Home Family68. உனக்கு வில்லன், என் மைராவுக்கு ஹீரோ.

68. உனக்கு வில்லன், என் மைராவுக்கு ஹீரோ.

by Siragugal Novels
16 views

மைராவின் விசும்பல் சத்தம் கேட்டதும் கேஷவ் பேச்சை நிறுத்திவிட்டு தலையணையில் அவள் தலையை வைத்து முழங்கையை ஊன்றி அவள் முகத்தைப் பார்த்தான். இன்னொரு கையால் அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கி அவள் கண்களில் முத்தமிட்டான்.

“ ப்ளீஸ் அழாத, நீ அழறத தவிர வேறெதையும் நான் பார்க்காம இருக்கேன் அம்மு. என் லவ் பத்தி மறைச்சு பல வருஷமா நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேனு எனக்குத் தெரியும், ஆனா என் முட்டாள்தனம் நம்ம வாழ்க்கையோட இத்தன வருஷங்கள  இழக்கும்னு எனக்குத் தெரியாது. என்ன மன்னிச்சிடு, நீ என்ன மண்ணிக்க நான் எதையும் செய்வேன், ஆனா தயவு செஞ்சு அழாத “ என்று சொல்லி அவள் விம்மல் நிற்கும் வரை காத்திருந்தவன் பிறகு மீண்டும் சொல்ல தொடர்ந்தான்.

“ அன்னைக்கு என் மேல எனக்கே அவ்ளோ கோவம், என்  வாழ்க்கையில இவ்ளோ இழந்ததுக்கு அந்த வேலைய எடுத்ததுக்கு  என் முட்டாள்த்தனமான மூளையை சபிச்சேன். ஆனா எனக்கு 30 நாள் அவகாசம் இருந்துச்சு அதனால உன்ன எப்படியாச்சும் என்னுடையவளா ஜெயிக்க முடிவு செய்தேன். முதல்ல சென்னையிலேயே தங்கி என் திட்டத்த செயல்படுத்த முடிவு செய்தேன், அதனால உனக்கு என்ன புடிக்கும், புடிக்காதுன்னு பார்த்து பார்த்து கட்டின நம்ம வீட்ல தங்கினேன். நான் வருணை எனக்கு வி செய்ய வர சொன்னேன். நாங்க அந்த பிரசாந்த பின்தொடரத் தொடங்கினோம்.

அவனோட மொத்த வரலாறும் தெரிஞ்சிக்க எனக்கு அதிக நேரம் எடுக்கல. அவன் வேற யாரையோ லவ் பண்ணிட்டு இருந்தான் “ என்று கேஷவ் சொல்ல, மைரா, “ எனக்குத் தெரியும் “ என்றாள்.

“ இல்ல, உனக்கு தெரியாது அம்மு. அவன் அவனோட சின்ன வயசு ப்ரெண்டு ஒருத்தன லவ் பண்ணிட்டு இருந்தான். அவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.” என்று கேஷவ் மைரா அதிர்ச்சியடைந்தாள்.

கேஷவ் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து அவள் தலையை அவன் மடியில் சாய்த்து அவள் தலை முடியை கோத ஆரம்பித்தான்.

“ அவங்க பல வருஷமா லவ் பண்ணிட்டு இருந்தாங்க ஆனா அவங்களோட குடும்பத்தையும் சமூகத்தையும் எதிர்கொள்ள கோழையா இருந்தாங்க ஆனா எப்படியோ அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சு. அவங்க வீட்ல அவங்க ரெண்டு பேரையும் தடுக்க முடிஞ்ச வர முயற்சி பண்ணி இருக்காங்க ஆனா அவங்க பிரிய தயாரா இல்ல. அப்போ தான் அவங்களுக்கு உன்ன பத்தி தெரிய வந்து இருக்கு. அந்த ராஸ்கல் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனோட லவர் கூட எப்பவும் போல வாழ பிளான் பண்ணான். நீ ஏற்கனவே வருத்தத்துல இருந்ததால அவனோட வாழ்க்கைக்கு நீ ஒரு தடையா இருக்க மாட்டனு அவன் நெனச்சு இருக்கான். சமூகத்துல அவங்களுக்கு இருக்க நல்ல பெயர காப்பாத்த அவன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும்னு அவன் அப்பா, அம்மா விரும்பி இருக்காங்க அதனால உன்ன தேர்ந்தெடுத்து, நீ மனசு மாறுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடத்த அவசரமா எல்லாமே செய்ய பிளான் பண்ணிட்டாங்க “ என்று கேஷவ் உண்மையை சொன்னதும் மைரா இப்போது அதிர்ச்சியுடன் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள்.

