Home Family34. என் உடம்புல ஷாக் அடிக்குது

34. என் உடம்புல ஷாக் அடிக்குது

by Siragugal Novels
19 views

காலையில் எழுந்த மைரா அன்றைய நாளுக்கு தயாரானாள், கேஷவ்வும் அவளை அகாடமியில் இறக்கிவிட தயாராகிக் கொண்டிருந்தான். அவசரத்தில் மைரா தடுமாறினாள், அவள் தரையில் விழுவதற்குள் கேஷவ் அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர், இருவரின் நறுமணம் அவர்களின் நாசியைத் தாக்கியது.

அவன் தன் இடுப்பைப் பிடித்திருப்பதை உணர்ந்த மைரா உதட்டைக் கடித்துக் கொண்டாள். நரம்புகளின் வழியே மின்சாரம் பாய்வது போல உடல் முழுவதும் ஒரு பொறி பரவுவதை உணர்ந்தாள், ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் கண்களை பார்த்து தொலைந்து போய் வேரூன்றி நின்றனர்.

மைரா தன் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போலவும், உடல் முழுவதும் சிலிர்ப்பதையும் உணர்ந்தாள். அவள் இதயம் மணிக்கு மைல் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. அவள் முதல் முறையாக இனந்தெரியாத உணர்வை உணர்ந்தாள்.

“ நான்… கரன்ட் கம்பிய மிதிச்சிட்டேன் நினைக்குறேன்……கரன்ட்…. என் உடம்புல ஷாக் அடிக்குது “ என்று சொன்ன மைராவின் குரல் கிசுகிசுப்பாக வெளிவர, அவள் தன் பார்வையை அவன் கண்களிலிருந்து அவன் மார்பை நோக்கி பார்த்தாள். அவளது சிவந்த காதுகளும், கன்னங்களும், அவளிடம் அவன் ஏற்படுத்திய தக்காத்தை வெளிப்படுத்தியதை பார்த்து கேஷவ் புன்னகைத்தான். அவன் அவள் காதருகே சாய்ந்து அவன் உதடுகள் அவள் காதை உரசும் நெருக்கத்தில் இருந்த போது, மைரா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, கால் விரல்களை வளைத்து அவன் சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“ இப்ப நான் உன்னக் காப்பாத்தனும் தானே ? “ என்று கேஷவ் கிசுகிசுத்ததும், மைரா சட்டென கண்களைத் திறந்தாள். என்ன நடக்கிறது என்று அவள் உணர்வதற்குள், அவனது விரல்கள் அவளது வளைவுகளை அழுத்தமாக பிடிக்க, கேஷவ் அவளைத் தூக்கி கண்ணாடி முன் இருந்த மேஜை மேல் உட்கார வைத்தான்.

மைரா சத்தமாக மூச்சிரைத்து, அவன் தோளைப் பிடித்தாள். மைரா வெட்கப்பட்டு அவனைத் தவிர வேறு எங்கும் பார்த்தாள். கேஷவ்  தன் விரல்களால் அவள் கன்னங்களைத் தொட்டு, அவள் தலைமுடியை அவள் காதுக்குப் பின்னால் ஒதுக்கினான்.

“ நீ அழகா இருக்க அம்மு, உன்னோட கன்னத்துலையும், கழுத்துலையும் இருக்க இந்த இளஞ்சிவப்பு கலர் நான் இதுவர பார்த்ததுலையே ரொம்ப அழகான கலர் “ என்று சொல்லி, கேஷவ்  புன்னகையுடன் நகர்ந்து, காதுகளில் நாணம் பூச, புன்னகையை மறைக்க உதட்டைக் கடித்துக் கொண்டிருந்த மைராவைப் பார்த்தான்.

“ உனக்கு லேட் ஆகுது, நாம போகலாமா? “ என்று கேஷவ் மெல்ல கேட்டதும், வார்த்தைகள் அவளை ஏமாற்ற, மைரா தலையை அசைத்தாள். அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பதை மறந்து மேஜையில் இருந்து கீழே குதித்து ஓடினாள். அவளது திடீர் இழுப்பில் கேஷவ்  தடுமாறினாலும் ஒரு கையால் சுவரையும் மறு கையால் மீண்டும் அவள் இடுப்பையும் பிடித்துக் கொண்டு சமநிலைப்படுத்தினான். மைரா தன் பிடியை விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். கேஷவ்  கண்ணாடியைப் பார்த்து விரல்களால் தலைமுடியைக் கோதினான்.

