Home Family32. உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ?

32. உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ?

by Siragugal Novels
20 views

ஒரு வாரம் கழிந்தது, கேஷவும், மைராவும் ஒருவருக்கொருவர் நன்றாகப் பழக ஆரம்பித்தனர். இருவரும் சரசம் செய்வது, கிண்டல் செய்வது என மகிழ்ச்சியாக நாட்கள் கடந்தது. கேஷவ் அவர்களின் பயணத்தை ஒரு சஸ்பென்ஸாக வைத்திருந்தான், மைரா, தனது எந்த தந்திரோபாயத்திற்கும் அவன் அசைந்து கொடுக்க மாட்டான்  என்பதை அறிந்து அவளது முயற்சியை கைவிட்டாள்.

மைரா இன்னும் தனது வேலையைத் தொடரவில்லை, கேஷவ்  வீட்டிலிருந்து வேலை செய்தான். மதிய உணவு, இரவு உணவு மற்றும் ஷாப்பிங் செய்ய அவர்கள் வெளியே சென்றனர்.

யாரோ அழும் சத்தம் கேட்டு கேஷவ்  திடுக்கிட்டு விழித்தான். மைரா அழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவன் உடனடியாக அவள் கண்ணீரைத் துடைத்தான்.

“ என்ன ஆச்சு அம்மு,  நீ ஏன் அழற? ஏதாவது வலி இருக்கா? நான் உன்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகட்டுமா ? “ என்று கேஷவ் கேட்க, “ வாய மூடுங்க, நான் நல்லா இருக்கேன் ஆனா நல்லா  இல்ல “ என்றாள் மைரா.

“அதுக்கு என்ன அர்த்தம்? “ என்று கேஷவ் குழப்பத்தோடு கேட்க, “  நான் என் அம்மாவையும் என் ரோஜா செடிகளையும் மிஸ் பண்றேன் “ என்று கூறினாள். அவள் வார்த்தையை கேட்டு, கேஷவ்  நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஒரு டம்ளர் தண்ணீரை அவளிடம் நீட்டினான், ஆனால் அவள் அதை வாங்க மறுத்துவிட்டாள்.

“ இப்போ காலையில 6 மணி ஆயிடுச்சு. ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தா அத்த இருப்பாங்க, பால்கனியில இருந்து பார்த்தா ரோஜா செடி தெரியும், இல்லனா ஒரு 50 அடி நடந்தா அங்க நேரா போய் பார்க்கலாம். அதுவும் கஷ்டமா இருந்தா நான் உன்ன என் கையில தூக்கிட்டு போறேன் இல்ல என் முதுகுல ஏறிக்கோ அத்தையும், ரோஜா செடியும் பார்க்க நான் உன்ன அங்க கூட்டிட்டு போறேன். இப்போ சொல்லு உன் பிளான் என்ன ? “ என்று கேஷவ் கேட்டதும், “ என்னால நடந்து போக முடியும் “ என்று சொல்லி போர்வையை வீசிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள். கேஷவ் அவளை பின் தொடர்ந்து சென்றான். சுவரில் சாய்ந்து தாயையும் மகளையும் பார்த்துக் கொண்டிருக்க அவன் வாயிலிருந்து கொட்டாவி வெளியேறியது.

“ கேஷவ், என்ன பார்க்கனும்னு சொல்லி இவ உன்ன எழுப்பினாளா? “ என்று வசுந்தரா கேட்க, “ இல்ல எனக்கு உங்க கையாள  காபி குடிக்கணும்னு ஆசை, அதனால அவள என்னோட இழுத்துட்டு வந்துட்டேன் “ என்றான் கேஷவ்.

“ அவள கெடுக்காதே. இப்ப வா உனக்கு காபி போட்டு தரேன், குடிச்சிட்டு தூங்க போ. நீ சோர்வா இருக்க “ என்று வசுந்தரா சொன்னார் ஆனால் மைரா குறுக்கிட்டு, “ இல்ல, அவருக்கு வேலை இருக்கு. அவர் இன்னைக்கு ரூம் சுத்தம் பண்ணிட்டு, கார் கழுவ போறாரு. அடுத்த மாசம் நாங்க போக போற அந்த மர்மமான டூருக்கு எல்லா பேக்கிங் கூட அவர் தான் செய்வாரு. அது என்ன இடம்னு என்கிட்ட சொல்லாம இருக்குறதுக்கு இது தான் தண்டன “ என்று மைரா கூறினாள்.