“ காலேஜ் படிக்கும் போது காதல் தோல்வி ஆச்சுனு அவன் சொன்னான் “ என்று மைரா சொல்ல, “ உன்ன சிக்க வைக்க அவன் சொன்ன ஒரு பொய் வலை, ஆனா அவன் உன்ன நெருங்குறதுக்கு முன்னாடி என்ன எதிர்கொள்ளனும்னு அவனுக்கு தெரியாம போச்சு “ என்று கேஷவ் சொன்னதும், “ என்ன பண்ணீங்க ? “ என்று மைரா கேட்டாள்.

“ நாங்க அவன் போன் பேசுறது எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணதுல கல்யாணம் முடியுற வர ரெண்டு பேரும் சந்திக்காம இருக்க எடுத்த  முடிவ பத்தி தெரிஞ்சிகிட்டோம் ஆனா அவங்க ரெண்டு பேரும் சந்திக்காம இருக்க முடியல. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முறை சந்திக்க பிளான் பண்ணாங்க. கல்யாணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நான் அவன அவனோட லவர் வீட்ல சந்திச்சேன், அங்க அவங்க ஒன்னா வாழ்ந்துட்டு இருந்தாங்க “

பிளாஷ்பேக்:

கேஷவும் வருணும் கதவைத் தட்டி யாராவது திறப்பதற்காகக் காத்திருந்தனர். சில நொடிகள் கழித்து பிரசாந்த் கதவைத் திறந்தான். கேஷவை இதற்கு முன் அவர் சந்தித்ததில்லை என்பதால் அவனால் கேஷவை அடையாளம் காண முடியவில்லை.

“ சொல்லுங்க, நீங்க யாரு, என்ன வேணும் ? “ என்று பிரஷாந்த் கேட்டதும், கேஷவ் பிரஷாந்தின் காலரைப் பிடித்து உள்ளே தள்ள, வருண் கதவைப் பூட்டினான்.

“ ஏய், நீ யாரு, அனுமதி இல்லாம என் வீட்டுக்குள்ள நுழைய உனக்கு எவ்ளோ தைரியம் ? “ என்று பிரஷாந்த் கேட்ட போது, அவனின் காதலன் அறையை விட்டு வெளியேறி பிரஷாந்தை காப்பாற்ற கேஷவிடம் விரைந்தான், ஆனால் வருண் அவனை இழுத்து மண்டியிட வைத்தான்.

கேஷவ் தனது மொபைலை எடுத்து பிரஷாந்த் தனது காதலனுடன் இருக்கும் அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களையும் இயக்கினான். அதை பார்த்து இருவரும் அதிர்ச்சியானார்கள்.

கேஷவ் பிரசாந்தை அடித்து உதைத்த போது வருண் அவனை பின்னால் இழுத்தான் ஆனால் கேஷவ் வருணின் பிடியில் இருந்து கையை பிடுங்கி பிரசாந்தின் கழுத்தை சுவரில் அழுத்தி நெரித்தான்.

“ நீ என்ன பண்ணாலும் எது எனக்கு தேவையில்லாத விஷயம் ஆனா உன்னோட வலையில என் மைராவை இழுக்க உனக்கு எப்படி தைரியம் வந்துச்சு ? நான் தெளிவாகச் சொல்றேன் கேளு, இந்த நிமிஷத்துல இருந்து நீ நான் சொல்றத மட்டும் தான் செய்யணும். என் வார்த்தைக்கு எதிரா ஏதாவது செய்ய நெனச்ச உன்னோட மொத்த குடும்பத்தையும் எந்த ஆதாரமும் இல்லாம அழிச்சிடுவேன்.” என்று கேஷவ் அவனை மிரட்டினான்.

“ நீங்க என்ன சொன்னாலும் செய்றேன். தயவு செஞ்சு என்ன விடுங்க” என்று பிரஷாந்த் கெஞ்சினான்.

“ அது தான் உனக்கு நல்லது. இப்போ நடந்தத பத்தி நீ யார் கிட்டயும் பேசக் கூடாது. நான் சொல்ற மாதிரி கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் நீ தான் செய்யணும். நீ கல்யாண மண்டபத்துக்கு போனதும் அன்னைக்கு நைட்டு லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடி போகணும் “ என்று கேஷவ் அவனை மீண்டும் மிரட்டினான்.

