கேஷவ், டீபாயின் மீது வைக்கப்படிருந்த அழைப்பிதழ்களை பார்த்துவிட்டு மீண்டும் மைராவைப் பார்த்தான்.
“ இதெல்லாம் என்ன அம்மு ? “ என்று க்ஷவ் கேட்டான். மைரா பதில் சொல்வதற்குள் வசுந்தராவும், ராஜனும் கையில் பூஜைத் தட்டுடன் வெளியிலிருந்து உள்ளே நுழைந்தனர்.
“ கேஷவ், நல்ல வேளை நீ சரியான நேரத்துக்கு வந்துட்ட “ என்று ராஜன் சொன்னதும், அவரை பார்த்து புன்னகைத்த கேஷவ், “ இப்போ தான் வேலையில இருந்து கொஞ்சம் லீவ் கெடச்சுது மாமா. நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கனு தெரியுது, காரணம் சொன்னா நானும் உங்க கூட சேர்ந்து சந்தோஷப்படுவேன் “ என்று சொன்னான்.
“ நீ இன்னைக்கு வராம இருந்திருந்தா கூட நானே உனக்கு போன் இருப்பேன். மைராவுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கோம் “ என்று மகிழ்ச்சியோடு சொன்ன ராஜன், “ இன்விடேஷன் பாரு “ என்று சொல்லி கேஷவிடம் அழைப்பிதழை கொடுத்தார். அவன் அதை கையில் எடுத்து மைராவைப் பார்த்தான், பின்னர் அதில் இருந்த தேதியை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
“ கல்யாணத்துக்கு வெறும் 30 நாள் தான் இருக்கா ? “ என்று கேஷவ் அதிர்ச்சியோடு கேட்க, “ ஆமா, என் கூட ஆபீஸ்ல வேலை செய்ற என் நண்பனோட பையன் தான் மாப்பிள. தாமதிக்க எங்களுக்கு எந்த காரணமும் இல்ல அதனால உடனே முடிவு பண்ணிட்டோம் “ என்றார் ராஜன்.
“ வாழ்த்துக்கள் மைரா “ என்று கேஷவ் சொன்னதும், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக அவன் அவளை பெயர் சொல்லி அழைத்ததை கேட்டு மைரா, அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“ மைரா, உன் புது கார்ல என்ன கூட்டிட்டு போக மாட்டியா ? “ என்று கேஷவ் கேட்க, “ மைரா, அவன ஒரு ரவுண்டு கூட்டிட்டு போ. வீட்டு சாவியும் எடுத்துட்டு போ. நானும் உன் அப்பாவும் இன்விடேஷன் கொடுக்க போறோம்.“ என்றார் வசுந்தரா.
மைரா சரி என்று முணுமுணுத்தபடி காருக்கும் வீட்டுக்கும் சாவியை எடுத்துக்கொண்டாள். அவள் வெளியே சென்று பயணிகள் இருக்கையின் கதவில் கேஷவ் சாய்ந்திருப்பதைப் பார்த்தாள். இருவரும் காரில் அமர்ந்ததும் அவள் ஓட்டுவதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த கேஷவ் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
“ உன் கல்யாணத்த பத்தி சொல்ல தான் என்ன வர சொன்னியா ? “ என்று கேஷவ் கேட்க, “ ஹ்ம்ம்ம் “ என்று பதில் சொன்னாள் மைரா.
“ இந்த கல்யாணம் உனக்கு ஓகேவா மைரா? “ என்று கேஷவ் கேட்டதும், “ என்ன ஏன் மைரா சொல்றீங்க கெட்சப் ? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா ? நீங்களும் என்கிட்ட ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க “ என்று மைரா பதில் கேள்வி கேட்டாள்.
பெருமூச்சு விட்ட கேஷவ், “ நீ எந்தத் தப்பும் செய்யல, என் கேள்விக்கு பதில் சொல்லு அம்மு, இந்த கல்யாணம் உன் சம்மதத்தோட நடக்குதா ? “ என்று மீண்டும் கேட்டான்.
“ இது என் சம்மதத்தோட தான் நடக்குது, ஆனா நான் சரியான முடிவு எடுத்தேனானு எனக்குத் தெரியல. அப்பாவும், அம்மாவும் சந்தோஷமா இருக்குறத பார்க்கும் போது சரியான முடிவு தான்னு தோணுது ஆனா இன்னும் நான் குழப்பத்துல இருக்கேன் “ என்று மைரா புலம்பினாள். அவள் கண்கள் கலங்க ஆரம்பித்து உடனே சட்டையால் துடைத்தாள்.
