Home FamilyChapter 34

Chapter 34

by Siragugal Novels
17 views

மாயா  குலாப்ஜாமூன் வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொண்டு போக சொன்னதும், மேனேஜர் அவள் முன்னால் இருந்த கிண்ணத்தை கையில் எடுத்தார், அப்போது அது தவறி கிண்ணத்தில் இருந்து சர்க்கரை சிரப் ஜாமூனுடன் மாயா  மற்றும் நரேன் மேல் சிந்தியது.

“அச்சச்சோ! என்ன மன்னிச்சிடுங்க மேடம். ப்ளீஸ் மன்னிச்சிடுங்க, தெரியாம கை தவறி சிந்திடுச்சு “ என்று திடுக்கிட்டபடி மேனேஜர் மன்னிப்பு கேட்டார் ஆனால் ஆத்திரம் அடைந்த மாயா, ” உனக்கு எவ்ளோ  தைரியம் ?” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை அடிக்க கையை உயர்த்தினாள். ஆனால் நரேன் அவள் கையை வேகமாக பிடித்து தடுத்து, “மாயா, அது ஒரு விபத்து, தெரியாம நடந்துடுச்சு, அமைதியா இரு “ என்று சொல்லிவிட்டு மேனேஜரை பார்த்து, “ மேனேஜர், நீங்க கிளம்பலாம்.” என்றான்.

“ஸாரி சார்” என்று மேனேஜர் மீண்டும் கூறினார்.

” நீங்க ரெண்டு பேரையும் விஐபி ரூமுக்கு கூட்டிட்டு போங்க “ என்று மேனேஜரிடம் கூறிய ஆர்யன் பின்னர் நரேனை பார்த்து, ” நரேன், நீங்க ரெண்டு பேரும் அவர் கூட போய் டிரஸ் சுத்தம் பண்ணுங்க “ என்று சொன்னான்.

நரேன் சரி என்று சொல்லி, “ வா மாயா ” என்று அவளை அழைத்தான்.

” முட்டாள்! என் டிரஸ்ஸ கெடுத்துட்டான்” என்று முணுமுணுத்துக் கொண்டே மாயா  அறையை விட்டு வெளியேறினாள். அவர்கள் சென்றதும் ஆர்யன் ஒரு கள்ளச் சிரிப்புடன் சஞ்சுவை நோக்கித் திரும்பினான். ” ஸ்வீட் ஹார்ட், நீ ஸ்வீட் சாப்பிடு.” என்று அவன் சொன்னதும் அவனை பார்த்த சஞ்சு, “மேனேஜர் தெரியாம கொட்டினாரா ?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

” ஏன் இப்படி கேட்குற ? ஆமா பேபி, அது தற்செயலா தான் நடந்துச்சு. நீ கேட்குறத பார்த்தா நான் என்னவோ என்னோட ஸ்பெஷல் ஜாமூனுக்காக வேணும்னே அவர இப்படி செய்யச் சொல்லி மெசேஜ் அனுப்புன மாதிரி இருக்கு “ என்று சொல்லி கண்ணடித்தான்.

” இப்போ எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல. நீ தான் பண்ணி இருக்க ” என்று சஞ்சு சொன்னதும், “ தெரியுதுல, இப்போ என் ஸ்வீட்ட கொடு” என்றான் சிறுபிள்ளைத்தனமான புன்னகையுடன்.

” அண்ணா நம்ம ரெண்டு பேரையும் பத்தி என்ன நினைப்பாரு ?” என்று சஞ்சு தயக்கத்துடன் கேட்டாள். அதற்கு ஆர்யன் உடனே புன்னகைத்து, “இது ஒரு விபத்து இல்ல, நான் பிளான் பன்னதுனு அவனுக்கு தெரியும் அதனால ஒன்னும் நினைக்க மாட்டான். இப்போ நீ கவலைப்படாம, நேரத்த வீணாக்குறத நிறுத்து” என்றான்.