“ நல்ல வேளை, அவ உன் மேல ஏற்படுத்துன தாக்கத்த கவனிக்கல “ என்று சொல்லி, தலைமுடியை சரி செய்து கொண்டும்,  நாணத்தை மறைக்க கழுத்தை தேய்த்துக்கொண்டு, புன்னகையை மறைத்து கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். மியூசிக் அகாடமிக்கு செல்லும் பயணம் மிகவும் அமைதியாக இருந்தது, மைரா சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கேஷவ்  அவளை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அகாடமியை அடைந்ததும் மைரா கதவைத் திறந்து கொண்டு அவனிடம் கிசுகிசுப்பான குரலில் bye என்று சொல்லிவிட்டு விரைந்தாள். கேஷவ் தன் முலையை தடவிக் கொண்டே உதட்டை விட்டு அகலாத புன்னகையுடன் வீட்டை நோக்கி காரை ஓட்டினான்.

மைரா, நைனாவை பார்த்து அவளை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்று, “ நைனா, எனக்கு ஷாக் அடிச்சிடுச்சு “ என்று சொன்னாள். அதை கேட்டதும் பதறிப்போன நைனா, அதிர்ச்சியடைந்து மைராவின் கையைப் பிடித்து அவள் நலமாக இருக்கிறாளா என்று பார்த்தாள், ஆனால் மைரா அவளைத் தடுத்தாள்.

“ ஹாஸ்பிடல் போனியா ? உன் புருஷன் எங்க ? ஷாக் அடிச்சா அவர் ஏன் உன்ன வேலைக்கு அனுப்பினாரு ? எப்படி நடந்துச்சு ? “ என்று நைனா பதற்றத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

“ கெட்சப் என்ன தொட்டதும் ஷாக் அடிச்சுடுச்சு “ என்று மைரா சொன்னதும், என்ன நடந்தது என்பதை நைனா புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது. அவளுக்கு புரிதல் ஏற்பட்டதும், மைராவை கட்டிப்பிடித்து உற்சாகத்தில் துள்ளினாள்.

“ அய்யோ கடவுளே! மைரா தயவு செஞ்சு அடுத்து என்ன நடந்துச்சுனு என்கிட்ட சொல்லாத. நானே பாவம் இன்னும் தனியா சிங்குலா இருக்கேன் “ என்று நைனா சொல்ல, “ ஒன்னும் நடக்கல “ என்றாள் மைரா.

நைனா கண்களை சுருக்கி பார்த்ததும், மைரா அகாடமிக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பு நடந்ததை அவளிடம் கூறினாள்.

“ நான் உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்குறேன் மைரா, அதுக்கு நீ உண்மையா பதில் சொல்லணும். இன்னைக்கு நடந்ததுக்கு நீ வருத்தப்படுறியா இல்ல புடிச்சு இருந்துச்சா ? “ என்று நைனா கேட்க, “ நான் வருத்தப்படல “ என்று பதில் சொன்னாள் மைரா.

“ நல்லது, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மைரா, வாழ்க்க போற ஓட்டத்தோட அப்படியே போ, நீங்க ரெண்டு பேரும் சரியான பாதையில போறீங்கனு தெரியுது. சரியான நேரத்துல எல்லாமே சரியா நடக்கும் அப்போ, வாழ்க்க உங்களுக்கு நிறைய சந்தோஷத்த கொடுக்கும், அத ஆரத்தழுவி, பொக்கிஷமாக பாதுகாத்து வாழு “ என்று நைனா எடுத்து சொன்னாள்.

“ அது சரி ஆனா இப்போ நான் அவர் முன்னாடி எப்படி போவேன் ? அவர் இப்போ என்ன கூட்டிட்டு வரும் போதே என்னால அவர் கண்ண பார்க்க முடியல, சாயங்காலம் வீட்டுக்கு போனதும் என்ன செய்வேன் ? “ என்று மைரா வெட்கத்தில் சொல்ல, நைனா அவளை குறும்பு பார்வையுடன் பார்த்து, “ பழிக்கு பழி வாங்கு. உன்ன கட்டிபிடிச்சு அவர் உனக்கு கொடுத்த அதிர்ச்சிய நீயும் வருக்கு திருப்பி கொடுத்து பிரச்சனைய முடிச்சிடு. எப்பவும் ஒருத்தரே விளையாட்ட விளையாட முடியாது, ரெண்டு பேரு சேர்ந்து விளையாடலாம். அவர் உங்க உறவுல எல்லா முயற்சியும் எடுக்குறாரு அதே மாதிரி நீ ஏன் செய்யக் கூடாது ? குறைந்த பட்சம் முயற்சி செய் மைரா “ என்று சொன்னாள்.

