க்ரிஷ் கத்துவதை கேட்டு அர்ச்சனா சமையலறையில் இருந்து பதறிபோய் வெளிய வந்தார். வழக்கம் போல க்ரிஷும், ரோஷினியும் சண்டையிட்டு கொண்டிருந்தனர் ஆனால் இந்த முறை அவர்களின் சண்டை ஹாலில் நடந்தது.
“ க்ரிஷ், உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? “ என்று அர்ச்சனா கேட்டார்.
“ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடந்தாலும் சரி பண்ணிடுவீங்கன்னு நினைச்சு தான் இத்தன நாள் அமைதியா இருந்தோம். நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாத நாளே இல்ல. உங்க பிரச்சின தான் என்ன? “ என்று மதன் கோவமாக கேட்டதும், “ எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல மாமா. வழக்கமா தம்பதிங்க நடுவுல நடக்குற சண்ட தான் “ என்றாள் ரோஷினி.
“ வழக்கமான சண்டையா? நானும் அர்ச்சனாவும் சண்டை போட்டு பார்த்திருக்கீங்களா? க்ரிஷ், நானோ உன் அம்மாவோ எதுக்காச்சும் சண்ட போட்டு பார்த்து இருக்கியா ? ராஜனும், வசுந்தராவும் சண்ட போட்டு பார்த்து இருக்கியா ? “ என்று மதன் கேட்டார். அதற்கு க்ரிஷ் பதில் சொல்வதற்குள் ரோஷினி அவர் முன் சென்று, “ நாம செய்ற எல்லாத்துலையும் அவங்கள ஏன் கொண்டு வரீங்க ? நம்ம குடும்பத்த பத்தி மட்டும் பேசுவோம் “ என்று சொன்னாள்.
“ இது தான் அவளோட பிரச்சன. நான் மைரா, மாமா, அத்த பத்தி பேசுனா ஒரு பிரச்சனை, நான் அவங்கள பத்தி பேசாம இருந்தா அதுவும் பிரச்சன. இவ மனசு மைராவையும், அவ குடும்பத்தையும் சுத்தியே சுழலுது, எங்களுக்கு ஒரு வாழ்க்க இருக்குனு கூட மறந்துட்டா. மைராவ ஏளனம் செய்றது, சபிக்குறது தவிர வேற எதுவும் பேசுறது இல்ல. இத்தன மாசமா இவளோட சித்திரவதைய அனுபவிச்சு நான் நொந்து போயிட்டேன், என்னால இதுக்கு மேல முடியாது “ என்று சொல்லி க்ரிஷ் உடைந்து போனான்.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டா அர்ச்சனாவும், மதனும் அதிர்ச்சியில் இருவரையும் பார்த்தார்கள்.
“ இதுக்கு மேல முடியாதுனா என்ன அர்த்தம் ? இதுல மைரா, அவளோட அப்பா அம்மா ஏன் உங்க சண்டையில வர்றாங்க? நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணீங்க, நிச்சயதார்த்தம் பண்ணனும் நீங்க தான் முடிவு பண்ணீங்க, அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செய்யவும் நீங்க தான் முடிவு பண்ணீங்க. உங்க வாழ்க்கையில அவங்க எதுவும் சொல்லவோ, செய்யவோ இல்ல. உங்க நிச்சயதார்த்தத்துல கூட அவங்க கலந்துக்கல “ என்று அர்ச்சனா கோவமாக சொன்னார்.
“ இவன் இப்போ என்ன லவ் பண்றான்னு எனக்கு தோணல. அவனோட நினைப்பு எல்லாம் இப்போ என்ன சுத்தி இல்ல “ என்று ரோஷினி சொன்ன அதுத்த நொடியே மதன் பொறுமை இழந்தார்.
“ கொஞ்சமாச்சும் உனக்கு மனசாட்சி இருக்கா ரோஷினி. என்ன நடக்குதுனு நான் பார்த்துட்டு தான் இருக்கேன். நீ சொல்றது எல்லாமே க்ரிஷ் செய்றான். உன்ன டூர் கூட்டிட்டு போறான். லஞ்ச், டின்னர், தியேட்டர், ஷாப்பிங் இன்னும் என்னலாம் அவன் செய்யல உனக்கு ? இப்ப அவனோட குடும்பத்துக்கு கூட அவன் நேரம் ஒதுக்குறது இல்ல அப்படி இருந்தும் அவன குறை சொல்றியா ? “என்று கடுமையான குரலில் கேட்டார் மதன். ஆனால் அர்ச்சனா, “ ரோஷினிக்கு தாழ்வுமனப்பான்ம இருக்கு க்ரிஷ், அத சரி செய்ய முயற்சி பண்ணு “ என்று பொறுமையாக எடுத்து சொன்னார்.
