Home Family26. வா கல்யாணம் பண்ணிக்கலாம்

26. வா கல்யாணம் பண்ணிக்கலாம்

by Siragugal Novels
21 views

கேஷவ் கட்டிலில் கிடந்த ஒரு சால்வையை எடுத்து அவள் தோளில் சுற்றி அவள் மணிக்கட்டைப் பிடித்து தன்னுடன் இழுத்தான்.

“ கெட்சப், என்ன எங்க கூட்டிட்டு போறீங்க ? இங்க எல்லாரும் கவலைப்படுவாங்க, நாம இப்படியே வெளிய போக முடியாது “ என்று மைரா சொன்னாள். ஆனால் கேஷவ் கதவைத் திறந்து பார்த்தபோது க்ரிஷ் அவர்களுக்காகக் காத்திருப்பது போல் சுவரில் சாய்ந்திருந்தான்.

“ க்ரிஷ், நீ இன்னும் இங்க தன இருக்கியா ? நான் இவள வெளிய கூட்டிட்டு போறேன், யாராவது எங்கள தேடி வந்தா இவ என்கூட  இருக்கானு சொல்லிடு. நாங்க கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்.” என்று சொல்லிவிட்டு, அவனது பதிலுக்குக் காத்திராமல் மைராவை பின் வாசல் வழியாக அழைத்துச் சென்று தன் காரில் உட்கார வைத்து, டிரைவர் சீட்டில் ஏறி கேஷவ் காரை ஓட்டிச் சென்றான்.

இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, மைரா சாலையைப் பார்த்துக் கொண்டு, அவன் அவளை எங்கே அழைத்துச் செல்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தாள். சில நிமிடங்கள் ஓட்டிய பிறகு புன்னகையுடன் காரை ஒரு ஐஸ்கிரீம் பார்லர் முன் நிறுத்தினான்.

கேஷவ் முதலில் இறங்கி மைராவுக்காக கதவைத் திறந்து, அவள் கீழே இறங்குவதற்காக தன் உள்ளங்கையை நீட்டினான். மைரா அவன் கையைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி கதவைச் சாத்தினாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவள் உட்கார ஒரு நாற்காலியை இழுத்தான். அவளுக்கு பிடித்த ஐஸ் கிரீம் வாங்கி வந்து அவளுக்கு எதிரே அமர்ந்து கிண்ணத்தை அவளிடம் நீட்டினான்.

“ கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறந்துட்டு இத சாப்பிடு. நீ சாப்பிட்டு முடிச்ச அப்புறம் நாம பேசுவோம் “ என்று சொன்னான் கேஷவ்.

அவ்வளவு காலையில் ஐஸ் பார்லர் திறந்திருந்ததைக் கண்டு மைரா ஆச்சரியப்பட்டாள், மிகச் சில வாடிக்கையாளர்கள் அவர்களைப் பார்ப்பதையும் கண்டாள். இருக்கையின் விளிம்பில் அமர்ந்து மெதுவாக ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் உதடுகளை துடைப்பதற்காக ஒரு டிஷ்யூ பேப்பரை நீட்டினான், அவள் அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

மைரா கண்களை மூடி நீண்ட பெருமூச்சு விட்டு, நாற்காலியில் வசதியாக அமர்ந்து அவனைப் பார்த்தாள்.

“ ஏன் இத்தன வருஷமா நீங்க கல்யாணம் பண்ணிக்கல? “ என்று மைரா கேட்டதும், “ கல்யாணம் ஆகப்போற நேரம் யாராவது மாப்பிள்ள ஓடிப்போவான் அந்த கல்யாண பொண்ணா கல்யாணம் பண்ணிக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்கு என் ஆசை நிறைவேறிடிச்சு, அதுவும் கல்யாண பொண்ணு நீ, இதுக்கு அப்புறம் நான் கல்யாணம் வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்ல “ என்று சட்டென சொன்னான் கேஷவ்.

