Home Family43. உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப்

43. உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப்

by Siragugal Novels
18 views

காலையில் எழுந்த மைரா அவர்களின் திருமண புகைப்படத்தை  அவர்களின் படுக்கைக்கு நேர் எதிரே தொங்குவதைப் பார்த்து புன்னகைத்தாள். கேஷவ் அவள் அருகில் உட்கார்ந்ததும், மைரா அவன் தோளில் சாய்ந்தாள்.

“ நாம் எழுந்த உடனே நம்ம கல்யாண போட்டோவ முதல்ல  பார்ப்போம், அதனால் நான் அந்த இடத்தை செலெக்ட் பண்ணேன் “ என்று கேஷவ் சொல்ல, “ நல்லா செலெக்ட் பண்ணி இருக்கீங். எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. அதுல நான் எப்படி இருக்கேன் ? “ என்று மைரா கேட்டாள்.

“ அப்படியே பிரமிக்க வைக்குற மாதிரி, அழகா இருக்கீங்க மிசஸ் மைரா கேஷவ் “ என்று கேஷவ் பதில் சொன்னதும் மைரா முகம் சிவந்தாள்.

விரைவில் அவள் ஒரு சேலையில் தயாராகி தலைமுடியை பின்னினாள். கேஷவ் தயாராகி வந்ததும் இருவரும் ஹாலை அடைந்தனர். முழு குடும்பமும் அவர்களுக்காக காத்திருந்தது, அவர்கள் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டனர்.

மைரா முழு நாளையும் திட்டமிட்டு முதலில் அவர்கள் கோயிலுக்குச் சென்றனர். மைரா கோவிலுக்குள் நுழைய இருந்தாள், ஆனால் கேஷவ் அவளைத் தடுத்து அவளுக்கு பூக்களை வாங்கி கொடுத்தான். அவள் பூக்களை கூந்தலில் வைத்ததும் அவன் செல்ஃபி எடுத்தான்.

“ நீ எது போட்டாலும் அழகா இருக்க “ என்று சொல்லி அவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்த போது மைரா மூச்சிரைத்து அவன் இடுப்பைக் கிள்ளினாள். அவள் அவனை பார்த்து முறைத்த பிறகு இருவரும் கோவிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்தனர்.

“ கடவுளே எல்லா சந்தோஷத்தையும் என் கேஷவுக்கு கொடு. நாங்க எப்பவும் ஒன்னா இருக்க எங்கள ஆசீர்வாதம் பண்ணு “ என்று மைரா வேண்டினாள்.

அதே நேரம் அவள் அருகில் நின்று கொண்டிருந்த கேஷவ் இரு கரங்களையும் கூப்பி, “ கடவுளே, என் மைராவுக்கு எல்லா அன்பையும், சந்தோஷத்தையும் கொடு. நாங்க எப்பவும் ஒன்னா இருக்க ஆசீர்வாதம் பண்ணு “ என்று அவனும் வேண்டினான்.

மைரா அவன் நெற்றியில் விபூதியை வைத்த பின்னர் அவர்கள் கோயிலிலிருந்து வெளியேறி ஒரு படம் பார்க்க ஒரு மாலை அடைந்தனர். அதன் பின்னர் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாலையில் கடற்கரைக்கு சென்றனர். அன்று இரவு உணவை முடித்து விட்டு இறுதியாக வீடு திரும்பினார்கள்.

அவர்கள் புத்துணர்ச்சி பெற்று தங்கள் சாதாரண உடைகளுக்கு மாறினார்கள் அப்போது மைராவுக்கு அவளுடைய தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய போது அவரது வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்து அழைப்பை துண்டித்தாள்.

“ கெட்சப், கடைசி சர்ப்ரைஸ் பார்க்க தயாரா?” என்று அவள் கேட்டதும், “ நீ இன்னைக்கு ஏற்கனவே நிறைய கொடுத்துட்ட, அதுவும் இல்லாம இந்த நாள ரொம்ப ஸ்பெஷலா மாத்திட்ட இன்னும் என்ன ? “ என்று கேஷவ் கேட்டான்.

