அடுத்த நாள் காலை சென்னையில், அர்ச்சனா காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார், மதன் படுக்கையறையில் ஒரு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.
“ எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்காங்க, ஒரு மருமக அப்புறம் ஒரு அண்ணன் பொண்ணு இந்த வீட்ல இருக்காங்க ஆனா திடீர்னு அவங்க எல்லாரும் வேற கிரகத்துக்கு மறைஞ்சு போன மாதிரி இருக்கு. குறைந்த பட்சம் மைரா நேத்து போன் பண்ணி கேஷவ் கூட ஊட்டியில இருக்குறதா சொன்னா “ என்று புலம்பிக்கொண்டே சமையல் செய்தார்.
அவரது புலம்பல் சத்தம் கேட்டு சமையலறைக்குள் நுழைந்த மதன் அவருக்கு உதவ ஆரம்பித்தார்.
“ இப்படி புலம்பாத அர்ச்சனா, கேஷவ் ஊட்டிக்கு கிளம்பறதுக்கு முன்னாடி மெசேஜ் பண்ணான் ஆனா நான் தான் சொல்ல மறந்துட்டேன். அவன் மைராவ அங்க கூட்டிட்டு போய் சர்ப்ரைஸ் பண்ண பிளான் பண்ணி இருக்கான் போல “ என்று மதன் சொன்னதை கேட்ட பிறகு, “ க்ரிஷ் என்ன ஆனான் ? அவன் போன் பண்ணானா ? இல்ல நீங்க அவனுக்கு போன் பண்ணி எங்க இருக்கான்னு கேட்டீங்களா ? “ என்று அர்ச்சனா கேட்டார்.
“ அவனோட மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கு. அது சரி ரோஷினி எங்க ? “ என்று மதன் கேட்டார்.
அர்ச்சனா பதில் சொல்ல எத்தனிக்க, கதவு அழைப்பு மணி அவர்களின் உரையாடலுக்கு இடையூறானது. அர்ச்சனா கதவை திறக்க நடக்க, மதன் அவரை பின்தொடர்ந்தார். கதவைத் திறந்த அர்ச்சனா அதிர்ச்சியில் மூச்சிரைக்க வாசற்படியில் நின்றவர்களைப் பார்த்து உள்ளங்கையால் வாயை மூடிக்கொண்டார்.
அதே நேரம் ஊட்டியில், கேஷவ் மற்றும் மைரா, இருவரும் கடந்த 2 நாட்களாக சரியான தூக்கம் இல்லாததால் சோர்வாக தூங்கிக் கொண்டிருந்தனர். மூன்றாவது முறையாக அழைப்புக்கு பதில சொல்லாமல் அலட்சியப்படுத்திய போதும் கேஷவின் செல்போன் இடைவிடாமல் ஒலித்த போது அவர்களின் தூக்கம் கலைந்தது. மைரா கேஷவிடமிருந்து தலையை நகர்த்தி தலையணைக்கு அடியில் முகம் புதைத்து உறக்கத்தைத் தொடர்ந்தாள்.
மொபைல் அழைப்பு உறக்கத்தில் தொந்தரவாக இருந்ததுக்கு கேஷவ் முனகினான். தூக்க குரலில் அவன் அழைப்புக்கு பதில் சொன்னான் ஆனால் மறுபுறத்திலிருந்து செய்தியை கேட்ட கணத்தில் அவனது தூக்கம் அனைத்தும் பறந்து போனது. தலையைப் பிடித்துக்கொண்டு அவசரமாகப் படுக்கையிலிருந்து எழுந்தான்.
“ அவன் என்ன பண்ணி வெச்சுருக்கான் ? மைரா, எழுந்திரு. அம்மு நாம வீட்டுக்கு போகணும், இது எமர்ஜென்ஸி “ என்று கேஷவ் அவளை உ;உலுக்கினான்.
“ எனக்கு களைப்பா இருக்கு அதனால நீங்க தனியா போங்க, நான் அப்புறம் வரேன் “ என்று மைரா பதில் சொன்னாள். கேஷவ் மைராவை இழுத்து உட்கார வைத்து அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கி நெற்றியில் முத்தமிட்டான்.
