Home Family96. குழந்த உதைக்குறா

96. குழந்த உதைக்குறா

by Siragugal Novels
2 views

மருத்துவரை சந்திக்க இருவரும் தயாரானதும், கேஷவ் மைராவுக்கு அவசர அவசரமாக காலை உணவைத் தயாரித்து அவளுக்கு ஊட்டினான். இருவரும் கைகோர்த்து வீட்டை விட்டு புறப்பட்டதும், கேஷவ் முதலில் மைராவுக்கு கார் கதவை திறந்து பின்னர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தான்.

“ நாம பார்க்க போற டாக்டர், அசிஸ்டென்ட் கமிஷனரோட மனைவி. அவர எனக்கு நல்லா தெரியும். அவங்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்க நேத்து நைட்டு அவருக்கு போன் பண்ணி பேசினேன். நீ டென்ஷன் இல்லாம இருக்கலாம், அவங்க உன்னையும், நம்ம குழந்தையையும் நல்லா பார்த்துக்குவாங்க “ என்று கேஷவ் அவளுக்கு நம்பிக்கையளித்தான்.

அவர்கள் மருத்துவமனையை அடைந்ததும் நேரடியாக மருத்துவரின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கேஷவ் மைராவை மருத்துவரிடம் அறிமுகப்படுத்தி, அவர்கள் வீட்டில் செய்த எச்பிடி(HPT) சோதனை பற்றி தெரிவித்தான். அதே பரிசோதனை மீண்டும் செய்யவும், அதோடு சேர்த்து இரத்த பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைத்தார். மைரா தனது மாதிரிகளை பரிசோதனைக்கு வழங்கிய பின்னர் தம்பதியினர் முடிவுகளுக்காக காத்திருந்தனர். 30 நிமிடங்கள் கழித்து நர்ஸ் கேஷவ் மற்றும் மைராவை மருத்துவரின் அறைக்கு அழைத்தார்.

“ வாழ்த்துக்கள் மிஸ்டர், மிசஸ் கேஷவ். மைரா கர்ப்பமா இருக்காங்க. கர்ப்பமா இருக்குற ஆரம்ப காலத்துல நாம ஸ்கேன் செய்ய வேண்டியதில்ல. நான் உங்களுக்கு வைட்டமின் பரிந்துரை செய்றேன், அத தவறாம சாப்பிடுங்க. நீங்க அடுத்து எப்போ வரணும்னு நர்ஸ் உங்களுக்கு சொல்லுவாங்க. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இல்ல அசௌகரியம் இருந்தா எப்போ வேணும்னாலும் எனக்கு போன் பண்ணுங்க “ என்று மகப்பேறு மருத்துவர் சொன்னதும், “ ரொம்ப நன்றி டாக்டர் “ என்று மகிழ்ச்ச்யோடு சொல்லிவிட்டு, கேஷவ் மைராவை அறையை விட்டு வெளியேற உதவினான். நர்ஸ் அனைத்து வைட்டமின் மாத்திரைகளுடன் திரும்பும் வரை அவர்கள் காத்திருந்தனர். இருவரும் அந்த செவிலியருக்கு நன்றி கூறி காரில் ஏறினார்கள்.

“ வீட்டுக்குப் போய் முதல்ல நம்ம குடும்பத்துக்கு சொல்லுவோம் ஆனா நேரடியா சொல்லக் கூடாது, ஏதாவது விசேஷமா பிளான் பண்ணி அவங்களுக்கு தெரியப்படுத்தணும் “ என்று மைரா சொன்னதை கேட்டு சிறிது நேரம் யோசித்த கேஷவ், ராஜனை அழைத்து வசுந்தராவுடன் மதன் வீட்டிற்கு வருமாறு கூறினான்.

கேஷவ் தனது திட்டத்தை மைராவிடம் கூறிவிட்டு ஒரு மாலுக்கு அவளை அழைத்து சென்றான். ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். ஒன்றாக அழைக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய குடும்பத்தினர் ஆர்வமாக இருந்தனர்.

