காலையில் சீக்கிரம் எழுந்த சஞ்சனா விரைவாக புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்றாள். ஆர்யன் அறிவித்திருக்கும் முக்கியமான மீட்டிங் அன்று நடைபெறும் என்பதாலும், ARCயில் அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு அவள் ஏற்பாடு செய்யும் முதல் மீட்டிங் அதோடு அவளும் அதில் பங்கேற்க வேண்டியுள்ளதால் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் விரைவாக அறைக்குள் நுழைந்தாள். முக்கியமான துறைகளை சேர்ந்த மேனேஜர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் முன் அவளது திறமை மற்றும் ஆர்யனிடம் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்த சஞ்சு விரும்பினாள்.
மீட்டிங் தொடர்பான அனைத்து fileகளை எடுத்து கொண்டு ஆர்யன் அறைக்கு சென்றவள் அவனது மேஜை மேல் அவற்றை அடுக்கி வைத்தாள். பின்னர் கான்ஃபரன்ஸ் அறைக்கு சென்று அங்கு புரஜக்டர் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரிபார்த்தாள். அனைவரும் அர்யனுடன் கலந்துரையாடும் வகையில் அறையில் அனைத்தும் தயாராக இருப்பதை உறுதி செய்தாள். அவள் அனைத்து வேலையையும் சரிபார்த்து திருப்தியான தலையசைப்புடன் தனது அறைக்கு அவள் திரும்பிய அதே நேரம் ரஞ்சித் உள்ளே நுழைந்தான்.
” சஞ்சனா, மீட்டிங்குக்கு தேவையான எல்லாம் ரெடியா இருக்கா பாத்துட்டியா ? “ என்று கேட்ட ரஞ்சித்தின் குரலில் ஆர்வமும் அதிகாரமும் கலந்திருந்தன. “ஆமா அண்ணா, எல்லாம் ரெடியா இருக்கு, இப்போ தான் செக் பண்ணி முடிச்சேன் “ என்று சஞ்சனா தன்னம்பிக்கை கலந்த புன்னகையுடன் கூறினாள்.
அவளின் புன்னகையை பார்த்த ரஞ்சத், ” நல்லது சஞ்சு, சரி நீ காலையில ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டியா ?” என்று அவன் விசாரித்த போது, அவனது குரலில் அவளை பற்றிய கவலை சஞ்சுவிற்கு தெளிவாகத் தெரிந்தது. அவள் லேசாக சிரித்தபடி, ” சாப்பிட்டேன் அண்ணா, என்ன பத்தி கவலைப்படாதீங்க “, என்று சொன்னாள்.
சஞ்சுவின் பதிலை கேட்டு ரஞ்சித் ஆமோதிப்பது போல் தலையசைத்தான். ” அப்போ சரி, நான் உன்னை மீட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி கான்ஃபரன்ஸ் ரூம்ல சந்திக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவள் அறையில் இருந்து வெளியேறினான்.
சஞ்சு தனது இருக்கையில் அமர்ந்த போது சஞ்சனாவின் போன் ஒலித்தது. ஆர்யன் அழைக்கிறான் என்பதை பார்த்து உடனே அவள் பதில் அளித்து, “ சொல்லுங்க ஆர்யன் ? ” என்றாள்.
” சஞ்சனா, இன்னைக்கு நடக்க போற மீட்டிங் சம்மந்தமான file எல்லாம் எங்க இருக்கு ?” என்று கேட்ட ஆர்யனின் குரல் எப்போதும் போலவே தெளிவாகவும் நேரடியாகவும் இருந்தது. அதற்கு சஞ்சு உடனே, “ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உங்க டேபிள் மேல வெச்சேன் ஆர்யன், பாருங்க “ என்று பதில் சொன்னாள்.
அவள் அழைப்பில் இருக்கும் போதே fileகளை கையில் எடுத்த ஆர்யன் பின்னர் அவளிடம், “ ஹ்ம்ம் இருக்கு சஞ்சனா, அப்புறம் இன்னைக்கு நடக்க போற மீட்டிங் தான் உனக்கு அதிகாரப்பூர்வமா முதல் மீட்டிங் அதனால நீ என்ன செய்யணும்னு இப்போவே சொல்றேன். நீ என் பக்கத்துல இருக்கணும். மீட்டிங்ல நடக்குற விவாதம் எல்லாத்தையும் குறிப்பெடுத்து அப்புறம் ஒரு விரிவான ரிப்போர்ட்டா எனக்கு ரெடி பண்ணி கொடுக்கணும் “ என்று அவளது வேலையை விளக்கமாக சொன்னான்.
