கேஷவ் முதலில் வீட்டில் இருந்து கிளம்ப, தோழியின் காரை இரவல் வாங்கிய ரோஷினி, கேஷவை பாதுகாப்பான தூரத்தில் பின் தொடரத் தொடங்கினாள். தனது அடையாளத்தை மறைக்க புர்கா அணிந்திருந்தாள். உயரமான காம்பவுண்ட் சுவர்களைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடத்திற்குள் அவனது கார் நுழைவதைக் கண்டபோது அவள் காரை நிறுத்தினாள்.
“ இது யாரோட வீடு, இது அவரோட வீடு மாதிரி செக்யூரிட்டி ஏன் அவர உள்ள அனுமதிக்கிறாரு? இதை எப்படிக் கண்டுபிடிக்குறது ? “ என்று யோசித்தவள் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று காரை அங்கு நிறுத்தினாள். பின்னர் ஆட்டோவில் ஏறி அதே சாலையில் ஆட்டோவை நிறுத்தி, ஆட்டோ ஓட்டுநரின் உதவியைப் பெற முடிவு செய்தாள்.
“ அண்ணா, நான் இந்த ஊருக்கு புதுசு, என் புருஷன தேடி வந்துருக்கேன், எனக்கு உதவி செய்ய முடியுமா ? “ என்று ரோஷினி அந்த ஆட்டோ டிரைவரிடம் கேட்டாள்.
“ உங்ககிட்ட அட்ரஸ் இருக்கா? “ என்று டிரைவர் அவளிடம் கேட்க, “ இல்ல, உண்மைய சொல்லனும்னா, அவர் வேற ஒரு பொண்ணுக்காக என்ன விட்டு இங்க வந்துட்டாரு. அவர் இந்த தெருவுல இருக்க ஒரு வீட்ல தான் இருக்காரு எனக்கு தெரிஞ்சுது “ என்றாள் ரோஷினி.
“ அவர் மேல புகார் கொடுத்து அவர விவாகரத்து செய்யுங்க மேடம் “ என்று ஆட்டோ டிரைவர் சொல்ல, “ அப்படியே செய்றேன் ஆனா எனக்கு ஆதாரம் வேணும், தயவு செஞ்சு என்ன உங்க தங்கச்சியா நெனச்சு எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? “ என்று கெஞ்சினாள் ரோஷினி.
“ நான் என்ன செய்யனும் ? “ என்று ஆட்டோ டிரைவர் கேட்க, “ அதோ இருக்க நாலாவது வீட்டு செக்யூரிட்டிகிட்ட பேசுங்க. அந்த வீட்டோட உரிமையாளர் பெயர கேட்டு சொல்லுங்க, அவர் குடும்பத்தோட இருக்காரா, அவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வருவாரா கேளுங்க. உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன் “ என்று ரோஷினி கூறினாள்.
“ மேடம் பணம் கொடுக்க தேவையில்ல. உங்க வாழ்க்கைக்காக நான் இத செய்றேன் “ என்று ஆட்டோ டிரைவர் சொன்னதும், “ ரொம்ப நன்றி, நான் உங்களுக்காக இங்க வெயிட் பண்றேன் “ என்றாள் ரோஷினி.
ரோஷினி இறங்கியதும் ஆட்டோ டிரைவர் கேஷவ் வீட்டுக்கு சென்று அதன் முன் நின்றார். கேட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவைப் பார்த்த செக்யூரிட்டி அதை நோக்கி விரைந்தார்.
“ டிரைவர், கேட் முன்னாடி ஆட்டோ நிறுத்த கூடாது, சீக்கிரம் எடுத்து கிளம்புங்க “ என்று செக்யூரிட்டி உடனே சொன்னார்.
“ அட்ரஸ் தேடி போறேன் அண்ணா. எனக்கு ஒரு பார்சல் டெலிவரி செய்யனும், இந்த வீட்டோட உரிமையாளர் பெயர் என்ன? “ என்று ஆட்டோ டிரைவர் கேட்டதும், “ கேஷவ் “ என்று செக்யூரிட்டி பதில் சொன்னார்.