“ டிரஸ் மட்டும் பேக் பண்ணனுமா இல்ல உனக்கு தேவையான எல்லாமே நானே பேக் பண்ணட்டுமா ? “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் கேட்டதும், “ கண்டிப்பா எல்லாமே “ என்று சொன்னவள், அவனது இரட்டை அர்த்தம் புரிந்து, “ கொஞ்சம் இருங்க, நீங்க காலையிலேயே கடலைப்போடுறீங்களா ? “ என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ சரி அப்போ நான் நைட் வரைக்கும் வெயிட் பண்றேன் “ என்று கேஷவ் சொல்ல, “ அம்மா, இந்த அங்கிள் ரொம்ப மோசமா மாறிட்டாரு. எப்போ பார்த்தாலும் என்ன கிண்டல் செய்றாரு, அதனால நீங்க இவர இங்கேயே வெச்சு பார்த்துக்கோங்க. நான் எங்க ரூமுக்கு போயி உள்ள இருந்து பூட்டுறேன் “ என்று சொல்லிவிட்டு மைரா உடனடியாக ஓட, கேஷவ்  அவளைப் பின்தொடர்ந்து வெளியேறினான்.

“ நீ ஏன் அவ பின்னாடி போற கேஷவ் ? இங்கேயே தூங்கு, இந்நேரம் அவ கதவை பூட்டியிருப்பா “ என்று வசுந்தரா சொன்னார் ஆனால் கேஷவ், “ நான் அவ பின்னாடி வருவேன்னு அவளுக்கு தெரியும் அதனால பூட்ட மாட்டா “ என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வசுந்தரா அவர்களை பார்த்து புன்னகைத்தார். கேஷவ் எதிர்பார்த்தது போலவே கதவு பூட்டப்படவில்லை. அறைக்குள் நுழைந்த கேஷவ்  கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டான். மைரா அவனை நோக்கித் திரும்பி அவன் கையைக் குத்த, அவன் கண்களை மூடியபடி “ ஹ்ம்ம் “ என்று முனகினான்.

“ நான் இப்படி நடந்துக்குறது பார்த்து உங்களுக்கு கோவம் வரலையா ? “ என்று மைரா மெல்ல கேட்டதும், “ இல்ல. “ நீ செய்ற எல்லாத்தையும் ரசிக்கிறேன், என்ன கிண்டல் செய்ய உனக்கு புடிக்கும்னு எனக்கு தெரியும். என்ன கிண்டல் பண்ணாம வேற யார நீ கிண்டல் செய்வ ? நீ என் மனைவி, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அது மட்டும் இல்ல, கல்யாணத்துக்கு முன்னாடியே, சின்ன வயசுல இருந்து நீ என் அம்மு அதனால என்ன வேணும்னாலும் செய்ய உனக்கு உரிமையும் இருக்கு “ என்றான் கேஷவ்.

“ நீநக ரொம்ப நல்லவரு ஆனா பாவம் “ என்று மைரா சொல்ல, கேஷவ் சிரித்தான். இரவு முழுவதும் இருவரும் படம் பார்த்த காரணத்தால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினார்கள்.

துவைத்த துணிகளை மொட்டை மாடியில் காயப்போட மைராவுக்கு கேஷவ் உதவி செய்து கொண்டிருந்தான்.

“ கெட்சப், நீங்க ஏன் க்ரிஷ் கிட்ட பேசக் கூடாது ? ரோஷினிக்கும் க்ரிஷுக்கும் இடையில ஏதோ பிரச்சன மாதிரி தெரியுது. அவங்க  வாழ்க்க கெட்டு போறத நாம பார்த்துட்டு இருக்க முடியாது. அவன்  நிறைய கஷ்டப்படுற மாதிரி தெரியுது. அவன் பிரச்சினைக்கு நாம ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கனும் “ என்று மைரா சொன்னதும், “ அத பத்தி நான் பல முறை யோசிச்சேன் ஆனா நீ சொல்ற மாதிரி அது அவ்ளோ சுலபம் இல்ல. அவன் வாழ்க்க முள் மேல போட புடவை மாதிரி, நாம பொறுமையா தான் கையாளனும். அவன் வேலை முடிஞ்சு திரும்பி வந்ததும் ரெண்டு பேரும் அவங்களே  பிரச்சனைய சரி செய்றாங்களா பார்ப்போம் இல்லனா அப்பாவையும், அம்மாவையும் பேச சொல்லுவோம். அதுவும் ஒரே நைட்ல இது நடக்காது. தேவைப்பட்டா நான் தலையிடுறேன். “ என்று சொன்னான் கேஷவ். 