” ஹ்ம்ம் சரி ஆர்யன், எனக்கு புரியுது ,” என்று சஞ்சு சொன்னதும், “ சரி, வா நாம கிளம்பலாம் ” என்று சொல்லி ஆர்யன் அழைப்பை துண்டித்தான். இருவரும் அவரவர் அறையில் இருந்து வெளியே வந்ததும் ஆர்யன் தனது வழக்கமான வேகமான, கம்பீரமான தோரணையுடன் முன்னால் நடந்தான், சஞ்சனா அவன் வேகத்திற்கு ஏற்ப அவனைப் பின்தொடர்ந்தாள்.
இருவரும் ஆர்யன் பயப்படுத்தும் லிப்டில் ஏறி கான்ஃபரன்ஸ் அறை இருக்கும் தளத்தை அடையும் வரை அமைதியாக இருந்தனர். ஆர்யன் மட்டும் அவளை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தான். ஆர்யன் கான்ஃபரன்ஸ் அறைக்குள் நுழைந்ததும், அங்கு கூடி இருந்த துறை அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று அவனுக்கு வணக்கம் சொன்னார்கள்.
ஆர்யன் பொதுவாக அவர்களுக்கு தலை அசைத்து விட்டு அவனது நாற்காலியில் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். ஆர்யனுக்கு அருகில் சஞ்சனா உட்கார்ந்ததும் ஆர்யன் ஆரம்பிக்கும்படி கூற, வினய் தன் பிரசன்டேஷனை ஆரம்பிக்கத் தயாரானான்.
அறையில் இருந்த அனைவரும் வினய் பேசுவதிலும், அவன் தரும் விளக்கத்திலும் மூழ்கி இருக்க மானசியின் கண்கள் மட்டும் ஆர்யன் மீது நிலைத்திருந்தது. அவனது ஆளுமை மற்றும் கம்பீர அழகை கண்டு அவள் பார்வையில் வியப்பு மின்னியது. இதற்கிடையில், டேனியலின் கவனம் முற்றிலும் திசை திருப்பப்பட்டது, நடந்து கொண்டிருந்த விவாதங்களை மறந்து, அவனது கண்கள் சஞ்சனாவின் மீது பதிந்தன. எப்போதும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆர்யன், டேனியலின் கவனச்சிதறலைக் கவனித்து கண்களைச் சுருக்கினான்.
வினய், அவன் தயாரித்த தகவல்களை திரையில் காட்டி திறம்பட விளக்கினான். அவர்களின் புதிய தயாரிப்பின் வெளியீட்டிற்கான மூலோபாயம் மற்றும் தரவை பற்றி அவன் தெளிவாக விளக்கினான். சஞ்சனா சிரத்தையுடன் முக்கியமான குறிப்புகளை எடுத்துக் கொண்டாள், முக்கிய புள்ளிகளின் தரப்படியலையும் எழுதியவள், எதுவும் தவறவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினாள்.
இவற்றுக்கு இடையில் ஆர்யனின் கவனம் டேனியல் மீது மீண்டும் திரும்பியது. அவனை கூர்மையாக கவனித்த ஆர்யன், டேனியல், வினய் பேசுவதில் கவனம் செலுத்துவதை விட சஞ்சனாவை பார்த்துக் கொண்டிருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது தெரிந்து, ஆர்யனின் தாடை இறுகியது.
சில நிமிடங்கள் வர பொறுத்திருந்த ஆர்யன், டேனியலின் பார்வை சஞ்சனாவை விட்டு விலகவில்லை என்றதும் தனது பொறுமை இழந்தான்.
“வினய், நீங்க ஒரு நிமிஷம் நிறுத்துங்க ” என்று சொல்லி ஆர்யன் தனது உறுதியானது குரலில் இடைமறித்தான். “நீங்க இதுவர சொன்ன தகவல், டேட்டா எல்லாம் ஏத்துக்குற அளவுல நிச்சயமா இருக்கு அதனால உடனே ஆட்சேர்ப்புகள ஆரம்பிச்சுடுங்க அது மட்டும் இல்ல எதிர்பாராத சூழ்நிலைகள கையாள மார்க்கெட்டிங் டீம் எப்போவும் தயாரா இருக்குறத உறுதி பண்ணுங்க “ என்று கூறினான்.
