கேஷவ் அன்று நடந்தை சொன்னதை கேட்டதும், அந்த நேரத்தில் அவன் எவ்வளவு உடைந்து போயிருப்பான் என்று நினைத்து மைரா அழுது கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு உணவளிக்க முயன்றபோது அவள் சாப்பிட மறுத்து அவன் கையை விலக்கினாள்.
“ அன்னைக்கு நீங்க உங்க லவ் சொல்லி இருந்தாலோ இல்ல நீங்க தான் அந்த ‘K’ னு வெளிப்படுத்தியிருந்தாலோ இத்தன வருஷம் நீங்க கஷ்டப்பட்டு இருக்க மாட்டீங்க கேஷவ் “ என்று சொல்லி மைரா மேலும் அழுததும், “ ஸாரி, அன்னைக்கு அங்கேயே இருந்து நீ என் தம்பிய லவ் பண்றது வலிக்காத மாதிரி என்னால நடிக்க முடியல அதனால தான் நான் என்னோட பொருட்கள பேக் பண்ணிட்டு பெங்களூருக்கு போயிட்டேன் ஆனா வீட்ல அப்புறம் உன் வாழ்க்கையில என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க நான் தினமும் அம்மாவுக்கு போன் பண்ணுவேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.
“ என்ன லவ் பண்றத நிறுத்த முயற்சி பண்ணீங்களா ? “ என்று மைரா மெல்ல அவனிடம் கேட்டாள்.
“ இல்ல அம்மு, நான் உன்ன இன்னும் அதிகமா லவ் பண்ணேன். உனக்கு புடிக்கும்னு நான் காலேஜ் படிக்கும் போதே கிட்டார் அப்புறம் பாட்டு பாட கத்துகிட்டேன். அதனால நான் பெங்களூர்ல இருந்த அப்போ அதுல அதிக கவனம் செலுத்தினேன். யூடியூப் சேனல் தொடங்கி என்னோட அடையாளத்தை மறைச்சு உனக்காக பாட்டு வெளியிட ஆரம்பிச்சேன். நான் வீட்டுக்கு வந்த அப்போ என்னோட பாட்ட டிவியில் போட்டேன், அதன் மூலமா உனக்கு தெரியப்படுத்தினேன். நான் யூகிச்ச மாதிரி நீ என்னோட பாட்டு எல்லாம் பார்த்த. நீ எந்த அளவுக்கு ரசிச்சியோ அந்த அளவுக்கு அதிகமா பாடினேன் “ என்று கேஷவ் கூறினான்.
“ என்ன கிண்டல் பண்ணது, கைய புடிச்சு இழுத்தது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிய வந்துச்சு ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.
“ உன்னைககவனிச்சுக்க உன் டிபார்ட்மெண்ட்ல இருந்து ரெண்டு பேருக்கும், செக்யூரிட்டிக்கும் நான் பணம் கொடுக்கும் போது அது ஒன்னும் கஷ்டமான வேல இல்ல. உன்ன முதல் முறை ராகிங் பண்ண அப்போ நான் சென்னைக்கு பறந்து வந்து அந்த முட்டாளுங்களுக்கு நல்ல பாடம் சொல்லி கொடுத்தேன், அவங்க கிட்ட கடுமையாக நடந்துக்கல. ஆனா அந்த பரதேசி உன் கைய புடிச்சு இழுத்தது தெரிஞ்சதும் நான் என் பொறுமையை இழந்துட்டேன். அப்போ நான் ஒரு முக்கியமான வேலையில இருந்தேன், ஆனா உன்ன தவிர வேற எதுவும் என் மனசுல இல்ல. உடனே flight புடிச்சு சென்னைக்கு வந்தேன். நான் தரையிறங்கிய நேரத்துல அவனோட அட்ரெஸ் உட்பட அவன பத்தி எல்லா விவரமும் கிடைச்சுது. அவனோட இரத்தம் பார்த்த அப்புறம் தான் எனக்குள்ள இருந்த மிருகம் அமைதியாச்சு. உன்னைத் தொட்டதுக்கு அவன் பத்து மாசத்துக்கும் அதிகமா படுக்கையில ரெஸ்ட் எடுக்க வேண்டி இருந்துச்சு. நான் டெல்லிக்கு திரும்பி போறதுக்கு முன்னாடி நீ நல்லா இருக்கியான்னு உறுதிப்படுத்த நான் உன்ன தூரத்துல இருந்து கவனிச்சேன் “ என்று கேஷவ் அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.