“ சரி, நான் தேடுற ஆள் அவர் தான் நினைக்கிறேன். பார்சல் அவரோட மனைவிக்கு வந்துருக்கும் போல “ என்று ஆட்டோ டிரைவர் சொல்ல, “ அவர் இங்க தனியா தான் இருக்காரு, அவருக்கு மனைவி இல்லை. ஒழுங்கா செக் பண்ணுங்க.” என்று செக்யூரிட்டி சொன்னதும், ஆட்டோ டிரைவர் அவருக்கு நன்றி கூறிவிட்டு ரோஷினியிடம் திரும்பிச் சென்று அனைத்து விவரங்களையும் தெரிவித்தார்.
ரோஷினி அவருக்கு நன்றி கூறி அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றாள்.
காரை ஸ்டார்ட் செய்தவள், ஸ்டியரிங்கில் விரல்களை வைத்து சிரித்தாள்.
“ உனக்கும் உன் அழகான அம்முவுக்கும் எதிரா பயன்படுத்த இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சு இருக்கும் போது உன்னோட வேலைய பத்தி யார் கவலைப்படுவா ? நான் கொடுக்க போற அடிக்காக வெயிட் பண்ணு முட்டாள் “ என்று சொல்லி பைத்தியம் பிடித்தவள் போல சிரித்தாள்.
மைராவும் நைனாவும் புதிய மாணவர் சேர்க்கைக்காக வந்த அழைப்புகளில் மிகவும் மும்முரமாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மைரா வீட்டிலிருந்து பேக் செய்த தின்பண்டங்களை சாப்பிட ஆரம்பித்தனர்.
“ இப்போ சொல்லு, உன் மனசுல என்ன ஓடுது ? நீ தனியா சிரிக்குறத நான் பார்த்துட்டு தான் இருக்கேன். அதுக்கு காரணம் உன் புருஷன் தான்னு எனக்கு புரியுது “ என்று நைனா சொல்ல, “ நைனா, நான் நிறைய சொல்லனும். உனக்கு தெரியுமா, ஒரு காலத்துல நான் க்ரிஷோட கவனத்த ஈர்க்க எல்லாமே செய்தேன், அப்படி பண்ணதுல நான் என் அடையாளத்தையே இழந்தேன், நான் அவனுக்கு புடிச்ச டிரஸ் போட ஆரம்பிச்சு எனக்கு புடிச்ச டிரஸ், கலர் இருக்குனு மறந்துட்டேன், ஆனா இப்போ நான் ஸ்பெஷலா எதுவும் செய்றது இல்ல ஆனா கெட்சப் கவனம் என் மேல மட்டும் தான் இருக்கு. நான் ஒரு முறை கூட அவர் முன்னால நான் என்ன டிரஸ் போடணும்னு யோசிச்சு பண்ணதே இல்ல இருந்தாலும் நான் தான் அழகான பொண்ணுனு அவர் நினைக்கிறாரு. க்ரிஷ் ஒரு நாளும் எனக்காக தனியா நேரத்த ஒதுக்குனது இல்ல ஆனா அதுக்காக நான் வருத்தப்பட்டதும் இல்ல ஆனா கெட்சப் கூட 24 மணிநேரம் கூட குறைவா இருக்க மாதிரி இருக்கு, அவர் எல்லா நேரமும் என்கூட இருக்கனும்னு நான் விரும்புறேன். நான் க்ரிஷ் கிட்ட எதையும் வாங்கி கொடுக்க சொல்லி கேட்டது இல்ல ஆனா கெட்சப் கிட்ட அவருக்கு நிறைய ஆர்டர் போடுறேன், கோவப்படுறேன், இன்னும் நிறைய செய்றேன் “ என்று மைரா மனதில் இருந்த அனைத்தையும் கூறினாள்.
எல்லாவற்றையும் கேட்ட நைனா, “ சரி அதனால என்ன இப்போ ? “ என்று கேட்டாள்.
“ என்ன இப்படி கேட்குற ? அதாவது, கெட்சப் கூட உண்மையான மைராவா, நான் என் வாழ்க்கைய வாழுறது உணர்றேன், அவர் என்னோட எல்லா குணத்தையும் வெளிய கொண்டு வராரு, அவர் எனக்கு எல்லாத்தையும் கொடுக்குறாரு, அவருக்காக எல்லாத்தையும் என்ன உணர வைக்குறாரு” என்று மைரா மேலும் கூறினாள்.
மீண்டும் அவற்றையெல்லாம் கேட்ட நைனா, “ சரி அதுக்கு என்ன இப்போ ? “ என்று கேட்டாள்.