“ ஸாரி அம்மு, நாம அவசரமா கிளம்பனும். சீக்கிரம் ரெடியாகு, நான் பக்கத்து ரூம்ல ரெடியாகுறேன், சீக்கிரம் “ என்று கேஷவ் அவளை அவசரப்படுத்த, “ இப்ப என்ன ஆச்சு? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.
“ க்ரிஷ் கல்யாணம் பண்ணிக்கிட்டான் “ என்று கேஷவ் சொல்ல, அதை கேட்டு மைராவின் தாடைகள் அதிர்ச்சியில் தாழ்ந்தன. அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. கேஷவ் அவளது கவனத்தை ஈர்க்க அவளை மெதுவாக உலுக்கினான்.
“ அம்மு, நீ வீட்டுக்கு போற வரை அதிர்ச்சியா இரு ஆனா இப்போ கிளம்பு ப்ளீஸ். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இப்போ நாம தேவ “ என்று கேஷவ் மெல்ல கூறினான்.
மைரா போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, தலைமுடியை கொண்டையாகக் கட்டிக்கொண்டு படுக்கையிலிருந்து இறங்கினாள்.
“ அண்ணனும், தம்பியும் மூளைய அடமானம் வெச்சுட்டீங்க போல. எங்க நிம்மதிய சாப்பிட முடிவு பண்ணி எல்லாம் செய்றீங்க. டிவி சீரியல் மாதிரி தினமும் ஏதாவது ஒரு விஷயம் நடக்குது. அப்புறம் அவள பத்தி நான் சொல்லனுமா ? அந்த பல்லி சரியான நாடகக்காரி “ என்று மைரா கோவமாக புலம்பினாள்.
அவளது கோவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த கேஷவ் கண்களைச் சிமிட்டி விழுங்கினான். மைரா ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நடந்தாள், ஆனால் கேஷவ் இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.
“ இப்ப லேட் ஆகலையா? “ என்று மைரா அவனை பார்த்த கத்த, கேஷவ் அடுத்த அறைக்குச் சென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சு விட்டு தயாரானான்.
அவர்கள் வெளியேறுவதற்கான திடீர் முடிவைப் பற்றி தெரிவிக்க அவன் ராகேஷை அழைத்தான். அறைக்குத் திரும்பியவன், மைரா தன் புருவங்களுக்கிடையில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதைப் பார்த்தான்.
“ நீ ரொம்ப நேரம் கார் ஓட்டனும் கேஷவ் அதனால முதல்ல அவள சமாதானம் செய் அது தான் உனக்கு நல்லது “ என்று மனதில் நினைத்த கேஷவ் அவளை நோக்கி நடந்தான், ஆனால் மைரா கண்ணாடி வழியாக அவனை முறைத்தபோது திசை திரும்பி சென்றான்.
அவர்கள் காரில் ஏறியதும் கேஷவ் காரை ஓட்டத் தொடங்கினான். ஒரு மணி நேரம் கழித்து அவன் ஒரு உணவகத்தின் முன் நின்றதும் ஒரு பையன் கையில் ஒரு பையுடன் ஓடி வந்து கேஷவிடம் கொடுத்தான்.
கேஷவ் பையை மைராவிடம் கொடுத்து, அவன் வாகனம் ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு பையனுக்கு நன்றி தெரிவித்தான்.
“ நான், ராகேஷ் அப்புறம் வருண் இந்த ரெஸ்டாரன்ட் தான் அடிக்கடி சாப்பிட வருவோம் அதனால அங்க வேலை செய்றவங்களுக்கு எங்கள நல்லா தெரியும். நான் அவனுக்கு போன் பண்ணி ப்ரேக்பாஸ்ட் அப்புறம் பக்கத்துக்கு கடையில இருந்து கொஞ்சம் ஸ்நேக்ஸ், சாக்லேட் வாங்கி தயாரா இருக்க சொன்னேன். இப்போ நீ சாப்பிடு, நீ பசியா இருப்ப “ என்று கேஷவ் கூறினான்.