சிறிது நேரம் கழித்து மைரா திரும்பி வந்து காரை நிறுத்தினாள், ஆனால் யாரும் ஒரு கூட வார்த்தை பேசவில்லை. கேஷவ் கீழே இறங்க தனது சீட் பெல்ட்டை அவிழ்த்தான் அப்போது மைரா மிக மிக மெல்லிய குரலில், “ எனக்கு பயமா இருக்கு கெட்சப் “ என்று சொன்னதை கேட்டு உறைந்து போனான். அவள் கண்களின் ஓரத்தில் ஒரு கண்ணீர் துளி வழிய காத்திருப்பதை கேஷவ் கண்டான்.
“ பயப்படாத “ என்று அவனது வார்த்தைகள் கிசுகிசுப்பாக வெளிவர, மைரா அவனை நோக்கித் திரும்பியதும் கண்ணீர் உருண்டது. கேஷவ் அவள் கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கட்டை விரலால் துடைத்தான். காரை விட்டு இறங்கும் முன் அவள் தலையை மென்மையாகத் தட்டினான்.
வீட்டுக்குள் நுழைந்த கேஷவ் தன் அம்மாவை அழைத்தான்.
“ அம்மா, மைராவோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுன்னு உங்களுக்கு தெரியுமா? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஆமா, வசுந்தராவும், ராஜன் அண்ணாவும் நாம இல்லாம எதுவும் பண்ண மாட்டாங்க. போன வாரம் கோவிலுக்கு போன அப்போ எங்க முன்னாடி தான் பிரஷாந்த் பத்தி ராஜன் அண்ணா மைரா கிட்ட பேசினாரு. பிரஷாந்த் குடும்பம் மைராவ பார்க்க வந்த அப்போ நாங்க அங்க தான் இருந்தோம் “ என்று அர்ச்சனா கூறினார்.
“ மைராவோட கல்யாணத்த பத்தி மாமா முதல் முறை பேசின அப்போவே நீங்க ஏன் எனக்குத் தெரியப்படுத்தல? “ என்று கேஷவ் கேட்டதும், “ அவ பட்ட அவமானம் எல்லாம் போதும், ராஜன் அண்ணா அவளுக்கு கல்யாணம் செய்றது தான் நல்லதுனு நெனச்சாரு. நீ உன் வேலையில பிஸியா இருந்த, இப்போ நீ என்ன வேலை செய்றனு கூட எங்களுக்குத் தெரியாது. சரி அப்படியே நான் சொல்லி இருந்தாலும் நீ என்ன பனி இருப்ப ? “ என்று கேட்டார் அர்ச்சனா.
“ நீங்க சொல்றது சரி தான், இது எல்லாமே என் தப்பு தான் “ என்று சொன்ன கேஷவ் தனது அறைக்கு சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு புறப்பட பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
“ இப்ப எங்க கிளம்புற ? நீ ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான் வந்த கேஷவ் “ என்று அர்ச்சனா கேட்க, “ ராஜன் மாமாவுக்கு கல்யாண வேலையில உதவி செய்யணும் அதனால நான் போய் என் வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடறேன். முடிஞ்சா இந்த முறை நிரந்தரமா உங்க கூட இருக்க முயற்சி செய்றேன் “ என்று பதில் சொன்னான் கேஷவ். அவன் வார்த்தையாய கேட்டதும், “ நிஜமாவா ? நீ எங்க கூட இருக்க போறியா ? “ என்று உற்சாகமாக கேட்டார் அர்ச்சனா.
கேஷவ் வெறுமனே தலையசைத்து விட்டு வெளியேறினான், ஆனால் ரோஷினியைப் பார்த்ததும் சட்டென நின்றான். தன்னை அவமானப்படுத்தியது, தகாத பெயர் சொல்லி அழைத்தது பற்றியும் சொல்லி மைரா கண்ணீர் வடித்த விதத்தைப் பற்றியும் நினைத்துப் பார்த்த போது அவனது கோபத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. பையை கீழே போட்டுவிட்டு அருகில் இருந்த இரும்பு ராடை (rod ) எடுத்து, மைராவிடம் இருந்து ரோஷினி திரும்ப வாங்கிய அவனுடைய காரின் கண்ணாடியை உடைத்து பின்னர் பானட்டில் ஓங்கி அடித்தான்.