“ நீ என்ன கடுப்பேத்துற நைனா, நான் என்ன சொல்றேன்னு புரியலையா ? நான் …நான்.. நான் அவர லவ் பண்றேன் “ என்று மைரா கத்தினாள்.
நிம்மதி பெருமூச்சு விட்ட நைனா, “ ஒருவழியா ஒத்துகிட்டியா ? வாழ்த்துக்கள் மைரா. அடுத்து என்ன செய்ய போற ? “ என்று கேட்டாள்.
“ நான் அவர் கிட்ட என்னோட லவ் சொல்ல போறேன் “ என்று மைரா சொன்னதும், “ எப்போ சொல்ல போற ? “ என்று கேட்டாள் நைனா.
“ நன்றே செய் அதுவும் இன்றே செய். எங்க ஹனிமூன் அப்புறம் என்னோட பிறந்தநாளுக்கு அவர் நிறைய லீவ் எடுத்துட்டாரு அதனால அவர் வேலையை கவனிக்க ஆரம்பிச்சிடாரு அதனால நாளைக்கு நான் அவர் கிட்ட என் லவ் சொல்ல போறேன் அப்போ அவருக்கு ஏதாவது ஸ்பெஷலா செய்யணும் “ என்று மைரா கூறினாள்.
“ அவர ஒரு ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போய் விருந்து கொடு அப்புறம் மோதிரம் கொடுத்து லவ் சொல்லு. இந்த ஐடியா நல்லா இருக்கா ? “ என்று நைனா கேட்க, “ இது வழக்கமா எல்லாரும் செய்றது. நான் புதுசா, தனித்துவமா ஏதாவது செய்ய விரும்புறேன், ஏன்னா என் கெட்சப் இந்த உலகத்துல தனித்துவமானவரு “ என்றாள் மைரா.
“ கேஷவா “ என்று நைனா சொல்ல, “ நான் உன்ன கொன்னுடுவேன், உனக்கு ஈஸ்வரன் தான் “ என்று மைரா சொன்னதும் நைனா சிரித்துக் கொண்டே மைராவை அணைத்துக் கொண்டாள்.
மைராவின் மனம் அவனை ப்ரொபோஸ் செய்ய ஒரு வழியை யோசித்தது. பயிற்சிக்கு வந்த மாணவர்களால் அவர்கள் இடைமறிக்கப்பட்டு, அவர்கள் வேலையை தொடர்ந்தனர்.
மாலையில் அவர்கள் அன்றைய வேலையை முடித்ததும், நைனா தனது ஸ்கூட்டியில் வெளியேற, மைரா கதவைப் பூட்டிவிட்டு தனது காரை நோக்கி நடந்தாள். நைனா கிளம்புவதற்காகக் காத்திருந்த ரோஷினி முகத்தில் சோகத்துடன் மைராவை நோக்கி நடந்தாள்.
“ ரோஷினி? நீ இங்க என்ன செய்ற ? “ என்று மைரா கேட்டதும், “ மைரா, நான் நாளைக்கு கிளம்புறேன், ஆனா அதுக்கு முன்னாடி என் பிரச்சினைய யார் கிட்டயாச்சும் பேசணும்னு நினைக்குறன். உனக்கு ஆட்சேபனை இல்லனா கொஞ்ச நேரம் என் கூட பேச முடியுமா ? எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என் வாழ்க்கைய தீர்மானிக்க என் மனசு தெளிவுபடுத்த இது எனக்கு உதவியா இருக்கும் “ என்று ரோஷினி சொல்ல, “ என்கூட பேசுனா உன் எதிர்காலத்த தீர்மானிக்க உதவும்னு நினைக்கிறியா ? “ என்று மைரா கேட்டாள்.
“ இது க்ரிஷ் சம்பந்தப்பட்டு இருக்குறதால நீ எனக்கு உதவ முடியும்னு நம்புறேன். எல்லாத்துக்கும் மேல க்ரிஷ் உன்னோட பெஸ்ட் friend. நான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நிறைய குழப்பம் பண்ணிட்டேனு எனக்கு தெரியும். நீங்க பிரிய காரணம் நானா இருந்துட்டேன். நான் எங்க வாழ்க்கையில எல்லாத்தையும் சரிசெய்ய விரும்புறேன் மைரா “ என்று ரோஷினி கெஞ்சியதும், மைரா கதவைத் திறந்து ரோஷினியை உள்ளே அனுமதித்தாள்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, ரோஷினி கண்களின் ஓரத்தில் வழிந்த போலி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.
