Home FamilyChapter – 7

Chapter – 7

by Siragugal Novels
22 views

ஆர்யன் கொடுத்த வேலையை முடித்த பின்னர் நேரம் ஆகிவிட்டது என்பதை கவனித்த சஞ்சனா அலுவலகத்திலிருந்து வெளியேறி, வீட்டிற்குச் செல்லத் தயாராக இருந்தாள். அவள் அலுவலகத்தின் பார்க்கிங்கை நோக்கி நடந்த போது, பவித்ரா தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்வதையும், டேனியலும், வினய்யும் அவள் அருகில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள்.

சஞ்சுவை பார்த்து புன்னகைத்து கை அசைத்த பவித்ரா, “சஞ்சு, உன் வீடு எங்க இருக்கு ?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.

அப்படி ஒரு கேவி அவளிடம் கேட்கப்படும் என்று அவள் சற்றும் யோசிக்காத சஞ்சனா, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் தயங்கி நின்றாள். அவள் பதில் சொல்வதற்குள் டேனியல் சிரித்துக் கொண்டே, ” சஞ்சனா, உங்க வீடு எங்க இருக்குனு தான் பவி  கேட்டா, அதுக்கு ஏன் இப்படி தயங்குறீங்க ?” என்றான்.

” என் வீடு இங்க பக்கத்துல தான் இருக்கேன். ஒரு இருபது நிமிஷம் தான் ஆகம் போக ” என்று சொல்லி சமாளித்தாள் ஆனால் டேனியல் உடனே, “ வெறும் இருபது நிமிஷம் தான் ஆகுமா ? ஆமா எந்த  ஏரியாவுல இருக்கீங்க ?” என்று கேட்டு மேலும் அவளை வற்புறுத்தினான், ஆனால் பவித்ரா சஞ்சுவின் தயக்கத்தைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முயன்று டேனியலை தடுத்து சஞ்சு முன் வந்து, “ சஞ்சு, உனக்கு நேரம் ஆகலையா ? நீ சீக்கிரம் கிளம்பு “ என்று சொல்லி குறுக்கிட்டாள்.

“பவி, நான் அவங்க கிட்ட இன்னும் பேசிட்டு இருக்கேன் “, என்று டேனியல் முகம் சுளித்தான் ஆனால் பவித்ரா அவனை முறைத்து, “ டேனி, இந்த நேரம் டிராபிக் அதிகமா இருக்கும். அவ வீட்டுக்கு போக லேட் ஆகிடும் அப்புறம் அதனால நீ அமைதியா இரு, அவ கிளம்பட்டும் “ என்று சொல்லி சஞ்சுவை கிளம்ப சொல்லி அவள் சைகை செய்தாள்.  

சஞ்சனா நன்றியுடன் புன்னகைத்து, ” ரொம்ப நன்றி பவி. நான் உன்ன நாளைக்கு பாக்குறேன் “, என்று அவளிடம் சொல்லிவிட்டு, டேனியல்   மேற்கொண்டு கேள்வி கேட்பதற்குள்  காரில் ஏறி கிளம்பினாள்.

அவள் சென்றவுடன், பவித்ராவும் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டு சென்றாள்.  வினய், டேனியலை ஒரு பரிச்சயமான பார்வையுடன் அவன் தோளில் இடித்து, ” டேனி, உனக்கு அவள ரொம்ப புடிச்சு இருக்கு போல ? “ என்று கேட்டான். அதற்கு டேனியல் உடனே, “ ஏன் புடிச்சு இருக்க கூடாதா ? அவ எவ்ளோ அழகா இருக்கா பாரு “ என்று சிரித்துக் கொண்டே ஒப்புக் கொண்ட டேனியலின் கண்கள் இன்னும் சஞ்சு சென்ற பாதை மீது நிலைத்திருந்தன. டேனியலில் பார்வை சரியில்லை என்பதை பார்த்த வினய், “ வேணாம் டேனியல், மறந்துடாத, அவ அந்த ஆர்யனோட PA, தேவையில்லாத பிரச்சனையில போய் சிக்கிடாத “ என்று சொல்லி அவனை எச்சரித்தான்.

