மைராவைப் பார்க்க வந்த நைனா சோபாவில் அமர்ந்து ஷாப்பிங் பைகளை டீப்பாயில் வைத்தாள்.
“ எனக்கு தெரியாம ஷாப்பிங் போனியா ? இப்ப என்ன வாங்கிட்டு வந்த ? “ என்று மைரா கேட்க, “ எனக்காக இல்ல, உனக்காக ஷாப்பிங் போனேன் மைரா.” என்று பதில் சொன்னாள் நைனா.
“ கெட்சப் ஷாப்பிங் தான் போய் இருக்காரு. நீயும் ஷாப்பிங் செய்ய வேண்டிய அவசியம் என்ன? நாங்க கொஞ்ச நாள் தான் போறோம், அங்கேயே நிரந்தரமா தங்க போகல “ என்று மைரா கிண்டல் செய்தாள்.
“ அவர் ஷாப்பிங் செய்யட்டும், ஆனா உனக்கு தேவையான உண்மையான ஷாப்பிங் நான் பண்ணி இருக்கேன். அப்புறம் எனக்கு நன்றி சொல்லு ஆனா நான் ஹனிமூன் போகும் போது நீ எனக்கு ஷாப்பிங் பண்ணனும்.” என்று சொல்லி, நைனா கதவை மூடிவிட்டு குட்டையான சில்க் நைட் உடைகள், சரிகை உள்ளாடைகள், ரேஸர் செட் மற்றும் சில சில்க் டேங்க் டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸை எடுத்தாள். அவற்றையெல்லாம் பார்த்ததும் மைராவுக்கு புரையேறி அவள் மூச்சிரைக்க இருமினாள். நைனா அவள் தலையைத் தட்டிக் கொடுத்து குடிக்க அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.
“ என்ன நைனா இதெல்லாம் ? இதெல்லாம் நான் போடுவேன்னு நெனச்சியா ? தயவு செஞ்சு இதெல்லாம் நீ ஹனிமூன் போகும் போது கொண்டு போக பத்திரப்படுத்து “ என்று மைரா கூறினாள். அதற்கு நைனா உடனே, “ ரொம்ப ஓவரா பண்ணாத. உங்க உறவ அடுத்த கட்டத்துக்கு நீ எடுத்துட்டு போகலாம் இல்ல போகாம இருக்கலாம் ஆனா எப்பவும் தயாரா இருக்குறது நல்லது “ என்று சொன்னாள்.
“ நைனா, நான் இத கெட்சப் முன்னாடி போடணுமா ? அய்யோ கடவுளே “ என்று மைரா சிணுங்க, “ அந்த மனுஷன் உனக்கு ஸ்பெஷலா எதுவும் செய்ய மாட்டாருன்னு நினைக்குறியா மைரா ? ஒருவேள நீங்க அடுத்த கட்டத்துக்கு தயாரா இருந்தா அப்போ ஸ்பெஷலா எதுவும் வேணும்னுனு உனக்கு தோணலையா ? ? இப்போ சொல்லு நான் உனக்கு ஸ்பெஷல் பேக்கிங் செய்யணுமா ? “ என்று நைனா கேட்டாள்.
“ கெட்சப் ஷாப்பிங் முடிச்சிட்டு திரும்பி வந்ததும் பேக்கிங் செய்வாரு. இதையெல்லாம் அவர் பார்த்தா என்ன செய்றது ?” என்று மைரா கேட்டதும், “ நீ என்ன நினைக்குறனு எனக்கு புரியுது. நான் இதையெல்லாம் ஒரு சின்ன ட்ராலியில பேக் பண்றேன். உன்னோட மத்த டிரஸ், பொருள் எல்லாம் அவர் கிட்ட சொல்லி வேற ட்ராலியில் பேக் பண்ண சொல்லு “ என்று சொல்லி, நைனா தன் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தேவையான அனைத்து பேக்கிங்கையும் செய்தாள்.