“ எனக்கும் க்ரிஷுக்கும் ஆரம்பத்துல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு. நாட்கள் போக போக அந்த ஈர்ப்பு வளர்துச்சு ஆனா நாங்க அத காதல்னு தவறா புரிஞ்சிகிட்டோம். முதல் ரெண்டு வருஷம் எல்லாம் நல்லா இருந்துச்சு, நாங்க மாசத்துல ஒரு முறை இல்ல ரெண்டு முறை சந்திச்சோம். ஆனா ஒரே வீட்ல இருக்க ஆரம்பிச்ச அப்புறம் நிறைய பிரச்சன வந்து நாங்க விலகி போக ஆரம்பிச்சிட்டோம். நான் எப்பவும் உன்ன பார்த்து என்னையே தாழ்வா நினைக்க ஆரம்பிச்சேன், அது என்ன உங்க நட்புக்கு வில்லனா மாத்திடுச்சு, ஆனா அந்த காரணத்தால தான் நாங்க பிரிவோம்னு எனக்குத் தெரியாம போச்சு. க்ரிஷ் என்ன தவிர்க்க ஆரம்பிச்சு வேற ஒருத்தர் கூட நேரத்த செலவிடத் தொடங்கினான் “ என்று சொல்லி ரோஷினி அழத்தொடங்கினாள்.
“ இல்ல, க்ரிஷ் அப்படி செய்யக்கூடிய ஆள் இல்ல “ என்று மைரா அவள் சொன்னதை முற்றிலும் மறுத்தாள்.
“ ஆண்கள் எப்பவும் ஆண்கள் தான் மைரா. நான் அவன பல முறை கையும் களவுமா புடிச்சேன் அப்போ எங்களுக்குள்ள அதிகமா சண்ட தான் வந்துச்சு. எல்லாத்தையும் அந்த பொண்ணு கூட பகிர்ந்துக்க ஆரம்பிச்சான், அத என்னால ஏத்துக்க முடியல. நாங்க ஒருத்தர ஒருத்தர வெறுக்குற அளவுக்கு சண்ட போட ஆரம்பிச்சோம் “ என்று ரோஷினி சொன்னாள்.
அவள் வார்த்தையை நம்பவில்லை என்றாலும், “ அவன் உன்ன ஏமாத்தி இருந்தா, அத பெரியவங்க கிட்ட நிரூபிச்சு, அவன விட்டு போ “ என்று மைரா சொன்னாள்.
“ இப்போ நாங்க எல்லாத்தையும் சரிசெய்ய முயற்சி பண்றோம், நாங்க சண்ட போட்டு இருந்த அப்போ அவன் வேற பொண்ணு கூட பழகி அவ மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதா அவன் என்கிட்ட சொன்னத கேட்டு நான் அவன மன்னிக்கனுமானு எனக்கு குழப்பமா இருக்கு. கேஷவ் என்ன லவ் பண்றதா சொல்லிட்டு மறுபடியும் உன்கிட்ட திரும்ப வர விரும்பினா நீ அவர மன்னிப்பியா? “ என்று ரோஷினி கேட்டதும் மைரா பொறுமை இழந்தாள்.
“ காதல் ரொம்ப பெரிய வார்த்த, இந்த உலகத்துல நீ ஒருத்தி மட்டும் தான் பொண்ணா இருந்தா கூட கேஷவ் உன்ன திரும்பி கூட பார்க்க மாட்டாரு அதனால உன்னோட இந்த விவாதத்துல அவார கொண்டு வர வேண்டாம். நீ சொல்ல நெனச்சத மட்டும் சொல்லு “ என்று மைரா கடுமையாக கூறினாள்.
“ ஸாரி, நான் அப்படி சொல்லல. எனக்கு ஒரே குழப்பம் “ என்று ரோஷினி சமாளித்தாள் ஆனால் மைரா அவளிடம், “ இது உன் வாழ்க்கை, நீ தான் முடிவு செய்யனும். கேஷவ் உனக்கு நல்லது தான் சொல்லி இருக்காருனு நினைக்குறேன். பெங்களூருக்கு திரும்பி போ, அது உனக்கு ஒரு தெளிவான முடிவு எடுக்க உதவியா இருக்கும் “ என்று கூறினாள்.
