Home Family44. நான் இப்படி கிஸ் பண்ணேனா ?

44. நான் இப்படி கிஸ் பண்ணேனா ?

by Siragugal Novels
19 views

மைராவும் நைனாவும் அகாடமியில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றனர். ஆளுநர் தலைமை விருந்தினராக இருக்கும் நிகழ்ச்சிக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவளுக்கு வழங்கப்பட்டதால் இது அவளது தொழில் வாழ்க்கையின் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று கருதினாள். ஒத்திகை நேரம் முழுவதும் இருவரும் பதற்றமாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு ஏதாவது ரியாக்ஷன் கிடைக்குமா என்று மைரா தொடர்ந்து பிரின்சிபாலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிரின்சிபாலின் உதடுகள் லேசாக புன்னகையில் மலர்ந்ததும் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு உடனே நைனாவின் கையை அழுத்தி புன்னகைத்தாள்.

“ மேடம், நான் நிகழ்ச்சியில, இல்ல பாட்டு ஏதேவது மாத்தனுமா ? “ என்று ப்ரின்சிபாளிடம் கேட்டதும் அவர், “ இல்ல, ஸ்டுடென்ட்ஸ் பாடுறது எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. ஆரம்பத்துல உங்க ரெண்டு பேரையும் செலெக்ட் பண்ணத நெனச்சு எனக்கு கொஞ்சம் சந்தேகமா தான் இருந்துச்சு. டீச்சர்ஸ் எல்லாரும் உங்கள ரொம்ப பாராட்டின அப்புறம் கூட எனக்கு சந்தேகம் இருந்துச்சு ஆனா இப்போ நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே ரொம்ப திறமையானவங்கன்னு நான் சொல்லுவேன். வாழ்த்துக்கள் “ என்று கூறினார்.

“ ரொம்ப நன்றி மேடம் “ என்று மைராவும், நைனாவும் சொன்ன பிறகு, ப்ரின்சிபால் விடைபெற்றார். அதன் பிறகு நைனா மைராவை வீட்டில் இறக்கிவிட்டாள்.

அவர்கள் அறைக்கு மைரா சென்ற போது, கேஷவ் சோபாவில் அமர்ந்து மடியில் தலையணையை வைத்துக் கொண்டு மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தவள், சட்டென புத்துணர்ச்சி பெற்று டிராக் பேன்ட் மற்றும் டி ஷர்ட்டுக்கு மாறினாள். அவள் சோபாவின் மறுமுனையில் அமர்ந்து கால்களை நீட்டியதும், கேஷவ் தன் மடியில் இருந்த தலையணையை எடுத்து அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கினான். அவனது செய்கையில் சிரித்தபடி தன் கால்களை அவன் தொடையில் வைக்க கேஷவ் அவள் கால்களை அழுத்த ஆரம்பித்தான்.

“ உன்னோட நாள் எப்படி இருந்துச்சு அம்மு ? “ என்று கேஷவ் கேட்டதும், “ சோர்வா இருந்தாலும் நல்லா இருந்துச்சு. நானும் நைனாவும் இன்னைக்கு ரொம்ப நேரம் நேரம் நிற்க வேண்டி இருந்துச்சு. ப்ரின்சிபால் ஒத்திகைய பார்த்துட்டு என்னையும் நைனாவையும் பாராட்டினாங்க. நாளை மறுநாள் இதே மாதிரி எல்லாம் நடக்கும்னு நம்புறேன் “ என்று சொன்னாள்.

“ உனக்குக் கெடச்ச வாய்ப்ப நீ நல்லா பயன்படுத்துவனு நான் தான் சொன்னேன்ல ? “ என்று கேஷவ் புன்னகைத்தான்.

அவன் வார்த்தையை கேட்டவள், “ நான் என்ன நம்புறத விட நீங்க என்ன நம்புறீங்க. நான் உங்களுக்காக இத நல்லா நடக்க விரும்புறேன் “ என்று சொன்னாள்.

