Home FamilyChapter 28

Chapter 28

by Siragugal Novels
21 views

ஆர்யனும், சஞ்சுவும் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் ஆர்யன் படுக்கையில் சஞ்சுவின் அருகில் அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து, தன் கையை அவளை சுற்றி பாதுகாப்பாக வளைத்தான். சஞ்சு நிம்மதியாக அவன் மார்பில் அவன் வாசனையை முகர்ந்தாள்.

“சஞ்சு, என்ன மன்னிச்சிடு ” என்று ஆர்யன் மெல்லிய குரலில் சொன்னதும் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவளுடைய முகபாவம் மென்மையாக இருந்தது ஆனால் கோவமாக இருப்பது போல அவனை முறைத்தாள். ” இல்ல, உங்க மன்னிப்ப நான் ஏத்துக்க மாட்டேன், நாம நிச்சயம் சண்ட போடுவோம் “ என்று சஞ்சு சொல்ல, “ கண்டிப்பா போடணுமா ? “ என்று கேட்டான் ஆர்யன் அதற்கு சஞ்சு உடனே, “ ஆமா, நீங்க ஏன் என்ன நம்பாம போனீங்க ? “ என்று அவள் கேட்ட போது அவள் குரல் மிகவும் சீரியஸாக இருந்தது.  

சஞ்சுவின் கேள்வியால் குழப்பமடைந்த ஆர்யன், “ என்ன ? ” என்று அவளை கேட்க, சஞ்சு மீண்டும் அவனிடம், ” நீங்க ஏன் என்ன நம்பல  ஆர்யன்?” என்றாள்.

ஆர்யன் மேலும் குழப்பத்துடன் கண் சிமிட்டினான். அவன் எதிர்பார்த்த கேள்வி அதுவல்ல, அவன் விஷயங்கள மறைத்ததை பற்றி அவள் கோவம் கொண்டிருப்பாள் என்று அவன் நினைத்தான் ஆனால் அவளின் இந்த கேள்வியால் ஒன்றும் புரியாமல், “ இரு… நான் உன்ன நம்பலனு நெனச்சியா ? “ என்று அவன் கேட்டான்.

“நீங்க உண்மையிலேயே என் மேல நம்பிக்க வெச்சுருந்தா  சுனிதாவ பத்தி என் கிட்ட  சொல்லியிருப்பீங்க. அவள பத்தி சொல்லி இருந்தா நான் உங்கள நம்பி இருக்க மாட்டேனு நெனச்சீங்களா ? “ என்று சஞ்சு கேட்டதும் ஆர்யன் திகைத்து அவளை பார்த்தான். ” ஒரு நிமிஷம், அப்போ சுனிதா பத்தி நெனச்சு நீ கோவமா இல்லையா ? “ என்று ஆர்யன் கேட்டான்.

” அது வேற விஷயம், அத பத்தி பேசுவோம் ஆனா என்னோட கோவம் நீங்க என்ன நம்பலனு தான் “ என்று சஞ்சு அவன் கேள்விக்கு பதில் சொன்னதும் ஆர்யன் சற்று நிம்மதியடைந்து தன் எண்ணங்களை ஒருமுகப்படுத்த ஒரு கணம் எடுத்துக் கொண்டான். “நீ என்ன நம்பலனு நான் நெனச்சேன் அதனால தான் என்ன புறக்கணிச்சனு கூட நெனச்சேன் “ என்றான் ஆர்யன்.

சஞ்சு மெல்லிய புன்னகையுடன் தலையை ஆட்டி, “சரி, இப்ப என் கேள்விக்குப் பதில் சொல்லு.” என்றாள்.