நைனா சொன்னதை கற்பனை செய்து பார்த்த மைராவின் கன்னங்கள் சிவந்தன.

“ ஒய் உன் புருஷன் இன்னும் வரல, நீ அதுக்குள்ள வெட்கப்படுற ? உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டதுல இருந்து உன்ன கிண்டல் பண்ணி, கடலைப்போடுற அதே ஆள் தான் இவரு, அது மனசுல இருக்கட்டும் “ என்று நைனா சொல்ல, “ இல்ல, என்னால முடியாது, நீ வா நாம வேலைய பார்க்கலாம் “ என்று சொன்னாள் மைரா.

“ நாம ரீயூனியன் போகணும் ஞாபகம் இருக்கா ? அப்போ எல்லார் முன்னாடியும் நீயும், உன் புருஷன் ஏதோ மூணாவது மனுஷங்க  மாதிரி இருக்க முடியாது தெரியும்ல ? எனக்கு தெரிஞ்சி க்ரிஷும் அங்க வருவான், அப்போ ரோஷினியும் அவன் கூட வருவா. எல்லாரும் உங்கள பத்தி பேசுற மாதிரி நடந்துக்காத. குறைந்த பட்சம் எல்லாரு முன்னாடியும் நீங்க ரெண்டு பேரும் அன்பான ஜோடி மாதிரி நடிக்கணும் “ என்று நைனா சீரியஸாக சொல்ல, நைனா சொல்வது சரி என்று உணர்ந்த மைரா, “ நான் கெட்சப் கிட்ட பேசறேன் “ என்று கூறினாள்.

நைனா சரி என்று சொன்னதும் அவர்கள் மீண்டும் வேலைக்கு சென்றனர். வீட்டுக்குள் நுழைந்த கேஷவ் க்ரிஷ் வந்திருப்பதைப் பார்த்து, அவன் தோளில் கை போட்டு இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.

“ நான் இங்க செட்டில் ஆயிட்டேன், இப்போ நீ வெளியூர் போக ஆரம்பிச்சிட்டியா ? “ என்று கேஷவ் கேட்க, “ வேலை விஷயமா போறத தவிர்க்க முடியல அண்ணா “ என்றான் க்ரிஷ்.

“ இதுக்கு அப்புறம் நீ இப்படி வெளியூர் போகாம உன் வாழ்க்கையில கவனம் செலுத்துவனு நம்புறேன். உனக்கு சப்போர்ட் பண்ண நான் இருக்கேன் க்ரிஷ். நான் ஏதாவது செய்யணுமா சொல்லு இல்ல உனக்கு நிம்மதி தரும்னா மைரா கிட்ட பேசு “ என்று சொன்ன கேஷவ், “ உங்க காலேஜ் ரீயூனியன் இன்விடேஷன் உனக்கு வந்துச்சா ? “ என்று கேட்டான்.

“ ரொம்ப நன்றி அண்ணா, இன்விடேஷன் வந்துச்சு. குறைந்தபட்சம் ரீயூனியன் வர நான் வெளியூர் போக மாட்டேன். நீங்களும், மைராவும் எப்படி இருக்கீங்க ? அவ எங்க இருக்கா ? “ என்று க்ரிஷ் கேட்டான்.

“ நான் அவள இப்போ தான் அகாடமியில விட்டுட்டு வந்தேன். உன்ன பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவா. ரீயூனியனுக்கு நீயும் வருவன்னு தெரிஞ்சா இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவா “ என்று சொன்னான் கேஷவ்.