“ அவர் சொன்னத செய்யனுமானு யோசிக்குரியா ? “ என்று வருண் பிரஷாந்திடம் கேட்டான்.

“ அவன் யோசிக்க மாட்டான் வருண், என்ன இருந்தாலும் நான் இவனோட வாழ்க்கைய ஒரு நொடியில அழிச்சிடுவேன்னு இவனுக்கு தெரியும் “ என்று சொன்ன கேஷவ் மீண்டும் பிரஷாந்தை பார்த்து, “ இப்போ நான் உன் வீட்டுக்கு போய் உன் அப்பாவுக்கும் இதே ட்ரீட்மெண்ட் கொடுக்குறேன். என் வருங்கால மாமனாருக்குத் துரோகம் பண்ண குற்றத்துக்கு அவனுக்கும் தண்டனை கிடைச்சு தான் ஆகணும் “ என்று சொன்னான்.

“ நான் என் வீட்ல பேசுறேன், நீங்க சொல்ற மாதிரி நாங்க செய்வோம், ஆனா என் அப்பாவ ஒன்னும் செய்ய வேணாம். தயவு செஞ்சு உங்கள கெஞ்சிக் கேட்டுக்குறேன் “ என்று பிரஷாந்த் அழுதான்.

“ என் மைராவுக்கோ, இந்த கல்யாணத்துக்கோ நீ ஒரு பைசா கூட செலவழிக்க கூடாது. வருண் உன் கூட தொடர்புல இருப்பான்.  நீங்க இதுவரை செலவு பண்ண ஒவ்வொரு பைசாவும் திறம்ப கிடைக்கும். அவளுக்காக நான் எல்லாம் செய்வேன், நீ ஒரு டெலிவரி பாய் வேலை மட்டும் செய். நான் சொன்னது புரிஞ்சிதா ? “ என்று கேஷவ் உரக்க கேட்டதும், பிரஷாந்த் பலமாக தலையை அசைத்தான்.

கேஷவ் அவன் கன்னத்தில் தட்டி ஆள்காட்டி விரலை காட்டி எச்சரித்தான்.

“ யார் சார் நீங்க?” என்று பிரஷாந்த் கேட்டதும், “ உனக்கு வில்லன், என் மைராவுக்கு ஹீரோ.” என்றான் கேஷவ். அவன் சொன்னதை கேட்ட வருண், “ சின்ன பையன் லவ் பண்ற மாதிரி பேசுறீங்க பாஸ். உங்க கார்டு இவன் கிட்ட காட்டுங்க, அது இவன் வாய மூடிடும் “ என்று கூறினான்.

கேஷவ் தனது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வெளியே எடுத்து காட்டியதும், பிரஷாந்த் அதைப் பார்த்து பயத்தில் விழுங்கினான். கேஷவ் தனது தலைமுடி மற்றும் சட்டையை சரிசெய்து கொண்டு அபார்ட்மெண்டை விட்டு வருணுடன் வெளியேறினான்.

பிளாஷ்பேக் முடிகிறது.

“ கல்யாணத்துக்கு புடவை, தாலி, நகை அப்புறம் மாப்பிள்ளை வீட்ல இருந்து செய்ய வேண்டிய எல்லாத்தையும் நான் ஏற்பாடு பண்ணேன். எதிர்காலத்துல இன்னொருத்தன் கொடுத்தத போட்டு தான் நம்ம கல்யாணம் நடந்துச்சுனு நீ வருத்தப்படுறத நான் விரும்பல “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு யோசித்த மைரா, “ ஒருவேள அவன் நேர்மையா இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க ? அவன என்ன கல்யாணம் பண்ணிக்க அனுமதிச்சிருப்பீங்களா? “ என்று கேட்டாள்.

கேஷவ் அவளை இழுத்து மடியில் அமர்த்தி அவள் கன்னத்தை தன் விரலால் தொட்டான்.