கேஷவும், மைராவும் வீட்டிற்குள் நுழைய, மொத்த குடும்பமும் அவர்களைப் பார்த்தது. கேஷவ் அனைவருக்கும் ஒரு ஷாப்பிங் பையை கொடுத்து அவர்கள் அதை திறக்கும் வரை காத்திருந்தான். 

அனைவரின் பையிலும் ஒரு டி ஷர்ட் இருந்தது.

அர்ச்சனா வைத்திருந்த டி ஷர்ட்டில் ” ஹலோ பாட்டி “ என்று எழுதப்பட்டிருந்தது. மதன் அவரின் டி ஷர்ட்டை பிரித்து பார்த்து அதில், “ ஹலோ தாத்தா ” என்று பிரிண்ட் செய்திருந்ததை காட்டினார்.

“ இதுல என்ன இருக்கு? இது தான் நம்ம எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே அப்புறம் என்ன ? “ என்று சொன்ன அர்ச்சனா, வசுந்தரா மற்றும் ராஜன் கையில் இருந்த டி ஷர்ட்டையும், கண்களில் இருந்த கண்ணீரையும் பார்த்து சட்டென்று பேசுவதை நிறுத்தினார். நைனா மற்றும் க்ரிஷும் அவர்களை போல அதே எதிர்வினையாற்றினார்கள்.

“ என்ன ஆச்சு ? “ என்று அர்ச்சனா குழப்பத்துடன் கேட்டதும், தன் கையில் இருந்த டி ஷர்ட்டில் “ ஹலோ பாட்டி “ என்று ப்ரிண்டிங் செய்யப்பட்டிருந்ததை வசுந்தரா எல்லோரிடமும் காட்டினார். நைனா தன் டி-ஷர்ட்டில், ‘ ஹலோ சித்தி ‘ என்று ப்ரிண்டிங் செய்யப்பட்டிருந்ததை காட்டினாள்.

அர்ச்சனாவும் மதனும் வியப்பில் வாயைப் பிளக்க, வசுந்தராவும் ராஜனும் மைராவை கட்டிப்பிடித்து அவள் தோளில் சாய்ந்து அழுதனர்.

“ என் குழந்தைக்கு குழந்தை பிறக்க போகுது “ என்று வசுந்தரா சொன்னதும் அனைவரும் மாறி மாறி கேஷவ் மற்றும் மைராவை வாழ்த்தினர்.

அர்ச்சனா அன்றைய தினத்தை கொண்டாட சிறப்பு உணவு மற்றும் இனிப்பு சமைத்தார். கொண்டாட்டத்திற்கு பிறகு கேஷவும் மைராவும் வீடு திரும்பினர். அவன் அவளை தங்கள் அறைக்கு தூக்கி சென்றான்.

“ நீ வெயிட் எதுவும் தூக்கக் கூடாது, படிக்கட்டு ஏற கூடாது, இனி வீட்ல வேலை எதுவும் செய்ய கூடாது. இன்னும் கொஞ்ச மாசம் நீ நல்லா ரெஸ்ட் எடுக்கனும். அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்ய ஆரம்பிக்கலாம் “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க வழக்கமா புருஷனுங்க அவங்க பொண்டாட்டிக்கு செய்ற மாதிரி என்ன எதையும் செய்ய விடாம, எனக்கு புடிச்சத சாப்பிட விடாம தடுப்பீங்களா ? “ என்று கேட்டாள் மைரா.

“ இல்ல அம்மு, நீ என்ன சாப்பிட ஆசைப்பட்டாலும் நான் ஒருநாளும் அத தடுக்க மாட்டேன், உண்மைய சொல்ல போனா நீ என்ன கேட்டாலும் நான் சமைப்பேன். உன்ன வேலை செய்ய கூட விடுவேன் ஆனா நீ அதிகமா சோர்வாகாம செய்யலாம் “ என்று கேஷவ் அவகளுக்கு பதில் சொன்னதும் மைரா அவன் கன்னத்தைக் கிள்ளினாள். அவர்கள் தங்கள் அறையில் இருந்த மாதாந்திர காலண்டரில் தேதியைக் குறித்துக் கொண்டனர்.

