Home FamilyChapter 2

Chapter 2

by Siragugal Novels
25 views

சஞ்சனாவை பார்த்தப் பின் ஆர்யன் அலுவலகம் புறப்பட தயாரானான். அன்று காலை தாமதமாக எழுந்த சஞ்சனாவின் உடல் முழுவதும் வலித்தது. மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூமுக்குள் சென்ற சஞ்சனா அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை வெறித்துப் பார்த்தாள்.

தன் உடலில் இருந்த தழும்புகளைக் கண்டதும் அவளுக்கு ஒரு நொடி மூச்சு திணறுவது போல இருந்தது. அவள் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களை கழுவியது. உடலிலும், மனத்திலும் இருந்த வலியை விழுங்கியவள், ஷவரில் நின்று வெதுவெதுப்பான நீரை தன் மீது படரவிட்டு, தன் துயரத்தைக் கழுவினாள்.

நீண்ட நேர குளியலுக்கு பின் அங்கி அணிந்து கொண்டு வெளியே வந்தவள் அலமாரி இருந்த அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு அறைக்கு திரும்பினாள்.  தண்ணீர் எடுக்க மேஜையை நோக்கித் திரும்பினாள் அப்போது மேஜை மேல் ஒரு சிறிய கவர் இருப்பதை பார்த்தாள். ஆர்வத்துடன் அந்த கவரை கையில் எடுத்து அதை திறந்து பார்த்தாள். அதில் மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றும், அதோடு சில வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதையும் பார்த்தாள்.

மடித்து வைக்கப்படிருந்த காகிதத்தை திறந்ததும், “ SORRY “ என்று கையால் எழுதி வைத்திருந்ததை பார்த்தாள்.

ஆர்யன் தான் அதை வைத்திருப்பான் என்பதை உணர்ந்து அவள் தாடையைக் கடித்துக் கொண்டு, அந்த காகிதத்தைக் கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தாள். உடலில் வலி இருந்ததால் வேறு வழி இல்லாமல் மாத்திரையை ஒரு மிடறு தண்ணீருடன் எடுத்துக் கொண்டாள். பின்னர் வழக்கம் போல அவள் பால்கனியை நோக்கி சென்று ஆர்யனின் கார் இருக்கிறதா என்று பார்த்தாள். ஆர்யனின் கார் கிளம்பிவிட்டது என்பதை பார்த்த பிறகு அவள் உதடுகளில் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. அவன் அலுவலகம் போய்விட்டான் என்பது உறுதியானதும், அவள் படிக்கட்டுகளில் இறங்கி டைனிங் ஹாலை நோக்கிச் சென்றாள்.

சஞ்சனா வருவதை பார்த்ததும் கௌசல்யா புன்னகைத்தார். ” வா சஞ்சனா மா, வந்து உட்காரு. நான் உனக்கு ப்ரேக்பாஸ்ட் கொண்டு வரேன் “ என்று சொன்னதும் சஞ்சனா லேசாக தலையாட்டி, “ ஹ்ம்ம், சரி மா “ என்று பதில் சொன்னாள்.

கௌசல்யா சஞ்சனாவுக்கு அருகில் நின்று அவள் தலையை அன்பாக தொட்டார்.   

” நான் உன்ன எழுப்ப வரலாம்னு இருந்தேன், ஆனா சார் தான் வேணாம்னு சொல்லி என்ன தடுத்து நிறுத்திட்டாரு, உன்ன தொந்தரவு செய்ய வேணாம்னு சொல்லி, நீயா எழுந்துக்குற வர உன்ன தூங்க விட சொன்னாரு “ என்று சொல்லிக் கொண்டிருந்த  கௌசல்யாவின் கண்கள் சஞ்சனாவின் கழுத்து மற்றும் முகம் மேல் விழுந்தது. உடனே அவரது முகபாவம் கவலையாக மாறியது.