ஆர்யன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டான், அவனது விரல்கள் சஞ்சுவின் தலைமுடியை மென்மையாக வருடின, “அப்படி இல்ல மா.  என்ன விட உன்ன நான் நம்புறேன். அவள பத்தி பேசுற அளவுக்கு அவ்ளோ முக்கியமான ஆள் இல்ல, என்னோட என்னத்துல கூட அவ இல்ல. அது மட்டும் இல்ல   ஃப்ளாஷ்பேக் போட்டு சொல்ற அளவுக்கு அவளுக்கு எந்த தகுதியும் இல்ல. நான் பிசினஸ் ஆரம்பிச்ச புதுசுல அவ ஒரு வளர்ந்து வர மாடலா இருந்தா. என் கிட்ட தான் வேலை செஞ்சா. நாங்க நல்ல ஜோடினு நிறைய பேரு சொல்ல ஆரம்பிச்சாங்க.  அந்த நேரத்துல அவ அழகா இருந்தானு நானும் உணர்ந்தேன் அத மறுக்க மாட்டேன், எங்கள பத்தி  வந்த கிசுகிசு எதையும் நான் மறுக்கல. எங்களுக்குள்ள எதுவும் மாறவோ இல்ல நடக்குறதுக்கோ முன்னாடி அவளுக்கு யார் கிட்ட இருந்தோ என்ன விட்டு போக சொல்லி நிறைய பணமும், மாடலிங் செய்ய பெரிய வாய்ப்பும் கெடச்சு போயிட்டா. அவ அவ்ளோ தான், வேற எதுவும் இல்ல “ என்று ஆர்யன், சுனிதாவை பற்றி கூறினான்.     

அவன் சொன்னதையெல்லாம் கேட்டு சஞ்சு அவனைப் பார்த்து,  “அப்புறம் எதுக்கு நீங்க அவளை ப்ரபோஸ் பண்ணீங்கனு அவ சொன்னா ? “ என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்கு ஆர்யன் லேசாக தலையை அசைத்து, “ ஒருவேள மறுபடியும் நடிக்க சொல்லி யாராவது அவளுக்கு பணம் கொடுத்துருப்பாங்க “ என்று கூறினான் ஆனால் அதை கேட்டதும், சஞ்சுவின் புருவங்கள் சுருங்கின. “ஆனா ஏன் ? ஏன் யாரோ ஒருத்தர் இப்படி செய்யணும் ? “ என்று கேட்டாள். 

” இது கூடவா உனக்கு புரியல ? நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க தான் வேற எதுக்கு ? “ என்று ஆர்யன் சொல்ல சஞ்சு யோசனையில் ஆழ்ந்தாள். அதை கவனித்த ஆர்யன், “ ஒருவேள உன்கிட்ட யாரவது வந்து பணம் கொடுத்து என்ன விட்டு போக சொன்னா அப்போ நீ என்ன செய்வ ? “ என்று அவளை கேட்டான்.  

ஆர்யனை பார்த்து புன்னகைத்த சஞ்சு, “அவங்க கொடுத்ததுக்கு மேல ஒரு ரூபா அதிகமா கொடுத்து, ஆர்யன் என்னோட ஆளு, எனக்கு மட்டும் தான், நான் அவர விட்டு போக மாட்டேன்னு தெளிவா சொல்லுவேன் ” என்று சொல்லி சிரித்தாள்.

ஆர்யனின் உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. “அது அவ்ளோ சுலபமா இருக்கும்னு எனக்கு தோணல ஆனா பாத்துக்கலாம் ” என்று அவன் சொன்னதும், சஞ்சு கண்களைச் சுருக்கி, “ஏன் அப்படிச் சொல்றீங்க ?” என்று கேட்டாள்.

“சஞ்சு, நான் உன் கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் நிறைய இருக்கு ஆனா நீ என்ன நம்பனும். நேரம் வரும் போது எல்லாத்தையும் சொல்றேன். உன் மேல நம்பிக்க இல்லாம நான் எதுவும் சொல்லாம இல்ல ஆனா உன்னோட பாதுக்காப்புக்காக தான் இப்போ சொல்லாம இருக்கேன். புரியுதா?” என்று ஆர்யன் கேட்டதும் அவள் தயக்கத்துடன் சரி என்று தலையசைத்தாள்.