ஒரு மாதம் கழிந்து போனது. கேஷவ் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

கேஷவ் மைராவின் தலையைப் பிடித்துக் கொண்டிருக்க அவள் வாந்தி எடுத்தபடி பாத்ரூம் தரையில் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள். கேஷவ் டாய்லெட்டை ஃப்ளஷ் செய்து மைராவை அழைத்துச் சென்று முகம் கழுவியதும் மைரா கேஷவின் தோளில் சாய்ந்தாள்.

“ நான் மத்தவங்க மாதிரி இல்ல, இந்த வாந்தி, தலைசுற்றல் எதுவும் இருக்காதுனு நெனச்சேன். கடவுளே, நான் எவ்ளோ பெரிய முட்டாள்.  கெட்சப் இதெல்லாம் எப்போ நிறுத்தும்? “ என்று மைரா களைப்பாக கேட்டதும், “ டாக்டர் கிட்ட பேசி வாந்தி குறைக்க மருந்து கேட்குறேன் “ என்று சொல்லிவிட்டு அவளை மீண்டும் அறைக்கு அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தினான். மைரா தூங்க ஆரம்பித்ததும் அவன் அவளுக்கு காலை உணவைத் தயாரித்தான். மைரா கண்விழித்துப் பார்த்த போது கேஷவ் அவள் பக்கத்தில் காத்திருந்தான். அவளை உட்கார வைத்து கொஞ்சம் கொஞ்சமாக உணவை ஊட்ட ஆரம்பித்தான்.

நாட்கள் வேகமாக ஓடியது தற்போது மைரா மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்தாள்.

இரவு 10 மணிக்கு கேஷவ் மற்றும் மைரா மருத்துவமனைக்கு சென்றனர். அவன் மைராவின் மருத்துவ file எடுத்துக் கொண்டு அவள் கையை பிடித்துக் கொள்ள இருவரும் லிஃப்டுக்குள் நுழைந்தனர்.

“ நாம ஏன் இந்த நேரத்துல இங்க வந்துருக்கோம் கெட்சப் ? டாக்டர் நைட்டு 9 மணி வரை மட்டும் தான் வேலை செய்வாங்கனு போர்டு இருக்கு “ என்று மைரா குழப்பத்தோடு சொன்னாள்.

“ நான் ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன் அதனால நாம இப்போ இந்த நேரத்துல வந்துருக்கோம். பொதுவா ஸ்கேன் எடுக்கும் போது கூட யாரையும் அனுமதிக்க மாட்டாங்க ஆனா எனக்கு உன் கூட இருக்கணும் அதனால நான் டாக்டர் கிட்ட ஸ்பெஷலா அனுமதி கேட்டேன். அவங்க நம்ம ரெண்டு பேரையும் இந்த நேரம் வர சொன்னாங்க “ என்று கேஷவ் அவளுக்கு பதில் சொன்னான்.

முதல் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது கேஷவ் தன்னுடன் இருப்பதில் மைரா உற்சாகமாக உணர்ந்தாள். நர்ஸ் மைராவையும் கேஷவையும் அறைக்குள் அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். கேஷவ் அவளைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்து அவள் ஆடையை சுருட்ட, நர்ஸ் அவளை ஒரு போர்வையால் மூடினார். டாக்டர் தம்பதியினரை வரவேற்று உள்ளே நுழைய, டாக்டர் தயாரான போது மைரா கேஷவின் கையைப் பிடித்தாள்.

டாக்டர் அவளது அடிவயிற்றில் ஜெல்லை அழுத்திய போது மைரா தனது கால் விரல்களை சுருட்டி, கேஷவின் கை விரல்களுடன் தன் விரல்களை இணைத்தாள். மைரா தலையை சாய்த்து மானிட்டரைப் பார்த்தாள்.