“ எதுவுமே உங்கள காயாபடுத்தாத மாதிரி எப்படி நடந்துக்கிட்டீங்க ? “ என்று மைரா வேதனையோடு கேட்டாள்.
“ உண்மைய சொல்லனும்னா அது நிறைய காயப்படுதுச்சு அம்மு ஆனா நான் பல வருஷமா என் உணர்வுகள மறைக்க கத்துகிட்டேன். ஆனா அப்பாவோட 60வது பிறந்த நாள் அன்னைக்கு எல்லாமே கட்டுப்பாடும் உடைஞ்சிடுச்சு.
பிளாஷ்பேக் :
கேஷவ் பெங்களூரில் இருந்த போது தனது தந்தையின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவனது தாயிடமிருந்து அழைப்பு வந்தது. தனது குடும்பத்தை, குறிப்பாக மைராவைப் பார்க்க வீட்டிற்கு வருவதில் அவன் மகிழ்ச்சியடைந்தான், ஆனால் க்ரிஷையும், மைராவையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று அவனது இதயம் வலித்தது, எனவே அவன் கொண்டாட்டத்திற்கு மட்டுமே ரிசார்ட்டில் இருக்க விரும்பினான்.
அவன் சென்னைக்கு கிளம்ப தயாரானபோது, அவனது நண்பனின் தங்கை ரேச்சலுக்கு சென்னையில் இண்டர்வியூ இருப்பதால் அவளை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள். அவள் தன் மீது ஆர்வம் காட்டுவதை உணர்ந்து அவன் மறுத்தான், ஆனால் அவனது நண்பன் அவளை அழைத்துச் செல்ல கெஞ்சியதால் கேஷவ் ஒப்புக் கொண்டு அவர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். வழிநெடுகிலும் கேஷவ் சற்று விலகியே பேசினான், விவாதம் பொதுவான தலைப்பில் மட்டுமே இருந்தது.
அவன் ரிசார்ட்டை அடைந்ததும், ரேச்சல் தனது மேக்கப்பை சரி செய்ய விரும்பினாள், எனவே அவன் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவளை பாத்ரூம் பயன்படுத்த அனுப்பினான் ஆனால் அவனது ஆர்வம் மைராவை ஒருமுறை பார்க்க வழிவகுத்தது, எனவே அவன் யாருக்கும் தெரியாமல் தோட்டத்திற்கு பதுங்கி சென்றான். மைரா ஒரு அழகான லெஹெங்கா உடையணிந்திருப்பதைக் கண்டதும் அவனது மூச்சு ஒரு நொடி நின்றது.
“ என் இதயத்தை ஒரு துடிப்பு தவிர்க்க உன்னால மட்டும் தான் முடியும் அம்மு. நீ ரொம்ப அழகா இருக்க “ என்று மனதில் நினைத்தான்.
அவனது கால்கள் அவளைப் பின்தொடர்ந்து தானாகவே நடந்தன, அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“ முட்டாளுங்க ஒரு நிகழ்ச்சிய சரியா நடத்த முடியுதா பாரு. கடவுளே, என் அம்மு இருட்டுல பயப்படுவா “ என்று பதறிய கேஷவ் வேகமாக அவளை நோக்கி நடக்க, மைரா ஒரு நாற்காலியில் தடுமாறி விழ இருந்தாள், ஆனால் கேஷவ் அவளை இடுப்பைப் பிடித்து காப்பாற்றினான். அவளது வெற்று இடுப்பில் இருந்த அவனது உள்ளங்கை, அவனது இதயத்தை கட்டுபாட்டை மீறி துடித்தது, அவனது உணர்வுகளை புரட்டி போட்டது.