வினயின் வார்த்தையை கேட்ட டேனியல் தோள்களைக் குலுக்கினான். ” அந்த ஆர்யன் ஒரு முட்டாள், அவன் எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் அப்படி இருக்கும் போது இவள மட்டும் பார்க்க போறனா என்ன ? அதுவும் இல்லாம நான் இவள பாக்குறதுல இல்ல இவள எனக்கு சொந்தமாக்க நினைக்குறதுல என்ன தப்பு ? “ என்று கேட்டான்.

“அவள பார்த்த சாதாரண பொண்ணு மாதிரி தெரியல அது மட்டும் இல்ல அவ்ளோ சுலபமா உன்ன நம்பி உன் வலையில விழுவானு தோனல டேனியல் “ என்று வினய் மீண்டும் அவனை எச்சரிக்க முயன்றான், ஆனால் டேனியல், ” அத பத்தி நீ கவலைப்படாத, அவள நான் பார்த்துக்குறேன், இன்னைக்கு தானே வந்துருக்கா  “ என்று சொல்லி சிரித்தான்.

வீட்டை அடைந்த சஞ்சனா நேராக தனது அறைக்கு புத்துணர்ச்சி பெறச் சென்றாள். குளித்து வழக்கமாக வீட்டில் அணியும் உடையை மாற்றிக் கொண்டு, இரவு உணவு சாப்பிட டைனிங் ஹாலுக்கு சென்றாள்.

” கௌசல்யா அம்மா, எனக்கு செம்ம பசியா இருக்கு, சீக்கிரம் சாப்பிட ஏதாச்சும் கொடுங்க ப்ளீஸ் ” என்று சஞ்சனா கேட்டதும், “ இதோ வரேன் சஞ்சு “ என்று சொல்லிக் கொண்டே சமையலறையில் இருந்து வெளியே வந்த கௌசல்யா, “ ஆபீஸ்ல முதல் நாள் எப்படி இருந்துச்சு ?” என்று கேட்டுக் கொண்டே சஞ்சுவுக்கு ஒரு தட்டை வைத்து உணவை பரிமாறினார். 

” பரவாயில்லை, நான் நெனச்ச மாதிரி ஒன்னும் மோசமா இல்ல” என்று சொல்லி சஞ்சு உணவு அருந்தத் தயாராக இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தாள்.

” ரொம்ப சந்தோஷம் சஞ்சு, இப்போ சாப்பிட்டு முடிச்சிட்டு போய் நல்லா ரெஸ்ட் எடு. வீட்ல இருந்துருந்தா மதியம் சாப்பிட்ட அப்புறம் கொஞ்சம் நேரம் தூங்கி இருப்ப, இனி தூங்க முடியாது அதனால நேரத்துக்கு தூங்கு “ என்று சொன்ன கௌசல்யா பிறகு அவளிடம், “ அப்புறம் சஞ்சு ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு. சார் உனக்காக நிறைய டிரஸ் அப்புறம் இன்னும் நிறைய சாமான் எல்லாம் அனுப்பி இருந்தாரு. எல்லாத்தையும் உன்னோட  அலமாரியில அடுக்கி வச்சிருக்கேன், தூங்குறதுக்கு முன்னாடி போய் பாரு ” என்று சொன்னார். கௌசல்யா சொன்னதை கேட்ட சஞ்சனா சாப்பிடுவதை பாதியிலேயே நிறுத்தி, “ என்ன ? எனக்கு டிரஸ் அனுப்பி இருந்தாரா ?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

“ஆமா சஞ்சு, இப்ப நீ தினமும் ஆபீஸ் போவதானே அதனால உனக்கு தேவையான எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாரு ” என்று கௌசல்யா சொன்னதும் சஞ்சு வெறுமனே சரி என்று தலையை அசைத்தாள்.

