நைனாவின் விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கழிந்து போனது. அந்த விபத்துக்கு பிறகு க்ரிஷ் மற்றும் நைனாவின் உறவு முற்றிலும் மாறியது. க்ரிஷ் அவளது ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டான், அவள் மீது அதிக அன்பு செலுத்தினான். நைனாவின் விபத்துக்குப் பிறகு மைராவும் க்ரிஷும் பேசக் கொள்ள ஆரம்பித்தனர்.
இறுதியாக அவன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். மைராவுடன் அகாடமிக்கு செல்லும் போது நைனாவை ஒவ்வொரு மணி நேரமும் அழைத்து க்ரிஷ் நலம் விசாரித்தான்.
அகாடமியிலும், இரவில் க்ரிஷ் வேலையில் இருந்து தாமதமாக திரும்பிய போதும் மைரா நைனாவை கவனித்துக்கொண்டாள். கேஷவ் தனது வேலையிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் விடுவிக்கப்படுவான் என்று மைராவும், கேஷவும் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் அவர்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருந்தனர்.
கேஷவிடமிருந்து மைராவுக்கு அழைப்பு வந்த போது குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை காபியுடன் ஹாலில் இருந்தனர். அவள் உடனடியாக அழைப்பை துண்டித்து டிவியை ஆன் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள். காலையின் பிரேக்கிங் நியூஸைப் பார்த்து அவர்கள் பெருமூச்சு விட்டனர்.
“பெண் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்ட வெளியுறவு துறை அமைச்சருக்கு எதிரான ஆதாரங்கள் இன்று காலை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட சிறப்பு குழு வெற்றி பெற்று பாலியல் தொழிலாளர்களாக அனுப்பப்படவிருந்த 55 பெண் குழந்தைகளை காப்பாற்றியுள்ளது”
“ ஒரு மனுஷனால இப்படி செய்ய முடிஞ்சுது ? “ என்று மதன் அருவருப்புடன் சொல்ல, “ அவன் ஒரு மனுஷனே இல்ல “ என்றாள் மைரா.
“ இந்த நியூஸ் பார்க்க சொல்ல தான் கேஷவ் உனக்கு போன் பண்ணானா ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ ஆமா மா, கடந்த மூணு மாசமா கெட்சப் வேலை பண்ணிட்டு இருந்தது இந்த கேஸ் தான். அவரும் அவரோட குழுவும் இந்த மிருகத்த அரெஸ்ட் பண்ண தேவையான ஆதாரங்கள சேகரிச்சாங்க. இந்த கேஸ் முடிஞ்சதும் அவர் வேலை முடிஞ்சுடும். இன்னும் ஒரு வாரம் தான் அதுக்கு அப்புறம் அவர் நம்ம கூட வாழ நிரந்தரமாக திரும்பி வருவாரு “ என்று சந்தோஷமாக மைரா பதில் சொன்னாள்.
“ நான் அவன நெனச்சு ரொம்ப பெருமைப்படுறேன், ஆனா இந்த வேலையில இருக்கும் போது அவன் ஏன் அவனோட பெயர வெளிய சொல்லல ? “ என்று மதன் கேட்டார்.
“ அவர் வேலைய ராஜினாமா பண்ணி இருக்காரு அதனால அவர் பெயர் வெளிய தெரியுறத அவர் விரும்பல. அவர் டீம்ல இருக்க திறமையான, அவருக்கு அடுத்து இருக்கவர அவரோட பதவிக்கு பரிந்துரைச்சு இருக்காரு “ என்று மைரா சொன்னதை கேட்ட க்ரிஷ், “ அண்ணா ரொம்ப தனித்துவமான ஆளு. இத்தன வருஷம் ஆகியும் அவர என்னால புரிஞ்சிக்க முடியல “ என்று சொன்னான்.
“ அவர் ரொம்ப எளிமையான மனுஷன், எப்பவும் அவர விட மத்தவங்கள பத்தி தான் அதிகம் யோசிப்பாரு, உண்மையிலேயே ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆளு “ என்று மைரா புன்னகையோடு கூறினாள்.
“ ஓஹோ உன் ஹங்க் ஸ்பெஷல் ஆளு தான் ஆனா இப்போ போய் வசு அம்மா, ராஜன் அப்பா கிட்ட சொல்லு. மருமகன நெனச்சு பெருமைப்படுவாங்க “ என்று நைனா சொன்னதும், மைரா இந்த வழக்கைப் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவிக்க ஓடினாள். முழு குடும்பமும் அவனது வெற்றியைக் கொண்டாடியது மற்றும் காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்தனர்.
