Home FamilyChapter 12

Chapter 12

by Siragugal Novels
22 views

மருத்துவமனையில் உறங்காமல் யோசித்து கொண்டிருந்த மானசி பின்னிரவில் தனது மொபைலை எடுத்து டேனியலின் எண்ணை டயல் செய்தாள்.

சில நொடிகள் கழித்து டேனியல் அவள் அழைப்புக்கு பதில அளித்து, “ மானசி, என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க, எதாவது பிரச்சனையா ? “ என்று கேட்டான். ” அதெல்லாம் இல்ல டேனியல், நான் உனக்கு ஒரு மொபைல் நம்பர் அனுப்பி இருக்கேன், நீ அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசு. அடுத்து என்ன செய்யணும்னு அவங்க உனக்குச் சொல்லுவாங்க. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், நீ உன்னோட நம்பர்ல இருந்து பேசாத, ஒரு புது சிம் கார்டு வாங்கி அதுல இருந்து அவங்க கிட்ட பேசு. இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது “ என்ற சொன்ன மானசியின் குரல் உறுதியாக இருந்தது. ” 

அவளின் வார்த்தையை கேட்ட டேனியல் ஒரு கணம் தயங்கினான். பின்னர், ” யார் அவங்க ?” என்று அவளிடம் கேட்டான். அதற்கு மானசி, “ நீ அவங்க கிட்ட பேசும் போது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம் டேனி, அவங்க கிட்ட பேசு ” என்று கூறினாள்.

” சரி, நான் பார்த்துக்குறேன் ” என்று சொல்லி டேனியல் அழைப்பை துண்டித்தான். பின்னர் மானசி சொன்ன அந்த மர்மமான நபரிடம் பேச அந்த எண்ணை தொடர்பு கொண்டான். மறுமுனையில் பேசிய ஒரு பெண் தனது அடையாளத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாமல் டேனியல் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தையும் அதை செயல்ப்படுத்த  துல்லியமான வழிமுறைகளையும் அவனிடம்  சொன்னாள்.டேனியல் அவள் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டு அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல், ஆபத்து எல்லாம் அறிந்து அதை செயல்படுத்த குறிப்புகளை உருவாக்கினான்.

மறுநாள் காலை, சஞ்சனா உடை அணிந்து தயாராகி காலை உணவுக்காக டைனிங் அறைக்கு சென்றாள். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை ஆர்யனால் மறுக்க முடியவில்லை. மகிழ்ச்சியில் அவள் முகம் ஒளிர்த்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பின்னர் ஒரு கிரெடிட் கார்டை மேஜையின் குறுக்கே அவளை நோக்கி நகர்த்தினான். 

” இந்த கார்டு கொண்டு போ, உனக்கு என்ன தேவையோ அது எல்லாத்துக்கும் இத பயன்படுத்திக்கோ ” என்று ஆர்யன் சஞ்சுவிடம் கூறினான். அவன் கூறிய தொனி சாதாரணமாக இருந்தாலும் அவள் மறுக்க கூடாது என்று சொல்வது போல அதிகாரத் தொனியில் இருந்தது.

ஆர்யன் கொடுத்த கார்டை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று தெரியாமல் சஞ்சு தயங்கினாள். இதை கவனித்த ஆர்யனின் முகபாவம் இறுகியது. ” நீ இந்த கார்டு எடுத்துக்க தயாரா இல்லனா, நீ எங்கேயும் போக வேண்டாம் வீட்ல இரு “ என்று ஆர்யன் திட்டவட்டமாக கூறி கார்டை கையில் எடுத்து அவளிடம் நீட்டினான்.

சஞ்சனா வேறு வழி இல்லாமல் அவன் கையிலிருந்த கார்டை  வாங்கிக் கொண்டாள்.