“ இல்ல, நான் உன்ன என் ஆக்ஸிஜனா சுவாசிக்கும் போது எப்படி அப்படி நடக்க விடுவேன் ? நான் அவனைக் கடத்தியிருப்பேன் இல்ல அன்னைக்கு நைட்டு ஓடி போக எவ்ளோ பணம் வேணும்னாலும் கொடுத்துருப்பேன். நீ என்னுடையவ மைரா, அன்னைக்கு உன்ன என்கூட கூட்டிட்டு போறதுல நான் உறுதியா இருந்தேன் “ என்று சொன்னான் கேஷவ்.

“ உங்களுக்கு அவன பத்தி தெரிஞ்சிருக்கு, கல்யாணத்த நிறுத்த எல்லாமே பிளான் பண்ணி இருக்கீங்க ஆனா அத பத்தி என்கிட்டே சொல்லனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா ? குறைந்த பட்சம் இத பத்தி என்கிட்ட பேசனும்னு கூட நினைக்கலையா ? “ என்று கேட்டு அவள் மீண்டும் கண்ணீருடன் அவன் மார்பில் அடிக்க ஆரம்பித்தாள். கேஷவ் அவள் கைகளைப் பிடித்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“ உன்ன நிரந்தரமா என்கூட வெச்சுக்க எனக்கு கிடச்ச கடைசி வாய்ப்பு மைரா, அத நான் விடுறதா இல்ல. அவன பத்தி சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்? மாமா கல்யாணத்தை நிறுத்தியிருப்பாரு, நீ மறுபடியும் உன் வாழ்க்கைய நெனச்சு அழுதுட்டு இருந்துருப்ப. மறுபடியும் நீ துயரத்துல மூழ்கறத என்னால பாக்க முடியாது அம்மு, அதனால நமக்கு அது நல்லதுன்னு முடிவு பண்ணிட்டேன். அவன ஓடி போக சொல்லி உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணேன். உன்  மேல பரிதாபப்பட்டுத் தான் நான் ப்ரொபோஸ் பண்ணேன்னு நீ  நினைச்ச அதனால அந்த நினைப்ப போக்குறதுக்கு தான் உன்ன ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போனேன்.” என்று கேஷவ் விளக்கம் அளித்தான்.

“ அதனால தான் அன்னைக்கு நீங்க அவ்ளோ பேசுனீங்களா ? “ என்று மைரா கேட்டாள்.

“ பல வருஷமா நான் வெயிட் பண்ணிட்டு இருந்து, விதி எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்ப நழுவ விடாம, என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்ன சம்மதிக்க வைக்கணும்னு விரும்பினேன், நீயும் என்ன ஒரு நாள் லவ் பண்ணுவனு என் லவ் மேல எனக்கு நம்பிக்க இருந்துச்சு “ என்று சொல்லி கேஷவ் புன்னகைத்தான்.

“ ஒருவேள நான் மறுத்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க ? “ என்று மைரா கேட்டதும், “ ரொம்ப சிம்பிள், வேற வழியில்லாததால அன்னைக்கு உன் காலுல விழுந்து என் லவ் சொல்லி ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன் “ என்றான் கேஷவ்.

அவன் பதிலை கேட்ட மைரா, “ அப்போ நான் தப்பு பண்ணிட்டேன், ஒரு ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிக்கிட்டு உங்கள கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன் அப்படி தானே ? “ என்று கேட்டாள்.

“ இல்ல அம்மு, நீ செய்தது சரி தான். நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம், நீ மெதுவா என்ன லவ் பண்ண ஆர்மபிச்ச. நான் முதல்ல உன்ன லவ் பண்ணி இருக்கலாம் ஆனா நீ என்ன விட அதிகமா என்ன லவ் பண்ண ஆரம்பிச்சா. சரி தானே ? “ என்று கேட்டான்.

“ நான் உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? “ என்று மைரா கேட்க, “ நான் உன்ன லவ் பண்ண அனுபவத்துல இருந்து எனக்கு தெரியும், நீ உன்ன எனக்கு கொடுக்க முடிவு பண்ண அன்னைக்கு நைட்டு என் வாழ்நாள் முழுக்க நான் பார்க்க ஏங்குனத உன் கண்ணுல பார்த்தேன். என் மேல உனக்கு இருந்த லவ் உன் கண்ணுல தெரிஞ்சுது “ என்று கேஷவ் சொன்னான்.

“ நீங்க என்ன லவ் பண்ற மாதிரி வேற யாரும் என்ன லவ் பண்ண முடியாது. உங்க லவ் எனக்கு கிடக்க நான் என்ன தவம் செஞ்சேன்? என்ன ஏன் இவ்ளோ லவ் பண்றீங்க ? “ என்று மைரா கண்ணீருடன் கேட்டாள்.