“ கண்டிப்பா சாப்பிடறேன். நீங்களும் உங்க தம்பியும் செய்றதுக்கு நான் ஏன் பட்டினியா இருக்கணும் ? “ என்று மைரா சொல்ல, கேஷவ் புன்னகைத்து தன் புன்னகையை முஷ்டியால் மறைக்க முயன்றான், ஆனால் அது மிகவும் தாமதமானது. மைரா பற்களைக் கடித்தபடி அவன் கையைத் தட்டினாள்.
“ இப்ப ஏன் சிரிக்கிறீங்க? நான் உங்க கண்களுக்கு பைத்தியம் மாதிரி தெரியுறேனா ? “ என்று அவள் கேட்க, “ நீ இப்போ சாதாரன பொண்டாட்டி மாதிரி தெரியுற. நான் உன்ன இப்படி பார்க்குறது இது தான் முதல் முறை, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா முதல்ல சாப்பிடு மா “ என்றான் கேஷவ்.
அவள் ஒரு பாக்ஸை திறந்து ஸ்பூன் கொண்டு இட்லியை சாப்பிடத் தொடங்கினாள். அப்போது அவள் அவனுக்கு சாப்பிட ஒரு துண்டை நீட்டினாள், அவனும் மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அவள் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் நீட்டினாள். பாட்டிலைத் திருப்பி அவள் குடித்த இடத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சினான்.
“ கிஸ் பண்ணதுக்கு ரொம்ப நன்றி அம்மு. நான் கார் ஓட்ட எனக்கு எனெர்ஜி கொடுத்துட்ட “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ இப்படி உளறுறத நிறுத்துங்க. நான் உங்கள கிஸ் பண்ணல “ என்றாள் மைரா.
“ நேரடியா இல்ல ஆனா மறைமுகமா கிஸ் பண்ணி இருக்க. நாம கிஸ் பண்ணி ஐம்பது மணி நேரம் ஆயிடுச்சுனு உனக்கு ஞாபகம் இருக்கட்டும். அது தான் நீ எனக்கு கொடுத்த தண்டனைனு நீ நெனச்சா அப்போ அதுல நீ ஜெயிச்சுட்ட, ரொம்ப கொடூரமான தண்டனை “ என்று கேஷவ் தலையை ஆட்டியபடி கூறினான்.
“ நாம ஹனிமூன் போற மாதிரி நெனச்சு இப்படி கடலப்போடாதீங்க. வீட்ல ஒரு பெரிய புயல் வெயிட் பண்ணிட்டு இருக்கு, அடுத்து என்ன நடக்கும்னு தெரியல. இது ஏன் கனவா இருக்கக் கூடாது, நாம இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே தங்கி இருக்கலாம் ? “ என்று மைரா சொல்ல, “ கவலைப்படாத, எல்லாம் சரி ஆனதும், நான் உன்ன மறுபடியும் ஹனிமூன் கூட்டிட்டு போறேன் “ என்று கேஷவ் பதில் கூறினான்.
“ நீங்க என் மனச திசை திருப்ப முயற்சி பண்றீங்கனு எனக்குத் தெரியும் ஆனா .. ஆனா “ என்று மைரா சொல்லாமல் இழுக்க, கேஷவ் அவள் கையை பிடித்து தன் தொடையில் வைத்து லேசாக அழுத்தினான்.
“ நீ அவன சந்திக்க தயாரா இல்லனு எனக்குத் தெரியும், ஆனா என்ன நம்பு, நாம ரொம்ப நாள் அங்க இருக்க மாட்டோம். நம்ம அப்பா, அம்மாவுக்கு ஆதரவா நாம இருக்கனும், பல கேள்விக்கு நமக்கு பதில் தேவ. அதுக்கு அப்புறம் நம்ம வீட்டுக்குப் போவோம். வீட்ட சுத்தி பார்த்த அப்புறம் அதுல உனக்கு புடிச்ச மாதிரி என்ன வேணும்னாலும் மாத்தலாம்.? நான் உனக்கு அங்க நிறைய காட்டனும் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ அது என்ன? “ என்று மைரா கேட்டாள்.