“ என் மைராவ விட்டு விலகி இரு, இல்ல அது உனக்கு நல்லதா இருக்காது “ என்று க்ஷவ் எச்சரித்துவிட்டு, ரோஷினியை ஒரு கொடூரமான பார்வை பார்த்துவிட்டு, தனது பையை எடுத்துக் கொண்டு சென்றான்.
சேதமடைந்த காரை பார்த்து நடுங்கியபடி நின்ற ரோஷினி பின்னர் வீட்டின் உள்ளே நுழைந்த போது, அர்ச்சனா ஒரு பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“ மைராவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கா அத்தை? என்று ரோஷினி கேட்க, “ ஆமா, கல்யாணத்துக்கு இன்னும் 30 நாள் இருக்கு. நான் அவ கல்யாண வேலையில பிஸியா இருப்பேன், அதனால நான் வீட்ல இல்லனா வெளிய சாப்பாடு ஆர்டர் பண்ணிடு “ என்றார் அர்ச்சனா.
“ ஒன்னும் பிரச்சன இல்ல அத்தை நான் பார்த்துக்கறேன், ஆனா எனக்கு உங்க உதவி வேணும் “ என்று ரோஷினி கேட்டதும், அர்ச்சனா எழுதுவதை நிறுத்திவிட்டு விரல்களை கசக்கிக் கொண்டிருந்த ரோஷினியைப் பார்த்தார். ரோஷினி அர்ச்சனாவை நெருங்கி அவர் அருகில் அமர்ந்தாள்.
“ அத்தை, நானும் க்ரிஷும் கூட கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்ணி இருக்கோம் ஆனா மைரா கல்யாணம் ஆகி இங்க இருந்து நிரந்தரமா போக போறான்னு தெரிஞ்சா க்ரிஷ் ரொம்ப வருத்தப்படுவான் அதனால இத நீங்க ரகசியமா வெச்சுருக்க முடியுமா? இந்த விஷயத்த எப்பவும் மறைக்க முடியாதுனு எனக்கு தெரியும் அதனால கல்யாணதுக்கு ஒரு ரெண்டு நாள் முன்னாடி அவன் கிட்ட சொல்லலாம் “ என்று சொன்னாள் ரோஷினி.
அர்ச்சனா சிறிது நேரம் யோசித்து எல்லோருக்கும் அது நல்லது என்று தோன்றி அதற்கு சம்மதித்தார். ரோஷினி நன்றி சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
அடுத்த நாள், மைராவும் நைனாவும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் மைரா ஏர் பாட் அணிந்து மர்மப் பாடகரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு அறிவிப்பு வந்ததும், அது மர்ம பாடகர் பதிவேற்றிய மற்றொரு பாடலுக்கான அறிவிப்பு என்று பார்த்து மகிழ்ச்சியுடன் யூட்யூபை (youtube) திறந்தாள், ஆனால் பாடலைக் கேட்டதும் அவளுடைய புன்னகை மறைந்தது.
“ நைனா, அந்த மர்ம பாடகர் ஒரு பாட்டு வெளியிட்டு இருக்காரு “ என்று மைரா சொல்ல, “ அதுக்கு என்ன இப்போ ? இன்னொரு காதல் பாட்டு தானே போட்டு இருக்காரு ? “ என்று நைனா கேட்டாள்.
“ இல்ல, அவர் குரல்ல வலி உணர முடியுது நைனா. நான் ஒரு முறை கஷ்டப்பட்ட மாதிரி அவரும் கஷ்டப்படுறாருனு நினைக்கிறேன். நீயே இந்த பாட்ட கேளு “ என்று மைரா சொல்ல, இருவரும் ஒன்றாக பாடலை கேட்டார்கள்.
“ காகிதத்தில் செய்த புவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ ஓஹோ
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்
ஹோ ஹோ ஹோ.. ஓஓஓஓ..
உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசிவரை தனியாய் உருகும் ஹோ ஹோ ஹோ.. ஓஓஓஓ..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை..
அந்த கண்ணாடி நான்தானே
முகமே இல்லை என்னிடம்தான்.. ஹோ ஹோ ஹோ..
கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்று தான் ஓ ஹோ
ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்று தான் ஓ ஹோ “ என்று அந்த மர்ம பாடகரின் பாடலை கேட்டதும் மைரா கவலையாக உணர்ந்தாள்.
“ ரொம்ப யோசிக்காத மைரா, இது ஒரு சோகமான பாட்டு அதனால உனக்கு அப்படி தோணுது “ என்று சொல்லி நைனா அவளை அமைதிப்படுத்தினாள் ஆனால் மைரா மறுத்து தலை அசைத்தாள். : “ இல்ல நைனா, அவரோட வலிய நானே உணர்ற மாதிரி என் மனசு வலிக்குது. வரிகள கேட்டியா ? ஒவ்வொரு வார்த்தையும் அவரோட வேதனைய வெளிப்படுத்துது. இது மாதிரி வலி அதிகமான பாட்டு அவர் வெளியிடுறது இது தான் முதல் முறை அதனால அவர் உணர்ச்சி ரீதியாக ஆழமா காயப்பட்டு இருக்காருனு நினைக்குறேன் “ என்று வேதைனையுடன் சொன்னாள்.
“ மைரா, தயவு செஞ்சு நிறுத்து. இது ஒரு பாட்டு, இத பத்தி யோசிச்சு குழப்ப வேணாம். உன்னோட கல்யாணத்துல கவனம் செலுத்து. இந்த பாட்ட திரும்ப திரும்ப கேட்காத மைரா “ என்று நைனா எடுத்து சொன்னாள்.
மைரா சரி என்று முணுமுணுத்தாள், ஆனாலும் நைனா பாடலை பிளேலிஸ்ட்டில் இருந்து நீக்கிவிட்டு, அவளை திசைதிருப்ப ஏதாவது நகைச்சுவை படம் பார்க்க மனதை மாற்றினாள்.
அடுத்த 28 நாட்கள் திருமண ஏற்பாடுகளுடன் சூறாவளி போல் கழிந்தன. ராஜனும், வசுந்தராவும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து ஷாப்பிங் எல்லாம் முடித்தனர். மணப்பெண் உடைகள் மற்றும் பொருத்தமான நகைகள் தயாராக இருந்தன, இரண்டு நாட்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் திருமணத்திற்காக வீட்டை அலங்கரிக்க அலங்காரக்காரர்கள் பூக்கள் மற்றும் விளக்குகளுடன் வந்தனர்.
அர்ச்சனா மஞ்சள் நிற சேலையிலும், மதனும் மஞ்சள் சட்டையிலும் தயாரானார்கள். அறையில் இருந்து வெளியே வந்த க்ரிஷ், பெற்றோர் தயாராக இருப்பதைக் கண்டு திகைத்து நின்றான்.
“ ஏதாவது பங்க்ஷன் போறீங்களா? “ என்று க்ரிஷ் கேட்க, அர்ச்சனாவும் மதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மதனிடம் அதை வெளிப்படுத்துமாரு அர்ச்சனா சைகை செய்தார்.
“ மைராவுக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். இன்னைக்கு அவளுக்கு நலங்கு வைக்க போறாங்க. நாங்க அதுக்கு போறோம் “ என்று மதன் உண்மைய சொன்னார். ஆனால் அதை கேட்டதும் ஆதிர்சியில் க்ரிஷ் உறைந்து போனான்.
“ என்ன சொல்றீங்க ? எப்படி உங்களால எனக்கு இப்படி பண்ண முடிஞ்சது? இத என்கிட்ட இருந்து மறைக்குற அளவுக்கு நான் வேண்டாதவனா ஆயிட்டேனா ? அப்புறம் மைரா, அவளும் கல்யாணம் பண்ணிக்கப் போறத என்கிட்டே சொல்ல ஒரு தடவை கூட யோசிக்கலையா? அவ என் பெஸ்ட் ப்ரெண்ட், நான் ஏற்கனவே குற்ற உணர்ச்சியில செத்துட்டு இருக்கேன். இப்போ அவளுக்கு கல்யாணம்னு சொல்றீங்க ? ஏன் ? “ என்று கேட்டு க்ரிஷ் விரக்தி மற்றும் வருத்தத்தில் உடைந்து போனான்.