“ என்ன நடக்கும் நினைக்குறீங்க ? “ என்று மைரா கேட்டதும் சில நொடிகள் யோசித்த கேஷவ், “ அவங்க எதிர்காலம் என்ன ஆகும்னு எனக்குத் தெரியாது, ஆனா அவ அவனுக்கு ஏத்தவ இல்லனு மட்டும் தெரியும். இப்போ நான் சொல்றத கேளு, என்ன நடந்தாலும் அவங்க விஷயத்துல நீ தலையிட கூடாது. உன் நல்லதுக்குத் தான் இத சொல்றேன். எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடு, புரியுதா ? “ என்று தெளிவாக சொன்னான்.

மைரா சரி என்று தலையை ஆட்டியதும், அவர்கள் தங்கள் அறைக்குத் திரும்பினர்.

அன்று மைரா, கேஷவை ஆச்சரியப்படுத்த விரும்பி மதிய உணவிற்கு சில சிக்கன் ரெசிபிகளை ஆர்டர் செய்தாள். அர்ச்சனா, மதன், கேஷவ் மற்றும் மைரா மதிய உணவு சாப்பிட அமர்ந்திருக்க, மைரா அவனுக்காக ஆர்டர் செய்த உணவுகளை வைத்தாள்.

“ கெட்சப், நான் உங்களுக்காக ஆர்டர் செய்தத பாருங்க. உங்களுக்கு பிடித்த சிக்கன் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி தன் தட்டை பரிமாற எத்தனிக்க, அதிர்ச்சியடைந்த அர்ச்சனா அவனைத் தடுத்தாள்.

“ மைரா, கேஷவ்  அசைவம் சாப்பிட மாட்டான். அவனும் உன்ன மாதிரி சைவம் தான் சாப்பிடுவான் “ என்று அர்ச்சனா கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மைராவின் முகம் வெளிறிப் போய் கண்கள் ஈரமாயின.

“ ஸாரி, ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க “ என்று சொல்லிவிட்டு, அவள் எழுந்து தன் அறைக்கு விரைந்தாள். கேஷவ்  அவளைப் பின்தொடர்ந்து, அவள் கட்டிலில் முழங்கால்களை மார்போடு சேர்த்து உட்கார்ந்து விம்மி அழுததைப் பார்த்தான். அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளது தாடையைப் பிடித்து இழுத்து அவனைப் பார்க்க, மைரா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ ஸாரி கெட்சப், உங்கள பத்தி எனக்கு எதுவும் தெரியல. க்ரிஷ் ஒருமுறை உங்களுக்கு அசைவம், அதுவும் குறிப்பா சிக்கன் பிடிக்கும்னு சொன்னான், அதனால உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்சேன். எனக்கு சமைக்க தெரியாது அதனால ஆர்டர் பண்ணேன். ப்ளீஸ், என்ன மன்னிச்சிடுங்க “ என்று சொல்லி அழுதாள்.

“ அழறத நிறுத்து அம்மு. நாம ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்க வாழ்நாள் முழுக்க அவகாசம் இருக்கு “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் மைரா அவனிடம், “ இருந்தாலும் உங்கள பத்தி அடிப்படை விஷயங்கள் கூட எனக்குத் தெரியல “ என்று அழுதாள்.

“ என் தம்பியோட பார்வையில பார்க்காம நீ உன்னோட பார்வையில என்ன பார்க்கும் போது என்ன பத்தி எல்லாமே தெரிஞ்சிக்குவ “ என்று கேஷவ் சொன்னதும், அவன் வார்த்தைகளின் கனத்தைக் கேட்டு மைரா அழுகையை நிறுத்தினாள்.