இரவு உணவை சாப்பிட்ட பிறகு அவள் தனது அறைக்குச் சென்று உடனடியாக அலமாரியைத் திறந்தாள். நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரத்யேக பிராண்டட் ஆடைகளைக் கண்டதும் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதோடு அந்த ஆடைகள் அனைத்துக்கும் பொருத்தமான அணிகலன்கள், காலணிகள் என டிராவ் அனைத்தும் நிரம்பி இருந்தன. அவை அனைத்தும் நம்பமுடியாத அளவுக்கு விலையுயர்ந்தவையாக இருந்தன. அவள் அறைக்கு திரும்பி அதிர்ச்சியில் உறைந்து நின்றுக் கொண்டிருந்த போது மேன்ஷனுக்குள் கார் நுழையும் சத்தம் கேட்டது. உடனே ஜன்னல் அருகே சென்று எட்டிப் பார்த்தவள், ஆர்யன் காரில் இருந்து இறங்குவதை பார்த்தாள்.

அவன் தன் அறைக்கு செல்வதற்கு முன் அவளது அறைக்கு வருவான் என்று அவளுக்குத் தெரியும். அதனால் அவன் வருவதற்காக சோபாவில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது போல் பாவனை செய்து காத்திருந்தாள்.

சஞ்சு எதிர்பார்த்தது போலவே ஆர்யன் இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகு அவள் அறைக்குள் வந்தான்.

சஞ்சு புத்தகம் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து, ” நீ இன்னும் தூங்கலையா ?” என்று சுவரில் சாய்ந்து நின்றபடி அவளிடம் கேட்டான் ஆர்யன்.  அதற்கு சஞ்சனா புத்தகத்தை மூடி முன்னால் இருந்த டீபாய் மீது வைத்து விட்டு, ” ஏன் இவ்வளவு விலை அதிகமான டிரஸ் எல்லாம் எனக்காக் வாங்கி வெச்சுருக்கீங்க ? “ என்று கேட்டாள். 

” ஏன் ஆபீசுக்கு போட்டு போக டிரஸ் வேணாமா ? இல்ல அது இல்லாம வர எதாவது பிளான் வெச்சுருக்கியா ? அப்படியா ஏதாவது இருந்தா, இந்த ரூம்ல மட்டும் தான் இருக்க முடியும், என் கூட மட்டும் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவள் ஆர்யனை பார்த்து  மூச்சிரைத்து, “ இடியட், வெளிய போங்க. உங்கள மாதிரியே நீங்க பேசுற வார்த்தையும் இருக்கு “ என்று அவனை திட்டினாள்.  

சஞ்சுவின் கோவத்தை பார்த்து சிரித்த ஆர்யன், “ இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன் ? நீ வழக்கமா போடுற நைட் டிரஸ் பத்தி தான் நான்  பேசிட்டு இருந்தேன். இதுல என்ன அசிங்கம் இருக்கு “ என்று சொன்னவன் சட்டென ஏதோ புரிந்தது போல, ” ஓஓஹோ இப்ப தான் எனக்கு புரியுது. உன் மனசுல தான் அந்த மாதிரி எண்ணம் இருந்துருக்கு. நீ தப்பா நெனச்சுதுக்கு என்ன குறை சொல்லாத “, என்று அவளை பார்த்து தலையை சாய்த்து சொன்னான்.

” மிஸ்டர் சைதன்யா, நீ கிளம்புறீங்களா ? “ , என்று சஞ்சு கேட்க ஆர்யன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரையை  அவள் முன் வைத்தான். ” நீ இத சாப்பிடு அதுக்கு அப்புறம் நான் போறேன் “ என்று சொன்னான். சஞ்சு கண்களை உருட்டியபடி மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டதும் திருப்தியடைந்த ஆர்யன் அங்கிருந்து கிளம்பத் திரும்பினான். முந்தைய நாள் போல கதவருகே நின்று, “ குட் நைட் பேபி” என்று அவளை கிண்டலடித்தான்.