“ அது சர்ப்ரைஸ் அப்படினு நான் சொன்னா, நீ உன் மூக்குல இருந்து நெருப்ப உமிழ்வியா? “ என்று கேஷவ் கேட்க, “ நிச்சயமா நான் செய்வேன், ஆனா இந்த முறை நான் சர்ப்ரைஸ் பார்க்க விரும்புறேன் அதனால போனாபோதுனு உங்கள விடுறேன் “ என்றாள் மைரா.
“ ஐ லவ் யூ அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ ஐ லவ் யூ கெட்சப். கொஞ்ச நேரம் தூங்குறேன், நான் கார் ஓட்டனும்னு நெனச்சா என்ன எழுப்புங்க “ என்று சொல்லிவிட்டு மைரா இருக்கையில் சாய்ந்து துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு தூங்கினாள். சில நிமிடங்கள் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என்பது உறுதியானதும் அவளது துப்பட்டாவை நகர்த்தி கேஷவ் அவளை திருட்டுத்தனமாக பார்த்தான்.
அவர்கள் வீட்டை அடைந்தபோது மணி 6 ஆகியிருந்தது. மைரா வெளியே தயங்கி நின்றாள், ஆனால் கேஷவ் அவள் கையைப் பிடித்து, மற்றொரு கையால் தாடையை உயர்த்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றான். ரோஷினி அழுவதும், அர்ச்சனா அவளை சமாதானப்படுத்த முயலும் காட்சியும் அவர்களை வரவேற்றது, அவர்களுக்கு எதிரே மதன் அமர்ந்திருந்தார்.
“ அவ ஏன் இப்போ அழுதுட்டு இருக்கா ? அவன் அவள வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிட்டானா ? ஆனா அவ கழுத்துல தாலி இல்லையே? ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா? அப்போ அவளுக்கு க்ரிஷ கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்லையா ? இப்போ என்ன ஆச்சு ? “ என்று மைரா கேள்விகளை கிசிகிசுத்துக் கொண்டிருந்தாள்.
“ அதிர்ச்சியாகாம என் கைய புடிச்சுக்கோ, உன்ன தயார்படுத்திக்கோ. நான் உன் கூட தான் இருக்கேன் “ என்று கேஷவ் சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு மைரா குழப்படமடைந்தாள் அதோடு அவள் அவனிடம் மீண்டும் எந்த கேள்வியும் கேட்பதற்குள் அர்ச்சனா அவர்களை வரவேற்றார். தன்னை இடிப்பதை உணர்ந்து அவள் கேஷவை பார்க்க, அவன் அவளை வேறு திசையை பார்க்கும்படி சைகை செய்தான். அந்த திசையை அவள் பார்த்த போது, ரோஷினியைப் போல் அல்லாமல் மகிழ்ச்சியுடன் தன் அறையை விட்டு வெளியே வந்த க்ரிஷைப் பார்த்தாள்.
மைராவும் கேஷவும் அவனை நோக்கி வீசிய கொடிய பார்வைக்கு க்ரிஷ் பயத்தில் விழுங்கினான். கொலுசு சத்தம் கேட்டு க்ரிஷுக்கு பின்னால் எட்டிப் பார்த்த மைரா, பட்டுப் புடவையும், கழுத்தில் தாலியும் அணிந்து நைனா நடந்து வருவதைக் கண்டு கண்களை அகல விரித்து அதிர்ச்சியில் மூச்சிரைத்தாள்.
“ நைனா..” என்று மைராவின் வார்த்தை காற்றை போல வர, நைனாவும், “ மைரா “ என்று அவளை அழைத்தாள்.
நைனாவின் குரலைக் கேட்டதும் ரோஷினி எழுந்து அவளை நோக்கி விரைந்தாள், ஆனால் க்ரிஷ் நைனாவை தனக்கு பின்னால் தள்ளினான்.