“ எல்லாரும் ஒரு காரணத்தோட லவ் பண்றாங்களா எனக்கு தெரியாது, ஆனா எனக்கு எந்த காரணமும் இல்ல அம்மு. நான் வாழ சுவாசிக்குற மாதிரி உன்ன லவ் பண்றேன். நான் உயிரோட இருக்க சாப்பிடுற மாதிரி உன்ன லவ் பண்றேன். நீ தான் என் பலம், நீ தான் என் பலவீனம், நீ என்ன சந்தோஷப்படுத்துற, எனக்கு அமைதிய கொடுக்குற. நீ என்ன உயிரோட வெச்சுருக்க அம்மு. உன்ன பார்க்கும் போது என் இதயம் சிறகு முளைச்ச மாதிரி பறக்க படபடக்குது அதனால தான் நான் உனக்கு இந்த பட்டாம்பூச்சி டாலர் பரிசா கொடுத்தேன் “ என்று கேஷவ் தன் வாழ்வின் அர்த்தமாய் அவளை மட்டுமே நினைக்கும் காரணத்தை விளக்கினான்.

“ குறைந்த பட்சம் நீங்க என்ன லவ் பண்றீங்கனு உறுதியா தெரிஞ்சு எனக்காக எல்லாத்தையும் செஞ்சு சந்தோஷப்பட்டீங்க ஆனா நான் ஒருத்தர லவ் பண்றதா நெனச்சு ஒரு மாயையில வாழ்ந்துட்டு இருந்தேன், முதல்ல இல்லாத காதலுக்கு ஒரு காதல் தோல்வி அதுக்கு ஒரு மன வேதன, ஒரு போலி மாப்பிள்ள இன்னும் என்ன நடக்கல என் வாழ்க்கையில ? நீங்க பல வருஷமா லவ் பண்றது என்ன தான்னு நான் சந்தோஷப்படனும், ஆரம்பத்துல இருந்தே நானும் லவ் பண்ணது உங்கள தான்னு நான் சந்தோஷப்படனும், இப்போ நாம ஒன்னா இருக்கோம்னு நான் சந்தோஷப்படனும் ஆனா இப்போ என்னால அழ மட்டும் தாம் முடியுது “ என்று சொல்லி மைரா மீண்டும் அழ தொடங்கினாள்.

“ ஷ்ஷ்ஷ், ஸாரி, இதுக்கெல்லாம் காரணம் நான் தாணு எனக்குத் தெரியும், அத நான் மறுக்கக்கூட இல்ல. எனக்கு தண்டன கொடு,  நீ என்ன கேட்டாலும் நான் செய்வேன், ஆனா தயவுசெஞ்சு இனி கண்ணீர் சிந்த வேண்டாம், ப்ளீஸ் என்கிட்ட பேசுறத நிறுத்த மட்டும் செய்யாத. இந்த ஜென்மதுக்கு போதுமான அளவு நாம அனுபவிச்சிட்டோம் அம்மு “ என்று கேஷவ் அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

“ ஆமா நீங்க சொல்றது சரி தான், ஆனா நான் காயமடைஞ்சு இருக்கேன். இத என்னால மறுக்க முடியாது. இந்த 2 நாள் நான் தெரிஞ்சிக்கிட்டத புரிஞ்சிக்க எனக்கு நேரம் வேணும் “ என்று மைரா சொன்னதும் பீதியடைந்த கேஷவ், “  மைரா “ என்று மெல்லிய பயந்த குரலில் அவளை அழைத்தான்.

“ நான் உங்கள விட்டுப் போக மாட்டேன், உங்கள தவிர்க்கவும் மாட்டேன் ஆனா நான் காயத்துல இருந்து மீளனும்” என்று மைரா சொல்ல, “ நான் தான் உன்ன காயப்படுத்தினேன், அதனால நான் தான் உன்ன குணப்படுத்துவேன். உன்ன குணப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கொடு அம்மு “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.

“ நீங்க அத செஞ்சு தான் ஆகணும், அது தான் உங்களுக்கு நல்லது “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ ஐ லவ் யூ. நான் சத்தியம் செய்றேன், இனிமே நமக்குள்ள எந்த ரகசியமும் இருக்காது “ என்று சொல்லி கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி நெற்றியில் முத்தமிட்டான். அவன்  உதடுகள் அவளது நெற்றியில் சில நொடிகள் அப்படியே பதிந்திருந்தன.