” நான் உங்க பேபி இல்ல “ என்று சஞ்சு பல்லைக் கடித்துக் கொண்டு சொல்ல, “ நமக்கு ஒரு பேபி பிறந்தாலும் கூட எனக்கு எப்பவும் நீ பேபி தான் ஸ்வீட் ஹார்ட் ” என்று சொல்லி ஆர்யன் அவளை பார்த்து கண்ணடித்ததும் அதிர்ச்சியான சஞ்சு அவனைப் பார்த்து, ” நான்சென்ஸ்! வெளிய போங்க “ என்று கத்தினாள். ஆர்யன் சிரித்துக் கொண்டே தனது அறைக்கு சென்றான்.

அடுத்த நாள் அலுவலகத்தில், சஞ்சனா பிஸியாக வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்யனிடமிருந்து அழைப்பு வந்து அவள் உடனே பதில் சொல்லி,  “ சொல்லுங்க ஆர்யன் ? “ என்றாள். 

” சஞ்சனா, இப்போ புதுசா ஆரம்பிச்சு இருக்க கட்டுமானங்களுக்கான பைனான்ஸ் பத்தின விவரங்கள மானசி கிட்ட இருந்து வாங்கி எனக்கு சொல்லு. எனக்கு துல்லியமான தகவல் வேணும் ” என்று ஆர்யன் சொன்னதும் உடனே சஞ்சனா மானசியை அழைத்தாள். “மானசி, இப்போ ஆரம்பிச்சு இருக்க கட்டுமானங்களுக்கான ஃபைனான்ஸ் ஃபைலை எனக்கு அனுப்ப முடியுமா ?” என்று கேட்டாள்.

” என்ன ஆச்சு சஞ்சனா, ஏன் அத கேட்குறீங்க ? “ என்று  மானசி கேட்க, கண்ணியமாக இருக்க நினைத்த சஞ்சு அவளிடம், “ ஆர்யன் சார் அதுல இருந்து தகவல் கேட்டு இருக்காரு மானசி “ என்று சொன்னாள் ஆனால் மானசி தனது தலைகனத்தை தன்னம்பிக்கை என நினைத்துக் கொண்டு, “ அப்படியா ? சரி சஞ்சனா நீங்க கவலைப்படாதீங்க, அத நான் பாத்துக்குறேன், ஆர்யன் கிட்ட நானே சொல்லிடுறேன்  “ என்று சொல்லி அழைப்பை துண்டிக்க இருந்தாள் ஆனால் சஞ்சு கண்களை உருட்டி அவளை மீண்டும் அழைத்து தடுத்து, “ இல்ல மானசி, இந்த வேலைய அவர் என்ன செய்ய சொல்லி இருக்காரு” என்று சொல்லி அது அவளுடைய வேலை என்பதை தெளிவுபடுத்த முயன்றாள்.

” பரவாயில்ல. நான் அவர் கிட்ட பேசுறேன் சஞ்சனா கவலைப்படாத, ஆர்யன என்னால சமாளிக்க முடியும்.” என்று மானசி பிடிவாதமாக சொல்ல, அவள் வார்த்தையை கேட்டு சஞ்சனா முகம் சுளித்தாள். “ என்னவோ இவ தான் ஆரியன குத்தகைக்கு எடுத்த மாதிரி எப்போ பாத்தாலும் ஆர்யன்…ஆர்யன்…. ஆர்யன்னு பெரும அடிச்சுக்குறா. எனக்கு என்ன வந்துச்சு போய் இவளே செய்யட்டும் “ என்று மனதில் அவளை திட்டி தீர்த்த சஞ்சனா, “சரி மானசி. நீங்களே கொண்டு வந்து கொடுங்க ஆனா கொஞ்சம் சீக்கிரம் வாங்க.” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு சஞ்சு தன் வேலைக்குத் திரும்பினாள்.