கேஷவ் பைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து அவற்றை சோபாவில் வைத்துவிட்டு மைராவின் அருகில் அமர்ந்து அவளது கணுக்காலைப் பரிசோதித்தான்.
“ என்னால இப்போ நடக்க முடியும் அதனால நீங்க கவலைப்பட வேண்டாம் கெட்சப் “ என்று மைரா சொன்னதை கேட்டதும் புன்னகைத்த கேஷவ், “ சரி, நான் இப்போ பேக்கிங் செய்றேன். நான் என் வேலைய தொடங்குறதுக்கு முன்னாடி உனக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா ? “ என்று கேட்டான்.
“ இல்ல, நைனா கிளம்புறதுக்கு முன்னாடி எனக்கு ஜூஸ், ஸ்நாக்ஸ் கொடுத்தா. அது மட்டும் இல்ல, எனக்கு தேவையான சில பேக்கிங் பண்ணிட்டா அதனால நீங்க என்னோட டிரஸ் மட்டும் பேக் பண்ணுங்க. சரி, இப்போவாச்சும் நாம எங்க போறோம்னு சொல்லுவீங்களா ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.
“ கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும். அப்புறம் நான் உனக்கு பிளாட் செருப்பு, ஸ்னீக்கர்ஸ் மட்டும் பேக் செய்றேன், இப்போ இருக்க நிலையில உன் காலுக்கு அது தான் நல்லது “ என்று கேஷவ் பதில் சொல்லிவிட்டு, அவள் நெற்றியை முத்தமிட்ட பிறகு பேக்கிங் செய்ய தொடங்கினான். அவன் தன் வேலையில் கவனம் செலுத்துவதைப் பார்த்து மைரா புன்னகைத்தாள்.
“ இந்த பயணத்த நான் ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கேன். இது நமக்கு சாதாரண பயணம் இல்ல, நம்ம ஹனிமூன் கெட்சப். உங்க கூட இருக்க 24 மணி நேரம் கூட எனக்கு ரொம்ப குறைவா தோணுது. உங்க மேல அவ்ளோ பைத்தியமா இருக்கேன் நான் “ என்று மனதில் நினைத்து புன்னகைத்தாள்.
காலையில் மைராவும் கேஷவ்வும் சாதாரண உடையில் தயாராகி பெற்றோரிடம் விடைபெற்று காரில் ஏறினர். விமான நிலையத்தில் அவர்களை இறக்கிவிட க்ரிஷ் முன்வந்ததும் கேஷவ் பயணிகள் இருக்கையிலும், க்ரிஷ் ஓட்டுநர் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்.
கேஷவ் அப்போதும் அவர்கள் போகும் இடத்தை பற்றி அவளிடம் கூறவில்லை. மைரா அதை அறிய ஆர்வமாக இருந்தாள். அவர்களின் முப்பது நிமிட பயணத்திற்கு பிறகு கேஷவ் அவளை கண்களை மூடச் சொன்னான். அவர்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும், க்ரிஷ் அவர்களின் சாமான்களை வெளியே எடுத்து ஒரு லக்கேஜ் வண்டியில் வைத்து அவர்களுக்கு விடைகொடுத்தான். இலக்கு என்னவென்று தெரியாவிட்டாலும், அவளது ரியாக்ஷனை அறிய ஆவலாக இருந்தவன், காரை நிறுத்திவிட்டு அவர்களை பார்த்துக் கொண்டே ஒளிந்து கொண்டான்.
கேஷவும் மைராவும் சில அடிகள் நடந்து சென்றதும் கேஷவ் அவள் கையில் ஒரு டாக்குமெண்டை கொடுத்தான். அங்கிருந்த ஒருவரை அழைத்து அவர்களின் தருணங்களை வீடியோ ரெகார்டிங் செய்ய தனது மொபைலை கொடுத்தான்.