“ இத உன் கிட்ட இருந்து மறைக்குறது எங்க நோக்கம் இல்ல. மைரா கூட உனக்கு சொல்லனும்னு தான் விரும்பினா, ஆனா ரோஷினி தான் எங்கள தடுத்தா. கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி வரைக்கும் உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னா “ என்று அர்ச்சனா காரணத்தை விளக்கினார்.
“ மைரா, அவளோட கல்யாணத்துல நீ இருக்கனும்னு தான் விரும்புறா அதனால ரெடியாகி அங்க வா. சடங்குக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு “ என்று மதன் சொன்னார்.
கேஷவ் தன் அறையிலிருந்து வெளியே வந்து டைனிங் டேபிளில் இருந்த இனிப்புப் பெட்டியை எடுத்துக்கொண்டதும், மதன், அர்ச்சனா மற்றும் கேஷவ் ஆகியோர் மைராவின் வீட்டை அடைந்தனர்.
மொட்டை மாடி அலங்கரிக்கப்பட்டு, நடுவில் ஒரு மனை போடப்பட்டிருந்தது. அர்ச்சனா, வசுந்தரா மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரஷாந்த் தவிர பிரஷாந்தின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அர்ச்சனா ஒரு தட்டில் மஞ்சள் வைத்தார், கேஷவ் சடங்கு முடிந்ததும் விருந்தினருக்கு விநியோகிக்க இனிப்புகளை வைத்தான். சடங்கை தொடங்க மைராவை அழைக்குமாறு வசுந்த்ரா நைனாவிடம் தெரிவித்தார்.
நைனா மைராவின் அறைக்குள் நுழைந்து, மைரா மஞ்சள் பாவாடை மற்றும் வெள்ளை தாவணி அணிந்து தயாராக இருப்பதைக் கண்டாள், அவளுடைய தலைமுடி பிரெஞ்சு பாணியில் அழகாக பின்னப்பட்டு, அர்ச்சனா அவளுக்காக பிரத்யேகமாக வாங்கியிருந்த மலர் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.
நைனாவும் மைராவும் மொட்டை மாடியை அடைந்ததும், அர்ச்சனா மைராவை மனையில் உட்கார உதவினார். அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவின் கன்னங்கள், கைகள் மற்றும் கால்களில் மஞ்சள் தடவத் தொடங்கினர். அவர்களைத் தொடர்ந்து பெண்கள் அனைவரும் நலங்கு வைத்தனர்.
ராஜனையும், மதனையும் அழைத்து நலங்கு வைக்க சொல்லி அர்ச்சனா அழைத்ததும் அவர்கள் சொன்னபடியே செய்தனர். கேஷவ் மொட்டை மாடி வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அர்ச்சனா மைராவை எழுந்திருக்க வைத்து குளிக்க அனுப்பினார்.
கைகளில் படிந்திருந்த மஞ்சளை பார்த்தபடி நடந்த மைரா, நாற்காலியில் கால் இடறி, அவளை கீழே விழாமல் தடுத்த கேஷவ் மீது மோதினாள். மைரா நிதானித்ததும் அவளது முகம் மற்றும் கைகளில் இருந்த மஞ்சள், அவனது கை மற்றும் சட்டை முழுவதும் ஒட்டிக் கொன்டதை கண்டாள்.
“ ஸாரி கெட்சப், உங்க சட்டையில மஞ்சள் பட்டுடுச்சு “ என்று மைரா சொன்னதும், “ ஒன்னும் பிரச்சன இல்ல அம்மு. உன் முகத்துல சிரிப்பு குறையுதே ? எதுக்காகவும், யாருக்காகவும் அத விட்டுடாத, எல்லாம் சரியாயிடும் “ என்று புன்னகையோடு அவளுக்கு நம்பிக்கை அளித்தான் கேஷவ். அவன் குரல் கிசுகிசுப்பாக இருந்தாலும் அவன் சொன்னதைக் கேட்ட மைராவின் உதடுகள் புன்னகையில் வளைந்து, அவள் தலையசைத்தாள். பிறகு க்ரிஷைப் பார்த்தவள் பார்த்து மெல்லிய புன்னகையுடன் நைனாவுடன் கிளம்பினாள்.
நலங்கு முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினர். ரோஷினி தனது அறைக்குள் நுழைவதை பார்த்த க்ரிஷ், அவளுடன் எந்த விவாதத்திற்கும் இடமளிக்காமல் வெளியேறினான்.