“ நீங்க சொல்றதுல எந்த வேடிக்கையும் இல்ல. பரிதாபப்பட்டு நீங்க  என்ன கல்யாணம் பண்ண வேணாம். என்னால கல்யாணம் பண்ணாம கடைசி வர தனியா இருக்க முடியும் “ என்று மைரா சொன்னதை கேட்டு, “ நான் உன்ன பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யார் சொன்னது? “ என்று கேட்டான் கேஷவ். அவனை ஆச்சரியாமாக பார்த்த மைரா, “ அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறீங்க? “ என்று கேட்டாள்.

“ எனக்கு இப்போ வயசாயிடுச்சு, கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கிடைக்குறது ரொம்ப கஷ்டம், என் அம்மா என் வாழ்க்கைய பத்தி ரொம்ப கவலையா இருக்காங்க. நீ ஏன் என் மேல பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ணிக்க கூடாது? எல்லா பிரச்சனைகயும் நம்மால தீர்க்க முடியும் “ என்று கேஷவ் சொன்னதும் மைராவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

“ என்ன பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்கும் போது ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ எனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சுக்கோ “ என்றான் கேஷவ்.

“ இல்ல, உங்களுக்கு தெரியாது. கடந்த ஒரு வருஷத்துல உங்க கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கு. அது வந்து, நான்.. நான். “ என்று மைரா உண்மையை சொல்ல ஆரம்பித்தாள் ஆனால் கேஷவ் அவளை தடுத்து, “ அம்மு, என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியும், நான் கடந்த காலத்துக்கு போக விரும்பல், நிகழ்காலத்த பத்தி பேசலாம் “ என்று சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த மைரா, “ எல்லாம் தெரிஞ்சிருந்தா இது சரியா வரும்னு நினைக்கிறீங்களா? ஒரே வீட்டில் நாம எல்லாரும் இருக்க முடியுமா ? “ என்று தயக்கத்துடன் கேட்டாள் மைரா.

“ அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ என் மனைவியாவும், வீட்டு மகளாவும் எல்லா மரியாதையோடையும் இருப்ப “ என்று கேஷவ் உறுதியளித்தான். அதன் பிறகு தயங்கிய மைரா, “ நான் ஒரு நல்ல மனைவியா இருக்க மாட்டேன், அதாவது …. “ என்று அவள் மேலும் பேசும் முன் மீண்டும் கேஷவ் அவளை தடுத்தான்.

“ அம்மு, நீ எதை பத்தியும் கவலைப்பட வேணாம். உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது. உன் வாழ்க்கையில இருந்த எல்லாம் கஷ்டமும் மறந்து நீ ஒரு வாழ்க்கைய வாழப்போறனு நம்பு. உன் வாழ்க்கையில நீ செய்ற எல்லாத்துலையும் நான் உன் கூட இருப்பேன். நம்ம உறவை பொறுத்தவரை, கணவன் மனைவி உறவுல நிச்சயம் பரஸ்பரம் இருக்கும். நாம் ரெண்டு பேரும்  தயாரா இருந்தா மட்டும் தான் எல்லாமே நடக்கும். நீ என்ன உன் ப்ரெண்ட் இல்ல பெண்ட் (friend) எப்படி வேணும்னாலும் கருதலாம்? “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவன் வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்து, ஒரு நிம்மதியை உணர்ந்து பெருமூச்சு விட்டாள்.

“ இங்க இருக்க எல்லாரும் நம்ம ரெண்டு பேரையும் தான் பார்க்குறாங்க. பொண்ணு மட்டும் கல்யாண பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணி இருக்கா ஆனா மாப்பிள்ள சாதாரண டிரஸ் போட்டு இருக்கார்னு நினைக்குறாங்க போல “ என்று மைரா சொன்னதும், “ அப்போ நான் தான் மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டியா ? “ என்று உற்சாகமாக கேட்டான் கேஷவ்.