“ குழந்த நல்லா ஆரோக்கியமா, சரியான வளர்ச்சியோட இருக்கு. அம்மா, குழந்தையும் நல்லா பாத்துக்குறீங்க, இது அதுக்கான நல்ல அறிகுறி. இப்போ சந்தோஷமா இருங்க “ என்று டாக்டர் சொல்ல அவர் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிவதற்குள், அந்த அறையில் இதயத்துடிப்பு எதிரொலிக்கும் சத்தம் கேட்டது. மைராவும் கேஷவும் கண்களை மூடி அந்தத் தருணத்தை ரசித்தனர்.

“ டாக்டர் ஒரு ரெண்டு நொடி கண்கள மூடுங்க ப்ளீஸ் “ என்று கேஷவ் கேஷவ் கேட்டதும், டாக்டர் கண்களை மூட, கேஷவ் மைராவின் உதட்டில் வேகமாக ஒரு முத்தம் கொடுத்தான். டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே மொபைலை எடுத்து குழந்தையின் இதயத்துடிப்பை பதிவு செய்தான்.

“ ஏற்கனவே கொடுத்த மாத்திரை எல்லாம் தொடர்ந்து சாப்பிடுங்க, நிறைய ஆரோக்கியமான உணவு, நல்ல நடைப்பயிற்சி இதையெல்லாம் செய்யணும் “ என்று டாக்டர் சொன்னதும், கேஷவ் மற்றும் மைரா டாக்டருக்கு நன்றி தெரிவித்தனர், அவன் மைராவின் அடிவயிற்றில் இருந்து ஜெல்லை சுத்தம் செய்து அவளை அறையை விட்டு வெளியே அழைத்து சென்றான். அவர்கள் காரில் ஏறியதும் கேஷவ் அவளை முத்தமிட ஆரம்பித்தான்.

“ என் வாழ்க்கைய ஒரு அழகான வானவில் மாதிரி வண்ணம் தீட்டி இருக்க அம்மு. உன் கூட இந்த மாதிரி நான் அனுபவிக்குற ஒவ்வொரு ஸ்பெஷல் தருணமும் எனக்கு ஒவ்வொரு நாளும் புத்தம் புதுசா இருக்கு “ என்று கேஷவ் சொல்ல, “ ஐ லவ் யூ கெட்சப் “ என்று புன்னகையோடு சொன்னாள் மைரா.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதும் மைரா கேஷவின் காலரைப் பிடித்து இழுத்து, “ எனக்கு பாஸ்தா வேணும் “ என்று சொன்னாள்.

கேஷவ் புன்னகைத்தபடி சமையலறைக்குள் நுழைந்து அவள் விரும்பியது போல பாஸ்தா சமைத்தாள்.

மைரா ஐந்து மாதம் கர்ப்பமா இருந்த போது நைனா 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். முந்தைய நாள் இரவு அகாடமியில் இருந்து மைராவை விட்டு பிரிந்த பிறகு நைனா அவள் நினைவாக இருந்ததால் க்ரிஷ் அவளை மைராவின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

கேஷவ் மைராவுக்கும் நைனாவுக்கும் இரண்டு தட்டு பானி பூரியுடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தான். சூப்பர் மார்க்கெட்டிலிருந்து திரும்பிய க்ரிஷ் பையை மைரா மற்றும் நைனா முன் டீப்பாயில் வைத்தான்.

“ உங்களுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம், சிப்ஸ் இரண்டையும் வாங்கிட்டு வந்துருக்கேன். குறைந்த பட்சம் மதியம் லஞ்ச் சாப்பிட்ட அப்புறம் இல்ல சாயங்காலம் சாப்பிடுநக. ப்ளீஸ் உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ அவங்க இப்போ கொஞ்சம் சாப்பிடட்டும், சாயங்காலம் கொஞ்சம் சாப்பிடட்டும் “ என்று கேஷவ் கூறினான்.