வினய் நிம்மதியடைந்து புன்னகையுடன் சரி என்று கூறினான் பிறகு ஆர்யன் தன் பார்வையை டேனியலை நோக்கித் திருப்பினான். டேனியல் இன்னும் சஞ்சுவை பார்த்துக் கொண்டு தன் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் கனவுடன் சஞ்சனாவை வெறித்து பார்ப்பதை கண்டு கோவத்தில் தனது முஷ்டியை மடக்கிய ஆர்யன், “ மிஸ்டர் டேனியல் “ என்று அழைத்த போது அவனது குரல் கூர்மையாக அறையில் ஊடுருவியது.
ஆர்யனின் குரலை அந்த அறையை நிசப்தம் ஆக்கியது. ஆர்யன் தன்னைப் பார்த்துப் பேசுகிறான் என்பதை உணர்ந்த டேனியல் தன் கனவு உலகத்தில் இருந்து மீண்டு வேகமாக கண் சிமிட்டி, “ சொல்லுங்க சார்…”, என்று சொன்னான்.
” ஒரு புது காஸ்மெடிக் அறிமுகப்படுத்துறது தொடர்பா நாம எல்லாரும் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கோம். ஒருவேள உங்களுக்கு இதுல ஆர்வம் இல்லனா இப்போவே நீங்க இந்த ரூம் விட்டு வெளிய போகலாம். உங்க இடத்துல இருந்து இன்னும் நல்லா வேலை செய்யக்கூடிய, முக்கியமா வேலையில அக்கறை இருக்க ஒருத்தர என்னால உடனே கொண்டு வர முடியும் “ என்று சொன்ன ஆர்யனின் குரலில் சந்தேகத்திற்கு இடமில்லாத எச்சரிக்கை இருந்தது. மேலும் ஆர்யனின் முகபாவம் மறுக்க முடியாத அளவுக்கு விரக்தி தெரிந்தது. அவனின் வார்த்தையை தொடர்ந்து அறை ஒரு தர்மசங்கடமான நிசப்தத்தில் ஆழ்ந்தது.
டேனியல் சட்டென உஷாராக இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து, ” மன்னிச்சிடுங்க சார். நான் இப்போ என்னோட விளக்கக்காட்சியை ஆரம்பிக்குறேன் “ என்று கூறி நிலைமையை சமாளிக்க நினைத்தான். ஆனால் ஆர்யன் அவனிடம் இருந்து தனது பார்வையை விலக்கவே இல்ல. ” என் ஆபீஸ்ல வேலை செய்றவங்க யாரா இருந்தாலும் சரி, இந்த கம்பனியோட விதிகளுக்கு கட்டுப்பட்டு, நேர்மையா, ஒழுக்கமா இருக்கணும், இதுல எந்த காரணத்துக்காகவும் நான் சமரசம் செய்ய மாட்டேன். இப்போ உங்க விளக்ககாட்சிய ஆரம்பிக்கலாம் “ என்று அழுத்தமாக சொல்லி தெளிவுப்படுத்தினான்.
டேனியல் ஒரு நொடி பயத்தில் விழுங்கினான். ஆர்யன் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்குள் முன்னால் சென்று விரைவாக தனது விளக்கக்காட்சியை தொடங்கினான். இந்த முறை சஞ்சனாவை விட தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினான். அடுத்து வந்த மானசி, தன்னம்பிக்கையுடன் தனது விளக்கத்தை கொடுத்தாள். அவரவர் விளக்கக்காட்சிகளை பற்றி விளக்கி முடித்ததும், ஆர்யன் சற்று பின்னால் சாய்ந்து விவாதங்களை மதிப்பீடு செய்தான். அனைவரும் அவன் என்ன சொல்வான் என்று பதற்றத்துடன் இருந்தனர்.
” எல்லாமே சரியா தான் இருக்கு “ என்று ஆர்யன் சொன்னதும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
” ரஞ்சித், இவங்க கூட சேர்ந்து மேற்கொண்டு வேலையெல்லாம் நீ பாரு, நம்ம புது காஸ்மெடிக் அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள நீ பாத்துக்கோ. இந்த புது காஸ்மெடிக், இதுவர நாம அறிமுகப்படுத்துனதுலயே சிறந்ததா இருக்கணும் அது மட்டும் இல்ல காஸ்மெடிக் இண்டஸ்ட்ரீஸ்ல நம்ம தயாரிப்பு தான் முன்னணியா இருந்து மார்க்கெட்ல ஆதிக்கம் செலுத்தனும் “ என்று ஆர்யன் கூறியதும், “ புரியுது சார், நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன் ” என்றான் ரஞ்சித்.