“ நீங்க ரெண்டு பேரும் இப்ப குழந்தைங்க இல்ல. ரெண்டு பேரும் கொஞ்சம் அறிவோடு நடந்துக்க முயற்சி பண்ணுங்க, உட்கார்ந்து பேசுங்க. எப்பவும் போல மறுபடியும் அவசரமா முடிவு எடுக்காதீங்க. பொறுமையா பிரச்சனைய சரி செய்ய முயற்சி பண்ணுங்க. அப்படி முடியலனா ரோஷினியோட அப்பா, அம்மாவ வர சொல்லி அவங்க முன்னாடி பேசுவோம். நீங்க ரெண்டு பேரும் உங்க வாழ்க்கையில சந்தோஷமா இருக்கணும்னு தான் நாங்க நினைக்குறோம் அப்படி இல்லனா நீங்க எடுக்குற முடிவு எதுவா இருந்தாலும் நாங்க அதுக்கு துணையா இருப்போம் “ என்று உறுதியாக சொன்னார் மதன்.
“ தேவைப்பட்டா, ஒரு ஆலோசகர் கிட்ட போங்க அது உங்க உறவ சரி செய்ய உதவும் இல்ல எங்கள விட்டு விலகி வாழ்ந்தா உங்க வாழ்க்க பிரச்சன இல்லாம நல்லா இருக்கும் நெனச்சா நீங்க வேற ஒரு வீடு பார்த்து தனியா கூட போங்க, அதுக்கு நாங்க எந்த தடையும் சொல்ல மாட்டோம் ஆனா யோசிச்சு முடிவு எடுங்க “ என்று அர்ச்சனா நிதானமாக புரிய வைக்க முயற்சித்தார். ஆனால் க்ரிஷ் உடனே, “ நான் உங்கள விட்டு விலகி வாழ விரும்பல “ என்று உறுதியாக சொன்னான்.
“ இது இனி உன்ன பத்தி மட்டும் இல்ல க்ரிஷ். நீங்க ரெண்டு பேரும் நிச்சயம் பண்ணி கிட்டத்தட்ட பத்து மாசமா ஒரே வீட்ல இருக்கீங்க. நீங்க தனியா போனா நாமா சந்திக்காம இருக்க போறதா அர்த்தம் இல்ல. இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுபுடிக்கணும் அதனால கொஞ்சம் யோசி. இது உன்னோட வாழ்க்க “ என்று சொல்லி அர்ச்சனா கவலையில் பெருமூச்சு விட்டார்.
அதற்குள் சற்று அமைதியடைந்த மதன், “ முதல்ல ரெண்டு பேரும் எப்போ பார்த்தாலும் கத்துறத நிறுத்துங்க. அமைதியான இடத்துக்கு போய் உங்களுக்கு என்ன வேணும்னு பொறுமையா பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்த சந்தோஷமான நாட்கள பத்தி நெனச்சு பார்த்து இப்போ என்ன தப்பு செய்றீங்கனு கண்டுபுடிங்க “ என்று சொன்னார்.
மதனும், அர்ச்சனாவும் அறிவுரை சொல்லிவிட்டு தங்கள் அறைக்கு சென்ற பின் க்ரிஷ் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தான்.
ரோஷினி தன் அறைக்குத் திரும்பி கண்ணாடி முன் நின்று விரக்தியுடன் தலைமுடியைப் பிடித்து இழுத்தாள்.
“ உனக்கு எவ்ளோ தைரியம் க்ரிஷ்? நீ மைராவ பத்தி தான் நெனச்சுட்டு இருக்கனு எனக்கு தெரியும், அவ என்ன ஜெயிக்க நான் விடமாட்டேன். ரொம்ப வருஷமா நீங்க ரெண்டு பேரும் ஓட்டிக்கிட்டு சுத்துனது நிறைய பார்த்துட்டேன், உன்ன அவகிட்ட இருந்து பிரிக்க என்னலாம் செய்யணுமோ எல்லாத்தையும் பண்ணேன். வாழ்க்கையில அவ விரும்புறது எல்லாம் ஏன் அவளுக்கு கிடைக்கணும் ? உங்க எல்லாரோட கவனுமும் அவ மேல இருந்த மாதிரி என் மல் இருக்கணும்னு நான் நெனச்சேன், அத நான் அடைஞ்சே தீருவேன். ஒவ்வொரு முறையும் நான் அவள காயப்படுத்தும் போது, அவ கஷ்டப்படுறத பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கும். நான் அவளுக்கு இன்னும் அதிக வலிய கொடுப்பேன், அது உன்ன கல்யாணம் பண்ணா தான் நடக்கும்னா அப்போ நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும் “ என்று சொன்னவள், நைட் ஸ்டாண்டில் இருந்து நிச்சயதார்த்த போட்டோவை எடுத்து க்ரிஷின் முகத்தை பார்த்து சிரித்தாள்.