கேஷவ் அவள் கால் விரல்களை சொடுக்கெடுக்க, மைரா நிம்மதியாக கொட்டாவி விட்டு சிறிது நேரத்தில் உறங்கினாள். கேஷவ் அவள் தலைக்கு கீழே ஒரு தலையணையை வைத்து அவள் நெற்றியை முத்தமிட்டான்.

அவன் கீழே சென்ற போது அர்ச்சனாவும் வசுந்தராவும் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“ நீங்க ரெண்டு பேரும் ஏதாவது சர்வதேச ஒப்பந்தத்துல கையெழுத்து போடா பிளான் பண்றீங்களா ? “ என்று கேஷவ் கிண்டலாக கேட்க, “ கேஷவ் இன்னைக்கு நாங்க ஜோசியர போய் பார்த்தோம். அவர் ரெண்டு நாள் கழிச்சு மைராவுக்கு தாலி சரடு மாத்த நல்ல நாள்னு சொன்னாரு. நீ என்ன சொல்ற? “ என்று அர்ச்சனா ஆர்வத்துடன் கேட்டார்.

“ அவ இப்போ வேலையால சோர்வா இருக்கா, இப்போ கூட  திரும்பி வந்ததும் உடனே தூங்கிட்டா. அவ எழுந்திருக்கட்டும், நான் அவகிட்ட பேசுறேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான். அதற்கு வசுந்தரா உடனே, “ நீ சம்மதம் சொன்னா அவ ஒன்னும் சொல்ல மாட்டா கேஷவ் “ என்று கூறினார்.

“ ஆனா அவ சம்மதம் இல்லாம நான் முடிவு பண்ண மாட்டேன் அத்தை. அவ கண் முழிக்கட்டும், அதுக்கு அப்புறம் பேசுவோம் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் கிச்சனுக்குள் நுழைந்ததும், “ உனக்குப் பசிக்குதா கேஷவ் ? நான் உனக்கு பரிமாறட்டுமா? “ என்று ஹாலில் இருந்தபடி அர்ச்சனா கேட்டார்.

“ இல்ல மா, நான் மைராவுக்கு சூப் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அவ ரொம்ப சோர்வாவும் பலவீனமாவும் இருக்கா” என்று கேஷவ் அங்கிருந்து பதிலளித்தான்.

வசுந்தராவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். மைரா கீழே இறங்கி வந்த போது கேஷவ் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தாள். வசுந்தரா தொண்டையைக் கனைத்துக் கொள்ள, மைரா அவரை பார்த்து, “ எப்ப வந்தீங்க மா? “ என்று கேட்டாள்.

“ ட்ரைன் சரியான நேரத்துக்கு வந்துச்சு அதனால ஒரு மணி நேரம் முன்னாடி வந்தேன். நீ எப்படி இருக்கனு சொல்லு ? “ என்று வசுந்தரா கிண்டல் செய்ய, மைரா கண்களை உருட்டி தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்றாள். கேஷவ் அவளைப் பின்தொடர்ந்து ஒரு கிண்ணத்தில் சூப்பை அவளுக்கு வழங்கினான். அவள் வேண்டாம் என்று தலையை அசைத்தாள், ஆனால் அவன் அதை குடிக்க சொல்லி அவளை முறைத்தான். மைராவுடன் சூப் கிண்ணத்தை கையில் ஏந்தியபடி அவர்கள் ஹாலுக்குத் திரும்பினர்.

“ மைரா, ரெண்டு நாள் கழிச்சு உனக்கு தாலி சரடு மாத்தலாம்னு இருக்கோம், அதுல உனக்கு சம்மதமா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ எனக்கு சம்மதம் ஆனா தயவு செஞ்சு ஷாப்பிங் பண்ண என்ன கூப்பிடாதீங்க “ என்று திட்டவட்டமாக சொன்னாள் மைரா.

“ ஆனா உனக்கு புடிச்ச செயின் நீ தானே செலெக்ட் பண்ணனும். நாங்க செலெக்ட் பண்ணி அது உனக்கு புடிக்கலனா என்ன செய்றது ? “ என்று வசுந்தரா கேட்டார்.