அவன் தன் காதலை தன் கைகளில் ஏந்திக்கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான். அவளது வாசனை அவனது எண்ணங்கள் அனைத்தையும் மறைத்தது. உதடுகள் புன்னகையுடன் வளைந்து அவன் உடல் சிலிர்த்தது. அவன் கன்னத்தின் உட்புறத்தைக் கடித்துக் கொண்டு அவள் அவனது கை மற்றும் தோளை பிடித்திருப்பதை உணர்ந்தான்.
“ கடவுளே, தயவு செஞ்சு இந்த நேரத்தை அப்படியே உறைய வையுங்க, என் அம்மு அப்பவும் என் கையிலேயே வெச்சுருக்க முடியும் “ என்று கேஷவ் நினைத்தான்.
“ ரொம்ப நன்றி க்ரிஷ், நீ எப்பவும் சரியான நேரத்துல வந்து என்ன காப்பாத்துற “ என்று மைரா சொன்ன போது, அவனை க்ரிஷ் என்று அவள் நினைத்த கணம் எல்லாமே நொறுங்கிப் போயின.
தன் மீது ஐஸ் வாட்டர் கொட்டியது போல் உணர்ந்தான் கேஷவ். அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் மைரா அவன் கன்னத்தில் முத்தமிட்டதும், அப்படியே அவன் இதயம் படபடக்க ஆரம்பித்தது, அவள் உதடுகள் அவன் கன்னத்தில் பதிந்ததை உணர்ந்தான், அதே சமயம் கண்ணீரையும் உணர்ந்தான்.
“ அய்யோ கடவுளே! ஸாரி க்ரிஷ். ஏதோ நெனப்புல கிஸ் பண்ணிட்டேன், ஸாரி க்ரிஷ் “ என்று மைரா கூறினாள். அதை கேட்டு, “ ஏன் கடவுளே ? அவளோட காதல காட்டி இப்படி ஒரு நிமிஷத்துல பரிச்சிகிட்டீங்க ? “ என்று அழுது மனம் நொந்து போனான்.
யாரோ க்ரிஷை மின்சாரத்தை சோதிக்க அழைக்கும் சத்தம் கேட்டதும், மைரா வேறு யாரையோ முத்தமிட்டதை அறிந்து அவள் சங்கடப்படுவதை அவன் விரும்பவில்லை, எனவே அவன் அங்கிருந்து வெளியேற முயன்றான், ஆனால் அவனது வாட்சில் ஏதோ சிக்கியதும் அவன் நின்றான். மைரா தனது துப்பட்டாவை சிறிது விசையுடன் இழுக்க, அவன் அங்கிருந்து உடனடியாக தனது காருக்கு புறப்பட்டான்.
ஸ்டியரிங்கை அழுத்தி கண்ணீரை நிறுத்த கண்களை மூடிக்கொண்டான், அவன் இதயம் வலித்தது, உள்ளங்கையால் முகத்தை தேய்த்தான், ஆனால் வாட்சில் சிக்கி இருந்த குஞ்சத்தைப் பார்த்து புன்னகைத்தான்.
“ என் அம்முவோட துப்பட்டாவுல இருந்து தொங்கும் போது நீ அழகா இருந்த, ஆனா என்ன என் தம்பியா நெனச்சு இருந்தாலும் எனக்கு கொடுத்த அந்த சின்ன அழகான தருணத்துக்கு கடவுள் நினைவு பரிசா கொடுத்தாரு போல “ என்று சொல்லி அதை பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன், அம்மாவின் அழைப்பால் மொபைல் ஒலிப்பதை பார்த்தான். அவன் 5 நிமிடங்களில் வருவதாக அவரிடம் கூறிவிட்டு ரேச்சலுடன் அரங்கிற்குள் நுழைந்தான்.
அத்தனை நேரமும் அங்குமிங்கும் ஓடிப்போய் விருந்தாளியைக் கவனித்துக் கொண்டிருந்த மைராவை அவன் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ரேச்சல் அர்ச்சனாவிடம் தன் காதல் கதையை சொல்ல ஆரம்பித்த போது அவனது கணமெல்லாம் கெட்டுப் போனது. தன் தாயை சமாதானப்படுத்தி, ரேச்சல் தனியாக கிளம்ப ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்துவிட்டு முகத்தில் புன்னகையுடன் மைராவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான், ஆனால் அவள் தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டதும் அவனுக்கு மூச்சிரைத்தது.