“ நிஜமா தான் சொல்றீங்களா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ ஏன் சந்தோஷமா இருக்க மாட்டா ? அவ உன்னோட ப்ரெண்ட், உன் மேல அவளுக்கு அக்கறை இருக்கு, உன்ன பத்தி அடிக்கடி பேசுவா “ என்றான் கேஷவ். அவனது வார்த்தைகளைக் கேட்டு க்ரிஷ் புன்னகைத்தான், ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, அவன் பார்வை பிரதான நுழைவாயிலின் வாசலில் நின்று அவர்களின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ரோஷினியின் பார்வையைச் சந்தித்தது. வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதிர்த்தவள், க்ருஷின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தாள். கேஷவ், க்ரிஷின் தோளில் இருந்து கைகளை எடுத்து கொஞ்சம் விலகினான்.

“ க்ரிஷ், நீ இன்னிக்கு வர்றேன்னு என்கிட்ட சொல்லலையே? எப்படியோ நீ திரும்பி வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். ப்ளீஸ் இதுக்கு மேல இப்படி வெளியூர் போறத நிறுத்து “ என்று ரோஷினி பேசும் போதே கேஷவ்  அவர்களை விட்டு விலகிச் சென்றான். கேஷவ் பார்வையில் இருந்து மறைந்தவுடன் க்ரிஷ் அவளைத் தள்ளிவிட்டான்.

“ நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லாத மாதிரி நடந்துக்குறத நிறுத்து. எனக்கு இதுக்கு மேல உன்கூட தொடர விருப்பம் இல்ல “ என்று சொல்லி, அவளை விட்டுவிட்டு தன் அறைக்கு விரைந்தான்.

கேஷவ் தன் அறையில் கண்ணாடி முன் நின்று, “ நீ இன்னைக்கு அவள கிண்டல் செய்றது, சரசம் பண்றத நிறுத்து. அவள கிண்டல் பண்றதுல உனக்கு ரொம்ப தைரியம் ஆயிடுச்சு, பாவம் என அப்பாவி பொண்டாட்டி “ என்று சொல்லி புன்னகைத்தான்.

மாலையில் கேஷவ், மைராவை அழைத்துச் செல்ல அகாடமிக்கு சென்ற போது, காலையில் நடந்த சம்பவத்தை பற்றி பேசாமல் இருவரும் புன்னகைத்து வழக்கம் போல நிதானமாகவும் வசதியாகவும் உரையாடினர். வீட்டை அடைந்து அவள் க்ரிஷைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மைரா, கேஷவ் தன்னிடம் சொல்லாமல் இருந்ததற்கு அவனை முறைத்தாள்.

“ உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் சொல்லல அம்மு “ என்று கேஷவ் சொன்னதும் அவள் க்ரிஷை பார்த்து, “ க்ரிஷ், எப்படி இருக்க ? தயவு செஞ்சு மறுபடியும் வெளியூர் போக எண்ணம் இருக்குனு சொல்லாத “ என்று கூறினாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவள் பேசுவதை பார்த்து க்ரிஷ் சிரித்துக்கொண்டே சில சாக்லேட்டுகளை அவளிடம் கொடுத்தான். அவனை மேலும் காயப்படுத்தக் கூடாது என்பதற்காக மைரா சாக்லேட்டுகளை ஏற்றுக்கொண்டாள்.

“ நான் போகணும் மைரா ஆனா உடனே இல்ல. நீ சொல்லு, எப்படி இருக்க ? என் அண்ணன் உன்ன எப்படி பார்த்துக்குறாரு ? “ என்று க்ரிஷ் புன்னகையோடு கேட்டதும், “ கெட்சப் தான் பெஸ்ட், நல்லா பார்த்துக்குறாரு. நீ ரீயூனியன் வரியா ? “ என்று அவனிடம் கேட்டாள்.

க்ரிஷ் பதில் சொல்வதற்குள் அங்கு வந்த ரோஷினி, “ கண்டிப்பா க்ரிஷ் வருவான், அதோட நானும் அவன் கூட வருவேன் “ என்று பதில் சொன்னாள்.

க்ரிஷ் அவளை மறுக்கவும், தடுக்கவும் விரும்பினான், ஆனால் அவனது பெற்றோர், கேஷவ் மற்றும் மைரா அவனை பார்ப்பதை கண்டு, சிறிது நேரம் கழித்து எல்லோருடனும் பேச முடிவு செய்து தலையை மட்டும் அசைத்தான்.

“ க்ரிஷ் வீட்ல இருக்கான் அதனால நாளைக்கு நாம எல்லாரும்  வெளிய போகலாமா ? “ என்று அர்ச்சனா கேட்டார். ஆனால் க்ரிஷ் அவரிடம், “ எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, அதை என்னால தவிர்க்க முடியாது “ என்று சொன்னான்.