“ ஐ லவ் யூ, நான் உங்கள நிறைய லவ் பண்றேன் கெட்சப் “ என்று மைரா கூறினாள். அவளது வார்த்தைகள் கிசுகிசுப்பாக வெளிவர, அவளது வார்த்தையை கேட்ட கேஷவ் கண்களில் கண்ணீர் வழிய புன்னகைத்தான்.

“ உன் வாயிலிருந்து இந்த வார்த்தைய கேட்க நான் எத்தன வருஷமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? நான் இப்போ முழுமையானவனா உணர்றேன் அம்மு. ப்ளீஸ் இன்னொரு முறை சொல்லு “ என்று கேஷவ் கெஞ்சினான்.

“ ஐ லவ் யூ, நீங்க எனக்கு மட்டும் தான் சொந்தம் கேஷவ் “ என்று மைரா சொன்னதும், கேஷவ் அவள் கன்னங்களை பற்றி அவள் உதட்டில் முத்தமிட முயன்றான் ஆனா மைரா தன் உள்ளங்கையை இடையில் வைத்து அவனை முறைத்தாள்.

“ நான் இன்னும் உங்க மேல வருத்தமா தான் இருக்கேன், நீங்க முதல்ல என்ன சமாதானப்படுத்துங்க அதனால அதுவரை முத்தம் கொடுக்க வேண்டாம் “ என்று சொல்லி மைரா படுக்கையில் படுத்தாள்.

கேஷவ் அவளை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அவள் கழுத்து எலும்பில் முத்தமிட்டான். அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டான்.

“ நீ உன்னோட லவ் சொல்லி எனக்கு ப்ரொபோஸ் பண்ண நெனச்சியா ? “ என்று கேஷவ் மெல்ல கேட்டான்.

“ ஆமா, நீங்க சொன்ன அதே நாள் நானும் ப்ரொபோஸ் செய்ய பிளான் பண்ணி இருந்தேன் ஆனா எல்லாம் வீணா போச்சு. நான் ரொம்ப மோசமா லவ் சொன்னேன் தானே ? உங்களுக்கு அத கேட்ட அப்போ எப்படி இருந்துச்சு ? அத நீங்க உணர்தீங்களா ? “ என்று அவனிடம் கேட்டாள்.

“ நல்லா உணர்ந்தேன், ஒரு தென்றல் என்ன தாக்குன மாதிரி, அந்த நொடி இன்னொரு முறை உன் கூட வாழ்க்கைய மொத்தமா வாழ்ந்த மாதிரி உணர்ந்தேன். பல வருஷத்துக்கு முன்னாடி அன்னைக்கு நைட்டு நீ கொடுத்த முத்தம், அதோட தீவிரத்தையும் நான் உணர்ந்தேன், ஏன்னா அது எனக்காக நீ கொடுத்தது. மைரா, நீ என்னுடையவ, ஐ லவ் யூ, நீயும் என்ன லவ் பண்ற. இது எல்லாமே எனக்கு சொல்ல வார்த்தையே இல்லாத அளவுக்கு சந்தோஷமா இருக்கு “ என்று கேஷவ் கூறினான்.

“எனக்கும் தான் “ என்று மைரா சொல்ல, அவள் வார்த்தைகளைக் கேட்டு கேசவ் புன்னகைத்தான், அவள் தூங்கும் வரை அவள் தலைமுடியை வருடினான்.

***************

முன்னோட்டம்:

“ என் வருங்கால பொண்டாட்டிக்கு வேற யாராவது மஞ்சள் கொடுக்க அனுமதிப்பேன்னு நெனச்சியா ? பிரஷாந்தோட அம்மா மூலமா அனுப்பினேன். நான் ஸ்பெஷல் ஸ்வீட் வாங்கிட்டு வந்து நலங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி வெச்சுட்டேன். சடங்கு முடிஞ்சதும் அந்த ஸ்வீட் தான் உனக்கு ஊட்டிவிட்டாங்க. அது மட்டும் நீ என் மேல மஞ்சள் பூசி எனக்கும் நலங்கு வெச்சுட்ட “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 15, 2026 - 1:50 pm

[…] 68. உனக்கு வில்லன், என் மைராவுக்கு ஹீரோ […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!