“அப்போ, பிரச்சினை எல்லாம் முடிஞ்சிடுச்சா ? “ என்று ஆர்யன் நிம்மதி மற்றும் நம்பிக்கையுடன் கேட்க, ” இல்ல, இன்னும் இல்ல ” என்றாள் சஞ்சு உதட்டை சுளித்து.

” இப்ப என்ன?” என்று ஏறக்குறைய அதிர்ச்சியில் ஆர்யன் கேட்டான். அதற்கு சஞ்சு உடனே, ” அவ எப்படி உன்ன கட்டிப்பிடிக்கலாம் ?” என்று கேட்டு அவனை முறைத்தாள்.

ஆர்யன் பெருமூச்சு விட்டான். “அவ எங்கிருந்தோ வந்தா. நான் ரஞ்சித் பேசிட்டு இருந்தத பார்த்துட்டு இருந்தேன், என்ன நடக்குதுனு  நான் உணரதுக்கு முன்னாடி அவ என்ன கட்டிப்புடிச்சிட்டா “ என்று ஆர்யன் விளக்கினான் ஆனால்  சஞ்சு தலையை மறுத்து ஆட்டி, ” இருந்தாலும் என்னால அதை ஏத்துக்க முடியல. நீங்க குளிச்சிங்களா?” என்று கேட்டாள்.

அவன் மெலிதாகச் சிரித்தான். “உன் ரத்தம் என் சட்டையில இருந்த அவளோட அழுக்க சுத்தம் பண்ணிடுச்சு. இருந்தாலும் ரொம்ப நேரம் ஷவருக்கு கீழ இருந்தேன்.” என்று ஆர்யன் சொன்னதும், ” மன்னிச்சிடுங்க ” என்று சஞ்சு குரல் உடைந்தது முனுமுனுத்தாள்.

” உண்மைய சொல்ல போனா நான் தான் மன்னிப்பு கேட்கனும். என்ன மன்னிச்சிடு ஸ்வீட் ஹார்ட்.  இத மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ சஞ்சு, உன்ன வெறுக்குறேன்னு நானே வந்து உன் கிட்ட சொன்னாலும் நம்பாத. அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும்னு நம்பு, அந்த காரணம் உன்ன பாதுகாக்க மட்டுமா தான் இருக்கும். நமக்காக தான் அத நான் செஞ்சிருப்பேன்னு நம்பு “ என்று ஆர்யன் அவள் கன்னத்தை பற்றி சொன்னான்.

ஆர்யன் சொன்ன வார்த்தைகளை உள்வாங்கிய சஞ்சு, ” நமக்கு எதிரிங்க இருக்காங்களா ஆர்யன் ? “ என்று கேட்டாள்.

ஆர்யன் பலமாக தலையசைத்து, “என்னால எண்ண முடியாத அளவ  விட இருக்காங்க ஆனா அத பத்தி கவலைப்படாத, என்ன நம்பு.  அந்த நம்பிக்கை நம்ம ரெண்டு பேரையும் வலிமையா வெச்சுருக்கும் ” என்றான்.

“எனக்கு இன்னும் எதுவும் முழுசா புரியல ஆனா  நான் உன்ன நம்புறேன்.” என்று சஞ்சு கூறினாள். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ஆர்யன் வேகமாக நகர்ந்து அவள் கட்டிலுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். ” உள்ள வாங்க ” என்று அழைத்தான்.

நர்ஸ் சஞ்சுவின் மருந்துடன் உள்ளே நுழைந்து, மாத்திரைகளை அவளிடம் கொடுத்துவிட்டு அமைதியாக வெளியேறினார். சிறிது நேரத்தில் ரஞ்சித்தும், கௌசல்யாவும் உள்ளே நுழைந்தனர்.