“ வராத அம்மு.. ப்ளீஸ்.. என் இதயத்த காப்பாத்து “ என்று மனதில் போராடினான்.
மைரா புன்னகையுடனும் கையில் ஒரு தட்டுடனும் அவனுக்கு எதிரே நின்றபோது அவன் மூச்சைப் பிடித்துக் கொண்டான்.
“ எப்படி இருக்கீங்க அங்கிள் ? ஏன் வீட்டுக்கு வர மாட்டேங்குறீங்க? அத்தை, இவரு ரகசியமா கல்யாணம் பண்ணிட்டாரு நினைக்குறேன், இவரோட குழந்தைங்க ஸ்கூல் படிச்சாலும் ஆச்சரியம் இல்ல, யாருக்குத் தெரியும் “ என்று மைரா அவனை கிண்டல் செய்தாள்.
“ நீ இல்லாம என் வாழ்க்கையில கல்யாணமே இருக்காது ஆனா நீ என்னோட குழந்தைங்க பத்தி பேசுற “ என்று மனதில் நினைத்துக் கொண்ட கேஷவ், அவளை பார்த்து, “ ஆமா, நீ சொல்றது சரி தான் அம்மு. என் மூத்த பைனுக்கு நேத்து தான் இஞ்சினியரிங் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சுது “ என்று பதில் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு மைரா அதிர்ச்சியில் மூச்சிரைக்க, அர்ச்சனா அவளது ரியாக்ஷனைக் கண்டு சிரித்தார். கேஷவ் ஒரு துண்டு கேக்கை எடுத்து அவள் திறந்த வாயில் திணித்து விட்டு சென்றான்.
ஒரு மூலையை அடைந்ததும், விரலில் வழிந்த கிரீமை லாவி , புன்னகையைக் கட்டுப்படுத்த கன்னங்களைக் கடித்துக் கொண்டு, தேவதையாகத் தெரிந்த மைராவைப் பார்த்தான். எல்லோரும் குரூப் போட்டோவுக்கு அழைக்கப்பட்டபோது, மைரா க்ரிஷுக்கும், கேஷவுக்கும் நடுவில் நின்றாள். கேஷவும், க்ரிஷும் விரல்களால் அவள் தலையில் கொம்புகளைக் காட்டினர்.
பிளாஷ்பேக் முடிகிறது:
“ நீ என்ன கிஸ் பண்ணதுல என்னால சந்தோஷப்படவும் முடியல, நீ என் பெயர சொல்லாத காரணத்தால வெறுக்கவும் முடியல “ என்று கேஷவ் சொல்ல, “ அப்போ என்ன பத்தி நெனச்சீங்களா ? அது தான் என் முதல் முத்தம். என்னோட முதல் முத்தம் உங்களுக்கு கொடுக்க வெயிட் பண்ணலனு நான் அவ்ளோ வெட்கப்பட்டேன். நம்ம காலேஜ் ரீயூனியன் போன அன்னைக்கு நான் எப்படி உணர்ந்தேன்னு உங்களுக்குத் தெரியும், இருந்தும் நீங்க மௌனமாக இருந்துட்டீங்க “ என்று மைரா அவனை குற்றம் சாட்டினாள்.
“ என் லவ் பத்தி சொல்லாம நான் எப்படி கிஸ் பத்து சொல்ல முடியும்? “ என்று கேஷவ் அவளை கேட்க, “ அப்போ ஏன் உங்க காதல சீக்கிரமே சொல்லாம இருந்தீங்க ? இத்தன கஷ்டம் எல்லாம் நம்ம வாழ்க்கையில அனுபவிக்க நாம என்ன தப்பு செய்தோம்? “ என்று மைரா கத்திவிட்டு, மைரா அவனைத் தள்ளிவிட்டு அந்தச் சிறிய தோட்டத்திலிருந்த ஊஞ்சலை நோக்கி நடந்தாள்.