“என்ன நடந்துச்சு  சஞ்சனா ? உன் கழுத்துல ஏன் இவ்ளோ தழும்பு இருக்கு ? ” “ என்று கௌசல்யா கவலையுடன் கேட்டதும், சஞ்சனா விறைத்துப் போனாள்.

” அதெல்லாம் ஒண்ணுமில்ல மா, விடுங்க “, என்று சொல்லி தன் கையை கொண்டு தழும்புகளை மறைக்க முயன்றாள்.

“சார் உன்னை ஏதாவது செய்தாரா சஞ்சு ?”, என்று கௌசல்யா தயங்கியபடி கேட்டார் அதற்கு சஞ்சனா உடனே தலையை மறுத்து அசைத்து, “ நீங்க நினைகுற மாதிரி எதுவும் நடக்கல மா. எனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க மா, எனக்கு ரொம்ப பசியா இருக்கு “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட பிறகு கௌசல்யா அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை.  அதற்கு பதிலாக, சஞ்சுவின்  தலைமுடியை மெதுவாக வருடினார்.

சஞ்சனா தன் கண்ணீரை அடக்கி கொண்டு அமைதியாய் இருந்தாள். கௌசல்யா ஒரு வார்த்தை கூட பேசாமல் அவளுக்கு உணவை பரிமாற, சஞ்சு மௌனமாக சாப்பிட்டாள்.  அவள் மனம் பல எண்ணங்களால் சூழ்ந்து நிம்மதி இல்லாமல் இருந்தது.

இதற்கிடையில், ஆர்யனின் பிசினஸ் சாம்ராஜ்யத்தின் மையமாக விளங்கிய ARC டவர்ஸிக்கு வருகை தந்த ஆர்யன் பதற்றமான முகபாவத்துடன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்தான். ஏற்கனவே ஒருவரும் அவன் முன் செல்ல பயப்படும் நிலையல் தற்போது அவனை பார்த்த அனைவரும் அவன் மோசமான மனநிலையில் இருக்கிறான் என்று நன்கு புரிந்து கொண்டனர்.

ஆர்யனின் PA வும், பர்சனல் பாடிகார்ட்டுமான ரஞ்சித் அவன் பின்னாலேயே நடந்து சென்றான். அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் 45 வது மாடியில் இருந்த தனது அறைக்குள் ஆர்யன் நுழைந்தான். அந்த தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த தளத்திருக்கு அதிக கட்டுப்பாடுகள் இருந்தது.

தனது பெரிய இருக்கையில் தலையை பின்னால் சாய்த்து, கண்களை மூடி அமர்ந்த ஆர்யன், ” இன்னைக்கு எனக்கு இருக்க மீட்டிங் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடு, யாரும் என்ன தொந்தரவு செய்ய கூடாது, நான் தனியா இருக்க விரும்புறேன் ” என்று உத்தரவிட்டான்.  

ஆர்யன் சொல்லும் எதையும் ஆராயாமல் அப்படியே செய்து முடிக்கும் பழக்கம் கொண்ட ரஞ்சித் ஆர்யனுக்கு மிகவும் விசுவாசமானவன். ஆர்யன் பற்றிய அனைத்தும் அறிந்தவன் அவன் ஒருவனே. ஆர்யனுக்காக ஒருவரை கொல்ல கூட சற்றும் அவன் தயங்க மாட்டான்.  

தற்போதும் ஆர்யன் போட்ட உத்தரவை கேட்டு அதை மறுக்காமல், “ சரிங்க சார், நான் பாத்துக்குறேன் “ என்று சொல்லிவிட்டு ஆர்யனின் அறையை விட்டு வெளியேறி அவன் இருக்கையில் அமர்ந்து தன் வேலையை ரஞ்சித் தொடர்ந்தான்.