“ரஞ்சித், கௌசல்யா மா நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குப் போங்க” என்று ஆர்யன் சொல்ல, “ சார், நான் வேணும்னா வெளிய வெயிட் பண்ணட்டுமா ? “ என்று கேட்டார் கௌசல்யா ஆனால் ஆர்யன் அவரிடம், “ இல்ல வேணாம், நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க, நாளைக்கு காலையில வாங்க போதும் “ என்று சொன்னான்.       

இருவரும் சரி என்று சொன்னதும் கௌசல்யா சஞ்சுவின் தலைமுடியைக் கோதியபடி, “ சஞ்சு கண்ணா  நல்லா ரெஸ்ட் எடு. நான் நாளைக்கு வந்து பாக்குறேன் “ என்று அன்போடு கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். 

அவர்கள் சென்றதும், ஆர்யன் கதவைப் பூட்டிவிட்டு சஞ்சுவின் பக்கம் படுக்கையில் உட்கார்ந்தான். உடனே அவள் அவனுக்குள் சாய்ந்த போது அவன் கைகள் அவளைச் சுற்றி வளைத்தன.

“சஞ்சு, எனக்காக ஒன்னு செய்வியா ? ” என்று ஆர்யன் கேட்டதும், “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க ?” என்று உடனே கேட்டாள் சஞ்சு.

“எதை பத்தியும் கவலைப்படாத. என்ன நடந்தாலும், நான் உனக்காக  இங்க இருக்கேன், என்ன நடந்தாலும் நீ சந்தோஷமா இரு  “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு தலையசைத்து, “சரி…” என்றாள்.

” உன்னோட மன அழுத்ததுக்கு நீ எப்பவும் இப்படி மாத்திர சாப்பிட முடியாது, உன்னோட ஆரோக்கியத்துக்கு நல்லது இல்ல.” என்று ஆர்யன் மெதுவாக அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.

” சரி, ஆனா மாத்திரை இல்லாம கூட  மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.” என்று சொல்லி சஞ்சு சிரிக்க, “அது எப்படி?” என்று கேட்டு ஆர்யன் தலை சாய்த்தான்.

“முத்தம் கொடுக்குறதால மன அழுத்தம் குறையுமாம் அப்படினு பவி சொன்னா” என்று சொல்லி சஞ்சு கண்ணடித்ததும் அவள் வேறு எதுவும் சொல்வதற்குள் ஆர்யன் அவள் முகத்தை நிமிர்த்தி ஆழமாக முத்தமிட்டான். அது வெறும் முத்தமல்ல – சொல்லப்படாத வார்த்தைகள், வலி, நிம்மதி, ஏக்கம் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுத்த உணர்வுப்பூர்வமான ஒரு முத்தம். அவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் நழுவி அவன் கையைத் தொட்டதும் ஆர்யன் கட்டை விரலால் அதை மென்மையாகத் துடைத்தான். இருவரும் இறுதியாக முத்தத்தில் இருந்து பின்வாங்கி மூச்சிரைத்தனர்.

“அப்போ இனிமே உனக்கு மன அழுத்தமே இருக்காதுனு நல்லா ஞாபகம் வெச்சுக்கோ “ என்று ஆர்யன் அவள் காதில் கிசுகிசுத்தான். சஞ்சு  வெட்கத்துடன் அவனது அணைப்பில் ஒளிந்து கொள்ள ஆர்யன் அவளது கூந்தலில் ஒரு முத்தத்தை அழுத்தி கொடுத்தான்.

” எப்போ வீட்டுக்குப் போவோம் ?” என்று சஞ்சு மெல்லிய குரலில் கேட்க, “ நாளைக்கு டாக்டர் கிட்ட விசாரிக்குறேன் ” என்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு அவன் சட்டையை இறுக பிடித்துக் கொண்டு, “இல்ல, நாளைக்கு வீட்டுக்குப் போகலாம். எனக்கு இங்க இருக்க பிடிக்கல ” என்று அடம் பிடித்தாள். 