அவள் விசும்பும் சத்தம் கேட்டு கேஷவ் அவளை பின் தொடர்ந்து சங்கிலியைப் பிடித்து ஊஞ்சலை மெதுவாகத் தள்ளினான்.
“ நான் உன்ன லவ் பண்ற மாதிரி நீயும் என்ன லவ் பண்ணனும்னு நெனச்சேன் அம்மு. நான் உன்ன லவ் பண்ற காரணத்துக்காக நீ என்ன லவ் பண்றத நான் விரும்பல “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ நீங்க என்ன லவ் பண்ண ஆரம்பிச்ச அதே நேரத்துல இருந்து நானும் உங்கள லவ் பண்ணி இருக்கேன் ஆனா உங்க இடத்துல ஒரு தப்பான ஆள நெனச்சுட்டேன், அந்த மர்ம பாடகர் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்துச்சு, என் உணர்ச்சிகள் அவரோட பொருந்துறதா நெனச்சு எனக்கு வெறுப்பா இருந்துச்சு. நீங்களும் அவரும் ஒரே ஆள்னு தெரியாம அவரோட பாடல்கள் மேல நான் நான் ரொம்ப ஐக்கியம் ஆகுறேன்னு குற்ற உணர்வு கூட எனக்கு ஏற்பட்டுச்சு. நான் இருட்டுல ஒருத்தர கிஸ் பண்ணிட்டேனு கூட குற்ற உணர்வு ஏற்பட்டுச்சு ஆனா அது நீங்க தான். என் வாழ்நாள் முழுக்க நான் எவ்ளோ முட்டாளா இருந்துருக்கேன் ? “ என்று மைரா விம்மி அழுதாள்.
“ இல்ல அம்மு, உன்ன முட்டாள்னு சொல்லாத. எல்லாம் என் தப்பு தான் “ என்று கேஷவ் கூறினான்.
“ நீங்க சொல்ல வேண்டியது இன்னும் நிறைய இருக்குனு நான் நம்புறேன், அதனால எல்லாத்தையும் சொல்லுங்க “ என்று நைனா மெல்ல கூறினாள்.
“ க்ரிஷோட 25வது பிறந்த நாள் அன்னைக்கு அம்மா என்ன வர சொன்னாங்க. அவங்களோட உற்சாகத்துல இருந்து அது நீயும் க்ரிஷும் சம்பந்தப்பட்ட விஷயம்னு புரிஞ்சிது அதனால விலகி இருக்குறது நல்லதுனு வராம இருந்துட்டேன் ஆனா அன்னைக்கு நைட்டு அம்மாவுக்கு போன் பண்ணி பேசினேன். அவங்க தவறுதால பதில் சொல்லிட்டாங்க போல அப்போ அவங்க அப்பா கூட பேசுறத நான் கேட்டேன்.
பிளாஷ்பேக்:
அர்ச்சனா சொன்னதை எல்லாம் கேட்டதும் கேஷவின் கையிலிருந்த மொபைல் தரையில் விழுந்தது, அவன் ஆத்திரத்தில் கத்தி அறையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினான். அலறல் சத்தம் கேட்டு வந்த வருண் கேஷவை தடுக்க முயன்றான் ஆனால் அவன் மூச்சிரைத்து கத்தினான்.
“ ஸ்டாப் இட் பாஸ் “ என்று வருண் அவனை தடுத்து நிறுத்தினான்.
எல்லாம் நடந்த பிறகு மைரா உடைந்து போயிருப்பாள் என்று அவளை நினைத்து கேஷவ் மண்டியிட்டு அழ ஆரம்பித்தான்.
“ என் அம்மு உடைஞ்சு போய் இருப்பா, அவ இதயம் நொறுங்கியிருக்கும். அவ விரும்புனதால மட்டும் தான் நான் அவள விட்டு விலகி இருந்தேன் ஆனா அவன் அவள காயப்படுதிட்டான் “ என்று கேஷவ் சொல்ல, “ என்ன நடந்துச்சு எனக்குத் தெரியாது, ஆனா அவங்கள பார்த்துக்க இப்போ நீங்க திரும்பி போறது நல்லது “ என்று வருண் சொன்னான்.