“ கெட்சப் “ என்று மைரா அவனிடம் கேட்க, “ இல்ல அம்மு, நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. நாளைக்கு உன்ன அகாடமியில கூட இறக்கிவிட என்னால முடியாது “ என்று கேஷவ் சொன்னான்.  அதற்கு மைரா, “ பரவாயில்ல, நானே ஓட்டுவேன் “  என்று புன்னைகையோடு சொன்னாள்.

மைராவும் கேஷவும் அறைக்குத் திரும்பியதும் அவள் அவனுக்கு தண்ணீர் ஊற்றி கொடுத்தாள்.

“ கெட்சப், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ரீயூனியனுக்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன். சில பேரு எப்பவும் என்ன வம்பிழுக்குற மாதிரி நம்ம கிட்ட பிரச்சன பண்ண வாய்ப்பு இருக்கு அதனால நாம ரொம்ப அன்பா இருக்க மாதிரி, எந்த அசௌகரியமும் இல்லாம அவங்க முன்னாடி நடிக்கணும் “ என்று மைரா தயங்கியபடி கூறினாள்.

“ நமக்குள்ள அசௌகரியம் இருக்கா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நாம நல்லா இருக்கோம் ஆனா அவங்க நம்ம உறவ சரிபார்க்க ஏதாவது கேட்கலாம் இல்ல நாம் ரெண்டு பேரையும் உன்னிப்பா கவனிக்கலாம் “ என்றாள் மைரா.

சில நொடிகள் யோசித்த கேஷவ், “ நான் அன்பான புருஷனா நடிக்கணும் சொல்றியா ? “ என்று கேஷவ் ஹஸ்கி குரலில் கேட்க, மைரா தரையைப் பார்த்தபடி ஆம் என்று தலையை ஆட்டினாள். அவன் அவள் தலையை நிமிர்த்தி அவள் தாடையைப் பிடித்து மூக்கை லேசாக சீண்டினான்.

“ இது இரு வழி விளையாட்டு, அதனால நீயும் அன்பான பொண்டாட்டியா நடந்துக்கணும். அன்பான புருஷன், பொண்டாட்டியா இருக்க அர்த்தம் என்ன தெரியுமா? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா ஆம் என்று தலையை அசைத்து கட்டிலில் விரிப்புகளை சரி செய்வது போல் பாவனை செய்ய, கேஷவ் அவளை நெருங்கி, தன் கையை அவளை நோக்கி நீட்டி, “ நீ எந்தத் தயக்கமும் இல்லாம என் கைய புடிக்கணும், செய்வியா ? “ என்று கேட்டான். 

மைரா அவனையும் அவன் கையையும் பார்த்தாள். மெல்ல அவள் தன் உள்ளங்கையை அவன் உள்ளங்கையில் வைக்க, கேஷவ் அவள் கையை பிடித்து தன் கட்டை விரலால் அவள் விரல்களை வருடினான். மைரா தன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல உணர்ந்து மறு கையால் அவள் அணிந்திருந்தாய் பேண்ட்டை இருகப்பிடித்தாள்.

கேஷவ் அவள் கையை விடுவித்து அவள் தலைமுடியை காதுக்குப் பின்னால் ஒதுக்கி, “ நாம் நடிக்க வேண்டிய அவசியம் இல்ல அம்மு. நாம அப்படி தான் இருக்கோம் அதனால நாம இப்போ இருக்க மாதிரியே இருப்போம். நான் இருக்கும் போது நீ எத பத்தியும் கவலைப்பட வேண்டியதில்ல” என்று கேஷவ் புன்னகையோடு சொன்னதும், மைரா அவனைப் பார்த்தாள், அவளுடைய உதடுகள்  புன்னகையில் விரிந்தன. கேஷவ் அவள் மூக்கைக் கிள்ளிவிட்டு  தன் வேலைகளைத் தொடர்ந்தான்.

******************

முன்னோட்டம்:

“ என் கண்ணு, என் பொண்டாட்டி மேல மட்டும் தான் இருக்கும். இன்னைக்கு நடந்தது இன்னொரு முறை நடக்காது, ஸாரி அம்மு, ப்ளீஸ் “

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!