“ அத கெட்சப் பார்த்துக்குவாரு, அவர் எனக்காக செலெக்ட்  செய்வாரு, அவர் சூப்பரா செலெக்ட் செய்வாரு. மத்த விஷயங்கள நீங்க பார்த்துக்கோங்க “ என்று மைரா சொன்னதை கேட்டு கேஷவ் அவனது தேர்வின் மேல் அவளது நம்பிக்கையை பார்த்து புன்னகைத்து, தனது மனைவிக்கு செயின் வாங்கித் தருவதாக அனைவரிடமும் கூறினான்.

கல்லூரி நிகழ்ச்சி நாளன்று மைரா பட்டுப்புடவையில் தயாராகி தலைமுடியை பின்னினாள். புடவையுடன் பொருந்தக்கூடிய எளிய நகைகள் மற்றும் ஜிமிக்கிகளால் அவள் அலங்காரம் செய்தாள். நிகழ்ச்சி மாலையில் என்பதால் நேரடியாக வருமாறு கேஷவிடம் தெரிவித்தாள். நைனா மைராவை அழைத்துச் சென்றாள், அவர்கள் மதியம் கல்லூரியை அடைந்து மாணவர்களுக்கு அவர்களின் கடைசி நிமிட ஒத்திகை மற்றும் ஆடைகளில் உதவினார்கள்.

மாலை கவர்னர் அங்கு வந்ததும் நிகழ்ச்சி தொடங்க இருந்தது.  மைராவின் மாணவர்களின் மொத்தம் 6 நிகழ்ச்சிகள் இருந்தது. கேஷவைத் தேடி அவள் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது மொபைல் ஒலிக்க ஆரம்பித்ததும் அழைப்பு கேஷவிடமிருந்து வந்ததை பார்த்து விட்டு கூட்டத்தில் அவனைக் காணாததால் அவள் உடனடியாக முகச்சுளிப்புடன் பதிலளித்தாள்.

“ கெட்சப், நான் உங்கள மிஸ் பண்றேன். எங்க இருக்கீங்க ? நீங்க இங்க வருவீர்கள்னு நினைச்சேன்.” என்று மைரா சொல்ல, “ என் மனைவி, நெத்தியில அந்த முகச்சுளிப்போட கூட ரொம்ப அழகா இருக்கா. நான் வந்து அந்த முகச்சுளிப்பைப் போக்க ஏதாவது கொடுக்கட்டுமா? “ என்று கேஷவ் கேட்டான்.

“ நீங்க இங்க இருக்கீங்களா? நீங்க எங்க இருக்கீங்க கெட்சப்? நான் உங்கள பார்க்கனும், ப்ளீஸ் “ என்று மைரா ஆவலுடன் கேட்டு, அவனைத் தேடி சுற்றும் முற்றும் பார்க்க, கேஷவ் அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று அவளை நோக்கி கைகளை அசைத்தான். அவனை பார்த்ததும் மைராவின் உதடுகள் விரிந்த புன்னகையுடன் அவனை நோக்கி கை அசைத்தாள்.

“ ஆல் தி பெஸ்ட் அம்மு, நிகழ்ச்சி முடிஞ்சதும் பார்ட்டி பண்ணுவோம். இன்னைக்கு உன்னோட வெற்றிக்காக நீ என்ன கேட்டாலும் நான் தருவேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ கண்டிப்பா தருவீங்களா கேஷவ் ? “ என்று மைரா குறும்பு புன்னகையோடு கேட்டாள்.

“ இது ரொம்ப மோசம், இப்போ என்னோட போதை கிடைக்க நாம வீட்டுக்கு திரும்பி போற வரைக்கும் நான் வெயிட் பண்ணனும். நிகழ்ச்சிக்கு முன்னாடி ஒரு சின்ன கொண்டாட்டத்துக்கு நாம திருட்டுத்தனமாக வெளிய போக ஏதாவது வழி இருக்கா ? “ என்று கேஷவ் அவளை கேட்க, “ வாய மூடுங்க கெட்சப். நான் சந்தோஷமா இருக்கேன். நீங்க என் பக்கத்துல இருக்குறது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. நீங்க என்னோட பெரிய பலம் “ என்று சொன்னாள்.