மைரா அவன் கண்களைக் கட்டிவிட்டு, பிறகு அவன் கையை பிடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றாள். அவனது ரியாக்ஷனை பார்க்க அனைவரும் காத்திருந்தனர், அதை பதிவு செய்ய அர்ச்சனா தனது மொபைலை வைத்திருந்தார். மைரா கண்ணைக் கட்டியிருந்த கட்டை அகற்ற, கேஷவ் தன் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பார்த்து வாவ் என்று முணுமுணுத்தான்.

கண்களில் உற்சாகம் பிரதிபலிக்க கைப்பிடியையும், எஞ்சினையும் தொட்டான்.

“ உங்களுக்கு புடிச்சு இருக்கா கெட்சப் ? “ என்று மைரா கேட்டதும், “ ஐ லவ் இட் அம்மு. இது செம்ம சூப்பரா இருக்கு. நீ என்ன பரிசு மழையில நனைச்சுட்ட “ என்று உற்சாகத்தோடு கூறினான்.

“ அப்புறம் எதுக்காக வெயிட் பண்றீங்க ? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் அதன் மீது ஏறி புருவங்களை உயர்த்தி மைராவை பின்னால் அமர சொல்லி சைகை செய்தான். ஒரு சிறுமியைப் போல அவள் தன் இடத்தில் குதித்து அவன் பின்னால் அமர்ந்தாள். கேஷவ்  பைக்கை ஆன் செய்து எஞ்சினை உயிர்ப்பித்தான். அவர்கள் ஒரு குறுகிய சவாரி செல்ல குடும்பத்தினருக்கு கையசைத்து விடைகொடுத்தனர்.

அவற்றையெல்லாம் பார்த்த ரோஷினி பூந்தொட்டியை உதைத்துவிட்டு தன் அறைக்கு விரைந்தாள். க்ரிஷ் அவளைப் பின் தொடர்ந்து சென்று கதவைச் சாத்தினான்.

“ இப்ப உனக்கு என்ன வேணும்? “ என்று ரோஷினி பற்களை கடித்துக் கொண்டு கேட்க, “ புதுசா ஒண்ணும் இல்ல. நாம ஒன்னா இல்ல, பிரிஞ்சிட்டோம்னு எல்லார் கிட்டயும் சொல்லணும். நான் அத்தை, மாமாவுக்கு போன் பண்றேன், நீ உன் பொருள் எல்லாத்தையும் பேக் பண்ணி எங்க வீட்ட விட்டு கிளம்பு. இனி நீ இங்க இருக்குறத நான் விரும்பல “ என்று க்ரிஷ் உறுதியாக கூறினான்.

“ நீ சொல்றத நான் கேட்பேன்னு நெனச்சியா ? உண்மையிலேயே என்ன குறைச்சு மதிப்பு போட்டுட்ட க்ரிஷ். நீ என்ன நெனச்ச ? நான் உனக்காக இங்க வந்துருக்கேன்னு நெனச்சியா ? “ என்று ஏளனம் செய்தாள்.

“ உன் நோக்கம் என்னனு எனக்கு தெரியும், என்ன ஆனாலும் நீ நினைக்குறத நடக்க நான் விடமாட்டேன். எங்கள விட்டு மொத்தமா போக தயாரா இரு “ என்று அவளை க்ரிஷ் எச்சரித்தான்.

அவன் வார்த்தையை கேட்ட ரோஷினி, “ பார்ப்போம் ஆனா அதுக்கு முன்னாடி நான் என்ன வெச்சுருக்கேன்னு நீ பார்க்கணும். உன்  வாட்ஸ்அப்ப பாரு அதுக்கு அப்புறம் ஒழுங்கா நடந்துக்க. இத பத்தி மறுபடியும் பேச நினைக்காத. இனிமே நமக்குள்ள என்ன நடக்கும்னு  நான் தான் முடிவு செய்வேன், நீ வெறும் பகடைக்காய் தான் “ என்று அவனை முறைத்தாள்.

க்ரிஷ் தன் வாட்ஸ்அப்பைத் திறந்து பாத்ததும் எரிச்சலுடன் பற்களைக் கடித்துக் கொண்டு மேஜையில் உள்ள பொருட்களை தள்ளி அவளை கழுத்தை நெரிக்க முயன்றான் ஆனால் ரோஷினி அவனை தள்ளிவிட்டாள்.