அவள் பதில் சொல்வதற்குள் ஆர்யன் அவளை இழுத்து அவள் உதடுகளில் தன் உதடுகளை பதித்தான். முத்தத்தை ஆழப்படுத்திய போது அவன் கை மெதுவாக அவள் முகத்தை வருடியது. இறுதியாக அவர்களின் நுரையீரல் காற்றுக்காக அலறியபோது தான் அவர்கள் பிரிந்தனர்.

சஞ்சு விளையாட்டாக ஆர்யனின் தோளில் அடித்தாள், ஆனால் அவள் பின்வாங்குவதற்குள், ஆர்யன் அவள் கையைப் பிடித்து மீண்டும் அவள் உதட்டை முத்தமிட்டான். இருவரும் பின்வாங்கியதும், ” என்ன செய்ற, ஆர்யன்?” என்று சஞ்சு மூச்சிரைக்க கேட்டாள்.

” செம்ம ஸ்வீட்டா இருந்துச்சு ” என்று சொல்லி ஆர்யன் குறும்பாக சிரித்தான்.

” நீ வீட்டுக்கு வா, உனக்கு இருக்கு “ என்று சஞ்சு அவனை மிரட்டினாள். அதற்குள் நரேனும் மாயாவும் அறைக்கு திரும்பி அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.

“ஆர்யன், நீ ஸ்வீட் சாப்பிடலையாடா ?” என்று நரேன் அவன் முன்னால் இருந்த கிண்ணத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

” சாப்டேன் மச்சான் “ என்று ஆர்யன் சாதாரணமாக பதிலளித்தான்.

” மாப்ள என்னடா சொல்ற ? குலாப்ஜாமூன் சாப்டியா ? ஆனா உன் கிண்ணத்துல ஸ்வீட் அப்படியே இருக்கே ? “ என்று நரேன் கேட்க, “அது… அது .. வந்து …நாங்க ஒரு கிண்ணத்துல இருந்து ஷேர் பண்ணிக்கிட்டோம்” என்று சொன்ன ஆர்யன், சஞ்சுவை பார்த்து புன்னகைத்தான்.

அவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாயா, ஆர்யனின் பதிலைக் கேட்டு, தாடையைக் கடித்துக் கொண்டாள். கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் அவளது எரிச்சல் அதிகரித்தது.

சிறிது நேரம் கழித்து, ஒரு வழியாக மதிய உணவு முடிந்து, அவர்கள் நன்றாக அரட்டை அடித்துக் கொண்டிருந்ததும், நரேன் எழுந்து நின்றான்.

“சரி மாப்ள, இப்போ நாங்க கிளம்புறோம் “ என்று நரேன் சொல்ல, “நாம திரும்ப சந்திக்கலாம் “ என்று ஆர்யன் நட்பு புன்னகையுடன் தலையசைத்தான்.

மாயா  முன்னால் வந்து, “ஆர்யன், நாளைக்கு டின்னர் சாப்பிட போகலாமா?” என்று இனிமையாக சிரித்துக்கொண்டே கேட்டாள். அதற்கு ஆர்யன், “நான் பிஸியா இருக்கேன், இந்த வாரம் ஒரு பார்ட்டி இருக்கு  ” என்று தயக்கமின்றி சட்டென பதில் சொல்லி நிராகரித்தான்.

“சரி, நான் சீக்கிரம் உங்கள சந்திக்குறேன் ,” என்று ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன் மாயா இறுக்கமாக சொன்னாள்.

அவர்கள் அறையை விட்டு வெளியேறியதும் ரஞ்சித் உடனே அவர்களிடம் விரைந்தான். நரேனும் மாயாவும் அவர்களின் காரில் ஏறுவதற்குள் ஆர்யனும், சஞ்சுவும் ஒரே காரில் ஏறுவதை மாயா  கவனித்தாள். அவர்கள் நெருங்கி நடந்த விதம், சஞ்சுவின் முதுகில் ஆர்யனின் கை பாதுகாப்பாக இருந்தது, அவளுக்குள் தீப்பிழம்புகளை அனுப்பியது.