” நாம புது காஸ்மெடிக் அறிமுகப்படுத்துன உடனேயே நேரடியா வாடிக்கையாளர்கள் கிட்ட இருந்து கருத்துக்கனிப்பு, நம்ம பொருள் அவங்களுக்கு எந்த அளவுக்கு புடிச்சு இருக்குனு கருத்து கேட்க ஏற்பாடு செய், நம்பிக்கையான ஆளுங்க மூலமா சரியான, நேர்மையான கருத்துக்கள தான் நான் கேட்க விரும்புறேன் “ என்று ஆர்யன் சொன்னதும், “ உங்களுக்கு தேவையான ரிப்போர்ட் எல்லாம் சரியா கிடைக்க நான் ஏற்பாடு செய்றேன் சார்,” என்று டேனியல் விரைவாக பதிலளித்து, தான் வேலையை முழுமையாக கவனத்துடன் செய்வதை காட்ட முயற்சித்தான்.
” சார், நம்ம புது காஸ்மெடிக் சந்தையில ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும் அது மட்டும் இல்ல நம்ம கம்பனிக்கு பெரிய லாபத்தை கொடுக்கும்னு நான் நம்புறேன்” என்று மானசி உற்சாகமாக கூறினாள்.
ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை சொல்ல, அதை கேட்ட ஆர்யன் லேசாக தலையசைத்து, “ எல்லாம் நாம நினைக்குற மாதிரி நடக்கணும். இந்த மீட்டிங் இதோட முடியுது நீங்க போகலாம் “ என்று சொல்லி தனது இருக்கையில் இருந்து எழுந்தான்.
அறையில் இருந்த அனைவரும் சென்ற பிறகு யோசனையில் ஆழ்ந்திருந்த ஆர்யன் வெளியேறினான், சஞ்சனா மீண்டும் அவனை பின்தொடர்ந்தாள். இருப்பினும், ஆர்யன் தனது அறைக்குள் நுழைவதற்கு சற்று முன்பு, ரஞ்சித்தை தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்தான். சொல்லப்படாத கட்டளையைப் புரிந்து கொண்ட ரஞ்சித் உடனடியாக அதற்கு இணங்கி, ஆர்யனின் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான்.
” ரஞ்சித், டேனியல் சரி இல்ல, அவன் மேல ஒரு கண்ணு வை “ என்று ஆர்யன் உறுதியான, தாழ்ந்த குரலில் சொன்னதும் இந்த உரையாடலை எதிர்பார்த்திருந்த ரஞ்சித்தும் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான். “ஆமாங்க சார். அவனோட நடத்தையை நான் ஏற்கனவே பல முறை கவனிச்சு இருக்கேன். அவன் நம்ம ஆபீஸ்ல இருக்க கிட்டத்தட்ட எல்லா பொண்ணுங்க கூடவும் பேசி கிண்டல் பண்றது, கடல போடுறதுனு உல்லாசமா தான் இருக்கான் “ என்று ரஞ்சித் சொன்னதும், ஆர்யனின் தாடை கோவத்தில் இறுகியது.
“ என்ன சொல்ற ? எல்லார்கிட்டயுமா ? “ என்று கேட்ட அவனுடைய குரல் நிலைமையின் தீவிரத்தை உறுதிப்படுத்த விரும்புவதைப் போல் கூர்மையாக இருந்தது. அதற்கு ரஞ்சித் உடனே, “ ஆமாங்க சார், வேலை செய்வான் ஆனா அதே சமயம் தேவையில்லாத விஷயங்கள் கொஞ்சம் செய்றான். இதுவர பெண் ஊழியர்கள் யாரும் அவன் மேல புகார் கொடுக்கல, எல்லாரும் அவன் செய்றத ஒரு விளையாட்டா தான் பாக்குறாங்க. அவன் நிறைய மீட்டிங்ல இது மாதிரி நடந்துட்டு இருக்கான். இன்னைக்கு நடந்தது கூட ஒரு உதாரணம் தான் “ என்று ரஞ்சித் சொன்னதும், ஆர்யனுக்கு கான்பரன்ஸ் அறையில் நடந்த காட்சி அவன் மனதில் ஓடியது. டேனியல், சஞ்சுவை பார்த்த விதம் விரக்தியை கொடுக்க, ” அவன உன்னிப்பாக கவனி ரஞ்சித் ” என்று சொன்னான் ஆர்யன்.