” ஜாக்கிரதையா போய்ட்டு வா அப்புறம் உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா எனக்கு உடனே போன் பண்ணு ” என்று காபியை உறிஞ்சியபடியே ஆர்யன் சொன்னான். அவன் சொன்னதை கேட்டதும் சஞ்சனா சிரித்தாள். ” நீங்க தான் என் பிரச்சனை ஆர்யன். நீங்க வீட்ல இருந்தீங்கன்னா நான் நிச்சயம் பாதுகாப்பா இருப்பேன் ” என்று சஞ்சு சொன்னதும், “ நீ ரொம்ப பேசுற டார்லிங் “, என்று சொல்லி ஆர்யன் சிரித்தான்.

சஞ்சு அவனுக்கு எதுவும் பதிலடி கொடுப்பதற்குள் அவளது மொபைல் ஒலித்தது. பவித்ராவின் பெயரை பார்த்ததும் அழைப்புக்கு பதிலளித்த சஞ்சனா, சில வார்த்தைகளை பரிமாறிக்கொண்டாள் பின்னர் மாலில் அவளுக்காக காத்திருப்பதாக சொன்ன பவித்ராவை சந்திக்க வீட்டை விட்டு புறப்பட்டாள். 

சஞ்சு மாலுக்கு சென்ற போது பவி ஏற்கனவே நுழைவாயிலில்  அவளுக்காகக் காத்திருந்தாள். சஞ்சுவை பார்த்ததும், “ ஹாய், சஞ்சு ” என்று பவி அவளை உற்சாகமாக வரவேற்றாள். சஞ்சுவும் அதே உற்சாகத்துடன் அவளிடம் சென்றாள்.  

” இன்னைக்கு நமக்கு நிறைய பிளான் இருக்கு. முதல்ல ஷாப்பிங் செய்வோம் அப்புறம் மதிய லஞ்ச் சாப்பிடலாம் கடைசியா படம் பார்க்க போலாம், என்ன ஓகே வா ? “ என்று பவி கேட்க, “ ஹ்ம்ம் சரி “ என்று சொல்லி சஞ்சனா புன்னகைத்தாள்.

இருவரும் சிறிது நேரம் அந்த மாலில் இருந்த கடைகளை பார்த்து சுற்றி திரிந்தனர் பின்னர் பொறுமையாக ஒவ்வோரு கடையாக சென்று ஆடைகளையும் அதற்கு மேட்சிங் அணிகலன்களையும் தேர்ந்தெடுத்தனர். ஷாப்பிங் செய்து முடித்த பின்னர் பீட்சா கார்னருக்குச் சென்று, தங்கள் பசியைப் போக்கும் ஆர்வத்தில் அமர்ந்தனர்.

இருவரும் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த போது பவி ஏதோ ரகசியம் சொல்வது போல் முன்னால் சாய்ந்தாள். “ சஞ்சு, நான் நேத்து நைட்டு ஒரு கனவு கண்டேன்.” என்று அவள் உற்சாகமாக சொன்னதும், “அப்படியா ? அப்படி என்ன கனவு ? “ என்று சஞ்சனா புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

” ஒரு அழகான மனுஷன் என்ன அப்படியே  கட்டிப்பிடிச்சு நெத்தியில  முத்தம் கொடுத்தான் ” என்று கனவுப் பெருமூச்சு விட்டபடி சொன்னாள் பவி. அதை கேட்டு சஞ்சனா சிரிக்க ஆரம்பித்தாள். ” நெத்தியில ஒரு முத்தம் கொடுத்ததுக்கா இப்படி இவ்ளோ  உற்சாகமா இருக்க ?”, என்று சஞ்சு கேட்க, பவி நெஞ்சை பிடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டான். ” ஏய், நெத்தியில முத்தம் கொடுக்குறது உனக்கு அவ்ளோ சாதாரணமான விஷயமா ? அதுக்கு எவ்ளோ அர்த்தம் இருக்கு தெரியுமா ? “ என்று பவி அவளிடம் மூச்சிறைக்க கேட்டாள்.