ஆர்யன் முந்தைய இரவு அவன் செய்த செயலை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து, நிதித் துறையின் மேனேஜர் மானஸி தடை செய்யப்பட்ட ஆர்யனின் தளத்திற்கு வந்தாள். அவள் ஆர்யனின் அறையை நோக்கி நடந்து கதவைத் தட்ட முற்பட்டபோது உடனே ரஞ்சித் அவளைத் தடுத்தான்.

“மிஸ் மானசி, மன்னிச்சிடுங்க, ஆனா நீங்க இப்போ உள்ள போக முடியாது. பாஸ் யாரையும் இப்போ பார்க்க முடியாதுனு சொல்லிட்டாரு. எதுவா இருந்தாலும் நீங்க நாளைக்கு வந்து அவர் கிட்ட பேசுங்க “ என்று ரஞ்சித் சொன்னதும், மானசி கைகளைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள்.

“மிஸ்டர் ரஞ்சித், நான் பாஸ்கிட்ட ஒரு முக்கியமான டீல் பத்தி பேசணும். அதனால என்ன என் வேலையை செய்யவிடுங்க, எந்த வேல எவ்ளோ முக்கியம்னு எனக்கு தான் தெரியும் “, என்று மானசி சொன்னாள். ஆனால் ரஞ்சித் அறைக்கு முன்னால் நின்று கொண்டு, “ மன்னிச்சிடுங்க மானசி, நான் திரும்பவும் சொல்றேன், என்னால உங்கள உள்ளே போக அனுமதிக்க முடியாது. இது பாஸ் சொல்லி இருக்க கண்டிப்பான உத்தரவு, அவர் வார்த்தைய என்னால மீரா முடியாது “ என்று திட்டவட்டமாக கூறி அவளை அனுமதிக்க மறுத்துவிட்டான்.   

ரஞ்சித்தின் வார்த்தையை கேட்டு மானசி முகம் சுளித்தாள். ” என்ன பிரச்சன வந்தாலும் அத நான் சமாளிச்சுக்குறேன் அதனால நீங்க அத பத்தி கவலைபப்ட வேணாம் “ என்று சொல்லிவிட்டு ரஞ்சித்தை மீறி கதவை தட்டினாள் ஆனால் ஆர்யானிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

“ உங்களுக்கு சொல்றது புரியலையா, இங்க இருந்து போங்க “ என்று சொல்லி ரஞ்சித் அவளை திருப்பி அனுப்ப முயற்சித்தான் ஆனால் மானசி மீண்டும் கதவை தட்டினாள்.    

மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் ஆர்யனை எரிச்சலைடைய செய்தது.

“ரஞ்சித்!”, என்று ஆர்யனின் எரிச்சலான குரல் உள்ளிருந்து வந்ததும் மானசியை மனதுக்குள் திட்டிக் கொண்டே தயங்கியபடி ஆர்யனின் அறைக்குள் ரஞ்சித் நுழைந்தான். அவன் பேச ஆரம்பிப்பதற்குள் மானசி அவனை பின்தொடர்ந்து அனுமதியின்றி உள்ளே நுழைந்தாள்.

மானசி அறையில் இருப்பதை பார்த்தும் ஆர்யனின் பார்வை இறுகியது. “ரஞ்சித், என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு நான் தான் சொன்னேன்ல” , என்று ஆர்யன் கோவமுடன் கேட்க, ரஞ்சித் பதில் சொல்வதற்குள் மானசி முந்திக் கொண்டு, “சார், நான் தான் கதவைத் தட்டினேன் ” என்றாள் மானசி.

அவள் முகத்தை பார்க்காமல் ஆர்யன் பெருமூச்சு விட்டான். ” எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். நீங்க இப்போ கிளம்பலாம்.”, என்று ஆர்யன் சொன்னதும், “ இல்ல சார், இது ரொம்ப அவசரமான விஷயம், நாளைக்கு வர காத்திருக்க முடியாது “ என்றாள் மானசி.  