மருத்துவமனையில், ரோஷினி கேட்டின் கிரில்லைப் பிடித்துக் கொண்டு அஜய்யைத் தேட முயன்றாள். அவனது காலடி ஓசை கேட்டதும், துயரத்தில் இருப்பது போல முகத்தை வைத்து கொண்டு அவனை அழைத்தாள்.
“ ரோஷினி, என்ன ஆச்சு ? நீ ஏன் இப்படி பதற்றமா இருக்க ? “ என்று அஜய் அவளிடம் கேட்டான்.
“ அஜய், எனக்கு ஏதோ சரி இல்லாத மாதிரி இருக்கு. நேத்து நைட்டு என் அப்பாவுக்கு ஏதோ ஆகுற மாதிரி நான் ஒரு கெட்ட கனவு கண்டேன், அவர் ஏதோ பிரச்சனையில இருக்காரு இல்ல அவருக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் நான் நினைக்குறேன். எனக்கு பதட்டமா இருக்கு “ என்று ரோஷினி பதற்றத்துடன் அழுதாள்.
“ அது வெறும் கனவு ரோஷினி. உன் அப்பாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் அம்மா எனக்கு போன் பண்ணி இருப்பாங்க. நீ அவங்க கிட்ட பேசினதுல இருந்து என்னோட நம்பர் அவங்க கிட்ட இருக்கு “ என்று அஜய் அவளை சமாதானம் செய்தான் ஆனால் ரோஷினி மறுத்து தலையை ஆட்டினாள்.
“ இல்ல, அவங்க உனக்கு போன் பண்ண மாட்டாங்க, நான் அவங்கள உனக்கு போன் பண்ண கூடாதுனு கண்டிப்பா சொல்லி இருக்கேன். என்னால நீ பிரச்சனையில சிக்குறத நான் விரும்பல “ என்று ரோஷினி சொன்னதை கேட்டு, “ சரி கவலைப்படாத அவங்க கிட்ட ஒரு தடவை உன்ன பேச விடுறேன் “ என்று சொல்லி அஜய் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பக்கவாட்டில் திரும்பி கிரில் வழியாக கையை விட்டு மொபைலை அவளிடம் கொடுத்தான்.
“ சீக்கிரம் பேசு ரோஷினி. வெறும் ரெண்டு நிமிஷம் தான் அதுக்கு மேல கூடாது “ என்று அவன் சொன்னதும் ரோஷினி தனது தாயின் எண்ணை டயல் செய்தாள், அழைப்பு எடுக்கப்பட்டபோது அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள், எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து கன்னங்களில் கண்ணீருடன் மொபைலை திருப்பிக் கொடுத்தாள்.
“ எல்லாம் சரியா இருக்கா? “ என்று அஜய் கேட்டதும், “ அப்பா… அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கு. அவர் கவலைக்கிடமா இருக்குறதாவும், உயிர் பிழைக்குறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லி இருக்காரு “ என்று சொல்லி அவள் தரையில் சரிந்து முழங்கால்களில் முகம் புதைத்தாள். அவளைப் பார்த்ததும் வருத்தமடைந்த அஜய், அவளாகவே சரியாகிவிட வேண்டும் என்று அவளை தனியாக விட்டு சென்றான்.
அவன் திரும்பி வந்து பார்த்தபோது, ரோஷினி சேலையை பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். கேட்டைத் திறந்து அவளை இழுத்து அறைந்தான்.
“ உனக்கு பைத்தியமா? நல்ல மனநிலையில இருக்க யாராச்சும் இப்படி செய்வாங்களா ? வேற யாராவது உன்ன பார்த்திருந்தா என்ன செய்றது? “ என்று அஜய் கோவமாக கேட்க, “ அஜய், என் வாழ்க்கையில இவ்ளோ நடந்த அப்புறம் நான் உயிரோட இருக்கணும்னு நினைக்குறியா ? என் அப்பா, அம்மா அங்க தனியா கஷ்டப்படுறாங்க, என் அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்காரு. என் வாழ்க்கையில் எதுவுமே நடக்காத மாதிரி நான் வாழனும்னு நீ எப்படி எதிர்பார்க்குற ? “ என்று ரோஷினி கேட்டாள்.
அஜய் மின்விசிறியில் இருந்த சேலையை கழற்றி அவளை கட்டிலில் உட்கார வைத்து விட்டு அவளுக்கு தண்ணீர் ஊற்றினான்.