“ நீ என் தயவுல இருக்க க்ரிஷ் அத மறந்துடாத இப்போ என் ரூம் விட்டு வெளியே போ “ என்று கத்தினாள் ரோஷினி. 

க்ரிஷ் அறையை விட்டு வெளியேறி ஹாலில் தனது அம்மா சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். கண்கள் பனிக்க, ஒன்றும் பேசாமல் அர்ச்சனாவின் மடியில் தலை வைத்து சோபாவில் படுத்தான். அவர் புன்னகைத்தபடி அவன் தலைமுடியை விரல்களால் கோதினார்.

“ க்ரிஷ், இனியும் கஷ்டப்படாத. உனக்கு சந்தோஷம், நிம்மதி தராத எதையும் விட்டுடு. கஷ்டப்படுறதுக்கு வாழ்க்க ரொம்ப குறுகியது “ என்று அர்ச்சனா சொல்ல, “ நான் செய்றேன் மா, என்னோட முடிவால நீங்க யாரும் கஷ்டப்பட விடமாட்டேன் “ என்று மெல்லிய குரலில் கூறினான்.

அர்ச்சனா அவன் முகத்தைத் தொட்டுப் பார்த்த போது அவன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அவர் அவற்றைத் துடைத்து அவன் தோளைத் தட்டினார்.

கேஷவும், மைராவும் வீடு திரும்பினர், ஆனால் க்ரிஷ் மற்றும் அர்ச்சனாவைப் பார்த்ததும் அபப்டியே வாசலில் நின்றார்கள். மைரா முன்னேறி செல்ல நினைத்தாள் ஆனால் கேஷவ் நகராமல் நிற்பதை கண்டாள். அவள் அவனை நோக்கித் திரும்பிய போது அவனுடைய உதடுகளில் ஒரு மென்மையான புன்னகையைக் கண்டாள். அவனுடைய தம்பி மற்றும் அம்மாவை பார்த்தாள், ஆனால் அதே நேரம் அவள் முதல் தடவையாக வேறொன்றைப் பார்த்தாள். கேஷவின் கண்களில் வேறு விதமான உணர்ச்சி, ஒரு ஏக்கம் இருப்பதை பார்த்தாள். அவள் அவன் கையைப் பிடித்து தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“ இன்னிக்கு நீங்க சந்தோஷமா இருந்தீங்களா ? “ என்று மைரா கேட்டதும், “ கண்டிப்பா, இது என்ன கேள்வி ? உன் கூட இருக்க ஒவ்வொரு நாளும் எனக்கு ஸ்பெஷல் தான். இன்னைக்கு இன்னும் ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு. இந்த பிறந்தநாள நான் மறக்கவே மாட்டேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

“ அர்ச்சனா அம்மா, க்ரிஷ் கூட சேர்ந்து நீங்களும் இப்போ அங்க இருந்திருந்தா இன்னும் ஸ்பெஷலா இருந்திருக்கும். உங்க ஏக்கங்கள மறைக்க வேண்டியதில்லை கெட்சப். ஏன் உங்கள நீங்களே நிறுத்துறீங்க ? அம்மா கிட்ட போக வேண்டியது தானே ? “ என்று மைரா மெல்லிய குரலில் கேட்டாள்.

கேஷவ் அமைதியாக கட்டிலில் உட்கார்ந்ததும், மைரா அவன் அருகில் அமர்ந்து அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.

“ அவங்க தான் பெஸ்ட் அம்மா, அவங்க எனக்கு அவ்ளோ பாசம் கொடுத்துருக்காங்க, இன்னுமும் என் மேல அவ்ளோ பாசம் வெச்சுருக்காங்க. க்ரிஷ் பிறந்த அப்போ நான் உண்மையில நல்ல அண்ணனா இருந்தேன், அவன் மேல அவ்ளோ பாசமா அவன பார்த்துகிட்டேன். என்னோட பொம்மை, சாக்லேட் எல்லாத்தையும் அவனுக்கு தருவேன் அதனால அம்மா எனக்கு கூடுதலா சாக்லேட், பொம்மை எல்லாம் வாங்கி தருவாங்க.