ஏற்கனவே சஞ்சுவை பற்றி நினைத்து கவலையில் இருந்தவன், மானசியின் வார்த்தையை கேட்டதும் எரிச்சல் அதிகரித்தது, “  அப்படி என்ன அவசரம், நாளைக்கு வர கூட வெயிட் பண்ண முடியாத அளவுக்கு ? “ என்று ஆர்யன் அவளிடம் கேட்டான்.

“சார், மிஸ்டர் சுரேந்தர் கூட நாம கையெழுத்து போட்டு இருக்க ஒப்பந்தம் பத்தி தான் சொல்லணும். அவர் வேலைய தொடர்ந்து செய்ய ஒரு பெரிய தொகைய இப்போவே கொடுக்க சொல்லி கேட்குறாரு ” என்று மானசி சொன்னதும் ஆர்யன் கொஞ்சமும் யோசிக்காமல், “ அவன் கூட நாம போட்டு இருக்க ஒப்பந்தத்த ரத்து பண்ணி, அவனை தூக்கி போடுங்க “ என்று சொன்ன ஆர்யனின் குரல் கடுமையாக இருந்தது.

ஆர்யன் சொன்னதை கேட்டு மானசி முகம் சுளித்தாள். “ஆனா சார், நாம ஏற்கனவே ப்ராஜெக்டில் பாதிய முடிச்சிட்டோம், இப்போ  நாம ஒப்பந்தத்த ரத்து பண்ணா, நாம பெரிய இழப்பு சந்திக்க வேண்டி இருக்கும் “ என்று கூறினாள்.    

ஆர்யன் ரஞ்சித்தின் பக்கம் திரும்பி, ” ரஞ்சித் சரியான டீலர் பார்த்து இந்த ப்ராஜெக்ட் அவங்க கிட்ட  ஒப்படைக்க ஏற்பாடு செய். இதனால எவ்ளோ இழப்பு வந்தாலும் அத நாம சமாளிக்க முடியும், அத பார்த்து முடிச்சு விடு ” என்று சொல்ல, “ சரி சார். அத நான் பார்த்துக்குறேன் “ என்று சொல்லி ரஞ்சித் உடனே தலை அசைத்தான்.    

” பிரச்சனை தீர்ந்துடுச்சு. நீங்க கிளம்புங்க மிஸ் மானசி “, என்று ஆர்யன் அவனுக்கு முன்னால் இருந்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டே சொன்னான். 

மானசி வெளியேறாமல் தயங்கியபடி ஆர்யனை ஒரு பார்வை பார்த்தாள். அவன் முகம் கலவரமாக, துயரத்தில் இருப்பது போல  தெரிந்தது. ஆனால் அவன் பேசிய விதத்தில் இருந்து நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்து மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசுவது சரியாக இருக்காது என்று தெரிந்து கொண்டு அவள் அமைதியாக அறையை விட்டு வெளியேறினாள்.

ஆர்யனின் அமைதியற்ற முகத்தையும், அவன் விரக்தியில் இருப்பதையும் பார்த்த ரஞ்சி மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்ததான், “ சார், ஏதாவது பிரச்சனையா ? உங்க கவலையைப் போக்க நான் ஏதாவது செய்யணுமா ? “, என்று ரஞ்சித் கேட்க, ஆர்யன் இல்லை என்று தலையை ஆட்டி, ” இல்ல ரஞ்சித். நீ எதுவும் செய்ய வேணாம். எனக்கு தொந்தரவு இல்லாம பாத்துக்கோ, அது போதும் “ என்று சொன்னான்.   

அவன் வார்த்தையை புரிந்துகொண்ட ரஞ்சித் வெளியே சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.

ஆனால், மானசி மட்டும் இன்னும் அவள் ஆரம்பித்ததை முடிக்கவில்லை. அவள் அந்த தளத்தில் இருந்த பேன்ட்ரிக்கு சென்று ஒரு கப் காபி தயாரித்தாள். அங்கு மேடைக்கு அருகே இருந்த ஒரு  கண்ணாடியில் அவளது பிம்பத்தை வெறித்துப் பார்த்தவள் தனது தலைமுடியை சரி செய்தாள்.