கேஷவ் தன் இருக்கையில் இருந்து விலகி ஒருவரையொருவர் தெளிவாகப் பார்க்கும் ஒரு மூலைக்கு நகர்ந்தான்.

“ என்ன பாரு மைரா “ என்று கேஷவ் சொன்னதும், மைரா அவனைப் பார்க்க, கேஷவ் உதட்டை குவித்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். பொது இடத்தில் அவனது செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த மைரா, அவன் வேறு எதுவும் செய்வதற்குள்  அழைப்பைத் துண்டித்தாள், ஆனாலும் அவளது கன்னங்களில் வெட்கம் ஊர்வதை அவளால் தடுக்க முடியவில்லை. அவளது எதிர்வினையைக் கண்டு புன்னகைத்த கேஷவ் தன் புன்னகையை மறைக்க புருவத்தைச் சொறிந்துகொண்டு தன் இருக்கைக்குத் திரும்பினான்.

சிறப்பு விருந்தினரின் உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது, முதல் நிகழ்ச்சி மைராவின் மாணவர்களின் கர்னாடக சங்கீதமாக இருந்தது. அவளது உள்ளங்கைகள் வியர்க்க ஆரம்பித்தன, அவள் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உண்மையிலேயே அனுபவித்துக் கொண்டிருந்த கேஷவை திருட்டுத்தனமாக பார்த்தாள், அது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் பார்வையாளர்களின் உண்மையான உற்சாகம் வழியிலிருந்து உற்சாகப்படுத்துவதையும் ரசிப்பதையும் அவள் கண்டாள். கடைசி நிகழ்ச்சி முடிந்ததும் அவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் பார்வையாளர்களிடையே உரையாற்றிய போது மாணவர்களின் செயல்திறனைப் பாராட்டினார். பின்னர் தலைமையாசிரியர் நிறைவுரையாற்றினார், மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க மைரா மற்றும் நைனா மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் குறிப்பாக நன்றி தெரிவித்தார்.

அந்த நொடியில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள் மைரா. அவளது மொபைலுக்கு நோட்டிபிகேஷன் வந்தது, கேஷவ் அவளை பார்க்கிங்கில் அவனை சந்திக்க சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தான்.

மைரா நைனாவிடம் விடைபெற்றுக் கொண்டு பார்க்கிங்கிற்கு விரைந்தாள். காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த கேஷவ், மைரா வந்தவுடன் அவளுக்கு ஒரு கொத்து மஞ்சள் ரோஜாக்களைக் கொடுத்தான். மைரா ரோஜாக்களின் நறுமணத்தை உள்ளிழுத்தாள், ஒரு நொடி கடந்த காலத்தின் மஞ்சள் ரோஜாக்களின் கொத்து அவள் மனதில் பளிச்சிட்டது, ஆனால் அவள் அதை புறக்கணித்தாள், கடந்த காலத்துடன் நிகழ்கால அழகான நினைவை இழக்க அவள்  விரும்பவில்லை.

“ ரோஜா ரொம்ப அழகா இருக்கு கெட்சப். நிகழ்ச்சிய ரசிச்சீங்களா ? “ என்று மைரா கேட்க, “ அது எவ்ளோ சூப்பரா இருந்துச்சு அப்புறம் ஸ்டுடென்ட்ஸ் எப்படி பாடுனாங்கனு சொல்ல நான் பெரிசா வசனம் பேசணும். எல்லாத்துக்கும் காரணம் என் அழகான பொண்டாட்டி. இப்போ சொல்லு உனக்கு என்ன வேணும் ? “ என்று கேஷவ் கேட்டான்.