ஆர்யனின் வார்த்தைகளின் கனத்தைப் புரிந்து கொண்ட ரஞ்சித் உறுதியாகத் தலையசைத்தான். ” அப்படியே செய்றேன் சார் “ என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினான்.
சஞ்சனாவும், பவித்ராவும் மதிய உணவு சாப்பிட சென்றனர். அவர்கள் ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து அமர்ந்த போது, டேனியலும், மானசியும் வந்து அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தனர்.
” ஹாய் சஞ்சனா. ஆர்யன் கூட வேலை செய்றது எப்படி இருக்கு, வசதியா இருக்கா, பழகிடுச்சா ? “ என்று கேட்டு மானசி தலையை லேசாக சாய்த்து புன்னகைத்தாள்.
சஞ்சனா அமைதியான புன்னகையுடன் அவள் பார்வையை எதிர்கொண்டு,” ஆமா மானசி, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அது மட்டும் இல்ல இந்த டபுள் கேம் ஆடுறவங்கள எப்படி கையாளணும்னு கூட இப்போ நான் கத்துகிட்டேன் “ என்று கூறினாள். சஞ்சுவின் பதிலை கேட்டு மானசி ஒரு கணம் உறைந்து போனாள், அவள் விரல்கள் அவள் கையிலிருந்த ஸ்பூனை இறுக்கமாக பிடித்தன.
மானசி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக் இருப்பதை பார்த்து சஞ்சு தனது புருவத்தை உயர்த்தினாள். ” என்ன ஆச்சு மானசி ? நீங்க வழக்கத்துக்கு மாறா ரொம்ப அமைதியா இருக்கீங்க ? “ என்று சஞ்சு கேட்க, மானசி சட்டென்று தலையை மறுத்து ஆட்டி, “ ஒண்ணுமில்ல சஞ்சனா. சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று சொல்லி மறுவார்த்தை பேசாமல் எழுந்து விறுவிறுவென்று அங்கிருந்து சென்றாள்.
பவி மெல்ல சிரித்தபடி சஞ்சனாவின் அருகில் சாய்ந்து, “ என்ன ஆச்சு, ஏதாவது பண்ணி மாட்டிகிட்டாளா ? “ என்று கேட்டாள். சஞ்சனா சிரித்தபடி, ” ஹ்ம்ம், ஆமா பவி, அவ விளையாட்டை எனக்கு எதிராக விளையாட நெனச்சா “ என்றாள். அதை கேட்டதும், ” அவள குறைச்சு எடை போடாத சஞ்சு, கொஞ்சம் ஜாக்கிரதையா இரு “, என்று பவித்ரா அவளை எச்சரித்தாள்.
“அவ என்ன வேணும்னாலும் செய்யட்டும். என்னால அவள சமாளிக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் பதிலளித்தாள் சஞ்சனா. அதுவரை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த டேனியல் திடீரென்று ஒரு புன்னகையுடன், “ சஞ்சனா, இன்னிக்கு நாம காபி சாப்பிடப் போகலாமா ?” என்று கேட்டான்.
மீண்டும் அவன் வேலையை ஆரம்பித்து விட்டான் என்று நினைத்த சஞ்சு, “ உங்களுக்கு காபி தானே குடிக்கணும் ? அதை ஏன் இங்கேயே வாங்கி குடிக்க கூடாது ? ” என்று கேட்டாள் அதற்கு டேனியல் உடனே, “ சஞ்சனா நான் உங்கள என் கூட டேட் வர சொல்லி கேட்குறேன் “ என்று சொன்னான்.
“ என்னது டேட் வர சொல்லி கேட்குறீங்களா ? “ என்று கேட்டு சஞ்சனா முகம் சுளித்தாள். ” ஆமா, காபி ஷாப் போகலாம் இல்ல நைட் டின்னர் சாப்பிட போகலாம் “ என்று கேட்டு டேனியல் சாதாரணமாக தோள்களைக் குலுக்கினான். ஆனால் சஞ்சனாவின் முகபாவம் இறுகியது. ” டேனியல், என்கிட்ட இந்த மாதிரி பேசுறத தயவு செஞ்சு நிறுத்துங்க. நீங்க நினைக்குற மாதிரி ஆள் நான் இல்ல. என்ன விட்டு விலகி இரு. அது தான் உங்களுக்கு நல்லது “ என்று எச்சரித்து சொல்லிவிட்டு, “ பவி, வா போகலாம்.” என்று அவளை தன்னுடன் அழைத்தாள்.