அவன் வளரும் போது எனக்கு அம்மா கிட்ட இருந்த கிடைச்ச அந்த கூடுதல் விஷயங்களுக்காக என் மேல பொறாமைப்பட ஆரம்பிச்சான். அவன் அம்மாவோட கவனத்த ஈர்க்க நிறைய செய்ய ஆரம்பிச்சான், நான் புகார் செய்யவெ இல்ல. அவன் என் தம்பி அதனால நான் எதுவும் பெருசா எடுத்துக்கல அதுக்கு பதில் அவன் மேல பாசமா தான் இருந்தேன்.

நான் அவனோட மனச புரிஞ்சிக்கிட்டு எல்லாத்தையும் அவனுக்கு சுலபமாக்குனேன். எல்லார் கிட்டயும் இருந்து விலக ஆரம்பிச்சேன். எனக்கு கூச்ச சுபாவம்னு எல்லாரும் நெனச்சாங்க, நானும் ஒதுங்கிட்டேன். அவன் என்ன அவனோட போட்டியா நினைச்சு   வழக்கமான பொறாமைப்படுற அண்ணன் தம்பியா இருக்க நான் விரும்பல அதனால எதுவும் கேட்குறத நிறுத்திட்டேன் “ என்று கேஷவ் தனது சிறு வயதில் நடந்ததை சொன்னான்.

அதை கேட்ட மைரா, “ நீங்க செஞ்சது தப்பு கெட்சப். நீங்க அவன வேற விதமா கையாண்டிருக்கனும் இல்ல மாமா, அத்த அவன கையாள விட்டு இருக்கணும். என் கெட்சப் இந்த உலகத்துல இருக்க எல்லாமே கிடைக்க தகுதியானவரு “ என்று அன்புடன் சொன்னாள்.

மைரா சொன்னதை கேட்ட கேஷவ், “ நீ உறுதியா சொல்றியா ?  என் வாழ்க்கையில எனக்கு கிடைக்காம போன விஷயங்கள் நிறைய இருக்கு. என் அம்மாவோட மடியில என்னால தூங்க முடியாது, , அவங்க கையாள சாப்பிட முடியாது, இது மாதிரி நிறைய இருக்கு “ என்று வேதனையோடு சொன்னான்.

மைரா உள்ளங்கையால் அவன் வாயை மூடி மறுத்து தலையை ஆட்டினாள். கால்களை நீட்டி மடியில் தட்டியதும் கேஷவ் அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். மைரா அவன் தலைமுடியை விரல்களால் கோத ஆரம்பித்தாள்.

“ உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப், என்ன நம்புங்க, ஒரு நாள் எல்லாம் மாறும், உங்க விருப்பங்கள் எல்லாமே நிறைவேறும். உங்க வாழ்க்கையில நீங்க எதிர்ப்பார்த்த எல்லாமே கிடைக்கும் “ என்று மைரா மெல்லிய குரலில் கூறினாள்.

“ அந்த நாள் சீக்கிரம் வரணும்னு நான் விரும்புறேன். என் மனசுல இருக்குற எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லணும் அம்மு “ என்று கேஷவ் மனதில் நினைத்தான்.

சில தினங்களுக்கு பிறகு மைரா அவசர அவசரமாக தலை வாரிக் கொண்டிருந்த போது கேஷவ் விசிலடித்துக் கொண்டும் தலைமுடியை உலர்த்தியபடியும் பாத்ரூமை விட்டு வெளியே வந்தான். அவளை நோக்கி நகர்ந்து அவளை ஓரமாக தள்ளிவிட்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு தாடியைத் தேய்த்துக் கொண்டான். மைரா ஏளனம் செய்து அவனை முறைத்தாள்.

கேஷவ் தோள்களை குலுக்கி உடுத்துவதற்கு ஆடை தேடத் தொடங்கினான்.

“ நான் என்ன டிரஸ் போடணும் அம்மு ? ப்ளீஸ் எனக்கு உதவி செய் “ என்று கேஷவ் சொல்ல, மைரா மீண்டும் அவனை அலமாரியிலிருந்து தள்ளிவிட்டு வெளிர் பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட்டை எடுத்தாள்.

“ நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி இந்த வேலையெல்லாம் எப்படி செஞ்சீங்க ? நீங்க ஒரு வேலையும் செய்றது இல்ல, எல்லாத்தையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. ஒரே நேரத்துல எத்தன வேலைய தான் நான் செய்வேன்? இப்போ ரெடியாகி என்ன அகாடமியில இறக்கிவிட முடியுமா இல்ல நானே கார் ஒட்டி போகட்டுமா ? “ என்று எரிமலையா கொந்தளித்தாள் மைரா.

கேஷவ் அமைதியாக அவளை தன்னருகே இழுத்து அவள் கன்னத்தில் தன் கட்டை விரலால் வருடியபடி முத்தமிட ஆரம்பித்தான். முத்தத்திலிருந்து அவர்கள் பின்வாங்கிய போது அவள் தன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“ காலேஜ் நிகழ்ச்சிய பத்தி நீ பதற்றமா இருக்குறனு எனக்குத் தெரியும், ஆனா என்ன நம்பு. உன்னோட ஸ்டுடென்ட்ஸ் மேடையில சூப்பரா பாடுவாங்க அதனால கவலைப்படாத “ என்று கேஷவ் ஆறுதாலக தைரியம் சொன்னான்.

“ கெட்சப் நிகழ்ச்சிக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு. இன்னைக்கு ப்ரின்சிபால் முன்னாடி மேடை ஒத்திகை. அதனால எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு “ என்று கூறினாள்.

“ உன்ன பத்தியோ, உன் திறமை மேலையோ எப்பவும் சந்தேகப்படாத. இப்போ நல்லா மூச்சை இழுத்து விடு. போய் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடு. நீ அத முடிக்குறதுக்குள்ள நான் கீழே இருப்பேன் “ என்று சொன்ன கேஷவ் “ சாயங்காலம் நான் உன்ன கூட்டிட்டு வர எங்க வரணும் ? அகாடமிக்கு வரட்டுமா இல்ல காலேஜுக்கு வரட்டுமா ? “ என்று கேட்டான். அதற்கு மைரா அவனிடம், “ இல்ல, நானே வந்துடுவேன். ஒத்திக எப்போ முடியும் தெரியல “ என்று சொன்னாள்.

“ சரி, நான் உனக்காக வீட்ல வெயிட் பண்றேன். இப்போ சொல்லு இந்த நிகழ்ச்சி சக்ஸஸ் ஆன அப்புறம் எனக்கு என்ன கிடைக்கும்? “ என்று கேஷவ் கேட்டான். அதை கேட்டதும் குழப்பம் அடைந்த மைரா, “ இது என்ன வித்தியாசமா கேட்குறீங்க ? நான் தானே இந்த கேள்வி கேட்கணும் ? “ என்றாள்.  

“ நிச்சயமா நான் உனக்கு ஒரு பரிசு தருவேன் ஆனா உன்  நம்பிக்கைய அதிகப்படுத்துறதுக்கு எனக்கும் ஏதாவது கிடைச்சா தான் நியாயமா இருக்கும் “ என்று குறும்பு சிரிப்புடன் சொன்னான்.

“ நிச்சயமா என்ன உற்சாகப்படுத்துற என்னோட உத்வேகம் நீங்க தான், அப்போ கண்டிப்பா உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கும் ஆனா இப்போ தயாராகி என்ன கீழ மீட் பண்ணுங்க. ப்ளீஸ் கெட்சப் “ என்று கெஞ்சிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள். அவள் போனதும் மைரா அவனுக்காகத் தேர்ந்தெடுத்த சட்டையும் பேண்ட்டும் அணிந்து கேஷவ் விரைந்தான்.

இருவரும் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டார்கள். அவன் அவளை அகாடமியில் இறக்கிவிட்டு பிறகு தனது வேலையைத் தொடர்ந்தான்.

*********************************************

முன்னோட்டம்:

“ நாம ஒன்னா இருக்க விதிக்கப்பட்டு இருக்கோம் அம்மு. உலகத்துல எதுவுமே நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது. நீ என்னுடையவ, நான் உன்னுடையவன் மைரா. “

 

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 1:49 pm

[…] உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப் […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:53 pm

[…] 43.உங்களுக்கு நான் இருக்கேன் கெட்சப் […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!