 “சரி, நான் டாக்டர் கிட்ட பேசறேன். நாம வீட்டுக்குப் போவோம்.” என்று சொல்லி ஆர்யன் புன்னகைத்தவன், ” இப்ப நேரமாயிடுச்சு வா, தூங்கு.” என்று கூறினான்.

” அப்போ நீ தூங்கலையா ?” என்று சஞ்சு கேட்க ” நானும் தான் தூங்க போறேன் ஸ்வீட் ஹார்ட் “ என்று சொல்லி ஆர்யன் படுக்கையில் படுத்து  அவளைத் தன் கைகளில் இழுக்க, அவள் தன் தலையை அவன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். உடனே அவள் விரல்கள் அவன் சட்டையை இறுகப் பற்றின.

” நீ தூங்கும் போது இப்படி என் சட்டைய புடிக்குறது ஒரு மாதிரி ரொம்ப நல்லா இருக்கும் “ என்று ஆர்யன் சொல்ல, “ அப்படியா ? எனக்கு தெரியல ஆனா நீ பக்கத்துல படுத்த உடனே என் கைய அதுவா உன்ன புடிக்குது “ என்று அவனை நிமிர்ந்து பார்த்து சொன்னாள். 

ஆர்யன் புன்னகையோடு அவள் நெற்றியில் முத்தமிட்டு சிரித்தபடி அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

விரைவில், அவர்கள் இருவரும் தூங்கச் சென்றனர், அவர்களின் இதயங்கள் ஒத்திசைவில் துடித்தன.

அடுத்த நாள் காலை கதவு மெல்லத் தட்டும் ஓசை ஆர்யனை உறக்கத்தில் இருந்து எழுப்பியது. ஆர்யன் கண்களை திறந்த பொது சஞ்சு அவன் மார்பில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.   அவளது கை நங்கூரம் போல அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. மெல்லக் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்ட போது அவன் முகத்தில் ஒரு இதமான புன்னகை அரும்பியது.

அவன் கவனமாக படுக்கையில் இருந்து நழுவி கதவை திறந்த போது கௌசல்யாவும் ரஞ்சித்தும் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

” ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ காலையில வந்துருக்கீங்க ?” என்று ஆர்யன் கண்களில் வழிந்த தூக்கத்தைத் துடைத்துக் கொண்டே கேட்டான்.

கௌசல்யா அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து, “சார், மணி ஒன்பது ஆகுது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே வந்து காத்திருந்தோம், நீங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இருந்ததால தொந்தரவு பண்ண விரும்பல. சஞ்சுவுக்கு மருந்து கொடுக்க நர்ஸ் வந்தாங்க அதனால் நாங்க கதவைத் தட்ட வேண்டியிருந்தது.” என்று கூறினார். உடனே ஆர்யன் வியப்புடன் வாட்சை பார்த்து விட்டு, “சரி. கொஞ்சம் நேரம் இருங்க “ என்று சொல்லி சத்தமில்லாமல் கதவை சாத்திவிட்டு இன்னும் படுக்கையில் சுருண்டு கிடந்த சஞ்சுவிடம் திரும்பி நடந்தான்.

“சஞ்சு…” என்று அவளை மெல்ல எழுப்ப முயன்றான் ஆனால் சஞ்சு கண்களை திறக்காமல் மெல்லிய அசைவுடன், “ஹ்ம்ம்… ப்ளீஸ்  இன்னும் அஞ்சு நிமிஷம்…” என்றாள்.

ஆர்யன் சிரித்துக் கொண்டே, ” பேபி, நீ மாத்திரை சாப்பிடணும். ஏற்கனவே லேட் ஆகுது சீக்கிரம் எழுந்துரு “ என்று சொல்லி அவளை மீண்டும் எழுப்ப முயன்றான்.  ஆனால் இந்த முறையும் சஞ்சு, “ப்ளீஸ் ஆர்யன் “ என்று முணுமுணுத்தபடி தலையணைக்குள் முகம் புதைத்தாள்.