“ இல்ல, இல்ல, நான் உங்க கூட கல்யாண மண்டபத்துல இருந்து ஓடி வந்துட்டேன்னு அவங்க நெனச்சு இருக்கலாம்னு சொன்னேன் “ என்று சட்டென சொன்னவள் பின்னர் கவலை தோய்ந்த முகத்துடன்,   “ நான்.. நான்.. நான் என் அப்பா, அம்மாவ பத்தி கவலைப்படுறேன், அவங்களுக்கு நான் மட்டும் தான் இருக்கேன் “ என்று கண்ணீர் ததும்ப சொன்னாள். ஆனால் கேஷவ் அதற்கு, “ இல்ல, என்ன கல்யாணம் பண்ணிக்க நீ மறுத்தாலும் நான் அவங்களுக்கு மகனா இருப்பேன். நீ சம்மதம் சொன்னா எப்பவும் அவங்க கூட  நெருக்கமா இருப்ப அதனால எனக்கு சம்மதம் சொல்ல உனக்கு ஒரு சாதகமான விஷயம் அது “ என்று கூறினான்.

சற்று யோசித்த மைரா, “ ஆனா நீங்க பெங்களூர்ல வேலை செய்றீங்க, உங்க வேலைய பத்தி எனக்கோ இல்ல குடும்பத்துல இருக்க யாருக்கும் தெரியாது.” என்று சொன்னாள்.

“ என் வேலைய பத்தி தெரிஞ்சிக்க போற முதல் ஆள் நீயா தான் இருப்ப. நீ சம்மதம் சொன்னா, நான் என் வேலைய சென்னையில இருந்து செய்வேன் “ என்று கேஷவ் அதற்கு உடனடி பதில் அளித்தான்.

“ எனக்காக இத்தன வருஷமா நீங்க செய்ற வேலைய ஏன் மாற்ற விரும்புறீங்க ? “ என்று மைரா கேட்க, “ எனக்கு 34 வயசு, உனக்கு 24 வயசு. நீ என்ன கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லும் போது உன் விருப்பத்த நான் ஏன் பரிசீலிக்க கூடாது ? “ என்றான் கேஷவ்.

“ நாம சேர்ந்து வாழ முடியும்னு நினைக்குறீங்களா ? “ என்று மைரா கேட்க, “ முடியும்னு தான் நான் நினைக்கிறேன், அப்பா அம்மா ஏற்பாடு பண்ணி நடக்குற கல்யாணத்துல நிறைய பேரு சந்தோஷமா தான் இருக்காங்க. நம்ம அப்பா, அம்மாவே அதுக்கு நல்ல உதாரணம் “ என்றான் கேஷவ். 

“ கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க மாறி என்ன தொந்தரவு பண்ண ஆரம்பிச்சா என்ன பண்றது? “ என்று மைரா கேட்டதும் சிரித்த கேஷவ், “ என்ன உனக்கு 20 வருஷமா தெரியும், அந்த மாதிரி எதுவும் நடக்காதுனு உனக்கு தெரியும்னு நான் நம்புறேன். எந்தத் தீங்கும் ஏற்படாம உன்ன பாதுகாப்பேன். என் அம்மா, உன்ன அவங்க சொந்த மகளா பார்க்குறாங்க. நான் அவங்க பொண்ண கஷ்ட்டப்படுத்தினா அவங்க நிச்சயமா என்ன ஒதுக்கிடுவாங்க “ என்று சொன்னான்.

அவன் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை அறிந்த மைரா புன்னகைத்து, அவனைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் பார்த்தாள்.

“ நீ சிரிக்கிற பாத்தா ஓகே தான் தோணுது இருந்தாலும் நீயே சொல்லு, உனக்கு சம்மதமா, இல்லையா ? “ என்று கேஷவ் கேட்க, “ மிஸ்டர் அங்கிள், நீங்க எப்போ ஒழுங்கா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டீங்க ? “ என்று கிண்டலாக கேட்டாள். உடனே கேஷவ், “ இது ஒரு சீரியஸ் புகார் தான். இத உடனே சரி செய்றேன் “ என்று சொன்ன கேஷவ்,  எழுந்து மீண்டும் அவளுக்குப் பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி  மைராவிடம் திரும்பி அவள் முன் ஒற்றை காலில் மண்டியிட்டு அவளை அதிர்ச்சியடைய செய்தான்.