“ உனக்கு என் மேல இருந்தது வெறும் ஈர்ப்பு மட்டும் தான்னு எனக்கு எப்போவோ தெரியும். உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா ? எனக்கும் அதே உணர்வு தான் உன் மேல. இந்த லவ் எல்லாம் இல்ல ஆனா என்னால உன்ன சுலபமா விட முடியாது. உன்ன பயன்படுத்தி சாதிக்க நிறைய திட்டம் வெச்சுருக்கேன். இப்போ நான் எப்பவும் போல உன்ன சமாதானப்படுத்தனும் “ என்று சொல்லி அந்த போட்டோவை அலட்சியமாக போட்டுவிட்டு படுக்கையில் படுத்தாள்.
மறுபுறம் மைரா கேஷவின் எண்ணை டயல் செய்ய, அவன் எப்போதும் போல முதல் ரிங்கில் பதிலளித்து, “ எப்படி இருக்க அம்மு ? “ என்று கேட்டான்.
“ நான் நல்லா இருக்கேன் கெட்சப், நீங்க எப்படி இருக்கீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ நான் நல்லா இருக்கேன், ஆனா இந்த தடவ வேலை அதிகமா இருக்கு அதனால சரியா தூங்க முடியல “ என்றான் கேஷவ்.
“ ஹ்ம்ம் சரி, நீங்க எப்போ வீட்டுக்கு வருவீங்க? “ என்று மைரா மெல்லிய குரலில் கேட்டதும், “ என்னாச்சு? ஏதாவது நடந்துச்சா ?” என்று உடனே கவலையாக கேட்டான் கேஷவ். அதற்கு மைரா, “ ஒண்ணுமில்ல, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். எப்போ வருவீங்கன்னு சொல்லுங்க கெட்சப் ? “ என்றாள்.
“ இந்த வேலை ரொம்ப முக்கியமானது அதனால சீக்கிரம் முடிக்க முயற்சி பண்றேன் அம்மு. நான் கூட உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஆனா அதுக்கு முன்னாடி இந்த வேலைய முடிக்க நினைக்குறேன். ஒரே ரெண்டு நாள்ல நானா திரும்பி வருவேன் அப்போ நாம பேசலாமா இல்ல அவசரமா இருந்தா இன்னைக்கு நைட்டு இல்ல நாளைக்கு காலையில வரேன் “ என்று கேஷவ் கூறினான்.
“ இல்ல அவசரமில்ல, உங்க வேலைய முடிச்சுட்டு நீங்க திரும்பி வந்ததும் சந்திப்போம் “ என்று மைரா சொல்ல, “ சரி அம்மு, ஜாக்கிரதையா இரு “ என்று சொன்னான் கேஷவ்.
மைரா முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அழைப்பிதழ்களைப் பார்த்துக் கொண்டே சரி என்று முணுமுணுத்தபடி அழைப்பைத் துண்டித்தாள்.
க்ரிஷின் அறைக்குள் நுழைந்த ரோஷினி, அவன் சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களைப் பார்ப்பதை கண்டவள், அவன் யாரைப் பார்க்கிறான் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்தாள். அவள் அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து அவன் கையைப் பிடித்தாள். க்ரிஷ் வெளியேற முயன்றான், ஆனால் ரோஷினி அவனை விடாமல் பிடித்தாள்.
“ என்ன மன்னிச்சிடு க்ரிஷ், நமக்குள்ள அதிகமா சண்ட வர காரணம் நான் தான்னு எனக்கு புரியுது ஆனா எனக்கும் உன்கூட சண்ட போடுறதுல விருப்பம் இல்ல. மாமா சொன்னது சரி தான், என் தாழ்வுமனப்பான்மை நம்ம உறவ பாதிக்குற மாதிரி நடந்துகிட்டேன். சத்தியமா, நான் இனி நாம பேசும் பொது மைராவ இழுக்க மாட்டேன். என்ன மன்னிச்சிடு ப்ளீஸ் “ என்று ரோஷினி வழக்கம் போல உருக்கமாக பேசினாள்.