சஞ்சனா கண்களை உருட்டினாள். ” சரி, அதுக்கு அப்படி என்ன அர்த்தம் சொல்லு “ என்று கேட்டவள் பதில் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாள்.   

” ஒரு பையன் நம்ம கிட்ட உனக்காக வாழ்க்க முழுக்க உன் கூடவே வருவேன், எப்போவும் எந்த சூழ்நிலையிலையும் உன்கூடவே இருப்பேன், நீ எனக்காக பொறந்தவ, நீ எனக்கு மட்டும் தான் அப்படினு உரிமைய வார்த்தையால சொல்லாம சொல்றது தான் நெத்தியில கொடுக்குற முத்தம். அவன் எப்பவும் நம்மள பதுக்காப்பான், என்ன நடந்தாலும் நம்மள விட்டுகொடுக்க மாட்டான். அதோட அவன் நெத்தில முத்தம் கொடுக்கும் போது அந்த நொடி நாம அவன் கூட இருக்கும் போது பாதுக்காப்பா உணர்வோம் “ என்று பவி நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

பவித்ரா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கேட்ட சஞ்சனாவின் புன்னகை மங்கிப் போனது, அவள் மனம் ஆர்யனை பற்றி நினைவுப்படுத்தியது.  “ அவர் நிறைய முறை என் நெத்தியில முத்தம் கொடுத்து இருக்காரு. அப்போ அதுக்கு அர்த்தம் என்ன ? இத்தன நாளா அவர் என்ன காப்பாத்திட்டு தான் இருக்காரா ? இந்த பவி ஏன் இப்படி என் மனச குழப்பி விட்டுட்டே இருக்கா ? “ என்று மனதில் நினைத்து வியந்தாள். 

ஆர்யனை பற்றியை சிந்தனையில் மூழ்கியிருந்த சஞ்சு, உணவு எப்போது அவள் முன்னால் வைக்கப்பட்டது என்பதை கூட கவனிக்கவில்லை. இருவரும் மௌனமாக உணவை சாப்பிட்டு முடித்தனர். பின்னர் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார்கள். இருவரும் சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டு படம் பார்த்தார்கள். இடைவேளையின் போது, இருவரும் கொஞ்சம் பாப்கார்ன் வாங்கி ஒன்றாக தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவித்தனர். படம் முடிந்ததும் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.

“ஆஹா, இன்னைக்கு எனக்கு ஒரு அற்புதமான நாளா இருந்துச்சு, நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் “  என்று கைகளை நீட்டியபடி சொன்னாள் பவி. அதற்கு சஞ்சுவும், ” ஆமா பவி, நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். இந்த பிளான் போட்டதுக்கு உனக்கு தான்  நன்றி சொல்லணும் “ என்று புன்னகையோடு கூறினாள்.    

பவி உடனே அவனை கோவமுடன் பார்ப்பது போல முறைத்துக் கொண்டே, “ நீ இப்போ எனக்கு நன்றி சொல்லாம இருக்குறது தான் நல்லது இல்லனா அடுத்த முறை இந்த மாதிரி பிளான் எதுவும் நான் போட மாட்டேன் “ என்று மிரட்டினாள். அதை கேட்டு சஞ்சனா சிரித்துக் கொண்டே, “ சரி, நான் நன்றி சொல்ல மாட்டேன் “ என்று கூறினாள்.

“அது நல்ல பொண்ணுக்கு அழகு “ என்று சொல்லி புன்னகைத்த பவி, “ சரி, நான் உன்ன திங்கட்கிழம ஆபீஸ்ல பாக்குறேன். நீ வீட்டுக்கு போனதும் எனக்கு போன் பண்ணு “ என்று சஞ்சுவிடம் சொன்னாள். சஞ்சனா சரி என்று கூறிவிட்டு தனது காரில் ஏறி டிரைவரிடம் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாள்.

இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்களை மூடி சோர்வை ஆட்கொள்ள அனுமதித்தாள் சஞ்சு. ஆனால் சுமார் முப்பது நிமிடங்களுக்குப் பிறகு அவள் கண்களை திறந்த போது அசாதாரணமான ஒன்றை கவனித்தாள்.

கார் சென்று கொண்டிருந்த பாதை பரிச்சயமில்லாமல் இருந்தது. அதை பார்த்து முகம் சுளித்தவள். ” டிரைவர், ஏன் வேற வழியில போறீங்க ?” என்று கேட்டாள். ஆனால் அவரிடம் இருந்து அவளுக்கு எந்த பதிலும் வரவில்லை.

சஞ்சுவின் இதயத்துடிப்பு வேகமெடுத்தது. ” டிரைவர், நான் உங்க கிட்ட தான் கேட்குறேன். பதில் சொல்லுங்க, ஏன் ரூட் வேற மாதிரி இருக்கு?” என்று கொஞ்சம் சத்தமாக கேட்டாள். 

கார் திடீரென இருண்ட, வெறிச்சோடிய பகுதியில் நின்றது. சஞ்சு  எதிர்வினையாற்றுவதற்குள், இரண்டு ஆண்கள் காரின் இருபுறமும் கதவுகளைத் திறந்தனர். அவர்களில் ஒருவன் அவளது வாயில் ஒரு துணியை திணிக்க முயன்றான் மற்றொருவன் அவளது கைகளைப் பிடித்து அவளை போராட விடாமல் தடுத்தான்.

அவள் தலையை வேகமாக ஆட்டி அவர்களை எதுவும் செய்ய விடாமல் சண்டையிட்ட போது பீதி அவளுக்குள் பாய்ந்தது, ஆனால் அந்த துணியில் இருந்த வாசனை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. சஞ்சுவுக்கு தலைச்சுற்ற ஆரம்பித்தது, அவள் பார்வை மங்க தொடங்கியது. எல்லாம் இருண்டு வருவது போல உணர்ந்தாள். முன்னால் இருந்த டிரைவர் திரும்பி அவளை பார்த்தான் அப்போது தான் அவன் அவளது வழக்கமான டிரைவர் அல்ல என்பதை அவள் பார்த்தாள்.

பயம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்தது ஆனால் அவள் முழுவதுமாக சுயநினைவை இழப்பதற்கு முன்பு, அவர்களின் காரின் பின்னால் இருந்து ஒரு கண்கூசும் ஒளி அந்த பகுதியை ஒளி வெள்ளத்தில் மூழ்கடித்தது. உடனே டிரைவர் காரை இருண்ட, வெறிச்சோடிய சாலையில் வேகமாக ஒட்டி சென்றான், அதன் வேகத்திற்கு காரின் டயர்கள் தார் சாலையில் கிரீச்சிட்டன.

சஞ்சனா அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினாள், துணியின் பின்னால் மறைந்த அவளது மெல்லிய அலறல் அவள் வாயை இறுக்கமாக அழுத்தியது. அதற்கு மேல் போராட முடியாமல், தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்த போது அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. பழக்கமில்லாத அந்த ஓட்டுநர் அமைதியாக இருந்தான், ஸ்டீயரிங்கின் மீது அவனது பிடி உறுதியாக இருந்தது, அவளுடைய கெஞ்சல்களை எல்லாம் அவன் புறக்கணித்தான்.

அவளுடைய நம்பிக்கை குறையத் தொடங்கிய போது, ரியர்வியூ கண்ணாடியில் பிரகாசமான ஹெட்லைட்டுகள் பளிச்சிட்டன, அவர்களை தொடர்ந்து வந்த கார் வேகமாக நெருங்கி வந்தது. என்ஜின் உறுமல் சத்தம் காற்றை நிறைத்தது. அந்த கார் அவர்களை முந்திச் சென்று கிரீச்சிட்டு முன்னால் நின்றது. கடத்தல்காரர்கள் மத்தியில் பீதி பரவியது. டிரைவர் சபித்துக் கொண்டே பிரேக்கை அழுத்தினான்.