“ அம்மு, நான்  உன்னோட கஷ்டத்துலையும், சந்தோஷத்துலயும் கூடவே இருப்பேன், ஃப்ராங்க் (prank) பண்றதுக்கு உனக்கு உதவி செய்வேன், ஒண்ணா நெறைய படம் பாக்கலாம்,  ஒன்னா சமைக்கலாம், லாங் டூர் போலாம், நிறைய கிண்டல் பண்ணலாம், குட்டி குட்டியா சண்டை போடலாம், இதையெல்லாம் நாம ஒன்னா செய்ய என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா அம்மு ? “ என்று ப்ரொபோஸ் செய்தான் கேஷவ். 

அங்கு இருந்த சிலரும், கடை உரிமையாளரும் பார்த்து புன்னகையுடனும், கூச்சலிட்டு, விசிலடிப்பதை பார்த்த மைரா,  வெட்கத்தில் அவளுடைய கன்னங்கள் சிவப்பதை நன்கு உணர்ந்தாள்.

“ இப்போதைக்கு இந்த ஐஸ்கிரீம் ஏத்துக்கோ அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனிடம் இருந்து ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டாள். கேஷவ் அவள் முன் அமர்ந்து அவனது கன்னக்குழி தெரியும்படி அவளை பார்த்து புன்னகைத்தான். அதை கவனித்த மைரா, “ நீங்க இந்த அளவுக்கு சிரிக்குறத இப்போ தான் முதல் முறையா பார்க்குறேன் “ என்று சொன்னாள்.

“ சரி, கல்யாண மண்டபத்துக்கு போகலாமா ? நம்ம அப்பா, அம்மா நமக்காக காத்துட்டு இருப்பாங்க “ என்று கேஷவ் சொன்னதும், “ அய்யோ ! ஆமா, ஆனா நான் இன்னும் நீங்க ப்ரொபோஸ் பண்ணதுக்கு பதில் சொல்லலையே “ என்றான் மைரா. அதற்கு கேஷவ் அவளிடம், “ நீ ஐஸ்கிரீம் வாங்கிகிட்டதும் எனக்கு பதில் கெடச்சுடுச்சு. இப்போ வா கல்யாணம் பண்ணிக்கலாம் “ என்று சொன்ன கேஷவ் பின்னர் அவளிடம், “ இப்போ நமக்கு கல்யாணம் ஆகா போகுது, இனிமே என்ன அங்கிள் சொல்லி கூப்பிட மாட்டணு நம்புறேன் “ என்று சொன்னான்.

“ அது உங்க நடத்தைய பொறுத்தது. ஒழுங்கா நடந்துக்கோங்க அப்போ நான் அத பத்தி யோசிக்குறேன் அங்கிள் “ என்று சொல்லி மைரா கொஞ்சம் இழுக்க, கேஷவ்  தலையை ஆட்டியபடி சிரித்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினான். அவன் கார் கதவைத் திறந்து பயணிகள் இருக்கையில் அவள் உட்கார உதவினான்.

திருமண மண்டபத்தில் அவர்களின் பெற்றோர் இருவரும் மண்டபத்தின் வாசலில் நடந்து கொண்டிருக்க, க்ரிஷ் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டிருந்தான்.

“ என் பசங்க எனக்கு ஹார்ட் அட்டாக் கொடுக்க ஏன் எப்பவும் தயாரா இருக்காணுங்க ? இப்போ மைராவ எங்க கூட்டிட்டு போனான் ? “ என்று அர்ச்சனா புலம்பிக் கொண்டிருந்தார். அதற்கு மதன் அவரிடம், “ கேஷவ் ஒன்னும் குழந்த இல்ல. அவங்க  வெளிய போனதுக்கு காரணம் இருக்கும், அது அவங்க எதிர்காலத்தை தீர்மானிக்க உதவியா இருக்கும்னா நாம சந்தோஷமா தான் இருக்கணும் “ என்று கூறினார்.