“ நாங்க அவங்க கிட்ட இன்னும் விசாரிக்கல, ரோஷினியும் நீங்க ரெண்டு பேரும் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி இப்போ தான் ரோஷினியும் வந்தா “ என்று மதன் கூறினார்.
“ நான் யார்னு அவன் எப்போவோ மறந்துட்டான் அதனால அவன கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இருக்குனு எனக்கு தோணல “ என்று கேஷவ் சொல்ல, “ அண்ணா ப்ளீஸ். என்ன மன்னிச்சிடுங்க, இத்தன நாளா நான் ஒரு முட்டாளா இருந்துட்டேன், முட்டாள்தனமா எல்லாத்தையும் பண்ணிட்டேன் ஆனா எனக்கு எந்த கெட்ட நோக்கமும் இல்ல “ என்று க்ரிஷ் பதில் சொன்னான்.
“ உன் நோக்கம் என்னனு நான் தான் முடிவு செய்யணும் “ என்று கேஷவ் கோவமாக சொல்ல, “ அண்ணா என் மேல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, நீங்க எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன் ஆனா நான் சொல்ற விளக்கத்த கேளுங்க. உங்களுக்கு நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும் ஆனா நான் சொல்ல போறது தான் உண்மை. நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளா ஒன்னா பழகிட்டு இருக்கோம் “ என்று க்ரிஷ் கூறினான்.
“ ஒரு நாள் நான் அவன ஒரு பூங்காவுல ஒரு மரத்தடியில் அழுதுட்டு இருந்தத பார்த்தேன். நான் அவன் கிட்ட பேசினேன், ரோஷினி அவன சித்திரவத செய்றானு அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன். அவன் தன்னோட வலியை பகிர்ந்துக்க எனக்கு போன் பண்ணுவான், நாங்க நிறைய பேச ஆரம்பிச்சோம் அப்புறம் தான் ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் புடிச்சுது ஆனா ரோஷினி அவன விட மறுத்ததால நாங்க அத பத்தி யார்கிட்டையும் சொல்லல “ என்று நைனா அனைவரிடமும் கூறினாள்.
“ எங்களுக்குள்ள சரிப்பட்டு வராதுனு நான் ரோஷினி கிட்ட நிறைய முறை சொல்லிட்டேன் ஆனா அவ அம்மா அப்புறம் மாமாவோட உறவ பத்தி சொல்லி என்ன மிரட்ட ஆரம்பிச்சா. கடந்த முறை கூட அவ என்ன ரொம்ப தொந்தரவு பண்ணதால மட்டும் தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். என்னால அதுக்கு மேல பொறுக்க முடியல, அவள சமாளிக்கவும் முடியல. நான் ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ விரும்பினேன், அது ரோஷினி கூட இருக்காது அதனால எனக்கு நைனா மேல இருந்த விருப்பத்த பத்தி அவ கிட்ட சொன்னேன். நாங்க கல்யாணம் பண்ணிக்குறது நல்லதுனு உணர்ந்தேன். இதுக்கு அப்புறம் ரோஷினி என் முடிவுல நான் தெளிவா இருந்தத புரிஞ்சிக்குவானு நினைக்குறேன் “ என்று சொல்லி க்ரிஷ் நைனாவைப் பார்க்க, அவள் ரோஷினியின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ ரோஷினி, உனக்கு இத ஏத்துக்குறது கஷ்டம்னு எனக்கு தெரியும், ஆனா உன்னால அன்ப ஒருத்தர் மேல திணிக்க முடியாது. அவன் கஷ்டப்பட்டது போதும், தயவு செஞ்சு அவன விட்டுடு “ என்று அன்பாக, பணிவாக நைனா கூறினாள், ஆனால் ரோஷினி எழுந்து சோபாவில் இருந்து எழுந்த நைனாவை அறைந்தாள். மைரா தனது உயிர் தோழி காயப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே அவள் நைனாவிடம் விரைந்து சென்று அவளுக்கு உதவினாள். கெஞ்சும் நைனாவின் முகத்தைப் படிப்பது அவளுக்கு கடினமாக இருக்கவில்லை.