ஆர்யன் அவனது அறையில் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, “ இன்னும் கொஞ்ச நேரத்துல அவ இங்க வருவா ஆர்யன். ஓவர் ஆக்டிங் பண்ணி எதையும் கெடுத்துடாத டா. எப்படியாச்சும் அவள உன் கூட சேர்ந்து லஞ்ச் சாப்பிட சம்மதிக்க வை “ என்று மனதில் நினைத்துக்  கொண்டிருந்தான் அப்போது கதவு தட்டப்படும் ஓசை அவன் சிந்தனையைக் கலைத்தது. சஞ்சு வந்துவிட்டாள் என்று அவன் முகம் ஒரு நொடி பிரகாசித்தது, ஆனால் சட்டென தனது உற்சாகத்தை மறைத்துக் கொண்டு, “ come in “ என்று சொல்லி ஆர்யன் அவளை சந்திக்க காத்திருந்தான் ஆனால் மானசி உள்ளே நுழைந்து, ” ஹலோ சார்.” என்று சொன்னதும் ஆர்யனின் முகபாவம் கோவத்தில் இருண்டது. “ அடச்சே! இவ ஏன் இப்போ இங்க வந்துருக்கா ? “ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “ சொல்லுங்க மிஸ் மானசி, என்ன விஷயம் ?” என்று அலட்சியமாக கேட்டான்.

” சார், நீங்க கேட்ட கன்ஸ்ட்ரக்ஷன் பைனான்ஸ் சம்மதமான தகவல் கொண்டு வந்துருக்கேன் ” என்று மானசி சொன்னாள் ஆனால் அவள் வார்த்தைகளைக் கேட்டு ஆர்யன் முகம் சுளித்தான். ” நான் அந்த தகவல் எதுவும் உங்க கிட்ட கேட்கலையே “ என்று ஆர்யன் கேட்க, “ சஞ்சனா தான் நீங்க இந்த தகவல் கேட்டதா சொன்னங்க சார் “ என்று சொல்லி மானசி தன் விளையாட்டை விளையாட முயன்றாள்.

பல்லைக் கடித்துக் கொண்ட ஆர்யன், “ அவங்க எங்க ? “ என்று கேட்க, “ அவங்க லஞ்ச் சாப்பிட கிளம்பிட்டாங்க போல சார் “ என்று சொல்லி ஆர்யனின் பார்வையில் சஞ்சுவை மட்டம் தட்ட நினைத்தாள். 

ஆர்யன் கோவத்தில் தாடையைக் கடித்துக் கொண்டு, “ ஃபைலை வெச்சுட்டு நீங்க கிளம்புங்க நானே பாத்துக்குறேன் “ என்று ஆர்யன் சொன்னான். ” சார், நான் வேற ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ?” என்று மானசி இனிமையாக கேட்க, “ ரஞ்சித்தை உள்ளே வர சொல்லிட்டு போங்க “ என்று தனது லேப்டாப்பை பார்த்துக் கொண்டே கூறினான்.

வழக்கம் போல மானசியின் முகம் வாடியது. “ எல்லாம் என் தலை எழுத்து. இந்த மனுஷனுக்கு உண்மையாவே நான் கண்ணுக்கு தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்குறாரா ? “ என்று மனதில் நினைத்து விரக்தியோடு அவள் அறையை விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரத்தில் ரஞ்சித் உள்ளே வந்து, “ சார் உங்களுக்கு ஏதாவது வேணுமா ?” என்று கேட்க, “ சஞ்சனா எங்க ?” என்று உடனே கேட்டான் ஆர்யன்.

என்ன நடந்தது என்று புரியாமல், “சார், அவ லஞ்ச் சாப்பிட்டுட்டு இருக்கா.” என்று ரஞ்சித் சொன்னதும், ” உடனே அவள வர சொல்லு “ என்று ஆர்யன் உத்தரவிட்டான். ரஞ்சித் தனது மொபைலை எடுத்து சஞ்சனாவை அழைத்து, “ சஞ்சனா, சார் ரூமுக்கு உடனே வர முடியுமா ?” என்று சொன்னான் அதற்கு சஞ்சனா, “ அண்ணா, லஞ்ச் சாப்பிட வந்தேன், முடிச்சிட்டு வரட்டுமா ? “ என்று கேட்டாள் ஆனால் ரஞ்சித், “ இல்ல சஞ்சனா, இது அவசரம், நீ உடனே வா “ என்று அவளை அழைத்தான்.      