” டார்லிங், நல்ல பொண்ணா எழுந்திருடி ” என்று ஆர்யன் சொல்ல சஞ்சு சட்டென, “ போடா “ என்றாள் கண்களை திறக்காமல்.  

அதை கேட்ட ஆர்யன், “ என்னது போடாவா ? நீ இப்படி சொன்னா  கேட்க மாட்ட, இரு உன்ன என்ன பண்றேன் பாரு “ என்று மனசில் நினைத்துக் கொண்டு ஒரு வேகமான நகர்வில், அவளைத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான். சஞ்சு ஆச்சரியத்தில் நடுங்கியபடி, “ ஆர்யன் என்ன பண்ற ?” என்று திகைத்தாள்.

“குட் மார்னிங், இப்ப போய் ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடு” என்றான் ஆர்யன் உற்சாகமாக. ஆனால் சஞ்சு, “ முடியாது போடா “ என்று ஒரு பிடிவாதமான குழந்தையைப் போல கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டாள். அதை பார்த்து சிரித்த ஆர்யன், ” வீட்டுக்குப் போக வேண்டாமா?” என்று கேட்டான்.

சஞ்சு உடனே, “ ஆமா, போனும் போனும் “ என்று பதில் சொன்னாள்.   

“அப்போ நல்ல பொண்ணா இருந்து நான் சொல்றதைக் கேளு. நான் டாக்டரைப் பார்க்கப் போறேன். சரியா?” என்று ஆர்யன் கேட்க, ” ஹ்ம்ம்… சரி” என்றாள் அரைத் தூக்கத்துடன்.

அவளைக் கீழே படுக்க வைப்பதற்கு முன், ஆர்யன் அவள் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான். அதற்கு சஞ்சு, ” ஏய் நான் இன்னும் பல் துலக்கவே இல்லை!” என்று கீச்சிட்டாள் ஆனால் ஆர்யன் புன்னகைத்துக் கொண்டே, “ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, டர்ட்டி கிஸ் எனக்கு ஓகே தான் “ என்று சொல்லி மீண்டும் அவளை முத்தமிட பிறகு அவளை மீண்டும் படுக்கையில் உட்கார வைத்தான்.

” கௌசல்யா மா வெளிய வெயிட் பண்றாங்க. நீ ரெடியாகி சாப்பிடு. நான் அதுக்குள்ள டாக்டர பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லி ஆர்யன் கிளம்ப இருந்தான் அப்போது அவனை தடுத்து, “ அப்போ நீங்க சாப்பிட மாட்டீங்களா ? “ என்று கேட்டாள் சஞ்சு. 

” எனக்கு இங்க தனி ரூம் இருக்கு. நான் அங்க ரெடி ஆயிட்டு திரும்பி வரேன் “ என்று சொல்லி  ஆர்யன் கதவைத் திறந்து கௌசல்யாவை உள்ளே அனுமதித்தான். பின்னர் ரஞ்சித்தை பார்த்து, ” ரஞ்சித், டாக்டரை என் ரூமுக்கு வரச் சொல்லு” என்றான். அப்போது ஆர்யனின் முகத்தில் மகிழ்ச்சியை ரஞ்சித் கவனித்தான்.

உள்ளே, சஞ்சு குளியலறையில் இருந்து புத்துணர்ச்சியுடன் வெளியே வந்ததும், ” சஞ்சு கண்ணா , இப்போ எப்படி இருக்க ?” என்று கௌசல்யா  கேட்டார்.

” நான் சூப்பரா இருக்கேன் மா ” என்றாள் சஞ்சு புன்னகையுடன்.

சஞ்சுவின் உற்சாகமான பதிலை கேட்டு கௌசல்யாவின் முகம் மலர்ந்தது. ” என் பொண்ண பாரு, எப்படி ஜோளிக்குறா ? “ என்று கௌசல்யா சொல்ல,  ” அம்மா ப்ளீஸ் கிண்டல் பண்றத நிறுத்துங்க” என்று சிரித்த சஞ்சு லேசாக வெட்கப்பட்டாள்.