மைரா உடனே கேஷவின் கன்னத்தை கிள்ளி ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தாள், நைனா கையில் ஐஸ்கிரீமை வைத்துக் கொண்டு  க்ரிஷை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலையில் க்ரிஷும், நைனாவும் அங்கிருந்து கிளம்ப, கேஷவ், மைரா ஷிஷிமாருவை அருகிலுள்ள பூங்காவிற்கு வாக்கிங்  அழைத்துச் சென்றனர். மைரா கயிற்றைப் பிடிக்க முயன்றாள், ஆனால் கேஷவ் அவளைத் தடுத்தான். மைரா நடக்க மறுத்து அங்கேயே நிற்க, கேஷவ் அவள் இடுப்பைச் சுற்றி தன் கையைப் வளைத்தான்.

“ அம்மு, உன் நல்லதுக்காக தான் கயிற உன்கிட்ட கொடுக்கல. ஷிஷிமாரு அவன் கேர்ள்பிரண்ட் பார்த்த உடனே சந்தோஷத்துல திடீர்னு நம்ம பிடியில இருந்து ஓட முயற்சி செய்வான். அவன் அப்படி திடீர்னு இழுத்தா நீ பயந்துடுவ. இப்போ சொல்லு, அது உனக்கு நல்லதா இருக்குமா? “ என்று கேஷவ் கேட்க, “ அவன் கேர்ள்பிரண்ட் வந்துட்டா “ என்றான் மைரா.

கேஷவ் திரும்பிப் பார்த்த போது ஒரு மனிதன் தனது செல்லப்பிராணியுடன் நடந்து வருவதை கண்டு கேஷவ் கயிற்றைப் இறுக பிடித்துக் கொண்டான், ஆனால் ஷிஷிமாரு குரைக்கத் தொடங்கி அந்த செல்லப்பிராணியிடம் செல்ல குதிக்கத் தொடங்கினான்.

“ பாரு கேர்ள்பிரண்ட் கிட்ட போக எவ்ளோ ஆர்வமா இருக்கான். நீ இவன புடிக்க முடியும்னு நினைக்குற ? இவன் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டான் அதனால அந்த மனுஷன் கிட்ட பேசி ஷிஷிமாருவுக்கு அவன் லவர் கூட சந்திச்சு விளையாட ஏற்பாடு செய்யணும் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா சிரிக்க ஆரம்பித்தாள். அவள் கிண்டல் செய்து சிரிப்பதை பார்த்து கேஷவ் அவள் கன்னத்தை கிள்ளினான். அவன் அவளது வயிற்றை தொட்டதும் குழந்தை முதல் முறையாக உதைப்பதை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ குழந்த உதைக்குறா “ என்று சொல்லி கேஷவ் அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டு மீண்டும் ஒரு உதையை உணர்ந்தான். முதல் உதையை விட இந்த முறை உதை வலுவாக இருந்ததால் மைரா மூச்சிரைத்தாள்.

“ என் வாழ்க்கையோட இத்தன அழகான தருணங்கள மிஸ் பண்ணிட்டு, உன்னையும் இங்க தனியா விட்டு என்னால டெல்லியில சந்தோஷமா வேலை பண்ணி இருக்க முடியும்னு நினைக்குறியா ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்க, மைரா சிரித்தபடி அவன் தலைமுடியைக் கோதினாள். இருவரும் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு பின்னர் வீடு திரும்பினர்.

*********************************************

முன்னோட்டம்:

“ நம்ம பொண்ணு உன்ன மாதிரி ரொம்ப அழகா இருக்கா. நம்ம ரெண்டு பேரையும் நிச்சயம் அவ சுண்டு விரலால ஆட்டி வைக்க போறா. ஐ லவ் யூ அம்மு. நீ நம்ம வாழ்க்கைய ரொம்ப அழகா மாத்தி இருக்க “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!