சஞ்சனாவும், பவியும் எழுந்து சென்றதும், டேனியல் வேடிக்கையான புன்னகையுடன் அவர்களைப் பார்த்தான். சஞ்சு தன் அறையை அடைந்ததும், ரஞ்சித் அவள அணுகி, “சஞ்சனா, டேனியல் உன்னைத் தொந்தரவு செய்றானா ? “, என்று கேட்டான்.
சஞ்சனா தன் கவலையை உதறித் தள்ளி, ” இல்ல அண்ணா, அவன் ஒரு பைத்தியம், என்ன அவன் கூட காபி டேட் வர சொல்லி கூப்பிட்டான் “ என்று அவள் சொன்னதும் கோவத்தில் ரஞ்சித்தின் கண்கள் சுருங்கின. ” என்ன ? அவன் உன்ன கூப்பிட்டானா ?”, என்று அதிர்ச்சியில் கேட்டான்.
சஞ்சனா ஆம் என்று முணுமுணுத்து, “ ஆனா தயவு செஞ்சு இந்த விஷயத்த பத்தி உங்க சார் கிட்ட சொல்லாதீங்க. டேனியலை என் கிட்ட இருந்து விலகி இருக்க சொல்லி நானே அவன எச்சரிக்க பண்ணிட்டேன் “ என்று சொன்னாள். அவள் வார்த்தையை கேட்ட ரஞ்சித், “ சரி, ஆனா அடுத்த முறை அவன் உன் கிட்ட வந்து இது மாதிரி எதாவது பேசினா நீ உடனே என் கிட்ட சொல்லணும் இல்ல என்ன கூப்பிடனும் “ என்றான். அதற்கு சஞ்சனா தலையசைத்து, “ சரி “ என்றாள்.
அப்போது இண்டர்காமில் அவளை அழைத்த ஆர்யன், “ சஞ்சனா, என் கேபினுக்கு வா ” என்று அவளை அழைத்தான். சஞ்சு ஒரு ஆழமான மூச்சை எடுத்துக் கொண்டு அவனது அறையை நோக்கி நடந்தாள். அவள் உள்ளே நுழைந்ததும், ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து அவளை கவனமாகப் பார்த்து, “ நம்ம ஆபீஸ்ல உனக்கு எல்லாம் வசதியா இருக்கா ? யாரவது உனக்கு எதாவது பிரச்சன கொடுக்குறாங்களா ? “ என்று கேட்டான்.
ஆர்யனின் கேள்வியால் சஞ்சனாவின் மனம் படபடத்தது. “ இவரு ஏன் இப்படிக் கேட்குறாரு ? ஒருவேள டேனியல் பத்தி தெரிஞ்சி இருக்குமோ ? “ என்று மனதில் நினைத்தவள், நிலைமையை சமாளிக்க, முகபாவத்தை நடுநிலையாக வைத்துக் கொண்டு, ” இல்லையே, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நான் வேலையில பிஸியா இருக்கேன் “ என்று கூறினாள்.
ஆர்யனின் பார்வை அவள் மீது நிலையாக இருந்தது. ” சரி, எல்லாரும் உன் கிட்ட எப்படி பழகுறாங்க ? “ என்று அவன் கேட்டதும் சஞ்சனா தோள்களைக் குலுக்கி, “ நான் அதிகம யார் கிட்டயும் இன்னும் பேசல அதனால இப்போ பதில் சொல்ல முடியாது “ என்று பதில் சொன்னாள்.
ஆர்யன் யோசித்தபடி சரி என்று தலையசைத்ததும் சஞ்சனா வெளியேறத் திரும்பினாள், ஆனால் ஆர்யன், ” சஞ்சு, டார்லிங்…” என்று அழைத்ததும் சஞ்சனா திரும்பி அவனை நோக்கி ஆள்க்காட்டி விரலைக் காட்டி, ” என்ன டார்லிங் சொல்லி கூப்பிடாதீங்க, என்ன புரிஞ்சிதா ? “ என்று எச்சரித்தாள்.
அவள் கோவத்தை பார்த்து சிரித்த ஆர்யன்,” இங்க இருக்க குறிப்பிட்ட சில ஆளுங்க கிட்ட இருந்து கொஞ்சம் நாள் வர விலகி இரு ” என்று சொன்னான். அவன் வார்த்தையை கேட்ட சஞ்சனா கைகளைக் கட்டிக் கொண்டு, ” நீங்க எப்போ என்ன எது செய்ய சொன்னாலும் இதுவர அதுக்கு காரணம் சொல்லி இருக்கீங்களா ? என்ன அதிகாரம் பண்ண மட்டும் தானே உங்களுக்கு தெரியும். என்ன, நான் சொல்றது சரி தானே ?” என்று கேட்டாள்.