முன்னால் இருந்த காரில் இருந்து இருவர் இறங்கினார்கள், அவர்களுடைய நிழலுருவங்கள் இரவைக் கிழித்துக் கொண்டிருந்தன. ஆர்யனையும் ரஞ்சித்தையும் அடையாளம் கண்டு கொண்ட சஞ்சனாவின் அகன்ற கண்களில் நம்பிக்கை நிரம்பியது.

ஆர்யனும், ரஞ்சித்தும் காரை நெருங்கியதும், ” ஏய் யார் நீங்க ? உங்க ரெண்டு பேரையும் கொல்றதுக்கு முன்னாடி மரியாதையா இங்க இருந்து போங்க “ என்று குரைத்தபடி டிரைவர் தன்சட்டைக்குள் இருந்து எதையோ எடுத்தான்.

பின் சீட்டில் சஞ்சனாவைப் பிடித்திருந்த இருவர் காரின் கதவுகளைத் திறந்து இறங்கி சண்டையிடத் தயாரானார்கள். ஆனால் அவர்கள் நகர்வதற்குள் ரஞ்சித் துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை சுட்டான். அதில் அந்த இருவரும் உடனடியாக உயிரற்று கீழே விழுந்தனர்.

ஆர்யன் நேரத்தை வீணாக்கவில்லை, கதவை இழுத்துத் திறந்தபடி டிரைவர் இருக்கையை நோக்கி பாய்ந்தான். அந்த மனிதன் எதிர்வினையாற்றுவதற்குள், ஆர்யன் அவனது காலரைப் பிடித்து நேராக அவன் முகத்தில் ஒரு சக்தி வாய்ந்த குத்து விட்டான். டிரைவர் வலியால் முனகினான், அவனது உதட்டிலிருந்து ரத்தம் வழிந்தது.

” நான் ஏன் உன்ன மட்டும் உயிரோட விடுறேன்னு உனக்கு தெரியுமா ?  என்று கேட்ட ஆர்யனின் குரல் கொடிய மிரட்டலாக இருந்தது, அவனது கரிய கண்கள் கோபத்தில் எரிந்தன.

டிரைவர் தெரியாது என்று சொல்வது போல தலையை ஆட்டியபடி ” இல்ல … எனக்குத் தெரியல ” என்று சொல்லி இருமினான்.

ஆர்யன் பிடி இறுக, அவன் மேலும் அந்த மனிதனை நோக்கி சாய்ந்தான். ” உங்கள அனுப்புனவன் கிட்ட போய் சொல்லு, இன்னொரு முறை அவள திரும்பி பார்க்க கூட அவன் நினைக்க கூடாது. அப்படி அவன் நெருங்க நெனச்சா நான் அவன கொல்ல கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்னு போய் சொல்லு. புரிஞ்சிதா ? “   என்று கேட்ட ஆர்யனின் குரல் தாழ்ந்ததாக, அபாயகரமானதாக இருந்தது.

ஆர்யனின் விரல்கள் எல்லாம் அந்த மனிதனின் கன்னத்தில் பதியும் அளவுக்கு ஆர்யன் அவனை கடுமையான அறைந்தான். டிரைவர்  தடுமாறி பின்வாங்கி, வேகமாக சரி என்று தலையசைத்து விட்டு வலியால் முனங்கியபடி அங்கிருந்து தப்பிச் சென்றான்.

உடல் நடுங்க பின் சீட்டில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள் சஞ்சனா. ஆர்யன் அவள் பக்கம் திரும்பினான், அவளை பார்த்ததும் அவன் முகபாவம் சட்டென மென்மையானது. காரில் ஏறி அவள் கைகளை வேகமாக அவிழ்த்து, அவள் வாயில் இருந்த துணியை இழுத்தான்.

