ன சொல்ல வந்தேன்னா, நீ எனக்கு நன்றி சொல்லி காயப்படுத்துற “ என்று கூறினான்.

“ சரி, நான் நன்றி சொல்ல மாட்டேன் ஆனா முதல் முறையா என்னோட வெற்றிய பகிர்ந்துக்க இந்த பரிச ஏத்துக்கலாமே. அது மட்டும் இல்ல முதல் முறையா நான் உங்களுக்கு இத வாங்கி இருக்கேன் “ என்று மைரா கெஞ்சும் பார்வையுடன் கேட்டதும் கேஷவ்  சிரித்துக் கொண்டே அவளிடமிருந்து பரிசை வாங்கிக் கொண்டான். அவன் அதைத் திறந்து பார்த்ததும் அதில் ஒரு மென்மையான இளஞ்சிவப்பு நிற சட்டை இருந்தது.

“ நல்லா இருக்கு அம்மு, எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா பெருமூச்சு விட்டு, “ நல்லவேள, உங்களுக்கு புடிச்சுது. உங்களுக்கு புடிக்குமா இல்லையானு எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்புறம் நேத்து எல்லாரும் உங்கள பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க. டீச்சர்ஸ் எல்லாரும் உங்கள சைட் அடிச்சிட்டு இருந்தாங்க, அதோட உங்கள பத்தி தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்காங்க “ என்று கிண்டளாக கூறினாள்.

மைராவின் வார்த்தையை கேட்டதும் கேஷவ் ஒரு புன்னகையுடன் காரில் சாய்ந்தபடி தலைமுடியை விரல்களால் கோதிவிட்டான்.

“ ஆண்களுக்கு வயசு அதிகம் ஆகும் போது பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்கனு சொல்றது சரி தான் நினைக்குறேன். நீ என்ன சொல்ற அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, “ அப்போ நீங்க அங்கிள் தான்னு ஒத்துக்குறீங்களா ? “ என்று கேட்டு மைரா சிரித்தாள்.

“ இவ்ளோ கொடூரமா இருக்காத அம்மு, நான் அழகா இருக்குறத பத்தி சொன்னேன், நீயும் அத பத்தி ஏதாவது சொல்லி இருந்தா நான் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பேன் “ என்று கேஷவ் சொன்னதும்,  நிச்சயமா என் அங்கிள் அழகானவரு தான் அதனால உங்க மொபைல் நம்பர கேட்ட டீர்ச்சர்ஸ் எல்லாருக்கும் கொடுக்கட்டுமா ? “ என்று கேட்டு குறும்பு சிரிப்புடன் புருவத்தை உயர்த்தினாள்.

“ நீ எனக்கு சப்போர்ட் பண்ணி எனக்கு பாதுக்காப்பா இருப்பனு நெனச்சேன் அம்மு, தயவு செஞ்சு இப்படி பண்ணாதா “ என்று கேஷவ் கெஞ்சினான். அதற்கு மைரா அவனிடம், “ அதுக்கு கொஞ்சம் செலவாகும் மை டியர் கெட்சப் “ என்று சொல்லி புன்னகைத்தாள்.

கேஷவ் அவள் காதை பிடித்து திருகிக் கொண்டே அவளுக்காக வாங்கி வந்த சாக்லேட் பெட்டியை நீட்ட, அவனிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்ட உற்சாகத்தில் மைரா சத்தமாக சிரித்தாள்.

“ உன்னோட பொருட்கள பேக் பண்ணிட்டு சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷன் கிளம்பு. உங்க எல்லாரையும் கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்டிட்டு போக ராகேஷ் டிரைவர் அனுப்புவான். பத்திரமா வீட்டுக்கு வா, வேற எதுனாலும் எனக்கு போன் பண்ணு “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு மைரா சரி என்று முணுமுணுத்தபடி ஒரு சாக்லேட்டை வாயில் போட்டு கொண்டு ஒன்றை கேஷவிடம் நீட்டினாள், அவன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான்.

“ நான் வீட்டுக்கு வந்ததும் எனக்கு ஆப்பிள் பை வேணும், வாங்கி வையுங்க கெட்சப் “ என்று மைரா சொல்ல, கேஷவ் சரி என்று சொல்லி இருவரும் ஒருவருக்கொருவர் கையசைத்து விடைபெற்றனர், அவன் காரை ஓட்டிச் சென்ற பிறகு மைரா தனது அறைக்குத் திரும்பினாள்.

மைரா மற்றும் குடும்பத்தினர் ராகேஷின் வீட்டிற்கு சென்று, ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் செய்த உதவிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தனர்.

“ நீங்க எனக்கு கொடுத்த வாய்ப்புக்கு ரொம்ப நன்றி, நான் உங்க நம்பிக்கைய காப்பாத்திடேன்னு நம்புறேன் “ என்று மைரா சொன்னதும், “ நீங்க ரொம்ப நல்லா உங்க வேலைய பண்ணீங்க மைரா. பசங்க எல்லாரும் ரொம்ப நல்லா பாடுனாங்க. அதோட நீங்க பாடுனது எல்லாருக்கும் ரொம்ப புடிச்சுது. நான் உங்கள பாட சொல்லி கேட்டதும் ஒத்துகிட்டதுக்கு நன்றி. நாங்க உங்கள மிஸ் செய்வோம், எதிர்காலத்துல எங்களுக்கு உதவ நீங்க வருவீங்கன்னு நம்புறேன் “  என்றார்.

“ உங்க எல்லார் கூடவும் வேலை பண்ணதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி. நாங்க காட்டேஜ் சுத்தம் பண்ணிட்டோம், எங்கள அங்க தங்க வெச்சதுக்கு ரொம்ப நன்றி. அது ரொம்ப அழகா இருந்துச்சு. எனக்கு அங்க நிறைய நினைவுகள் இருக்கு “ என்று சொன்னாள் மைரா.

இறுதியாக அவர்கள் அவர் வீட்டிலிருந்து வெளியேறினர், மைரா தனது இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது அவள் திடீரென்று கதறத் தொடங்கி நைனாவை அணைத்துக் கொண்டாள்.

“ என்ன ஆச்சு மைரா? “ என்று நைனா கேட்டதும், “ நைனா, அந்த மர்மப் பாடகர் நான் பாடுனத லைக் பண்ணி இருக்காரு “ என்று சொன்னாள். அதை கேட்டதும், “ அய்யோ கடவுளே! மைரா அப்போ நீயும் இப்போ பிரபலம் ஆயிட்ட, ஆனா நீ பாடுனது அவருக்கு எப்படி தெரியும் ? “ என்று கேட்டாள் நைனா.

“ எனக்குத் தெரியாது, ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் நைனா. இப்போ நான் அப்படியே வானத்துல பறந்துட்டு இருக்கேன் “ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அவளுக்கு பிடித்த பிரபலம் லைக் செய்ததுக்கு அவள் உற்சாகத்தை பார்த்து அனைவரும் சிரித்தனர். கோவை சென்றடைந்தவர்கள் அங்கிருந்து சென்னை திரும்ப ரயிலில் ஏறினர்.

****************************************

முன்னோட்டம்:

“ இதெல்லாம் உன்னோட வெற்றிய கொண்டாட நான் வாங்கிட்டு வந்த ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அம்மு “

 

அடுத்த அத்தியாயம்

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 12:50 pm

[…] ரொம்ப அழகா இருக்க அம்மு […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:39 am

[…] 19.ரொம்ப அழகா இருக்க அம்மு […]

Leave a Comment

error: Content is protected !!