“ எனக்கு யோசிக்க நேரம் வேணும், நாம கல்யாணம் பண்ணிக்க எடுத்த முடிவ பத்தி கொஞ்சம் யோசிக்கிறது நல்லது “ என்று க்ரிஷ் சொல்ல, “ ப்ளீஸ், இப்படிச் சொல்லாத. இனி உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன். ஐ லவ் யூ க்ரிஷ், ப்ளீஸ் என்னை விட்டுட்டு போயிடாத. நீ இல்லாம நான் செத்துப்போயிடுவேன் “ என்று சொல்லி அழுதபடி ரோஷினி அவனை முத்தமிட முயன்றாள், ஆனால் அவன் அதை தவிர்த்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அவன் சட்டையிலிருந்து அவளது பிடியை அகற்றினான். ரோஷினி நேரடி நிராகரிப்புக்காக பற்களைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
“ நான் உனக்காக காத்திருப்பேன் க்ரிஷ், ஐ லவ் யூ “ என்று சொல்லிவிட்டு ரோஷினி வெளியேறினாள். அவள் தன் அறையை விட்டு வெளியேற, சுவற்றில் குத்திக் கொண்டு எரிச்சலில் பெருமூச்சு விட்ட க்ரிஷ், அவனும் மைராவும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தைத் தொட்டான்.
“ நான் உன்ன மிஸ் செய்றேன் மைரா “ என்று சொல்லி அழுதான்.
மறுநாள் காலையில் கேஷவ் வீட்டிற்கு வந்தான், அவன் மற்ற நேரங்களை விட மிகவும் வித்தியாசமாக இருப்பதையும், வந்தவுடன் அவன் சிரித்ததையும் கண்டு அர்ச்சனா ஆச்சரியப்பட்டார்.
“ கேஷவ், நீ ரொம்ப வித்தியாசமா இருக்க, ரொம்ப சந்தோஷமா இருக்க. என் பையன பத்தி எனக்கு தெரியாத விஷயம் என்ன ? “ என்று அர்ச்சனா புன்னகையோடு கேட்க, “ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு, இப்போ நான் அதை முடிச்சிட்டேன். நான் இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என் சந்தோஷத்துக்கு காரணம் இன்னைக்கு உங்களுக்கு சொல்றேன் “ என்று சொன்ன கேஷவ், “ ஆனா அதுக்கு முன்னாடி கார் ஏன் நம்ம வீட்டு முன்னாடி நிறுத்தி இருக்கு சொல்லுங்க ? நானும் மைராவோட புது கார் போட்டோ எல்லாம் பார்த்தேன் “ என்று கேட்டான்.
ரோஷினி செய்த அனைத்தையும் அர்ச்சனா அவனுக்கு விளக்க, கேஷவ் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
“ நான் மைராவ சந்திக்க போறேன். அவகிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அவளும் ஏதோ பேசனும்னு என்ன வர சொன்னா “ என்று சொல்லிவிட்டு விரைவாக தயாராகி மைராவை சந்திக்க கிளம்பினான். அவள் வீட்டுக்குள் நுழைந்ததும், அவள் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்து புன்னகைத்தான்.
“ கெட்சப், நீங்க திரும்பி வந்துட்டீங்களா ?” என்று மைரா கேட்க, “ லேட்டா வந்ததுக்கும், நான் இல்லாத நேரத்துல நடந்த எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடு அம்மு. நீ எனக்கு போன் எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம் அம்மு. உண்மைய சொல்லனும்னா நான் உனக்கு கொடுத்தத விட்டுக்கொடுக்குறதுக்கு பதிலா நீ அவகூட சண்ட போட்டு இருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். நான் உனக்கு எது கொடுத்தாலும் அது உனக்கு மட்டும் தான் சொந்தம் அம்மு, அத உன் கிட்ட இருந்து பறிக்க யாருக்கும் உரிமை இல்ல, அது நானா இருந்தாலும் கூட “ என்று கேஷவ் வருத்தமாகவும், உருக்கமாகவும் சொன்னான்.
“ கெட்சப், நீங்க அப்படி உணர்ந்திருந்தா என்ன மன்னிச்சிடுங்க, ஆனா என் மேல சொல்ற குற்றச்சாட்டு, என்ன அசிங்கப்படுத்தி பேசுறது எல்லாம் கேட்டு நான் அலுத்துப்போய்ட்டேன். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, அதுக்கு மேல என்னால தாங்க முடியல “ என்று சொல்லி மைரா அமைதியாக கண்ணீர் சிந்தினாள்.
“ இதை மொத்தமா நான் சரி செய்றேன் அம்மு. நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், நீயும் ஏதோ பேசணும்னு சொன்ன அதனால நாம ஐஸ்கிரீம் சாப்பிட வெளியே போலாமா ? அங்க போய் பேசலாம் “ என்று கேஷவ் கேட்டான். அப்போது அவன் அழைப்பிதழ்களை பார்த்துவிட்டு மீண்டும் மைராவைப் பார்த்தான்.
*********************************************
முன்னோட்டம்:
என் கேள்விக்கு பதில் சொல்லு அம்மு, இந்த கல்யாணம் உன் சம்மதத்தோட நடக்குதா ?

1 comment
[…] 23.உனக்கு மட்டும் தான் சொந்தம் அம்மு […]