அவள் நெஞ்சு விம்ம மூச்சிரைத்தாள், அவளுடைய கண்கள் சிந்தாத கண்ணீரால் நிரம்பி வழிந்தன. ஆர்யன் சற்றும் தயங்காமல் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் முதுகை மெல்ல வருடியவன், ” ஒண்ணுமில்ல ஸ்வீட் ஹார்ட், நான் இங்க இருக்கேன். இப்ப நீ பத்திரமா இருக்க, உனக்கு ஒன்னும் ஆகல ” என்று சொல்லி ஆர்யன் அவளை ஆறுதல்ப்படுத்தினான்.

அவனது அணைப்பின் கதகதப்பு அவளது பயத்தை பனி போல கரைத்தது. ஆர்யன் அணைப்பில் இருந்து பின்வாங்கியதும், அவன் கைகள் அவள் முகத்தை தழுவ, தன் உள்ளங்கையால் அவள் கன்னத்தை பற்றி அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தான். இந்த முறை அவன் கொடுத்த முத்தம் அவளுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. முதல் முறையாக, நெற்றியில் கொடுக்கும்  முத்தத்தின் பின்னால் உள்ள அர்த்தத்தை அவள் உண்மையிலேயே உணர்ந்தாள். ‘ அவன் நெத்தில முத்தம் கொடுக்கும் போது அந்த நொடி நாம அவன் கூட இருக்கும் போது பாதுக்காப்பா உணர்வோம் ‘ என்ற பவியின் வார்த்தைகள் அவள் மனதில் எதிரொலித்தன.

சஞ்சனாவின் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தியது போல உணர்ந்தாள். உண்மையில் தன்னை எப்போதும் பாதுக்காக்க பிறந்தவன் ஆர்யன் தானா என்று சஞ்சு யோசித்தாள். 

” வா சஞ்சனா, நம்ம வீட்டுக்குப் போகலாம் ” என்று ஆர்யன் அவள் கையை மெல்ல பிடித்தான். அவள் மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தாள் ஆனால் அவளுடைய எண்ணங்கள் இன்னும் ஆர்யன் பற்றிய சிந்தனையில் சுழன்று கொண்டிருந்தன அப்போது  ரஞ்சித் அவர்களை அணுகினான்.

” ரஞ்சித், சஞ்சனாவோட காரை வீட்டுக்கு ஒட்டிட்டு வா” என்று ஆர்யன் சொன்னதும், “ சரிங்க சார் “  என்று சொல்லி தலையாட்டியபடி ரஞ்சித் சாவியை வாங்கிக் கொண்டு அவள் காரை நோக்கி சென்றான்.

ஆர்யன் சஞ்சனாவை தன் காருக்கு அழைத்துச் சென்றான். அவளுக்கு கதவை திறந்து அவள் பயணியர் இருக்கையில் அமர்ந்ததும் ஆர்யன் டிரைவர் சீட்டில் அமர்ந்தான். காரில் நிசப்தம் கனமாக இருந்தது.

” நீ நல்லா இருக்கியா ?” என்று கடைசியில் ஆர்யன் அவளைப் பார்த்துக் கேட்டான். அவளும் வெறுமனே, ” ஹ்ம்ம் “ என்று தலை அசைத்தாள்.

ஆர்யன் சரி என்று சொல்லி காரை ஓட்ட ஆரம்பித்தான். ” யார் அவங்க ? உங்களுக்கு எப்படி அவங்க என்ன கடத்த நெனச்சது தெரியும் ?” என்று சஞ்சு தயங்கிக் கொண்டே அவனிடம் கேட்டாள்.

” அவங்க உன் மாமா அனுப்பின ஆளுங்க. இப்போதைக்கு, இத பத்தி நீ பெருசா எதுவும் யோசிக்காத. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.” என்று சொல்லும் போது ஆர்யனின் தாடை கோவத்தில் இறுகியது.

ஆர்யன் சொன்னதை கேட்டதும் சஞ்சு அதிர்ச்சியில் மூச்சிரைத்தாள். அவளது சொந்த மாமா அவளுக்கு தீங்கு செய்ய முயன்றாரா என்று நினைத்து அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவளை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சித்தாள். 