“ நான் என் அப்பாவ பார்க்கனும் அஜய். ஒரே ஒரு முறை பார்த்தா போதும். டாக்டர்கிட்ட பேசி அப்பாவ பார்க்க ஒரு நாள் மட்டும் என்னை அனுப்ப சொல்றியா ? நான் எந்த வம்பும் செய்யாம திரும்பி வருவேன், நான் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன். அப்பாவ ஒரு முறை பார்க்க ஆசையா இருக்கு அஜய். ப்ளீஸ் அஜய், உன்ன கெஞ்சி கேட்குறேன் “ என்று ரோஷினி அவனிடம் கெஞ்சினாள்.
“ சரி நான் அவர் கிட்ட பேசறேன் ஆனா நான் அவர் கிட்ட பேசிட்டு வர்ற வரைக்கும் நீ ஒன்னும் பண்ண மாட்டேன்னு சத்தியம் செய் “ என்று அஜய் கேட்க, “ நீ என்ன சொன்னாலும் செய்வேன், ஆனா என்ன எப்படியாவது ஒரு நாள் இங்க இருந்து கூட்டிட்டு போ. நான் என் அப்பாவ பார்த்துட்டு திரும்பி வந்துடுவேன் “ என்று ரோஷினி கெஞ்சியதும் அஜய் சரி என்று முணுமுணுத்தபடி அவளது செல்லை விட்டு வெளியே சென்று நர்ஸை சந்தித்தான்.
“ நர்ஸ், இங்க இருக்க நோயாளி எல்லாரும் அவங்க குடும்பத்த சந்திக்க அனுமதி கிடைக்குது. உண்மைய சொல்ல போனா, நோயாளிங்க ஒருத்தர ஒருத்தர் சந்திக்க கூட அனுமதி இருக்கு அப்போ ரோஷினிக்கு மட்டும் ஏன் எந்த அனுமதியும் கிடைக்குறது இல்ல ? “ என்று அஜய் கேட்டான்.
“ அவ சாதாரண நோயாளி இல்ல அஜய். அவள இங்க அனுப்பி இருக்கவரு அனுமதி கொடுக்காம அவள யாரையும் சந்திக்க நாங்க அனுமதிக்க முடியாது. அந்த ஆபீஸர் அவ மேல கருணை காட்டாத வர அவள எதையும் செய்யவோ இல்ல யாரையும் சந்திக்கவோ அவளுக்கு அனுமதி கிடைக்காது “ என்று நர்ஸ் கூறிவிட்டார்.
அஜய் புன்னகைத்தபடி ரோஷினியிடம் திரும்பினான், அவள் அவனைப் பார்த்ததும் அழுவது போல் நடித்தாள்.
“ டாக்டர் சம்மதம் சொல்லிட்டாரா ? நான் ஒரு நாள்ல திரும்பி வருவேன், நான் உனக்கு சத்தியம் செய்றேன் அஜய் “ என்று ரோஷினி சொல்ல, “ ரோஷினி, உன்ன அனுப்ப அந்த ஆள் அனுமதி கொடுத்தா தான் உன்ன அனுப்ப முடியும் சொல்றாங்க. “ என்று அஜய் சொன்னதும் ரோஷினி தரையில் விழுந்து கேட்டில் தலையை மோதி அழுதாள்.
“ என்ன ஏன் காப்பாத்துன அஜய்? “ என்று ரோஷினி கேட்டதும், “ நீ இங்க இருந்து போக நான் உதவி செய்றேன் ஆனா நீ ஒரு நாள்ல திரும்பி வரனும். என்னால ஒரு நாள் மட்டும் தான் சமாளிக்க முடியும் ரோஷினி “ என்றான் அஜய்.
அவன் சொன்னதை கேட்டு ரோஷினி மனதுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டைப் பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ சத்தியமா நான் திரும்பி வருவேன். நீ எனக்கு இருக்க ஒரே friend, நீ பிரச்சனையில சிக்குற மாதிரி நான் எதையும் செய்ய மாட்டேன். நான் சீக்கிரம் திரும்பி வருவேன் “ என்று ரோஷினி சொல்ல, “ இன்னைக்கு நைட்டு ரெடியா இரு. நான் உனக்கு உதவி செய்றேன் “ என்றான் அஜய்.
ரோஷினி சரி என்று சொன்னதும் அஜய் அங்கிருந்து கிளம்பினான். அஜய் போய்விட்டான் என்பதை உறுதி செய்து கொண்டவள், புன்னகையுடன் அறையைச் சுற்றி வந்தாள்.