“ கெட்சப், ஏற்கனவே நைட்டு ஆயிடுச்சு அதுவும் இல்லாம இப்போ ரொம்ப குளிரா நல்லா இருக்கு. நாம பீச் போகலாமா ? “ என்று மைரா கேட்டதும், கேஷவ் எதுவும் பேசாமல் அவளுக்காக பயணிகள் கதவைத் திறக்க, மைரா உற்சாகத்துடன் அமர்ந்தாள். கேஷவ் டிரைவர் சீட்டில் ஏறி பீச்சை நோக்கி காரை ஓட்ட ஆரம்பித்தான்.

30 நிமிடங்கள் கூட ஆகாத நிலையில் அவர்கள் கடற்கரையை அடைந்து கைகளைப் பிடித்துக் கொண்டு கரையை நோக்கி நடந்தனர். பௌர்ணமி இரவில் குளிர்ந்த காற்றுடன் கடலின் அமைதியான அழகு மைரா தனது கணவருடன் ரசிக்க விரும்பிய ஒன்று.

இப்போது அவள் கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு மணலில் உட்கார்ந்திருந்தாள், கரையை இடைவிடாது சீண்டும் அலைகளைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். கேஷவ் தன் லெதர் ஜாக்கெட்டை அவளை சுற்றி சுற்றி போர்த்தினான். அவளது புற பார்வையில் இருந்து அவன் அவளருகில் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள்.

அவள் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கேஷவ் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ உங்க முன்னால இருக்க அழக பாருங்க “ என்று மைரா சொன்னாள்.

“ நான் அத தான் செய்றேன். என்ன நம்பு, என் வாழ்க்கையில நான் பார்த்த ரொம்ப அழகான காட்சி.” என்று கேஷவ் அவளிடமிருந்து கண்களை விலக்காமலேயே கூறினான். அவன் தன் பக்கம் சாய்வதையும், அவனது சூடான மூச்சுக்காற்று தன் கழுத்தின் பக்கவாட்டில் விசிறிக் கொண்டிருப்பதையும் உணர்ந்த மைரா அவனது வார்த்தைகளைக் கேட்டு வெட்கப்பட்டு கண்களை மூடிக்கொண்டாள். அவன் அவளது காது மடலில் முத்தமிட்ட போது அவள் விழுங்கினாள்.

காது சிவந்து மார்பு விம்மி அமர்ந்திருந்தவளை பார்த்து, அவன் லேசாக குனிந்து அவள் நாடித் துடிப்பில் முத்தம் வைக்க, அவள் சட்டென கண்களைத் திறந்தாள். அவனது ஆசைகள் ரத்தத்தில் பாய்வதை உணர்ந்த கேஷவ் மேற்கொண்டு பேசுவதற்குள், “ கெட்சப் “ என்று அவள் அவனை அழைப்பது கேட்டது.

அவளது அமைதியற்ற முகத்தைக் கண்டு கேஷவ் பயந்தான். தன் எல்லையை தாண்டிச் சென்றதற்காக தன்னைத் தானே சபித்துக் கொண்டவன், அவளது கையைப் பிடித்து, “ ஸாரி அம்மு, உன் சம்மதம் இல்லாம நான் இப்படி பண்ணி இருக்கக் கூடாது. ப்ளீஸ், என்ன மன்னிச்சிடு “ என்று வருத்தத்தோடு சொன்னான்.

இந்த முறை மைரா அவனை “ கேஷவ் “ என்று அழைத்ததும் கேஷவ் பேசுவதை நிறுத்திவிட்டு ஒரு கணம் கண்ணீரால் பளபளத்த  அவள் கண்களைப் பார்த்தான், ஆனால் அவள் கேஷவ் என்று அழைத்தது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது, அவனால் அவள் மனதை யூகிக்கவோ படிக்கவோ முடியவில்லை.

“ நீ என்ன பயமுறுத்துற, என்ன ஆச்சு சொல்லு “ என்று கேஷவ் பதற்றத்துடன் கேட்டான்.