அவர்கள் மேன்ஷனை அடைந்ததும், சஞ்சு புத்துணர்ச்சி பெற தனது அறைக்கு விரைந்தாள். ஆர்யன் லிவிங் அறையில் உட்கார்ந்திருந்தான். அவனது முகபாவம் படிக்க முடியாததாக இருந்தது. சஞ்சனாவை முதல் முறையாக இப்படி பயந்து, உடைந்த நிலையில் பார்த்த ஞாபகம் அவன் மனதை நிறைத்தது.

பிளாஷ்பேக்:

மருத்துவமனை நடைபாதைகளில் கிருமிநாசினியின் நாற்றம் வீசியது. இயந்திரங்களின் பீப் ஒலியும் மருத்துவர்களின் மெல்லிய கிசுகிசுப்புகளும் காற்றை நிறைத்தன. விபத்தில் சிதைந்த நிலையில் சஞ்சனாவின் தந்தை திரு.கிருஷ்ணன் படுத்திருந்த மருத்துவமனை படுக்கைக்கு அருகில் ஆர்யன் நின்று கொண்டிருந்தான். டாக்டர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் அவர்கள் அனைவருக்கும் அவர் பிழைக்க மாட்டார் என்ற உண்மை தெரியும்.

கிருஷ்ணனின் பலவீனமான, நடுங்கும் கரம் ஆர்யனை நோக்கி நீண்டது. ” ஆர்யன் … எனக்கு அதிக நேரம் இல்லனு எனக்குத் தெரியும். ஆனா….ஆனா ..எனக்கு ஒரே கவல தான் … என் மக சஞ்சனா.  பிரதீப்… அவள நிம்….நிம்மதியா  வாழ விட…. விடு …விடமாட்டான் ” என்று சஞ்சனாவின் தந்தையின் குரல் நடுங்கியது.

அவரின் வார்த்தையை கேட்டு ஆர்யனின் முஷ்டிகள் இறுகின. பிரதீப்பை அவன் எப்போதும் வெறுத்தான்.

” நான் உன்ன நம்புறேன் ஆர்யன் ” என்று சொன்ன கிருஷ்ணன் தன் உள்ளங்கையை நீட்டி, “ எனக்.. எனக்கு சத்தியம் பண்ணு. ஆர்யன் நீ அவள பாதுகாப்பனு ..எனக்கு சத்தியம் செய்.. ப்ளீஸ். தயவு …சென்…செஞ்சு..அவள தனியா விட்டுடாத “ என்று அவர் கெஞ்சினார். அவரின் கரம் நடுங்கி கொண்டிருந்தது. 

ஆர்யனின் இதயம் கனத்தது, “ சத்தியமா சொல்றேன் சார். அவ இனி என் பொறுப்பா இருப்பா. என்ன நடந்தாலும், நான் அவள விட்டு விலக மாட்டேன். அவ தான் எனக்கு எல்லாமே ” என்று ஆர்யன் தனது உள்ளங்கையை அவர் கையில் வைத்து சத்தியம் செய்தான்.

ஆர்யன் சத்தியம் செய்ததும் கிருஷ்ணனின் கண்கள் நிரந்தரமாக மூடுவதற்குள் அவர் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது.

ஆர்யன் தாடையைக் கடித்துக் கொண்டு நெஞ்சில் ஏற்பட்ட வலியை விழுங்கினான். கனத்த இதயத்துடன் அறையை விட்டு வெளியே சென்றவன் அங்கு நின்று கொண்டிருந்த ரஞ்சித்திடம், ” கிருஷ்ணன் சார் விபத்து தொடர்பா எந்த சட்ட சிக்கலும் இல்லாத மாதிரி பார்த்துக்க. சஞ்சனாவுக்கு எந்த பிரச்சனையும் இருக்க கூடாது “ என்று கூறினான்.