“ அம்மு, இப்போ கண்கள திறந்து முதல்ல உனக்கு முன்னால் என்ன இருக்குனு பாரு அதுக்கு அப்புறம் உன் கையில் இருக்குறத பாரு “ என்று கேஷவ் சொன்னதும், மைரா கண்களைத் திறந்து பார்த்தாள். அவர்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு வாயிலில் நின்று கொண்டிருப்பதையும், ஆச்சரியத்தில் மூச்சிரைக்க தன் கையில் இருந்த பாஸ்போர்ட் மற்றும் பாரிஸுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டையும் பார்த்தாள்.
அவள் உற்சாகத்தில் அலறியபடி அவன் மீது பாய்ந்து, தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அனைத்துக் கொண்டாள். கேஷவ் அவளது ரியாக்ஷனை கண்டு சிரிக்க, க்ரிஷ் அவர்களின் வெளிப்படையான காதலை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அங்கிருந்து கிளம்பினான். மேலும் சிரிப்புச் சத்தம் கேட்டதும் மைரா அணைப்பில் இருந்து பின்வாங்கி சிலர் அவர்களைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டதும் அவள் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். கேஷவ் தனது மொபைலை திரும்பப் பெற்றுக் கொண்டு, தங்கள் தருணத்தை பதிவு செய்த நபருக்கு நன்றி தெரிவித்தான்.
“ இப்போ சொல்லு அம்மு, நாம சாதாரண டூர் போறோமா இல்ல ஹனிமூனா ? “ என்று கேட்டு கேஷவ் புருவத்தை உயர்த்தினான்.
“ நாம எங்க போறோம்னு தெரியுரதுக்கு முன்னாடியே நான் முடிவெடுத்துட்டேன் ஆனா உங்களுக்கு அது சஸ்பென்ஸ் கெட்சப். நான் 20 நாள் பொறுமயா இருந்தேன் அதனால நாம பாரிஸ் போற வரைக்கும் உங்களால பொறுமையா இருக்க முடியாதா ? “ என்று சொல்லி கிண்டல் செய்தாள்.
“ நீ என்ன வேணும்னாலும் சொல்லு ஆனா வாழ்நாள் முழுக்க நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி ஒவ்வொரு நொடியும் கொண்டாடுவோம் “ என்று சொல்லி கேஷவ் அவளைத் தூக்கி லக்கேஜ் மேல் உட்கார வைத்து வண்டியைத் தள்ளினான். மைரா அவர்களின் பெற்றோரை ஒரு அழைத்து பாரிஸ் போவதாக கூறினாள். அதோடு தனது சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டாள். நைனாவும் க்ரிஷும் உடனடியாக அதை லைக் செய்தனர். வழக்கம் போல ரோஷினி பொறாமையில் எரிந்து கொண்டிருந்தாள்.
அவர்கள் விமானத்தில் ஏறியதும் மைரா மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். அங்குள்ள இடங்களைப் பார்வையிடுவதைப் பற்றி புலம்புவதை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
“ மைரா…” என்று அவனிடமிருந்து வந்த ஒரு வார்த்தையில் அவளது பிதற்றல்கள் அனைத்தும் நின்று போயின.
“ கேஷவ் நாம விமானத்துல இருக்கோம், மக்கள் நம்மள சுத்தி இருக்காங்க. நாம பாரிஸ் போற வரை அமைதியா இருங்க “ என்று மைரா கிசுகிசுத்தாள். அதை கேட்டதும் கேஷவ் அவளை இழுத்து அவள் உதட்டை மூன்று முறை மெல்ல முத்தமிட்டான்.
“ மக்களுக்கு நாம என்ன செய்றோம்னு பார்க்க நேரமில்லை, நாம பாரிஸ் போய் சேருற வர என்னால உன்ன கிஸ் பண்ணாம இருக்க முடியாது அதனால, நான் எனக்கு தோணும் போதெல்லாம் உன்ன திருட்டுத்தனமா கிஸ் பண்ணுவேன், நீ பொறுத்துக்கோ “ என்று கேஷவ் சொன்னதும், மைரா முகம் சிவந்தாள்.