மைரா புன்னகைத்து ஆதரவாக அவள் கையைப் பிடித்தாள். மைரா கேஷவைப் பார்க்க, அவள் என்ன செய்ய விரும்புகிறாள் என்பதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகைத்தான்.
“ என் மனைவிய அடிக்க உனக்கு எவ்ளோ தைரியம்? “ என்று க்ரிஷ் கோவத்தில் கத்த, “ மனைவியா ? இவ உனக்கு மனைவியா இருக்க மாட்டா “ என்று ரோஷினியும் கத்தினாள்.
க்ரிஷ் நைனாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கையை வைத்து ரோஷினியின் முன் நின்றான்.
“ நைனா என் மனைவி, இவ உன்ன மாதிரி இல்ல. அவ நான் சொல்றத பொறுமையா கேட்பா, என் உணர்வுகள புரிஞ்சிக்க முயற்சி செய்றா, எனக்கு என்ன தேவைனு புரிஞ்சி நடந்துக்குறா, என்ன கவனிச்சுக்குறா, அவ என்ன லவ் பண்றா. இத உன் மூளையில நல்லா ஏத்து அது தான் உனக்கு நல்லது “ என்று க்ரிஷ் கடுமையாக கூறினான்.
“ அத்தை, உங்களுக்கு என்ன பல வருஷமா தெரியும். நான் க்ரிஷுக்கு சரியான மனைவியா இருக்க மாட்டேன்னு நினைக்குறீங்களா? அவன் கஷ்டப்படுறத நீங்க பார்க்கலையா, அவனும் வாழ்க்கைய வாழத் தகுதி இல்லாதவனா ? “ என்று நைனா அர்ச்சனாவிடம் கண்ணீருடன் கேட்டாள்.
“ அவன் நிறைய தப்பு பண்ணி இருக்கான் அதனால அவனோட எந்த ஒரு முடிவையும் நம்புறது எங்களுக்கு கஷ்டம் “ என்று மதன் கூறியதும் குறுக்கிட்ட மைரா, “ அப்பா தப்பு செய்யாதவங்க யார் இருக்காங்க ? எல்லாரும் தப்பு செய்றோம் ஆனா புத்திசாலிங்க அதுல இருந்து பாடம் கத்துக்குறாங்க “ என்று சொன்னாள்.
“ மைரா, உனக்கும் அவங்க திட்டத்துல பங்கு இருக்கா இல்ல அவங்கள கல்யாணம் பண்ண சொல்லி நீ தான் திட்டமே போட்டியா ? “ என்று ரோஷினி சீறினாள்.
“ மைராவுக்கு எதிரா ஒரு வார்த்த கூட பேசாத. உனக்கும், க்ரிஷுக்கும் ரொம்ப நாளா பிரச்சினை இருந்துச்சு, நீ உங்க உறவ வலுக்கட்டாயமா விடமறுத்து புடிச்சு வெச்சுருந்த. என்ன தப்பா நினைக்க வேணாம், இதுவும் உன்னோட நல்லதுக்காக தான். இதை கடந்து உன் வாழ்க்கையில முன்னேற வழிய பாரு “ என்று கேஷவ் அவளிடம் கூறினான்.
“ அவன் என்ன ஏமாத்திட்டான், நான் அவன சும்மா விடணும்னு சொல்றீங்களா ? “ என்று ரோஷினி கேஷவை கேட்க, “ உங்க உறவுல உங்க ரெண்டு பேர் மேலையும் தப்பு இருந்துச்சு அதனால க்ரிஷ மட்டும் குறை சொல்ல முடியாது. நாங்க என்ன சொன்னாலும் உனக்கு சமாதானமா இருக்காது ஆனா கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ, இது உங்க ரெண்டு பேருக்கும் நல்லதுனு உனக்கு புரியும். அதாவது அவனோட கல்யாணம் இல்ல, நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு போறது தான் நல்லதுனு உனக்கு புரியும் “ என்று கேஷவ் தெளிவாக அவளிடம் கூறினான்.