” சத்தியமா சொல்றேன் ஆர்யன், நான் உன்ன அடையாம விட மாட்டேன் ” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். ” என்ன பார்த்துட்டு இருக்க மாயா ? ” என்று பயணிகள் இருக்கையில் இருந்து நரேன் கேட்டதும் அவள் தன் பார்வையை திருப்பிக் கொண்டு, “ ஒண்ணுமில்ல, வா கிளம்பலாம்.” என்றாள்.

DC இல்லத்தை அடைந்ததும் மாயா  தனது அறைக்குள் புகுந்து, கோபத்தில் கண்ணில் பட்ட அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தாள்.  சத்தம் கேட்டு வேகமாக அறைக்குள் நுழைந்த சந்திரசேகர் அதிர்ச்சியடைந்து, “ மாயா மா, என்ன ஆச்சு டா ?” என்று அவளிடம் கேட்டார்.

மாயா  விம்மி அழுதபடி தன் தந்தையின் கைகளில் சரிந்தாள். நரேன் அறையின் வாசலில் உறைந்து போய் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

” மாயா, என்ன நடந்துச்சு சொல்லு, நீங்க ரெண்டு பேரும் லஞ்ச் சாப்பிட தானே போனீங்க ? என்ன ஆச்சு?” என்று அவர் கேட்க, “அப்பா…” என்று மட்டுமே சொல்லி அவள் மேலும் விம்மி விம்மி அழுதாள்.

” மாயா , அமைதியா என்ன நடந்துச்சுனு சொல்லு. உன்ன இப்படி என்னால பார்க்க முடியல” என்று அவளை அணைப்பில் இருந்து மெதுவாக இழுத்து அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளை சோபாவில் உட்கார வைத்து, அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்.

” இப்ப சொல்லு, என்ன ஆச்சு ?” என்று சந்திரசேகர் கேட்டதும், “அப்பா… நான் ஆர்யன லவ் பண்றேன் “ என்று சட்டென கூறினாள் மாயா .

” என்ன?” என்று அதிர்ச்சியில் கேட்ட சந்திரசேகரின் கண்கள் விரிந்தன. பின்னர் அமைதியடைந்து, ” சரி அதுக்கு ஏன் அழுதுட்டு இருக்க ? அவன் கிட்ட உன்னோட லவ் பத்தி சொன்னியா ? “ என்று கேட்டார்.

” இல்ல பா, ஆனா நான் அவர லவ் பண்றேன்னு அவருக்கு தெரியும். இருந்தும் என்ன கண்டாலே அவருக்கு புடிக்கல, என்ன புறக்கணிக்குறாரு. என்னால அத தாங்க முடியல “ என்று அழுதாள்.

தன் மகள் உடைந்து அழுவதை பார்த்த சந்திரசேகர், ” அமைதியா இரு மாயா, நான் உன் மேல உயிரையே வெச்சுருக்கேன்னு உனக்கு தெரியும்ல. என்னால உன்ன இப்படி பார்க்க முடியாது “ என்று அவர் சொல்ல, ” அப்பா, ஆர்யன் என்ன கல்யாணம் பண்ணலைனா நான் செத்துப் போயிடுவேன். சத்தியமா சொல்றேன் நான் செத்துடுவேன்.” என்று மாயா  சொன்னதை கேட்டதும், ” வாய மூடு, மாயா !, என்ன சொல்ற நீ ?” என்று நரேன் கத்தினான்.

” நரேன், அமைதியா இரு!” என்று சந்திரசேகர் அவனை எச்சரித்தார். பின்னர் தன் மகளை பார்த்து, ” இப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசாத கண்ணா. எனக்கு தெரிஞ்சி என் பொண்ணு ரொம்ப தைரியமானவ. தயவு செஞ்சு இனிமே இப்படி பேசாத “ என்று அன்பாக அவளிடம் பேசினார்.