இருவரும் சேர்ந்து படம் பார்த்தார்கள், தூங்கினார்கள், சாப்பிட்டார்கள், திருட்டு முத்தங்களைத் பரிமாறிக் கொண்டார்கள். இறுதியாக அவர்கள் பாரிஸில் தரையிறங்கி அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு அதிகாலையில் ஹோட்டலை அடைந்தனர். களைப்பு தாங்க முடியாமல் மைரா உடனடியாக படுக்கையில் படுத்தாள். பாரிஸ் வந்தடைந்துவிட்டதாக கேஷவ் தனது பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவளுடன் தூங்கினான்.
பசியில் வயிறு உறுமியதால் மதியம் முதல் கண் விழித்த கேஷவ், மைரா தனது ஒற்றைக் காலையும் கையையும் படுக்கையில் தொங்கவிட்டபடி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். அவள் உதடுகள் பிரிந்திருந்தன, அவள் லேசாக குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள், அது அவனை புன்னகைக்க வைத்தது.
அவளை இழுத்து கட்டிலில் படுக்க வைத்து குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான். ரூம் சர்வீஸுக்கு போன் செய்து சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு மைராவை எழுப்பும் வேலையை எடுத்தான்.
“ அம்மு, எழுந்திரு, நான் சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன். நாம ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கோம் “ என்று கேஷவ் சொன்னான்.
“ 5 நிமிஷம் கெட்சப் “ என்று மைரா முணுமுணுக்க, “ வெளிய போக வேண்டாமா? ஏற்கனவே 2 மணி ஆகுது, இப்படியே தூங்கிட்டு இருந்தா அப்புறம் ஒரு நாள் மிஸ் ஆயிடும். எழுந்திரு மா இல்ல நான் உன்ன இப்போ கிஸ் பண்ணுவேன். நீ பல் தேய்க்கலனா கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல “ என்று கேஷவ் கூறினான்.
மைரா உடனே திடுக்கிட்டு எழுந்தாள், அவள் மீண்டும் தூங்குவதற்கு முன்பு கேஷவ் அவளை உடனடியாக பாத்ரூமுக்கு தூக்கிச் சென்றான். திரைச்சீலைகளை விலக்கியவன், பாத்ரூம் கதவின் சத்தம் கேட்டு உடனே அவற்றை மீண்டும் மூடினான்.
“ இன்னைக்கு என்ன பிளான் கெட்சப் ? நான் சாப்பிட்ட உடனே ரெடியாகிடுவேன் “ என்று மைரா கூறியதை கேட்டு, “ நாலு நாள் இங்க இருக்கற இடங்கள பார்த்துட்டு அப்புறம் ஸ்விஸ் போவோம். ஒரு வாரம் தங்கிட்டு வீட்டுக்கு போகலாமா இல்ல வேற எங்கேயாச்சும் போகலாமானு முடிவு செய்வோம் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.
மைரா கண்களைச் சிமிட்டியபடி அவனைப் பார்த்தாள், அவளுடைய மயக்கம் கதவு அழைப்பு மணி ஓசை கேட்டு உடைந்தது. கேஷவ் கதவை திறந்து ரூம் சர்வீஸ் நபர் சாப்பாடு வைக்க அனுமதித்தான். அவர் வெளியே சென்றதும் அவளை தூக்கிக்கொண்டு தன் அருகில் உட்கார வைத்தான்.
“ நீங்க நிஜமா தான் சொல்றீங்களா கெட்சப் ? என்ன ஸ்விஸுக்கு கூட்டிட்டு போறீங்களா? “ என்று மைரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
“ என் அம்முவுக்கு எதுவும் செய்வேன். இப்போ இத சாப்பிடு நைட்டு, இந்தியன் ரெஸ்டாரென்ட் கண்டுபிடிப்போம் “ என்று சொல்லி கேஷவ் அவளுக்கு ஊட்டினான்.