“ நீ சொல்றது சரிதான். என்ன என் friend வீட்ல இறக்கிவிட முடியுமா. நம்ம வீட்டுக்குப் போற வழியில தான் இருக்கு. என்னோட பொருள் கொஞ்சம் அங்க இருக்கு, அத எடுக்கணும் “ என்று ரோஷினி கேட்டதும், மைரா சரி என்று தலையை அசைத்தாள்.
மைரா கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறியதும், ரோஷினி பயணிகள் இருக்கையில் ஏறினாள்.
ரோஷினி மைராவுக்கு போகும் வழி சொன்னாள், அவள் ஒரு போலி அழைப்பை எடுத்து தனது நண்பருடன் பேசுவது போல் நடித்தாள்.
“ அவ சொந்த ஊருக்கு போறா அதனால உனக்கு ஆட்சேபன இல்லனா ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணா, நான் என்னோட பொருள் எல்லாத்தையும் கொண்டு வந்துடுவேன், அதுக்கு அப்புறம் நாம ஒன்னா போகலாம் “ என்று ரோஷினி கேட்டதும், “ சரி “ என்று வேறு வழி இல்லாமல் மைரா சம்மதித்தாள்.
அன்றைய தினம் தான் கண்டெடுத்த கேஷவின் வீட்டை ரோஷினி சுட்டிக்காட்ட, மைரா காரை கேட்டுக்கு முன்னால் நிறுத்தினாள். அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கியதும், கேஷவின் கார் வீட்டின் தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மைரா ஆச்சரியப்பட்டாள்.
“ க்ரிஷ என்னால மன்னிக்க முடியுமானு எனக்குத் தெரியல, ஆனா உன்ன ஏமாத்தினதுக்கு கேஷவ நீ மன்னிப்பனு நான் நம்புறேன். அவர் வேற ஒருத்திய லவ் பண்ணி அவகூட இந்த வீட்ல தங்கி இருக்காரு. அவர் ஆபீஸ் போகாம தினமும் அவள பார்க்க இங்க தான் வராரு. அவ தான் அவரோட முதல் காதல். நீ என்ன நம்ப மாட்டனு எனக்குத் தெரியும் அதனால உன்ன இங்க கூட்டிட்டு வர நான் பொய் சொல்ல வேண்டியிருந்துச்சு “ என்று ரோஷினி கூறினாள்.
அவர்களை நோக்கி வந்த செக்யூரிட்டியை ரோஷினி பார்த்தாள், ஆனால் அதற்குள் அவர்களுக்கு முன்னால் ஒரு கார் நின்று, வருண் அதிலிருந்து இறங்கினான்.
மைரா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். மைராவை அந்த இடத்திலும், குறிப்பாக ரோஷினியின் அருகில் இருப்பதையும் கண்டு வருண் மிகவும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தான். என்ன நடக்கிறது என்று சரியாக புரியாமல் அந்த இடத்தை சமாளிக்க அவன் பதிலுக்கு அவளை பார்த்து புன்னகைத்தான்.
“ மேடம் “ என்று வருண் சொல்ல, “ வருண், உள்ளே போய் பேசுவோம். “ என்றாள் மைரா.
வருண் செக்யூரிட்டியைப் பார்த்ததும் அவர் உடனடியாக அவர்களுக்காக கேட்டைத் திறந்தார். கேஷவை எச்சரிக்க அவனுக்கு நேரமில்லை, மைரா அந்த இடத்தை ஏற்கனவே அறிந்தவள் போல புன்னகையுடன் கதவு மணியை அழுத்தினாள்.
அது வருணனாக இருக்கும் என்று எதிர்பார்த்து கதவைத் திறந்த கேஷவ், வாசற்படியில் மைராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றான்.
***************************************
முன்னோட்டம்:
“ நான் என்ன நம்புறத விட உங்கள நம்புறேன், இப்போ எனக்கு பதில் சொல்லுங்க, நீங்க உங்க வாழ்க்கையில யாரையாச்சும் லவ் பண்ணி இருக்கீங்களா ? “

1 comment
[…] 59.என்னோட லவ் சொல்ல போறேன் […]