” ஒருத்தி இவ்ளோ அழகா டிரஸ் பண்ணிட்டு அவர் முன்னாடி போய் நிக்குறேன் ஆனா மனுஷன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறாரு. என் கிட்ட ஒரு நாள் வசமா சிக்குவீங்க அப்போ பாத்துக்குறேன் ஆர்யன் உங்கள. இப்போ நான் கொண்டு வர இந்த காபி உங்க மனநிலைய சரி பண்ணுதானு பார்க்கலாம் “ என்று முணுமுணுத்தாள்.

மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்த பின்பு, ஆர்யனின் மனதை சரி செய்யும்  புதிய தீர்மானத்துடன், காபி கோப்பையை எடுத்துக் கொண்டு ஆர்யனின் அறையை நோக்கி  சென்றாள். ஆனால் இந்த முறையும் அவள் உள்ளே நுழைவதற்குள் ரஞ்சித் அவளை வழிமறித்தான்.

” மிஸ் மானசி, எத்தன முறை உங்களுக்கு சொல்றது. நீங்க உள்ளே போக முடியாது, பாஸ் இன்னைக்கு யாரையும் பார்க்க மாட்டாரு “, என்று எரிச்சலுடன் கூறினான். 

ரஞ்சித்தின் கோவமான வார்த்தையை கேட்டதும் மானசியின் புன்னகை மறைந்தது. ” ரஞ்சித், ஆர்யன் சார் பார்க்க வித்தியாசமா இருக்காரு. அவருக்கு உடம்பு சரியில்லைனு எனக்குத் தெரியும். இது நிஜமா வேலைய பத்தி இல்ல. நான் அவருக்கு காபி கொண்டு வந்துருக்கேன் அதனால என்ன போக விடுங்க “ என்று மானசி அவனை சமாதானம் செய்ய முயற்சித்தாள் ஆனால் ரஞ்சித் மறுத்து விட்டான்.

” மன்னிக்கனும் மானசி, என்ன காரணமா இருந்தாலும் என்னால உங்கள உள்ள போக அனுமதிக்க முடியாது. இப்போ திரும்பி போய் உங்க வேலைய பாருங்க “ என்று அவன் கோவமாக சொன்னதை கேட்டதும், மானசி கோவத்தில் முஷ்டியை மடக்கினாள்.

 ” நீங்க ஏன் எப்பவும் என் வழியில் மூக்கை நுழைக்குறீங்க ரஞ்சித் ?”, என்று மானசி கேட்க, “ நான் என் வேலையைச் செய்றேன், என் பாஸ் எனக்கு போடுற உத்தரவ தான் செய்றேன். தயவு செஞ்சு இங்க இருந்து போங்க “ என்று சொல்லும் போது ரஞ்சித்தின் குரல் கடுமையாக ஒலித்தது. 

அதற்கு மேல் அவனிடம் பேசி சண்டையிட முடியாது என்று புரிந்து கொண்டு விரக்தியடைந்த மானசி மனதில் ரஞ்சித்தை திட்டியபடி அங்கிருந்து திரும்பி நடந்தாள்.  ” என்னவோ இவன் தான் பாஸ் மாதிரி நடந்துக்குறான், மடையன். அந்த முட்டாளுக்கு அவன மாதிரியே ஒரு பி.ஏ.” என்று முணுமுணுத்துக் கொண்டே தனது இருக்கைக்கு திரும்பினாள்.

அன்று நாள் முழுவதும் ஆர்யன் சஞ்சனையைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ஒரு வேலையும் செய்யவில்லை, ஒருவரையும் சந்திக்கவில்லை, ரஞ்சித் கொண்டு சென்ற மதிய உணவை கூட புறக்கணித்தான், நாள் முழுவதும் தண்ணீரைக் கூட குடிக்காமல் குற்றவுணர்ச்சியில் தவித்தான். அவளை எப்படி சந்திப்பது என்று யோசித்துக் கொண்டே அறையில் நடந்து கொண்டிருந்தான். இரவு கவிழ்ந்ததும் இறுதியாக அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு செல்ல கிளம்பினான்.