“ நாம முதல்ல ஈபிள் கோபுரத்த பார்க்க போகலாமா ? “ என்று மைரா ஆர்வத்துடன் கேட்டதும், “ இல்ல, நாம ரொம்ப தூரத்துல இருக்கோம் அதனால வேற எங்கேயாச்சும் போகலாம். நைட்டு ஈபிள் கோபுரம் பார்ப்போம் “ என்று பதில் சொன்னான்.
அவசர அவசரமாக உணவை முடித்து ஒரு மணி நேரத்தில் இருவரும் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை சட்டையில் தயாரானார்கள். கேஷவ் எல்லா திட்டங்களையும் தயார் செய்திருந்தான், அவர்களுக்காக ஒரு கார் காத்திருந்தது. இருவரும் முதலில் லூவர் அருங்காட்சியகத்தை அடைந்தனர், அவர்கள் அனைத்து ஓவியங்களையும் சேகரிப்புகளையும் 2 மணி நேரம் பார்த்தனர். துருக்கிய குளியலறையில் ஆடையின்றி இருந்த பெண்களின் ஓவியத்தை கேஷவ் பார்ப்பதை மைரா தடுத்தாள்.
ஓவியத்தின் மீதும் அவளுக்கு இருந்த பொறாமையை நினைத்து கேஷவ் சிரித்தபடி அதைத் தாண்டி நடந்தான். அவர்கள் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்ததும் மைரா கொட்டாவி விட்டபடி அவனைப் பார்த்தாள்.
“ அருங்காட்சியகம் எல்லாம் பார்க்க எனக்கு சலிப்பா இருக்கு. இப்போ ஈபிள் டவருக்குப் போகலாம். நீங்க இதுக்கு முன்னாடி பாரிஸுக்கு வந்துருக்கீங்களா இல்ல இது தான் முதல் முறையா ? “ என்று மைரா கேட்டதும், “ நான் 4 முறை வந்துருக்கேன். இது எனக்கு அஞ்சாவது முறை “ என்றான் கேஷவ்.
அவர்கள் காரில் ஏறி ஈபிள் கோபுரத்தை அடைந்ததும் மைராவால் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேஷவ் அவளின் கையை பிடித்து ஓட விடாமல் தடுத்தான்.
இருவரும் ஒளிரும் காட்சிகளையும், ஒளி நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டே அமர்ந்தனர். மைரா செல்ஃபிக்களை கிளிக் செய்து பல வீடியோக்களை பதிவு செய்தாள். மைரா குளிரில் லேசாக நடுங்கியதும் கேஷவ் அவளைச் சுற்றி அவனின் ஜாக்கெட்டைப் போர்த்தினான்.
வெளிர் நிறங்களைப் பற்றி அவள் இடை விடாமல் பேசிக் கொண்டே இருக்க, அவளை பார்த்துக் கொண்டே இருந்தவன், சட்டென அவளை தூக்கி தனது கால்களுக்கு இடையில் உட்கார வைத்தான். மைரா புன்னகையோடு அவன் மார்பில் சாய்ந்து கொண்டதும், அவன் அவளை தன் கையால் சுற்றி வளைத்து அவளது வாசனையை சுவாசித்தான்.
“ ஒரு வழியா என் கனவு நனவாகிடுச்சு கெட்சப். என் ஆசை முழுமையடைய இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இருக்கு “ என்று மைரா சொன்ன அடுத்த கணம், கேஷவ் அவள் தலையை சாய்த்து அவள் உதடுகளை முத்தமிட்டான். அவர்களின் உதடுகள் ஒத்திசைவில் அசைந்து மெதுவான வேகத்தில் முத்தமிட்டனர், அந்த முத்தத்தில் தங்களை முழுவதுமாக மூழ்கடித்தனர். ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் தனது நுரையீரல் எரிவதை உணர்ந்த மைரா விலகிய போது தான் அவர்கள் முத்தமிடுவதை நிறுத்தினர்.
“ உன்னோட கனவு இப்போ முழுசா நிறைவேறிடுச்சா ? “ என்று கேஷவ் கேட்டதும், மைரா முகம் சிவந்து ஆம் என்று தலையை அசைத்தாள்.