” சரிங்க சார், நான் இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன், எந்த பிரச்சனையும் இருக்காது “  என்று ரஞ்சித் சொன்னான். அதற்கு ஆமோதிப்பது போல தலை அசைத்த ஆர்யன், “ சஞ்சனாவ பார்த்துக்க சொல்லி அவ friend கீர்த்தி கிட்ட சொல்லு. சஞ்சனா இதுல இருந்து வெளிய வரவரைக்கும் அவன் போலீஸ் காவல் இருக்க மாதிரி ஏற்பாடு செய் “ என்று அறிவுறுத்தினான்.

சஞ்சனா மருத்துவமனைக்கு வருவதற்குள், மிகவும் தாமதமாகிவிட்டது. கடைசியாக அவளது தந்தையை அவள் காண முடியாமல், அவரின் மரணச் செய்தி அவளை நிலைகுலையச் செய்தது. அந்த அதிர்ச்சி தாங்காமல் சஞ்சு அங்கேயே மயங்கி விழுந்தாள். அவள் தரையில் விழுவதற்கு முன்பு ஆர்யன் அவளை தாங்கி பிடித்து ஒரு அறைக்கு தூக்கிச் சென்றான், அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவளுக்கு நினைவு திரும்பும் முன் ஆர்யன் அறையை விட்டு வெளியே சென்றான் ஆனால் அந்த நேரம் அவளுக்கு நினைவு திரும்பியதும், பிரதீப் தான் முதலில் அவளை அணுகினான். ” இப்போ உன் அப்பா தான் உயிரோட இல்லையே அதனால நீ என் கூட வர்றது தான் நல்லது.” என்று சஞ்சுவை அவன் மிரட்டினான்.

அவன் வார்த்தையை கேட்டதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது. தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆர்யனுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் கொதித்தது. ஆனால் அவர் எதிர்வினையாற்றுவதற்குள் ரஞ்சித் முன்கூட்டியே அழைத்திருந்த போலிஸ் அங்கு வந்து பிரதீப்பை கைது செய்தனர்.

சஞ்சனா ஓயாமல் அழுதாள். ஆர்யன் அவளைப் பிடித்துக் கொள்ள விரும்பினான், அவளை தன் அரவணைப்பில் வைத்து கொண்டு ஆறுதல்படுத்த விரும்பினான், ஆனால் அவனால் முடியாது என்று அவனுக்குத் தெரியும். அவளுக்கு நிழலாய் இருந்து அவளைப் பாதுகாக்க அவன்  முடிவு செய்தான். தன்னுடைய தலையீடு எதிலும் இருப்பதை சஞ்சு அறிய மாட்டாள் என்பதை அவன் உறுதிப்படுத்திக்கொண்டான்.

பிளாஷ்பேக் முடிகிறது:

ஆர்யன் தன் தலைமுடியை ஒரு கையால் கோதியயபடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவள் மிகுந்த வேதனையில் இருப்பதைப் பார்த்த அன்றிலிருந்து இன்றும் அவளை அந்த நிலையில் பார்க்க அவன் மனம் வலித்தது. ஆனால் அவன் தனக்கு தானே  ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் .. அந்த வாக்குறுதியை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற அவன்  உத்தேசித்திருந்தான்.

“அவள யாரும் காயப்படுத்த விட மாட்டேன். எங்க வாழ்க்கை சாதாரணமா இருக்காதுன்னு எனக்கு தெரியும், நிறைய பிரச்சனைகள் இருக்கலாம், பல தடைகள் வரலாம் ஆனா என்ன நடந்தாலும் அவள நான் பாதுகாப்பேன். நான் அவ கூடவே இருப்பேன். அவ என் சஞ்சனா “ என்று மனதில் உறுதி எடுத்தான்.

*********************

முன்னோட்டம்:

” பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல சஞ்சனா. நீ போய் தூங்கு, நீ தூங்குற வரை நான் இங்கேயே இருக்கேன்”

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!