“ ஒரு வழியா எனக்கு இன்னைக்கு சுதந்திரம் கிடைக்க போகுது. பாவம் கேஷவ், உன்னோட முயற்சி எல்லாம் வீணா போச்சு “ என்று மனதில் நினைத்தவள் இரவுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். அன்றிரவு சொன்னபடி அஜய் அவளது செல்லுக்கு வந்தான்.
“ இது என் யூனிபார்ம், தொப்பி. இந்த டிரஸ் போட்டு ரெடியா இரு. நான் வெளிய இருக்க செக்யூரிட்டி கிட்ட பேசி இருக்கேன். அவர் உன்ன வெளிய போக விடுவாரு. அது மட்டும் இல்ல, அந்த சட்ட பாக்கெட்டுல கொஞ்சம் பணம் இருக்கு, அத நீ போயிட்டு வர வெச்சுக்க “ என்று அஜய் அவளிடம் கூறினான்.
“ ரொம்ப நன்றி அஜய். அப்பாவ பார்த்துட்டு உடனே வருவேன். நீ ஜாக்கிரதையா இரு “ என்று ரோஷினி சொன்னதும், அஜய் அங்கிருந்து கிளம்ப, ரோஷினி அஜயின் சட்டை மற்றும் பேண்ட்டை மாற்றிக்கொண்டு காரிடரின் மூலையில் காத்திருப்பதைப் பார்த்தாள். வெளியே வாயிலை அடையும் வழியை அவளிடம் சொல்லி அவள் தூங்குவது போல் படுக்கையை போட்டு விட்டு செல்லை பூட்டிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றான்.
ரோஷினி வெளியே வாயிலில் இருந்த செக்யூரிட்டியை பார்த்ததும் அவர் அவளை வெளியே அனுப்ப, ரோஷினி வானத்தைப் பார்த்து புன்னகைத்தாள். ஒரு மணி நேரம் நடந்து ஒரு வழியாக ரயில் நிலையத்தை அடைந்து கடைசி ரயிலில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கினாள். கையில் இருந்த பணத்தில் உள்ளூர் கடை ஒன்றில் சாதாரண சல்வார் ஒன்றை வாங்கி ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் மாற்றிக் கொண்டாள். அங்கிருந்த முன்பின் தெரியாத நபரிடம் மொபைலை இரவல் வாங்கி தனது அம்மாவுக்கு போன் செய்து, சென்னை ரயில் நிலையத்தில் சந்திக்குமாறு கூறினாள். ரயிலில் அமர்ந்து அருகில் இருந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
ரயில் நகரத் தொடங்கியபோது அவள் ஒரு கப் டீ வாங்கி மெல்ல குடித்தாள். பின்னர் உறங்கிக் கொண்டிருந்தவள் அதிகாலையில் ஒரு சலசலப்பைக் கேட்டு எழுந்தாள். சக பயணியிடம் விசாரித்த போது, சென்னை போய்ச் சேர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து சென்னை சென்ற போது தனக்காக காத்திருந்த பெற்றோரை நோக்கி தேடினாள். அவர்கள் அவளை கட்டிப்பிடித்துக் கொள்ள ரோஷினி அவர்களை பார்த்து அழுதாள்.
“ மூணு மாசத்துக்கு அப்புறம் நாங்க உன்ன சந்திக்குறோம். நம்ம மூணு பேரையும் யாரும் அடையாளம் கண்டுப்புடிக்காத மாதிரி தூரமா ஏதாவது ஊருக்கு போவோம். கையில இருக்குற பணத்த வெச்சு புதுசா வாழ்க்க ஆரம்பிக்கலாம் “ என்று ரோஷினியின் அப்பா சொல்ல, “ இல்ல பா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. கையில இருக்க பணத்த வெச்சு ஒரு ரூம் புக் பண்ணுங்க. நான் முதல்ல குளிச்சு டிரஸ் மாத்தணும். நான் ஒரு முக்கியமான ஆள சந்திக்கணும் அதுக்கு அப்புறம் நீங்க சொல்ற இடத்துக்கு நாம போகலாம் “ என்றாள் ரோஷினி.