கேஷவ் அவள் தலைமுடியை மெல்ல வருடி, அவள் விரும்பும் வரை இருவரும் அங்கிருந்தனர். இருவரும் ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்றதும், மைரா கதவைத் திறந்தவுடன், அறையில் மெழுகுவர்த்திகளுடன் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள்.
“ கெட்சப், இந்த சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று மைரா உற்சாகத்தோடு சொன்னதும், “ இது சர்ப்ரைஸ் இல்ல அம்மு, கை கழுவிட்டு வா உண்மையான சர்ப்ரைஸ் பார்ப்போம் “ என்றான் கேஷவ்.
இருவரும் விரைவாக புத்துணர்ச்சி பெற்று இரவு உணவு சாப்பிட எதிரெதிரே அமர்ந்தனர். கேஷவ் திரைச்சீலைகளை இழுத்ததும், மைரா ஈபிள் கோபுரத்தைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றாள்.
“ இது எப்படி சாத்தியம்? நாம இங்கு வர 30 நிமிஷம் ஆச்சு. அப்புறம் எப்படி ? “ என்று மைரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
“ அது உன்னை திசை திருப்ப அப்படி பிளான் பண்ணேன். இப்போ நாம சாப்பிடலாமா மஹாராணி ? “ என்று கேஷவ் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு மைரா முகம் சிவந்தாள்.
அவன் பிரத்யேகமாக ஆர்டர் செய்திருந்த இந்திய உணவை இருவரும் சாப்பிட்டனர். அவளுக்காக எல்லாவற்றையும் சிறப்பானதாக மாற்ற அவன் எடுத்த முயற்சிகளைக் கண்டு அவள் மனம் மயங்கினாள். ஈபிள் கோபுரத்தின் கண்கவர் காட்சியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கவளத்தையும் சாப்பிட்டார்கள்.
அவளுக்கு பிடித்த இனிப்புகளுடன் இரவு உணவை முடித்ததும், இருவரும் இரவு உடையை மாற்றிக் கொண்டதும் கேஷவ் அவளது கணுக்கால்களை மசாஜ் செய்தான்.
“ காலையில நேரத்துக்கு ரெடியாகு. நாம டிஸ்னி லேண்ட் போகலாம், உனக்கு அங்க நிறைய நேரம் தேவைப்படும் “ என்று கேஷவ் சொன்னதும், “ நான் உங்களுக்கு முன்னாடியே எழுந்து சீக்கிரம் ரெடியாகிடுவேன் “ என்று சொன்னாள்.
தொலைக்காட்சியை ஆன் செய்து, அவர்கள் தூங்கும் வரை பார்ப்பதற்காக திரைப்படம் பார்த்தனர். மைரா அவன் மார்பில் சாய்ந்திருக்க, அவன் அவள் தோளைச் சுற்றி கைகளை வைத்து வட்டங்களை வரைந்தான். மைரா தன் கால் விரல்களை மடக்கி அவன் வெற்றுக் கால் விரலை உரசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கேஷவ் அவளை முத்தமிட விரும்பி அவன் மார்பில் இருந்து அவள் தலையை உயர்த்திய போது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். புன்னகையுடன் டிவியை ஆப் செய்துவிட்டு உறங்கினான்.
*****************************************
முன்னோட்டம்:
“ இது மாதிரி நேரத்துல, என்ன கட்டுப்படுத்த முடியாம தவிக்குறேன் மைரா. எனக்கு நீ வேணும் மைரா ஆனா நீ தயாரா இருக்க வர எதுவும் செய்ய என் மனசாட்சி என்ன அனுமதிக்காது. நமக்கு கல்யாணம் ஆகாத வர எனக்கு இவ்ளோ கஷ்டமா இல்ல ஆனா இப்போ ஒவ்வொரு நாளும் என் பொறுமைக்கு முடிவில்லாத சோதனையா இருக்கு “

1 comment
[…] 49.திருட்டுத்தனமா கிஸ் பண்ணுவேன் […]