” அப்பா, நான் அவர ரொம்ப லவ் பண்றேன். அவர் இல்லாம என்னால வாழ முடியாது. ப்ளீஸ் பா.” என்று மாயா  சொன்னதும் சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு “சரி, நான் ஆர்யன் கிட்ட பேசுறேன்.” என்றார் சந்திரசேகர்.

அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நரேன், ” அப்பா! ஆர்யன் உங்கள ரொம்ப மதிக்கிறான். அவன் உங்களுக்குக் கீழ்ப்படிவான். இப்படி எதுவும் பண்ணி அவன  சங்கடப்படுத்தி கஷ்டப்படுத்தாதீங்க. அவன் ஒரு முடிவு எடுத்துட்டா அதுல இருந்து மாற மாட்டான். அவனுக்கு மாயாவ புடிக்கல. நீங்க அவன் கிட்ட இந்த கல்யாணத்த பேசினா உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்க உறவுல விரிசல் விழும், ப்ளீஸ் வேணாம் “ என்று கெஞ்சினான்.

 “நரேன், ஆர்யன் பத்தி எனக்கு நல்லா தெரியும். என் வார்த்தை என் பொண்ணுக்கு சந்தோஷத்த கொண்டு வரும்னா அப்போ நான் நிச்சயம் அத செய்வேன் “ என்று சந்திரசேகர் உறுதியாக சொன்னதும் கோவம் கொண்ட நரேன் அவர்களை முறைத்து, ” அப்போ, என்ன இதுல சம்மந்தப்படுத்த வேணாம்.ஆர்யன் என் friend, என்னால அவன இழக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் தப்பான பாதையில போறீங்க “ என்று கடுமையாக பேசினான்.

” அண்ணா, உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியலனா கூட பரவாயில்ல ஆனா என் வாழ்க்கைய கெடுத்துடாத, அப்பா என் வாழ்க்கைய பாத்துக்குவாரு ” என்று மாயா சீறினாள்.

நரேன் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டு மேற்கொண்டு விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிந்து அங்கிருந்து கிளம்பினான்.

இதற்கிடையில், ஆர்யனும், சஞ்சுவும் மேன்ஷனை அடைந்தனர். சஞ்சு சோபாவில் அமர்ந்தாள், ஆர்யன் அவளுக்கு எதிரே அமர்ந்து அவள் கைகளை பிடித்தான்.

” சஞ்சு, உன் கிட்ட  நிறைய கேள்விகள் இருக்குனு எனக்குத் தெரியும். அதனால தான் உன்ன அங்க கூட்டிட்டு போனேன். நான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்றதுக்கு முன்னாடி, மாயாவ நீ சந்திச்சு, அவ எப்படிப்பட்டவனு நீ பார்க்கனும்னு விரும்பினேன். முன்னாள் தொழிலதிபர் சந்திரசேகரோட, திமிரு பிடிச்ச பொண்ணு அவ, நரேனோட தங்கச்சி. அவள பத்தி இப்போ உனக்கு ஓரளவுக்கு புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன் “ என்று ஆர்யன் சொல்ல, சஞ்சு புருவங்கள் சுருங்க அவனை பார்த்து, ” அவ, உங்கள அடையணும்னு நினைக்குறாளா ?” என்று கேட்டாள். 

