Home Family25. கெட்சப் ஏன் என்ன கல்யாணம் பண்ண விரும்புறீங்க ?

25. கெட்சப் ஏன் என்ன கல்யாணம் பண்ண விரும்புறீங்க ?

by Siragugal Novels
20 views

நள்ளிரவு ஆன பிறகு மைரா கைகளை தேய்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தாள்.

பௌர்ணமி இரவில் குளிர்ந்த காற்றுடன் கடலின் அமைதியான அழகு, மைரா தனது கணவருடன் ரசிக்க விரும்பிய ஒன்று.

இப்போது அவள் கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தாள், கரையை இடைவிடாது சீண்டும் அலைகளைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். அவளைச் சுற்றி ஒரு சால்வை போர்த்தப்பட்டதும், அவளது புறப்பார்வையில் இருந்து ஒரு மனிதன் அவளுக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவள் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்க முன்னால இருக்க அழக பாருங்க “ என்று மைரா சொல்ல, “ஆமா, நான் பார்த்துட்டு தான் இருக்கேன். என்ன நம்பு, என் வாழ்க்கையில நான் பார்த்த ரொம்ப அழகான காட்சி ” என்று அவன் அவளிடமிருந்து பார்வையை விலக்காமல் சொன்னான்.

அவன் தன் பக்கம் சாய்வதையும், அவனது சூடான மூச்சுக்காற்று தன் கழுத்தின் பக்கவாட்டில் விசிறிக் கொண்டிருப்பதையும் உணர்ந்த மைரா அவனது வார்த்தைகளைக் கேட்டு வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளது காது மடலில் முத்தமிட்டபோது அவள் வெறும் வாயில் விழுங்கினாள்.

அவளது காது சிவந்து, மார்பு விம்மியது. அவன் முகத்தை லேசாக குனிந்து அவள் நாடித் துடிப்பில் ஒரு முத்தம் வைத்ததும் மைரா சட்டென கண்களைத் திறந்தாள். அவள் பக்கவாட்டில் திரும்பி பார்த்த போது அவனைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள், தான் திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் இருப்பதை உணர்ந்தாள்.

“ இன்னைக்கு, இந்த நேரத்துல ஏன் இப்படி ஒரு கனவு வந்துச்சு ?  இப்படி ஒரு கனவு என் வாழ்நாள் முழுக்க நான் கண்டதே இல்ல. ஏன் கடவுளே ? அந்த நிழல் உருவம் எனக்கு பரிச்சயமானவரா தெரிஞ்சாரு ஆனா அவர் யாரா இருக்க முடியும்? “ என்று யோசித்த மைரா, நைட் ஸ்டாண்டில் இருந்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு நேரம் அதிகாலை 4 மணி ஆகிவிட்டது என்று பார்த்தாள். இன்னும் 5 மணி நேரத்தில் திருமணம் நடக்க உள்ள நிலையில், தன்னை ஒரு ஆண் முத்தமிடுவது போல் கனவு கண்டுள்ளாள். தனது மனதை நினைத்து  சிரித்தவள், ஹெட்போர்டில் சாய்ந்து உட்கார்ந்து நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

கதவு திறந்து அவள் அம்மா வசுந்த்ரா அழகிய மாலையை கையில் ஏந்தி அறைக்குள் நுழைந்தார்.

“ மயூ, நான் உன்ன எழுப்ப தான் வந்தேன். போய் குளிச்சு முடிச்சிட்டு சீக்கிரம் ரெடியாகு “ என்று வசுந்தரா சொல்ல, மைரா பதில் எதுவும் பேசாமல் பாத்ரூமுக்குள் நுழைந்தாள். அவள் கண்ணாடி முன் நின்று அவள் முகத்தைப் பார்த்தாள், ஆனால் அவளால் எந்த உற்சாகத்தையும் உணர முடியவில்லை, மணப்பெண்ணைப் போல அவள் முகத்தில் எந்த பிரகாசம் இல்லை.

“ உன்னால இத செய்ய முடியும் மைரா. உன் அப்பா, அம்மாவுக்காக முக்கியமா உனக்காக. இப்போ நீ உன் அப்பா, அம்மாவ ஏமாத்த முடியாது. நீ கல்யாண பொண்ணு, உன் வாழ்க்க 5 மணி நேரத்துல ஒரு புது தொடக்கத்துக்கு காத்திருக்கு. கடவுளும், காதலும் என்ன ஒருநாளும் கைவிடாதுனு நம்புறேன்.” என்று சொல்லி மனதை தயார்ப்படுத்தினாள்.