“ ரோஷினி, தயவு செஞ்சு க்ரிஷ் இல்ல அவன் குடும்பத்துக்கு எதுவும் செய்ய வேணாம். உன்ன மறுபடியும் நாங்க இழக்க விரும்பல “ என்று ரோஷினியின் அம்மா சொன்னதை கேட்டு, அம்மா, நான் இந்த நாளுக்காக மூணு மாசமா வெயிட் பண்ணி இருக்கோம். அந்த அஜய் என் வார்த்தைய நம்ப வைக்க நான் அவ்ளோ நடிக்க வேண்டி இருந்துச்சு. அஜய் மொபைல் மூலமா உனக்கு போன் அப்போவே உனக்கு நான் என் பிளான் பத்தி சொல்லிட்டேன். அப்புறம் என்ன ? “ என்று ரோஷினி கேட்டாள்.
“ அவன் உனக்கு உதவி செய்வான்னு எப்படி உறுதியா நம்பின ? இப்போ அவனுக்கு என்ன ஆகும் ? “ என்று ரோஷினியின் அம்மா கேட்டதும், “ அவன என் வலையில இழுக்க நான் சரியா காய் நகர்த்தினேன். அவனுக்கு என்ன ஆனா எனக்கு என்ன ? அது என் பிரச்சன இல்ல, அவன் வேலைய அவன் ஒழுங்கா பண்ணி இருக்கணும் “ என்று ரோஷினி ஏளனமாய் சொன்னாள்.
அவர்கள் ஒரு வாடகை கார் புக் செய்து ஒரு ஹோட்டலை அடைந்து பணத்துடன் ஒரு அறையை முன்பதிவு செய்தனர். ரோஷினி குளித்து தனது வழக்கமான ஆடைகளை அணிந்தாள். அவளுக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் ஆர்டர் செய்து அவள் விருப்பப்படி சாப்பிட்டாள்.
“ நீங்க ரெண்டு பேரும் இந்த ரூம் விட்டு வெளிய வராதீங்க. சாயங்காலம் நான் திரும்பி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க. நான் வந்ததும் நாம ஒன்னா எதிர்காலத்த பத்தி பிளான் பண்ணுவோம் “ என்று சொல்லிவிட்டு ரோஷினி ஒரு மாஸ்க் அணிந்து அறையை விட்டு வெளியேறினாள். அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி மைராவின் அகாடமிக்கு சில கட்டிடங்கள் தள்ளி நின்றாள்.
வீட்டில் மைரா தயாராகி சமையலறையை அடைந்து அர்ச்சனாவுக்கு சமையலில் உதவி செய்து டைனிங் டேபிளில் பாத்திரங்களை வைத்தாள். க்ரிஷும் நைனாவும் காலை உணவை சாப்பிட உட்கார்ந்ததும் மைரா தனக்கு பரிமாறுவதற்கு முன்பு முதலில் பரிமாறினாள்.
“ மைரா நீ வீட்ல இருக்க வேண்டியது தானே. நாம் நாளை அகாடமிக்கு போகலாமே ? “ என்று நைனா சொன்னதும், “ இல்ல நைனா, இன்னும் கொஞ்ச நாள்ல் ஸ்கூல் லீவ் விட்ருவாங்க அப்புறம் அட்மிஷன் கேட்டு நிறைய போன் வரும் அதனால நாம தவறாம தினமும் அகாடமி போகணும். நான் பார்த்துக்குறேன், நீ ஹாஸ்பிடலுக்கு செக்கப் போ. நீ வீட்டுக்கு திரும்பி வந்ததும் எனக்கு போன் பண்ணு “ என்று மைரா பதில் சொன்னாள்.
“ செக் அப் அப்புறம் நான் நைனாவ அகாடமியில இறக்கிவிடுறேன் மைரா. நீ ரெண்டு பேரும் ஒன்னா வீட்டுக்கு வந்துடுங்க “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு, “ இல்ல க்ரிஷ், நைனா ரெஸ்ட் எடுக்கட்டும். நான் சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு வரேன் “ என்று சொல்லிவிட்டு மைரா அறைக்குத் திரும்பி சென்று தன் பையை எடுத்துக்கொண்டு கேஷவின் நம்பருக்கு டயல் செய்தாள்.
“ கெட்சப் எப்படி இருக்கீங்க? “ என்று மைரா கேட்டதும், “ ஏதோ சரியில்ல, இன்னைக்கு எனக்கு வேலை செய்ய மனசு இல்ல. நீ வீட்ல இருந்தா நாள் முழுக்க என் கூட பேசினா நல்லா இருக்கும். என் வேலைய வருண் கிட்ட சொல்லி செய்ய சொல்லிடுறேன், தேவைப்படும் போது மட்டும் நான் போய் பார்த்துக்குறேன் “ என்று கேஷவ் சொன்னான்.