“ நான் என் அம்மு கிட்ட போகணும். அவளுக்கு இப்போ நான் தேவை, அவள காயப்படுத்துனது என்னோட தம்பியா இருந்தாலும் நான் அவள எதுக்காகவும் அழ விட மாட்டேன். வருண், சென்னை அப்புறம் அத சுத்தி இருக்க பகுதியில ஏதாவது இசை நிகழ்ச்சி நடக்குதானு கண்டுபிடி. ரெண்டு வி.வி.ஐ.பி டிக்கெட்டு வாங்கிடு, அதுக்கு நீ தான் அவள கூட்டிட்டு போக போற. நான் சென்னை போறதுக்கு முன்னாடி அந்த டிக்கெட்ட டெலிவரி பண்ணிடு “ என்று கேஷவ் உத்தரவிட்டான்.
“ அத நான் பார்த்துக்குறேன் “ என்று வருண் உறுதியளித்ததும், கேஷவ் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உடனடியாக டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பினான்.
அவன் சென்னை வந்தவுடன் ஒருவர் போன் செய்து டிக்கெட் டெலிவரி செய்தார். காரை நிறுத்திவிட்டு மைராவின் வீட்டிற்குள் நுழைந்தான், அவளை முதலில் சந்திக்க அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. கதவைத் தட்டி பொறுமையிழந்து காத்திருந்தவன், தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு கதவைத் திறந்த ராஜனைப் பார்த்து புன்னகைத்தான்.
எதிரே நின்ற மனிதரை ஒரு பார்வை பார்த்ததும், அந்த குடும்பம் எவ்வளவு உடைந்து போயிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.
“ நல்லா இருக்கீங்களா மாமா ? நீங்க அழுதீங்களா ? ஏதாவது பிரச்சனையா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ கேஷவ் நீ இங்க என்ன பண்ற ? ஒன்னும் பிரச்சன இல்ல, வெங்காயம் நறுக்கிட்டு இருந்தேன், ஆனா நீ நேத்து உன் தம்பியோட பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏன் வரல ? “ என்று ராஜன் கேட்டார்.
“ கடைசி நிமிஷ அவசர மீட்டிங் இருந்துச்சு அதனால இப்போ தான் வர முடிஞ்சுது. நான் உங்கள சந்திக்க நேரா இங்க வந்துத்துட்டேன். நான் மைராவுக்கு ஒன்னு கொண்டு வந்துருக்கேன், சரி, அவ எங்க? “ என்று கேட்ட கேஷவ், “ வெளிய வா அம்மு, நான் உன்ன பார்க்க விரும்புறேன் பாப்பா. உனக்காக நான் இருக்கேன் “ என்று மனதில் ஏங்கி அவளை எதிர்பார்த்தான்.
“ அவ ரூம்ல இருக்கா, என்ன ஆச்சு கேஷவ் ? “ என்று ராஜன் கேட்டதும், “ அவளுக்கு இசை நிகழ்ச்சி ரொம்ப புடிக்கும்னு எனக்குத் தெரியும், அவளுக்கு பிடிச்ச பாடகரோட இசை நிகழ்ச்சிக்கு என் கம்பெனியில இருந்து டிக்கெட் கிடைச்சுது அத நான் மைராவுக்கு கொடுக்க நெனச்சேன், அந்த நிகழ்ச்சி நாளைக்கு “ என்று கேஷவ் விளக்கம் கொடுத்தான்.
அவன் கண்கள் மாடிப்படிகளில் அவளைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தன. அழுது சிவந்து போயிருந்த அவளது வீங்கிய கண்களைக் கண்டதும் அவன் இதயம் நொறுங்கியது.
“ ஹலோ கெட்சப், நீங்க ஏன் நேத்து வரல? “ என்று மைரா கேட்க, “ ஏய் அம்மு நீ நல்லா இருக்கியா? உடம்பு சரியில்லையா?” என்று கேஷவ் கேட்டான்.