“ அவர் சொல்றது சரிதான், நான் எப்பவும் க்ரிஷ் கிட்ட இருந்து தான் இவர பத்தி கேட்டு இருக்கேன். அவருக்கு என்ன புடிக்கும், புடிக்காதுனு தெரிஞ்சிக்க நான் இவர் கிட்ட தானே பேசி இருக்கணும். ஆனா க்ரிஷ் ஏன் என்கிட்ட போய் சொன்னான் ? இப்படி பண்ணி அவன் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான் “ என்று மனதில் நினைத்த மைரா, “ ப்ளீஸ் கெட்சப், ஸாரி “ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“ ஸாரி சொல்லாத அம்மு, நீ அழறத பார்க்க எனக்கு பபுடிக்காது. இப்போ நல்ல பொண்ணா இரு, வா போய் சாப்பிடுவோம் இல்ல உன் மனசு சந்தோஷப்படுற மாதிரி வெளிய போலாமா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நீங்க ரொம்ப நல்லவரு. உங்கள பத்தி எல்லாத்தையும் எனக்கு சொல்லுவீங்கன்னு சத்தியம் பண்ணுங்க அப்போ தான் நான் சாப்பிடுவேன் “ என்றாள் மைரா.

“ சரி, லஞ்ச் சாப்பிட்டு முடிச்ச அப்புறம் எனக்கு என்ன புடிக்கும், புடிக்காது எல்லாத்தையும் சொல்றேன் “ என்று கேஷவ் உறுதியளித்து அவள் முகத்தைத் துடைத்தான். பின்னர் இருவரும்  மதிய உணவு சாப்பிட டைனிங்கை அடைந்தனர். மைரா நன்றாக இருக்கிறாள் என்று உறுதியளிக்க கேஷவ்  தனது தாயைப் பார்த்து புன்னகைத்தான்.

“ சிக்கன் எங்க ? தூக்கி போடுட்டீங்களா மா ? “ என்று மைரா கேட்க, “ இல்ல, எனக்கு சிக்கன் பிடிக்கும், அதனால நான் சாப்பிட்டேன். ரொம்ப நன்றி “ என்று சொல்லி மதன் ஏப்பம் விட்டதும் அனைவரும் சிரித்தனர்.

அர்ச்சனாவும், மதனும் தங்கள் அறைக்குத் திரும்பியதும், அர்ச்சனா அவரது உடைகளையும் பொருட்களையும் பேக் செய்தார்.

“ நீங்க மும்பைக்கு அவன சந்திக்க வர்றதா க்ரிஷ் கிட்ட சொல்லிட்டீங்களா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ இல்ல, அவன் எப்பவும் போல உடனே என்ன வர வேண்டாம்னு சொல்லுவான் அதனால நான் மும்பை போன உடனே அவனுக்கு போன் பண்றேன் “ என்று சொன்னார் மதன்.

“ அவன் தனிமையா உணர்ந்திருப்பான் அதனால அவன நல்லா பார்த்துக்கோங்க. அவன் வாழ்க்கையில நடக்குற எத பத்தியும் பேச வேண்டாம். அவன் குற்ற உணர்ச்சியில இருக்க வாய்ப்பு இருக்கு அதனால நாம அவனுக்கு ஆதரவா இருக்கோம்னு தைரியம் மட்டும் கொடுங்க. நான் தினமும் அவன் கிட்ட பேசுறேன் அப்படி இருந்தும் அவனோட பிரச்சனைய மனசு விட்டு சொல்ல மாட்டேங்குறான் “ என்று அர்ச்சனா மிகவும் கவலைப்பட்டார்.

“ கவலைப்படாத, சில விஷயங்கள் முடிவில்லாத வலி மாதிரி இருக்கும் ஆனா எல்லாமே சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும், அவன் சீக்கிரம் இதுல இருந்து வெளிய வருவான் “ என்று மதன் ஆறுதல் சொல்ல, “ நாம கடந்த காலத்துக்கு திரும்பி ரோஷினி சென்னைக்கு வர்றத தடுக்க முடிஞ்சா நல்லா இருக்கும் “ என்று சொன்னார் அர்ச்சனா.

“ கேஷவுக்கும், மைராவுக்கும் தகவல் சொன்னியா? “ என்று மதன் கேட்டதும், “ இல்ல, அவங்க வாழ்க்கைய இப்போ தான்  தொடங்கி இருக்காங்க, இதையெல்லாம் சொல்லி அவங்க சந்தோஷத்த கெடுக்க வேணாம். உங்க ப்ரெண்ட பொண்ணோட கல்யாணத்துக்கு போறதா சொல்லி இருக்கேன். க்ரிஷுக்காக நான் பேக் பண்ணி இருக்க ஸ்வீட் எல்லாம் அவனுக்கு கொடுங்க, நீங்க அவன் கூட தங்குற வர சமைச்சு கொடுங்க “ என்று அர்ச்சனா சொன்னதும், மதன் சரி என்று சொல்லிவிட்டு க்ரிஷை சந்திக்க கிளம்பினார்.