மேன்ஷனை அடைந்த ஆர்யன், உள்ளே நுழைந்ததும் சஞ்சுவை தேடினான் ஆனால் வழக்கம் போல அவள் லிவின் அறை எங்கும் இல்ல. அவனை பார்த்த கௌசல்யா அவனை வரவேற்று, “சார், உங்களுக்கு டின்னர் எடுத்து வைக்கட்டுமா ?”, என்று கேட்டார்.

அவன் மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்க, ” நான் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன் ” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றான்.

புத்துணர்ச்சி பெற்று டைனிங் ஹாலுக்கு திரும்பியவனின் கண்கள் சஞ்சனாவை அறை முழுவதும் தேடின.

“சஞ்சனா சாப்பிட்டாளா ?” என்று ஆர்யன் கேட்டதும், “ ஆமா சார், அவ சாப்பிட்டு முடிச்சிட்டு அவளோட ரூமுக்கு தூங்க போயிட்டா ” என்றார் கௌசல்யா.

ஆர்யன் வெறுமனே தலையை அசைத்து அமைதியற்ற மனத்துடன்  மௌனமாக உணவருந்தினான். எப்போதும் போல உணவருந்தும் போது அவள் முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கூட இல்லாமல் போனது என்று வருந்தினான். தனது உணவை முடித்துவிட்டு முதல் மாடிக்குச் சென்றவன் சஞ்சனாவின் அறைக்கு முன்னால் நின்றான். அவள் அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டிருப்பதை பார்த்து  மெல்ல கதவைத் தள்ளித் திறந்தான். அவள் அசையாமல் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

மெல்ல அவளை நெருங்கியதும், அவனுடைய பார்வை அவளுடைய கழுத்து தோலை சிதைத்திருந்த ஊதா நிற தழும்புகளின் மீது விழுந்தது. குற்றவுணர்ச்சியால் அவன் இதயம் இறுகியது. அவளை காயப்படுத்திவிட்டதை நினைத்து மனமுடைந்து போனான்.

அவனது காலடி சத்தம் கேட்டதும் உறங்குவது போல கண்களை மூடி இருந்த சஞ்சனா, அருகில் அவனது இருப்பை அவளால் உணர முடிந்தது. ஆனால் அவனை எதிர்கொள்ள மனமில்லாமல் சஞ்சனா கண்களை மூடிக்கொண்டு உறங்குவது போல நடித்தாள்.

ஆர்யன் மெல்ல அவள் கூந்தலை கோதிவிட்டு, அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான். “ என்னை மன்னிச்சிடு, ப்ளீஸ். சத்தியமா நான் அப்படி வேணும்னு செய்யல ” என்று ஆர்யன் முணுமுணுத்ததை சஞ்சுவின் காதில் தெளிவாக கேட்டது.

போர்வையை இழுத்து அவளை போர்த்தி விட்ட பிறகு அவளுடைய அமைதியா முகத்திற்கு பின்னால் இருந்த வலியை உணர்ந்தவன் கடைசியாக ஒரு முறை அவளை பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான். அவளை தொந்தரவு செய்யாமல் கதவை மெதுவாகச் சாத்திக்கொண்டு தனது அறைக்கு சென்றான்.

*************************************

முன்னோடோம்:

“சஞ்சனா, ஆர்யன் சார் நீ நினைக்கிற மாதிரி இல்ல. நான் பல வருஷமா அவர் கூட இருக்கேன். அவரோட உண்மையான குணத்த நீ சரியான நேரத்துல பார்க்க தான் போற. அவர தப்பா நினைக்காத “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!