“ என் வாழ்க்க என்ன ஆகும் ? “ என்று ரோஷினி அழ ஆரம்பித்தாள்.
“ இது உன்ன பாதிக்காதுனு நான் நினைக்கிறேன், ஏன்னா நீங்க ரெண்டு பேரும் நிச்சயதார்த்தம் பண்ண அப்புறம் ஒரு நாளும் ஒத்துப்போகல. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்ட போடுறது, பிரியுறது மறுபடியும் ஒன்னு சேர்றதுனு இருந்தீங்க. நீங்க எப்போவோ பிரிஞ்சி போய் இருக்கணும் “ என்று கேஷவ் அவளுக்கு பதில் சொன்னான்.
“ நான் எல்லாத்தையும் இழந்துட்டேன், இப்போ எனக்கு ஒரு வேலையும் இல்ல” என்று ரோஷினி சொல்ல, “ நீ எங்க விரும்புறியோ அங்க நான் உனக்கு வேலை ஏற்பாடு செய்றேன். கொஞ்சம் இடம் மாறி போ, நிச்சயமா உன் வாழ்க்க நல்லா இருக்கும் “ என்று கேஷவ் அவளை சமாதானம் செய்தான்.
“ நானும் நைனாவும், மாமா அப்புறம் அத்தைய சந்திக்க பெங்களூர் போறோம் “ என்று க்ரிஷ் கூறினான். பின்னர் அவன் மைராவைப் பார்த்து ஸாரி என்று வருத்தத்துடன் முணுமுணுத்தான், ஆனால் அவள் அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்.
“ நானும் அவங்களோட பெங்களூர் போறேன். நான் என் அப்பா, அம்மாவ சந்திக்கனும் “ என்று ரோஷினி சொன்னதும், “ நீ தனியா போ, நான் உனக்கு டிக்கெட் முன்பதிவு செய்றேன். ஆனா இனி அவங்க வாழ்க்கையில குறுக்கிடாத “ என்று கேஷவ் சொன்னதும், “ எனக்கு உத்தரவு போட நீங்க யாரு ? அவன் உங்க தம்பி அதனால உங்க முடிவுகள என் மேல திணிக்க நினைக்காதீங்க. உங்க மேல நான் கேஸ் போடுவேன் “ என்று ரோஷினி கேஷவை மிரட்டினாள்.
“ ஜாக்கிரதையா பேசு ரோஷினி. என் புருஷன நீ அவமதிக்குறத நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். உன்னோட எண்ணத்தால மட்டும் தான் இன்னைக்கு நீ எல்லாத்தையும் இழந்து இருக்க அதனால உன்ன தவிர வேற யாரையும் குறை சொல்றத நிறுத்து “ என்று மைரா அவளை எச்சரித்தாள்.
“ க்ரிஷ் தப்பு பண்ணிட்டதால நாங்க பொறுமையா இருக்கோம், உன் வலிய எங்களால புரிஞ்சுக்க முடியுது, ஆனா அதுக்காக நீ என் மகன அவமதிக்கலாம்னு அர்த்தம் இல்ல “ என்று மதனும் அவளை கண்டித்தார்.
“ ஆஹா, எனக்கு எதிரா ஒரு அழகான கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா ? “ என்று ரோஷினி ஏளனமாக சிரித்தாள்.
“ ரோஷினி, உன் ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. க்ரிஷ் போய் உன் சாமான்களை பேக் பண்ணிட்டு நேரத்துக்கு கிளம்பு “ என்று அர்ச்சனா சொன்னதும், “ நான் மைரா கூட பேசனும் “ என்றாள் நைனா.
**********************************************
முன்னோட்டம்:
“ நீ போய் தூங்கு, காலையில இத பத்தி யோசிப்போம். ஒரே விஷயத்தை திரும்ப, திரும்ப பேசுனா நமக்கு எந்த தீர்வும் கிடைக்காது “