” கிட்டதட்ட அப்படித்தான்னு சொல்லலாம்.  அவளோட அப்பா  சந்திரசேகர், நான் பிசினஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய தொழிலதிபர். அவர் என் அப்பாவோட friend, அது மட்டும் இல்ல அவர் மேல எனக்கு நிறைய மரியாதை இருந்துச்சு. என் அப்பா இறந்த அப்புறம், அவர் எனக்கு வழிகாட்டினாரு. பிசினஸ் பத்தி அடிப்படையா நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாரு. அதுல இருந்து தான் நான் என் பாதையை உருவாக்க ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் அவர விட அதிகமா வளர்ந்து சாதிச்சு இன்னைக்கு அவர விட ஒரு பெரிய தொழிலதிபரா இருக்கேன். “ என்று கூற ஆரம்பித்த ஆர்யன் சற்று இடைவெளி விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்தான்.

“நரேன் என்னோட பெஸ்ட் friend. என் அப்பா, அம்மா இறந்த அப்புறம் எனக்கு கூட பிறந்த சகோதரன் மாதிரி துணையா இருந்தான். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கனடாவுல இருந்து மாயா படிப்ப முடிச்சிட்டு திரும்பி வர வரைக்கும் எனக்கு அவள பெருசா தெரியாது. அவள மாதிரி எப்பவும் தொட்டு பேசுற, கடலைப்போட்டு, சந்தர்ப்பம் கிடைக்க காத்துட்டு இருக்க பொண்ணுங்க பார்த்தா எனக்கு புடிக்காது. நான் விலகியே இருக்க நினைப்பேன் அது மாதிரி மாயா கிட்ட இருந்தும் நான் விலகி இருக்க நெனச்சேன். அவ என்ன செய்வானு எப்பவும் நான் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதா போச்சு “ என்று சொல்லி அந்த நினைவுகளால் ஆர்யன் எரிச்சலில் பெருமூச்சு விட்டான்.

” அப்போ தான் சுனிதா என்கிட்ட வேலை பண்ணிட்டு இருந்தா. எங்க ரெண்டு பேர பத்தியும் வந்த கிசுகிசுப்பு எல்லாத்தையும் கேட்ட அப்புறம்  சுனிதாவுக்கு நிறைய பணம்,  நிறைய மாடலிங் ப்ராஜெக்ட் வாங்கி கொண்டுத்து அவள போக சொன்னா. நான் அப்போ தான் பிசினெஸ்ல கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டு இருந்தேன் அதனால சுனிதா அந்த  வாய்ப்ப ஏத்துகிட்டா. அதோட அவ கத முடிஞ்சுது.

நரேன் மாயாகிட்ட  பல முறை பேசினான், ஆனா அவ கேட்கவெ இல்ல. அவளுக்கு வெறி அதிகமாகிட்டே போச்சு. ஒரு நாள், அவ குடிச்சிட்டு நான் தனியா இருந்த வீட்ல, என் படுக்க வர வந்துட்டா. நான் பொறும இழந்து அவள அன்னைக்கு அறைஞ்சிட்டேன். உடனே அவ மயங்கி விழுந்துட்டா. நரேன் வந்து அவள வீட்டுக்கு கூட்டிட்டு போனான். அவ கிட்டத்தட்ட ஒரு வருஷம் என்ன சித்திரவத செஞ்சா. அவ அப்பா மேல இருந்த மரியாதையால என்னால எதுவும் செய்ய முடியல “ என்று சொல்லும் போது ஆர்யனின் தாடை கோவத்தில் இறுகியது.

” கடைசியில அவளோட லவ் உண்மைனு நிரூபிக்க சொல்லி நரேன் அவள என்கிட்ட இருந்து விலகி இருக்க சொன்னான். அது அவ கிட்ட இருந்து தப்பிக்க நாங்க போட்ட திட்டம். அதிர்ஷ்டவசமா அவளும் சம்மதிச்சா. கனடாவுல இருக்க அவங்க அப்பாவோட பிசினஸ் பாத்துக்க நரேன் அவளுக்கு ஏற்பாடு பண்ணான். அவ கூட அவனும் அங்கேயே போனான். அவளுக்கு என் ஞாபகம் வரக் கூடாதுனு அவனும் என்கிட்ட பேசாம இருந்தான் “ என்று ஆர்யன் சொல்ல சஞ்சு கவலையுடன் அவனை பார்த்தாள்.