முன்னால் குனிந்து மேஜை மேல் முழங்கையை ஊன்றிய ஆர்யனின் கண்களில் குறும்பு பளபளத்தது. ” ஸ்வீட் ஹார்ட், நான் சொல்றதைக் கேளு. அப்புறம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? கோவமா இருக்கும் போது நீ ரொம்ப அழகா இருப்ப “ என்று சொல்லி அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தான். உடனே சஞ்சனா முஷ்டியை மடக்கி, “ உங்க வாய மூடுங்க ஆர்யன் ” என்று சொல்லி அவன் அறையை விட்டு வெளியேறி கோவத்தில் முகத்தை மூடிக்கொண்டாள். அப்போது அந்த தளத்துக்கு வந்த மானசி, சஞ்சுவின் நடவடிக்கையை பார்த்து அவள் வெட்கப்படுவதாக புரிந்து கொண்டு உறைந்து போனாள். அவள் மனதில் சந்தேகம் கொழுந்துவிட்டு எரிய, “ சஞ்சனா வெட்கப்பட்டாளா ? “ என்று தனக்குத்தானே அதிர்ச்சியில் கேட்டுக் கொண்டாள்.
மானசி திரும்பி டேனியலைத் தேடி விரைந்தவள், அவனது இருக்கையில் இருப்பதை கண்டு அவன் அருகில் சென்றாள். ” டேனியல், என் கூட food court வா. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் “, என்று அவள் சொன்னதும் டேனியல் புருவத்தை உயர்த்தினான். “அப்படி என்ன அவசரம்?” என்று கேட்டு அவனை பின்தொடர்ந்து சென்றான்.
யாருக்கும் கேட்காதபடி ஒரு மூலையில் இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்ததும், “ டேனி, ஆர்யன் ரூம்ல இருந்து சஞ்சனா வர்றதா நான் பார்த்தேன் “ என்று மானசி கிசுகிசுத்தாள். அதை கேட்டதும், “ இதுல என்ன பெரிய ரகசியம் இருக்கு ? அவ அவனோட PA அதனால அவன் ரூமுக்கு போக தான் செய்வா “ என்று சொல்லி டேனியல் சிரித்தான்.
மானசி கண்களை உருட்டி, “ முட்டாள். அவ வித்தியாசமா இருந்தா, அவ வெட்கப்பட்டு வெளியே வந்தா. ஏதோ நடக்குது.” என்று சொன்னாள். அதை கேட்டு டேனியல் ஆச்சர்யத்துடன் முன்னால் சாய்ந்து, “ உண்மைய தான் சொல்றியா ?” என்று கேட்டான்.
” ஆமா, நான் அவள என் வழியில இருந்து விலக்கி வைக்கணும். அதுவும் இல்லாம நான் ரெண்டு வருஷமா ஆர்யன் கிட்ட நெருங்க காத்திருக்கேன். உனக்கு அவ மேல ஒரு கண்ணு இருக்குனு எனக்கு தெரியும் அதனால எனக்கு உதவி செய், இதுல நம்ம ரெண்டு பேருக்கும் லாபம் இருக்கும் “ என்று மானசி அவனிடம் கேட்டாள்.
” சரி, நான் உனக்கு உதவுறேன். ஏதாவது பிளான் பண்ணுவோம்.” என்று டேனியல் சம்மதம் சொன்னதும் மானசியின் கண்கள் பளபளத்தன. ” நல்லது. காலம் கடந்து போறதுக்குள்ள நாம சீக்கிரம் எதாவது செய்யணும் “ என்று சொன்னாள். அதை கேட்டு, “ கவலைப்படாத,” என்று டேனியல் அவளுக்கு உறுதியளித்து, “ நான் சொல்ற மாதிரி செய், இன்னைக்கே இந்த வேலையை முடிக்கலாம் “ என்று அவளிடம் கூறினான்.
அன்று மாலை, சஞ்சனா தனது காரை நோக்கி நடந்து சென்ற போது, டேனியல் அவளை அழைத்து அவளை நோக்கி நடந்தான். அவளை நெருங்கியதும் அவன் தடுமாறுவது போல் நடித்து ஆதரவுக்காக சஞ்சுவின் தோளைப் பிடித்தான். பின்னர் சுதாரித்து, ” ஸாரி சஞ்சனா, கால் இடறிடுச்சு “ என்று சொல்லி அப்பாவி போல நடித்தான்.