சரி என்று சொல்லிவிட்டு சாப்பிட வாங்கிய உணவை ஒதுக்கி வைத்துவிட்டு சஞ்சனா எழுந்து நின்றதும், ” சஞ்சு, என்ன ஆச்சு ? சாப்பிடாம எங்க போற ? “ என்று பவி கேட்டாள்.

” பாஸ் கூப்பிடறாரு. ஏதோ அவசரம் மாதிரி இருக்கு “ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் சஞ்சு.

“முட்டாள். அவளை சாப்பிட கூட விட மாட்டானா அவன் ? “, என்று சொல்லி டேனியல், ஆர்யனை ஏளனம் செய்தான்.

சஞ்சனா ஆர்யனின் அறைக்குள்  நுழைந்ததும் ரஞ்சித் அங்கிருப்பதை பார்த்தாள்.

” ரஞ்சித், நீ கிளம்பு ” என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் தலை அசைத்து வெளியேறினான். ஆர்யன் தன் கைகளை கட்டிக் கொண்டு, “ நீ எங்க போய் இருந்த ? “ என்று சஞ்சுவிடம் கேட்டான். 

“ லஞ்ச் சாப்பிட போய் இருந்தேன் “ என்று அலட்சியமாக சஞ்சு பதில் சொன்னதும், “ கிளம்பறதுக்கு முன்னாடி நீ ஏன் என்கிட்ட சொல்லல ? நேத்தே நான் சொன்னேன்ல அப்புறம் ஏன் சொல்லாம போன ? என்று  ஆர்யன் அமைதியாக இருக்க முயன்று நிதானமாக கேட்டான்.

” மானசி உங்க ரூம்ல இருந்தா. நீங்க கேட்ட தகவல் சம்மந்தமா நீங்க ரெண்டு பேரும் நிறைய பேச வேண்டி இருக்கும்னு நெனச்சேன்.  அதனால தொந்தரவு பண்ணாம கிளம்பி போயிட்டேன் “ என்று சஞ்சு சொல்ல, ஆர்யன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான். ” நான் உன்ன தானே அத எடுத்துட்டு வரச் சொன்னேன் அப்புறம் நீ ஏன் அவள என் ரூமுக்கு  அனுப்புன ?” என்று ஆர்யன் கேட்டதும் சஞ்சு அவனை முறைத்தாள்.

” நான் அவள அனுப்பல, அவ தான் நானே கொண்டு போய் கொடுக்குறேன்னு சொல்லி வந்தா “ என்று சஞ்சு அதை தெளிவுபடுத்த முயன்றாள், ஆனால் ஆர்யன் கண்களை உருட்டி, ” அவ சொன்னா உடனே நீ சரின்னு சொல்லிட்டியா ? அவ ஏன் இதெல்லாம் பன்றானு தெரிஞ்சும்  நீ அவள என் ரூமுக்கு வர விட்டு இருக்க அப்படி தானே ? “ என்று ஆர்யன் கேட்க, “ நான் ஏன் அவள தடுக்கணும் ?” என்று சஞ்சு கேட்டாள்.

சஞ்சு கேட்ட கேள்வியால், ஆர்யன் சிரித்தான். ” ஆமா, அவள ஏன் நீ  தடுக்கனும் சொல்லு ? சொல்ல போனா அவள மட்டும் இல்ல வேற யாரையும் கூட தடுக்காத. இந்த ஆபீஸ்ல இருக்க பொண்ணுங்க பல பேருக்கு என் மேல ஒரு கண்ணு இருக்கு. என்ன மாதிரி ஒரு ஆள் மேல் யாருக்கு தான் லவ் வராது ? “ என்று சொல்லி ஆர்யன் தலை முடியை கோதி சிரிக்க, சஞ்சு அவனை ஏளனமாய் பார்த்தாள்.  ” உங்கள மாதிரி  ஒரு ஆள் மேல யாருக்கு லவ் வரும் ? நீங்க நரகத்துக்கு தான் போவீங்க ஆர்யன்.” என்று சஞ்சு அவனை பார்த்து கத்தினாள்.