“ யோசனை நல்லா தான் இருக்கு ஆனா நான் அகாடமி போன அப்புறம் நாம தொடர்ந்து அரட்டை அடிப்போம் ? யாராச்சும் வந்தா மட்டும் நாம பேசுறத நிறுத்துவோம். இது நல்லா இருக்கா ? “ என்று மைரா அவனை கேட்டாள்.
“ சரி அம்மு. கவனமா கார் ஓட்டு, நீ அகாடமியில காலடி எடுத்து வெச்ச உடனே எனக்கு போன் பண்ணு “ என்று கேஷவ் சொல்ல, “ சரிங்க பாஸ் “ என்று சொன்னாள் மைரா.
“ ரொமான்டிக்கா இல்லையே, டாடி சொல்லு எப்படி இருக்கு பார்க்கலாம் “ என்று கேஷவ் சொல்ல, “ அய்யய்ய, சீசீ “ என்று மைரா முகம் சுளித்தாள்.
“ ஐ லவ் யூ மைரா “ என்று கேஷவ் சிரித்துக் கொண்டே சொல்ல, “ ஐ லவ் யூ மிஸ்டர் “ என்று சொல்லி அவள் அழைப்பை துண்டித்து அகாடமிக்கு சென்றாள். காரை நிறுத்திவிட்டு செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்லிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்து அவள் தனது அலுவலக அறைக்குச் சென்றாள். மைரா அகாடமிக்குள் நுழைவதைக் கவனித்த ரோஷினி வளாகத்திற்குள் நுழைந்தாள் ஆனால் செக்யூரிட்டி உடனே அவள தடுத்து நிறுத்தினார்.
“ மேடம், நீங்க இங்க எதுக்கு வந்துருக்கீங்க ? மியூசிக் கிளாஸ் இல்ல கிளை ஆரம்பிக்க விசாரிக்க வந்துருக்கீங்களா ? “ என்று செக்யூரிட்டி கேட்க, “ என் பையனுக்கு மியூசிக் கிளாஸ் பத்தி விசாரிக்க வந்தேன் “ என்று ரோஷினி கூறினாள்.
“ ரெஜிஸ்டர்ல உங்க விவரங்கள் அப்புறம் மொபைல் நம்பர் எழுதுங்க “ என்று செக்யூரிட்டி சொல்ல, ரோஷினி ஒரு போலி பெயர் மற்றும் மொபைல் எண்ணை எழுதிவிட்டு உள்ளே செல்ல முற்பட்டாள் ஆனால் செக்யூரிட்டி மீண்டும் அவளை தடுத்தார்.
“ மேடம், ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. மைரா மேடம் இப்ப தான் வந்துருக்காங்க, உங்கள உள்ளே விடலாமான்னு அவங்க கிட்ட விசாரிச்சுக்கறேன் “ என்று செக்யூரிட்டி சொல்ல, ரோஷினி தலையை ஆட்டினாள். செக்யூரிட்டி மைராவின் எண்ணை அழைத்து ரோஷினியை உள்ளே அனுமதிப்பதற்கு முன்பு அவளுடன் உறுதிப்படுத்தினார்.
காலடி ஓசை கேட்டு உள்ளே வந்த நபரைப் பார்த்த மைரா அதிர்ச்சியில் மூச்சிரைத்தாள். அவள் தனது இருக்கையிலிருந்து விரைந்தாள், ஆனால் அந்த நபர் மைராவை இழுத்து உள்ளங்கையால் வாயை மூடினார். கதவு பலத்த சத்தத்துடன் மூடப்பட்டதும் மைரா அவர் பிடியிலிருந்து வெளியேற நெளிந்தாள்.
“ மைரா பேபி, நான் திரும்பி வந்துட்டேன் “ என்று ரோஷினியின் குரல் கேட்டு, மைரா விழுங்கினாள், கண்கள் அகலத் திறந்தன.
********************************
முன்னோட்டம்:
“ அந்த இடத்த பாதுக்காக்குறது தான் உன் வேலை ஆனா நீ என்ன பண்ண ? இந்த பிச்சக்காரி வடிச்ச முதல கண்ணீர பார்த்துட்டு நீ அவ வலையில விழுந்து அவள வெளிய தப்பிக்க விட்டு இருக்க. அவ என்ன பண்ணா கேட்டியா ? இனி எல்லா குற்றத்துக்கும் அவளுக்கு நீ உடந்தையா இருந்தனு உன் மேல கேஸ் போடுவேன் “