ஆர்யன் குரல் தாழ்ந்த நிலையில் சஞ்சுவைப் பார்த்து, “இப்போ, மூணு வருஷத்துக்கு அப்புறம் அவ இன்னும் மோசமா திரும்பி வந்துருக்கா “ என்று கூறினான்.

“ஆர்யன், நீ ஏன் இத பத்தி அவ அப்பா கிட்ட சொல்லக் கூடாது?” என்று சஞ்சு கேட்டதும்,  ஆர்யன் மறுத்து தலையை ஆட்டி, ” அது தான் பிரச்சினை ஸ்வீட் ஹார்ட். அவ சந்தோஷத்துக்காக சந்திரசேகர்  எதையும் செய்வாரு. அவ தான் அவரோட உலகம், அவ என்ன கேட்டாலும் அவர் இதுவர முடியாதுனு சொன்னதே இல்ல. அதனால தான் நாங்க அவர் கிட்ட சொல்லல. என்னால மறுக்க முடியாத ஒருத்தர் அது நீயும், சந்திரசேகரும் மட்டும் தான்.  அவர் அவளுக்காக பேச வரக் கூடாதுனு நான் விரும்புறேன். அவர் வார்த்தைய என்னால மறுக்க முடியாதுனு அவருக்கு தெரியும் “ என்று கூறினான்.

” ஒருவேள அவர் உன்கிட்ட கல்யாணம் பேச வந்தா என்ன செய்றது ? “ என்று சஞ்சு கேட்ட போது, அவள் குரலில் பயம் ஊர்ந்தது.

“அந்த சூழ்நிலைய தவிர்க்க நான் என்னால முடிஞ்ச வர முயற்சி செய்வேன் ஆனா எதுவா இருந்தாலும், உன்ன என்னால விட முடியாது. உன்ன தாண்டி எனக்கு வாழ்க்க இல்ல. இப்போ மாயா மறுபடியும் அவளோட விளையாட்ட ஆரம்பிச்சு இருக்கா. நாம  நிறைய சந்திக்க வேண்டி இருக்கும். அவளோட அப்பா தலையிட்டா, நாம ஒன்னா சேர்ந்து வாழ்வோம் இல்ல … “ என்று ஆர்யன் இழுக்க சஞ்சு சட்டென அவன் உதட்டில் கையை வைத்த் அவனை மேலும் பேச விடாமல் தடுத்தாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

” நாம சந்தோஷமா வாழ்வோம், ஆர்யன். எது வந்தாலும் நாம ஒன்னா சந்திப்போம் “ என்று சஞ்சு சொன்னதும், “ நல்ல ஞாபகம் இருக்கட்டும் பேபி, உன்ன என் கிட்ட இருந்து பிரிக்க அவ இப்போ உன்ன குறி வைப்பா ஆனா நான் எப்பவும் உன்கூட இருப்பேன் ” என்று சொல்லி ஆர்யன் அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான்.

” நான் எப்பவும் உன் கூட இருப்பேன், ஆர்யன்,” என்று சஞ்சு புன்னகையோடு சொன்னதும்  கிசுகிசுத்தாள் இருவரும் கட்டித்  தழுவிக்கொண்டனர். ஆர்யன் அணைப்பில் இருந்து பின்வாங்கி  அவள் நெற்றியில் முத்தமிட, சஞ்சு அவன் மார்பில் தலை சாய்த்தாள்.

************************************

முன்னோடோம்:

” என்னால இதுக்கு மேல என்ன கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு சஞ்சு. ஒவ்வொரு முறையும் நீ என் பக்கத்துல இருக்கும் போது, எனக்கு நீ இன்னும் அதிகமா வேணும்னு உடம்பும், மனசும் கேட்குதுடி, எனக்கு இன்னும் அதிகமா வேணும், நீ மொத்தமா வேணும் “

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!