அவள் பேசுவதை எல்லாம் கேட்ட ஆர்யன் சத்தமாக சிரித்தான். ” பேபி நான் நரகத்துக்கு போகணும்னு தயவு செஞ்சு நீ விரும்பாத. நல்லா ஞாபகம் இருக்கட்டும், நான் எங்க போனாலும் நீயும் என் கூட அங்க தான் இருப்ப “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு, “ உங்க தற்பெருமைய பேசி முடிச்சிட்டீங்களா ? இப்போ நான் போகலாமா ?” என்று சஞ்சு கைகளை மார்பில் கட்டிக்கொண்டு அவனிடம் கேட்டாள்.

” சத்தியமா சொல்லு பேபி, நான் உன் கண்ணுக்கு அழகாகவும், ஹாட்டா தெரியலையா ? “  என்று ஆர்யன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தபடி கேட்தும் சஞ்சு அவனை மரணப் பார்வை பார்த்துவிட்டு புயலாக அறையை வெளியேறினாள்.

தன் அறைக்கு திரும்பிய சஞ்சனா கொந்தளித்துக் கொண்டிருந்தாள். “ அந்த முட்டாள் என்ன சாப்பிடக்கூட விடல. ஏய் மானசி, என்க்கிட்டயே டபுள் கேம் விளையாடுறியா ? இருடி, ஒரு நாள் இதுக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும், உன்ன அப்போ பாத்துக்குறேன்  “ என்று திட்டிக் கொண்டும் புலம்பி கொண்டும் இருந்தாள். 

ரஞ்சித் அவள் அறைக்குள் நுழைந்து அவள் முன் ஒரு லஞ்ச் பாக்ஸை வைத்தான். “ இந்தா சஞ்சனா, இதுல லஞ்ச் இருக்கு சாப்பிடு “ என்று ரஞ்சித் சொன்னதும், “ ரொம்ப நன்றி அண்ணா. நான் செம்ம பசியில இருக்கேன் ” என்று சொல்லிவிட்டு அதை திறந்து பார்த்து போது அதில் சூடான காளான் பிரியாணியைக் கண்டு உடனே வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

” மெதுவா சாப்பிடு சஞ்சனா. இந்தா தண்ணி குடிச்சிட்டு சாப்பிடு ” என்று சொல்லி ரஞ்சித் ஒரு தண்ணீர் பாட்டிலை அவள் முன் வைத்தான்.

” ரொம்ப நன்றி ரஞ்சித் அண்ணா, ஆனா இதை எங்க இருந்து வாங்கிட்டு வந்தீங்க ? ரொம்ப நல்லா இருக்கு “ என்று சஞ்சு சொன்னதும் ரஞ்சித் சிரித்தான்.

“ ஏன் சிரிக்குறீங்க ? “ என்று சஞ்சு கேட்டதும், ” சார் தான் இந்த லஞ்ச் உனக்கு கொடுக்க சொன்னாரு ” என்று ரஞ்சித் கூறினான். அவன் வார்த்தையை கேட்ட சஞ்சுவின்  கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

*************

முன்னோட்டம் :

” நீ ரொம்ப பலவீனமா இருக்கனு  டாக்டர் சொல்லி இருக்காரு. ஒழுங்கா நேரத்துக்கு ஏன் சாப்பிட மாட்டேங்குற சஞ்சனா ? குறைந்த பட்சம் உன்னோட ஆரோக்கியத்த மனசுல வெச்சு ஒழுங்கா சாப்பிடு. நீ உடம்பு சரியில்லாம கஷ்டப்படுறத பார்க்க நான் விரும்பல, அது ஏன் உனக்குப் புரிய  மாட்டேங்குது? ”

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!