அடுத்த நாள் மைரா தனது அறையில் நைனா இருந்தாள். அழகு கலை நிபுணர் அவளது கைகள் மற்றும் கால்களில் மருதாணி வரைந்தார். “ மேடம், டிசைன் நடுவுல என்ன பெயர் எழுதணும் சொல்லுங்க “ என்று அவர் கேட்க, “ இல்ல,பெயர் எதுவும் எழுத வேணாம் “ என்று சொல்லி மைரா மறுத்துவிட்டாள்.
“ மைரா, கல்யாண பொண்ணு கையில மருதாணியில மாப்பிள பெயர் இல்ல முதல் எழுத்து எழுதுறது வழக்கம் தான் அதனால அவங்க எழுதட்டும் “ என்று நைனா சொன்னாள் ஆனால் மைரா, “ ப்ளீஸ் நைனா “ என்று சொல்லி கெஞ்சி மறுத்தாள்.
அழகு கலை நிபுணர் சென்றதும், நைனா ஒரு தட்டு உணவை எடுத்து வந்து மைராவுக்கு ஊட்டத் தொடங்கினாள்.
“ மைரா, நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா உன் முகத்துல கொஞ்சம் கூட சந்தோஷம் இல்ல. உன் மனசுல என்ன தான் ஓடுது ? “ என்று நைனா கேட்டதும், “ எனக்கு பயமா இருக்கு நைனா “ என்றாள் மைரா.
“ அதுக்கு க்ரிஷ் காரணமா? “ என்று நைனா கேட்க, “ இல்ல, அவன பத்தி இப்போ எனக்கு எந்த நினைப்பும் இல்ல ஆனா ஏதோ நடக்கப் போகுது. இந்த பயத்த என்னால வெளிப்படுத்த முடியல. ஏதாவது கெட்டது நடந்தா என்ன செய்றதுனு பயமா இருக்கு. என் அப்பாவும், அம்மாவும் நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்க இனி கவலைப்படுறத என்னால பார்க்க முடியாது. கடந்து போற ஒவ்வொரு மணிநேரமும் இந்த பயம் என் மனசு முழுக்க சூழுது. யார பார்த்தாலும் பயமா இருக்கு, அவங்க கல்யாணத்துல ஏதாவது பிரச்சன பண்ணிட்டா என்ன செய்றது ? “ என்று மைரா சொன்ன போது அவள் குரல் நடுங்கியது.
“ மைரா, பொதுவா கல்யாண பொண்ணுங்களுக்கு கடைசி நேரத்துல பயம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ இப்போ அத தான் உணர்ற நினைக்குறேன் ஆனா எதுவும் தப்பா நடக்காது. எல்லாம் ரெடியா இருக்கு, சாயங்காலம் கல்யாண மண்டபத்துக்கு கிளம்பிடுவோம். மைரா, உன் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நிச்சயம் நடக்கும். நீ ரொம்ப ரொம்ப நல்லவ, உனக்கு நல்லதே நடக்கும். “ என்று நைனா சொன்னதும் மைரா அவளை அணைத்துக் கொண்டு அவளது அரவணைப்பில் ஆறுதல் தேடினாள். அவர்களின் உரையாடலைக் கேட்ட வசுந்தரா பூஜை அறைக்குள் நுழைந்து கைகூப்பி கண்ணீர் மல்க தன் மகளுக்காக பிரார்த்தனை செய்தார்.
மாலையில் திருமண மண்டபத்திற்கு சென்ற குடும்பத்தினர் அனைவரும் பிரஷாந்தின் குடும்பத்தால் வரவேற்கப்பட்டனர். மைராவும் நைனாவும் மணமகளின் அறைக்கு சென்றதும், மைரா கண்ணாடியின் முன் நின்று, “ இன்னும் 16 மணி நேரம் தான் இருக்கு “ என்று சொன்னாள்.
**********************************
முன்னோட்டம்:
“ எனக்கு நல்லாவே தெரியும் க்ரிஷ். அவங்க என் கல்யாணம் கெட்சப் கூட நடக்கனும்னு ஆசைப்படுறாங்க “

2 comments
[…] என் மைராவ விட்டு விலகி இரு […]
[…] 24.என் மைராவ விட்டு விலகி இரு […]