மைரா குளித்து ஒரு சாதாரண லெக்கிங்ஸ் மற்றும் டாப் அணிந்து வெளியே வந்தாள். கடந்த சில மணி நேரங்களாக வழக்கத்திற்கு மாறாக ஓடிக்கொண்டிருந்த மனதை அமைதிப்படுத்த முயன்று ஜன்னலருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஒரு மணி நேரம் கழித்து ஒப்பனையாளர் அவளுக்கு ஆடை அணியத் தொடங்கினார். இரண்டு மணி நேரம் கழித்து மைரா அழகிய சிவப்புப் பட்டுப் புடவையும் பச்சை நிற ரவிக்கையும் அதோடு நகைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள், அவளுடைய தலைமுடி பின்னப்பட்டு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவள் கண்ணாடி முன் நின்ற போது, அங்கே மிக அழகான மணமகளின் பிம்பத்தை பார்த்தாள்.

ஒப்பனையாளர் அறையை விட்டு வெளியேறியதும், மைரா நாற்காலியில் அமர்ந்து அழைக்கப்படுவதற்காக காத்திருந்தாள், ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு அவளது அம்மாவும், அப்பாவும் கண்ணீர் நிறைந்த கன்னங்களுடன் அறைக்குத் திரும்பி வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

“ மன்னிச்சிடு மயூ, எங்க பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? கடவுள் ஏன் உன்னோட வாழ்க்கையில மட்டும் சந்தோஷத்த கொடுக்க மாட்டேங்குறாரு ? நாம இந்த ஊருக்கு வந்துருக்கவே கூடாது “ என்று சொல்லி வசுந்தரா கதறினார்.

என்ன நடந்திருக்கும் என்று யூகித்த மைரா, தன் எண்ணங்களுக்கு வேலியிட்டு தன் அம்மாவின் முதுகில் தட்டிக் கொடுத்தாள்.

“ அம்மா, என்ன ஆச்சு? ஏன் அழறீங்க ? என்ன நடந்துச்சு சொல்லுங்க ? “ என்று மைரா கேட்க, “ அந்த ஆள் ஒரு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடி போயிட்டான். இனி நான் என்ன செய்வேன்? “ என்று வசுந்தரா சொன்னதும், மைராவுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை, தனது சுயத்தை விட தங்கள் மகளின் வாழ்க்கைக்காக இரண்டாவது முறையாக உடைந்தது துயரத்தில் இருந்த தனது பெற்றோர் மீது கவனம் செலுத்தினாள்.

“ ஒவ்வொரு முறையும் என் வாழ்க்க மட்டும் ஏன் இப்படி சந்தோஷம் இல்லாம சபிக்கப்பட்டு இருக்கு ? என் வாழ்க்கையில காதலும், சந்தோஷமா இல்லாம இருக்கலாம், அத பத்தி எனக்கு கவலையில்ல ஆனா என் அப்பா, அம்மாவுக்கு மகளா இருக்குறதுல  நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். அவங்க என் மேல எந்த நிபந்தனையும் இல்லாம அன்பு வெச்சுருக்காங்க. நான் என் வாழ்நாள் முழுக்க அவங்க அன்போட வாழ்வேன். “ என்று மனதில் நினைத்த மைரா அணைப்பில் இருந்து பின்வாங்கி புன்னகைத்தாள்.

“ பரவாயில்ல மா, வீட்டுக்குப் போகலாம் “ என்று சொல்லிவிட்டு தன் அப்பாவை பார்த்து, “ அப்பா, பணம் கட்ட வேண்டிய பாக்கி இருந்தா கட்டிட்டு வாங்க உடனே கிளம்பலாம் “ என்று சொன்னாள். அப்போது கதவு திறந்து அர்ச்சனாவும் மதனும், வசுந்தராவையும் ராஜனையும் அறைக்கு வெளியே அழைத்து சென்றனர். மைரா எந்த எதிர்வினையும் இல்லாமல் வெறுமையாக இருந்தாள்.

நடப்பதையெல்லாம் கண்டு முற்றிலும் ஒதுங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தாமல் நின்ற மைராவை நைனா அணைத்துக் கொண்டாள்.  

சில நிமிடங்கள் கழித்து இரு குடும்பத்தினரும் அறைக்குத் திரும்பி அவள் முன் நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் கொஞ்சம் தள்ளி நின்று க்ரிஷ் இனந்தெரியாத உணர்ச்சிகளுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவனது முகபாவத்தை சற்றும் யோசிக்காமல் சட்டென தன் பார்வையை அர்ச்சனாவை நோக்கி திருப்பினாள்.