கேஷவின் காரை பார்த்த உடனேயே அவர்கள் விரைந்து சென்றனர். வசுந்தரா மைராவுக்காக கதவைத் திறந்த போது அவள் முகத்தில் ஒரு புன்னகையைக் கண்டார்.

“ அவள எங்க கூட்டிட்டு போன கேஷவ் ? நாங்க எல்லாரும் இங்க எவ்ளோ கவலையா இருந்தோம் தெரியுமா ? இப்போ நாங்க எல்லாருக்கும் என்ன பதில் சொல்லுவோம் “ என்று அர்ச்சனா அவனை திட்ட ஆரம்பித்தார்.

“ அம்மா, நீங்க என் நேரத்த வீணடிக்குறீங்க. நான் கல்யாணம் பண்ணிக்க வேற டிரஸ் போடணும் இல்ல உங்க பையன் இப்படி பேன்ட், சட்டை போட்டு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறீங்களா? “ என்று கேஷவ் புன்னகையை அடக்கிக் கொண்டு கேட்டதும், அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்கள் உணர சில நிமிடங்கள் ஆனது, அடுத்த கணம் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டனர்.

“ தாமதிக்காம உடனே சடங்கை ஆரம்பிப்போம் “ என்று வசுந்தரா சொல்ல, “ நான் அவளோட மேக்கப் சரி பண்றேன் “ என்றாள் நைனா.

அனைவரும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர், ஆனால் மைரா கேஷவை நிறுத்தி இடுப்பில் கைகளை வைத்தபடி அவன் முன் நின்றாள்.

“ கெட்சப், நான் சம்மதம் சொன்னதா ஏன் நெனச்சீங்க ? ஒருவேள நான் வேணாம்னு சொன்னா என்ன செய்வீங்க ? “ என்று அவள் கேட்டதும், “ அப்படியா ? சரி இப்ப நான் உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். நான் தயாராகி உனக்காக மணமேடையில வெயிட் பண்றேன். உனக்கு சம்மதமா இருந்தா வா, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் இல்ல நீ இங்க இருந்து ஓடிப்போகலாம், சத்தியமா எல்லாமே எல்லாம் உன் விருப்பப்படி நடக்கும். என்ன பத்தி கவலைப்படாத, வந்துருக்க கூட்டத்துல இருந்து யாராவது ஒரு பொண்ணு என் மேல பரிதாபப்பட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க முன்வருவானு நான் உறுதியா நம்புறேன். நான் கொஞ்சம் வயசானவனா இருக்கலாம், ஆனா நிச்சயமா பார்க்க நல்லா அழகா இருக்கேன் அதனால் நான் என் மனைவி கூட தான் இந்த மண்டபத்த விட்டு போவேன்னு நம்பிக்கையா இருக்கேன். உன்னோட எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள் அம்மு அப்புறம் உனக்காக எல்லாத்தையும் பார்த்துக்க உனக்கு நான் இருப்பேன் “ என்று புன்னகையுடன் கேஷவ் சொன்னதை கேட்டு, தனது சிரிப்பை அடக்கி கொண்டிருந்த மைரா, “ உங்களுக்கும் வாழ்த்துக்கள்….. அங்கிள் “ என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்து சென்றாள்.

என்ன நடக்கும் என்றும் உணர்ந்த கேஷவும் தயாராக சென்றான்.

****************************************************

முன்னோட்டம்:

“ ஹேப்பி வெட்டிங், என்னோட மனைவி திருமதி கேஷவ் “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 1:48 pm

[…] வா கல்யாணம் பண்ணிக்கலாம் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:51 pm

[…] 26.வா கல்யாணம் பண்ணிக்கலாம் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!