கோவத்தில் கொந்தளித்த சஞ்சு அவனை முறைத்து, “ டேனியல், நான் உங்கள கடைசி முறையா எச்சரிக்கிறேன். என்ன விட்டு விலகி இருங்க ” என்று சொன்ன அவள் குரல் எரிச்சல், எச்சரிக்கையும் நிரம்பி இருந்தது.
டேனியல் தற்காத்துக் கொள்வதற்காகக் கைகளை உயர்த்தினான். ” கூல், சஞ்சனா. நான் அதை வேணும்னு செய்யல. இது தற்செயலா தான் நடந்துச்சு. நீ என்ன தப்பா புரிஞ்சிக்குற “ என்று சொல்லி சமாளித்தான்.
” நீங்க யாரா இருந்தாலும் எனக்கு கவலையில்ல, எதையும் தப்பா புரிஞ்சிக்கவோ இல்ல உங்கள பத்தி சிந்திக்கவோ எனக்கு நேரமில்ல. என்ன விட்டு விலகி இருங்க. அது தான் உங்களுக்கு நல்லது “ என்று சீறினாள்.
டேனியல் பெருமூச்சு விட்டான். ” சஞ்சனா, நீங்க மோசமான மனநிலையில் இருக்கீங்கனு நினைக்கிறேன். நாம நாளைக்குப் பேசலாம்.” என்று சொன்னான் அதற்கு சஞ்சனா உடனே, “ நீங்க எப்ப பேசினாலும் நான் இப்படி தான் பேசுவேன் அதனால ஒழுங்கா இருங்க “ என்று மீண்டும் அவனை எச்சரித்து விட்டு மறுவார்த்தை பேசாமல் காரில் ஏறி புறப்பட்டாள்.
மறைந்திருந்து நடந்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மானசி தனது மொபைலை பிடித்தபடி வெளியே வந்தாள். டேனியல் சஞ்சனாவின் தோளைப் பிடித்திருப்பது போன்ற படங்களை அவனிடம் காட்டி சிரித்தாள்.
” சரியா இருக்கு ” என்று முணுமுணுத்த டேனியல், “ இப்போ இதை நம்ம ஆபீஸ் ஆளுங்களுக்கு குறிப்பா ஆர்யனுக்கு அனுப்புவோம். அவனுக்கு ஏற்கனவே பொண்ணுங்கள புடிக்காது. இப்போ இத பார்த்த உடனே அவள வேலைய விட்டு அனுப்பிடுவான் “ என்று சொல்லி சிரித்தான்.
” ஆமா டேனி, இப்போவே இத எல்லாருக்கும் அனுப்பு “ என்றுன் மானசி சொன்னாள் ஆனால் டேனியல் மறுத்து தலையை ஆட்டி, “ இப்ப வேண்டாம். நாளைக்கு காலையில அனுப்புவோம். அவ ஆபீஸ் உள்ள நுழையும் போது, எல்லோரும் அவள வித்தியாசமாக பார்ப்பாங்க. அப்புறம் எல்லாரும் அவள என் கூட சேர்த்து வெச்சு பேசுவாங்க “ என்று தனது திட்டத்தை கூறினான்.
“வாழ்த்துக்கள், டேனியல்.” என்று மானசி சிரித்தாள்.
அந்தப் புகைப்படத்தை மீண்டும் பார்த்த டேனியலின் உதடுகளில் ஒரு முறுக்கேறிய புன்னகை விளையாடியது. ” நாளைக்கு இருக்கு கச்சேரி அது அர வெயிட் பண்ணு சஞ்சனா. இந்த போட்டோவ பார்த்த அப்புறம் ஆர்யன் உன்ன அவனுக்கு வேலை செய்ய விருப்பப்பட மாட்டான். நீ எனக்கு தான் சஞ்சனா பேபி” என்று முணுமுணுத்தான்.
*********************
முன்னோட்டம் :
” என்ன நடந்தாலும் சரி, உன்ன பத்தி எப்பவும் தாழ்வா நினைக்காத. ஒரு விஷயம் எப்பவும் உனக்கு ஞாபகம் இருக்கட்டும், ஆர்யன் எப்பவும் உன் கூட இருப்பான். புரியுதா ? “

1 comment
[…] Chapter 9 […]