“ மயூ, நான் உனக்கு பிடிச்ச அத்த தான் ஆனா நான் உன்ன என் பொண்ணா தான் பார்க்குறேன். என் வாழ்க்கையில ஒரு பொண்ணு இல்ல என்ற குறைய எப்போவும் நீ போக்கி இருக்க அதனால வசுந்தரா, ராஜன் அண்ணா கிட்ட  பேசி உன்ன உண்மையாவே என் மகளாக்கிக்க கேட்டேன் “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டு, “ அத்த, நான் உங்க பொண்ணு தான். நீங்க என்ன சொல்றீநக ? சரி அதெல்லாம் விடுங்க, நாம எல்லாரும் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுப்போம். எல்லோரும் ஏற்கனவே களைச்சு போய் இருப்பீங்க “ என்று புன்னகையோடு சொன்னாள் மைரா.

“ மயூ, உன் கல்யாணம் இன்னைக்கு நடக்கனும்னு நாங்க விரும்புறோம் ஆனா நாங்க உன்ன கட்டாயப்படுத்த மாட்டோம். நீ சரின்னு சொன்னா மட்டும் நடக்கும், இல்லேன்னா வீட்டுக்கு போகலாம், முடிவு உன்னோடதா தான் இருக்கும் “ என்று அர்ச்சனா சொல்ல, “ அத்தை? “ என்று அதிர்ச்சி மற்றும் குழப்பத்தோடு சொன்னாள் மைரா.

“ நீ என் பையன கல்யாணம் பண்ணி என் மருமகளா வரியா ஆனா நான் உன்ன என் சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்குறேன். நீ எப்பவும் உன் அப்பா, அம்மா பக்கத்துல வாழலாம். நாம எப்பவும் போல ஜாலியா இருக்கலாம். நாங்க உன்ன கொஞ்ச நேரம் தனியா விடுறோம், நான் சொன்னத யோசிச்சு பாரு. உனக்கு சம்மதம்னா அடுத்த நல்ல நேரத்துல அதாவது 2 மணி நேரம் கழிச்சு கல்யாணம் செய்வோம் இல்லனா வீட்டுக்கு போலாம். உனக்கு புடிச்ச படம் பார்க்கலாம். நீ, நான், வசு, நைனா அப்புறம் ரோஷினி, நாம எல்லாரும் ஷாப்பிங் போகலாம் “ என்று மிகவும் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கம் கலந்த குரலில் சொன்னார் அர்ச்சனா.  

மைராவின் தலையை தொட்ட ராஜன், “ அர்ச்சனா சொன்ன மாதிரி. எங்க முடிவுக்கு உன்ன நீயே கட்டாயப்படுத்த வேணாம். இது உன் வாழ்க்க, இதை தீர்மானிக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இந்த கல்யாணம் நீ வேணாம்னு சொன்னா நாங்க நிச்சயம் வருத்தப்படுவோம்னு நினைக்காத. “ என்று சொன்னார்.

அவர்கள் அனைவரும் வெளியேற முடிவு செய்தனர், ஆனால் மைரா அர்ச்சனாவை அழைத்து, “ இதுக்கு அவர் சம்மதிச்சாரா? “ என்று கேட்டாள்.

“ அவன் தான் இந்த கல்யாணம் வேணும்னு சொன்னான் ஆனா உனக்கு சம்மதமா இருந்தா மட்டும் தான்னு சொல்லிட்டான்.    இப்போ நீ முடிவெடுக்கனும்னு அவன் விரும்புறான் “ என்று அர்ச்சனா புன்னகையோடு சொன்னார்.

“ நான் எந்த ஒரு முடிவும் எடுக்குறதுக்கு முன்னாடி அவர்கிட்ட  பேச விரும்புறேன்.” என்று மைரா சொன்னதும், “ அவன் உன் பதில் தெரிஞ்சிக்க இல்ல உன் கூட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கான் அதனால அவன அனுப்புறேன் “ என்று அர்ச்சனா சொன்னதும் எல்லோரும் அறையை விட்டு வெளியேற, அர்ச்சனா வசுந்த்ராவை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றார்.

“ வசு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரோஷினியைப் பத்தி சொன்னேன்னு தப்பா எடுத்துக்காத. நான் அவள ஒதுக்குறதா நினைக்குறா அதனால மைரா இனி கஷ்டப்படுறத நான் விரும்பல. அது மட்டும் இல்ல, க்ரிஷ் ரொம்ப கஷ்டப்படுறான், அவன இப்படி என்னால பார்க்க முடியல” என்று அர்ச்சனா கவலையுடன் சொல்ல, “ அர்ச்சனா, எனக்குப் புரியுது, அதுல என்ன தப்பு இருக்கு ? அவளும் நம்ம குட்டும்பம் தானே. அவளும், க்ரிஷும் வாழக்கையில சந்தோஷமா இருக்கணும்னு தான் நானும் விரும்புறேன் “ என்று சொன்னார் வசுந்தரா.