“ நமக்கு கல்யாணம் ஆன அன்னைக்கு விடியற்காலையில நான் ஒரு கனவு கண்டேன். அன்னைக்கு இப்போ நடந்தத நான் பார்த்தேன் ஆனா உங்க முகத்த என்னால பார்க்க முடியல. நான் அந்த ஆளோட நிழல் உருவத்த பார்த்தேன், ஆனா என் கனவு நிஜமாயிடுச்சு கெட்சப். நீங்க தான் நான் கனவுல பார்த்தவரு, இதே  வார்த்தைய தான் சொன்னீங்க “ என்று மைரா உணர்ச்சிப் பொங்க சொன்னாள்.

அவள் சொன்னதையெல்லாம் கேட்டு ஆச்சரியமடைந்த கேஷவ், “ நான் இப்படி கிஸ் பண்ணேனா ? “ என்று கேட்டான்.

மைரா வெட்கத்துடன் ஆம் என்று தலையை அசைத்தாள், கண்ணீர் அவளது பரவச நிலையில் இருந்து வெளியேறியதை அவன் புரிந்து கொண்டான். மைரா அவன் தோளில் சாய்ந்து கொண்டதும் அவன் அவளை சுற்றி தன் கையை வளைத்து தன் தலையை அவள் மீது சாய்த்தான்.

“ இப்படி கனவு நிஜம் ஆகுறத பத்தி என்ன நினைக்குற அம்மு ? “ என்று கேஷவ் மெல்ல கேட்க, “ எனக்குத் தெரியல, ஆனா நான் சந்தோஷமா இருக்கேன். உங்க கூட என் வாழ்க்கையில உண்மையா சந்தோஷமா, திருப்தியா இருக்கேன். நான் என்ன உணர்றேன்னு அந்த உணர்வுக்கு பெயர் சொல்ல விரும்பல, ஆனா எனக்கு இது புடிச்சு இருக்கு “ என்று மெல்ல மைரா கூறினாள்.

கேஷவ் சிரித்தபடி அவள் கைகளை வருட, அவள் அவன் மார்பில் சாய்ந்து அவன் சட்டையை தன் முஷ்டியில் பிடித்துக் கொண்டாள்.

“ நாம ஒன்னா இருக்க விதிக்கப்பட்டு இருக்கோம் அம்மு. உலகத்துல எதுவுமே நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க முடியாது. நீ என்னுடையவ, நான் உன்னுடையவன் மைரா. “ என்று கேஷவ் மனதில் நினைத்தான்.

“ சரி இப்போ சொல்லு, எனக்கு என்ன கிடைக்கும்? ரெண்டு பேரும் பரிசு கொடுக்குறதா நாம பேசினோம் “ என்று கேஷவ் நினைவுப்படுத்தியதும், “ உங்களுக்கு என்ன வேணும் கெட்சப் ? “ என்ற கேட்டாள்.

“ வீட்டுக்குப் போனதும் கேட்குறேன், இப்ப நாம கிளம்பலாம், நீயும் பசியா இருப்ப “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ எனக்கு இன்னைக்கு பசி இல்ல. இந்த தருணத்த வாழ நான் ரொம்ப  உற்சாகமா இருக்கேன் அதனால பசிக்கல போல. எனக்கு நீங்க என் பக்கத்துல இருக்கனும் அவ்ளோ தான் “ என்று கூறினாள்.

கேஷவ் அவள் கூந்தலை முத்தமிட்டான், அவன் விரல்கள் அவன் பிடித்திருந்த அவளது உள்ளங்கையின் விரல்களை வருடின.

*******************************

முன்னோட்டம்:

“ ரொம்ப கஷ்டப்பட்டு என்ன நானே கட்டுப்டடுத்துறேன் அம்மு. என்னால உன்ன தொடாம இருக்க முடியல. ஒவ்வொரு நாளும் உன்ன முழுசா எனக்கு சொந்தமாக்கி உரிமை கொண்டாட கொஞ்சம் கொஞ்சமா என் எல்லையை தாண்டுறேன். உன் அனுமதி இல்லாம எதுவும் நடக்க நான் விரும்பல “

You may also like

2 comments

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 4:25 pm

[…] நான் இப்படி கிஸ் பண்ணேனா ? […]

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 10:52 am

[…] 44.நான் இப்படி கிஸ் பண்ணேனா ? […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!