“ நான் நல்லா இருக்கேன் கெட்சப் ஆனா நீங்க தான் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ரொம்ப சீக்கிரமா வந்துருக்கீங்க நினைக்குறேன் “ என்று மைரா புன்னகையோடு சொன்னதை கேட்டு, “ நான் தான் நல்ல நடிகன்னு நெனச்சேன் ஆனா நீ என்ன விட நல்லா நடிக்குற அம்மு. ஸாரி, நான் நேத்து நைட்டு இங்க இருந்திருக்கனும் ஆனா இப்போ நான் உன்ன கவனிச்சுக்க வந்துட்டேன். நீ கண்ணீர் சிந்த விட மாட்டேன் “ என்று கேஷவ் மனதில் நினைத்தான்.
“ நேத்து வராம இருந்ததுக்கு ஈடுகட்ட நான் அவனுக்கு ஒரு பரிசு வாங்கி இருக்கேன் ஆனா நீ என்ன அங்கிள் சொல்லாம கெட்சப் சொல்லி கூப்பிடுறதால உனக்கு தான் உடம்பு சரி இல்லனு நினைக்குறேன். உனக்கு புடிச்ச பாடகரோட இசை நிகழ்ச்சிக்கு நான் உனக்கு டிக்கெட் வங்கி இருக்கேன் அதனால இனிமே என்ன அங்கிள் சொல்லி கூப்பிடுறத நிறுத்துவனு நம்புறேன் “ என்று கேஷவ் அவளை பார்த்து சொன்னான்.
“ உங்கள பார்க்க எனக்கு பரிதாபமா இருந்துச்சு, ஆனா நீங்க கவலைப்படுறதால நான் உங்கள அங்கிள் சொல்லி மட்டும் தான் கூப்பிடுவேன், நீங்க டிக்கெட் கொடுத்து தான் ஆகணும் “ என்றாள் மைரா.
கேஷவ் அவளிடம் டிக்கெட்டுகளை நீட்ட, அதில் தனக்கு பிடித்த நட்சத்திரங்களின் பெயரைப் பார்த்து மைரா மென்மையாக புன்னகைத்தாள்.
அவளது புன்னகையைப் பார்த்த அவனும் புன்னகைக்க விரும்பினான், ஆனால் அவளை கவனித்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும்போது அவன் அதற்கு தயாராக இல்லை.
பிளாஷ்பேக் முடிகிறது:
“ அன்னைக்கு லேட்டா வந்ததுக்கு என்ன மன்னிச்சிடு அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “முதல்ல நீங்க என்ன தனியா விட்டிருக்கக் கூடாது. என்ன கஷ்டப்பட விட்டுட்டீங்க “ என்றாள் மைரா.
ஊஞ்சல் சங்கிலியில் சாய்ந்து கண்களில் இருந்து கண்ணீர் வழிய கண்களை மூடிக்கொண்டதும் கேஷவ் மேற்கொண்டு பேசாமல் காத்திருந்தான். அவள் உறங்குவதைக் கண்டு அவளைத் தூக்கி அறைக்கு அழைத்துச் சென்று அவளை கட்டிலில் படுக்க வைத்து விளக்குகளை அணைத்து விட்டு கதவை தாழிட்டு அவளை அணைத்து உறங்கினான்.
“ நான் உன்ன ரொம்ப காயப்படுத்திட்டேன் ஆனா உன் முகத்துல சிரிப்ப மறுபடியும் பார்க்க நான் எதையும் செய்வேன். ஐ லவ் யூ அம்மு “ என்று முணுமுணுத்து நெற்றியில் முத்தமிட்டான்.
********************
முன்னோட்டம்:
“ அவன் சொன்னத செஞ்சேன். அவன் தம்பியோட நிச்சயதார்த்தம் நடக்கும் போது, நீ வீட்ல இருந்து அதுக்காக அழறத அவன் விரும்பல, அதனால என் அம்மாவோட பிறந்த நாள்னு பொய் சொல்லி உன்ன டின்னருக்கு கூப்பிட்டு அந்த நிச்சயதார்த்தத்துல இருந்து உன் மனசை திசை திருப்ப சொன்னான்.”

1 comment
[…] 66. என்ன கஷ்டப்பட விட்டுட்டீங்க […]