” எப்பவும் இப்படியே சந்தோஷமா இரு” என்று சொல்லி கௌசல்யா  அவள் கன்னத்தை மென்மையாக கிள்ளினாள். சஞ்சு மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தாள்.

கௌசல்யா காலை உணவை கொடுத்த பின்னர் நர்ஸ் வந்து சஞ்சுவுக்கு மாத்திரைகளை கொடுத்தார். சிறிது நேரத்தில், அவளைப் பரிசோதிக்க டாக்டர் அறைக்கு வந்தார்.

டாக்டர் அவளைப் பரிசோதித்து கவனமாக அவள் தலையில் போடப்பட்டிருந்த கட்டை மாற்றினார்.

” நான் இப்ப ஆர்யன் சார் கிட்ட போய் பேசறேன்” என்று சொல்லி வெளியேறி ஆர்யனின் அறைக்குச் சென்றார்.

” சஞ்சனா இப்போ எப்படி இருக்கா டாக்டர்?” என்று டாக்டர் உள்ளே நுழைந்த உடனேயே ஆர்யன் கேட்டான்.

“அவங்க இப்போ நல்லா இருக்காங்க, தெளிவான மனசோட இருக்க மாதிரி இருக்காங்க “ என்று டாக்டர் பதில் சொன்னதும், ” அப்போ நான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா ? “ என்று கேட்டான் ஆர்யன்.   

” கூட்டிட்டு போகலாம் சார் ஆனா தலையில இருக்க காயத்துக்கு மட்டும் தினமும் டிரஸ்ஸிங் பண்ணனும் அப்புறம் அவங்க மருந்து எல்லாம் சரியா சாப்பிட சொல்லுங்க “ என்று டாக்டர் கூறினார்.   

” நல்லது, அப்ப நான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.” என்று ஆர்யன் சொல்ல டாக்டர் தலையசைத்துவிட்டு கிளம்பினார். ஆர்யன் உடனே ரஞ்சித்தை அழைத்து, “ரஞ்சித், ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம் அதுக்கு ஏற்பாடு பண்ணு ” என்றான்.

சஞ்சுவின் அறைக்கு அவன் திரும்பிய போது அவள் டிவியில் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தாள். அவனை பார்த்ததும், ” டாக்டர் கிட்ட பேசினியா ? வீட்டுக்குப் போகலாமா?” என்று சஞ்சு ஆவலுடன் கேட்டாள்.

” இல்ல மா, நீ இன்னும் ரெண்டு நாள் இங்க இருக்கணும்னு சொல்லிட்டாரு ” என்றான் ஆர்யன் முகத்தை நேராக வைத்துக் கொண்டு. அதை கேட்டதும் சஞ்சுவின் முகம் சட்டென வாடியது.

ஆர்யன் சிரித்து, ” ஸ்வீட் ஹார்ட், உடனே முகத்த இப்படி வைக்காத, நாம வீட்டுக்கு போறோம். என்ன சந்தோஷமா ? “ என்று கேட்டான்.  அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகை பரவி “சூப்பர் ஹேப்பி!” என்று பதில் சொன்னாள்.

” ரஞ்சித் கிட்ட சொல்லி இருக்கேன், அவன் நாம எந்த தொந்தரவும் இல்லாம போக ஏற்பாடு பண்ண உடனே கிளம்பலாம் “ என்று ஆர்யன் சொல்ல சஞ்சு சரி என்றாள் உற்சாகமாக.

*************************************

முன்னோட்டம்

” நீ இப்படி வெட்கப்படும் போது எனக்கு அப்படியே உன் மேல பைத்தியம் ஆகுது. சரி சொல்லு நான் உன்ன கட்டிப்புடிக்கட்டுமா?”

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!