வசுந்தரா அர்ச்சனாவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். இதற்கிடையில் க்ரிஷ் முகத்தைச் சுளித்தபடி மைராவின் அறைக்குள் நுழைந்தான்.

“ மைரா, தயவு செஞ்சு இதுக்கு சம்மதம் சொல்லாத. அவங்க நீ யார கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறாங்க தெரியுமா? “ என்று க்ரிஷ் பதற்றத்துடன் கேட்க, “ எனக்கு நல்லாவே தெரியும் க்ரிஷ். அவங்க என் கல்யாணம் கெட்சப் கூட நடக்கனும்னு ஆசைப்படுறாங்க “ என்று அமைதியாக சொன்னாள் மைரா.

“ உனக்கு அவர பத்தி ஒண்ணும் தெரியாது மைரா, அவருக்கும் உன்ன பத்தி தெரியாது. தயவு செஞ்சு சம்மதம் சொல்லாத. உனக்கு நல்லது மட்டும் தான் நடக்கணும், ப்ளீஸ். புரிதல் இல்லாத ஒரு ஒருத்தரோட வாழ்க்கைய வாழ்றது ஒரு நரகம் “ என்று க்ரிஷ் சொல்ல, “ உனக்கு என் மேல அக்கறை இருக்குனு எனக்கு தெரியும் க்ரிஷ் ஆனா என்ன பத்தி கவலைப்படாத. உன் ப்ரெண்ட் இப்போ இப்போ நல்லா முடிவு எடுக்குற அளவுக்கு வளர்ந்துட்டேன் அதுவும் இல்லமா நாம கெட்சப் பத்தி பேசுறோம் “ என்று சொல்லி புன்னகைத்தாள்.

காலடிச் சத்தம் கேட்டு வாசலில் கேஷவ் நிற்பதை இருவரும் கண்டனர். க்ரிஷ் ஒன்றும் சொல்லாமல் கெஞ்சும் பார்வையுடன் மைராவைப் பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினான்.

கேஷவ்  கதவை மூடிவிட்டு அவள் உட்காருவதற்காக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான். வேனிட்டி டேபிளில் சாய்ந்து தொண்டையைக் கனைத்துக் கொண்டு தன் மடியைப் பார்த்துக் கொண்டிருந்த அவளது கவனத்தை ஈர்த்தான்.

“ கெட்சப் ஏன் என்ன கல்யாணம் பண்ண விரும்புறீங்கன்னு எனக்குத் தெரியாது ஆனா இப்போ எதையும் தீர்மானிக்க எனக்கு பயமாவும், குழப்பமாவும் இருக்கு. எனக்கு இப்போ என்ன வேணும்னு கூட தெரியல ஆனா ஒரு விஷயம் மட்டும் தான் மனசுல ஓடுது. என் அப்பா, அம்மா என் வாழ்க்கைய பத்தி நெனச்சு அழறத என்னால பார்க்க முடியல. எதுவும் முடிவு செய்ய கஷ்டமா இருக்கு “ என்று தன் மனதில் இருந்ததை அப்படியே சொன்னாள் மைரா.

“ இத நீ சுலபமா முடிவு செய்ய நாம ஏதாவது செய்யலாமா ? இத பத்தி பேசுவோம், உனக்கு கல்யாணம் பண்ண சம்மதமா இல்லையானு அதுக்கு அப்புறம் நீ தீர்மானிக்கலாம் “ என்று கேஷவ் சொன்னதும், “ என்ன சொல்றீங்க? “ என்று குழப்பத்துடன் பார்த்தாள் மைரா.

கேஷவ் கட்டிலில் கிடந்த ஒரு சால்வையை எடுத்து அவள் தோளில் சுற்றி அவள் மணிக்கட்டைப் பிடித்து தன்னுடன் இழுத்தான்.

*********************************************

முன்னோட்டம்:

“ அம்மு, நான் எல்லா சந்தோஷத்துலையும், கஷ்டத்துலையும் உனக்கு முதல்ல நல்ல நண்பனா இருப்பேன், நீ செய்ற குறும்பு, விளையாட்டுத்தனத்துல துணையா இருப்பேன், நாம ஒன்னா நிறைய இடங்களுக்கு போய் சுற்றி பார்க்கலாம், நிறைய படம் பார்க்கலாம், டேட்டிங் போவோம், ஒன்ன சமைக்கலாம், நீண்ட பயணம் போவோம், வேடிக்கையா சண்ட போடுவோம், ஒருத்தர ஒருத்தர கிண்டல் செய்வோம், எதிர்காலத்துல வாழ்க்க நமக்கு  என்ன கொடுக்கும்னு தெரிஞ்சிக்க பொறுமையா காத்திருப்போம். இதையெல்லாம் நாம ஒன்னா செய்ய என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அம்மு ? “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!