கேஷவ் தனது வேலையை செய்ய லேப்டாப்பை திறக்க, மர்ம பாடகரின் பாடல்களைப் பார்க்க மைரா மொபைலில் யூடியூப்பைத் திறந்தாள். அவள் சிரித்துக் கொண்டிருக்க, கேஷவ்  அவள் காதில் இருந்த ஏர் பாடை அகற்றினான்.

“ என்ன பார்த்து இப்படி சிரிக்குற ? “ என்று கேஷவ் கேட்டதும், “  உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். ஒரு மர்ம பாடகர் இருக்காரு கெட்சப், அவர் கிட்டார் வாசிச்சி, பாட்டு போடுவாரு. அவர் குரல் என்ன உருக்கிடும், அவர் பாடுறத கேட்டா நான் எல்லாத்தையும் மறந்துடுவேன் “ என்று மைரா உற்சாகமாக சொன்னாள்.

“ ஹ்ம்ம், மர்மமா இருக்குற ஒருத்தருக்கு இவ்ளோ பாராட்டா ? ஆனா அவன் ஏன் ஒரு மர்மமா இருக்கான் ? “ என்று கேஷவ் கேட்க, “ எனக்குத் தெரியாது, அவர் இதுவரை அவரோட முகத்த வெளிப்படுத்தல. அவர் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு “ என்று சொல்லி மைரா புன்னகைத்தாள்.

“ உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த உன் புருஷன் கிட்ட இப்படி சொல்லுவ ? அவன் எப்படி பாடுறான்னு நானும் கேட்குறேன் அதுக்கு அப்புறம் உனக்கு அவன் மேல ஈர்ப்பு இருக்க அளவுக்கு அவன் தகுதியானவனானு நான் முடிவு செய்றேன் “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனருகில் சென்று பாடல்களை இயக்கினாள்.

பாடலை கேட்டுக் கொண்டிருந்த கேஷவின் முகத்தை மைரா பார்த்தாள், ஆனால் அவன் எந்த எதிர்வினையும் இல்லாமல் வெறுமையாக இருந்தான். மைரா உடனே பாடல்களை நிறுத்திவிட்டு அவன் கையைக் கிள்ளினாள்.

“ அவரோட பாட்டுக்கு நீங்க எப்படி ரியாக்ட் பண்ணாம இருக்கீங்க ? நான் அவர் பாட்டு ஒவ்வொன்னையும் திரும்ப திரும்ப கேட்பேன். ஒரு உண்மைய சொல்லட்டுமா ? நம்ம கல்யாணத்துக்கு முந்தைய நாள் அவர் ஒரு சோகமான பாட்டு வெளியிட்டாரு. என்ன நம்புங்க கெட்சப், நான் அவருக்காக அழுதேன். அவருக்கும் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கும் நினைக்குறேன் “ என்று மைரா சொன்னதும், 

“ அது உனக்கு எப்படித் தெரியும்? “ என்று கேட்டான் கேஷவ்.

“ அந்தப் பாட்டு பாடும் போது அவரோட குரல்ல ரொம்ப வலி இருந்துச்சு. அது மட்டும் இல்ல, நான் கல்யாணம் பண்ணிக்க பயந்து அழற நிலமையில இருந்தேன் அதனால் இவர் பாட்டு கேட்ட உடனே உடைஞ்சு போயிட்டேன் “ என்று அந்த நாளை நினைவுப்படுத்தி மைரா கூறியதை கேட்டு, “ இப்ப எப்படி இருக்க? ஏதாவது பயம் இருக்கா? “ என்று கேட்டான் கேஷவ்.

“ உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ? நான் சந்தோஷமா இருக்கேன், உண்மையா சந்தோஷமா இருக்கேன் “ என்று மைரா புன்னகையோடு சொல்ல, அவள் வார்த்தையின் உண்மை அவள் கண்களில் பிரதிபலிப்பதை கேஷவ் பார்த்தான்.

*************************************************

முன்னோட்டம்:

“ அப்போ நான் டவலோட வந்த உனக்கு பிரச்சன இருக்காதா ? “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 1:48 pm

[…] உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ? […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:52 am

[…] 32உங்க கூட இருக்க நான் ஏன் பயப்படனும் ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!